புதன், ஆகஸ்ட் 31, 2022

குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்

குழந்தைகளுக்கு எழுதுதலும் வரலாற்றைச் சுருக்கமாக அறிமுகம் செய்தலும்

மு.சிவகுருநாதன்



 

           குழந்தைகளுக்கு எழுதுவதும் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லுவதும் மிகவும் சிக்கலானது. அவற்றை இந்த ‘முன்னோடிகள்’ நூலில் திறம்பட கையாண்டுள்ளார் புலவர் அ.ப.பாலையன். 30 ஆளுமைகள் பற்றிய எளிய அறிமுகத்தை சுமார் 100 பக்கங்களில் வடித்துள்ளதன் வழி இதனை அறியலாம். தமிழ் தழைக்கவும் நாடு மேன்மையடையும் பாடுபட்ட சான்றோர்களை இளம் வயதினருக்கு அறிமுகம் செய்வது என்ற நோக்கத்தினடிப்படையில் இவை எழுதப்பட்டிருப்பினும் அனைவரும் வாசிக்க ஏற்றதாகவே உள்ளது.

         இடைக்காலத்தில் பட்டி மண்டங்கள் சிறந்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால் இன்று மொழியை, இலக்கியத்தைச் சிதைப்பதாகவே இவை இருக்கின்றன. இந்த வாய்வீச்சுக்காரர்கள் வாய்க்கு வந்தபடி ஏதேனும் சொல்லிச் செல்வார்கள். அவற்றிற்கான ஆதாரங்கள் எங்கும் கிடைக்காது. இதழ்கள் வெளியிடும் பொங்கல், தீபாவளி மலர்களில் கொஞ்சமாகவாவது இலக்கியம் இருக்கும். காட்சியூடகங்கள் இம்மாதிரியான வாய்வீச்சுகளால் நிரம்புகின்றன.

        “கடன்பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்”, என்ற வரி கம்பரின் வரியாக இவர்களைப் போன்றவர்களால் எடுத்தாளப்படும். ஆனால் இந்த வரிகள் கம்பராமாயணத்தில் காணக் கிடைக்காது.

“கடன்கொண்ட நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்!”,

          என்ற வரி சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய இராமாயணக் கீர்த்தனைகளில் இருக்கிறது. அதையும் சொற்களை மாற்றி எழுதியவரை மாற்றிக் குளறுபடி செய்யும் போக்கு இவர்களிடம் மிகுந்திருக்கிறது. இன்று இவர்களது இடத்தை பெருமளவு ‘வாட்ஸ் அப்’ கைப்பற்றியுள்ளது. இதில் பகிரப்படும் செய்திகளை உண்மையென நம்பும் பெருங்கூட்டம் இருப்பதுதான் வேதனை.

       பெருந்தலைவர் காமராசர் தற்போது கல்விப்புலத்தில் அதிகம் பேசப்படக்கூடிய ஆளுமையாக இருக்கிறார். முழுக்கவும் தனியார்மயத்தில் சிக்கியிருக்கும் கல்வியில் இன்று காமராசரைப் பேசுதல் என்பது பொருளற்ற ஒன்று. இருப்பினும் அவ்வாறு பேசுபவர்கள் அவரைப் படிக்காத மேதை என்றும் பள்ளிக்கூடம் செல்லாதவர் என்றெல்லாம் புலம்பித் திரிகின்றனர். இந்நூல் அவர் ஆறாம் வகுப்பில் இடைநின்றவர் என்பதைத் தெரிவிப்பது பாராட்டிற்குரியது.

        எங்கள் காலங்களில் (1990களில்) இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு +2 (12 ஆம் வகுப்பு) தகுதியாக நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு 1980களில் பத்தாம் வகுப்புதான் தகுதியாகக் கொள்ளப்பட்டது. எனது தந்தையார் காலத்தில் (1950கள்) எட்டாம் வகுப்புத் தேர்ச்சியே தகுதியாக இருந்தது. 5 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களும் அன்று ஆசிரியராகலாம். அவர்கள் இளநிலை ஆசிரியர்கள் (Higher Grade Teachers) என்றழைக்கப்பட்டனர். இதை எடுத்துக்காட்டாகக் கொண்டால் அன்று காமராசர் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றும் அளவிற்கான தகுதியைப் பெற்றிருந்தார். காவல்துறை போன்ற இதர பணிகளுக்கும் அதுவும் அதைவிட குறைந்த படிப்பும் கூடத்  தகுதியாக இருந்தது.

      அயோத்திதாசரைப் போல அம்பேத்கரும் தனது ஆசிரியர் பெயரை தனக்கு வைத்துக் கொண்டார் என்ற கதை நீண்ட நாளாக உலவி வருகிறது. இதுவும் உணமையல்ல  என்பதை உரிய ஆதாரங்களுடன்   ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு’ என்ற பெயரில் தோழர் யாக்கன் சிறிய நூலொன்றை எழுதியுள்ளார். (கலகம் வெளியீடு: ஜூலை 2018)

       அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் தனஞ்செய் கீர். இவர் அம்பேத்கருக்கு மட்டுமல்ல, சாவர்க்கர் உள்ளிட்ட மராட்டிய மண்ணின் மைந்தர்கள் பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். இதை அடிப்படையாகக் கொண்டுதான் அம்பேத்கரின் வரலாறு இதுகாறும் சொல்லப்பட்டு வருகிறது. 

         சதாராவில் இரு பிராமணர்கள் அம்பேத்கருக்கு உதவியதாகவும் அவர்களின் ஒருவர், அம்பேட்கர் என்ற குடும்பப்பெயர் கொண்ட ஒருவர், பீமா ராவ் ராம்ஜி என்ற பெயருக்குப் பின்னாலிலிருந்த ‘அம்பவடேகர்’ என்ற குடும்பப்பெயரை நீக்கி தனது குடும்பப் பெயரான ‘அம்பேத்கர்’ என மாற்றி எழுதியதாகக் தனஞ்செய் கீர் குறிப்பிடுகிறார்.  அடுத்து அம்பேத்கர் வரலாற்றை எழுதிய டி.சி.அஹிர் இந்த பெயர் மாற்றத்தைக் குறிக்கிறார். ஆனால் பிராமண ஆசிரியர் என்பதற்குப் பதிலாக ஆசிரியர் என்று மட்டும் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. 

      அம்பேத்கர் மறைவிற்குப்பின் அவரது எழுத்துகளைத் தேடித் தொகுத்த அறிஞர் வசந்த் மூன் எழுத்துகளில், அம்பேத்கர் என்ற குடும்பப்பெயர் கொண்ட பார்ப்பன ஆசிரியர் பெயர் மாற்றம் செய்ததையும் 1927 அம்பேத்கர் அவரைச் சந்தித்தாகவும் அவர் எழுதிய எழுதிய கடிதம் ஒன்றை பாதுகாத்ததாகவும் குறிப்பு வருகிறது. ஆனால் அக்கடிதம் எங்கும் கிடைக்கவில்லை. 

           இந்த வரலாறுகளைக் கொண்டுதான் அம்பேத்கரை நாம் அறிந்து வந்திருக்கிறோம்; இவைகள்தான் நமக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது. 1900 சதாரா பள்ளியில் 9 வது வயதில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டபோது பீவா ராம்ஜி ஆம்பேட்கர் என்று ‘மோடி’ எழுத்தில் கையெழுத்திட்டுள்ளார். பிறந்த நாள் 14.04.1891 என்று பதிவாகியுள்ளது. தபோலில் இருந்த பள்ளியில் ஏற்கனவே இரண்டாண்டுகள் படித்திருந்ததால் அவரால் மோடி எழுத்தில் கையெழுத்திட முடிந்திருக்கிறது என்ற விவரங்கள் நூலில் (பக்.38) விளக்கப்படுகின்றன. (‘மோடி’ என்பது தேவநாகரி வரிவடிவத்தைச் சுருக்கி, மராத்தி மொழியை எழுதிய வடிவம். தஞ்சை மராட்டியர்களின் சரஸ்வதி மஹால் நூலகத்தில் மராட்டிய மோடி ஆவணங்கள் இருக்கின்றன.) 

       பள்ளியில் சேரும்போது பெயர்ப்பதிவு மற்றும் கையெழுத்தில் ஆம்பேட்கர் என்று இருக்கும்போது பிராமண ஆசிரியர் மாற்றினார் என்பதெல்லாம் கட்டுகதையன்றி வேறென்ன?  Surname என்பது சாதிப்பெயர் அல்லது பட்டத்தைக் குறிக்கும் ஒன்றாகும். அம்பேத்கர் என்ற பட்டப்பெயர் பிராமணர்க்கு இல்லை என்பதும் இதை வலுவாக்குகிறது. 

        “சி.பி.கேர்மோட் என்பவர் 14 தொகுதிகளில் மிக விரிவாக அம்பேத்கரின் வாழ்வை மராத்தி மொழியில் தொகுத்துள்ளார். 1968 தொடங்கி 2000 வரை ஒவ்வொரு தொகுப்பாக அவை வெளியிடப்பட்டன. இன்னும் அவை ஆங்கிலத்தில் பெயர்க்கப்படவில்லை. நாம் அறிந்திராத பல செய்திகள் அம்பேத்கர் குறித்து அவற்றில் கிடைப்பதாகத் தெரிகிறது. கெய்ல் ஒம்வேத், கிறிஸ்டோப் ஜேப்ரிலோ முதலான அம்பேத்கரிய ஆய்வாளர்கள் சமீபத்தில் எழுதியுள்ள (Ambedkar, Towards an Enlightened India, 2004; Dr. Ambedkar and untouchability, 2005) சில நூற்களிலும், வேறு சில கட்டுரைகளிலும் (S.M.Gaikwad, Ambedkar and Indian Nationalism, EPW, March 7, 1998) நமக்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. அவை அம்பேத்கர் குறித்த வேறு பல பரிமாணங்களை வெளிக்கொணர்கின்றன”, (பக்.216, பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் – அ.மார்க்ஸ், உயிர்மை வெளியீடு, ஜூன் 2016 மற்றும் பக்.13, அம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள் – அ.மார்க்ஸ், புலம் வெளியீடு, டிச. 2009) 

         பீமாராவ் என்று பெற்றோர் பெயரிடல், ‘பீவா’ என செல்லமாக அழைத்தல், எல்பின்ஸ்டன் கல்லூரியில் பயிலும்போது எழுதிய கடிதம் ஒன்றில் அம்பேட்கர் பீவ்ரன் ராம்ஜி என்றும் கையெழுத்திடுதல், கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் “என் முழுப்பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். என் தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர்”, (பக்.54) என்று குறிப்பிடும் ஆதாரங்களும் நூலில் உள்ளன. நியூயார்க் தூதரின் பரிந்துரைக் கடிதத்தில் பீமாராவ் என்ற பீவ்ரம் அம்பேத்கர் என்றும் குறிக்கப்படுகிறது. லண்டன் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் நிறுவனத்தில் அவர் கைப்பட எழுதிய விண்ணப்பத்தில் (1916) அம்பேத்கர் பீமாராவ் ஆர் (Ambedkar Bhimarao R) என்று எழுதியுள்ளார். நூற்றாண்டு நினைவில் (2016) இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. (பக்.64) 

  

        விடுபட்ட முன்னோடிகள் பலரை ஆசிரியர் தொடர்ந்து அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொகுப்பில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இல்லாதது குறையாக உள்ளது. மேலும் இந்நூலில் உள்ள 30 ஆளுமைகளில் நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகிய இருவர் மட்டுமே கல்விப்புலங்களில் (பாடநூல்களில்)  புழங்காத பெயர்கள் ஆகும். பிறர் ஏதேனும் ஓரிடத்தில் சிறு குறிப்பாகவாவது அறிமுகம் செய்யப்படுகின்றனர். விடுதலைப்போராட்ட வீரரும் மக்கள் தொண்டருமான பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி போன்றவர்களை பாடநூல்கள் என்றுமே கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்களையும் அறிமுகம் செய்யும் இரண்டாம் பகுதி விரைவில் வெளியாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

(13/08/2022 திருவாரூரில் ‘பொம்மி’ சிறுவர் இதழ்  மற்றும் பதிப்பகம் ஏற்பாடு செய்த அ.ப.பாலையனின் ‘முன்னோடிகள்’ நூல் வெளியீட்டு விழா உரைக்கான குறிப்புகள்.) 

 


 

நூல் விவரங்கள்:

முன்னோடிகள் – அ.ப.பாலையன்

வெளியீடு:

பொம்மி பதிப்பகம்,

52/13, ஏ.என்.ஆர். காம்ப்ளக்ஸ்,

தெற்கு வீதி,

திருவாரூர் – 610001.

பேசி: 04366 244345

          9750697943

சனி, ஆகஸ்ட் 20, 2022

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்…

 

பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில்

மு.சிவகுருநாதன்

        104 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் தங்கியிருந்த இடம் மேலநாகை என்னும் கிராமம்.  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் இச்சிற்றூர் உள்ளது.

 


    அங்கு  தியான மண்டபம் ஒன்றைக்  கட்டியிருக்கிறார்கள்.


 

    27.05.2018  அன்று  மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் ஒருமுறை  மேலநாகை சென்று வந்தேன். அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்களும் இங்கே உள்ளன. 


 

       20/08/2022 அன்று  கவிநிலா, கயல்நிலா மற்றும் நிலாவின் சித்தி மகள்  சாய்மகி ஆகியோர் பாரதி நினைவு மண்டபம் சென்றோம். 


 

பாரதி நினைவாக கயல்நிலா "ஓடிவிளையாடு பாப்பா" பாடலைப் பாடினார்.

சில படமெடுத்துக் கொண்டு திரும்பினோம்.

இத்துடன் முந்தைய பதிவிலிருந்து

பத்தரிக்கையாளர் பாரதி

          பத்தரிக்கையாளர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஸ்காட்லாந்து யாடுக்கு நிகரான தமிழக காவல்துறைக்கு கழிசடைகளைக் கைது செய்யத் துப்பில்லை.

      இன்றுள்ள நவீன வசதிகள் முதலாளித்துவ இதழியலில் பல புதிய திறப்புகளை உண்டு பண்ணியிருப்பினும் அதன் மறுபுறம் கோரமாகவே உள்ளது.


 

         முதலாளித்துவ இதழியலுக்கு முதல்தான் முக்கியம். அது தன் பணியாளர்களைப் பற்றிக்கூட அது கவலைப் படுவதில்லை.

      பாரதி பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி. கவிஞனாக மட்டுமல்ல பத்தரிக்கையாளராகவும் மகத்தான பணி செய்தவர். பிரித்தானிய காலனியாதிக்கத்தில் பத்தரிக்கையாளர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளைச் சற்றுக் கூடுதலான, முற்றிலும் வேறு வகையான தொந்தரவுகளை இன்று நேர்கொள்ள வேண்டியுள்ளது.


 

         100 ஆண்டுகளுக்கு முன்பு 1918 இல் பாரதியின் தலைமறைவு வாழ்க்கையில் 10 நாள்கள் இடம்பெற்றது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலநாகை என்னும் சிற்றூர்.

     அங்கு ஒரு தியான மண்டபம் கட்டியிருக்கிறார்கள்.

       27.05.2018 அன்று  வெள்ளி மாலை எனது மூத்த மகள் கவிநிலாவுடன் மேலநாகை சென்று வந்தேன்.

 

27/05/2018