சனி, ஜூன் 19, 2021

சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!

 

சுயநிதிப்பள்ளிகளின் தரம் என்னும் மாயை!

 

மு.சிவகுருநாதன்

 


 

       இன்றைய (18/06/2021) 'இந்து தமிழ் திசை' நாளிதழின் தலையங்கம்  கொரோனாப் பெருந்தொற்றுப்  பொது முடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பால் அரசுப்பள்ளிகளை அதிகம் பேர் நாடுவதைம், அரசுப்பள்ளிகளில் அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இப்பெருந்தொற்றால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து கல்வித்துறை உரிய பாடங்கள் கற்பதும் உரிய நடவடிக்கைகளும் நெகிழ்வான அணுகுமுறைகளும் கைக்கொள்ளப் படவேண்டும் என்பதும் சிறப்பான ஒன்றாக உள்ளது.

 

    அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவை தரமாக இருக்க வேண்டுமே தவிர தனியார் பள்ளிகளின் ‘போலி’த்தரத்திற்கு இணையாக அல்ல. தனியார் (சுயநிதி) பள்ளிகளின் தரம், அதற்கிணையான அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்துதல் என்கிற சொல்லாடல்கள் தொடர்ந்துப் பலரால் முன்வைக்கப்படுகிறது. இதில் உண்மைகள்  என்ன என்பதை ஆராய வேண்டுவது அவசியமாகும்.

 

       தரம் என்பது புறத்தோற்றத்தில் இல்லை. பிரமிக்க வைக்கும் புறத்தோற்றங்கள், கட்டட வடிவமைப்புகள், அதன் உயரம், வண்ணப்பூச்சுகள், வாகனங்கள், சீருடைகள் போன்ற எதுவும் தரத்தின் ஓரம்சமாகக் கூட இருக்கவியலாது. பெரிய சுற்றுச்சுவர்கள் பிரமிப்பூட்டலாம்; பள்ளிக்கூடம் என்பது சிறையல்ல. அந்த வளாகங்களின் உள்ளே என்ன நடக்கிறது என்பதே முதன்மை.

 

      தண்ணீர் வசதியுடனான சுகாதாரமான கழிப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், குழந்தைகளை எவ்வகையிலும் சுரண்டாத சூழல், சிறந்த கற்றல் - கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள், முறையான பயிற்சி பெற்றத் திறமையான ஆசிரியர்கள் என்பது போன்றவையே தரத்திற்கான அளவுகோலாக அமைய முடியும்.

 

       தண்ணீர் வசதிகளுடன் கழிப்பறை வசதிகள் வேண்டும் சில தனியார் பள்ளிகளில் அரசுப்பள்ளிகளை விட மேம்பட்டதாக இருக்கலாம். அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள், கழிப்பறைகள் மிக மோசமாக இருக்கக் காரணம் என்ன?  ஊழல் மட்டுமே காரணமாகும். இவை ஒதுக்கீட்டுத் தொகையில் 40% கமிஷன் 'ஒதுக்கி'க் கட்டப்படுபவை. இவற்றை ஒழித்தால்தான் அரசுப்பள்ளிகளில் தரமான கட்டுமானங்கள் அமையும். இது சாத்தியப்படும் என்று நம்ப இயலவில்லை. பிற அரசுத்துறைக் கட்டடங்கள் ஒப்பீட்டளவில் பள்ளிக் கட்டுமானங்களை விடத் தரமானவை. பள்ளிகளைப் பராமரிக்கும் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியங்கள் ஏனிந்தத் 'தீண்டாமை'யைக் கடைப்பிடிக்கின்றன என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று.

 

       அரசு மற்றும் சுயநிதிப்பள்ளி ஆசிரியர்களையும் ஒப்பிடுவதும் இயலாது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 1 முதல் 8 ஆம் வகுப்பு முடிய பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. இவற்றைத் தனியார் பள்ளிகள் பூர்த்தி செய்துள்ளனவா? இல்லையே. 

 

   ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை. நியாயமான ஊதியமின்றிச் சுரண்டப்படும் ஆசிரியரின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு அமையும்?  அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் போன்று எவ்விதப் பயிற்சிகளும் இல்லை. தலையங்கம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப் பணியிடைப் பயிற்சியைப் பற்றிப் பேசுகிறது. தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி என்ற ஒன்றே  கிடையாது. இதுகுறித்து மவுனம் சாதிப்பது ஏன்?

 

  பள்ளியளவில் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மாணவர்களின் மனப்பாடத்திறனை மேம்படுத்தி அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கும் 'கோச்சிங்' உத்திகள் மட்டுமே. மாறாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இவை வழக்கமான அரசுத் திட்டங்களைப் போலவே  உள்ளன.  அவ்வளவுதான்.  இவற்றை ஒழுங்குப்படுத்தத் தடையேது?

 

      இன்னும் கூட தனியார் பள்ளிகள் சராசரிக்கு குறைவானக் கற்றல் திறனுடையோரை பள்ளியில் அனுமதிப்பதில்லை; நுழைவுத்தேர்வுகள், மதிப்பெண்கள், தனித்தேர்வராக்குதல் எதோ ஒரு வகையில் வெளியேற்றி விடுகின்றன. பெரும்பாலான மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இங்கு இடமே இல்லை. 

 

    பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பரந்த  இடவசதியோ,  விளையாட்டுத் திடலோ இல்லை. வகுப்பறையில் 40 குழந்தைகள் இருந்தால் மட்டும் போதாது; அவர்கள் புழங்குவதற்கான விசாலமான இடமும் வேண்டும்.

 

  சில விதிவிலக்குகள் தவிர்த்து பெருமளவிலான அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள்ளே ஆங்கில வழி சுயநிதிப் பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் அரசு உதவிபெறும் பிரிவில் படிக்கும் குழந்தைகள் தங்களது வசதிகளைத் தானமளித்துவிட்டு அப்பள்ளி வளாகத்தில் ஒடுங்கிக் கிடக்கின்றனர். ஒரே வளாகத்தில் உதவிபெறும் பள்ளியும் சுயநிதிப் பள்ளியும் செயல்படுவதைச் சட்டம் இயற்றித் தடுக்காதவரை இந்தப் பாகுப்பாட்டிற்குத் தீர்வே கிடையாது.

 

    சமச்சீர் கல்வி அமலாக்கத்திற்குப்  பிறகு தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டம் மட்டுமே பின்பற்றப் படவேண்டும்.  ‘மெட்ரிக் பள்ளிகள்’ என்றே பெயருக்கும் இங்கு இடமில்லை. ஆனால் தங்களை வேறுபடுத்திக் காட்டவும் கல்விக் கொள்ளையடிக்கவும் அரசு இவர்களை அனுமதிக்கிறது. 

 

     பெற்றோர்களிடம் வசூல் கொள்ளையிடுவதற்கு சில முலாம் பூசும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். ‘மெட்ரிக்’ என்ற பெயருடன் கூடவே இந்தி மற்றும் தனியார் பாடநூல்களை விநியோகித்து தமிழக அரசுப் பாடநூல்களைக் கற்பிக்காமல் ஒதுக்கி வைக்கும் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

 

    'மெட்ரிக்' வேடம் கலைந்துபோனதால் சிபிஎஸ்இ (CBSE) பாடத்திட்டத்திற்கு மாறியவர்களும் என்சிஆர்இடி (NCERT) பாடநூல்கள்களைப் புறந்தள்ளிவிட்டு மிகமோசமானத் தனியார் பாடநூல்களைப் பயன்படுத்துகின்றனர். தமிழகப் பள்ளிக் கல்வித்துறையைப் போன்று மத்தியக் கல்வி வாரியமும் இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தமிழக அரசின் பாடத்திட்டமும் பாடநூல்களும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். 9 மற்றும் + வகுப்புகளில் முறையே 10 மற்றும் +2 வகுப்புப் பாடங்கள் கற்பிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதைக் ‘காப்பி’யடிக்கச் சொல்லும் கல்வி அலுவலர்களின் மனப்போக்கையும் பொதுத்தேர்வு மைய அணுகுமுறையும் ஒழிய வேண்டும்.

 

   தமிழ் நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற நிலைப்பாடு உள்ளபோது சுயநிதிப் பள்ளிகள் எதனடிப்படையில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்றுத் தருகின்றன? தங்களை வேறுபடுத்திக் காட்டவும்  வசூல்வேட்டைக்கு மட்டுமே இவை பயன்படுகின்றன. இம்முறை தடுக்கப்பட வேண்டும். இம்மாதிரியான கூடுதல் பாடங்களால் விளையாட்டுப் பாடவேளைகள் முற்றாக அபகரிக்கப்படுகின்றன. 

 

     ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சீர்மரபினர் நலப்பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டுக்குள் அல்லது இத்துறை போன்ற நிர்வாக அலகுக்குள் கொண்டுவரப்படவேண்டும். தொடர்புடைய துறைகள் நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யலாம். கண்காணிப்பு சீரடைய வேண்டும்; ஊழல்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

 

    நமது நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபளிப்பவை அரசுப்பள்ளிகளே. அவை மேலும் திறம்பட வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை முன்மாதிரிகளைக் கொண்டு அவை எக்காலத்திலும் செயல்பட முடியாது. சூழ்ச்சி, வஞ்சகம், ஏமாற்றுதல், மோசடி, திருட்டு, கொள்ளை என அனைத்து ஒழுங்கீனங்களும் பிரதியெடுக்கப்பட வேண்டியவையும் அல்ல. பணம் கொடுத்துப் பெறுவதால் மட்டும் அது தரமானதாக அமையாது. கொரோனாப் பெருந்தொற்று அரசு மருத்துவமனைகளையும் அரசுப்பள்ளிகளை நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முழுதும் தனியாரை மட்டும் நம்பினால் என்னாகும் என்கிற பாடம் தற்போது கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு நிறுவனங்களை மேம்படுத்த வேண்டும்.

 

      தனியார் பள்ளிகளுடன் அரசுப்பள்ளிகளை தரம் சார்ந்த ஒப்பீடு செய்வது மிகவும் அபத்தமான ஒன்று. அதற்குப் பதிலாகத் தர அளவுகோல்களையும் நமது மனச்சாய்வையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

 

(ஜூன் 18, 2021 (18/06/2021) 'இந்து தமிழ் திசை'யில் வெளியான “கூடுதல் மாணவர்களுக்குத் தயாராக இருக்கின்றனவா அரசுப் பள்ளிகள்” என்ற தலையங்கதிற்கான எதிர்வினை.)

 

நன்றி: www.panmai.in

இணைப்பு: http://panmai.in/2021/06/18/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%ae/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக