எஸ்ஐஆர் எனும் ஜனநாயக மோசடி
மு.சிவகுருநாதன்
நவம்பர் 08, 2016 இரவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; இவை வெறும் காகிதம் என்று அறிவித்ததைப் போன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது எஸ்ஐஆர் அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் அக்டோபர் 27, 2025 நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல்களை முடக்கிச் செல்லாக் காசாக்கினார். 51 கோடி வாக்காளர்களின் அரசியல் சாசன உரிமையான வாக்குரிமை ஒரே உத்தரவில் பறிக்கப்பட்டுவிட்டது. பாசிசத்தின் கொடுங்கரங்கள் இவ்வாறுதான் நீளும் என்பதை கடந்தகால வரலாறுகள் நிருபிக்கின்றன. இனி அவர்கள் குடியுரிமையை உறுதி செய்து விண்ணப்பித்துத்தான் வாக்குரிமையை மீளப் பெறமுடியும். இவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. உண்மையில் இது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்போ, திருத்தமோ அல்ல; குடியுரிமைச் சட்டங்களை சட்டத்திற்குப் புறம்பாக கொல்லைப்புறமாக அமல் செய்யும் மோசடி வேலையில் அரசியல் சாசன அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக பார்க்க வேண்டிய நிகழ்வாகும்.
தேர்தல் ஆணையம் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் ஜனநாயகத்தை சவக்குழிக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று என்றாலும் 2002-2004 காலகட்டத்தில் செய்த திருத்தத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்போது ஆதார் பரவலாக இல்லை. தற்போது ஆதார் இருந்தும் அதை ஏற்க மறுக்கின்றனர். ஆதாரை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிபந்தனைக்குட்பட்டு ஆதாரை ஏற்கிறோம் என்கின்றனர். எங்களுக்கு குடியுரிமை ஆவணங்களே வேண்டுமென தேர்தல் ஆணையம் அடம்பிடிக்கிறது. இருக்கின்ற வாக்காளர் பட்டியலை முடக்கிவிட்டு புதிதாக அனைவரையும் விண்ணப்பிக்கச் சொல்கிறது. உண்மையில் இந்தியக் குடிமகனின் சட்டப்பூர்வ வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.
மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை, ஜூலை 1, 1987 க்கு முன்னர் இந்தியா அரசு, உள்ளூர் அதிகாரிகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடும்பப் பதிவேடு, நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் ஆகிய 11 ஆவணங்களை மட்டும் பீகாரில் ஏற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதாரை அடையாள ஆவணமாக மட்டும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். 01.07.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதியை கணக்கீட்டுப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகவும் குறிப்பது விசித்திரமாக உள்ளது.
இவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 169இன்படி உரிய சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு முறைப்படி செயல்படுத்த வேண்டும். ஆணையம் சுதந்திரமான அமைப்பு எனினும் தன்னிச்சையாக செயல்பட அரசியல் சட்டத்தில் இடமில்லை. நமது அரசியல் சாசனப்படி சுயேட்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் அரசியல் சாசனத்தை மீறியும் நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்டும் செயல்பட முடியாது. தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர் போன்றோர் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டே இயங்கவேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும் அதிகாரங்கள் எல்லையற்றவை அல்ல; அவை வரம்பிற்குட்பட்டவை என்பதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்கிற பாதுகாப்பைச் சலுகையாகப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மீறும் செயல்பாடுகளைத் தொடர்ந்து அனுமதிப்பது இந்திய ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறை அசாதாரண நேரங்களில் தீவிரமாகச் செயல்படுவதை Judicial Activism என்று சொல்வதைப்போல தேர்தல் ஆணையச் செயல்பாடுகளை வெறுமனே ECI Activism என்று எளிதாகக் கடந்துவிட இயலாது. உச்சநீதிமன்றம் போல் இவ்வமைப்புகள் இவ்வாறு செயல்படவும் முடியாது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் – நிகோபர் தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணிகள் (SIR) நடைபெறவிருக்கின்றன. இவற்றில் விரைவில் தேர்தல் வரப்போவது காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுதான் முழுச்சிக்கலுக்கும் காரணமான ஒன்றாகும். அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்தாலும் குடியுரிமை சரிபார்க்கப்பட்டுவிட்டதால் அங்கு தீவிரத் திருத்தத்திற்கு அவசியமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதிலிருந்து அவர்களது நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதால் பீகாரைப் போன்று வாக்குத் திருட்டு வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
நவம்பர் 4இல் தொடங்கி டிசம்பர் 4இல் சிறப்புத் திருத்தப்பணிகள் நிறைவடைந்து டிசம்பர் 9இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் திருத்தங்கள், விசாரணைகளை டிசம்பர் 9 முதல் 31க்குள் முடித்து பிப்ரவரி 7இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 6.41கோடி வாக்காளர்கள் உள்பட 51 கோடி இந்திய வாக்காளர்களின் வாக்குரிமையை இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் சரிபார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையம் ஒன்றிய ஆளும்கட்சியினருக்காக இம்மோசடியை செய்யத் துணிந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்காகவே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்கிற அய்யத்தில் நியாயமிருக்கிறது.
இந்தியா கூட்டணிக் கட்சிகள் எஸ்ஐஆர் ஐ தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ராகுல்காந்தி கர்நாடகா, அரியானா மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. சாதாரண அரசியல் கட்சியைப்போல பொறுப்பின்றி நடந்துகொண்டது. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக ஆளும் பாஜக வழக்கமான வன்மத்துடன் இதை எதிர்கொண்டது. எஸ்ஐஆர் எதிர்ப்பில் திமுக முன்னணியில் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி போன்றோர் எஸ்ஐஆருக்கு எதிராக தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரித்த அஇஅதிமுக பாஜகவிற்கு அடுத்தபடியாக எஸ்ஐஆர் ஐ மிகத் தீவிரமாக ஆதரிக்கிறது. இப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகள் ஈடுபடுவதால் மாநில அரசே பொறுப்பு என சிறுப்பிள்ளைத்தனமாக வாதிடுகிறது. இதே கருத்தை வலியுறுத்தி தவெக ஆர்ப்பாட்டம் நடத்திய வேடிக்கையையும் நாம் பார்த்து வருகிறோம். பீகாரில் நீக்கப்பட்ட 47 லட்சம் வாக்காளர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக திமுகவையும் மாநில அரசையும் குற்றஞ்சாட்டி மடைமாற்றும் வேலைகளில் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் ஈடுபடுகின்றன. இவை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களது வாக்குகளில் எவ்வளவு பறிபோகும் என்பது டிசம்பர் 9இல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்தான் தெரியவரும்.
உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் தகுதியில்லாத வாக்காளராகக் கருதப்படுவர். இவர்களை நீக்கி வரைவுப்பட்டியல் டிசம்பர் 9 வெளியிடப்படுமாம்! அதற்கு முன்னதாக சுமார் 6.5 கோடி தமிழக வாக்காளர்களிடம் படிவங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெற்று அவற்றை கணினியில் உள்ளீடு செய்வதற்கு போதுமான அவகாசம் இருக்கிறதா என்பது தேர்தல் ஆணையத்திற்கும் அதைக் கண்டுகொள்ளாதா நீதிமன்றங்களுக்குத்தான் தெரியும். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 முடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூன்று அல்லது நான்கு தடவை வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவத்தைக் கொடுத்துத் திரும்பப் பெறுவார் என்று கதைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? தகுதியில்லாத வாக்காளர்களை நீக்கவே எஸ்ஐஆர் என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. எஸ்ஐஆர் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஆணையத்தை வழிமொழிகின்றனர்; நடைமுறைச் சிக்கல்களுக்கும் பீகாரில் எதிர்கொண்ட சிக்கல்களுக்கும் யாரும் முகம் கொடுப்பதில்லை.
BLOக்கள் எதோ விளம்பர நோட்டீஸ் போல கண்ணில் தென்படுபவர்களிடம் வீசியெறிகிறார்கள். படிவத்தில் ஒரு நகல் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வருகிறது; சிலருக்கு இருப்பதில்லை. அப்படிவங்களைப் பூர்த்தி செய்வது குறித்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் எவற்றிலும் தெளிவில்லை. போட்டோ ஒட்டவேண்டுமா? 2002 திருத்தத்தில் இடம் பெற்ற எந்த உறவினர் விவரத்தை எழுதுவது? நகல் ஆவணங்களை இணைப்பதா, வேண்டாமா? ஒரு நகல் போதுமா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. முன்பு ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்றனர். தற்போது கணக்கெடுப்பின்போது வாக்காளரிடமிருந்து எந்தவொரு ஆவணமும் சேகரிக்கப்படாது என்கின்றனர்.
90%க்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர். இது உண்மையல்ல. எவ்வளவு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதில்தான் உண்மையான வெற்றி இருக்கிறது. படிவங்களை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களை காலதாமதமாக உணர்ந்த தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் நாள்தோறும் 50 படிவங்களை அளிக்க முன்வந்துள்ளது. இதன்மூலமும் இக்குறுகிய காலத்தில் இப்பணிகளை முடிக்கமுடியும் என்று சொல்வதற்கில்லை.
திமுக அக்டோபர் 27இல் தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அடுத்து நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக, அஇஅதிமுக, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகளைத் தவிர்த்து 60 அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 49 அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்று எஸ்ஐஆர் எதிர்ப்பில் ஒருங்கிணைந்து நின்றன. நாதக, தவெக, பாமக (இராமதாஸ்) ஆகியன அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை.
பீகாரில் பல்வேறு குளறுபடிகளுடன் அரங்கேறிய இத்திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை. கிருஸ்மஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குறைவான அவகாசத்துடன் இதை அமல் செய்வது சரியல்ல. தேர்தல் ஆணைய அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாகப் பின்பற்றி, உரிய கால அவகாசமளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இந்த சிறப்புத் திருத்தத்தைச் செய்ய வேண்டும். இதை ஏற்காமல் வாக்குரிமைப் பறிப்பில் ஈடுபடும் தேர்தல் ஆணையத்தின் சட்டமீறலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
அக்டோபர் 29இல் தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இதில் பங்குபெற்ற தேசிய, மாநிலக் கட்சிகளில் பாஜக, அதிமுக தவிர்த்து திமுக, விசிக, நாதக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய 10 கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தன. தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்குப் பலமான எதிர்ப்பு இருப்பது இதிலிருந்து புலனாகிறது.
தேர்தல் ஆணையம் அரசியல், சாசனம், உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் எதையும் மதிக்காமல் செயல்படும் அமைப்பாக மாறுவது ஜனநாயகத்திற்கு ஏற்படையதல்ல. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் மாறியபோது இவ்வமைப்பு ஆளும்கட்சிக்கு கைப்பாவையாக செயல்படும் என்று எதிர்பார்த்தோம்; அதுதான் இன்று நடக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்று தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கட்டுக்குள் வந்துவிட்டால் நாட்டின் எப்படி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும்? பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக 1கோடிக்கும் மேற்பட்ட மகளிர் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 வரவு வைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவகமாகச் செய்தது. இதனை நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாதது வேதனைக்குரியது. எஸ்ஐஆர், வங்கிக் கணக்கில் பணம் போன்ற காரணிகள் இல்லாமல் பீகாரில் பாஜக கூட்டணி வென்றிருக்க இயலுமா? இதுதான் நியாயமான தேர்தல் நடைமுறையா என்று வினவினால் உரியவர்களிடம் பதிலில்லை.
பீகார் தேர்தலுக்கு முன்னதாக முடிக்கப்பட்டிருக்க வேண்டிய எஸ்ஐஆர் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தொடரப்பட்ட வழக்கு முடிவதற்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிடும் என்றால் இந்தியக் குடிமகனின் இறுதி நம்பிக்கை நீதித்துறை என்பதும் பொய்த்து விடுமா என்பது தெரியவில்லை. அரசியல் சாசனத்தை மீறி அரசுகளோ, நாடாளுமன்றமோ, அதன் அமைப்புகளோ செயல்படும்போது அவற்றை உரிய வழிகளில் தடுத்து, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு இருப்பதாக இப்போதும் கூட மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதையும் ஜனநாயகம் பாசிசத்தால் வீழ்த்தப்படுவதையும் இனியும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
நன்றி: 'பேசும் புதியசக்தி' மாத இதழ் டிசம்பர் 2025








