அ.மார்க்ஸ் 75: தமிழ் அறிவுலகின் மாற்றுக் குரல்
மு.சிவகுருநாதன்
1960-90களில் புதிய தலைமுறை, பரிணாமம், நிகழ், நிறப்பிரிகை போன்ற கருத்தியல் சார்ந்த பல இதழ்கள் வெளிவந்தன. கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், கோ.கேசவன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற மார்க்சிய அறிஞர்களின் பங்களிப்புகள் அன்றைய தமிழிலக்கிய, அரசியல், சமூகச் சிந்தனைப் போக்குகளை மாற்றியமைத்ததில் முக்கியப் பங்காற்றின. அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ரவிக்குமார், வே.மு.பொதியவெற்பன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற ‘நிறப்பிரிகை’ இதழுக்கு தமிழின் சிந்தனை வீச்சில் பல்வேறு உசுப்பல்களை எழுப்பியதில் பெரும்பங்குண்டு. இலக்கியத்திற்கு போதிய இடமில்லை என்று முதல் இதழுக்குப் பின் ஆசிரியர் குழுவிலிருந்து விலகிய வே.மு.பொதியவெற்பன் (தோழமை) பதிப்பாளராகத் தொடர்ந்தார். இறுதியில் நிறப்பிரிகை இலக்கிய இணைப்புகளையும் வெளியிட்டு இலக்கியம் குறித்தான பொதுத் பார்வையையும் மாற்றியது. இதன்மூலம் தலித் இலக்கியத்திற்கும் மாற்றுகளுக்கும் தளமைத்துத் தரப்பட்டது. நிறப்பிரிகையின் இறுதி இதழ்கள் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரின் பங்களிப்பில் வெளியாயின.
மார்க்சியம் – தேசிய இனப்பிரச்சினை, பெரியாரியம், பெண்ணியம், தகவலியம் என்று பல்வேறு தலைப்புகளில் கூட்டு விவாதங்களுக்கு ஏற்பாடு செய்து அவற்றைத் தொகுத்து வெளியிடுதல், புதுமைப்பித்தன் எழுத்துகள், தமிழ் சினிமா குறித்த கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல், கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம், அரசியல் போன்ற தளங்களில் மாற்றுகளை அடையாளம் காட்டி அவற்றின்மீது கவனம் குவித்தல், கள ஆய்வு என பல்வேறு பணிகளில் நிறப்பிரிகை குழுவினர் ஈடுபட்டனர். சமூக, கலை, இலக்கியவெளியில் இது புதிய பாய்ச்சலாக உணரப்பட்டு பெரும் சலனத்தை ஏற்படுத்தியது.
மார்க்சியக் கருத்தியல் பின்புலத்திலிருந்து செயல்பட்ட இயற்பியல் பேராசிரியரான அ.மார்க்சின் நுண்ணரசியல் பங்களிப்புகள் எண்ணிடலங்காதவை. பாரதி ஆய்வாளராகத் தொடங்கிய எழுத்துப்பணிகள் இடதுசாரி இயக்கம், புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம். அரசுக் கல்லூரி ஆசிரியர் இயக்கம், தலித் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள் என பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருபவராக அ.மார்க்ஸ் இருக்கிறார். பேரா. கா.சிவத்தம்பி (பாரதி மறைவு முதல் மகாகவி வரை), பெ.மணியரசன் (பாரதி – ஒரு சமூகவியல் பார்வை) ஆகியோருடன் இணையாசிரியராக பாரதி ஆய்வியலுக்குப் பங்காற்றினார். செந்தாரகை, நிறப்பிரிகை, அனிச்ச போன்ற பல இதழ்களில் பங்கேற்று புதிய சிந்தனைகள், மாற்றுகளை முன் வைத்தது அவரது முதன்மையான பணி. இலக்கியம், சமூகம், அரசியல் குறித்த அவரது நுண்ணிய அவதானிப்புகள், அவற்றை அரசியல் தெளிவுடன் உணர்த்தும் பாங்கு ஆகியன குறிப்பிடத்தக்கவை. 1990களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகள் குறுநூல் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரான பொதுப்புத்தியில் கட்டமைக்கப்படும் பிம்பங்களைக் கட்டுடைத்தார்.
எரிதழல், மா.வளவன் போன்ற பெயர்களில் எழுதிவந்த அ.மார்க்சின் முதல் நூல் சிற்றிலக்கியங்கள் – சில குறிப்புகள் (1982) எனும் பொதியவெற்பன் வெளியிட்ட நூலில் தொடங்கி தற்போது வெளிவரவிருக்கும் மணிமேகலை (தீராநதி தொடர்) குறித்த நூல் (2024) ஈறாக சிறிய, பெரிய என பல நூல்களை எழுதியுள்ளார். மருத்துவர்கள் யாரும் எழுத முன்வராத நிலையில் மருத்துவ உலகின் அரசியலைப் பேசும் ‘நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்’ (சிலிக்குயில்) 1980களில் வெளிவந்தது. மாற்றுக்கல்வி, பாடநூல்கள் குறித்த விமர்சனங்கள், 1986, 2020 புதிய கல்விக்கொள்கைகளை விமர்சித்தும் கல்வி குறித்த சமூக அக்கறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். மார்க்சியத்திற்கு ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகள் தொடங்கி இன்றைய நவதாராளவாதம் வரை அவரின் நூல்களின் பேசும்பொருளாக அமைகின்றன. பின் நவீனத்துவத்தை தமிழ்ச் சூழலுக்கேற்றவாறு பயன்படுத்தி தமிழ் விமர்சனங்களை மேம்படுத்தினார்.
எழுத்து, களச்செயல்பாடு ஆகியவற்றை தனித்தனியே விலக்கி வைக்காமல் இரண்டையும் இணைத்து செயல்படுபவர். அவரது பணிகள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்காதவை. கல்வி, சமூகம், அரசியல், கலாச்சாரம், தலித்தியம், பெண்ணியம், சங்க இலக்கியம், நவீன இலக்கியம், மாற்றுகள், பவுத்தம், இஸ்லாம், மனித உரிமைகள், பின் நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தியம், வளைகுடாப் போர்கள், ஈழம், அரபு எழுச்சி, உலக அரசியல், உலகமயம், காஷ்மீர், நேபாளம் என பல்வேறு களங்கள் சார்ந்து நிறைய எழுதியுள்ளார்.
மாற்றுகளை அறிமுகம் செய்தல் (கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம்), தேசியம் ஒரு கற்பிதம் குறித்த விவாதங்கள், மார்க்சிய ஆய்வுகள், பின்நவீனத்துவ அணுகல்முறைகள், தலித்தியச் செயல்பாடுகள், தலித் அரசியல் - விளிம்புநிலை ஆய்வுகள், கல்விக்கொள்கை மற்றும் பாடநூல்கள் குறித்த கரிசனங்கள், பெரியார், அம்பேத்கர், காந்தி பற்றிய புதிய பார்வைகள், பவுத்தம், இஸ்லாம் குறித்த நூல்கள், சங்க, நவீன இலக்கிய ஆய்வுகள், இந்துத்துவ எதிர்ப்பு, சிறுபான்மையினர் நலன், ஈழம் குறித்த அரசியல், சமூகம், இலக்கியம் தொடர்பான அவதானிப்புகள், மனித உரிமைச் செயல்பாடுகள், மரண தண்டனை எதிர்ப்பு, உண்மை அறியும் குழு அறிக்கைகள், பயண இலக்கியத்தில் புதிய தடம் (வெள்ளைத் திமிர்), மொழியாக்கம் (டாக்டர் பால்கோபால், பாரதி பாடல்களுக்குத் தடை, குஜராத் 2002 டெஹல்கா அம்பலம்), தொகுப்பு நூல்கள் (விடுதலையின் பாதைகள், பெரியாரின் கல்விச் சிந்தனைகள், கே.டானியல் கடிதங்கள்) என பரந்த அளவில் இருப்பதைக் காணமுடியும். தனி ஒருவர் இவ்வளவையும் எழுதுவது கடின உழைப்பைக் கோரும் செயலாகும். என்றும் இளைஞராக தமிழ்நாட்டின் குறுக்கும் நெடுக்குமான வலம் வந்து மனித உரிமைப் பணிகளில் ஈடுபட்டுவரும் அ.மார்க்சின் கடின உழைப்பால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.
சாதிய மோதல்கள், போலி மோதல் படுகொலைகள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் என நூற்றுக்கணக்கான உண்மையறியும் குழுக்களுக்குத் தலைமையேற்று நீண்ட அறிக்கைகளை அளித்துள்ளார். பல ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இப்பணிகள் இவரது எழுத்துப்பணிகளில் மகுடம் போன்றவை. இவை மனித உரிமைப்பணிகளில் பலருக்கு முன்னோடியாக அமையக்கூடியவை. ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவான குரலாக இவரது பணிகள் இன்றும் தொடர்கின்றன.
பெரியார், அம்பேத்கர் போன்றோர் பற்றிய அவரது பார்வைகள் புதிய திறப்புகளை ஏற்படுத்தியுள்ளன. காந்தி பற்றிய அவரது மறுவாசிப்பு பலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தது. “தலித்தியம், பின்நவீனத்துவம் வரை என்னுடன் வந்த ஷோபாசக்தியால் காந்தி குறித்த மறுவாசிப்பை ஏற்க முடியவில்லை”, என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். காந்தி, நேரு போன்றோரை இன்றைய வெறுப்பரசியல் சூழலை எதிர்கொள்ளும் ஆயுதங்களாகப் பாவிக்க விரும்புகிறார்.
ஈழம் தொடர்பான அவரது கருத்துகள் பலரை அவருக்கு எதிரியாக்கியது. இருப்பினும் தனது கருத்துகளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருந்தார். ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைபாட்டால் சி.பி.ஐ. (எம்.) கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அ.மார்க்ஸ், பின்னாளில் விடுதலைப்புலிகளின் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கு, சக விடுதலை இயக்கங்களை ஒடுக்கியது, சைவ, இந்து தேசியக் கட்டமைப்பு போன்ற பாசிசக் கூறுகளை விமர்சித்தார். விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் தற்போது பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிறர் ஏற்றுக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்கிற தயக்கமின்றி தனது பாதையில் தயக்கமின்றி விரைந்து செல்லக்கூடியவர் அவர். இதனால் அவருக்கு நிலையான நண்பர்கள் வட்டம்கூட இல்லை என்று சொல்லலாம். அவரது நூல்களையும் எளிய, சிறிய பதிப்பகங்களே வெளியிட்டு வந்துள்ளன.
தமிழ் தேசியத்தின் பல்வேறு முகங்கள் பாசிசத்தின் வடிவமாக இருப்பதைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இலக்கியம், அரசியல் களங்களில் இவரது கறாரான நிலைப்பாடுகள் சிலரை எதிரிகளாக மாற்றியுள்ளது. புதுமைப்பித்தன், மௌனி, எம்.வி.வெங்கட்ராம், சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைக் கட்டுடைத்தார். இந்துத்துவம் பற்றிய இவரது ஆய்வுகள் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை. இந்துத்துவம் குறித்தான வரலாற்றுப் புரிதலை வழங்கி, நீண்டகாலமாக அவற்றின் அபாயத்தை வெளிப்படுத்தியும் வந்துள்ளார். அரசுகள், மாவோயிஸ்ட்கள், விடுதலை இயக்கங்கள் போன்ற எவற்றின் மூலம் வன்முறை ஏற்பட்டாலும் அதை எதிர்த்துப் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் முதல் ஆளாக இருப்பதால் “உயிர்ப்புமிகு அறிவுஜீவி” (Organic Intellectual) என்ற கிராம்சியின் கருத்தாக்கத்திற்குத் தமிழ்ச்சூழலில் பொருத்தமான நபராகவும் விளங்குகிறார்.
தமிழ் அறிவுலக வட்டாரத்தில் அ.மார்க்ஸ் அளவிற்கு கடும் விமர்சனங்களுக்கு ஆளான சமகால அறிவுஜீவி யாருமில்லை. வெளிப்படையான விமர்சனங்கள் அவருக்கு நிறைய எதிர்ப்புக்களை உருவாக்கித் தந்தன. அதற்காக தனது அறம் சார் நிலைப்பாட்டில் அவர் எள்ளளவும் உறுதி குலைவதில்லை. ஈழப்பிரச்சினை தமிழ்த் தேசியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், பெற்ற படிப்பினைகள், அரசியல் தீர்வு, கச்சத்தீவு, மீனவர் பிரச்சினைகள், அகதிகள் வாழ்வு குறித்தான கரிசனங்கள் என்பதாக அவரது எழுத்துகளில் எதிரொலிக்கின்றன. போரற்ற உலகு, நெகிழ்ச்சியான எல்லைகள், மனிதநேயம், மற்றமையை நேசித்தல் என்பதாக இவரது பார்வைகள் விரிகின்றன.
விலகி நிற்றல், தன்னிலை அழிப்பு, பன்முகப்பார்வை குறித்த அவதானிப்புகள், மற்றமை சார்ந்த கரிசனங்கள், அறவியல் நிலைப்பாடு, பெருங்கதையாடல் தகர்ப்பு, வெறுப்பரசியலுக்கு எதிரான நிலை, ஒற்றைத்தீர்வுகளைத் திணிக்காமல் பன்மைத் தீர்வுகளைப் பரிந்துரைத்தல், தேசபக்தி எனும் மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை, எங்கும் உரையாடலுக்கான சாத்தியப்பாடு, வைதீக எதிர்ப்பு, முரண்பாடுகளை ஏற்றல் என்பதான தன்மைகள் அவரது எழுத்துகள் எங்கும் இழையோடுவதைக் காணலாம். விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல் ஆகியவற்றுக்கு முதன்மையளிக்கும் போக்கையும் உணரலாம். புத்தம் சரணம், நான் புரிந்துகொண்ட நபிகள் போன்ற நூல்களின் வழி அ.மார்க்சின் நெகிழ்வான மறுபக்கத்தைக் காணலாம்.
50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் அறிவுலக அறிஞர்களில் ஒருவராக தொடர்ந்து இயங்கிவரும் அ.மார்க்ஸ் இதற்கென எவ்வித அங்கீகாரத்தையும் பெற்றதில்லை, பெற விரும்பியதுமில்லை. அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக என்றும் இயங்கியதில்லை. அதிகாரத்திற்கு எதிராக உண்மைகளைப் பேசுவோம் என்கிற நிலைப்பாட்டில் துளியும் மாறாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மாற்றுக்குரலாக என்றும் ஒலிக்கிறார்.
(அக். 04, 2024 பேரா. அ.மார்க்சின் 75வது பிறந்த நாள்.)
நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - நவம்பர் 2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக