மதுவிலக்கு:
விரிவான பார்வையும் ஒருங்கிணைந்த திட்டங்களும் தேவை!
மு.சிவகுருநாதன்
பண்டைய காலம் தொடங்கி மனிதர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாக மது உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் தென்னங்கள், பனங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியது பற்றிய குறிப்புகளும் வேதகாலத்தில் சோமபானம், சுராபானம் அருந்தித் திளைத்ததும் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. பல்வேறு வகைகளில் தயாராகும் இயற்கை மது பழந்தமிழர்களின் கலாச்சாரத்தின் ஓரங்கமாக இருந்தது. தெளிந்த கள் தேறல் எனப்பட்டது. தென்னை மற்றும் பனை மரங்களில் வடிக்கப்படும் கள் மட்டுமின்றி நறவு, தோப்பி, அரியல், வேரி, காந்தாரம், மட்டு, பிழி உள்ளிட்ட பல்வேறு மதுவகைகள் அந்தந்த வட்டாரத் தன்மையுடன் பயன்பாட்டில் இருந்தது. அவ்வை அதியமானுடன் கள்ளுண்ட காட்சிகள் சங்கப்பாடல்களில் விரியும். தமிழின் தொன்மை, பெருமை பேசுபவர்கள்கூட இன்று இவற்றைக் கண்டு கொள்வதில்லை.
தொல்குடி சமூகங்களில் பூக்கள், கனிகள், விதைகள் போன்றவற்றைக் கொண்டு மதுவைத் தயாரிக்கும் மரபார்ந்த அறிவு மிகுதி. இன்று நவீன வாழ்முறை அவர்களையும் அயல்நாட்டு மதுவுக்கு அடிமைப்படுத்தியுள்ளதையும் காணமுடிகிறது. ஐரோப்பியர்களால் கொண்டுவரப்பட்ட மது “இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மது” (Indian Made Foreign Liquor) என்கிற விசித்திரப் பெயருடன் நம்மை ஆட்கொள்ளும் ஒன்றாக மாறிப்போனது.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நிலவும் காலநிலைக்கும் இந்திய மக்களின் பொருளாதார நிலைமைக்கும் மது ஒத்துவராது என்கிற எண்ணம் மதுவிலக்கை வலியுறுத்துவோரிடம் வெளிப்பட்ட கருத்தாகும். இதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் பாரம்பரிய மதுவையும் அயல்நாட்டு மதுவையும் ஒரே அளவுகோல் கொண்டு அளப்பது சரியாக இருக்காது. மரபான குடிக் கலாச்சாரம் இன்று இழிவானதாகக் கருதப்படுவதற்கும் காலனிய மதிப்பீடுகளும் ஒரு காரணம். பாரம்பரியமாக தாவரங்களிலிருந்து மது வடிக்கும் முறையை சட்டவிரோதச் செயலாக மாற்றி அவற்றைத் தடை செய்துவிட்டு அயல் மதுவுக்கு (IMFL) சிவப்புக் கம்பளம் விரிப்பதன் வணிகமய, முதலாளித்துவச் செயல்பாட்டையும் நாம் விளங்கிக் கொள்வது அவசியம்.
இந்தியாவில் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டதன் வாயிலாகவும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஏற்பட்ட படிப்பினைகள் மூலமும் இந்திய மக்களின் விடுதலைக்கு மது தடையாக இருக்கும் என்பதை காந்தி உணர்ந்தார். அவரது நிர்மாணத்திட்டங்களில் மதுவிலக்கு முதன்மையிடம் பிடித்தது. 1937இல் சென்னை மாகாண காங்கிரஸ் அரசு ராஜாஜி தலைமையில் அமைந்தபோது மதுவிலக்கு முதன்முதலில் அமலானது. இதற்காகவே வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜி நினைவு கூரப்பட்டார். ஆனால் அன்றைய சென்னை மாகாணத்தில் சேலம், வட ஆர்க்காடு, சித்தூர், கடப்பா ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் மதுவிலக்குச் சட்டம்-1937 நடைமுறையில் இருந்தது. 1948இல் ஓமந்தூர் ராமசாமி முதலமைச்சரானபோது தமிழகமெங்கும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதுவே பெரிய சாதனையாகும். வருவாய் இழப்பு, சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் போன்றவற்றால் பிறமாநிலங்கள் மதுவிலக்கில் தள்ளாடியபோது தமிழ்நாடு மட்டும் நீண்டகாலம் உறுதியாக இருந்து தாக்குப் பிடித்தது. திராவிட இயக்க வரலாற்றில் மதுவிலக்கில் உறுதியாக இருந்தவர் அண்ணா மட்டுமே. மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெ.ஜெயலலிதா என அனைவரும் மதுவிலக்குக் கொள்கையைக் கைவிட்டவர்கள்.
1971இல் மு.கருணாநிதி முதல்வராக இருந்தபோது தற்காலிகமாக மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. சில ஆண்டுகளுக்குப்பிறகு 1973இல் கள்ளுக்கடைகளையும் 1974இல் சாராயக்கடைகளையும் மூட உத்தரவிட்டார். தனது அன்னை படத்தின் மீது சத்தியம் செய்து மதுவிலக்கு முழக்கமிட்ட எம்.ஜி.ஆர்., 1981இல் கள்ளச்சாராயச் சாவுகளைக் காரணம் காட்டி மீண்டும் மதுக்கடைகளைத் திறந்து மதுவிலக்கிற்கு சாவுமணி அடித்தார். கள், சாராயக் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. தனியார் மது ஆலைகள் பெருகின. ஆலை அதிபர்கள் ஆட்சியதிகாரத்துடன் நெருக்கமாயினர். இவர்கள் கட்சிக்காரர்களாகவும் சில நேரங்களில் பிநாமிகளாகவும் செயல்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரை மதுபான முதலாளித்துவமே அரசை இயக்கும் கருவியாக மாறிப்போனது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய மாநில அரசு கள்ளச்சாராயம் ஆறாகப் பெருகி ஓடுவதைக் கண்டும் காணாமல் செயல்பட்டது. இதிலும் அரசியல், ஆளும்கட்சி தலையீடுகள் இருந்தன.
1983 ஜூலையில் டாஸ்மாக், (TASMAC - Tamil Nadu State Marketing Corporation) என்னும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு இது மதுவை மொத்த விற்பனை செய்யும் நிறுவனமாகவும் 2003இல் நேரடியாக சில்லறை விற்பனையிலும் கால் பதித்தது. 1989இல் மு.கருணாநிதி மலிவுவிலை மதுவை அறிமுகம் செய்தார். அடுத்து ஜெ.ஜெயலலிதா அதை ரத்து செய்தார். ஆனாலும் இவர்களது கொள்கைகளில் பெரிய மாற்றம் இல்லை. அரசே மதுக்கடைகளை நடத்தலாம் என்கிற மு.கருணாநிதியின் கருத்துக்கேற்ப ஜெ.ஜெயலலிதா மாநிலமெங்கும் பல்லாயிரக்கணக்கில் கடைகளைத் திறந்து சில்லறை விற்பனையில் அரசை நேரடியாகக் களமிறங்கினார்.
சூதாட்டம் என்பதால் லாட்டரிச் சீட்டுக்களைத் தடை செய்த, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைச் சட்டம் கொண்டு வந்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. கல்வி, சுகாதாரம், சமூக நீதி போன்றவற்றில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகச் செயல்படும் தமிழ்நாடு அரசு 2003இல் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு மேலாக மது விற்பனையை ஏற்று நடத்திவருவது (டாஸ்மாக்) வருந்தத்தக்க நிகழ்வாகும். எனவே வேறு மாநிலத்தில் மதுவிலக்கு பற்றிப் பேசுவதற்கும் இங்கும் வேறுபாடு உண்டு. குடியை இழிவாகக் கட்டமைக்கும் அரசே மது விற்பனை செய்வதுதான் இங்கு நகை முரண். டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மது விற்பனையை இலக்கு வைத்து நடத்துவதின் பின்னாலுள்ள மது ஆலை முதலாளிகளின் வணிக நலன்கள் இங்கு கவனப்படுத்தவேண்டிய அம்சமாகும். மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்காகவும் மது ஆலை அதிபர்களின் நன்கொடைகளுக்காகவும் அரசு இத்தகைய நிலைப்பாடு எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. கடைகள் தனியாரிடம் இருந்தால் தரமற்ற இந்த மதுவகைகளை அவர்கள் கொள்முதல் செய்யமாட்டார்கள் என்பதால் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபடுகிறது என்றும் கருத இடமுண்டு. தமிழகத்தில் விற்பனையாகும் ரகங்களில் வெளிமாநிலங்களுக்கு எவை, எவ்வளவு ஏற்றுமதியாகிறது என்கிற புள்ளிவிவரங்களைத் திரட்டினால் உண்மைநிலை தெரியவரும்.
வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டையொட்டி தமிழ்நாட்டில் மதுவிலக்கு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாகவும் பலமுறை இத்தகைய பேச்சுகள் எழுந்தன. குறிப்பாக ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுவிலக்கு முழக்கங்கள் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு நம் காதைக் கிழிக்கும். தேர்தல் முடிந்ததும் இந்தப் புரட்சியாளர்கள் அமைதியாகிவிடுவார்கள். மதுவிலக்கிற்கு போராட்டங்களும் இயக்கமும் நடத்திய ‘மக்கள் அதிகாரம்’ போன்ற அமைப்புகள்கூட தற்போது ஏதும் பேசுவதில்லை.
2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக வைகோவின் தாயார் கலிங்கப்பட்டியில் நடத்திய மதுக்கடை மறியல் (2015), மதுவுக்கு எதிரான போராட்டத்தில் சசிபெருமாள் மரணம் (2015), ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் டாஸ்மார்க் மறியல் (2016) போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். “மூடு டாஸ்மாக்கை மூடு”, என்ற கோவனின் பாடல் பிரபலமானது. தேர்தல் நேரத்தில் எதிரொலிக்கும் இத்தகைய கோரிக்கைகள் பின்னாட்களில் காணாமற் போய்விடுகின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கு எதிராக தி.மு.க.வும் போராடியது. 2016 தேர்தல் அறிக்கையில் முழு மதுவிலக்கு என்று சொன்ன தி.மு.க., 2021 தேர்தலில் மதுவிலக்கு குறித்து பெரிய அளவில் பேசவில்லை. 2026இல் தி.மு.க. இவ்வாறு பொய்யான உறுதிமொழி அளித்து தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என தொல்.திருமாவளவன் விரும்புகிறார். தொடர்ந்து மக்களை ஏமாற்றும் இந்த உத்தி குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. படிப்படியாக மதுக்கடைகள் குறைப்பு என்கிற உறுதிமொழிகளை அ.தி.மு.க., தி.மு.க. இருவரும் அமல்படுத்த விரும்பியதில்லை. 2023 ஜூனில் 4829 கடைகளில் 500 கடைகள் மூடப்பட்டன. 2024இல் கடைகள் மூடுவது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
சிற்றூர்கள்தோறும் பல்லாயிரக்கணக்கில் கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் அண்டாமலிருந்த பலரை முதல் தலைமுறைக் குடியர்களாக மாற்றிய பெருமை தமிழக அரசின் டாஸ்மாக்கைச் சாரும். பள்ளி மாணவர்களுக்குக் கூட எளிதில் மது கிடைக்கும் வாய்ப்பை இவர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று நெடுஞ்சாலைக் கடைகளைக்கூட இவர்கள் மூடியதில்லை. நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் அவைகள் நெடுஞ்சாலைகளே அல்ல என்றனர். படிப்படியாக மதுக்கடைகளை மூடுகிறோம் என்று சொல்லி வேண்டா வெறுப்பாக விற்பனை குறைந்த கடைகளை மட்டுமே மூடிக் கணக்குக் காட்டுகின்றனர். மக்கள் எதிர்ப்பையும் மீறி மதுக்கடைகள் காவல்துறை பாதுகாப்போடு இயங்கி வருகின்றன. அரசு அனுமதி பெறாத பார்கள் அரசியல்வாதிகள் உதவியோடு நடத்தப்படுகின்றன. கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளதே தவிர முற்றாக ஒழிக்கப்படவில்லை. பண்ருட்டி (2001), கர்நாடக எல்லையோரம் (2008), மரக்காணம் (2023), கள்ளக்குறிச்சி (2024) போன்ற இடங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் இவற்றின் தீவிரத்தை உணர்த்துகின்றன. மிகக் குறைந்த அடக்கவிலையில் தயாராகும் மதுவை பலமடங்கு விலையுயர்த்தி விற்பனை செய்வதால் சாமன்யர்கள் கள்ள மதுவை நாடும் நிலை ஏற்படுகிறது.
முழு (பூரண) மதுவிலக்கு எங்கும் இல்லை. அப்படி இருப்பதான பாவனை மட்டுமே நிலவுகிறது. மதுவிலக்கு அமலில் உள்ளதாகச் சொல்லப்படும் குஜராத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர்கள் மதுவருந்த அனுமதி உண்டு. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் மதுவைக் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதை ஊடகங்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன. பீகாரிலும் இதே நிலைதான்.
2023-2024 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் டாஸ்மாக் மது வருவாய் ரூ. 45,855.67 கோடி. இதில் மதிப்புக் கூட்டு வரி ரூ. 35,081.39 கோடி; கலால் வரி ரூ. 10,774.28 கோடி. (பெட்ரோல், டீசலைப் போன்று மதுபானமும் சரக்கு மற்றும் சேவை வரிக் கட்டமைப்பில் (GST) வராது.) இது சென்ற நிதியாண்டைவிட ரூ. 1734.54 கோடி அதிகமாகும். இந்த வருவாயை ஆண்டுதோறும் அதிகரிப்பதும் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகளில் விற்பனையைக் கூட்டுவதும் அரசு மற்றும் தொடர்புடைய துறையின் பணியாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் பள்ளித் தேர்ச்சி விகிதத்தைப்போல டாஸ்மாக் விற்பனைக்கும் இலக்கு வைக்கவேண்டிய அவலநிலை எழுகிறது.
உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகளை விற்கும் உரிமத்தை (Foreign Liquors License – FL1) சில்லறை மற்றும் மொத்த விற்பனை ஏகபோகமாக டாஸ்மாக் கையில் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் 4829 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் FL2 உரிமம் பெற்ற 546 மன்றங்களும் (FL2), FL3 உரிமம் பெற்ற 854 ஓட்டல்களும் உள்ளன. இதிலும் பல்வேறு விதிமீறல்கள் உள்ளன.
மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறத்தல் என்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. அந்த நிலையைத் தாண்டிவிட்டதை தற்போது அவதானிக்க முடிகிறது. நீண்டகாலப் போதைப் பயன்பாடு மதுப்பிரியர்களை தீவிரப் போதை அடிமையாக்கியுள்ளது. எனவே மென்போதைகள் எடுபடாது என்கிற நிலையை எட்டியுள்ள நிலையைக் காணமுடிகிறது. கள் தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே அதன் போதையின் அளவை அதிகரிக்க மாத்திரைகள் கலக்கப்பட்டதும் உண்டு. தரமற்ற மதுவகைகளின் போதையின் அளவை அதிகரிக்க தண்ணீர் சேர்க்காமல் அப்படியே ‘ராவாக’ச் சாப்பிடும் மதுப்பிரியர்கள் உண்டு. இவர்களது உடலில் எத்தகைய பாதிப்பை உண்டாக்கும் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை. இந்தப் போதையைத் தாண்டும் நோக்கத்தில் பலர் கஞ்சா போன்ற இதரப் போதைப் பொருள்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் உயிரிழப்புகள், சாலை விபத்துகள், குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதை காணமுடிகிறது.
தமிழ்நாட்டில் தயாராகும் மதுவின் தரம் குறித்த கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இவற்றினால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டோர், இறந்தோர் பற்றிய புள்ளிவிவரங்கள் அரசிடம் இல்லை. எல்லா வகையான மதுவும் கிடைக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைவிட ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும் என்பதே உண்மை. அங்குள்ள குடிக்கலாச்சாரம் வேறு; இங்கு முற்றிலும் வேறாக உள்ளது. மதுப்பிரியர்களில் பலர் குடிநோயாளிகளாக மாறியுள்ளனர். இவர்களுக்குக் குடியை மறக்கடிக்கும் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் இடம் போதாது. கொரோனா காலத்தில் நமது பொது சுகாதாரக் கட்டமைப்பின் போதாமைகளை உணர்ந்தோம். இருக்கின்ற கட்டமைப்பில் குடிநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வசதிகள் போதாது. ஒன்றியம் அல்லது வட்டார அளவில் அரசின் குடி சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
போதைப்பொருள் ஒழிப்புப் பரப்புரைகளில் அரசு மது குறித்து பேச மறுக்கிறது. மதுவை அரசே விற்பனை செய்வதால் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு என்பதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. மதுவின் நுகர்வு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன்மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாயும் கூடுகிறது. மதுவைத் தாண்டி பிற போதைப்போருள்களின் பயன்பாடு, சட்டவிரோத விற்பனை போன்றவை அதிகரித்துள்ளன. ஒன்றிய அரசும் மாநில அரசும் போதைப்பொருள் விவகாரத்தில் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டு தமது கடமையையும் பொறுப்பையும் தட்டிக் கழிக்கின்றன.
அரசும் மது ஆதரவாளர்களும் மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்கின்றனர். கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையை வைத்திருக்கும் அரசு மது விலக்கை அமல்செய்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்று சொல்கிறது. டாஸ்மாக்கில் நடைபெறும் கலப்படங்களையோ கடை திறப்பதற்கு முன்பும் பின்பும் மற்றும் விடுமுறை நாட்களில் நடைபெறும் மது விற்பனையையும் சட்ட விரோத பார்களையும் அரசும் காவல்துறையும் ஒருவகையில் கண்டும் காணாததுபோல் செயல்படுகின்றன.
அரசு மது விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்தை பொதுக் கருத்தாகத் திணிக்க முயல்கிறது. இதன் மூலம் அரசியல்வாதிகளும் சாராய வியாபாரிகளும் பிநாமிகளும் கொள்ளை லாபமடைகின்றனர். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதே அரசின் நிலை. இந்த நிலை நீடித்தால்தான் தேர்தலில் மதுவும் பிரியாணியும் அல்லது சிறிய தொகையும் கொடுத்து வாக்குகளைப் பெறமுடியும் என்று அனைத்துக் கட்சியினரும் திடமாக நம்புகின்றனர். எனவே அரசு வித்தாலும் தனியார் வித்தாலும் மது வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. அரசே விற்பனை செய்தால் அவர்களுக்கு நிறைய சாதகமிருக்கிறது.
பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புகள் ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் மதுபானக்கடைகள் நிறைய திறக்கப்படுகின்றன. இவற்றை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அரசுகள் இவைகளைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த இடங்களில் கடைகள் திறப்பது ஒருபுறமிருக்கட்டும். 18 வயதிற்கு குறைந்த பள்ளி மாணவர்களுக்கு மது வகைகளை விற்பனை செய்யாதிருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனை தரும் செய்தி. ஒவ்வொரு ஊராட்சிதோறும் மதுக்கடைகள் திறப்பதை அரசு குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது புலனாகிறது. ஆட்சி மாறினாலும் மதுக்கொள்கைகள் யாதொரு மாற்றமும் அடைவதில்லை.
கள்ளை அனுமதிப்பது என்கிற முடிவு ஒரு தீர்வாக இருக்கமுடியும். அரசு கள்ளுக்கடைகளைத் திறப்பது என்று இதற்கு அர்த்தமல்ல. கள் விற்பனையில் வணிகமயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் அளவில் கள்ளை உற்பத்தி செய்து அங்கேயே விற்பனை செய்யும் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அப்போதுதான் கள்ளில் கலப்படம் செய்தல், போதையூட்டிகளைச் சேர்த்தல் போன்றவை தடுக்கப்படும். இந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்குமென இன்றைய சூழலில் எதிர்பார்க்கமுடியவில்லை. மது விலக்கு வேண்டுமென்று போராடும் அமைப்புகள், இயக்கங்கள் தொலைநோக்கோடு விரிந்த தளத்தில் இதுகுறித்து யோசிக்க வேண்டும்.
கடந்த சில பத்தாண்டுகளில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மதுவின் அபாயங்கள் உச்சம் தொட அனுமதித்துள்ளன. இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஒருங்கிணைந்த பலகட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
சில்லறை மது விற்பனையிலிருந்து அரசு உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும். டாஸ்மாக் நிறுவனம் மொத்த விற்பனையாளராகத் தொடரலாம். டாஸ்மாக் பணியாளர்கள் பிறதுறை காலிப்பணியிடங்களில் பணியமர்த்தப்படலாம்.
பழைய முறையில் மதுக்கடைகளை தனியாருக்கு ஏலம் விடலாம். இப்போது இருக்கும் கடைகளில் (4829) 50% கடைகளுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். இவற்றில் ஆண்டுதோறும் 20% கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவற்றின் மூலம் படிப்படியாக மதுவிலக்கை நோக்கி நகரவேண்டும்.
மதுக்கடைகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும். பிற்பகல் 2.00 – 10.00 முடிய என 8 மணி நேரம் மட்டுமே மதுக்கடைகள் இயங்கினால் போதுமானது.
சட்டமன்றத்தில் கூறியதுபோல் 25 போதை ஒழிப்பு மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்துவது போதாது. ஒன்றிய அல்லது வட்டார அளவில் தமிழகமெங்கும் 500 போதை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.
மது, கஞ்சா, புகையிலைப் பொருட்கள், போதைப் பாக்குகள், மாணவர்களிடம் புழங்கும் மென்போதை வகைகள் ஆகியவற்றையும் ஒழிக்க பலதுறைகள் இணைந்த ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுக்கப்படவேண்டும். ஒரு புள்ளியில் தீர்வுகள் சாத்தியமில்லை. அடுத்து வரும் தலைமுறைகளை மீட்கவாவது இவற்றை யோசிக்க வேண்டும்.
போதை ஒழிப்புப் பரப்புரைகளை பள்ளி, கல்லூரிகளில் மட்டுமல்லது சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் கொண்டுசெல்ல வேண்டும். சினிமா, தொலைக்காட்சி, இணையவெளி, காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். இதற்கென களப்பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மதுவிற்பனையைக் கைவிடுவதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மணல், தாதுமணல், கனிம வளம், சுரங்கங்கள், மாற்று எரிசக்தி வளங்கள் போன்றவற்றை அரசு முறையாகக் கையாள்வதன் மூலம் ஈடுகட்டுவது மட்டுமின்றி மேலும் பலமடங்கு அதிக வருவாயை ஈட்டமுடியும். அரசு சொத்துகளை தனியாரிடமிருந்து மீட்டல், முறையான வரி வசூல், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் மூலமும் அரசின் வருவாயை பன்மடங்கு அதிகரிக்க இயலும்.
இவ்வளவுகாலம் கட்டிக்காத்த தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் பெருமையை நாம் மதுவால் இழந்துவிடக்கூடாது. நம்மை வீழ்த்த நினைக்கும் சக்திகளுக்கு மது மற்றும் போதைப்பொருட்கள் ஆயுதமாகப் பயன்பட நாம் அனுமதிக்கக் கூடாது. இன்றே உரியவழியில் செயல்படாவிட்டால் வருங்காலமும் வரலாறும் நம்மை மன்னிக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - நவம்பர் 2024