வியாழன், செப்டம்பர் 23, 2021

ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

 ஓரு முன்களப் பணியாளரின் மரணம்

 

மு.சிவகுநாதன்


 

      சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் பலரது இறப்புகளை அறிய நேரிடுகிறது. ஊரில் இல்லாமலிருக்கும்போது இறந்தவர்களை எங்கேனும் தென்படும் சுவரொட்டிகளைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று சுவரொட்டி ஒட்டும் இடங்கள் கூட மிகவும் குறைந்துவிட்டன.

       இன்றைய (22/09/2021) அஞ்சலிச் சுவரொட்டி ஒன்று நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. திருவாரூர் செம்மலர் இண்டேன் கேஸ் விநியோக ஊழியர் தோழர் கே.பாலு (கல்யாணமகாதேவி) அவர்கள் நேற்றுக் (21/09/2021) காலமானதை அறிவித்தது அந்தச் சுவரொட்டி. நான் குடியிருக்கும் பகுதியில் பல்லாண்டுகளாக சிலிண்டர் விநியோகப் பணி மேற்கொண்டு வந்தவர் அவர். கடந்த எட்டாண்டுகளாக எங்களுக்கும் சிலிண்டர் அளித்து வந்தார்.

      எட்டாண்டுகளுக்கு முன்னதாக எங்களது முகவர் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது எரிவாயு நிறுவனம் எனது இணைப்பை தோழர் பாலு பணியாற்றும் நிறுவனத்திற்கு மாற்றித் தந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எவ்விதக் குறைகளுமின்றி கேஸ் விநியோகம் செய்ய இவரும் ஒரு காரணமாக இருந்தார்.

     முந்தைய முகவர் மீது குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இவர் நாள்தோறும் இரு சக்கர வாகனங்களில் பல உருளைகளை ஏற்றிவந்து விநியோகித்துக் கொண்டிருப்பார். இவர் பணியாற்றும் நிறுவனத்தில் நமது இணைப்பு இல்லையே என்றுகூட நினைத்தது உண்டு. பழகுவதற்கு இனிமையானவர். உருவம் பெரிதாக இருந்தாலும் அதிர்ந்து பேசாதவர். இப்பகுதி மக்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் என்றே சொல்ல வேண்டும்.

      கோவிட்-19 பொதுமுடக்கக் காலத்தில் ஓய்வின்றிப் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுள் இவரும் ஒருவர். இவரைப் போன்றவர்களை அரசும் எரிவாயு நிறுவனமும் அவ்வாறு கருதுகிறதா என்று தெரியவில்லை. சுகாதாரத்துறையில் கூட வேறுபாடு காட்டப்படுவதாக அறிகிறோம்.

     இவரது குடும்பம் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சேர்க்கைக்காக தனது மகளை தோழர் பேரா. தி.நடராஜன் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தார். அவர் இப்பொழுது கல்லூரிப் படிப்பை முடித்திருக்கக் கூடும்.

     மாதந்தோறும் 50 என சிலிண்டர் விலை ஏறுவதற்குக் காரணமான பிரதமர் மோடி மீது இருக்கும் கோபத்தை, வெறுப்பை, இயலாமையை மக்கள் சிலிண்டர் விநியோகிக்கும் தொழிலாளர்கள் மீது காட்டுவது உண்டு.

      இதன் காரணமாகவே கூடுதல் தொகையைப் சிலர் கொடுக்க மறுத்துச் சண்டையிடுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். பணமாகக் கொடுக்கும் போதும் 50 கூடுதலாகவும் தற்போது ஆன்லைனில் பணம் செலுத்துவதால் 50 ஐ பணமாக கொடுத்துவிடுவதுதான் வழக்கம். மற்றபடி தீபாவளி, பொங்கலுக்குச் சிறுதொகை.

      இந்தக் கூடுதல் தொகையில் அந்த ஊழியர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பது நமக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அவர்களது உழைப்பை மதிக்கும் நம்மைப் போன்றவர்கள் சண்டையிட மாட்டார்கள் என்பது உண்மை.

       அவருக்கு எவ்வளவு ஊதியம் கிடைத்திருக்கும்? கடின உழைப்பாளியான அவர் குடும்ப பாரத்தையும் சேர்த்தே சுமந்திருப்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு நாம் எத்தகைய ஆறுதல் சொல்லமுடியும்? அவர் குடும்பத்தோடு கழித்த நேரத்தைவிட பொதுமக்களுடன் இருந்த காலமே அதிகம்.

      அவரைப் பார்த்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. சென்றமாதம் சிலிண்டர் டெலிவரியின்போது பார்த்தது. வழியில் எங்காவது கண்டுகொண்டால் சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்வார். சென்ற வாரத்தில் சிலிண்டர் முடிந்துவிட்டது. இப்போது ஒன்றும் அவசரமில்லை, மெதுவாகப் பதிவு செய்துகொள்ளலாம் என்றிருந்து விட்டேன். பதிவு செய்திருந்தால் அவரை ஒருமுறைப் பார்த்திருக்கலாம் போலும்! காலம் எதையும் விட்டு வைப்பதில்லை.

       இவர்களைப் போன்ற தொழிலாளர்கள் மரணத்திற்குப் பிறகு அவர்களது குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். சேவைப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர்கள் மதிக்கப்படவும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக