வியாழன், செப்டம்பர் 12, 2019

தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்


தமிழக வரலாற்றெழுதியலின் துயரம்
 
மு.சிவகுருநாதன்

  (2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 41)   
    

        இடைக்கால தமிழகத்தில் ‘நிலவுரிமை’ பற்றி ஏழாம் வகுப்பு வரலாற்றுப் பாடங்களில் (இடைக்கால இந்திய ஆதாரங்கள், தென் இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்) சில தகவல்கள் கூறப்படுகின்றன. அவற்றின் ஊடாக ஏற்கனவே, புதிய பள்ளிப் பாடநூற்களில் சொல்லப்பட்ட ‘குடவோலை’ முறையை மக்களாட்சிப் பெருமிதங்களில் ஒன்றாகக் கட்டமைக்கின்றன. பிற்காலச் சோழப்பெருமைகளின் உச்சமாக இது போற்றப்படுகிறது. 6 முதல் 12 முடிய அனைத்து வகுப்புகளின் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் போன்ற பாடங்களில் பெரும்பாலான இடங்களில் இக்கதையாடல்கள் நீள்கின்றன.  

     ஏழாம் வகுப்பில் இப்பாடத்தின் ‘மூலாதார நூல்கள்’ பட்டியலில் கீழ்க்கண்டவை இடம்பெறுகின்றன. இந்நூற்களின் கருத்துகள் எந்தளவிற்குப் பாடநூலில் எடுத்தாளப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே.      ஏதோ பெருமைக்காக இவ்வாறு பட்டியலிடும் போக்கு உள்ளதை அவதானிக்க முடிகிறது.    
  
1. K.A Nilakanda Sastri, A History of South India, New Delhi: Oxford University Press, 2002.
2. Y. Subbarayalu, South India under The Cholas, New Delhi: Oxford University Press, 2012.
3. R Champakalakshmi, Trade, Ideology and Urbanization South India- 300 BC to AD 1300, New 
Delhi: Oxford University Press, 1996.
4. Satish Chandra, History of Medieval India, New Delhi: Orient Blackswan, 2010.       “சோழர் காலம் பற்றி மேற்கொண்ட முந்தைய ஆய்வுகளில் பிராமணர் அல்லாதாரின் ஊர்கள் அதாவது வெள்ளான் ஊர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமை. பிராமணர்களுக்கு தானம் வழங்கப்பட்ட பிரமதேயங்கள் சோழநாட்டில் பரவலாக இருந்தன. இந்த ஊர்களில் நிர்வாக  அமைப்புகளாக விளங்கிய சபைகளின் நடவடிக்கைகள் பற்றிய கல்வெட்டுக்கள் பல இவ்வூர்களில் கிடைத்துள்ளன. ஆகவே, இயல்பாகவே சோழர்கால பிரமதேய ஊர்களைப் பற்றியும் அவ்வூர் சபைகளின் நடவடிக்கைகள் பற்றியும் மிகுந்த நாட்டம் செலுத்தப்பட்டது. 1930களில் கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார் முதலிய பல ஆய்வாளர்கள் இவைகளைப் பற்றி விரிவான ஆய்வுகள் செய்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம்  உச்சநிலையிருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டமையால் இவற்றில் பொதுவாகவே அளவுக்கதிகமாகப் பழமையைப் போற்றும் போக்கு இருந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும். காட்டாக, சபைகளின் தேர்தல்முறை குடியரசுத்தன்மை கொண்டிருந்தது என்ற செய்தி நடுநாயகமாக இருந்தது”. (பக்.21, வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் – சோழர் காலம் (850-1300) – நொபொரு கராஷிமா, நூலின் முன்னுரை)

     “நிலம் சார்ந்த உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு சோழஅரசர்கள் வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களை அரசு அதிகாரிகளுக்கும், பிராமணர்களுக்கும், கோவில்களுக்கும்  (தேவதானக் கிராமங்கள்), மத நிறுவனங்களுக்கும் கொடையாக வழங்கினர். சமண சமய நிறுவனங்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ’பள்ளிச்சந்தம்’ என  அழைக்கப்பட்டது. ’வேளாண்வகை’ என்னும்  நிலங்களின் உடைமையாளர்கள் வேளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாளரில் ஒரு பிரிவினரான ’உழுகுடி’ என்போர் நிலங்களின்  உடைமையாளர்களாக இருக்க இயலாது.  அவர்கள் பிரம்மதேய, வேளாண் வகை நிலங்களில் வேளாண் பணிகளைச்  செய்யவேண்டியிருந்தது. மொத்த விளைச்சலில் வேளாண் வகை நிலவுடைமையாளர்கள்  ‘மேல்வாரத்தைப்’ (விளைச்சலில் பெரும்பகுதி)  பெற்றனர். உழுகுடிகள் ‘கீழ்வாரத்தைப்’ (விளைச்சலில் சிறிய பகுதி) பெற்றனர். ‘அடிமை’ மற்றும் ‘பணிசெய் மக்கள்’ என்போர் சமுதாயத்தின் கீழ்நிலையில் இருந்தனர். சமூகத்தின் இடை மட்டத்தில் போர் செய்வோரும் வணிகர்களும் இடம் பெற்றனர்”. (பாடநூல், பக்.156)


     பிற்காலச் சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் தனித்த கொடை பெறுபவர்கள் மற்றும் கொடையாளிகளின் பெயரை ஆய்வு செய்த நொபொரு கராஷிமா, எ. சுப்பராயலு ஆகியோர்களின் ஆய்வு முடிவு கீழ்க்கண்டவாறு உள்ளது.

     “அட்டவணைப்படி மன்றாடி இனம் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது என்று தோன்றும். ஆனால் இவ்வினத்தவர் பெரும்பாலும் கோயில் ஆடு மாடுகளைக் கொடை பெற்று அவற்றைப் பேணுபவர்களாகவே வருகின்றனர். கொடையாளிகள்  என்ற நிலையில் பிராமணர், வெள்ளாளர், வணிகர், ஆகியோர் பரவலாகக் காணப்படுகின்றனர். பிராமணர் முதற் காலகட்டத்தில் நிறைய காணப்படுகின்றனர். ………………………………………………………………………………………………………………………………………

        பதினோறாம் நூற்றாண்டு முடிய உள்ள செப்பேடுகளில் நிலக்கொடை பற்றிய அரச  ஆணைகள் பெறுபவர்களுள் முதன்மை நிலையில் நிற்பவர்கள் பிரமதேயக் கிழவர்கள் அதாவது பிராமண நிலக்கிழார்கள் மற்றும் வேளாண் நிலக்கிழாரான நாட்டாருமே யாகும். மேலும் இவர்கள் சோழ அரச அலுவலர்கள் பதவிகளில் முறையே பிரமராயன், மூவேந்த வேளான் ஆகிய பட்டங்கள் பெற்று முக்கிய இடத்தை வகித்தார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ……………………………………………………………
         வைதிகச் சடங்குகள் செய்பவர் என்ற முறையிலும், கோயில் பூசைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற முறையிலும் பிராமணர்கள் முதலிடத்தைப் பெற்றார்கள். இந்த சடங்கு வழியான தகுதியை அவர்களுடைய நிலவுடைமை மேலும் கூட்டியது. குறிப்பாக பிரமதேய ஊர்களில் பிராமணர்களுக்கு அடுத்தபடியாகவே மற்ற யாவரும் மதிக்கப்பட்டார்கள். முதல் இராசராசன் கல்வெட்டு ஒன்று பிராமண ஊர்களில் ‘பிராமணருக்குக் கீழ்ப்பட்ட ஜாதிகளில்’ உள்ளோர் தங்கள் காணிகளை விற்றுவிட வேண்டும் என்ற அரச ஆணையை ஏந்தியுள்ளது (தெஇக 5:1409). பிற இடங்களிலும் இந்த நிலையிருந்தது என்பதற்குச் சில சான்றுகள் உள்ளன”. (பக். 15&16, தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1300) – நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு)

     “இந்தச் சாதிக் கட்டுமானம் பற்றிய கல்வெட்டுத் தரவுகளில் அக்காலச் சமூகத்தின் முழுமையான வடிவம் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. பொருளாதார வசதி பெற்ற கொடையாளிகள் உருவாக்கியவையே கல்வெட்டுகள். சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த பறையர் அல்லது புலையர் போன்றோர் பற்றி மிக அரிதாகவே செய்திகள் கிடைக்கின்றன (நொபொரு கராஷிமா, 1995: 238-239). ஆயினும் அந்தச் செய்திகளைக் கொண்டே அவர்கள் நிலைமை மிகப் பரிதாபமாக இருந்தது என்று கணித்தறிய முடியும். ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர் என்றும் வெறுக்கப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் கொத்தடிமைகளாக நிலவுடைமையாளரின் பிற சொத்துக்களைப் போன்று நடத்தப்பட்டார்கள். அவர்களுடைய குடியிருப்புகளான புலைச்சேரி நத்தங்களும் நிலவுடைமையாளரால் விற்கப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்”. (பக்.23, மேலது)

     முதலாம் ராஜராஜனின் சகோதரன் ஆதித்த கரிகாலனை (கி.பி. 966 – கி.பி. 969) கொலை செய்தது சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்த பிராமணர்கள். அவர்களுள் இருவர் பெயர்களிலுள்ள பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்னும் பட்டங்கள் பெற்றிருப்பது சோழ அரசில் உயர்பதவிகளில் இருந்ததை எடுத்துக்காட்டும்.  

      இந்தக் கொலைகாரப் பிராமணர்களுக்கு பிற்காலத்தில் மநு நீதிப்படி முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014) தண்டனை வழங்குகிறான். அவர்களது சொத்துக்களை சிவன் கோயிலுக்கு உடைமையாக்கி அவர்களை நாடு கடத்துவதுதான் தண்டனை. மநுநீதியை  சட்டமாகக் கொண்டு ஆளும் நிலையில் பிற்கால சோழ அரசுகள் இருந்தன. பிராமண-பிரமதேய ஆதிக்கங்களும் சமஸ்கிருத மேலாண்மையும் உறுதிப்படுத்தப்பட்டது.
   
    ‘இடைக்கால இந்திய ஆதாரங்கள்’ எனும் முதல்பாடத்தில் கீழ்க்கண்ட செய்திகள் உள்ளன.

          “பிற்காலச் சோழர்கள் காலத்தில் (பத்து  முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை)  வெளியிடப்பட்ட பல செப்புப்பட்டயக் கொடை  ஆவணங்களில் இந்து, பௌத்த அல்லது சமண சமயத்தைச் சேர்ந்த தனிப்பட்ட  குருமார்களுக்கோ, துறவிகளுக்கோ அல்லது  புகழ் பெற்ற மனிதர்களுக்கோ வழங்கப்பட்ட கொடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
இவற்றில் கொடை வழங்கியவர், கொடை  பெற்றவர் ஆகியோர் குறித்து விரிவான  செய்திகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு  முரணாக கல்வெட்டுகள் உள்ளடக்கத்தில்  மாறுபடுகின்றன. அவற்றில் கொடை  வழங்கியவரின் அறச்செயல்களே அதிகம்  பதிவு செய்யப்பட்டுள்ளன. கொடை  வழங்கியவர் மட்டுமே சிறப்புக்கவனம்  பெறுகிறார். முதலாம் ராஜேந்திர சோழனின்  திருவாலங்காடு செப்பேடுகளும் சுந்தரச்  சோழனின் அன்பில் செப்பேடுகளும்  குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகளாகும்.  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திமேரூர் எனும்  ஊரிலுள்ள கல்வெட்டுகள், கிராமங்கள்  எவ்வாறு நிர்வகிக்கப்பட்டன என்பது குறித்த  விவரங்களைத்  தெரிவிக்கின்றன.

        சோழ அரசர்களால் வழங்கப்பட்ட  பல்வகைப்பட்ட நிலக்கொடைகளைக்  கல்வெட்டுகள், செப்புப்பட்டையங்கள் வாயிலாக 
நாம் அறிந்துக்கொள்ள  முடிகிறது அவை:

(அட்டவணையில் குறிக்கப்படுவன.)

வேளாண் வகை – பிராமணரல்லாத  உடமையாளருக்குச்  சொந்தமான நிலங்கள்.
பிரம்மதேயம் - பிராமணர்களுக்குக்  கொடையாக  வழங்கப்பட்ட நிலங்கள்.
சாலபோகம் – கல்விநிலையங்களைப் பராமரிப்பதற்காக  வழங்கப்பட்ட நிலங்கள்.
தேவதானம் – கோவில்களுக்குக்  கொடையாக  வழங்கப்பட்ட நிலங்கள்.
பள்ளிச் சந்தம் - சமண சமய நிறுவனங்களுக்குக்  கொடையாக  அளிக்கப்பட்ட நிலங்கள்”. (பக்.126,127)

    ‘உத்திரமேரூர் கல்வெட்டுகள்’ எனும் தலைப்பில் கூறப்படும் செய்திகள் பின்வருமாறு”

     “இன்றைய காஞ்சிபுர மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேய  கிராமமாகும். இக்கிராமத்தில் கிராம  சபைக்கான உறுப்பினர்கள் எவ்வாறு  தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவாக விளக்கும் கல்வெட்டுகள் உள்ளன.

     ஒவ்வொரு குடும்பிலிருந்தும் (வார்டு) உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். மொத்தம் 30  குடும்புகள் இருந்தன. போட்டியிடும் ஆடவர் 35 -70 வயது வரம்புக்குள் இருத்தல் வேண்டும்.  வேதநூல்களிலும், சமய நூல்களிலும் தேர்ச்சி  பெற்றிருப்பதும், நிலஉரிமையாளராகவோ, சொந்த வீடு உடையவராகவோ இருக்க வேண்டும் என்பவை தகுதிகளாகும். தேர்ந்தெடுக்கும் முறை: ஒவ்வொரு  குடும்பிலிருந்தும் தகுதியுடைய  வேட்பாளர்களின் பெயர்கள் பனையோலைத் துண்டுகளில் எழுதப்படும். அவை மட்பாண்டம்  ஒன்றில் போடப்படும். மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஒரு சிறுவனை அழைத்து  குடத்துக்குள் உள்ள ஓலைத் துண்டுகளை  எடுக்கச் சொல்லி அதில் எழுதப்பட்டுள்ள பெயரை அறிவிப்பார். இம்முறையின்படி பல குழுக்கள்  முடிவு செய்யப்படும்”. (பாடநூல், பக்.155 & 156)

     நிலக்கொடைகளில் சில வகைகள் என்று சொன்னால்கூட ஏற்கலாம். செப்புப்பட்டயங்கள் வழி அறிந்து கொள்ளும் செய்திகள் இவைதான் என மூடுண்ட இறுதியான ஒன்றாக இவை முன்வைக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திமேரூர் எனும்  ஊரில் கிடைத்த இரு கல்வெட்டுகளைக் கொண்டு இவர்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ‘குடவோலை’ நாடகத்தை தமிழகம் முழுமைக்கும் அரங்கேற்றும் புனைவுச் செயலைக் கூசாமல் செய்கின்றனர். இந்தத் திருவுளச்சீட்டு முறையை மக்களாட்சி முறையாகவும் இன்றைய உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடும் கூத்துகளையும் கூட அரங்கேற்றுகின்றனர். இதற்குத் துணையாக மருதன் இள நாகனாரின் அகநானூற்றுப் பாலைநிலப் பாடல் மூலம் (பாடல் எண்:77) சங்ககாலத்திலேயே  ‘குடவோலை முறை’  இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் மிக மோசமான பார்வை. இப்படியெல்லாம் புனைவுகள் மூலமும் ஒரு வரி இலக்கியச் சான்றின் மூலமும் வரலாற்றைக் கட்டியெழுப்ப இயலாது. சங்க காலத்தில் அப்படியொரு முறை இருந்தாலும் அதை பிரமதேய குடவோலை முறையுடன் ஒப்பிட முடியாது.

      “உள்ளாட்சி நிர்வாகமானது ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார் எனும் அமைப்புகளின் மூலமாகச் செயல்பட்டது. வேளாண்மையின்  விரிவாக்கத்தினால் கிராமப்புறங்களில்  அதிக எண்ணிக்கையில் விவசாயிகளின்  குடியிருப்புகள் உருவாயின. அவை ஊர்கள்  என அறியப்பட்டன. நிலஉடமையாளர்களாக இருந்த ஊரார், ஊரின் சார்பாகப் பேசுபவர்களாக இருந்தனர். பிராமணர் கிராமங்களைச் சேர்ந்த சபையோர் பொது  நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும்,  நீதி வழங்குதலையும் மேற்கொண்டனர்.  வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர். இருந்தபோதிலும் தனித்திறன்  பெற்ற கட்டுமானக் கலைஞர்கள், இரும்புத் தொழில் செய்வோர், தங்கவேலை செய்வோர், நெசவு செய்வோர், மட்பாண்டம் வனைவோர் ஆகியோரும் நகரத்தில் வாழ்ந்தனர்.  நாடுகளில் நாட்டார் எனும் அமைப்பு நாடோடு  தொடர்புடைய பூசல்களையும் ஏனைய  சிக்கல்களையும் தீர்த்துவைத்தது. ஊர், சபை, நகரம், நாடு ஆகியவற்றில்  இருந்த மன்றங்கள் பல்வேறு குழுக்கள்  மூலம் பணிகளை மேற்கொண்டன.  இக்குழுக்கள் நீர்ப்பாசனம், சாலைகள்,  கோவில்கள், தோட்டங்கள், வரிவசூல், மத விழாக்களை நடத்துதல் போன்ற பணிகளை  மேற்கொண்டன”. (பாடநூல், பக்.155)


     தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின்   பிற்காலச் சோழர் வரலாறு’ என்ற நூலின் வழியே  நமக்கு முழுத்தகவல்கள் தெரிய வருகின்றன. அவரது நூலிலிருந்து சில பத்திகள்:


     “சோழரது ஆட்சிகாலத்தில் நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடிப்படையாக வைத்து அந்நிலங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவற்று, உழவுத்தொழிலையே வழி வழியாக மேற்கொண்டு நிலங்களை அனுபவித்து வந்த குடிகளுக்கே உரிமை வெள்ளான் வகை ஒன்றாகும்”. (பக்.513, பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவ பண்டாரத்தார்) 

     “மற்றொரு வகை நிலங்கள், தானமாக அளிக்கப் பெற்றவையாகும். அவை, தேவதானம், திருவிடையாட்டம், பள்ளிச்சந்தம், மடப்புறம், சாலாபோகம், பிரமதேயம் என்று வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள், தேவதானம் என்பது, சிவன் கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலம்; திருவிடையாட்டம் என்பது, திருமால் கோயில்களுக்கு அளிக்கப்பெற்ற நிலம்; பள்ளிச்சந்தம் என்பது, சைன கோயில்களுக்கும் பௌத்த கோயில்களுக்கும் விடப்பெற்ற நிலம்; மடப்புறம் என்பது மடங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம்; சாலாபோகம் என்பது, ஆபூர்விகள், அந்தணர்கள், சிவயோகிகள் முதலானோர்க் குணவு கொடுக்கும் அறச்சாலைகளுக்கு அளிக்கப்பட்ட நிலம்; பிரமதேயம் என்பது, வேதங்களையும் சாத்திரங்களையும் நன்கு பயின்று சீலமும் புலமையும் படைத்த பார்ப்பனர்க்கு வழங்கப்பெற்ற நிலம். இவ்வகை நிலங்களெல்லாம் பெரும்பாலும் இறையிலி நிலங்களாகவே செய்யப்படுவது வழக்கம்”. (பக். 513&514, மேலது)

     “பிறிதொருவகை நிலங்கள், சில குறிப்பிட்ட காரியங்களைச் செய்தற் பொருட்டு அவற்றைச் செய்து வருவோர்க்குக் கொடுக்கப் பெற்றவையாகும். இவற்றை, சீவிதம், போகம், விருத்தி, காணிபற்று, புறம், பட்டி முற்றூட்டு என்று அக்காலத்தில் வழங்கி வந்தனர்”. (பக்.514, மேலது)

     வெள்ளான் வகை (வேளாண் வகை) என்பது பிராமணரல்லாத அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒன்றல்ல. தேவதானம் சைவக் கோயில்களுக்கு வழங்கப்பட்டது; இதைப் பொதுவாக ‘கோயில்’ என்று குறிப்பது தவறு.  வைணவ (பெருமாள்) கோயில்களுக்கு திருவிடையாட்டம், திருநாமத்துக்காணி போன்ற பெயர்களில் நிலக்கொடைகள் (இறையிலிகள்) அளிக்கப்பட்டன. கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக  வழங்கப்பட்ட நிலங்கள் மட்டுமல்ல சாலபோகம் என்பது; பசிப்பிணிப் போக்கும் அறச்சாலைகளுக்கும் பொருந்தும். இவையனைத்தையும் ஏழாம் வகுப்பில் சொல்லிவிட இயலாதெனினும் எளிமை என்ற பெயரில் வரலாற்றைத் திரிக்கக்கூடாதல்லவா!

      “நிலங்களை அனுபவித்து வந்தோரின் உரிமையை அடைப்படையாக வைத்து நிலங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் உழவுத்தொழிலை வழிவழியாகச் செய்து, நிலங்களை அனுபவித்து வந்த குடிகளுக்கே உரிமையுள்ள ‘வெள்ளான் வகை’ ஒன்றாகும். மற்றொரு வகை, நிலங்கள் சில தொழில் செய்வோருக்கு கொடுக்கப்பட்டவையாகும். அவை சீவிதம், போகம், காணி, விருத்தி போன்ற பெயர்களால் குறிக்கப்பட்டன. மூன்றாவது வகை தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களாகும். அவை பிரம்மதேயம், தேவதானம் சாலாபோகம் என்று வழங்கின”. (பக்.747, சோழர்கள் -2, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி)

      “கோயில்களில் அபிஷேகம் செய்ய, தண்ணீர் கொண்டுவந்தவர்கள், கோயிலில் காவல் புரிந்தோர், சங்கு முழங்குபவர், அர்ச்சகர், ஓதுவார் மற்றும் பல கைங்கர்யங்கள் செய்தவர்களுக்கும், சீவிதம், போகம், காணி என்று பல்வேறு பெயர்கொண்ட மானியங்கள் விடப்பட்டன”. (பக்757, மேலது) 

     “மூன்று வகையில் தரும ஸ்தாபனங்களுக்கு நிலமானியம் அளிக்கப்பட்டன. அவை பிரமதேயம், தேவதானம், சாலாபோகம் என்று வழங்கலாயின. சில சமயங்களில் முதல் இரண்டும் சேர்ந்து தேவதான-பிரமதேயம் என்று வழங்கப்பட்டது. தேவதானம் என்பது, திருவிடையாட்டம், திருநாமத்துக்காணி என்பவற்றிலிருந்து வேறுபட்டது”. (பக்.753, மேலது)

    “விஷ்ணுக் கோயில் நிலங்களைக் குறிக்க ‘சக்கரம்’ பொறிக்கப்பட்ட கல்லும். சிவன் கோயில் நிலத்தைக் குறிக்க ‘சூலம்’ பொறிக்கப்பட்ட கற்களும் ஊன்றப்பட்டன. சமணப்பள்ளிகளில் நிலங்களைக் குறிக்க வைக்கப்பட்ட கற்கள் ‘குண்டிகைக் கல்’ எனவும் ‘முக்குடைக்கல்’ எனவும் வழங்கப்பட்டன என்பர்”. (பக்.756, மேலது)

      பேரா. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, தி.வை. சதாசிவ பண்டாரத்தார், டாக்டர் கே.கே. பிள்ளை போன்ற வரலாற்றாளர்கள் பிரமதேய ஆதிக்கம், பிரமதேயத்திலிருந்த ஊரவையை வெளியேற்றிய விதம் ஆகியவற்றை ஒத்துக்கொள்கின்றனர். பிராமணர்கள் பெற்ற முதன்மை இயல்பான ஒன்று என்ற வருணக் கருத்தியலின்படியே இவர்கள் வரலாறு எழுதத் தலைப்பட்டுள்ளனர் என்பது தமிழக வரலாற்றெழுதியலின் துயரமாகும். 

      இவர்கள் அனைவரிடமும் காணப்படும் ஒற்றுமை பொதுப்புத்திக்கேற்ப தமிழ்ப் பெருமிதச் சொல்லாடல்களை புனைவதில் இருக்கிறது. மேலும் குடவோலையில் மக்களாட்சியை இனங்காணும்  கிருஷ்ணசாமி அய்யங்கார் தொடங்கி வைத்ததை எவ்வித சுயஆய்வுகள் இன்றி அப்படியே வழிமொழிகின்றனர். இதைப் பின்வரும் மேற்கோள்களின் வழி உணரலாம். 

     “இவ்வாறு பிரமதேயமும் வெள்ளான் வகையும் கலந்திருந்த ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி நடத்துவதற்கு இரண்டிரண்டு சபைகள் தனித்தனியே இருந்து வந்தன. அவ்விருவேறு சபைகள் சதுர்வேதிமங்கலத்துச் சபையும் ஊரவையுமாகும். ஒரே கிராமத்தில் இரு சபைகள் ஊராட்சி நடத்தி வருவதில் சில இடர்ப்பாடுகள் காணப்பட்டமையால் அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் ஆட்சியின் கீழ் அமைத்தல் வேண்டும் என்ற எண்ணம் முதல் இராசராச சோழனுக்குத் தோன்றியதாகத் தெரிகிறது. அவ்வாறு செய்ய வேண்டுமானால்  பிரமதேயப் பகுதியை அனுபவிக்கும் பார்ப்பனரையும் வெள்ளான் வகை நிலஙகளுக்குரிமையாளராகிய பிற வகுப்பினரையும் சேர்த்துக் கிராமசபை அமைத்தல் வேண்டும். இவ்விரு பகுதியிலுள்ளவர்கள் ஒருங்கே ஒரே சபையில் உறுப்பினராகி ஊராட்சி நடத்தும் உட்கழகங்களில் அமர்வதற்கு உறுப்பினர்க்குரிய தகுதி பற்றிய விதிகள் இடங்கொடுக்கவில்லை. அதனால் பார்ப்பன ஊர்களில் கிராம ஊழியத்தின் பொருட்டுப் பணிமக்கட்குக் கொடுக்கப்பட்டுள்ள மானியஙகளைத் தவிர, மற்ற வகுப்பினர் வெள்ளான் வகையில் அனுபவித்துவரும் நிலங்கள் எல்லாவற்றையும் விற்றுவிட வேண்டுமென்று அவ்வேந்தன் ஓர் உத்தரவு செய்யும் நிலைமை ஏற்பட்டதென்று தெரிகிறது. அவ்வுத்தரவை நிறைவேற்றும் பொருட்டு ஓர் அதிகாரியும் நியமனஞ்செய்யப்பட்டுள்ளான் என்பது கருந்திட்டைக்குடிக் கல்வெட்டொன்றால் புலப்படுகின்றது. (பக். 519 & 520) (தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின் நூல்)

    ‘தகுதி இடம் கொடுக்கவில்லை’ என்றால் என்ன? பிறப்பால் பிராமணராக இருக்க வேண்டும் என்பதுதானே? பிராமணரல்லாதோர் சமஸ்கிருத வேதப் பயிற்சியை எப்படிப் பெற முடியும்? அதற்கு வருண தர்மத்தில் இடம் உண்டா? என்ற கேள்விகள் இந்த ‘பென்னம்பெரிய’ வரலாற்றாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.

      “முதலாம்  இராஜராஜன் , இராஜேந்திரனின் ஆட்சிக் காலங்களில் பிரமதேயக் கிராமங்களில் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின்  நில உரிமைகள் சுருக்கப்பட்டன. தற்கால நோக்குக்கு இது ஏதோ ஒரு குறுகிய வகுப்புவாத அடிப்படையில் செய்யப்பட்டதாகத் தோன்றும். ஆனால் காரணம் அது அன்று. பட்டர்களும், கிராம வித்தகர்களும்  சங்கம் வகித்து நடத்துவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ள பிரமதேய சபைகளின் அமைப்புடன் மற்றவர்களை இணைப்பதில் ஏற்பட்ட சங்கடங்களே உண்மையான காரணமாகும். தனித்தன்மை வகிக்க முடியாத பேரூர்களில் 'சபை', 'ஊர்' என்ற இருவித மன்றங்களும் பணிபுரிந்தன என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். பிராமணர்கள் அதிகமாயுள்ள பிரமதேயங்களில் மட்டும் நில உரிமையுள்ள மற்ற வகுப்பினர் அதிக அளவில் இல்லாமையால் அவர்களுக்கென 'ஊர்' என்னும் மன்றம் இயங்கவில்லை. பிரமதேய சபைகளில் அங்கம் வகிக்க நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பாமர வகுப்பினர் எளிதில் அடையக் கூடியவர் அல்லர். ஆகையால், அவற்றில் அங்கம் வகிக்கவும் முடியாது. அங்கம் வகிக்காவிட்டால் நில உரிமைகளையும் எடுத்துக்கூற வழி இருக்காது. இதனால் அவர்கள் தங்களுக்குத் தக்க சூழ்நிலையைத் தேடிச் சொல்லுவார்கள். இவ்வாறு இடர்ப்பாடுகள் வரும் என்று  ஆரம்ப காலங்களில் எதிர்பார்க்கவில்லை போலும். ஏனென்றால், பிரமதேயங்கள், எவ்வகுப்பினரும் நிலம் வைத்துக் கொள்ளலாம் என்று இருந்தது. ஆனால் நடைமுறையில் இயற்கையாகவே சில இடர்பாடுகள் தோன்றவே, அரசர் கவனத்திற்கு இவை கொண்டுபோகப்பட்டன. இராஜராஜனின் 17-ம் ஆண்டில் (கி.பி. 1002) ஒரு பொதுக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லாரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும்; நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப்பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும்”. (பக். 755 & 756, சோழர்கள் 2, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி)

      சதுர்வேதிமங்கல பிரமதேய சபைகளில் பாமர வகுப்பினர் இடம்பெறுவது எப்படி என்பதை சாஸ்திரியார் விளக்கினாரில்லை. ஏதோ இத்தகுதி கல்வியால் கிடைப்பதான பாவனையில் பூசி மெழுகி எழுதுகிறார். இவை பிறப்பால் நிர்ணயிக்கப்படும் வருண தர்மம் என்பதை சாஸ்திரியார் அறியாமலிருக்க ஏதுக்கள் உண்டா? சூத்திர வகுப்பார் எங்ஙனம் ‘சதுர்வேதி’யாக இயலும்? மற்றவர்களை இணைக்க உண்டான சங்கடங்கள் வருணத் தீண்டாமையன்றி வேறென்ன?


      “தமிழகத்து வேந்தர்கள் தமிழகத்து அந்தணரிடம் எக்குறைபாடுகளைக் கண்டார்கள என்பது விளங்கவில்லை. தமிழகத்தில சமய வளர்ச்சியும், வேதப் பயிற்சியும், ஆகமங்களின் வளர்ச்சியும், கோயில் வழிபாடும் பலதரப்பட்ட துறைகளில் விரிவடையவே அவற்றுக்கு ஏற்றவாறு தம்மைத் திருத்தியமைத்துக் கொள்ளும் ஆற்றல்கள் தமிழ்ப் பிராமணரிடம் பெருகவில்லை போலும். ஆனால், வடவரின் இலக்கியமும், சமயக் கருத்துகளும் பண்பாடுகளும் தமிழ்நாட்டில் பெருக்கெடுத்துப் பாயவே அவற்றை வளர்ப்பதற்கும், மேற்கொண்டு பல புதுமைகளைப் பெருக்கிக் கொள்வதற்கும், மன்னர்கள் ஆயிரக்கணக்கில் அயல்நாட்டுப் பிராமணரை இறக்குமதி செய்து கோயில்களிலும் மடங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் அவர்களை அருச்சகர்களாகவும், புரோகிதர்களாகவும், வேத பாராயணம் செய்வோராகவும் ஆங்காங்கு அமர்த்தினர். வேதநெறி தழைத்தோங்குவதற்காக மன்னரும் மக்களும் புதிதாகக் குடிபுகுந்த பிராமணருக்குப் பொன்னையும் பொருளையும் குடியுரிமைகளையும் வாரி வழஙகினர். பிராமணருக்குத் தனி  நிலங்களும், முழுமுழுக் கிராமஙகளும் தானமாக வழங்கப்பட்டன. அக்கிராமங்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் எனப் பல பெயரில் வழஙகின. இக் குடியிருப்புகள் அனைத்தும் பிராமணரின் நிருவாகத்துக்கே விடப்பட்டன. அரசனுடைய ஆணைகள் அவற்றினுள் செயல்படா. அக் கிராமங்களுக்கு எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், கடமைகள், ஆயங்கள் முதலியவற்றினின்றும் முழு விலக்கு அளிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்தின் உள்ளாட்சிக்கும் ஒரு மகாசபை அமைத்துக் கொண்டு பிராமணர்கள் தத்தம் கிராமத்தின் நிருவாகத்துக்குத் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்கள். உள நிறைவுடன் நல் வாழ்க்கையில் நின்று வேதம் ஓதி, இறைப்பணி புரிந்து, அறம் ஓம்பி, மக்களிடையே கல்வியறிவையும் ஆன்மீக விழிப்பையும் தோற்றுவிப்பதற்காகவே மன்னரும் மக்களும் அவர்கட்குத் துணைநின்றார்கள். ஆனால், விளைவோ வேறுவிதமாயிற்று”. (பக். 316 & 317, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், டாக்டர் கே.கே. பிள்ளை)

     வடநாட்டு பிராமண ஆதிக்கம் பற்றி வருந்தும் கே.கே. பிள்ளை தமிழ்நாட்டுப் பிராமணர்களிடம் எவ்வித குற்றம் குறையும் காணாமலிப்பது வியப்பளிக்கும் செய்தியாகும். இவர்களனைவரும் குடவோலை முறை மற்றும் பிற்காலச் சோழப் பெருமிதங்களை உரைப்பதிலும் விதந்தோதுவதிலும் உள்ள ஒற்றுமை வியக்கத்தக்கதாக உள்ளது. மேலே காணும் இவர்களது மேற்கோள்களுடன் குடவோலை முறை குறித்த இவர்களது  கருத்துகளையும் இணைத்து வாசிப்பது நமது வரலாற்றெழுதியலின் அவலத்தைப் புரிந்துகொள்ள உதவும். 

(இன்னும் வரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக