செவ்வாய், செப்டம்பர் 17, 2019

பெரியாரை அறிதல்


பெரியாரை அறிதல்


மு.சிவகுருநாதன்


(தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை ஒட்டி பேரா. அ.மார்க்ஸ் எழுதிய 'பெரியார்?' என்ற  பெரியாரை புதிய கண்ணோட்டத்தில் அணுகும் ஆய்வுக் குறுநூல் குறித்த அறிமுகப் பதிவு. தலைப்பிற்கு நன்றி: தரம்பால் - காந்தியை அறிதல்)



        பெரியார் மண் என்கிற பெருமை மற்றும் இறுமாப்பில் திரியும் பெரும்கூட்டம்  ஒன்று தொடர்ந்து இருந்து வருகிறது. கதாநாயகத் தன்மையுடன்,  கடவுளாக மாற்றப்பட்ட புத்தர் போன்று பெரியாரை வழிபடும் அல்லது  பெயரை மட்டும் சொல்லிப் பிழைப்பு நடத்தும் கும்பல்கள் பெருகிவிட்டன.

       பெரியாரை நாம் எவ்வாறு உள்வாங்கி இருக்கிறோம் அல்லது பெரியார் நமக்குள் என்ன மாதிரியாகப் புகுத்தப்பட்டுள்ளார்  என்பதை விமர்சன நோக்கில் அணுக வேண்டிய தேவை இன்று சற்று அதிகரித்துள்ளது.

        மேலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு, சமகாலத்தில் தோன்றிய பொதுவுடைமை, அம்பேத்கர், இந்துத்துவ இயக்கங்கள் இந்திய அளவில் இருக்கும்போது சுயமரியாதை இயக்கத்தின் நீட்சி தமிழ்நாட்டைத் தாண்டி அகலிக்காமல் போனது குறித்தும்  சற்று சிந்திக்க வேண்டியுள்ளது.

    ‘நிறப்பிரிகை’ 1990களில் இவ்வாறு மாற்றுச்சிந்தனைகளை தமிழுக்கு வழங்கியது. அதன் தொகுப்பாய் வெளியான ‘பெரியாரியம்’ கட்டுரைத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள்  இதை உணர்த்தும். இதற்கு முதன்மைக் காரணியாய் இருந்தவர் பேரா. அ.மார்க்ஸ். அதன் தொடர்ச்சியாக இக்குறுநூலில் பெரியாரை முற்றிலும் புதிய வெளிச்சத்தில் ஆய்வுக்குட்படுத்துகிறார். 2001 இல் வெளியான இந்நூல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மறுபதிப்பு கண்டுள்ளது. 



    பெரியார் பற்றி இங்கு எத்தகைய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன? இந்நூல் அவற்றைப் பட்டியலிடுகிறது. 


  • பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்
  • நாத்திகர்
  • பகுத்தறிவுவாதி
  • பார்ப்பன எதிர்ப்பாளர்
  • தமிழ்த்தேசப் பிரிவினையாளர்
  • பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக  நேர்மையாகச் செயல்பட்டவர்
  • இட ஒதுக்கீட்டிற்காகப் போரடியவர். (பக். 03)

                                 என்றெல்லாம்தானே இதுவரையில் சொல்லப்பட்டு வந்துள்ளது.


  • தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.
  • தமிழ் இலக்கியங்கள் உதவாக்கரை, சாதி காப்பாற்றுபவை.
  • மொழி இயற்கையானதல்ல; தேசம் ஒரு கற்பனை; தேசாபிமானம் அயோக்கியத்தனம்; வியாபாரம்.
  • நான் ஒரு தேசாபிமானி அல்ல(ன்), தேசத்துரோகி.
  • மதப்பற்று, சாதிப்பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று தேவையில்லை.
  • ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலை இல்லை.
  • கணவன் இருக்க வேறொரு ஆடவரை நினைப்பது குற்றமாகக் கருதப்படக்கூடாது.
  • பொதுநலம், தியாகம் என்பதெல்லாம் பொருளற்ற சொற்கள்; பித்தலாட்டங்கள், சுயநலமற்ற செயல்கள் ஏதுமில்லை, சுயநலம் இழிவுமில்லை.
  • மக்களை எதைப் பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்ல வைப்பதே கல்வியின் நோக்கம்.
  • பொது நன்மை, பொது உணர்ச்சி, பொது ஒழுக்கம், பொது நீதி சாத்தியமல்ல; ஒருவனுக்கு சாத்தியமாக உள்ளது  இன்னொருவனுக்கு அசத்தியமாகலாம். (பக். 02,03)


     பேராசான் கார்ல் மார்க்ஸ், அண்ணல்  அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்று உலகமெங்கும்  கொண்டாட வேண்டியவர்களுள் ஒருவர் பெரியார். கொண்டாடுவது என்றால் வழிபடுவதல்ல; அவரது  கருத்தியல்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதாகும். ஆனால் அது நடக்காமல் போன காரணம் என்ன? இந்திய அறிவுத்தளத்தில் பவுத்தம் போன்ற அவைதீக சிந்தனைகள் மேலெழும்ப முடியாவில்லை; அதுபோல பெரியாரியமும் தமிழகத்துக்குள் அடைபட்ட சிந்தனையாகிப் போன  அவலம் இன்னும் நீடிக்கிறது. 

     புத்தரைப் போன்று நிர்வாணமான சிந்தனை சக்தியை வலியுறுத்தியவர். 

       “ஈடேற வழி : பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே”  என்று எந்தப் பற்றுகளை விட்டொழிக்க வேண்டும் எனப் பட்டியலிட்டவர். 

    “எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக்கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன். உங்களுக்குள் ‘தேசாபிமானம்’ என்கின்ற யோக்கியமற்ற சூழ்ச்சிக்கு நீங்கள் ஆளாகக்கூடாது. அது, சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோட்சம், நரகம் என்பது போன்ற மூட நம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானந்தான் உண்மையாய் வேண்டும்”, (குடியரசு: 13.10.1935, ராசிபுரம் வட்ட ஆதிதிராவிடர் மாநாடு)

    "சாதி இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து" என்றாரே! ஏன் அவ்வாறு சொன்னார்? நாம் சிந்தித்திருக்கிறோமா, அல்லது சிந்திக்க வைக்கப்பட்டோமா?

     “ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்”, 

    என்று சுயமதிப்பீடு செய்துகொண்டு தாம் இறக்கும் வரையிலும் கலகக்கராராய் வாழ்ந்தவர் பெரியார். 

    “எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாமல், மானத்தைப் பற்றி கவலை இல்லாத திராவிட மக்களிடத்தில் நல்லபேர் வாங்கவேண்டும் என்ற கவலை சிறிதுமில்லை”, 

     என்று வெளிப்படையாக அறிவித்து கலாச்சார மதிப்பீடுகளை கட்டுடைத்து எதிர்க்கலாச்சாரவாதியாக இருந்தார்.

    “நாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும். தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக; பிரசங்கம் செய்தாக வேண்டும்”, என்று உடல் நலிவுற்ற நிலைலிலும் நவீன வசதிகள் ஏதுமற்ற சூழலில் தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கும் சென்று வழிகாட்டினார். 

     “நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்”, என்று தன்னிருப்பை நிலைநாட்டி, “93 வயதாகிவிட்டது. இனி என்னை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள். சென்னையில் நிரந்தரமாகத் தங்கி நூல் வெளியீடுகள், துண்டுப்பிரசுரங்கள் வெளியிடுகிறேன்”, என்று சொன்ன அவரது உழைப்பு இன்று வீணாகிவிட்டதோ என்று எண்ணக்கூடிய அளவில் தமிழகச்சூழல் உள்ளது. 

     “எந்தக்காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய  எந்த குணத்தையும் என்மீது சுமத்திவிடாதீர்கள்”, என்று கேட்டுக்கொள்ளும் பெரியார் போகுமிடங்களில், “ராமசாமி கழுதைக்கு செருப்படி”, “ராமசாமி கழுதை செத்துவிட்டது”, “ராமசாயின் மனைவி அவிசாரி”, என்றெல்லாம் சுவரெழுத்துகள் எழுதப்பட்டன. “ராமசாமி சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்”, “ராமசாமி மனைவி கற்புக்கரசி”, என்பதற்கெல்லாம் மகிழ்ச்சியடைந்திருந்தால்தானே இதற்காக விசனப்படவேண்டும் என்று எதிர்க்கேள்வி எழுப்பி தனது பயணத்தைத் தொடங்கிவிடுவார் பெரியார். அவர் தன் மீது வீசப்பட்ட செருப்புகளை மிதித்துக்கொண்டு தனது பயணத்தில் முன்னேறினாரே தவிர பின்தங்கிவிடவில்லை. அவர் சிலை அவமதிக்கும் சங்கிகளுக்கு இது என்றுமே புரியப் போவதில்லை.   

      சேதோ விமுக்தி, பிரக்ஞா விமுக்தி என இருவகையான முக்திநிலைகளை தீக நிகாயத்தில் புத்தர் வலியுறுத்துகிறார். அறிவுநிலை மற்றும் உணர்வு ஆகிய இரண்டிலும் உள்ள பற்றுகளை நீக்குதல்  இங்கு முதன்மையானது. (பக். 72, தீக நிகாயம் – பௌத்த மறைநூல், தமிழில்: மு.கு.ஜெகந்நாத ராஜா, வெளியீடு: தமிழினி, டிசம்பர் 1988)  இதைத்தான் பெரியார் வேறு மொழியில் சொன்னார்.  

      “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பல கோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக்கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, ‘நிர்வாணமான சிந்தனா சக்தி’ தரும் படிப்பைக் கொடுத்து, மக்களை எதைப்பற்றியும், எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேரம் முதலியவை பெருமளவு மீதமாகி மக்கள் வாழ்க்கைத் தரமுயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரஸ்பர உதவி முதலியவை தானாக வளர்ந்து, இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் ‘குறைவற்றச் செல்வத்துடனும், நிறைவற்ற ஆயுளுடனும்’ வாழ்வார் என்பது உறுதி”. (விடுதலை தலையங்கம். பக். 146, பெரியார் கல்வி சிந்தனைகள், தொகுப்பு: அ.மார்க்ஸ், பாரதி புத்தகாலய வெளியீடு: டிசம்பர் 2007)

     “புத்த தர்மம் என்றால், புத்தி தர்மம் என்பதாகும்; அதுதான் மனித தர்மமும் ஆகும். இந்த புத்தி தர்மத்தை – மனித தர்மத்தை எடுத்துக் கூறிப் பாடுபட்ட புத்தர்கள் எல்லாம் கழுவேற்றப்பட்டும், உடைமைகள் எல்லாம் சூறையாடப்பட்டும் இருக்கின்றனர். புத்த மடாலயங்கள் எல்லாம் இடிக்கப்பட்டும் தீ வைக்கப்பட்டும் இந்துக் கோயிலாக மாற்றப்பட்டும் கொடுமை இழைக்கப்பட்டும் இருக்கின்றன”, (கோலார் தங்க வயல் சொற்பொழிவு: விடுதலை: 16.05.1961) மறுபுறம் பவுத்த சிலை வழிபாட்டையும் இவர் விமர்சிக்கத் தவறுவதில்லை. 

  “ஆதித் திராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு, இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்படவேண்டுமென்பதும், திராவிடர்களுக்கும் ஆதித் திராவிடர்களுக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து, ஒரே சமூகமாக ஆக வேண்டும் என்பதும் எனது ஆசை. (குடியரசு: 02.08.1940, திருவாரூர் ஜஸ்டிஸ் கட்சி மாநாடு)

    “பறையர் பட்டம் போகாமல் உங்களுடைய சூத்திரப்பட்டம் போய்விடும் என்று கருதினீர்களேயானால் நீங்கள் வடிகட்டின முட்டாள்களே யாவீர்கள்”, என்றும் பெரியார் எச்சரிக்கிறார். தலித்களுக்கு தனி கிணறு திறந்துவைக்கும் காரைக்குடி நிகழ்வில் இதில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் பதிவு செய்கிறார். 

           பெரியாரைத் தமிழர்களுக்கும் தலித்களுக்கும் எதிராக நிறுத்தும் போக்கு அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. பெரியாரை முழுமையாக வாசித்தால் இவை எவ்வளது அபத்தமானவை என்பது விளங்கும். 

        இக்குறுநூலின் 9 கட்டுரைகளிலும் அ.மா. தனக்கே உரித்த பாணியில் பெரியாரின் பன்முகங்களை அறிமுகம் செய்கிறார். இதுவரையில் கட்டமைக்கபட்ட முகங்களுக்கு மாற்றான முகங்கள் இவை. பெரியாரியச் சிந்தனைகளை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன. பிற்சேர்க்கையாக “எல்லா நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே”, என்ற கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது. 

     "ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சாரவாதியாக, எல்லாவிதமான பற்றுகளுக்கும் எதிரியாய், சுய உறுதியாக்கத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக் கொள்ளப் பயன்படும்", (பக்.52) என்று இறுதியாகச் சொல்வது குறிப்பிடத்தக்கது. 

நூல் விவரங்கள்:


பெரியார்?
  

(பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு)


பேரா. அ.மார்க்ஸ்


வெளியீடு: அடையாளம்


முதல் பதிப்பு: 2001

இரண்டாம் பதிப்பு: 2018

பக்கங்கள்: 60

விலை: ₹ 60


தொடர்பு முகவரி:


அடையாளம்,

1205/1, கருப்பூர் சாலை,

புத்தாநத்தம் - 621310,

திருச்சி மாவட்டம்.

தொலைபேசி: 04332 273444

மின்னஞ்சல்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக