வியாழன், செப்டம்பர் 19, 2019

தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாதை


தமிழகக் கல்வித் துறையின் அறிவிப்புகள் செல்லும் பாதை


மு.சிவகுருநாதன்


     கடந்த சில ஆண்டுகளாக தமிழகக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஒன்றிரண்டு நல்ல திட்டங்களும் இருக்கின்றன. எனவே எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. 


  • +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வுகள்.
  • +1, +2 வகுப்புகளுக்கு மொழிப்பாடங்கள், செய்முறைப் பயிற்சி இல்லாத பாடங்களுக்கும் 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு.
  • +1, +2 வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள்.
  • 10 ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள்.


       போன்ற நல்ல திட்டங்களை வரவேற்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். தமிழ்ப் பாடத்திற்கு ஒரு தாளா? என்று உணர்ச்சி மிகுதியால் கூச்சலிடுபவர்கள் இன்றைய சூழலை ஆழ்ந்து ஆய்வு செய்யாமையும், எல்லாவற்றிற்கும் தேர்வில் சரணடையும் போக்கு இருப்பதையும் காணமுடிகிறது. 


  • 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் (2019-2020) பொதுத்தேர்வுகள்.
  • ஆசிரியர்கள் பணியிடக்குறைப்பு.
  • பள்ளிகளை மூடுதல், இணைத்தல்.
  • அங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர் பணிநிரவல்.
  • பழிவாங்கும் நோக்கோடு எடுக்கப்படும் திட்டங்கள்.

   
 போன்ற அபாயகரமான முடிவுகளை எதிர்த்தேயாக வேண்டும்; வேறு வழியில்லை.

       ஏற்கனவே இருமுறை கசியவிடப்பட்ட +1, +2 வகுப்புகளுக்கு 5 பாடமுறைக்கான அரசாணை (எண்: 166, நாள்: 18.09.2019) வெளியாகியுள்ளது. முதலில் மொழிப்பாடங்களில் ஏதேனும் ஒன்று விருப்பப்பாடமாகும் என்றும், ஒருமுறையும்  கணிதவியல், உயிரியல் இவற்றில் ஒன்றைக் குறைத்து மூன்று + 2 மொழிப்பாடங்கள் என்றும் செய்திகள் கசியவிடப்பட்டன. உடனே இவையிரண்டும் அரசால் மறுக்கப்பட்டன. அது போன மாதம்! இவர்கள் மறுத்தால் கொஞ்ச நாளில் அது உண்மை என்பது விளங்கிவிடுகிறது. இவர்களது தில்லி ஆண்டைகளும் அவ்வாறே இருக்கிறார்கள்!

      இரண்டாவது கசியவிடப்பட்ட செய்தி கொஞ்சம் மாற்றங்களுடன் அரசாணையாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது. New Scheme of Studies (3 core subjects stream) என்ற 5 பாட 500 மதிப்பெண்கள் முறையும், Existing Scheme of Studies (4 core subjects stream) 6 பாட 600 மதிப்பெண்கள் முறையும் வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் +1 வகுப்பில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக இந்த அரசாணை தெரிவிக்கிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய ஒரு மொழிப் பாடங்களுடன் கணிதவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய 3 பாடங்கள் மட்டும் சேர்க்கப்பட்டு 5 பாடங்களாகிறது. இப்போதிருக்கும் கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் படிக்க விரும்பினால் 4 core subjects stream என்ற 6 பாட 600 மதிப்பெண்கள் முறையை நாடவேண்டும். 

    ‘நீட்’டை அடிப்படையாகக் கொண்டு கல்வியைத் திட்டமிடுவது அபத்தம். ஆனால் அதுதான் தமிழகத்தில் நடக்கிறது. ‘நீட்’ எழுதுபவர்கள், ‘நீட்’ எழுதாதவர்கள் என்று பகுப்பதும் அதனடிப்படையில் .பாடங்களைத் திட்டமிடுதலும் மிக மோசமானது. கணிதவியல் இல்லாத அறிவியல் பிரிவிற்கு என்ன பெயரிடுவது? ‘Pure Science’ என்று அபத்தமாக சொன்ன காலம் மலையேறிவிட்டது.  ‘Pure Science’ என்றாலே அது கணிதவியல்தான்!  

    அறிவியல், கலை, தொழில்கல்வி  (Science, Arts, Vocational   stream) என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

அறிவியல் பிரிவுகள் (Science  Stream)

Group Code: 1001: கணிதவியல், இயற்பியல், வேதியியல்
Group Code: 1002: இயற்பியல், வேதியியல், உயிரியல்
Group Code: 1003: கணிதவியல், இயற்பியல், கணினி அறிவியல்
Group Code: 1004: வேதியியல், உயிரியல், மனையியல்


     கணிதவியல் அறிவியலுக்கு அடிப்படையானது. கணிதவியல் இல்லாமல் அறிவியல் படிப்பது பயனற்றது. சுமையைக் குறைக்க பாடத்தை நீக்குவதைவிட பாடப்பகுதிகளை குறைப்பதைப் பற்றி யோசிக்கலாம். 

    கிராமப்புற அரசுப்பள்ளிகளில் கணிதவியல் திறன்கள் மேம்பாடு அடையாமலிருப்பது பற்றியும் மாணவர்களிடம் கணிதவியல் தொடர்பான பயம், பதற்றம் போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். கணிதவியலை மாணவர்கள் விரும்பும்படி செய்வதற்கும் சுமை குறையவும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை தேவை. 

   மேலும் தற்போது மேனிலை வகுப்புகளில் ஒரு பிரிவிற்கு குறைந்தபட்சம் 15 மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறது. பத்து மாணவர்கள் ஒரு பிரிவை படிக்க நினைத்தால்கூட இயலாத நிலைதான் இன்றுள்ளது. நன்றாகப் படிக்கும்  மாணவர்களும் வேறுவழியின்றி 5 பாடமுறைக்கு மாறி எதிர்காலத்தைப் பாழடிக்கும் நிலைமை உருவாகும். எனவே குறைக்க வேண்டிய சுமை என்பது பாடங்களல்ல; கடினப் பாடப்பகுதிகளே. 

       பத்தாம் வகுப்பு முடித்தவுடனும் அந்த வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலும் மருத்துவமா, பொறியியலா என்பதை முடிவெடுக்க இயலாது. கிராமப்புற அரசுப்பள்ளிகளில் கணிதவியல் படிக்க ஆர்வமில்லை; மிகச் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கணிதவியலைத் தவிர்க்கவே விரும்புவர். மருத்துவ வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கப்போவதில்லை. வாய்ப்புள்ள பொறியியல் அல்லது பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான (polytechnic) மாற்று வாய்ப்புகள் தடுக்கப்படுகிறது. 

     எனவே இப்போதிருக்கும் 6 பாடமுறையில் படிக்க வேண்டியிருக்கும். இதற்கான வழிகாட்டல்கள் பலருக்கு கிடைக்காது. மேலோட்டமான பார்வையில் 5 பாட முறையை அதிக விரும்பும் வாய்ப்புகள் அதிகம். 

    இப்போதுகூட கணினி அறிவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதவியல் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் என்ற பாடத்தொகுப்பைத் தேர்வு செல்லும் நிலை உள்ளது. ஆசிரியர்களும் கணிதவியல் இல்லாததால் சுயநல நோக்கத்தோடு, தேர்ச்சி விகிதம் அதிகம் காட்டுவதற்காக இதைப் பரிந்துரைக்கின்றனர். இப்புதிய முறையிலும்  இந்த அவலம் தொடர்வது (Group Code: 2601) தனிக்கதை.

    அடுத்து உயிரியல். ‘நீட்’க்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் உயிரியல் பாடத்தை  என்ன நிலையில் வைத்துள்ளனர் என்பது கேள்விக்குரியது. இப்போதைய முறையிலும், இனி  4 core subjects stream லும் தாவரவியல், விலங்கியல் என்ற நீண்ட பதிப்பும் (long version) குறுகிய பதிப்பும் (short version) இருக்கிறது. ஆனால் பல்லாண்டாக இவையிரண்டுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமனமில்லை. 

    மத்தியப் பல்கலைக் கழகங்களில்தான் உயிரியல் (LSE – Life Science) ஒரே பாடமாக உள்ளது. இங்கு தாவரவியல், விலங்கியல் என தனித்தனி பாடமாகத்தான் உள்ளது. ‘நீட்’ போன்ற மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு இவையிரண்டும் விரிவாக கற்பிக்கப்படுவதும் அதற்குரிய ஆசிரியர்களும் தேவை. குறுகிய பதிப்பில் விளக்கமாகப் படிக்க இயலாது. அப்படிப் பாடங்களைச் சேர்த்தால் பாடச்சுமை கூடும். ‘நீட்’ தேர்வுக்கான இந்த முதன்மைக் காரணியைப் புறக்கணித்துவிட்டு ‘கோச்சிங் சென்டர்’ நடத்துவதாகக் கல்வித்துறை சொல்வது மிகப்பெரும் மோசடி. 

கலைப் பிரிவுகள் (Arts  Stream)


  • Group Code: 1201: வரலாறு, புவியியல், பொருளியல்
  • Group Code: 1202: பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல்
  • Group Code: 1203: வணிகவியல், வணிகக் கணிதவியல் & புள்ளியியல், கணக்குப் பதிவியல்
  • Group Code: 1204: வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்
  • Group Code: 1205: சிறப்புத்தமிழ், வரலாறு, பொருளியல்


     கலைப் பாடத்திட்டத்தில் இதே நிலைதான். நம்முன் உள்ள கணிசமான வாய்ப்புகளை நழுவவிடுவதாக இந்தப் பாடக்குறைப்பு அமைந்துள்ளது. அறிவியல், கலை, தொழிற்கல்விப் பிரிவுகளிலும் ஏற்கனவே இருக்கும் பல வாய்ப்புகளை குறுக்கும் இந்த முடிவு ஏற்கத்தக்கதல்ல. பழைய முறை தொடர்கிறது என்றாலும் எல்லா மாணவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுமா என்பது கேள்விக்குறி.  

      பாடக்குறைப்பு என்பதுதான் மாணவர்களிடம் நிற்கும். தொலைநோக்கிலான வழிகாட்டல் கிடைக்குமா என்பதும் அதன் தாக்கமும் விவாதிக்க வேண்டியன. ஒரு பிரிவில் குறைந்த பட்ச மாணவர்கள் என்ற விதிகளைத் தளர்த்தி ஒரு மாணவர் படிக்க விரும்பினாலும் அதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அரசால் இயலுமா? இம்முறையை அமல்படுத்தினால் கிராமப்புற அரசுப்பள்ளிகள் பலவற்றில் கணிதவியல் படிக்கும் மாணவர்களும் கணிதவியல் ஆசிரியர்களும் இருக்க மாட்டார்கள். எனவே இது ஆட்குறைப்பிற்கான குயுக்தியா என்று எண்ணத் தோன்றுகிறது. 

    புதிய கல்விக்கொள்கை 9 ஆம் வகுப்பில் உனது எதிர்காலத்தை முடிவு செய்துகொள், என்கிறது. இவர்கள் பத்தாம் வகுப்பு இறுதியில் செய், என்கிறார்கள். ஒவ்வொரு செயலிலும் மத்திய அரசைக் காப்பியடிக்க நினைக்கும் இவர்கள் அடுத்தக் கல்வியாண்டில் அமலாகும் ஒன்றை பொறுமையாக ஆய்வு செய்து அனைவரின் கருத்தறிந்துப் பின்னர்  அறிவித்தியிருக்கலாம். இவ்வளவு விரைவு தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக