ஞாயிறு, நவம்பர் 27, 2022

புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

 புதிய பாதையில் தேசிய கல்விக்கொள்கை?

மு.சிவகுருநாதன்



 

         வெறும் எழுத்தர்களை உருவாக்குவது மெக்காலே கல்விமுறை என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த அடிப்படைவாதிகள் இதற்கு மாற்றாக முன்வைப்பது குருகுலக்கல்வி முறைதான். பெரும்பாலானோரின் கனவிலும் நனவிலும் இக்கருத்துகள் உறைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஒன்றிய அரசின் கருத்தியலுடன் இணைந்தது குருகுலக்கல்வி முறை. எனவே அவர்களது கல்வித்திட்டத்திலும் கொள்கையிலும் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் திராவிட மாடலில் அதற்குரிய இடம் கேள்விக்குரியது. பெரியார் சொன்னதுபோல் நமது மூளைகளில் தேங்கிப்போன கசடுகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

         தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளான மார்ச் 01, 2022 அன்று ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதும், அடுத்தகட்ட படிப்பிற்கு வழிகாட்டப்படும் என்றும் சொல்லப்பட்டது. தமிழில் தனித் திறனுக்குச் சிறப்புப் பயிற்சியுடன், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப் போவதாகவும் கூறப்பட்டது.

        9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி படிப்புகள், அவை தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்களை எளிதில் பெறும் வகையில் வழங்குவதே இதற்காக உருவாக்கப்பட்ட ‘நான் முதல்வன்’ இணையத்தின் நோக்கமாகும். மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் குறித்த உடனடித் தகவல்களும் இங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எனவே இத்திட்டம் பலராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்பட்டது.

       அவர்கள் திட்டம் தொடங்கும்போதே மிகத் தெளிவாகவும் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையின்படியும் குறிக்கோள்களை வரையறுத்துள்ளனர். வழக்கம்போல் ‘திராவிட மாடல்’ அரசு எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்பவர்கள் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.

               அரசின் பல்தொழிநுட்பக் கல்லூரிகளில் சேர ஆளில்லை. அதை நிரப்புவதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கான குறிக்கோள்கள், தொலைநோக்குப் பார்வை என பல கருத்துகள் முன்பே சொல்லப்பட்டுவிட்டன. இவையனைத்தும் ஒன்றியக் கல்விக்கொள்கை 2020 இன் அம்சங்களாக உள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு உகந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்கிடும் மாபெரும் திட்டம் என்று இது சொல்லப்பட்டபோதே பலருக்கு அய்யம் தோன்றியிருக்கும். 

           தமிழகத்தில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை நெறிப்படுத்தி, திறமையான மனித வளத்தையும், வளர்ந்து வரும் சந்தைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் சூழலை உருவாக்கவும், இந்தியாவிலும், உலகம் முழுவதிலும், மாறிவரும் நிறுவனச் சூழலில், இளைஞர்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கும், கற்பதற்கும் அவர்களைத் தயார்படுத்துதலுமே இத்த்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையாக முன்வைக்கப்படுகிறது.

           தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடியாகவும், இணைய வழியிலும் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படுவதோடு, தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தொடர் வகுப்புகள் நடத்தப்படுமாம்.

        ஆகவே இனி பள்ளிகளில் கற்றல்-கற்பித்தலுக்கு இடமில்லை. கோச்சிங் சென்டராக பள்ளிகள் மாறும். ஒரு புறம் ‘நீட்’ போன்ற நுழைவு மற்றும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாரிப்பதும் திறன் வளர்ப்பு எந்திரங்கள் போன்ற மனித உயிரிகளை உருவாக்குவதும் நடக்கும். மானுட விழுமியங்கள், மதிப்புகள் எல்லாம் சாகடிக்கப்பட்டு எல்லாம் பணத்திற்கானவையாக மாற்றப்படும்.   

           முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நெறியாளர்களாக (Mentor) இருப்பர். கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்யை உறுதி செய்ய, மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அயல் மொழிகள் (Foreign Language) கற்பிக்கவும் வழிவகை உண்டாம். இத்திட்டத்தில் முன்னாள் மாணவர்கள் தன்னார்வலராக இருப்பர். மேலும் 9 ஆம் வகுப்பிலிருந்து மூன்றாவது அல்லது அந்நிய மொழி கற்பிக்க வழிவகை காணப்படும். என்ன ஒற்றுமை பாருங்கள், ஒவ்வொரு நிலையிலும் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கை!

               தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கேற்ற தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்படுவர். தமிழக அரசின் உதவியுடன் இந்த அரசுப்பள்ளி மாணவர்கள் கார்ப்பரேட்டுகளுக்குத் தேவைப்படும் எந்திரமாக வளர்த்தெடுக்கப்படுவர். என்னதான் எந்திரமாக வார்க்கப்பட்டாலும் மனித உயிர்களலல்லவா? அவர்களை கார்ப்பேட் மனிதர்களாக வளர்த்தெடுக்கவும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

          அதாவது மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களால் உணவு வகைகள் உடற்பயிற்சி ஆலோசனைகள் வழங்குவார்களாம். ‘கார்ப்பரேட்’ கலாச்சாரத்திற்கேற்ப நடை, உடை, நாகரீகம், மக்களோடு பழகுதல், ஆகிய பயிற்சிகளும் உண்டு. தமிழ் உணர்வாளர்களையும் திருப்திப்படுத்த தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவார்களாம்.  தமிழ், ஜல்லிக்கட்டு போன்ற உணர்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு முற்றிலும் கார்ப்பரேட் சேவகம் செய்யும் புதிய தமிழகத்தை உருவாக்கப்போகிறார்கள். மோடியின் புதிய இந்தியாவுக்குப் போட்டியாக அல்ல; இணையாக இருக்கும் இந்தப் புதிய தமிழகம்.

         தொழில்துறையில் தற்போதுள்ள பணியிட இடைவெளிகளை நிரப்பக்கூடிய திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் வகையில் பல்வேறு திறன் பயிற்சிகளை அளிப்பதற்கான ஆற்றல்மிகு பயிற்றுநர்களை அடையாளம் காண்பது என்கிற இத்திட்டத்தின் குறிக்கோளின்படியே தமிழக அரசு. HCL நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.   

        ‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓரங்கமாக HCL நிறுவனத்துடன் இணைந்து Tech Bee – Early Career Training Program. என்ற பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 2020-2021 மற்றும் 2021-2022 கல்வியாண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து, கணிதவியல், வணிகக் கணிதம் ஆகிய பாடங்களில் 60% க்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியளித்து அந்நிறுவனத்தில் பணிசெய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. இதற்கான பயிற்சித் தொகையை ஒரு லட்சத்தை அரசு அந்நிறுவனத்திற்கு வழங்குகிறது.

         6 மாதப் பயிற்சிக்குப் பிறகு மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். ஓராண்டுப் பயிற்சி முடிந்ததும் பணிநியமனம் வழங்கி ஆண்டுக்கு 1.7 லட்சம் முதல் 2.2 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்படுமாம். அதாவது மாத ஊதியம் ரூ.14,000 – 18,000 என்ற அளவிலிருக்கும். இது அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச மாத ஊதியத்தைவிட குறைவாகும்.  வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறேன் என்று அடித்தட்டுக் குழந்தைகளை மிகக்குறைந்த ஊதியத்தில் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்துவது மோசடியே.

        அந்நிறுவனப் பணிகளுக்குத் தேவையான திறன்கள் பயிற்றுவிக்கப்பட்டு 17 வயதிலேயே அவர்கள் பணியாளர்களாக மாற்றப்படுகின்றனர். ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும். பணியில் சேர்ந்த பிறகு மேல்படிப்பைத் தொடர நினைத்தால் சாஸ்த்ரா போன்ற 3 தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர்ந்து பகுதிநேரமாகப் படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்றும் சொல்கிறார்கள். அவர்கள் விரும்பும் படிப்பு மட்டுமல்ல; அரசு நிறுவனங்களில் படிப்பும் வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. இதுவரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் கடனில் படித்த நிலை மாறி, சொற்ப ஊதியத்தில் தனியார் ஊழியர்களாகி அந்த வருமானத்தையும் தனியார் கல்வி நிறுவனங்களிடம் அளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

        100 நாள் வேலைத் திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைக்கவில்லை என்று நிலவுடைமையாளர்கள் புலம்புகின்றனர். அதேசமயம் அவர்களுக்கு உரிய ஊதியத்தை பாலினப் பாகுபாடின்றி வழங்க முன்வருவதில்லை. வடநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு பல்வேறு பணிகளைச் செய்வது குறைவான ஊதியம் கொடுக்கலாம் என்கிற காரணம்தான். அதைப்போல நாட்டில் நிறைய பொறியியல் பட்டதாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய பணியும் ஊதியமும் தர எந்தப் பன்னாட்டு நிறுவனமும் விரும்புவதில்லை. கேட்டால் அவர்களுக்கு உரிய திறன்கள் இல்லை என்று சொல்வார்கள்.

            மொத்தத்தில் ஊதியம் குறைவாகக் கொடுக்க வேண்டும். எங்களுக்குத் தேவையான திறன்களை பொறியியல் அல்லாத பட்டம் பெற்றவர்கள் அல்லது பட்டயப்படிப்பு படித்தவர்களைக் கொண்டு செய்துகொள்கிறோம் என்பதே இத்தகைய நிறுவனங்களின் நிலைப்பாடு.  இந்த நிலையில் +2 அளவில் மாணவர்கள் கிடைத்தால் அவர்களுக்கு வேலை மிகவும் எளிதாகிவிடும். அந்தப் பணியை ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் நிறுவனங்களுக்கு ஆள் பிடித்துக் கொடுக்கும் பணியை தமிழக அரசே முன்நின்று செய்யப்போகிறது. வழிகாட்டுகிறோம் என்று சொல்லி ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தக் கூலியடிமைகளைப் போல அரசுப்பள்ளி மாணவர்களை அனுப்பி வைக்கப்போகிறது.

        இவர்களில் எத்தனைபேர் அந்தக் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிப்பைத் தொடர்வார்கள்? இந்தக் குறைவான ஊதியம் அவர்களது குடும்பத்தைக் காக்குமா, அல்லது மேற்படிப்புக்கு உதவுமா? இந்நிறுவனம் இவர்களை வேலையை விட்டு நீக்கினால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? பணி அனுபவத்தைக் கொண்டு அதே ஊதியத்தில் பிற நிறுவனங்களில் பணிவாய்ப்பு அமையுமா?  என எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் இதற்கான பதில்கள் யாரிடமும் இல்லை.

       அடித்தட்டு மக்களின் குழந்தைகளை வருமானத்திற்கு வழி செய்கிறோம் என்ற பெயரில் அவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் தட்டிப்பறித்து அடிநிலைப் பணியாளர்களாக மாற்றும் போக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு இளங்கலைப் பட்டத்தை முடிக்காமல் மாணவர்களைப் பணியாளராக மாற்றினால் ஆகும் விளைவுகளை யாரும் கணக்கில் கொள்ளவில்லை. வருமானம் வருகிறது என்றால் குழந்தைத் தொழிலாளர் முறையை ஆதரிக்க இயலுமா? இது ஒன்றிய அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு நிகரான திட்டமே. ஒரே வேறுபாடு என்னவென்றால் அங்கு ஒன்றிய அரசு அவர்களை பாதியில் கழற்றிவிடுகிறது; இங்கு தனியார் நிறுவனம் அப்பணியைச் செய்யப் போகிறது, அவ்வளவுதான்.

        மாணவர்களின் விருப்பார்வத்திற்கும் அவர்களது உயர்கல்விக்கும் உதவுவதாகச் சொல்லி திட்டம் தீட்டினாலும் அதன் பயன் முழுக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதாயம் பெரும் வகையில் அமைவது கேலிக்கூத்தாகும். இதனால்தான் மாணவர்களின் உயர்கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் தனித்தனியான திட்டங்கள் இருக்க வேண்டும். அரசு இத்தனை கல்வி நிறுவனங்களை வைத்துக் கொண்டு தனியார் கம்பெனிகளுக்குக் குழந்தைகளை அனுப்ப குத்தகை ஒப்பந்தம் போடக்கூடாது. உயர்கல்வி நிறுவனங்களில் அவர்களைப் படிக்க வைத்து, தகுதி, திறமையை மேம்படுத்தி அதன்பிறகு பணிவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்.

      +2 அளவிலேயே இவர்கள் வேலைக்குச் செல்வதால் பலர் பட்டம் பெற வாய்ப்பில்லை. எனவே இதைவிட நல்ல, அதிக ஊதியம் பெறும் பணிகள் கிடைக்காமல் போகும். அமெரிக்கா போன்ற அயல்நாடுகளின் பணி வாய்ப்பும் கிடைக்காது. மொத்தத்தில் திறன்வளர்ப்பு என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அடிமைகளை உற்பத்தி செய்யும் திட்டமாகவே இது இருக்கும். இதே அனைத்து நிறுவனங்களுக்கும் +2 அளவிலேயே ஊழியர்களை உருவாக்கிவிடலாம். பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை இன்னும் அதிகமாகும்.

      ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக தமிழகக் கல்விக்கொள்கை உருவாக்க குழு ஒன்று அமைத்துள்ளது. இருப்பினும் ஒன்றியக் கொள்கையின் அனைத்து அம்சங்களும் தனித்தனி திட்டங்களாக செயல்பாட்டுக்கு வருகின்றன. முன்னர் இல்லம் தேடிக் கல்வி; தற்போது தகைசால் பள்ளிகள், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் என அணிவகுக்கின்றன. தமிழகக் கல்விக்கொள்கைக் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ரகசியமாகவும் பல்வேறு தணிக்கைகளுடனும் நடக்கின்றன. கல்வியின் எதிர்காலம் ஒன்றிய, மாநில அரசுகளால் இருண்டு கிடக்கிறது.        

நன்றி: புதிய விடியல் (மாதமிருமுறை) நவம்பர் 16-30, 2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக