சனி, செப்டம்பர் 07, 2019

சந்திராயன் தோல்விகள்: சில குறிப்புகள்


சந்திராயன் தோல்விகள்: சில குறிப்புகள்

மு.சிவகுருநாதன்

     சந்திராயன் 02 திட்டம் இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இம்மாதிரியான நிகழ்வுகளில் தோல்வி ஏற்படுவது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் நமது நாட்டில் இது அணுகப்படும் விதம் என்பது மிக மோசமானதாகவும் அறிவியலுக்குப் புறம்பானதாகவும் இருக்கிறது. 

   சந்திராயன் 01 திட்டமும் ஓராண்டிற்கு முன்னதாகவே முடிவுக்கு வந்தது. அதை இன்றுவரை தோல்வி என்று யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அது முன்னதாகவே 99% பணிகளை முடித்துவிட்டதாகவே இன்றும் சொல்லிக் கொண்டுள்ளனர். 

   நிலவில் தரையிறங்கும் லேண்டரின் செயல்பாடு துண்டிக்கப்பட்டாலும் 95% பணிகள் பூர்த்தியாகும் என்றும் சொல்கிறார்கள். இது எத்தகைய மதிப்பீடுகள் என்பதை யாரும் விளக்குவதில்லை. 

     இம்மாதிரியான தோல்விகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும், மாறாக அறிவியல் புனைகதைகளை உருவாக்குவது நாட்டு மக்களுக்கும் அறிவியலுக்கும் செய்யும் துரோகமாகும். ‘புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சி நேரலையில் பேசிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு. முத்து  என்பவர், சந்திராயன் 01 இன்னும் விண்ணில் சுற்றுவதாக ‘நாஸா’ தெரிவித்துள்ளது என்கிறார்கள். அது தரையுடன் தொடர்பில் இருக்கிறதா? அதனால் என்ன பயன்? இவ்வாறான புனைவுகளின் அரசியல் மதிப்புகள் சிந்திக்கப்பட வேண்டியது. 

    தோல்வியை ஒப்புக்கொள்ளாதவரை அடுத்தகட்ட முயற்சி சாத்தியமில்லை. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியன் இந்தியப் பொருளாதாரத்தை குலைத்தன என்பதை உணராமல் பொருளாதாரத்தைச் சரிசெய்வது எப்படி? (முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ‘வரித் தீவிரவாதம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதைக் கவனிக்கவும்.)  அதைப்போலத்தான் அறிவியல் ஆய்வுகளிலும்; மீளாய்வு இல்லாமல் வெற்றி இல்லை. 

    இஸ்ரோ போன்ற அமைப்புகள் இங்கு அறிவியல் அமைப்புகளாக மட்டும்  செயல்படவில்லை. இவை அரசியல் அமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன. இது அணுசக்தி ஆய்வுகளுக்கும் பொருந்தும். 

   இந்திய ஆட்சியாளர்களின் வல்லாதிக்கக் கனவு, அறிவியல் சாதனைகளை தங்களது ஆட்சிக்காலச் சாதனைகளாக மாற்றும் எத்தனங்கள், மக்களைத் திசை திருப்பும் குயுக்திகள் போன்றவை இதிலடங்கும். பொக்ரன் அணுவெடிச் சோதனைகள், இஸ்ரோவின் செயல்பாடுகள் ஆகியவற்றிலும் இவற்றைக் காணலாம். 

   அவசரகதியில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள், இதற்கென வாரி இறைக்கப்படும் மக்கள் பணம், பிற அறிவியல் துறைகள் புறக்கணிக்கப்படும் அவலம் என அனைத்திற்கும் பின்னாலும் அரசியல் இருக்கிறது. 

      அரசியலில் மதம் கலப்பது எவ்வளவு ஆபத்தானதோ, அதைப்போலவே அறிவியலில் அரசியல், மதம் ஆகியன கலப்பதும் மிகக்கொடியதே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக