சனி, டிசம்பர் 10, 2022

இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

 இந்திய அரசியலமைப்பிற்கு மாற்றாக சனாதனம்!

 

மு.சிவகுருநாதன்

 

 

            ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் தேசிய கல்விக் கொள்கை வகுக்கும் குழுவில் இடம்பெற்றனர். நாக்பூர் வழிகாட்டுதலில் கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. வலதுசாரி பாசிசவாதிகளுக்கு வரலாறு, அறிவியல், இலக்கியம் எல்லாம் என்றும் ஆகாது. அவற்றைத் தங்களுக்கேற்ப வளைப்பதையும் திணிப்பதையும் கருத்தியலாகக் கொண்டு செயலாற்றுபவர்கள் இவர்கள். அடல் பிஹாரி வாஜ்பாய் காலம் தொட்டு இத்தகைய மோசடித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டுள்ளன. ஆய்வு நிறுவனங்கள், உயர்கல்வி அமைப்புகள் போன்றவற்றைச் சிதைப்பதே இவர்களது வாடிக்கையாகும். நமது அரசியலமைப்பு மீது நம்பிக்கையற்ற இவர்கள் அதையும் சிதைக்க முற்படுகின்றனர்.

        நமது நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான 1949 நவம்பர் 26 ஐ 2015 இல் அரசியமைப்பு நாளாகக் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. வழக்கம்போல பலருக்குப் புரியாத இந்தி மற்றும் சமஸ்கிருதப் பெயரிடும் முறைப்படி இதற்கு ‘சம்விதான் திவாஸ்’ (Samvidhan Divas) என்று பெயரிட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதோ சட்ட மாண்புகள் மீதோ துளியும் மதிப்பில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அரசியலமைப்பை மாற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அதை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பது தெரியும்தானே!

      2022 ஆகஸ்ட் 15 அன்று 76வது சுதந்திர தின உரையில் “இந்தியா மக்களாட்சியின் தாய்” என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுப் பேசினார். “பிள்ளையாருக்குப் பிளாஸ்டிக் சர்ஜரி”, என்பது போன்ற இந்த அரிய கண்டுபிடிப்பை அப்படியே ஏற்று, இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ICHR) கருத்துரு ஒன்றை உருவாக்கி, பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மூலம் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கி விட்டது.

       பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் ரஜினீஷ் ஜெயின் இந்த விழா நடத்துவது தொடர்பான  சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் “இந்தியா மக்களாட்சியின் தாய்” (Bharat – Loktantraki Ki Janani) என்ற பிரதமர் மோடியின் அரசியல் சொல்லாடல் ஆய்வுக் கருத்துருவாக மாற்றப்பட்டு புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

       இந்தியாவுக்கு வேத காலத்திலிருந்தே மக்களாட்சிப் பாரம்பரியம் இருந்த ஆதாரம் இருக்கிறது எனவும் இது கிரீஸ் மற்றும் ரோம் போன்ற மாதிரிகளுடன் முற்றிலும் வேறுபட்டது எனவும் இந்து மதக் கோட்பாட்டில் எல்லாம் உள்ளதெனவும் சமத்துவ உணர்வுடன் வேத கால இந்திய மக்கள் மக்களாட்சிப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்ததாகவும் கதையளக்கிறது. எனவே மக்களாட்சியில் ‘இந்து வேத வேர்கள்’ மீது கவனம் செலுத்துமாறு கூவத்தொடங்கியுள்ளனர்.


 

     இந்த ஆண்டின் அரசியலமைப்பு நாளை மேற்கண்ட கருத்துரு தலைப்பில் உரைகள், கருத்தரங்குகள், இணையப் பயிலரங்கங்கள், நிகழ்ச்சிகள், பட்டறைகள் போன்றவற்றை நடத்தவும் கீழ்க்கண்ட துணைத் தலைப்புகளையும்  பட்டியலிட்டுள்ளனர்.

  1. தொல்லியல் சான்றுகளில் பாரத மக்களாட்சி வேர்கள் 
  2. இலக்கியத்தில்  மக்களாட்சிப் பாரம்பரியம்
  3. ரிக் வேதமும் பாரத மக்களாட்சிப் பாரம்பரியமும்
  4. சபாவும் சமிதியும்: பாரத மக்களாட்சிப் பாரம்பரியத்தை ஆராய்தல்
  5. தர்ம சாஸ்திரங்களும் மக்களாட்சியும்
  6. உபநிடதங்களும் பரிஷத்களும்
  7. பாரம்பரியமான  தர்மத்தை ஆராய்தல்
  8. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரமும் பாரத மக்களாட்சியும்
  9. பழங்கால கண-ஜன பதங்களும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  10. கல்வெட்டு ஆதாரங்களும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  11. பாரதீய கலை, கல்வெட்டுகளும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  12. லிச்சாவி கண-ராஜ்யமும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  13. பக்தி இயக்கமும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  14. உள்ளூர் நிறுவனங்கள் / ‘காப்’ பஞ்சாயத்துகளும் மக்களாட்சிப் பாரம்பரியமும்
  15. மையக் கருத்தோடு தொடர்புடைய இதர தலைப்புகள்

      இவை ஒன்றிலும் நமது அரசியலைப்பு பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் ஏதுமில்லை. நாம் முன்பே சொன்னதுபோல நமது அரசியலமைப்பை வீழ்த்துவதையும் வேத இந்துமதப் பெருமைகளை உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இத்தகைய செயல்திட்டங்களில் திட்டமிட்டே ஈடுபடுகின்றனர்.

       நமது அரசிலமைப்பிற்கு எதிரான இந்தப் பாசிசச் சொல்லாடல்களை எதிர்ப்பதில் தமிழகம் முன்னணியில் இருப்பது பாராட்டிற்குரியது. இந்தியா முழுவதும் இந்நிலை இல்லை என்பது வருந்த வேண்டிய உண்மை. சிறிய அமைப்புகளின் எதிர்வினை எப்போதும் உண்டு. பெரிய கட்சிகளும் அமைப்புகளும் வேறுதிசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டதையும் இது உணர்த்துகிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போன்றோர் தங்களது காத்திரமான எதிர்வினைகளைப் பதிவு செய்துள்ளனர்.

       “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளான இறையாண்மை, சோசலிசம், சமயச் சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு முறை, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவை அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடி ஆக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடந்த எட்டாண்டு காலச் செயல்பாடுகள் இருக்கின்றன. அரசியல் சட்டத்தையே தகர்க்க முனைந்திடும் இந்துத்துவ சனாதனச் சக்திகளின் முயற்சிகளை முறியடிக்க அரசியல் சாசன நாளில் உறுதி ஏற்க வேண்டும்”, என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

     “அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? என்றும் இது அரசியல் சாசன நாளா? அல்லது கட்டப் பஞ்சாயத்து நாளா? ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

     அரசியலமைப்பிற்கு எதிராகவும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்கள் பெருந்தாக்குதல்களை தொடர்ந்து நடத்துகின்றனர். திருவள்ளுவர் மீது காவிச்சாயம் பூசியவர்கள் நமது அரசியலமைப்பு மீது அத்தகைய தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். நமது அரசியமைப்பை நீக்கி அவ்விடத்தில் இந்து சனாதன தருமத்தை நிறுவும் முயற்சியாக இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

      இந்தியாவில் இதுவரையில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வு முடிவுகள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வளமான மரபுகளைக் காட்டுகின்றன. அது கண்டிப்பாக இந்துத்துவ வேத மரபு அல்ல. ரிக் வேதம், உபநிடதங்கள், வேத இந்து சாஸ்திரங்கள், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை காலத்தால் பிந்தியவை. இவை இந்துத்துவ, சனாதன மரபை உயர்த்திப் பிடிப்பவை. இவற்றை அரசியலமைப்பின் மாண்பிற்குள் நுழைப்பதும் கொண்டாடுவதும் பாசிசமின்றி வேறில்லை.

      சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம். தொல்லினப் பழங்குடி மக்களின் ஒற்றுமை பேரரசு உருவாக்கத்திற்கு பெருந்தடையாக அமைகிறது. அவர்களைப் போரில் வென்றால் மட்டும் போதாது. தோற்ற அவர்கள் மீண்டும் ஒன்றுசேருவதைத் தடுக்க வேண்டும். அம்மக்களின் ஒற்றுமையை குலைத்த பிறகு அவர்களை ஒன்றுசேராமல் சிதறடிக்க வேண்டும்.

     அம்மக்களை கிராமத்திற்கு ஐந்து அல்லது பத்து குடும்பங்களைக் குடியமர்த்தி, வேளாண் பணிகளில் ஈடுபடுத்தி பிறருடன் தொடர்பு கொள்வதைத் தடுக்க சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இது நமது பழங்கால வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக் கடைபிடிக்கப்பட்ட நடைமுறை என தேவிபிரசாத் சட்டோபாத்யாயா விளக்குகிறார்.

       மக்களாட்சி என்பது நவீன வடிவம். இதற்கென அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்பு பன்னாட்டுக் கூறுகளையும் இந்தியாவில் நிலவும் சாதியக் கொடுமைகளை அகற்றி சமத்துவத்தை நிலைநாட்ட உறுதி பூண்டுள்ளது. இதை இந்துத்துவ-வேதப்பெருமைக்குள் அடைப்பதும் ஒப்பிடும்வதும்கூட  சரியாக இருக்க முடியாது.

        இங்கு இன்னொன்றையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைப்புகள் முழுதும் காவிமயமாகிவிட்டன. NCERT பழைய பாடநூல்களில் இருந்த மக்களாட்சி, சமத்துவம் போன்ற பாடங்களை கொரோனாவைக் காரணம் காட்டி நீக்கினார்கள். இனி அவர்கள் வெளியிடும் பாடநூல்கள் எவ்வாறு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. வரலாற்றைத் திரிக்கும் இவ்வாறான பாசிசச் சொல்லாடல்களுடன் அவை இருக்கப்போகின்றன.

      தமிழக அரசின் SCERT தயாரித்த பாடநூல்களில் பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் பிரம்மதேய நடைமுறைகளில் ஒன்றான ‘குடவோலை முறை’ எனும் திருவுளச்சீட்டு முறையை மக்களாட்சி என்று வகுப்புகள் தோறும் புகழ் பாடுகின்றன. ஜனநாயகத்திற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இதுதான் உதாரணமாகக் காட்டப்படுகிறது. மேலும் மநுநீதிச் சோழன் புகழ்பாடும் பாடங்களும் நிறைந்துள்ளன. தற்கால நீதிமன்றங்கள் மநுநீதி, ஸ்மிருதிகள் சொல்லித்தான் அறிமுகமாகின்றன.  ஸ்மிருதிகளைப் பாடநூல்கள் சமூக் கடமைகளாக வரையறுக்கின்றன. வேதங்கள், வேத குருகுலக்கல்வி போன்றவற்றை தமிழகப்பாடநூல்கள் உயர்த்திப் பிடிக்கின்றன. இத்தகைய அபத்தங்களின் உச்சத்தை ஒன்றிய அரசின் செயல்பாடுகளில் காண முடிகிறது.

நன்றி: புதிய விடியல்டிசம்பர்01-15, 2022

ஞாயிறு, நவம்பர் 27, 2022

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

 புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

மு.சிவகுருநாதன்



 

         வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் இக்கருத்துகள் உறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் கருத்தியலுடன் இணைந்தது குருகுலக்கல்வி முறை. எனவே அவர்களது கல்வித்திட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் திராவிட மாடலில் அதற்குரிய இடம் கேள்விக்குரியது. பெரியார் சொன்னதுபோல் நமது மூளைகளில் தேங்கிப்போன கசடுகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

         தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 01, 2022 அன்று ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதும், அடுத்தகட்ட படிப்பிற்கு வழிகாட்டப்படும் என்றும் சொல்லப்பட்டது. தமிழில் தனித் திறனுக்குச் சிறப்புப் பயிற்சியுடன், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப் போவதாகவும் கூறப்பட்டது.

        9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இதற்காக உருவாக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ இணையத்தின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எனவே இத்திட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது.

       அவர்கள் திட்டம் தொடங்கும்போதே மிகத் தெளிவாகவும் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையின்படியும் குறிக்கோள்களை வரையறுத்துள்ளனர். வழக்கம்போல் ‘திராவிட மாடல்’ அரசு எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்பவர்கள் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

               அரசின் பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் சேர ஆளில்லை. அதை நிரப்புவதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான குறிக்கோள்கள், தொலைநோக்குப் பார்வை என பல கருத்துகள் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. இவையனைத்தும் ஒன்றியக் கல்விக்கொள்கை 2020 இன் அம்சங்களாக உள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு உகந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்கிடும் மாபெரும் திட்டம் என்று இது சொல்லப்பட்டபோதே பலருக்கு அய்யம் தோன்றியிருக்கும். 

           தமிழகத்தில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை நெறிப்படுத்தி, திறமையான மனித வளத்தையும், வளர்ந்து வரும் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூழலை உருவாக்கவும், இந்தியாவிலும், உலகம் முழுவதிலும், மாறிவரும் நிறுவனச் சூழலில், இளைஞர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கும், கற்பதற்கும் அவர்களைத் தயார்படுத்துதலுமே இத்த்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாக முன்வைக்கப்படுகிறது.

           தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடியாகவும், இணைய வழியிலும் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படுவதோடு, தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படுமாம்.

        ஆகவே இனி பள்ளிகளில் கற்றல்-கற்பித்தலுக்கு இடமில்லை. கோச்சிங் சென்டராக பள்ளிகள் மாறும். ஒரு புறம் ‘நீட்’ போன்ற நுழைவு மற்றும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாரிப்பதும் திறன் வளர்ப்பு எந்திரங்கள் போன்ற மனித உயிரிகளை உருவாக்குவதும் நடக்கும். மானுட விழுமியங்கள், மதிப்புகள் எல்லாம் சாகடிக்கப்பட்டு எல்லாம் பணத்திற்கானவையாக மாற்றப்படும்.   

           முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நெறியாளர்களாக (Mentor) இருப்பர். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய, மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அயல் மொழிகள் (Foreign Language) கற்பிக்கவும் வழிவகை உண்டாம். இத்திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் தன்னார்வலராக இருப்பர். மேலும் 9 ஆம் வகுப்பிலிருந்து மூன்றாவது அல்லது அந்நிய மொழி கற்பிக்க வழிவகை காணப்படும். என்ன ஒற்றுமை பாருங்கள், ஒவ்வொரு நிலையிலும் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை!

               தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கேற்ற தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்படுவர். தமிழக அரசின் உதவியுடன் இந்த அரசுப்பள்ளி மாணவர்கள் கார்ப்பரேட்டுகளுக்குத் தேவைப்படும் எந்திரமாக வளர்த்தெடுக்கப்படுவர். என்னதான் எந்திரமாக வார்க்கப்பட்டாலும் மனித உயிர்களலல்லவா? அவர்களை கார்ப்பேட் மனிதர்களாக வளர்த்தெடுக்கவும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

          அதாவது மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களால் உணவு வகைகள் உடற்பயிற்சி ஆலோசனைகள் வழங்குவார்களாம். ‘கார்ப்பரேட்’ கலாச்சாரத்திற்கேற்ப நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகிய பயிற்சிகளும் உண்டு. தமிழ் உணர்வாளர்களையும் திருப்திப்படுத்த தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவார்களாம்.  தமிழ், ஜல்லிக்கட்டு போன்ற உணர்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு முற்றிலும் கார்ப்பரேட் சேவகம் செய்யும் புதிய தமிழகத்தை உருவாக்கப்போகிறார்கள். மோடியின் புதிய இந்தியாவுக்குப் போட்டியாக அல்ல; இணையாக இருக்கும் இந்தப் புதிய தமிழகம்.

         தொழில்துறையில் தற்போதுள்ள பணியிட இடைவெளிகளை நிரப்பக்கூடிய திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அளிப்பதற்கான ஆற்றல்மிகு பயிற்றுநர்களை அடையாளம் காண்பது என்கிற இத்திட்டத்தின் குறிக்கோளின்படியே தமிழக அரசு. HCL நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.   

        ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓரங்கமாக HCL நிறுவனத்துடன் இணைந்து Tech Bee – Early Career Training Program. என்ற பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2020-2021 மற்றும் 2021-2022 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, கணிதவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் 60% க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியளித்து அந்நிறுவனத்தில் பணிசெய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சித் தொகையை ஒரு லட்சத்தை அரசு அந்நிறுவனத்திற்கு வழங்குகிறது.

         6 மாதப் பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் பணிநியமனம் வழங்கி ஆண்டுக்கு 1.7 லட்சம் முதல் 2.2 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்படுமாம். அதாவது மாத ஊதியம் ரூ.14,000 – 18,000 என்ற அளவிலிருக்கும். இது அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மாத ஊதியத்தைவிட குறைவாகும்.  வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன் என்று அடித்தட்டுக் குழந்தைகளை மிகக்குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துவது மோசடியே.

        அந்நிறுவனப் பணிகளுக்குத் தேவையான திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டு 17 வயதிலேயே அவர்கள் பணியாளர்களாக மாற்றப்படுகின்றனர். ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். பணியில் சேர்ந்த பிறகு மேல்படிப்பைத் தொடர நினைத்தால் சாஸ்த்ரா போன்ற 3 தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பகுதிநேரமாகப் படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் விரும்பும் படிப்பு மட்டுமல்ல; அரசு நிறுவனங்களில் படிப்பும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் கடனில் படித்த நிலை மாறி, சொற்ப ஊதியத்தில் தனியார் ஊழியர்களாகி அந்த வருமானத்தையும் தனியார் கல்வி நிறுவனங்களிடம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

        100 நாள் வேலைத் திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று நிலவுடைமையாளர்கள் புலம்புகின்றனர். அதேசமயம் அவர்களுக்கு உரிய ஊதியத்தை பாலினப் பாகுபாடின்றி வழங்க முன்வருவதில்லை. வடநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு பணிகளைச் செய்வது குறைவான ஊதியம் கொடுக்கலாம் என்கிற காரணம்தான். அதைப்போல நாட்டில் நிறைய பொறியியல் பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய பணியும் ஊதியமும் தர எந்தப் பன்னாட்டு நிறுவனமும் விரும்புவதில்லை. கேட்டால் அவர்களுக்கு உரிய திறன்கள் இல்லை என்று சொல்வார்கள்.

            மொத்தத்தில் ஊதியம் குறைவாகக் கொடுக்க வேண்டும். எங்களுக்குத் தேவையான திறன்களை பொறியியல் அல்லாத பட்டம் பெற்றவர்கள் அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்களைக் கொண்டு செய்துகொள்கிறோம் என்பதே இத்தகைய நிறுவனங்களின் நிலைப்பாடு.  இந்த நிலையில் +2 அளவில் மாணவர்கள் கிடைத்தால் அவர்களுக்கு வேலை மிகவும் எளிதாகிவிடும். அந்தப் பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் நிறுவனங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் பணியை தமிழக அரசே முன்நின்று செய்யப்போகிறது. வழிகாட்டுகிறோம் என்று சொல்லி ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தக் கூலியடிமைகளைப் போல அரசுப்பள்ளி மாணவர்களை அனுப்பி வைக்கப்போகிறது.

        இவர்களில் எத்தனைபேர் அந்தக் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிப்பைத் தொடர்வார்கள்? இந்தக் குறைவான ஊதியம் அவர்களது குடும்பத்தைக் காக்குமா, அல்லது மேற்படிப்புக்கு உதவுமா? இந்நிறுவனம் இவர்களை வேலையை விட்டு நீக்கினால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பணி அனுபவத்தைக் கொண்டு அதே ஊதியத்தில் பிற நிறுவனங்களில் பணிவாய்ப்பு அமையுமா?  என எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதற்கான பதில்கள் யாரிடமும் இல்லை.

       அடித்தட்டு மக்களின் குழந்தைகளை வருமானத்திற்கு வழி செய்கிறோம் என்ற பெயரில் அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் தட்டிப்பறித்து அடிநிலைப் பணியாளர்களாக மாற்றும் போக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு இளங்கலைப் பட்டத்தை முடிக்காமல் மாணவர்களைப் பணியாளராக மாற்றினால் ஆகும் விளைவுகளை யாரும் கணக்கில் கொள்ளவில்லை. வருமானம் வருகிறது என்றால் குழந்தைத் தொழிலாளர் முறையை ஆதரிக்க இயலுமா? இது ஒன்றிய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நிகரான திட்டமே. ஒரே வேறுபாடு என்னவென்றால் அங்கு ஒன்றிய அரசு அவர்களை பாதியில் கழற்றிவிடுகிறது; இங்கு தனியார் நிறுவனம் அப்பணியைச் செய்யப் போகிறது, அவ்வளவுதான்.

        மாணவர்களின் விருப்பார்வத்திற்கும் அவர்களது உயர்கல்விக்கும் உதவுவதாகச் சொல்லி திட்டம் தீட்டினாலும் அதன் பயன் முழுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் பெரும் வகையில் அமைவது கேலிக்கூத்தாகும். இதனால்தான் மாணவர்களின் உயர்கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் தனித்தனியான திட்டங்கள் இருக்க வேண்டும். அரசு இத்தனை கல்வி நிறுவனங்களை வைத்துக் கொண்டு தனியார் கம்பெனிகளுக்குக் குழந்தைகளை அனுப்ப குத்தகை ஒப்பந்தம் போடக்கூடாது. உயர்கல்வி நிறுவனங்களில் அவர்களைப் படிக்க வைத்து, தகுதி, திறமையை மேம்படுத்தி அதன்பிறகு பணிவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

      +2 அளவிலேயே இவர்கள் வேலைக்குச் செல்வதால் பலர் பட்டம் பெற வாய்ப்பில்லை. எனவே இதைவிட நல்ல, அதிக ஊதியம் பெறும் பணிகள் கிடைக்காமல் போகும். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளின் பணி வாய்ப்பும் கிடைக்காது. மொத்தத்தில் திறன்வளர்ப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அடிமைகளை உற்பத்தி செய்யும் திட்டமாகவே இது இருக்கும். இதே அனைத்து நிறுவனங்களுக்கும் +2 அளவிலேயே ஊழியர்களை உருவாக்கிவிடலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை இன்னும் அதிகமாகும்.

      ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக தமிழகக் கல்விக்கொள்கை உருவாக்க குழு ஒன்று அமைத்துள்ளது. இருப்பினும் ஒன்றியக் கொள்கையின் அனைத்து அம்சங்களும் தனித்தனி திட்டங்களாக செயல்பாட்டுக்கு வருகின்றன. முன்னர் இல்லம் தேடிக் கல்வி; தற்போது தகைசால் பள்ளிகள், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் என அணிவகுக்கின்றன. தமிழகக் கல்விக்கொள்கைக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரகசியமாகவும் பல்வேறு தணிக்கைகளுடனும் நடக்கின்றன. கல்வியின் எதிர்காலம் ஒன்றிய, மாநில அரசுகளால் இருண்டு கிடக்கிறது.        

நன்றி: புதிய விடியல் (மாதமிருமுறை) நவம்பர் 16-30, 2022

17 ஆம் ஆண்டு நினைவில்…

 17 ஆம் ஆண்டு நினைவில்…

 

திருமிகு ச.முனியப்பன்

தோற்றம்: 07/03/1931  மறைவு: 19/11/2005

 

            இன்று (19/11/2022) அப்பாவின் நினைவு நாள். அவர் மறைந்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அம்மாவும் மறைந்து விரைவில் ஓராண்டு ஆகப்போகிறது. அப்பாவின் இந்த நினைவுநாளில் அம்மாவும் இல்லை.

       எனது தந்தையார் திரு ச.முனியப்பன் (1931-2005) இடைநிலை ஆசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றியவர். வ.உ.சி. அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி (1952) அப்பகுதி மக்களுக்கு கல்வி கிடைக்கக் காரணமாக இருந்தவர்.

     பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை; பிள்ளைகளைச் சொந்தக்காலில் நிற்க வழிவகை செய்தால் போதும் என்கிற கருத்தைக் கொண்டிருந்தார். அதனடிப்படையில் அவரது செயல்பாடுகள் அமைந்தன. அவரது கருத்தியல் சார்புகள் குறித்தும் நினைத்துப் பார்க்கிறேன்.

        அவருக்குக் கடவுள் நம்பிக்கைகள் கிடையாது. பழனி முருகன், தஞ்சைப் பெரியகோயில், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் போன்று எப்போதாவது கோயிலுக்குச் செல்வார்; அது வழிபாட்டிற்காக அல்ல. வீட்டில் பெரியார், அண்ணா, பாரதியார், காமராஜர் படங்களைப் பெரிதாக மாட்டி வைத்திருந்தார்.

         ‘தினமணி’ நாளிதழ் வந்துகொண்டிருந்த காலத்திலும் ‘சுதேசமித்திரன்’ நாளிதழைத்தான் நாள்தோறும் வாங்கினார். அந்த இதழ் நின்றுபோன பிறகு ‘அலை ஓசை’ எனும் நாளிதழுக்கு மாறினார். அதுவும் நின்றது. பிறகுதான் ஏ.என். சிவராமன் ஆசிரியர் பொறுப்பிலிருந்த ‘தினமணி’யை வேறு வழியின்றி வாசிக்கத் தொடங்கினார்.

       எங்கள் இல்லத் திருமண விழாக்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. பி.வி. ராஜேந்திரனை அழைப்பார். இருப்பினும் அவரை காங்கிரஸ் சார்பாளராக வகைப்படுத்த முடியாது. இந்திராகாந்தி, ராஜூவ் காந்தி போன்ற காங்கிரஸ் பிரதமர்களைக் கடுமையாக விமர்சித்துப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

      திராவிட இயக்கச் சார்பு இருந்தது என்றாலும் பெரியார், அண்ணா ஆகிய இருவரைத் தவிர்த்து வேறு எவரையும் அவர் கொண்டாடியதில்லை. அவர்களைப் பற்றிய கடும் விமர்சனங்கள் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

         தங்க நகைகளை முற்றிலும் வெறுத்த அவர் பணி ஓய்வுக்குப் பிறகு அணிந்துகொண்டார். கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சோதிடம் குறித்த நேர்மறையான கருத்தும் இருந்தது. அதுகுறித்து சோதிடர்களிடம் விவாதங்கள் செய்வதை வழக்கமாகக் கொண்டுருந்தார்.

     பல கருத்துநிலைகளின் கலவையான பிரதிநிதியாக அவரை நினைத்துப் பார்க்கிறேன்.

சனி, நவம்பர் 26, 2022

நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

 நண்பர் முத்து ராஜாவின் இரண்டாவது நூல்!

மு.சிவகுருநாதன்

 


முத்துராஜாவின் ‘பாட்டும் பாடமும்’ நூல் ‘பன்மை’ (2022) வெளியீடாக வந்தது. அதற்கு முன்பே தயாரிப்பிலிருந்த ‘பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்’ என்ற நகைச்சுவை அனுபவக் கட்டுரை நூல் சற்றுக் காலதாமதமாகத் தற்போது வெளியாகியுள்ளது.

33 சிறிய கட்டுரைகளடங்கிய இக்குறுநூலின் மொத்த பக்கங்கள் 90 மட்டுமே. கட்டுரைகள் ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்க அளவில் சுருக்கமாக அமைந்துள்ளது.

அவரது மாலத்தீவு மற்றும் உள்ளூர் அனுபவங்களைச் சுவைபட எழுதியுள்ளார். வெறும் நகைச்சுவைக்காக மட்டும் எழுதாமல் பல்வேறு கருத்துகளையும் வலியுறுத்துகிறார்.

எளிமையாக, இனிமையாக சீக்கிரம் வாசித்து முடிக்கக்கூடிய குறுநூலாக இந்நூல் உள்ளது. இந்நூலை அவரே வெளியிட்டுள்ளார்.

இந்நூலுக்கு திருவாரூர் இரெ.சண்முகவடிவேல், முனைவர் எஸ்.ரவி, நீலகண்ட தமிழன் போன்றோர் அணிந்துரையும் அறிமுக உரைகளையும் அளித்துள்ளனர்.

நூல் விவரங்கள்:

பன்மொழிப் பயணம் – நகைச்சுவைத் தருணம்

ஆசிரியர் முத்துராஜா

பக்கங்கள்: 90

விலை: ₹100

தொடர்புக்கு:

முத்தமிழரசு பதிப்பகம்,

12 ஏ, அக்ரஹாரம்,

குருங்குளம் – அஞ்சல், 609608,

கொல்லாபுரம் – வழி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9865158112

மின்னஞ்சல்:

muthurajakgm@gmail.com

தன்வியின் பிறந்த நாள்

தன்வியின் பிறந்த நாள்

மு.சிவகுருநாதன் 

 

 


          நண்பர் யூமா வாசுகி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞர், ஓவியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், குழந்தை இலக்கியப் படைப்பாளி என பலதரப்பட்ட படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர்.

      ‘ரத்த உறவு’ என்ற சிறப்பான நாவலைத் தந்தவர். ‘மஞ்சள் வெயில்’ இவரது மற்றொரு நாவல். உயிர்த்திருத்தல் என்கிற சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.

       ஓ.வி. விஜயனின் ‘கசாக்கின் இதிகாசம்’ மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றார். ‘மாத்தன் மண்புழு வழக்கு’ என இவரது மொழியாக்கப் பட்டியல  நீண்டது.


 

       அண்மையில் சென்னையில் சந்தித்தபோது தனது நூல் ஒன்றை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்த நாள்’ என்ற 10 சிறார் கதைகள் அடங்கிய தொகுப்பே இது.


 

      நாவல், சிறுகதை, கவிதை எழுதுவதை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு, சிறார் இலக்கியப் படைப்புகள் மற்றும் அவை சார்ந்த மொழிபெயர்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு வகையில் தமிழிலக்கிய உலகிற்கு இழப்புதான். இருப்பினும் தமிழில் இன்னும் அதிகம் கவனம பெறாத சிறார் இலக்கிய வகைமையைச் செழுமைப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது.

      யூமா வாசுகி போன்ற பல்துறை ஆளுமைமிக்க படைப்பாளியால் குழந்தை இலக்கியம் கூடுதல் வளமடையும்.

      இந்த நூலை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. பிறகு நூலைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

நூல் விவரங்கள்:

தன்வியின் பிறந்த நாள்

யூமா வாசுகி

பக்கங்கள்: 119

விலை: ₹120

வெளியீடு:

புக்ஸ் ஃபார் சில்ரன்,

7, இளங்கோ சாலை,

பாரதி புத்தகாலயம்,

தேனாம்பேட்டை,

சென்னை -600018.

அலைபேசி: 8778073949

 

ஞாயிறு, நவம்பர் 06, 2022

“மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”

 “மூளையை நிரப்புவதல்ல; சிந்திக்கத் தூண்டுவதே கல்வி”  

 

மு. சிவகுருநாதன்

 

நேர்காணல்: எஸ்.செந்தில்குமார்

 

         மு.சிவகுருநாதன் (49) சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகத் திருவாரூரில் அரசுப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். கல்விக் குழப்பங்கள், கல்வி அறம், கல்வி அபத்தங்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அ.மார்க்ஸ் உடன் இணைந்து 2008இல் ‘சஞ்சாரம்’ காலாண்டிதழை நடத்தியுள்ளார். அதில் மண்டோவின் கடிதங்கள் ராமநுஜம் மொழிபெயர்ப்பில் முதன்முதலில் பிரசுரமாகியுள்ளன.

  • அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் உங்கள் அளவில் முயற்சி செய்திருக்கிறீர்களா?

பள்ளியை மேம்படுத்துவது தனியொருவர் நடத்தும் சாகசச் செயலாக இருக்க முடியாது. அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உள்ள ஒரே வாய்ப்பு ஆங்கில வழி மட்டுமே. பணியிடத்தைத் தக்கவைக்கும் சுயநலமும் இதில் உண்டு. இதனால் பல தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தமிழ்வழி மூடுவிழா கண்டுள்ளது. நான் பணியாற்றும் நகரத்தை ஒட்டிய Semi Urban பகுதியில் மாணவர் சேர்க்கைக்குப் பல்வேறு தடைகள் இருக்கின்றன. 2015—2016இல் ஆங்கில வழியைத் தொடங்கினோம். ஆறாம் வகுப்பில் 26 மாணவர்கள் சேர்ந்தனர். அடுத்த ஆண்டு 6 மாணவர்கள் மட்டும் சேர்ந்ததால் ஆங்கிலவழி வகுப்புகள் மூடப்பட்டன. அந்த 26 பேரில் சிலர் வேறு பள்ளிக்கும் பலர் தமிழ்வழிக்கும் மாறிவிட 7 பேர் மட்டுமே பத்தாம் வகுப்பை ஆங்கில வழியில் பூர்த்தி செய்தனர்.

அரசுப்பள்ளிகளில் கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் ஊழலால் மிக மோசமான தரத்தில் கட்டப்படும் அவை சில ஆண்டுகள்கூட தாக்குப்பிடிப்பதில்லை. இங்கு பயன்படுத்தப்படும் எந்தப் பொருள்களின் ஆயுளும் குறைவு. இதற்கான காரணம் வெளிப்படையானது. ஒப்பீட்டளவில் இதர அரசு அலுவலகங்கள் தரமாகவும் பள்ளிகள் தரமின்றி கட்டப்படுவதற்கும் யார் காரணம்? இதைத் தட்டிக் கேட்கும் நிலையில் தலைமையாசியரோ, ஆசிரியரோ, ஊர் மக்களோ இல்லை.

  • மாணவர்கள் ஆங்கில வழியான கல்வியை கற்பதற்கு அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து, தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமென்ன?

பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். தமிழ்வழியில் கற்பிக்கும் ஆசிரியர் ஆங்கில வழியில் எப்படிச் சொல்லித்தருவாரோ என்கிற சந்தேகம் இருக்கலாம். பெரும்பாலான சுயநிதிப்பள்ளிகளிலும் ஆங்கிலவழி தமிழில்தான் நடக்கிறது. Spoken Englishக்கு தனியே பயிற்சி எடுத்தால் போதுமானது. ஹிந்தி படித்தால் வேலை என்பதைப்போல, ஆங்கில வழியில் படித்தால் ஆங்கில அறிவு கூடிவிடும் என்பது கற்பிதமே. இலவசங்கள் என்றால் தரமற்றவை என்பதும் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. மாறுபட்ட வண்ணச் சீருடைகள், ஹிந்தி மொழி, வாகனங்கள், இதர பயிற்சிகள் எனத் தங்களை வேறுபடுத்திக் காட்ட அரசுப்பள்ளிகளால் இயலுவதில்லை. பள்ளி வளாகத்தில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்க அரசுப்பள்ளிகளால் முடியாது. பெரும்பாலான சுயநிதிப்பள்ளிகளில் தமிழக அரசின் பாடநூல்கள் பயன்படுத்தப்படுவதில்லை. எட்டாம் வகுப்பு முடிய தனியார் பாடநூல்கள்தான் பயன்பாட்டில் உள்ளன. செயல்வழிக்கற்றல் அரசுப்பள்ளிக்கு மட்டுமே என அடுக்கிக்கொண்டே போகலாம். மொழி ஒரு கருவிதானே! அதை உணர்வு, உயிர், அறிவு என எல்லாமாகப் பார்க்கும்போது சிக்கல் தொடங்கிவிடுகிறது.

  • தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகள் பெருகி வருவதற்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

இது பெரிய கதை. இதற்கு நாம் சற்றுப் பின்னோக்கிப் போக வேண்டும்.  சில பத்தாண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் மட்டுமே கல்விப்பணியில் இருந்தன. பள்ளிகளில் Teaching–ம் சில ஆசிரியர்கள் வியாபார நோக்கில் தொடங்கிய Tuition Centreகளில் Coaching-ம் தொடங்கின. ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பணியிலிருக்கும் ஆசிரியர்களுடன் (பிநாமிகளாக) இணைந்து சுயநிதிப்பள்ளிகளைத் தொடங்கினர். அன்றைய காலத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்தன. அன்று நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் சேர்த்து +2 மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. பல்வேறு பள்ளிகளில் 10ஆம் வகுப்புகளில் 400, 450 மதிப்பெண்கள் பெற்றவர்களைச் சேர்த்து +1 பாடங்களை நடத்தாமல் நுழைவுத்தேர்வுக்கும் +2 பாடங்களுக்கும் ஈராண்டுப் பயிற்சியளிக்கும் குறுக்குவழி கண்டறியப்பட்டது. இந்த கல்வி வணிகம் விரிவடையவே உண்டு, உறைவிட சுயநிதிப்பள்ளிகளின் எண்ணிக்கைப் பெருகியது. அரசியல்வாதிகள் பலர் இந்தத் தொழிலுக்குள் நுழைந்தனர். ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வுகள் ரத்தானது. +2 வகுப்பை மட்டும் இரண்டாண்டுகள் நடத்தி மருத்துவப்படிப்பிற்கு அனுப்பத் தேவையான மதிப்பெண்களைப் பெற வைக்க, சில லட்சங்களை செலவு செய்ய நடுத்தரவர்க்கம் தயாராக இருந்ததும், அரசும் கல்வித்துறையும் இவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதும் இன்று கல்வி முழுக்க வணிக மயமாகக் காரணமாயிற்று. இப்போது +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு வந்தாலும் அம்மதிப்பெண்கள் உயர்கல்விக்குத் தேவையில்லை என்றானது. +2 மதிப்பெண்கள் மருத்துவம் போன்றவற்றிற்குத் தேவைப்படாத நிலை ஏற்பட்டதும் மீண்டும் Coaching வடிவத்தைக் கைக் கொள்கிறார்கள். அன்று உதவிபெறும் பள்ளிகளில் படிப்பது சமூக அந்தஸ்து என்ற நிலைமாறி இன்று சுயநிதிப்பள்ளிகளில் படிப்பது மேட்டிமை சார்ந்த அடையாளமாக மாறிப் போய்விட்டது. நடுத்தரவர்க்க மனப்பான்மையும் ஒரு காரணம். பல லட்சங்களைச் செலவு செய்ய வாய்த்த அவர்களது பொருளாதார நிலை, ஆங்கில வழிக்கல்வி, பொதுத்தேர்வு – மதிப்பெண்கள் சார்ந்த கல்வி, அரசின் கொள்கைகள், அடிப்படை வசதிகளின்மை போன்றவை கூடுதல் காரணமாக இருக்கின்றன.

  • தனியார் கல்வி நிலையங்கள் மேம்பட்ட தரத்துடன் இயங்குகிறதா? அவர்களிடம் கல்வியில் சேவை நோக்கம் உண்டா?

ஒட்டுமொத்த அளவில் தனியார் சுயநிதிப்பள்ளிகளின் தரம் கேள்விக்குரியது. முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் பல பள்ளிகளில் இல்லை. அரசுப்பள்ளிகளின் நிலைமையும் இதுதான். போதுமான கழிப்பறை, தண்ணீர் வசதி, தூய்மைப் பணியாளர்கள் நியமனம் போன்றவை அரசுப்பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகளில் பெரிய அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒப்பீட்டளவில் இந்த வசதிகள் ஓரளவிற்கு இருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட அனைத்தையும் தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. தனியார் பள்ளிகளில் இந்த நிலை இல்லை என்பதுதான் சிறிய வித்தியாசம். மற்றபடி தரம் என்பதெல்லாம் கானல்நீர்தான். விளம்பரங்கள், தனியார் மோகம், மதிப்பெண்கள் வேட்டை, வாகன வசதி, சமூக அந்தஸ்து, நடுத்தர மற்றும் உயர் வர்க்க ஆதரவு போன்றவற்றால் இந்த வணிகம் செழிக்கிறது. இதில் சேவைக்குத் துளியும் இடமில்லை.

  • அரசு ஊழியர்கள் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கத் தயங்கும் காரணம் என்ன?

 இது படித்தவர்கள்தான் அதிகமாக சூதும் வாதும் செய்வார்கள் என்பதை நிருபிக்கும் அறமற்ற நிலையாகும். 9, +1 வகுப்புகளைப் படிக்காமல் 10, +2 வகுப்புகளில் அதிக மதிபெண்கள் பெறவேண்டும் என்பது போன்ற பல்வேறு குறுக்குவழிகள் இதில் இருந்தன. பிறமாநிலங்களைப் போல பள்ளிக்குச் செல்லாமல் நீட் பயிற்சி மையங்களில் குடியிருக்கும் நிலை இங்கு இல்லை. தனியார் சுயநிதிப்பள்ளிகள் கோச்சிங் சென்டராகவும் இருக்கின்றன. எனவே கோச்சிங்கிற்காகவும் செல்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் 7.5% இடஒதுக்கீட்டைப் பெறவும் இதே குறுக்கு வழியைக் கடைபிடிக்கலாம். எனவே இவற்றில் பொருளாதார அளவுகோல்கள் இருப்பது அவசியம். பொருளாதார நிலை உயர்ந்ததும் தங்களை உயர்த்திக் காட்டிக்கொள்ளும் மனப்பான்மையும் ஒரு காரணம். எனவே CBSE, ICSE போன்ற பாடத்திட்டங்களில் படிக்க வைக்கும் பெருமிதங்களும் உண்டு.

  • அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள அரசை மட்டுமே நம்பியிருக்கிறார்களா?

அவர்களுக்கு வேறு வாய்ப்புகளும் தளங்களும் இல்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் பட்டப் பயிற்சிக்கான பாடத்திட்டங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.  இதில் அரசின் அனுமதியின்றி பிறர் நுழைய முடியாது. அரசியல் நோக்கங்களுக்காக வலதுசாரி அமைப்புகளால் நடத்தப்படும் அகஸ்தியா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் போன்ற சில நிறுவனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. ஆசிரியர் சங்கங்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய எல்லைகள் மிகக் குறுகியவை. பிற துறையில் பணியாற்றுபவர்களைப்போல் அல்லாமல் ஆசிரியர்கள் பணி வித்தியாசமானது. இவர்கள் குழந்தைகளுடன் பணியாற்றுபவர்கள். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். அரசின் திட்டங்களைத் திணிக்கவும் அவர்கள் சொல்வதைச் செய்யவும் மட்டுமே பயிற்சிகள் தரப்படுகின்றன. 1—10 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பெரும்பாலும் இங்கு பயிற்சியளிக்கப்படுகின்றன. இவையெல்லாம் SSA, RMSA, ஒருங்கிணைந்த கல்வி, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களை அமலாக்க மட்டுமே அளிக்கப்படுகின்றன. முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சியே கிடையாது. பாடக்குறிப்பு எழுதுதல் தொடங்கி பாடத்தை அறிமுகம் செய்தல், நடத்துதல் ஆகியவற்றில் தொடங்கி வகுப்பறைச் செயல்பாடுகள் எதிலும் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் அறவே இல்லை. பொதுவாக கல்வியில் ஜனநாயகம் முற்றாக மறுக்கப்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் சொன்னதை அப்படியே செய்யும் வளர்ப்புப் பிராணிகளாக ஆசிரியர்கள் வைக்கப்பட்டுள்ளனர். மின்னணுக் கருவிகளின் பயன்பாடு, கார்ப்பரேட்கள் எதிர்பார்க்கும் திறன் மேம்பாடுகள் மட்டும் கல்வியில் பலன் தருவதாக இல்லை. சில ஆசிரியர்கள் விளம்பரத்திற்காக பல்வேறு பணிகளில் ஈடுபடுவதாக தம் மீது ஊடக வெளிச்சம் படுமாறு பார்த்துக்கொண்டு, அதனை விருதுகளுக்கான கச்சாப்பொருளாக மாற்றி விடுகிறார்கள். கல்வித் தொலைக்காட்சியும் இத்தகைய திசையில் பயணிக்கவில்லை. விரைவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இதழ்கள் வெளியாகயிருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் ஆசிரியர்கள் தங்களது திறனை மேம்படுத்த, உரையாட வாய்ப்புகள் இருக்குமா என்று பார்க்கலாம்.      

  • அரசு பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்திற்கும் கல்விக்கு கற்கும் மனநிலைக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதாக உணர்கிறீர்களா?

பசித்த வயிற்றுடன் கல்வி கற்க இயலாது. அதற்காகத்தான் மதிய உணவு, சத்துணவுத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதை காலை, மாலை என நீட்டிப்பது சரியா என்று கேள்வி எழலாம். அரசு, அடித்தட்டு மக்களின் உழைப்பின் பெரும்பகுதியை டாஸ்மாக் மூலம் சுரண்டுகிறது. இதற்குப் பதிலுதவியாக இவ்வாறு செய்கிறது என்று கருதலாம். சிலருக்கு காலை உணவு தேவைப்படலாம். எல்லாருக்கும் தேவை என்று சொல்ல முடியாது. சத்துணவில் வழங்கப்படும் கலவைச் சோறுகள், அவித்த முட்டை போன்றவை பிடிக்காத குழந்தைகள் உண்டு. ஒவ்வொரு குழந்தையின் விருப்பத்தை நாம் கணக்கில் கொள்ள இயலாது. இதன் மூலம் தலைமையாசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமைகள் ஏற்படும். இதனால் கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படும். இப்பணிகளை சத்துணவுப் பணியாளர்களிடமே விடலாம்.

  • அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

அரசுப்பள்ளிகள் இன்று சமூகப் புறக்கணிப்புக்கு ஆட்பட்டுள்ளது.  ஓரளவு பொருளாதார வசதி பெற்ற சமூகங்கள் சுயநிதிப்பள்ளிகளை நாடியுள்ளன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய அடித்தள மக்களின் குழந்தைகள் பயிலும் இடமாக அரசுப்பள்ளி உள்ளது. அவர்களது சமூகச் சிக்கல்கள் பள்ளிகளிலும் எதிரொலிக்கின்றன. மது மற்றும் போதைப்பொருள்கள் சமூகத்தைப் பெரிது ஆட்டுவிக்கிறது. இவைகளின் தடையற்ற புழக்கம் கல்வியில் பெருந்தடையாக உள்ளது. வேலைக்குச் செல்லும் மாணவர்கள் எப்போதாவது பள்ளிக்கு வருவதும் இத்தகைய பழக்கங்களுக்கு அடிமையாகி, பிறருக்குக் கற்றுத்தருவது நடக்கிறது. சிலரது இந்தச் செயல்பாட்டால் ஒட்டுமொத்தப் பள்ளியும் பாதிப்படைகிறது. இது அவர்களின் பெற்றோருக்கும் தெரியும். அவர்களில் பெரும்பாலானோர் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். ஆனால் அவர்கள் பிறர் மீது பழியைச் சுமத்தித் தப்பிக்க நினைக்கிறார்கள். மதுவை ஒழிக்காவிட்டால் வருங்கால தமிழகமே இருண்டு போகும். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே 9ஆம் வகுப்பு மாணவன் பீர் பாட்டில் வெடித்து உயிரிழந்தது இப்பகுதியில்தான் நடந்தது. அரசு நேரடியாக மது விற்பனையிலும் மறைமுகமாக பிற போதைப்பொருள்களை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கும்வரை சமூகப் பாதிப்பு தொடரும். அரசுப்பள்ளிகளில் நன்றாகப் படிக்கக்கூடிய குழந்தைகள் பலர் உண்டு. அவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் சுணக்கம் உள்ளது. பள்ளிகளில் நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதெல்லாம் இயலாத காரியம். கோச்சிங் வணிகத்திற்காகத் திட்டமிடப்பட்டவை இத்தேர்வுகள். அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பதே போதுமானது என்ற நிலைப்பாடு அரசுப்பள்ளிகளின் எழுதாதச் சட்டமாகிவிட்டது. அரசு மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் (Schools of Excellence) மூலம் மாவட்டத்திற்கு ஒரு பள்ளிகளில் செய்தால் போதும் என்று கருதுகிறது. இது அனைவருக்குமான பொதுக்கல்வியையும் அருகாமைப்பள்ளி வாய்ப்புகளையும் அழிப்பதாகவே உள்ளது. ஒன்றிய அரசு PM SHRI (Prime Minister ScHools for Rising India) பள்ளிகளைக் கொண்டுவருவது தனது கல்விக்கொள்கையை திணிக்கும் நோக்கத்தைத்தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.   

  • மாணவர்கள் போதை பழக்கத்திலிருந்து மீண்டு வர அரசு பள்ளிகளில் தனியாக மறுவாழ்வு மையம் அமைக்கலாமா?       

பள்ளிகளில் அவ்வாறு அமைக்க முடியாது. மருத்துவமனைகளில் சிறார் போதை மறுவாழ்வு மையம் அமைக்கலாம். பெற்றோர் மற்றும் தொடர்புடையவர்கள் ஒப்புதலின்றி இதைச் செயல்படுத்த இயலாது. அரசுகள் இதை மூடி மறைக்கவே விரும்புகிறது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்யலாம். அரசு இதற்கான கையேடுகளை மட்டும் தயாரிக்கிறது. இது ஆசிரியர்கள் மட்டும் செய்யும் பணி அல்ல. மனநல மருத்துவரின் உதவியும் தேவைப்படுகிறது. இதற்கென ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப்படவில்லை. வெறும் உறுதிமொழி ஏற்கும் சடங்குகள் உதவாது.

  • மாணவர்களை நல்வழிப்படுத்தும் திட்டமாக ஆசிரியர்கள் என்னென்ன பணிகளை மேற்கொள்ளலாம்?

விளையாட்டின் மூலம் மாணவர்களின் உடலையும் மனத்தையும் சீராக்கலாம். பொதுத்தேர்வு வகுப்பென்றால் விளையாட்டைக் களவாடி விடுகிறார்கள். விளையாட்டு என்பது அன்றாடச் செயல்பாடு. இதற்கு மூன்றாண்டுகள் ஓய்வளிக்கக்கூடாது. இசை, ஓவியம், சிற்பம், நடனம் போன்ற நுண்கலைகளில் அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஈடுபடுத்தலாம். இது தகைசால் பள்ளிகளுக்கு மட்டும் போதுமானது என்று முடிவெடுப்பது தவறு. பாடத்திட்ட இணைச்செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் தர வேண்டும். சமூகப்பணிகளில் ஈடுபடுத்தலாம். அவர்களுக்குப் பல்வேறு பொறுப்புகள் வழங்கி அதன்மூலம் அவர்களது கவனச்சிதைவை ஒருங்குபடுத்தலாம்.  உரிய பாராட்டுதல்களும் அங்கீகாரமும் அவ்வப்போது வழங்கப்பட வேண்டும். 

  • கல்வி கற்பிக்கப்படுவதை வியாபாரமில்லாத வகையிலும் கல்வி கற்பது தொழில் புரிவதற்காகவும் என்கிற எண்ணத்தை ஆங்கிலேயர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டோமா?

அப்படி சொல்ல முடியாது என்று கருதுகிறேன். குருகுலக்கல்வியில் தொழில்தானே அடிப்படை! அப்போதே கல்வி வியாபாரம் தொடங்கிவிட்டது. தன் மகன், ஆசான் மகன், மன்னன் மகன், பொருள் கொடுப்பவன், வழிபடுவன் ஆகியோருக்கே கல்வி என நன்னூல் இலக்கணம் வகுக்கிறது. எனவே இலவசக் கல்வி மறுக்கப்படுகிறது; பொதுக்கல்வியும்தான். அனைவருக்கும் வணிகமில்லாக் கல்வி நமது முந்தைய பாரம்பரியமாக இருந்திருக்கிறது. அவை சமண, பவுத்த அ-வைதீகக் கல்வி முறைகளில் கிடைக்கிறது. பழங்காலக் கல்வி என்றதும் குருகுலம் போன்ற வைதீகக் கல்வியைக் கொண்டாடும் போக்கு இருக்கிறது. ஆங்கில மெக்காலேக் கல்வியை தொடர்ந்து விமர்சிக்கும் பலர் குருகுலக்கல்வியிடம் சரணடைவது உண்டு. குறைகள் இருப்பினும் அனைவரையும் கல்விக்கூடத்திற்கு கொண்டு வந்த பெருமை இக்கல்விமுறைக்கு உண்டு. இதன் குறைகளைச் சரிசெய்வதென்பது மீண்டும் குருகுலங்களைத் தொடங்குவதல்ல. ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை 2020 இதைத்தான் செய்கிறது.          

  • அயல்நாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கல்வி வளாகத்தைத் தொடங்கும் போது தமிழக பள்ளிக் கல்வித்துறையில் அடிப்படையில் மாற்றமடையுமா?

மாற்றங்கள் உள்ளிருந்தும் அடிப்படைக் கொள்கைகளிருந்தும் வரவேண்டும்.  பிறநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது கல்வி வணிகத்தை மேலும் அதிகரிக்கும். கல்வி மதிப்பெண்களை மட்டும் சார்ந்தது அல்ல. எனவே நுழைவுத்தேர்வுகளும் பொதுத்தேர்வுகளும் மட்டுமே கல்வியின் தரத்தை நிர்ணயிக்க முடியாது.  இவையிரண்டும் மாறிமாறி கல்வியின் இடத்தை ஆக்ரமிக்கின்றன. +2 மதிபெண்களுக்காக +1 வகுப்புப் பாடங்களைப் புறக்கணிப்பதும் நீட் தேர்வு மதிப்பெண்களுக்காக பள்ளி வகுப்புகளைப் புறந்தள்ளி கோச்சிங் சென்டர்களை நாடுவதும் மிகவும் ஆபத்தானவை. கோச்சிங் வணிகம் அதிகரிக்குமே தவிர கல்வித்தரம் மேம்பட வாய்ப்பில்லை. ஒரே நாடு – ஒரே கல்விமுறை இந்திய ஒன்றியத்திற்கு ஏற்றதல்ல. அனைத்துப் பள்ளிகளும் CBSE பள்ளிகளாகவும் NCERT பாடத்திட்டங்களை மட்டும் நாடெங்கும் பின்பற்ற வேண்டும் என்பது இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு பேராபத்தாகும்.

  • ‘ஒரே இந்தியா ஒரே கல்வி’ திட்டத்தினால் பிராந்திய மொழிகளான மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகியவை புறக்கணிப்படுவதற்கு வாய்ப்புள்ளதல்லவா? தாய்மொழிக்கல்வி என்பது இனி இல்லை என்பதுதானே இதற்கான அர்த்தம்?          

உண்மைதான். அவர்கள் கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கல்வி, உள்ளூர் மொழிகள், செம்மொழிகள் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஐந்தாம் வகுப்பு முடிய முடிந்தால் எட்டாம் வகுப்பு முடிய தாய்மொழி வழிக்கல்வி என்று சொல்லி கூடவே ஹிந்தியை நுழைக்க முயல்கிறார்கள். மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தவிர வேறு மொழியைத் தேர்வு செய்ய வாய்ப்பில்லை. வருங்காலத்தில் ராஜஸ்தானி, பிகாரி, போஜ்புரி, மைதிலி போன்ற பல வடஇந்திய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் திராவிட மொழிகளுக்கும் ஏற்படும். பிற திராவிட மொழி பேசும் மக்கள் இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • இச்சூழலை ஆசிரியராக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?       

கல்வியில் வணிகம், பாகுபாடு மேலும் அதிகரிக்கும். சாமானியர்களுக்கு உயர்கல்வி எட்டாக்கனியாகும். இடஒதுக்கீடு இருக்காது. அரசுப்பள்ளியில் படிப்போர் இங்கு உயர்கல்வி பெற இயலுமா? தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குவதைப்போல இவை கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குமா? இப்போது தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது நாம் அறிந்ததுதானே!

  • மாணவர்கள் இதனை எப்படி உணர்கிறார்கள்? இல்லை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு திரட்டி போராடியதுபோல் போராட முன்வருவார்கள் என எதிர்பார்க்கலாமா?

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்வுரீதியாக திரட்டப்பட்டது. கல்வியை வணிகமாக்கும் GATS ஒப்பந்தம் குறித்து வெகுசில அமைப்புகளும் கல்வியாளர்கள் மட்டுமே தொடர்ந்து எச்சரித்தும் போராடியும் வருகிறார்கள். இதன் அடிப்படையிலேயே தேசிய கல்விக்கொள்கை 2020 உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் எதிர்ப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்வதற்கில்லை. பெருந்திரள் மாணவர்கள் போராட்டம் சாத்தியமில்லாத நிலைதான் இன்று உள்ளது. மேலும் மாணவர்களைப் போராடவிடாமல் சாதி, மதரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சி வலை பின்னப்பட்டுள்ளது.

  • அரசுப் பள்ளி வகுப்பறையில் முழுமையான இந்திய வரலாற்றையும் அரசியலையும் மாணவனுக்குக் கற்றுக்கொள்ள முடியுமென நம்புகிறீர்களா?

வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாடத்திட்டத்தில் இல்லாத எதுவும் வகுப்பறைக்குள் நுழைவதில்லை. சமகால வரலாற்றுக்குப் பாடநூலில் இடமில்லை. கடந்தகால வரலாறு நிகழ்வுத் தொகுப்பாக வரிசைக்கிரமாக அடுக்கப்படுகின்றன. அதில் மாணவர்களின் சிந்தனைகள், மதிப்பீடுகள் மற்றும் ஒப்பீடுகளுக்கு வேலையில்லை. உயர்கல்வியிலும் இதே நிலைதான். ஜே.என்.யூ. போன்ற விதிவிலக்குகள் மிகவும் குறைவு. அவையும் தற்போது வலதுசாரிகளால் சீரழிக்கப்பட்டுள்ளன. 

  • வரலாற்றை வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் கற்றுக்கொள்ளும் வழி வகைகள் என்னென்னவாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

கல்கியின் நாவல்களையும் பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களையும் பார்த்து வரலாற்றை அறிய இயலாது. ஆனால் அதுதான் நடக்கிறது. அதிலிருந்து வெளியேற வேண்டும்.  சந்த் பர்தை எழுதிய காவியத்தைக் கொண்டு பிருதிவிராஜ் சௌகானின் வரலாறு எழுதப்படுவது அபத்தமல்லவா! அறிவியல் அணுகுமுறையுடன் வரலாற்றை அணுகவேண்டும். அதற்குப் புறவயமான பார்வை அவசியம். இந்தியன், தமிழன் போன்ற பெருமித அடையாளங்கள் வரலாற்றுப் பார்வையை குலைப்பவை.   ஆழ்ந்த, தேர்ந்தெடுத்த வாசிப்பு தேவை. இங்கே வரலாறுகள் என்ற பெயரில் எண்ணற்ற குப்பைகளும் நோட்ஸ்களும் நிறைந்துள்ளன. அவற்றிலிருந்து தேடிக் கண்டுபிடிப்பது சற்று சவாலான பணிதான். பாடத்திட்டத்திற்கு வெளியே தொடர்ந்து வாசிக்கும்போது இது எளிதாகும்.  இருக்கிற வரலாற்று ஆய்வுகளின் போதாமையும் வெளிப்படும். அந்தத் திசையில் பயணிக்கத் தூண்டுகோலாகவும் அமையும்.

  • 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஆர்வலர்கள் ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள், சமூக சீர்த்திருத்த இயக்கங்களின் வழியாக தமிழக அரசியலுக்குள் நுழைந்தனர். தற்போது மாணவர்கள் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாதவர்களாக மாறியுள்ளதற்கு ஆசிரியர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையென்று கூறலாமா?

விழிப்புணர்வு மட்டுமல்ல; அரசியல், கருத்தியல் தெளிவு, புரிதல் எதுவும் இல்லை. இதற்கு நாம் அவர்களை மட்டும் குறைசொல்லி பயனில்லை. நமது பாடத்திட்டங்கள் அரசியலற்ற தன்மையை வளர்க்கின்றன. அதில் உருவாகும் தலைமுறைகள் இவ்வாறுதான் இருக்கும். வாசிப்பு, சிந்தனை எல்லாம் வகுப்பறைக்கு வெளியேதான் கிடைக்கிறது. சுயதேடலால் அதை அடைபவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவு. உலகமயத்திற்குப் பிறகு கல்வியில் மட்டுமல்லாது இலக்கியம், கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் இதேநிலைதான். தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களை அரசியல்படுத்தும் முயற்சிகளை இயக்கங்கள் கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டன. அறிஞர் அண்ணா தம்பிக்கு எழுதிய “மனையில் மகிழ்ந்திரு”, வாசகங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இடதுசாரி இயக்கங்களுக்கு அந்தளவிற்கு நிறுவன பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லை. எனவே வலதுசாரிகள் தீவிரமாக இயங்கி மக்களைத் திரட்டியுள்ளனர். இனி வருங்காலம் அவர்களுடையதாகவே இருக்கும். இதை எதிர்கொள்வது குறித்த புரிதல் திராவிட, இடதுசாரி, தலித் இயக்கங்களுக்கு இன்னும் கைகூடவில்லை.  

  • தமிழ்நாட்டில் ஹிந்தி மொழியை தவிர்க்காமல் இருந்திருந்தால் இன்று நமக்கு மத்திய அரசிலும் அதுசார்ந்த துறைகளிலும் போதிய அளவிற்குப் பணி கிடைத்திருக்க வாய்ப்பாக அமைந்திருக்குமல்லவா?

இது திட்டமிட்ட மிகத்தவறான பரப்புரையாகத் தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கு வலுசேர்க்கும் புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை. ஹிந்தி படிக்கும் மாநிலங்களிலும் வேலைவாய்ப்பின்மை உண்டு. ஒன்றியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் வெற்றிவாய்ப்பு இல்லை என்ற நிலையில் தமிழகத்திற்கு எதிரான போக்கு அன்றிலிருந்து தொடர்கிறது. வி.பி.சிங்கின் ஐக்கிய முன்னணி காலத்தில்தான் தமிழகத்திற்கு கேபினட் அமைச்சர் கிடைத்தார். காங்கிரசிடம் இருந்த மிதவாதப் போக்கு பா.ஜ.க.விடம் இல்லை. எனவே தமிழகம் போன்ற மாற்றுச் சிந்தனைப் போக்குகளை முற்றிலும் அழிக்க நினைக்கிறது. ஒன்றிய அரசின் அலுவல் மொழி ஹிந்தி மட்டுமல்ல; ஆங்கிலமும்தான். நாம் ஆங்கிலம் கற்பதால் இந்திய மற்றும் உலக அளவிலான வேலைவாய்ப்புகளைப் பெறுகிறோம். ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியோ பிற இந்திய மொழிகளோ இருக்க முடியாது என்பதே உண்மை.

  • மெக்காலே கல்வி முறையைத்தான் இப்போதும் பின் பற்றி வருகிறோம். சிறைகளைப்போல வகுப்பறையின் அமைப்பு, ஒழுங்கில்லாதவர்களை பிரம்பால் அடிப்பது, தண்டனை தருவது போன்றவற்றை மாற்றி புது வடிவத்தில் கல்வி கற்கும் சூழலை ஆசிரியராக நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா?          

கடந்த சில பத்தாண்டுகளாக வகுப்பறை கொஞ்சம் மாறியிருக்கிறது. தண்டனைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அடிப்படைகள் எதுவும் மாறவில்லை. பொதுத்தேர்வு மையமான கல்வியை ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வு மையமான கல்வியாக மாற்றுகிறார்கள். மொத்தத்தில் தேர்வுகள் ஒழியப்போவதில்லை. தொடக்க வகுப்புகளையாவது விளையாட்டு, செயல்பாடுகள் மூலம் கற்றலை எளிமையாக்கலாம். இத்தகைய முயற்சிகள் நடைபெறுகின்றன. மறுபுறம் ஒன்றிய அரசு மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என முட்டுக்கட்டை போடுகிறது. பாவ்லோ ஃபிரெய்ரே போன்றோரின் சிந்தனைகளை வாசிக்கும்போது நமக்கும் ஏக்கம் உண்டாகிறது. அடிப்படைகளை மாற்றாமல் மாற்றுக்கல்வியை யோசிப்பது சாக்கடைக்கு ‘செண்ட்’ அடிப்பது போன்றதுதான்.

  • அரசுப் பள்ளிகளில் பெரிய அளவில் ஆசிரியர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் எழுவதில்லை. தனியார் பள்ளிகளில் அதிகமாக புகார்கள் வந்தபடி உள்ளன. இதற்குப் பிறகும் ஏன் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்பதை ஆசிரியராக எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?

நடுத்தர வர்க்க மனோநிலையின் ஒரு வடிவம்தான் இது. தனியார் பேருந்துகளில்தான் ஒப்பீட்டளவில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இருப்பினும் அதன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. பெரிய கட்டடங்கள், நவீன வசதிகள், நிறைய புத்தகங்கள், வண்ணங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடு, ஆங்கிலம், இந்தி, விளம்பரங்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை எங்கோ கொண்டு செல்லும் என்று கனவு காண்கிறார்கள். பொதுப்புத்தியும் இதற்கு இசைவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மூளையை நிரப்புவதல்ல; மாறாக சிந்திக்கத் தூண்டுவதே கல்வி என்பதை உணரும் நிலை இல்லை. தகவல்களை நிரப்பும் ஹார்ட் டிரைவ்களாக (Hard Drive) குழந்தைகளின் மூளைகளை மாற்றுவதே கல்வியின் இலக்காக உள்ளது. இதன் விளைச்சலாகவும் இதனைக் காணலாம்.

  • சிறு நாடுகளில் கூட நேர்மையான வழியில் கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன. ஜனநாயக இந்தியாவில் கல்வியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. கல்வியில் நேர்மை, எங்கிருந்து தொடங்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?

கல்வியில் மட்டுமல்ல எங்கும் நேர்மைக்கு இடமில்லை. ஒட்டுமொத்த சமூகமும் சீரழிவிற்கு உள்ளாகியுள்ளது. கல்வி பெற்றவர்கள் செய்யும் குளறுபடிகள் அதிகமாக இருக்கும். கல்வி நேர்மையைக் கற்றுத்தர தவறியிருக்கிறது. இதைக் குழந்தைகளிடம்தான் தொடங்க வேண்டும்; தொடங்க முடியும்.  ஒழுக்கக்கல்வி என்பது அறக்கல்வியாக மலரவில்லை. நமது மதிப்பீடுகளும் சிந்தனைப் போக்குகளும் மாற வேண்டும். மாணவர்களுக்கான உறுதிமொழி ஒன்றில், “என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன்” என்கிறது. இதன் மறுதலை என்னைவிட வயதில் குறைந்தவர்களை மதிக்கத் தேவையில்லை என்பதே. இவ்வாறான அறமற்ற கூறுகளாலும் ஒழுக்க மதிப்பீடுகளாலும் கல்வி வழி நடத்தப்படுகிறது. அறம் சார் மதிப்பீடுகளை பௌத்தம், சமணம் போன்ற நமது வேர்களிலிருந்து பெறலாம். கல்வியில் அறம் சார்ந்த உரையாடல் தொடங்கப்படவே இல்லை. திருக்குறள்கூட வெறும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் வேதமாக மாறிவிட்டது.

  • நேர்மையை கற்றுத் தரும் இடமாக அரசு பள்ளிகளை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறார்கள்?

சமூகத்திலுள்ள அனைத்து நோய்மைகளும் அதன் அங்கங்களின் இருக்கவே செய்யும். அரசோ, தனியாரோ பள்ளிகள் மட்டும் நேர்மையைக் கற்றுத்தர முடியதல்லவா! எல்லாரும் எதோ ஒருவகையில் குறுக்குவழிகளுக்குப் பழகியுள்ளோம். அந்த வகையில் இதுவும் ஒன்று. இருப்பினும் 7.5% இடஒதுக்கீடு பெற சிலர் அரசுப்பள்ளிகளை நாடக்கூடும். என்னதான் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் கல்வி கற்றாலும் இந்தச் சமூகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டும். அரசுப்பள்ளி என்பது சமூகப் பன்மைத்துவத்தைக் காட்டும் சிறிய அலகாகும். இந்தச் சூழலில் குழந்தைகள் வளர்வது அவர்களது எதிர்காலத்திற்கும் சமூகத்திற்கும் நல்லது. எனவேதான் அருகாமைப் பள்ளிகள் பெருந்தீர்வாக முன்வைக்கப்படுகிறது.

               நன்றி: பேசும் புதிய சக்தி – நவம்பர் 2022

                                   ஜெ.ஜெயகாந்தன், எஸ்.செந்தில்குமார்

வெள்ளி, அக்டோபர் 21, 2022

திறப்பு விழா!

 

திறப்பு விழா!

மு.சிவகுருநாதன்

 










           இன்று (20/10/2022) திருவாரூர் மாவட்டம் காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறைக் கட்டடம், இரு திறன் (Smart Class)  வகுப்பறைகள், தொடக்கப்பள்ளியில் ஒரு திறன் வகுப்பறை,  சுற்றுச்சுவர், முன்னாள் தமிழக  முதல்வர்  கலைஞர் மு.கருணாநிதி 'மணி மகுடம்' என்ற பெயரில் நாடகம் நடத்தி நன்கொடை வசூலித்துக் கட்டிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தைப் புதுப்பித்து  'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நினைவு நூலகம்' என்ற பெயரில் நூலகம்,  தண்ணீர் வசதியுடன் கூடிய ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள், மேனிலை மற்றும் தொடக்கப்பள்ளிக் கட்டிடங்கள் புதுப்பித்தல்  வேலைகள் முடித்து திறந்து வைக்கப்பட்டன.

       இவ்விழாவில் திருமதி மல்லிகா முரசொலிமாறன், திருமதி செல்வி செல்வம், திருமதி காவேரி கலாநிதிமாறன் மற்றும் பலர்  சன் பவுண்டேஷன் சார்பாக கலந்துகொண்டு  திறந்து வைத்தனர்.

       இதைப்போல கலைஞர் படித்த நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை நடுநிலைப்பள்ளியிலும்  பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன.

       சுமார் 1 கோடி மதிப்பிலான இப்பணிகளை Sun Foundation நிதி நல்கையை  world Vision நிறுவனம் செயல்வடிவம் கொடுத்தது. இந்நிறுவன அலுவலர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

      நூலகத்திலும் சுற்றுச்சுவரிலும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

      இத்துடன் பழைய படமும் கல்வெட்டுகளும்...

 

செவ்வாய், அக்டோபர் 04, 2022

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

 

110 ஆண்டு ஓடம்போக்கி இயக்கு அணை!

மு.சிவகுருநாதன்

          விளமல் கல் பாலம் என்றழைக்கப்படும் விளமல் இயக்கு அணை (ரெகுலேட்டர்) திருவாரூர்  ஓடம்போக்கி ஆற்றில் அமைந்துள்ளது. 


 

        இது 110 ஆண்டு பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சியில்  1912 இல் கட்டப்பட்டது. இன்று நாங்கள் மூவரும் (கவி, கயல்) இந்த இயக்கு அணையைப் பார்வையிட்டோம்.

சில படங்கள்...

 

 

100 வயதை  நெருங்கும் ரெகுலேட்டருடன் கூடிய

விளமல் கல் பாலம்

             

                                                    கட்டப்பட்ட ஆண்டு :1912 

                                                      100 வது ஆண்டு:2012

                                                    ஆறு :ஓடம்போக்கி ஆறு

அரசுத்துறையெங்கும் ஊழல் நாறிக்கிடக்கிறது. அரசால் காட்டப்படும் பள்ளிகள், சிறு பாலங்கள் ஆகியவை 10 ஆண்டுகளைக்  கூட தமது ஆயுளாகக் கொள்ளாதவை. சாலைகள் போட்ட சில மாதங்களில் மரித்துப்போகின்றன.

 


            ஆங்கிலேயர்களால் ( டல்ஹௌசி பிரபு )  150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பொதுப்பணித்துறையால்  1912  இல் கட்டப்பட்ட ரெகுலேட்டருடன்  கூடிய விளமல் கல் பாலம் விரைவில் தனது 100 வயதை  நெருங்குகிறது.

 

         அவ்வப்போது இப்பாலம் பராமரிப்புப்பணி  மேற்கொள்ளப்பட்டாலும் நீரை தேக்கிவைக்கும் மதகுகள் ரெகுலேட்டருடன் அமைக்கப்பட்டதோடு மேற்புறத்தில் சாலைப் போக்குவரத்திற்கும் இந்தப் பாலம் தொடர்ந்து பயன்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் மற்றொரு பாலம் கட்டப்பட்டவுடன் இதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இப்போது இதன் ரெகுலேட்டர் நல்லமுறையில் இயங்கி வருகிறது.

 


        இன்றைய நமது அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்த அந்நியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து இம்மாதிரியான பணிகளை செய்து முடித்துள்ளனர். இவர்கள் ஆற்றிய பணிகள் சிலவற்றை கூட நம் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்  செய்யாதது வேதனைக்குரிய விஷயமாகும்.

28/06/2011