வியாழன், ஜூன் 03, 2021

+2 பொதுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா?

 +2 பொதுத்தேர்வு வேண்டுமா? வேண்டாமா?


மு.சிவகுருநாதன்

 

 

பகுதி 01


       மத்தியக் கல்வி வாரியம் (CBSE) +2 பொதுத்தேர்வை ரத்து செய்யததையொட்டி தமிழ்நாட்டில்  +2 பொதுத்தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்ற விவாதம் எழுந்துள்ளது.


      தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை  இது குறித்த கருத்துக் கணிப்பை நடத்துகிறது. இது வரவேற்கக்கூடிய அம்சம் என்றாலும் பள்ளி வழியாக +2 மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமே கருத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான ஒன்றாகும்.


       இதில் மொழிப்பாடங்களுக்குத் தேர்வு நடத்துவதா அல்லது பிற பாடங்களுக்கு மட்டும் நடத்துவதா என்கிற ஒரு கருத்தும் எடுத்துக்காட்டப்படுகிறது. இதில் மொழிப்பாட ஆசிரியர்களிடம் மட்டும் கருத்துரைத்தால் போதும் என்று  மட்டும் சொல்லவில்லை என்பது சற்று ஆறுதல்.


     சென்ற ஆண்டும் இவ்வாண்டும் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோது, அதை முழுமையாக வரவேற்றோம். அதைப்போல +2 வகுப்பில் முடிவெடுக்க இயலாது என்பதே உண்மை. 


      இவ்வாண்டில்  உயர்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு சேர்க்கை நடக்கப் போகிறது என்பதைக் கொண்டே +2 பொதுத்தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய இயலும். +2 தேர்வை ரத்து செய்துவிட்டு, மருத்துவக் கல்விக்கான ‘நீட்’டைப்போல பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்ற ஒன்றை நுழைக்கச் சதி செய்யும் முயற்சியாகவே ஒன்றிய அரசின் இந்தச் செயல்பாட்டைக் கருத இடமுண்டு.

பகுதி 02


       கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி ஐந்து தேர்வுகளுக்குப் பதிலாக ஒரு நுழைவுத்தேர்வு எளிது என்று இங்கு நச்சுக் கருத்துகள் மிக எளிதாகப் பரப்பப்படலாம்.  இந்தக் கொடிய சூழலை தமக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ளவே ஒன்றிய அரசு நினைக்கிறது.


       எனவேதான் இந்தத் தேர்வுக்கு முன்னதாக உயர்கல்வி சேர்க்கை குறித்த முடிவு என்ன என்பதை அறிய வேண்டும். அந்த முடிவுடன் இயைந்த ஒன்றாக +2 பொதுத்தேர்வு பற்றிய முடிவு அமையலாம்.


      இம்மாணவர்களது 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் இடமளிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவும் மாணவர்களுக்குப் பாதிப்பாக அமையும்.


      சுமார் 4 மாதங்கள் இவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெற்று, செய்முறைத்தேர்வுகள் நடந்து முடிந்திருக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொள்வது அவசியம்.


     கொரோனா பெருந்தொற்று அதிகரிப்பால் தற்போது முழுப் பொது முடக்க நிலையில் தேர்வுகள் குறித்த உறுதியான முடிவெடுப்பதுச் சற்று சிக்கலான ஒன்று. இருப்பினும் ஏதேனும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம்.


      தொற்று கட்டுக்குள் வந்தபிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து எளிமையான வகையில் குறைந்தது 15 நாள்கள் மாணவர்களுக்கு உரிய பயிற்சியளித்து, அதன் பின்னர் தேர்வு நடத்துவது சாத்தியப்படலாம். 


       அதற்கு முன்னதாக தடுப்பூசிகளை  தேர்வுப்பணியில் ஈடுபடுவோர், 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கும்  கட்டாயம் போடவேண்டும். இன்றுள்ள தடுப்பூசிப் பற்றாக்குறையைக் கணக்கில் கொண்டு அதற்கேற்பவும் செயல்படுவது நல்லது.
     பொதுத்தேர்வை 3 மணிநேரம் அல்லாமல் சிறியதாக குறைவான மதிப்பெண்கள் என்ற அளவில் மாற்றியமைக்க வேண்டும்.

 
      தொற்றுக் குறையாத மாவட்டங்கள் அல்லது கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்போர், நோய்த்தொற்றுக்கு ஆளானோருக்கு உரிய கால அவகாசமளித்து மறுவாய்ப்பு அளிக்கவேண்டும்.


      இன்றைய நிலையில் அல்ல; இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து அல்லது பெருந்தொற்று மட்டுப்பட்டால் மட்டுமே இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பகுதி 03

      +2 பொதுத்தேர்வு எளிமையாக இருக்க வேண்டும் என்று சொன்னோம். இப்போது அவர்கள் எழுதும் 70, 90 மதிப்பெண்களில் 50% அளவில் அமையலாம்.  தேர்வு நேரமும் பாதியாகக் குறையும்.


     தேர்வில் மிகக்குறைவான மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு 35% மதிபெண்கள் வழங்கி அனைவரையும் தேர்ச்சியளிக்க வேண்டும். தேர்ச்சியின்மை யாருக்கும் இருக்கக்கூடாது.


     கொரோனா அலைகள் தொடர்ந்து வரும் என்பதற்கேற்ப இதற்கென உரிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டால், அதை அடுத்த ஆண்டிலும் செயல்படுத்த ஏதுவாக இருக்கும்.


       பெருந்தொற்றின் தீவிரம் குறையவில்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயற்கை. நாம் அதற்கும் தயாராக இருக்க வேண்டும். 


     அப்போது +2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். உயர்கல்விச் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்பதையும் அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கி உடனே அறிவிக்க வேண்டும்.


      மாணவர்களது செய்முறைத்தேர்வுகள், அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், மாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வுகள் அடிப்படையில், சென்ற ஆண்டில் 10 ஆம் வகுப்பில் நடந்த குளறுபடிகள் போலில்லாமலும் மாணவர்கள் பாதிக்கப்படாமலும் உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.  இவற்றில் ஆசிரியர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த மதிப்பெண்களை மட்டும் கொண்டு  உயர்கல்விக்கான சேர்க்கை நடத்தப்பட வேண்டும். 


      ஆன்லைன் வகுப்புகள், இணைய வசதிகள்  இன்றி சுமார் 4 மாதங்கள் மட்டும் பயின்ற அரசுப்பள்ளி மாணவர்களையும்  தனியார் சுயநிதிப்பள்ளி மாணவர்களையும்  ஒரே தட்டில் வைத்து  அளவிட இயலாது.


     எனவே மருத்துவப் படிப்புகளுக்கு 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதைப்போல,  இன்னும் கூடுதலாக  25% அல்லது அரசுப்பள்ளி மாணவர்களின் விகிதாச்சாரத்திற்கேற்ப ஒதுக்கீடு செய்வது காலத்தின் கட்டாயமாகும்.


        மாணவர்களின் உயிர், அவர்களது  எதிர்காலம், ஒன்றிய அரசின் ஆதிக்கம், புதிய கல்விக் கொள்கைத் திணிப்பு, கல்வி உரிமைகள், அடித்தட்டு மக்களுக்கான கல்வி வாய்ப்புகள், கொரோனா பெருந்தொற்று என அனைத்துக் கூறுகளையும் கணக்கில் கொண்டு உகந்த முடிவை எடுக்கவேண்டும். இல்லையெனில் ‘நீட்’ போன்ற பாழ்வெளிக்குள் சிக்கிக்கொள்ள நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக