வெள்ளி, செப்டம்பர் 20, 2019

பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் சாதியக் கட்டுமானம்: சில குறிப்புகள்


பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து இன்றும் தொடரும் சாதியக் கட்டுமானம்:  சில குறிப்புகள்


மு.சிவகுருநாதன்


        சில நாள்களுக்கு முந்தைய ‘தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்’ எனும் எனது புதிய பாடநூல் விமர்சனக் கட்டுரை தொடர்பான எதிர்வினை வாட்ஸ் அப் குழு ஒன்றில், குடவோலை முறை, சாதியடுக்குகள், சாதிக் கட்டுமானங்கள், இன்றும் தொடரும் கிராம நிர்வாகம் குறித்த பதிவை நண்பர் ஒருவர் இட்டிருந்தார். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை போலும்! அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் இன்றுவரை பதிவாகவில்லை. அது பற்றிய எனது கருத்துகளை சிலவற்றை இங்கு பதிவு செய்கிறேன்.

    வரலாற்றினை மீளாய்வு செய்தல் என்பது நவீன வரலாற்றின் ஆதாரங்களின் ஊடாக கடந்தகால வரலாற்றினை அறிவதற்கான வாய்ப்பாக அமையலாம். மேலும் குடவோலை முறை அது ஜனநாயக பரவலாக்கப் பட்ட ஒன்று இல்லை. மக்களாட்சி தத்துவமும் ஆகாது. நிச்சயமாக ஆர்வக்கோளாரான அதிகப்படுத்துதல் மட்டுமே. குடவோலை முறை பெரிதுபடுத்தப்பட  ஒரு விடயம்” 

     என்று எனது பதிவிற்கு எதிர்வினையாற்றியபோது வியப்பாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்த வரிகள் அதை மாற்றின. 

     “ஆனால் வாரியங்கள் மூலம் ஒரு பரவலாக்கப்பட்ட சிறுஅதிகாரமிக்க ஓர் அமைப்பு சோழப் பேரரசில் இருந்து வந்தது. வாரியங்கள் தனி அமைப்பாக செயல்பட்டு வந்தனர். இன்றளவும் எங்கள் ஊரில் வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அதற்கென வாரியங்களும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. எங்கள் 5 வாரியங்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. ஊர்க்குடும்பும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர்”,

     பிற்காலச் சோழர்கள் காலத்தை பொற்காலமாகப் பார்வையிலிருந்து இது மாறுபடவில்லை. குடவோலை மிகைப்படுத்தப்பட்டது; ஆனால் பொற்காலம் சரியானது என்கிற நிலைப்பாடு எதன் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது? எனது வினாவிற்கு தாங்கள் அளித்த விரிவான பதிலிலிருந்து புலப்படுகிறது.

   “பிற்காலச் சோழர்கள் உள்ளிட்ட எந்த மன்னர்களும் குற்றம், குறைகளுக்கும் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதே வரலாற்றை கொஞ்சமாவது நேர்மையாக வழிநடத்தும்.

இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது?

மேலும் இறுதியாக சொன்ன இன்றும் தொடரும் வாரியங்கள், குடும்புகள் பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கி எழுத முடியுமா?”,

   என்று கேட்டதற்கு, கீழக்கண்ட பதில் கிடைத்தது.

“ஊர்க் குடும்பு: ஊர்க் குடும்பர்.

ஊரின் சட்ட திட்டம், நிர்வாகம், வழக்குகள் விசாரணை, தீர்ப்புகள்’ தண்டல்கள் வசூல் செய்தல், அதற்கான வரவு செலவு ஆவணங்களை பராமரித்தல், ஆண்டு ஒன்றுக்கு அதனை ஊர் சபை முன்பு கணக்கு வழக்குகளை தயார் செய்தல். நன்செய், புன்செய் நிலங்களின் ஆவணங்களை சரிபார்த்தல். விழாக்காலங்களில் முதியோர்க்கான பொறுப்புகள், அதனூடே இளையவர்களுக்கும் நிர்வாக பயிற்சியளித்தல் என்று ஊர்க் குடும்பின் பணிகள் நீளும். இதனை பெரிய குடும்பர்கள் கவனிப்பர். ஆரம்ப கால குடும்பு முறை மிகவும் நேர்த்தியாகவும் அதிகாரமிக்க தலைமையைக் கொண்டும் இருந்தன.

வாரியம்:  சோழப் பேரரசின் வாரியம் போன்றே இதுவும்.

1. தண்டல் வாரியம்: தண்டல் வசூல் செய்வது.
2. நீர் வாரியம்:
ஊரின் நீர் நிலைகளை பராமரிப்பது, தேவையற்ற செடிகளை கொடிகளை களைதல், கண்மாய், ஏரி, ஊரணி கரைகளின் உறுதி தன்மையை உறுதிசெய்தல். மேலும் நீர் வழித்தடங்கள் ஆராய்தல்.
3 நீர் கட்டி வாரியம்: மடைகள், கழுங்குகளை பராமரித்து அவற்றினை திசைக்கு ஏற்ப திறந்து விடுதல்.(இது உயிர்க்கு ஆபத்தான ஒன்று. 20 அடி கீழே மூழ்கி மதகுக்கட்டையை திறக்கும் பொழுது மதகுகள் இழுத்து செல்லப்பட்டு உயிரிழக்க நேர்வதுண்டு. மேலும் 20 அடி ஆழம் வரை மூழ்குவதால் மூச்சுப் பயிற்சியும் தேவை.
4. கர்ணம்: ஊரின் முக்கிய நிகழ்வுகளை ஊரார்க்கு தெரிவிப்பது. இவர்க்கு கீழே (விளிம்பு நிலை மக்களைக் கொண்ட (தண்டோரா) சில நபர்கள் செயல்படுவார்கள்.
5. தோட்ட வாரியம்: ஊரில் உள்ள மரங்களை கணக்கெடுத்தல். குறிப்பாக புளியமரம், ஆல மரம் மற்றும் வேம்பு. வேலிக் கழுவல் .இவைகளை ஆண்டுதோறும் ஏலமிட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்துதல்”.

 
   “உங்கள் ஊரில் இன்று எவ்வாறு செயல்படுகிறது என்பதைத்தான் கேட்டேன்… சாதிய அடுக்குகள் உள்பட....” என்ற எனது கேள்விக்கும் பதில் கிடைத்தது. அப்பதில் கீழே தரப்படுகிறது.

     “மேற்சொன்னது இன்றளவும் நடக்கிறது. ஐந்து வாரியமும் தொடர்ந்து ஐந்து குடும்புகள்  மரபு ரீதியாக அதனை அவர்களே கவனித்து வருகிறார்கள்.

    இதில் 15 வருடம் முன்பு வரை சாதிய அடுக்குகள் இருந்தன. எங்கள் ஊரின் முன்னோர்கள் எங்கள் ஊரில் சில அமைப்புகளை ஏற்படுத்தி அவர்களை வேலைக்கு வைத்திருந்தனர். அதை கிட்டத்தட்ட என் தாத்தாவின் தாத்தா காலத்தில் இருந்து நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களுக்கு ஊரில் தனித்தனி இடங்களில் குடியிருப்புகளையும்  வைத்துக் கொடுத்தனர். குறிப்பாக

1. நாவிதர் (ஊர்க்கு பொதுவான முடி திருத்துவர்),
2. வண்ணார் (துணி துவைப்பவர்கள்.)
3. அருந்ததியர் (மேளம் கொட்டுதல், சாவு மற்றும் கோயில் விழாக்களில் பாரியின் முன் மேளம் அடித்துச் செல்லும் உரிமை இன்றளவும் பெற்றுள்ளனர். மேலும் விரும்பத்தகாத வேலைகளை இன்றளவும் தாங்களாக முன் வந்து செய்வது. (அதை சொல்லவில்லை.)
4. ஆதிதிராவிடர்: பிணங்களுக்குக் குழி தோண்டுவது,  தண்டோரா போடுவது.

இது இப்பொழுது கடுமையாக்கப்படவில்லை.

    15 வருடங்களுக்கு முன்பு ஊர்க் குடும்புகள் (குடும்பர்) கூடி மேற்சொன்ன நான்கு பிரிவுகளிலும் கல்வியின் தரத்தை உயர்த்த எடுத்த நடவடிக்கையும் அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே பழகி வருவதன் மூலம் அதனை அகற்ற இனிமேல் மேற்சொன்ன வேலைகளில் இருந்து அவர்களை விடுவிக்க (அவர்களும் இதில் இருந்து வெளியேற நினைத்ததன் பொருட்டு ) இனி இவ்வேலைகளில் அவர்களை கட்டாயப்படுத்துதல் கூடாது. யாராவது விருப்பப் பட்டால் தொடரலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் மூலம் என் முன்னோர்கள் காலம் இருந்த சமூக இடைவெளி இன்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் இன்னும் அப்படியே உள்ளனர். இரு பக்கங்களிலும். இரு பிராமணக் குடும்பம் மட்டுமே உள்ளதால் பிராமணியத் தாக்கம் இங்கு இல்லை.

மற்ற சமூகங்கள்

1.   தேவேந்திர குல வேளாளர்கள்: 3500 - 4000 வரையிலான குடும்பங்கள்
2.   இசுலாமியர்கள்: (பள்ளர்களில் இருந்து மாறியவர்கள் – 150 குடும்பங்கள்
3.   நாடார்கள்: 100 குடும்பங்கள்
4.   செட்டியார்கள்: 3 - 6 குடும்பங்கள்
5.   பிள்ளைமார்கள்: 15-20 குடும்பங்கள்
6.   கோனார்: 2 குடும்பங்கள்
7.   மறவர்: 10 குடும்பங்கள்
8.   பணிக்கர்: 2 குடும்பங்கள் 
9.   குயவர்: 10 - 20 குடும்பங்கள்
10.  ஆசாரி: 3 குடும்பங்கள்
11.  நாயக்கர்: 25-30 குடும்பங்கள்
12.  பண்டாரம்: பூக்கட்டுபவர்கள் - 4 குடும்பங்கள்
13.  சோழிய வெள்ளாளர்: 2 குடும்பங்கள்
14.  இசை வேளாளர்: 2 குடும்பங்கள்
15.  அருந்ததியர்: 30 குடும்பங்கள்
16.  வண்ணார்: 25 குடும்பங்கள்
17.  மருத்துவர்: (முடி திருத்துபவர் 9- 11 குடும்பங்கள்
18.  ஆதிதிராவிடர்: 10-15 குடும்பங்கள்
19.  கம்பளத்து நாயக்கர்: 2. குடும்பங்கள் 
20.  வன்னியர் (படையாச்சி): 1 குடும்பம் (இக்குடும்பம் இப்பொழுது அருகிலுள்ள நகரில் செட்டிலாகிவிட்டது.)

    எங்கள் ஊர் தாய்க் கிராமம் என்றழைக்கப்படுவதால் இதே கட்டமைப்புகள் தான் எங்கள் ஊரினை சுற்றியுள்ள சேய் கிராமங்களுக்கும். இப்பொழுது வெகுவாக பல மனிதாபிமானமற்ற தொழில்கள் குறைந்துள்ளன”.

(இப்பதிவில் பிழைகளை மட்டும் திருத்தி, சொற்றொடர்களை ஒழுங்கு செய்துள்ளேன். நகரத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை.) 

    இப்பதிவுகள் நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்ன?  பிற்காலச் சோழர் கால பிரம்மதேயமும் குடவோலை முறையும் யாவர்க்கும் பொதுவான ஒன்றாக இல்லையோ, அதைப்போலவே ஊரவையும். இவை பல காலகட்டங்களில் ஆதிக்க சாதிகள் பலவற்றின் பிடியில் இருந்துள்ளன. ஆதிக்கம் ஒரு சாதியிடமிருந்து வெறொரு சாதியிடம் கைமாறியுள்ளது. 

   சாதியத்திற்கு அடிப்படை வருண தர்மம். இதைக்கொண்டே இங்கு சாதியடுக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. தொடக்கத்தில் இதை அறிமுகம் செய்தவர்கள் பிராமணர்கள். இதை ஆதிக்க சாதிகள் பின்தொடர்ந்தன. எனவே பிராமணர்கள் இல்லையென்றால் பிரமாணத்தாக்கம், வருண வேறுபாடு இல்லை என்று சொல்லவியலாது. 

    சமூக ஒழுங்கு எனும் பேரில் அடித்தள சாதியினர் மீது இழிவான தொழில்கள் திணிக்கப்பட்டன. ஊர்க்கட்டுப்பாடுகள் என்னும் ஆதிக்க சாதிகளின் வன்முறையில் இவை இறுக்கமடைந்தன.

    இந்தத் தாய்க்கிராமத்தின் பெரும்பான்மை மக்களாக தேவேந்திர குல வேளாளர்கள் சுட்டப்படுகின்றன. அடுத்த வரியிலேயே இஸ்லாமியராக மாறிய பள்ளர்கள் என்று சொல்லப்படுகிறது. தேவேந்திரர்கள், பள்ளர்கள் என்று மாற்றிச் சொல்லப்படுவதேன்? என்று தெரியவில்லை. மேலும் இஸ்லாமியர் என்று குறிப்பிடாமல் இந்தச் சாதியிலிருந்து மதம் மாறியவர்கள் என்பதை எதைச் சுட்டுகிறது? கிறித்தவம் போன்று இஸ்லாம் அவர்களை சாதியுடன் வைத்திருக்கிறதா? இல்லையே. ஆதிதிராவிடர் என்ற பொதுச்சுட்டு யாரைக் குறிக்கிறது? அந்தப் பிரிவை ஏன் குறிப்பிடவில்லை?

   நாவிதர், வண்ணார், அருந்ததியர், ஆதிதிராவிடர் ஆகிய நான்கு பிரிவினருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2004 இல் ஊர் அவர்களுக்கு கல்வியளிக்க முடிவு செய்கிறது என்றால் விடுதலையின் பலன் என்ன? இதைத்தான் ஆங்கிலேயர்களிடம் பெறும் விடுதலை உண்மையான விடுதலை அல்ல; எனவே ஆகஸ்ட் 15 துக்க நாளென்றார் பெரியார். தொண்டூழியம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு, அதற்குப் புராணங்களையும் உருவாக்கி, அவர்களாக விருப்பப்பட்டு அந்தக் கீழான பணிகளைச் செய்கிறார்கள் என்பது ஆதிக்கக் கருத்தியலின் ஒரு வடிவமே.

   ஊரில் இந்த நான்கு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை எந்தச் சாதியினரும் செய்யலாம் என்று விதிமுறை வகுத்திருந்தால் இதைக் கொண்டாடலாம். அவர்கள் விரும்பினால் செய்யலாம், கட்டாயமில்லை, கடுமையாக்கப் படவில்லை என்பதெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் பேசக்கூடிய சொற்களல்ல.
 
    அந்தக்கால அரசர்களுக்கு இருந்த நிர்ப்பந்தம், மக்களின் சமூக நிலை, கல்வியறிவின்மை, ஆதிக்க சக்திகளின் கைகளில் இருந்த வருண தர்மம் போன்ற பல்வேறு சூழல்கள் அன்றிருந்தன. அக்காலச் சூழலையறிந்து வீண் கொண்டாட்டம் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். நாடு விடுதலையடைந்து 72 ஆண்டுகள் ஆனபிறகும் வருண தர்மத்தையும் அதனடிப்படையிலான சாதியக் கட்டுமானங்களையும் உயர்த்திப்பிடிக்கும் செயல்பாடுகள் மனித மாண்புகளுக்கு எதிரானது. இம்முறைகளே மனிதத்திற்கு எதிரான கொடுமைகளே. மனிதாபிமானமற்ற தொழில்கள் குறைந்துள்ளன என்பது வேடிக்கை.  

மேலும் சில குறிப்புகள்:


 • பிற்காலச் சோழர்கள் காலத்திலிருந்து சாதியக் கட்டுமானம் மிகவும் இறுக்கமாக நிலவுகிறது.
 • பிற்காலச் சோழர்கள் காலம் ஆதிக்க சாதிகளின் பொற்காலமே தவிர அடித்தட்டு மக்களுக்கு அல்ல.
 • சாதிய அடுக்குகள் ஒருபடித்தானவை அல்ல; ஆதிக்க சாதிகள் இடைநிலைகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளன.
 • தொன்மை, பழமை என்பதற்காக எல்லாவற்றையும் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. மனித மாண்புகளைக் காப்பது முதன்மையானது.
 • விஜயநகர அரசுக் காலத்தில் ‘ஆயக்காரர்கள்’ முறையாக மாறினாலும் ஆதிக்க, ஒடுக்கப்படும் சாதிகள் பட்டியலில் பெரிய மாற்றமில்லை. ‘ஆயக்காரர்கள்’ 12 பேர்கள்; கர்ணம், மணியம், தலையாரி ஆகிய மூவர் அரசால் நியமிக்கப்பட்டவர்; பிறர் புரோகிதர், பொற்கொல்லர், கருங்கொல்லர், நீர்க்கந்தி, தச்சர், குயவர், வண்ணார், நாவிதர், அருந்ததியர் (சக்கிலியர்).
 • தொடக்க கால ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் இம்முறை தொடர்ந்தது.
 • விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸ் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட சமபந்தி விருந்துகளில்கூட அடித்தள மக்கள் பங்கேற்க இயலவில்லை என்பதை 28.02.1937 இல் நடந்த நீடாமங்கலம் சாதி இழிவன்கொடுமை எடுத்துக்காட்டு.
 • 1947 ஆகஸ்ட் 15 இல் விடுதலை பெற்றோம்; 1950 ஜனவரி 26 இல் குடியரசானோம். அனைத்து மக்களுக்கும் எவ்விதப் பாகுபாடுகளும் இல்லாத நிலையை நமது அரசியல் சாசனம் உத்தரவாதமளித்தது.
 • இதற்குப் பிறகும் இம்மாதிரி அமைப்புகளும் பஞ்சாயத்துகளும் தொடர்வது சட்டமீறல். ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் ‘காப் பஞ்சாயத்து’ எனப்படும் சாதிய வடிவத்திற்கும் நீதிமன்றம், சட்டம் ஆகியவற்றுக்கு உள்படாத பஞ்சாயத்துகளைத் தடை செய்துள்ளது.
 • பிற்காலச் சோழர் கால சாதியக் கட்டுமானம் இன்றும் தொடர்வது பெருமையல்ல; மாறாக சமூக அவலம்.


மேலதிக வாசிப்பிற்கு:


 1. சூத்திரர்கள் யார்? – அம்பேத்கர் (தொகுதி 13 ) விற்பனை உரிமை: NCBH
 2. முற்கால இந்தியா: தொடக்க காலத்திலிருந்து கி.பி. 1300 வரை. – ரொமிலா தாப்பர் – NCBH வெளியீடு.
 3. வரலாற்றுப்போக்கில் தென்னகச் சமூகம் - சோழர் காலம் 850-1300 – நொபரு கரஷிமா, பாரதி புத்தகாலயம்.
 4. தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500) – நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, NCBH வெளியீடு.
 5. வரலாற்றில் பிராமண நீக்கம்: இந்திய சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும் – ப்ரஜ் ரஞ்சன் மணி, எதிர் வெளியீடு.
 6. பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் – ராம் சரண் சர்மா, பாரதி புத்தகாலயம்.
 7. சோழர்கள் – தொகுதி 02: பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி – NCBH வெளியீடு.
 8. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே. பிள்ளை – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
 9. கோயில்-நிலம்-சாதி – பொ.வேல்சாமி
 10. பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி
 11. பொய்யும் வழுவும் – பொ.வேல்சாமி (இந்த மூன்று நூல்களும் காலச்சுவடு வெளியீடு)
 12. ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – ராஜ் கௌதமன் – NCBH வெளியீடு.
 13. நீடாமங்கலம் சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும் – ஆ.திருநீலகண்டன் – காலச்சுவடு வெளியீடு.
 14. சாதியம்: வேர்கள்-விளைவுகள்-சவால்கள் – சு.பொ. அகத்தியலிங்கம் – பாரதி புத்தகாலயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக