வியாழன், செப்டம்பர் 23, 2021

ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

 ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

 

மு.சிவகுநாதன்


 

      சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் இடங்கள் கூட மிகவும் குறைந்துவிட்டன.

       இன்றைய (22/09/2021) அஞ்சலிச் சுவரொட்டி ஒன்று நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. திருவாரூர் செம்மலர் இண்டேன் கேஸ் விநியோக ஊழியர் தோழர் கே.பாலு (கல்யாணமகாதேவி) அவர்கள் நேற்றுக் (21/09/2021) காலமானதை அறிவித்தது அந்தச் சுவரொட்டி. நான் குடியிருக்கும் பகுதியில் பல்லாண்டுகளாக சிலிண்டர் விநியோகப் பணி மேற்கொண்டு வந்தவர் அவர். கடந்த எட்டாண்டுகளாக எங்களுக்கும் சிலிண்டர் அளித்து வந்தார்.

      எட்டாண்டுகளுக்கு முன்னதாக எங்களது முகவர் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது எரிவாயு நிறுவனம் எனது இணைப்பை தோழர் பாலு பணியாற்றும் நிறுவனத்திற்கு மாற்றித் தந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எவ்விதக் குறைகளுமின்றி கேஸ் விநியோகம் செய்ய இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

     முந்தைய முகவர் மீது குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இவர் நாள்தோறும் இரு சக்கர வாகனங்களில் பல உருளைகளை ஏற்றிவந்து விநியோகித்துக் கொண்டிருப்பார். இவர் பணியாற்றும் நிறுவனத்தில் நமது இணைப்பு இல்லையே என்றுகூட நினைத்தது உண்டு. பழகுவதற்கு இனிமையானவர். உருவம் பெரிதாக இருந்தாலும் அதிர்ந்து பேசாதவர். இப்பகுதி மக்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும்.

      கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில் ஓய்வின்றிப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுள் இவரும் ஒருவர். இவரைப் போன்றவர்களை அரசும் எரிவாயு நிறுவனமும் அவ்வாறு கருதுகிறதா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறையில் கூட வேறுபாடு காட்டப்படுவதாக அறிகிறோம்.

     இவரது குடும்பம் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சேர்க்கைக்காக தனது மகளை தோழர் பேரா. தி.நடராஜன் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார். அவர் இப்பொழுது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கக் கூடும்.

     மாதந்தோறும் 50 என சிலிண்டர் விலை ஏறுவதற்குக் காரணமான பிரதமர் மோடி மீது இருக்கும் கோபத்தை, வெறுப்பை, இயலாமையை மக்கள் சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மீது காட்டுவது உண்டு.

      இதன் காரணமாகவே கூடுதல் தொகையைப் சிலர் கொடுக்க மறுத்துச் சண்டையிடுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். பணமாகக் கொடுக்கும் போதும் 50 கூடுதலாகவும் தற்போது ஆன்லைனில் பணம் செலுத்துவதால் 50 ஐ பணமாக கொடுத்துவிடுவதுதான் வழக்கம். மற்றபடி தீபாவளி, பொங்கலுக்குச் சிறுதொகை.

      இந்தக் கூடுதல் தொகையில் அந்த ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அவர்களது உழைப்பை மதிக்கும் நம்மைப் போன்றவர்கள் சண்டையிட மாட்டார்கள் என்பது உண்மை.

       அவருக்கு எவ்வளவு ஊதியம் கிடைத்திருக்கும்? கடின உழைப்பாளியான அவர் குடும்ப பாரத்தையும் சேர்த்தே சுமந்திருப்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நாம் எத்தகைய ஆறுதல் சொல்லமுடியும்? அவர் குடும்பத்தோடு கழித்த நேரத்தைவிட பொதுமக்களுடன் இருந்த காலமே அதிகம்.

      அவரைப் பார்த்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. சென்றமாதம் சிலிண்டர் டெலிவரியின்போது பார்த்தது. வழியில் எங்காவது கண்டுகொண்டால் சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்வார். சென்ற வாரத்தில் சிலிண்டர் முடிந்துவிட்டது. இப்போது ஒன்றும் அவசரமில்லை, மெதுவாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்றிருந்து விட்டேன். பதிவு செய்திருந்தால் அவரை ஒருமுறைப் பார்த்திருக்கலாம் போலும்! காலம் எதையும் விட்டு வைப்பதில்லை.

       இவர்களைப் போன்ற தொழிலாளர்கள் மரணத்திற்குப் பிறகு அவர்களது குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சேவைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர்கள் மதிக்கப்படவும் வேண்டும்.

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி

 

கொரோனாவிற்குப்  பிந்தைய கல்வி

மு.சிவகுருநாதன்

 



     அனைவருக்கும் கல்வி என்பதெல்லாம் நடைமுறையில் வெற்று முழக்கமாகவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (2009) பள்ளிச் செல்லும் 6-14 வயதெல்லைக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஓப்பீட்டளவில் தமிழகத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கொரோனாப் பெருந்தொற்று அவற்றைத் தடுத்து மீண்டும் சில பத்தாண்டுகள் பின்னுக்குத் தள்ளும் சூழலை உருவாக்கியிருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பணி அல்லது குடும்பச்சூழலால் வேற்றிடம் சென்ற குழந்தைகளில் எத்தனைபேர் மீண்டும் பள்ளிகளுக்குத் திரும்புவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர்களை மீண்டும் கல்விப்புலத்திற்குக் கொண்டு அவர்களை ஏதேனும் ஒருபள்ளியில் சேர்த்தல் மட்டும் போதாது. அக்குழந்தைகளைத் தொடர்ந்து பள்ளியில் தக்கவைக்க உரிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.   

    குழந்தைகளுக்கான சமூக நலத்திட்டங்களுக்குப் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் என்று வரையறை செய்யப்படுகிறது. ஆனால் கல்வி உரிமைச்சட்டப்படி தனியார் சுயநிதிப் பள்ளிகளின் 25% இடங்களைப் பெறப் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சங்கள் என வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது. இச்சட்டத்தின்படி குழந்தைகளின் வயதெல்லை 6-14 என்றபோதிலும் எல்.கே.ஜி. வகுப்பிலேயே (3 வயது) இந்த ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் கட்டணத்தைவிட அவர்கள் கேட்கும் கூடுதல் தொகையைக் கட்டவேண்டும். அதற்காகத்தானே இந்தக்  கூடுதல் வருமான வரம்பு  எனக் கேட்கத் தோன்றுகிறது. ஏழைகளுகளுக்குக் கல்வி என்பதே எட்டாக்கனிதான். கல்வி உரிமைச்சட்ட அபத்தங்களுக்கு இதுவோர் எடுத்துக்காட்டு மட்டுமே.

    இந்திய ஒன்றியத்தில் 3-22 வயதெல்லைப் பிரிவினர் சுமார் 50 கோடி. இவர்களில் அரசு, தனியார், தொண்டு நிறுவனப் பள்ளிகள், அங்கன்வாடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக 35 கோடி பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 15 கோடி பேர் அடிப்படைக் கல்வியற்றவர்களாக இருப்பதாக ஒன்றியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியத் தொழிற் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியுள்ளார். (ஆக.12, 2021)

    சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகப் பொறுப்பேற்ற ஆர்.வேல்ராஜ் தற்போதைய பாடத்திட்டம் 20% மாணவர்களுக்கு மட்டுமே புரிகிறது; 80% மாணவர்களுக்குப் புரியவில்லை. எனவே இருவகையான பாடத்திட்டமும் கலவைக் கற்றல் எனப்படும் Blended Learning முறையும் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். (ஆக.11, 2021) இதை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் வரவேற்றுள்ளார்.

    தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP-2020) இதைத்தான் வலியுறுத்துகிறது. இளநிலைப் பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகளாக இருக்கும். ஓராண்டில் படிப்பைவிட்டு வெளியேறினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் பட்டயம் மூன்றாமாண்டில் பட்டம் வழங்கப்படும். ஆராய்ச்சித் திட்டத்துடன் நான்காமாண்டு படித்தவர்கள் முதுகலைப் படிப்பை ஓராண்டு படித்தால் போதுமானது என்கிறது ஒன்றிய அரசின் கொள்கை. ஆனால் தமிழ்நாட்டிற்கென்று தனித்த கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். .

    நேரடி வகுப்புகளுக்கு இணைய வகுப்பு எவ்வகையிலும் மாற்றாக இருக்கவியலாது. இணைய வகுப்புகளால் ஏற்படும் உடல் மற்றும் மன நலப் பாதிப்புகள் அதிகம். ஏற்கனவே குழந்தைப் பருவத்தில் கண்பார்வைக் குறைபாடுகள் அதிகம் இருக்கின்றன. இவை அவற்றை மேலும் அதிகமாக்குகின்றன. திறன்பேசிகள், இணையம் போன்றவை மாணவர்களிடம் சென்றடையாத நிலையில் டிஜிட்டல் கற்பித்தல் பற்றி கல்விக்கொள்கை கனவு காண்கிறது.

     கல்வித் தொலைக்காட்சியில் எந்திரத்தனமாக ஒப்பிக்கும் கற்பித்தலே போதுமானது என்கிற நிலைக்கு அரசும் கல்வித்துறையும் வந்துவிட்டது மிக மோசமான ஒன்று. இன்னும் சில கல்வி அலுவலர்கள் ஒருபடி மேலே சென்று TNTP, DIKSHA, Teachmint App, Zoom App. Whatsapp, Google Meet, MS Teams, Youtube போன்ற வழிகளில் கற்பித்தல் செம்மையாக நடைபெறுவதாக சுற்றறிக்கைகள் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

    திறன்பேசிகள் இருந்தால் மட்டும் போதாது. இணைய வசதி, அதன் வேகம், கிடைக்கும் அளவு ஆகியவற்றைப் பொறுத்தே இணைய வகுப்புகளின் பயன்பாடு அமையும். இவை இல்லாதவர்களின் நிலை குறித்து யாரும் யோசிப்பதில்லை. தமிழக அரசு +1, +2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது. அவைகள் பெரும்பாலும் உடன் விற்பனை செய்யப்படுகின்றன. அவை மாணவர்களிடம் இருப்பதை உத்திரவாதப்படுத்த இயலாதத் திட்டங்களால் எந்தப் பயனுமில்லை. சில இடங்களில் ஆசிரியர்களே இவற்றை விலைக்கு வாங்குகின்றனர்.

      பெற்றோர்களின் பொருளாதார நிலை அவர்களை இச்சூழலுக்குத் தள்ளுகிறது. மேலும் நலத்திட்டங்களில் வழங்கப்படும் பொருள்களின் தரம் அவைகளின் கண்காணிப்பு ஆகியவற்றையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. 6-10 மாணவர்களுக்கு பெரிய திரை திறன்பேசிகள் (tablets) வழங்கினாலும் இதே நிலைதான் ஏற்படும். இணைய வசதி மற்றும் திறன்பேசிகளுக்காக பிறரைச் சார்ந்திருக்கும் குழந்தைகள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயமும் உண்டு. குழந்தைகளுக்குப் பெரும்பாலான பாலியல் சீண்டல்கள் நெருங்கிய, அறிமுகமான  உறவினர்கள் மற்றும் நண்பர்களால் நிகழ்வதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.  

     கஜா (2018) புயலுக்குப்பின் டெல்டா மாவட்டங்களில் எந்த நெட்வொர்க்கும் சரியாகக் கிடைப்பதில்லை. சமவெளியிலேயே இந்த நிலைமை என்றால் மலைப்பகுதிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொலைத்தொடர்பில் தனியாரின் ஏகபோகம் சேவைக்குறைகளை அதிகமாக்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி கிடையாது. இதர தனியார் நிறுவனங்கள் சேவையின் தரம் பற்றிய கவலை கொள்வதில்லை.

     கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கி அதன்மூலம் கல்வியை கார்ப்பரேட் வணிகப்பொருளாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிலையில், கொரோனாப் பெருந்தொற்று அவர்களுக்கு மிகவும் வசதியாக ஒன்றாக உள்ளது. இதன்மூலம் அவை தமது வணிக எல்லைகளை விரிவாக்கிக் கொள்கின்றன.  

    தனியார் சுயநிதிப் பள்ளிகள், நிறுவனங்கள், கோச்சிங் சென்டர்கள், இணையவழித் தொழிற்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் (எ.கா.: BYJU’S, Vedantu) இவ்வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதன்மூலம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க முனைகின்றனர். கல்வி நிறுவனங்களும் கோச்சிங் சென்டர்களும் களத்தில் போட்டி போடுகின்றன. டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் நிறுவனங்களின் புரட்சி என பிரதமர் மோடி பெருங்குரலில் முழக்கமிடுவது இதைத்தான். பணமதிப்பிழப்பு, பணமற்ற பரிவர்த்தனை எல்லாம் யாருக்குப் பலனளித்தது என்பதெல்லாம் நாமறிந்ததுதானே.

  பொருளாதார வசதி, வாய்ப்புகள் பெற்ற மேட்டுக்குடியினர் தங்களது அடையாளங்களைப் பேண இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர். தமது குழந்தைகள் பிற சமூகங்களுடன் ஊடாடுவதை விரும்பாத இவர்கள் வீட்டுப்பள்ளி (Home Schooling) என்ற முறையை பரிந்துரைத்து ஏற்கனவே பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

    பட்டப்படிப்புகளுக்கு தொலைதூரக் கல்வி (அஞ்சல் வழி) முறை இங்கு உண்டு. அவை குழந்தைகளுக்கானதல்ல; 18 வயது மேற்பட்டோருக்கானது. குழந்தைகள் மீது சுமத்தப்படும்  இணையக்கல்வி எனும் மின்னணுத் திணிப்புகளை அவர்களது உரிமைகள் பறிப்பு, சுரண்டல்கள் சார்ந்ததாகவே கருத வேண்டியுள்ளது.

    இதன்மூலம் அரசுப்பள்ளிகளுக்கும் சுயநிதிப்பள்ளிகளுக்குமான இடைவெளியும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் இன்னும் அதிகரிக்கும். அவர்கள் வணிக நோக்கத்திற்காக எப்போதும் தங்களை வேறுபடுத்திக் காட்ட முயல்பவர்கள். சீருடை, தனியார் பாடத்திட்டங்கள், பாடநூல்கள், இந்தி என்று ஏதாவது ஒன்றைக் காட்டி வியாபாரம் செய்யவே விரும்புவர். தமிழக அரசு சமச்சீர் பாடத்திட்டம் அமலானபோது சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாறினர். இதற்காகவே இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் உண்டு. அந்தவகையில் இணையவழிக் கல்வியும் அவர்களது வணிக உத்திகளுள் ஒன்றாக மாறப்போகிறது. கொரோனாத் தொற்று முடிந்தபிறகும் விடுமுறை நாள்களில் நாங்கள் தொடர்பு கொள்கிறோம் என்று வசூல்வேட்டையைத் தொடங்கி விடுவார்கள்.

       சென்ற கல்வியாண்டில் (2020-2021) பாடக்குறைப்பு செய்யப்பட்டவற்றை அப்படியே ஆண்டை மாற்றி இவ்வாண்டு (2021-2022) சுற்றுக்கு விடுகிறது கல்வித்துறை. இதில் விழுக்காடு புள்ளிவிவரங்களை வேறு வெளியிடுகிறார்கள். எடுத்துக்காட்டிற்கு ஒன்று: 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் பொருளியல் பகுதியில் 5 ஆம் பாடத்தில் (தமிழ்நாட்டின் தொழிதுறை பகுப்புகள்) 5.2, 5.2. 5.4 ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டன. பாட இறுதியில் உள்ள 7 இரண்டு மதிப்பெண் வினாக்களில் ஒன்று மட்டுமே இப்பகுதியில் வருகிறது. 5 மதிப்பெண்கள் வினாவில் நான்கும் குறைக்கப்பட்ட பகுதியில் இல்லை. எனவே எல்லாவற்றையும் படித்தாக வேண்டும். பாடநூல் வினாக்களே பெருமளவு கேட்கும் சூழலில், வினாக்கள் கேட்காத பகுதிகளை மட்டும் நீக்குவது என்ன மாதிரியான நடவடிக்கை? இவ்வாறான செயல்பாடுகள் கல்வியின் உச்சமாகப் போற்றப்படுவதும் நடக்கிறது. 

    இடைநிற்றல், குழந்தைத் திருமணங்கள்,  குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஆகியன அதிகரித்துள்ளன. இதுகுறித்து அரசிடமோ கல்வித்துறையிடமோ உரிய ஆய்வுகளோ புள்ளிவிவரங்களோ இல்லை. சிவகாசி போன்ற இடங்களில் பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு பணிவாய்ப்பு கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வேலை வழங்குவது குறைவான ஊதியம் என்னும் உழைப்புச் சுரண்டலாகும். குழந்தைகளின் கல்வி மற்றும் உடல், மனநலம் ஆகியன இச்சுரண்டலில் பாதிப்படைகின்றன.

   பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவல்ல சிறு, குறு தொழில் நிறுவனங்கள் (MSME) கொரோனாவிற்கு முன்னதாகவே சரக்கு மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் முடங்கிப் போயுள்ளன. கொரோனா இவற்றை முழுதாக குழிதோண்டி மூடியுள்ளது. இவற்றைச் சீர் செய்யும் நடவடிக்கைகள் அரசுகளிடம் இல்லை. அதற்கான தொலைநோக்குப் பார்வையும் இல்லை. 

     நம்மீது எப்போதும் அமெரிக்க அல்லது குஜராத் மாடல்தான் திணிக்கப்படுகின்றன. கல்வியில் கூட ஐரோப்பிய மாடல்கள் (பின்லாந்து) நம் கண்ணில் படுவதே இல்லை. அண்மையில் சீனக் கல்வித்துறையில் புரட்சிகர மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன. கல்வி சார்ந்த நிறுவனங்கள் லாப நோக்குடன் இயங்காமல் சேவை நிறுவனங்களாக மாறவேண்டும். 6 வயதிற்குட்பட்ட  குழந்தைகளுக்கு இணையக் கற்றல் முற்றாகத் தடை செய்யப்படுகிறது. இத்தகைய பெரிய மாற்றங்களைச் செய்து கல்வியை வணிகப்பிடிலிருந்து மீட்டெடுப்பதே நமது முன்னிற்கும் சவால். அதை நமது அரசுகள் செய்யுமென்று எண்ண முடியவில்லை.

     இடஒதுக்கீட்டு எதிர்ப்பு, கார்ப்பரேட் ஆதரவு, இந்துக்கள் என்று தலித்கள், பழங்குடியினர், இதர பிற்பட்டோரை வாக்குவங்கியாகக் கருதும் போக்கு, வெறுப்பரசியல் போன்ற கொள்கைகள் ஒன்றிய அரசிடம் உண்டு. ஆனால் மாநில அரசுகளிடம் கல்வி குறித்த விரிவான பார்வையோ கொள்கையோ இல்லாதது வருந்தற்குரியது. உருவாகும் புதிய கல்விக்கொள்கை, பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதால் அவற்றை அமல்படுத்த ஒன்றிய அரசுடன் செய்யப்போகும் சட்டப்போராட்டம் ஆகியவற்றில்தான் தமிழகக்கல்வியின் எதிர்காலம் இருக்கிறது.

     கல்வியை முற்றாக அரசுடைமையாக்கி சமமான பொதுக்கல்வியை நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வழங்குவதே ஒன்றிய, மாநில அரசுகளின் கடமையாக இருக்க முடியும். கல்வி உரிமைக்கு நூறாண்டுகள் காத்திருந்ததுபோல் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ!

(‘பேசும் புதிய சக்தி’ செப்டம்பர்  2021 மாத இதழில் வெளியான கட்டுரை.)

நன்றி:  பேசும் புதிய சக்தி - செப்டம்பர்  2021