திங்கள், மார்ச் 10, 2025

03. மனுநீதிச் சோழன் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

03. மனுநீதிச் சோழன் கதைகள்

மு.சிவகுருநாதன்

 


       திருவாரூரைச் சேர்ந்தவர்களுக்கு மனுநீதிச்சோழன் குறித்த பெருமித உணர்வு உண்டு. இதற்கு கலைஞர் கருணாநிதி கூட விதிவிலக்கல்லர். இந்திய அரசியல்வாதிகளில் மனுதர்மத்தை மிகச்சரியாக இனங்கண்டு எதிர்கொண்டவர்கள் பெரியார், அம்பேத்கர் இருவர் மட்டுமே. பெரியார் வழிவந்த கலைஞர் உள்ளிட்ட பலரும் தங்களை மனுநீதிச் சோழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைபவர்கள்.

    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, கோவையில் நடந்த  கட்சி மாநாடொன்றில் கலைஞர், “நான் பசுவுக்காக மகனைப் பலியிட்ட மனுநீதிச் சோழன் பிறந்த மண்ணில் பிறந்தவன்என்று பெருமை பொங்க பேசினார். இவரைப் போலவே நவீன மனுநீதிச்சோழன், இராஜராஜசோழன் என்றெல்லாம் அழைக்கப்படுவதை தமிழக அரசியல்வாதிகள்  விரும்புகின்றனர். சென்ற மாதம் (ஜனவரி 2025) தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகைதிராவிட மாடல்அரசை மனுநீதிச் சோழன் அரசு என்று பாராட்டினார். ஒரு குறிப்பிட்ட சாதியின் திருவுளச்சீட்டு முறையான குடவோலை முறையை மக்களாட்சி என்று உன்னதப்படுத்துவதைப்போல் இங்கு மனுதர்மம் சமநீதியாக கற்பிதம் செய்யப்படுகிறது.

       மனுநீதி என்று சொல்லப்படுகின்ற மனு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக புனையப்பட்டதே  மனுநீதிச் சோழன் கதை என்பதே உண்மை. ஆனால் அவற்றை வெளிப்படுத்த சோழன்என்கிற கதையாடல் தடுக்கிறது.   சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பிராமணர், பசுக்கள் நீங்கலாகப் பிறர்  வாழும் மதுரையை எரிக்கிறார். வருண தர்மமும் மனுநீதி உள்ளிட்ட சாஸ்திர சட்டத் தொகுப்புகளும் புராணங்கள், கதைகள் வாயிலாக மக்கள் மனத்தில் தீவிரமாக பதிக்கப்பட்டன. இந்தப் புனைவுகளின் சமகால முக்கியத்துவத்திற்காக சோழன்என்ற பெயர் கூடுதல் கவனிப்பு பெறுவதாகவும், இன்றும் பலரைக் கொண்டாட வைக்கும் சூழ்ச்சிக்காரர்களின் செயலாகவும் அமைந்துவிட்டது.

      அப்படி ஒரு மன்னன் இருந்தற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அது வெறும் புனைவு; அதாவது தொன்மம். மனு தர்மத்தை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கப் பார்ப்பனியம் உருவாக்கிய கதையாடல். இது ஊருக்கு ஊர்  ஒரு மன்னன்  வம்சப்  பெயருடன் விரியும் தன்மை கொண்டது.

        இந்தத் தொன்மத்தை வரலாறாக புனைவருவாக்கம் செய்ய பலர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை (கி.மு. 205 இல் இருந்து கி.மு 161) மனுநீதிச் சோழனாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இக்கதை மகாவம்சத்தில் கூறப்பட்டாலும் இறந்த மகன் மற்றும் பசுங்கன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதே ஆண்டில் மனுநீதிச்சோழன் திருவாரூரை ஆண்டதாக  திரைக்கதை எழுதுவதும் உண்டு. சிபிச்சக்கரவர்த்தி கதையும் இவ்வாறு உற்பத்தியானதே. வேறு  எந்த வரலாற்றுத் தரவுகளும் இல்லாத நிலையில் காலத்தால் மிகவும் பிந்தைய,  கி.பி. 1123 இல் விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136) கல்வெட்டில் இடம்பெறும் மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிட்டு தொன்மத்தை வரலாறாக்க குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்றோர் முனைகின்றனர். பல்வேறு புராணக்கதைகள் கல்வெட்டுகளில் உண்டு; அக்கதை ஒரு கல்வெட்டில் இருப்பதாலே அது வரலாற்று உண்மையாகிவிடாது.   

     மனுச்சோழன் புராணக்கதை சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது இலக்கியச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடை மணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே;

        என்ற சிலப்பதிகார வழக்குரை காதையில் மனுநீதிச்சோழன் இடம்பெற்றாலும் திருவாரூர் இல்லை; புகார் நகர்தான் (பூம்புகார்) குறிப்பிடப்படுகிறது. இலக்கியச் சான்றுக்கு எந்த அளவிற்கு வரலாற்று முலாம் பூசமுடியும் என்பதும் கேள்விக்குரியது. சிபிச்சக்கரவர்த்தி வடநாட்டு மன்னன் புனைவும் மனுதர்மத்தை நிலைநாட்ட உருவாக்கிய மனுநீதிச்சோழன் புனைவும் இங்கு கையாளப்படுகிறது.

      பெரிய புராணத்தில் திருவாரூர் சிறப்பைக் கூறுமிடத்தில்  மனுநீதிச்சோழன் கதை முழுமையாக இடம்பெறுகிறது. சிலப்பதிகாரத்திற்கும் பெரிய புராணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் மனுநீதிச்சோழன் குறித்த எவ்விதச் செய்திகளும் இல்லை. குறிப்பாக திருவாரூர் கோயில் குறித்து பதிகங்கள் பாடிய அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர் போன்றோர் மனுநீதிச்சோழன் குறித்து ஏதும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

         பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் மனுநீதியை மிகத் தீவிரமாக அமல் செய்தவர்கள். பிற்காலச் சோழர்களின் மெய்கீர்த்திகளில் வரும் 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்' என்ற சொல்லாட்சி வாயிலாக பிற்காலச் சோழர்கால மனுதர்ம ஆட்சியை விளங்கிக் கொள்ளலாம். முதலாம் குலோத்துங்கனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன், கரிகாலன், திருநீற்றுச் சோழன் என்பனவற்றோடு மனுகுலதீபன் என்னும் பட்டப்பெயரும் உண்டு. இதிலிருந்து மனுநீதிச்சோழன் என்பது பிற்காலச் சோழர்களுக்கு பலருக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பெயர் என்றுகூட கருதலாம்.

       சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுநீதிச் சோழனுக்கு சிலை வைத்துள்ளனர். திருவாரூரில் மனுநீதிச் சோழனுக்கு மணிமண்டபம் கட்டியாகிவிட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தியாகி பி.எஸ்.ஆர். மணிமண்டபமும் உள்ளது. கர்நாடகாவில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர் பி.சினிவாசராவ் கீழத்தஞ்சையில் மக்கள் பணியாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பப்பட்டவர். அடித்தட்டு மக்களுடன் மக்களாக வாழ்ந்த அவர் மரணத்திற்குப் பிறகு திருத்துறைப்பூண்டியில் மண்ணில் அடக்கம் செய்யப்பட்டவர். இந்த மணிமண்டபங்கள் வாயிலாக வரலாறும் புனைவும் ஒரே நேர்கோட்டில் இணைக்கப்படுகிறது.

       தமிழ்நாட்டு அரசின் நான்காம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூலில்  'மனுநீதிச் சோழன் நாடகம்'  பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி வழங்கும் முறைக்கு மனுநீதிச் சோழனை முன்னுதாரமாகக் காட்டுகின்றனர். எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நீதித்துறை பாடத்தில் மனு ஸ்மிருதி போன்ற இந்து மதச்சட்டங்களை சமூகக் கடமைகளாக வரையறுக்கின்றன. இந்து சட்ட மூலங்களில் மனு தர்ம சாஸ்திரமும் (மனு ஸ்மிருதி) ஒன்று. இது ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பலரால் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். கி.மு. 150க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்குமென ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கணிக்கிறார்.

      மனுவின் சட்டங்களை மக்களிடம் பதியவைக்கவும் மேலாண்மையை நிறுவவும் உள்ளூர் மொழி மற்றும் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் உற்பத்தியாயின. அந்த வகையில் கட்டப்பட்ட புனைவுதான் மனு நீதிச் சோழன்என்னும் புராணம். மனு நீதியுடன் உள்ளூர் அரச வம்சமான சோழன்என்கிற அடைமொழி இணைக்கப்படும்போது இவர்களது நோக்கம் எளிதில் நிறைவேறிவிடுகிறது.

      மனுநீதிச் சோழன் புராணத்தையொட்டி திருவாரூரில் எழுப்பப்பட்ட சிறிய ரதக் கோயிலை கல்தேர் என்று அழைக்கின்றனர். எனவே இது வீதிகளில் இழுக்கப்படும் தேர் என்றுகூட நினைத்துக் கொள்வோர் உண்டு. இதுதான் மனுநீதிச்சோழன் ஓட்டிய தேர் என்று மக்களை நம்ப வைத்துள்ளனர். தேர் வடிவக் கற்கோயில் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய கோயில்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

        செங்கல், மரம் போன்றவற்றால் அமைக்கப்பட்ட கோயில்கள் காலத்தால் அழிந்துபோயின. இவை அழியாமலிருக்க பல்லவர்கள் காலத்தில் கருங்கற்கோயில்களும், குடைவறைக் கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டன. முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தில் தேர்க் கோயில்களை எழுப்பினான்.  இத்தகைய ஒற்றைக் கற்கோயில் பாணியைப் பிற்கால மன்னர்கள் பின்பற்றி கற்றளியாகவும் மண்டபமாகவும் தேர் வடிவமைப்பில் அமைக்கத் தொடங்கினர். பஞ்ச பாண்டவர் ரதங்கள் எனப்படும் ஐந்து ரதக் கோயில்களும் தேர்க்கோயில்கள் வகையைச் சேர்ந்தவை. ஐந்து ரதங்கள் என்று சொல்லப்படும் பாறைக்கோயில்களுக்கு சூட்டப்படும் பெயர்களான தர்மராஜா, அர்ச்சுனன், பீமன், சகாதேவன், கணேசன் ஆகியவற்றுக்கும் அந்தப் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

       தருமராசர் தேர் எனப்படும் கோயில் மூன்று அடுக்குகள் கொண்ட விமானத்தை உடையது. பீமசேனன் தேர் எனப்படும் கோயில் நீண்ட சதுர அமைப்பில் காணப்படுகிறது. அருச்சுனன் தேர் எனப்படும் கோயிலின் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டது. திரெளபதி ரதம்  துர்க்கை என்னும் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும்.

      சகாதேவன் தேர் எனப்படும் கோயில் தன் பின் புறத்தில் யானையின் முதுகைப் போன்ற அமைப்பினையுடையது. இது பண்டைய கால பவுத்த விகாரங்களைப் போன்ற அமைப்புடையது. இவற்றை முன் மாதிரியாகக் கொண்டு தேர் வடிவக் கோயில்கள்  பல அமைக்கப்பட்டன. சிதம்பரம்       நடராஜர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், நாச்சியார் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மற்றும் சாரங்கபாணி கோயில், திருவாரூர் தேர்க்கோயில் போன்றவை இதன் தொடர்ச்சியாகும். 

       இப்பாறைக் கோயில்களை மாடக்கோயில்கள், சாதாரண கோயில்கள் என்று இருவகையாகப் பிரிப்பர். இவற்றை மீண்டும் திராவிடக் கோயில்கள், வேசரக் கோயில்கள் என்றும் பிரிக்கலாம். அர்ச்சுனன் ரதம், தர்மராஜா ரதம், சகாதேவ ரதம் ஆகிய பாறைக்கோயில்கள் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தவை. பீம ரதம், கணேச ரதம் ஆகியவை வேசரம் என்ற பிரிவில் வருபவை. எஞ்சியவை அனைத்தும் திராவிடம் என்னும் பிரிவில் அடங்கும். (எ.கா.) திரெளபதி ரதம். திராவிட கட்டிடக்கலைப் பிரிவைச் சார்ந்த இவற்றை இளங்கோயில் என்றும் கூறுவர். இதற்கு வடமொழியில் ஶ்ரீகரக்கோயில் என்று சொல்லப்படுவதை மயிலை சீனி வேங்கடசாமி தனது நூல்களில் விளக்குகிறார்.

         வேதங்கள் மூலம் நால்வருணத்தை நிலைநிறுத்தி தங்களுடைய மேலாண்மையை உறுதி செய்து கொண்ட பிராமணர்கள் சட்டம் இயற்றக் கூடிய நிலையில் இருந்ததால் பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு ஆகியன மனுவால் தடை செய்யப்பட்டன. “வேதங்கள் சுருதிகள் மற்றும் சுமிருதிகள் (வேத சாஸ்திரங்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.  சுருதிகளும், சுமிருதிகளும் எல்லா வகையிலும் மீமாம்ச (விவாதம்) எல்லைக்கு அப்பாற்பட்டவை.  துவிஜர்கள் (உயர் சாதியைச் சேர்ந்த இருபிறப்பாளர்களாகிய பார்ப்பனன், சத்திரியன், வைசியன்) யாராவது சுருதிக்கோ அல்லது சுமிருதிக்கோ அடி பணிய மறுத்தால் சட்டப்படி அவர்கள் சமூகத்தை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்.  ஏனெனில் வேதங்களை நிந்திப்பவர்கள் வேத விரோதிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்”, (பக்.65) இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலில் பிரேம்நாத் பசாஸ் எடுத்துக்காட்டுகிறார்.    

       சூத்திரர்கள் யார்?’  என்ற ஆய்வு நூலை எழுதிய அண்ணல் அம்பேத்கர் மனு ஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்ட தர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட நடைமுறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1.சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

2.சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள்.  அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக் கூடாது.

3.மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது.

4.சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது.  அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம்.  அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.

5.சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது.  அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.

6.ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது.  ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக் கொள்ளலாம்.

7.சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.

8.சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.

9.மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாக வேண்டும்.

10.சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81, சூத்திரர்கள் யார்? - அம்பேத்கர்  தொகுதி - 13)

        ஆனால் மறுபுறத்தில் பிராமணர்களுக்கு எல்லையில்லா சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்களுடைய குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதே தேசத்துரோகம் என்பதைப் போன்ற விதிகள் மனுவால் கட்டமைக்கப்பட்டன. இவற்றைப் பின்பற்றிய சத்திரிய அரசர்கள் பிராமணர்களுக்கும் மனுதர்மத்திற்கு அடங்கிய பொம்மை அரசர்களாக இருந்தனர்.

              மனு 8 ஆவது அத்தியாயம் 380 ஆவது சுலோகத்தில் பிராமணன் எப்பேர்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக் கூடாது, காயமும் செய்யக் கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்,  என்றும் 381 ஆவது சுலோகத்தில்எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிராமணனைக் கொல்ல வேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாதுஎன்றும், 379 ஆவது சுலோகத்தில், பிராமணனுடைய தலையை மொட்டையடிப்பது கொலை தண்டனையாகும்” (குடிஅரசு - கட்டுரை 13.12.1925): (பக்.3821, பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- வே. ஆனைமுத்து தொகுதி: 4) என்று மறு சாஸ்திரம் சொல்வதை  தந்தை பெரியார் பட்டியலிடுகிறார்.      

          பிற்கால சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை (கி.பி. 966கி.பி. 969) கொலை செய்தது சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்தோர் என்றும் அவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருந்தபடியால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அந்தணர்கள் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார். (பிற்காலச் சோழர் வரலாறு)

       அன்று மனுநீதியே அரச நீதியாக கோலோச்சியது. இதன் காரணமாகவே முதலாம் ராஜராஜன் (கி.பி. 985 கி.பி. 1014) ஆட்சிக்காலத்தில் தன்னுடைய அண்ணன் ஆதித்திய கரிகாலனைக் கொன்ற (கி.பி. 969) பிராமணர்களைப் பிடித்துத் தண்டிக்கும் நிலை வரும்போது அந்தக் கொலையாளிகளுக்கு மனுநீதிப் படிதான் தண்டனை வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. அவர்களது நிலங்களை பறிமுதல் செய்து கோயிலுக்கு உரிமையாக்கியதை உடையார்குடிக் கல்வெட்டு (கி.பி 986 ஏப்ரல் 23) வாயிலாக அறியமுடிகிறது.

      குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதால் மனு தர்மப்படி, அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் விளக்கேற்றவும் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மனு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதைப் பொற்காலமாக கற்பிதம் செய்துகொள்ளும் அளவிற்கு வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

      மனு தர்மம் - மனு ஸ்மிருதிமனுநீதி என்று எப்படிச் சொன்னாலும் இந்தப் பாசிச சட்டத்தொகுப்பை நியாயப்படுத்திவிட முடியாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில்  பாகுபடுத்தியும் அத்தகைய கருத்துகளை உன்னதப்படுத்தியும் கற்பிதம் செய்யப்பட்ட புனைவுகள் வரலாற்றில் நிறைந்துள்ளன. அவற்றை அதன் அரசியலோடு இணைத்து அணுகுவதும், மெய்ப்பொருள் காண்பதும் அவசியமாகும்.

      

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மார்ச் 2025

சனி, மார்ச் 08, 2025

பாலியல் குற்றங்கள் ஒழிய சமத்துவமே தீர்வு

 

 பாலியல் குற்றங்கள் ஒழிய  சமத்துவமே தீர்வு

 

மு.சிவகுருநாதன்

 


            அன்றாடம் நடைபெறும் பாலியல் குற்றங்கள் நம்மை பதற வைக்கின்றன. இதில் கைக்குழந்தைகள் உள்பட வயது முதிர்ந்த பெண்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாள்களில் நாளிதழின் தஞ்சாவூர் பதிப்பில் இடம்பெற்ற சில பாலியல் குற்றச் செய்திகளைத் தொகுத்துக் கொள்வோம்.

டிசம்பர் 23, 2024: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். டிசம்பர் 24இல் புகாரளிக்கப்பட்டது. மறுநாள் நடைபாதைப் பிரியாணிக்கடை நடத்திவரும் ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டார்

ஜனவரி 06, 2025: உழவன் விரைவு வண்டியில் பயணித்த 34 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் தாமஸ் மீது வழக்குப் பதிவு.

ஜனவரி 09, 2025: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருவிடைமருதூர் பகுதியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மோகன்ரவி (58) போக்சோவில் கைது.  

ஜனவரி 10, 2025:  மயிலாடுதுறையில் நர்சிங் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர் செந்தில்நாதன் (57) போக்சோவில் கைது.

ஜனவரி 10, 2025:  தஞ்சாவூர் திருக்கானூர்பட்டி ஜெயச்சந்திரன் (60) 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோவில் கைது.

ஜனவரி 13, 2025:  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா... மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ். ஷா மற்றும் உடந்தையாக இருந்த அப்பெண்ணின் தாய் இருவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

ஜனவரி 25, 2025: தஞ்சாவூர் அருகே கீழவஸ்தா சாவடியில் 4 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொத்தனார் சக்திவேல் (41) போக்சோவில் கைது.

பிப்ரவரி 04, 2025: தஞ்சாவூர் அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி வன்கொடுமை செய்த சத்தியசீலன் (22) போக்சோ சட்டத்தில் கைது.

பிப்ரவரி 05, 2025: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு மூன்று ஆசிரியர்களால் தொடர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது ஒரு மாதம் காலம் அப்பெண் பள்ளிக்கு வராமலிருந்தபோது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆறுமுகம் (48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய மூன்று ஆசிரியர்கள் போக்சோவில் கைது. இவர்கள் மூவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 

பிப்ரவரி 07, 2025: கோவைதிருப்பதி விரைவு வண்டியில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண்ணை பாலியல் தொல்லையளித்து ஓடும் வண்டியிலிருந்து தள்ளிவிட்ட ஹேமராஜ் கைது. மிகக்கடுமையாக காயமடைந்த பெண்ணின் வயற்றிலிருந்த சிசு மரணம்.

பிப்ரவரி 07, 2025: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஒரு தனியார் சுயநிதிப்பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை தந்த தாளாளரின் கணவரும்  அறங்காவலருமான  வசந்தகுமார் (54), உடந்தையாக இருந்த தாளாளர் சுதா, துணைத் தாளாளர் செழியன், தலைவர் மாராச்சி, முதல்வர் ஜெயலெட்சுமி ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 07, 2025: சேலம் ஓமலூர் அருகே +1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் (40) போக்சோவில் கைதானதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பிப்ரவரி 13, 2025: திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 15, 2025: பெண் காவலர் அளித்த பாலியல் குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையின் சென்னை வடக்கு மண்டல் போக்குவரத்துக் காவல்துறை  இணை ஆணையர் மகேஷ்குமார் ஐ.பி.எஸ். பணியிடை நீக்கம்.

பிப்ரவரி 15, 2025: புதுச்சேரி தவளக்குப்பம் அருகில் தனியார் பள்ளி முதல் வகுப்பு மாணவியான 6 வயது சிறுமிக்கு  பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர் மணிகண்டன் (25) போக்சோவில் கைது.

பிப்ரவரி 17, 2025: 14 வயது சிறுமியை காதலிப்பதாக சென்னையிலிருந்து ஏமாற்றி தஞ்சாவூர் வரவழைத்த ஜெகதீஸ்வரன் (24) காதலனுடன் சேர்த்து வைப்பதாக அழைத்து வந்து வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய புவனேஸ்வரன் (30) ஆகிய  இருவர் கைது.

பிப்ரவரி 18, 2025:  கோவையில் 17 வயதுச் சிறுமியை கூட்டுப் பாலியல் ஈடுபட்ட 7 தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.

      என்று செய்திகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. நாம் எத்தகைய உலகில் வாழ்கிறோம் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. புகார் செய்யப்படும் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும் நிலையில் புகாரின்றி மறைக்கப்படும் கொடுமைகள் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இவற்றில் ஒன்றிரண்டு தவறான புகார்கள் கூட இருக்கலாம். நீதிமன்ற வழக்கு விசாரணையில்தான் அவை தெரியவரும். ஆனால் இங்கு பாலியல் குற்றமே நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்வது இயலாது. மேற்கண்ட வன்கொடுமைச் செய்திகளின் ஊடாக முன்பு நடந்த பல்வேறு பாலியல் குற்றங்களுக்கு அளிக்கப்பட்ட  தண்டனை விவரங்கள் குறித்த சில செய்திகளையும் பார்த்துவிடுவோம்.

ஜனவரி 20, 2025: கொல்கத்தா மருத்துவ மாணவி மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராவத்திற்கு  சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கொல்கத்தா அரசு மரணதண்டனை அளிக்கவேண்டி மேல்முறையீடு செய்துள்ளது.

ஜனவரி 25, 2025: 2021 அக்டோபர் 24இல் மயிலாடுதுறை செம்பனார் கோயில் அருகே 15 வயது மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கார்த்திக் (31) என்பவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

ஜனவரி 30, 2025: வேலூர் தனியார் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பார்த்திபன் (20), பரத் (18), மணிகண்டன் (21), சந்தோஷ்குமார் (22) ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு. 17 வயது 6 மாதங்கள் நிறைவடைந்த ஒரு சிறார் குற்றவாளி மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  

 ஜனவரி 30, 2025: மயிலாடுதுறை அருகே பாலியல் வழக்கில் விக்னேஷ் (24) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை ரூ.2000 அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

பிப்ரவரி 06, 2025: 2016இல் பெரம்பலூர் அருகே 17 வயது +1 மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நல்லதுரை (22) என்பவருக்கு பெரம்பலூர் மகளிர் நீதிமன்றம் 20 ஆண்டுகள்  சிறைத்தண்டனை வழங்கியது.

பிப்ரவரி 12, 2025: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் மளிகைக்கடை நடத்திவரும் அபுபக்கர் (53) 2022 இல் கடைக்கு வந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 7 ஆண்டுகள் சிறையும் ரூ.10,000 அபராதமும் விதித்து தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

பிப்ரவரி 17, 2025: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் குற்ற வழக்கில் அவர் புகாரைத் திரும்பப் பெற்றாலும் வழக்கை ரத்துசெய்ய முடியாது என்று சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் தள்ளுபடி செய்தார்.

      சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக மாணவி விவகாரத்தில் மாநில அரசும் காவல்துறையும்  எடுத்த நடவடிக்கைகள், மற்றொரு வழக்கில் டி.ஐ.ஜி. தகுதியில் இருக்கக்கூடிய அதிகாரியைத் தற்காலிக பணி நீக்கம் செய்த  நடவடிக்கை போன்றவற்றை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பாராட்டியுள்ளார். மத்திய, மாநில அரசின் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் பெண்கள் அச்சமின்றி துணிச்சலாகப் பணிக்குச் செல்லும் நிலையை உருவாக்கப்பட வேண்டும். பாலின உணர்திறன் மேம்பட போதிய நிதி ஒதுக்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அமைந்திருக்கக்கூடிய உள் புகார் குழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.

    அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரம்  அரசியலில் பேசுபொருளானது. இப்பிரச்சினை பெரிதாகப் பேசப்பட்டாலும் பாலியல் குற்றம் புரிவோரிடம் அது சிறு தாக்கத்தையும் விளைவிக்கவில்லை என்பது தொடரும் குற்றங்களின் வழி உணரமுடிகிறது. இது குற்றவாளிகளுக்கு  அச்சம் அளிக்கக் கூடியதாக அல்லாமல் பாதிப்படைவோரை அச்சமூட்டுவதாக உள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தங்களது பாலியல் குற்றங்களை எதன் பொருட்டும் நிறுத்தவில்லை. எனவே கொடுந்தண்டனை மட்டுமே குற்றங்களை ஒழிக்க உதவாது என்பதையும் நாம் உணர்வது அவசியம். 

புதிய சட்ட மசோதா அறிமுகம்:

                இந்நிலையில் ஜனவரி 10, 2025இல் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரணதண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை விதிக்கும் இரு சட்டத் திருத்த மசோதாக்களை தமிழ்நாடு முதல்வர் மு..ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்தார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் தண்டனையை 20 ஆண்டுகளாக உயர்த்தி இரட்டிப்புத் தண்டனை வழங்க புதிய சட்ட மசோதா வழிவகை செய்கிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல், 18 வயதுக்குட்பட்ட பெண்கள் மீதான் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குறைந்தபட்சம் ஆயுள்தண்டனை, அதிகபட்சமாக மரணதண்டனை என தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றவாளிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது.

          தேசிய குற்ற ஆணவக் காப்பகத்தின் தகவலின்படி தமிழகத்தில், பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் உள்பட பல்வேறு போக்சோ குற்றங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதை சுட்டிக் காட்டுகின்றன. பதிவான வழக்குகளில் நிலை இதுவென்றால் பதிவு செய்யாமல் விட்ட நிகழ்வுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.     பெருகிவரும் பாலியல் குற்றங்களுக்கு சினிமா, தொலைக்காட்சி, அலைபேசி, இணையவெளி ஆபாசங்கள் எனப் பல்வேறு காரணங்கள் பட்டியலிடப்படுகின்றன. இவற்றை  முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாது.

    பாலியல் குற்றங்கள் தொடர்பாக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்குச் சலுகை வழங்குவதாக குறை கூறுவோரும்  உண்டு. குறிப்பாக பெண் ஆசிரியர்கள் பலர் இத்தகைய நிலைப்பாட்டுடன் இருப்பது தெரியவருகிறது. இது ஒருவகையான ஆணாதிக்க மனநிலைதான்.  இத்தகைய குற்றங்களில் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண் குழந்தைகளும் பெண்களும் அதிகளவில் பாதிப்படைவது கள யதார்த்தமாக உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

      பெண்ணாகப் பிறந்து விட்டதாலே குடும்ப நிறுவனத்தால் அடக்கி ஒடுக்கப்படும் அவள் கல்வி, வேலை எனப் பொதுவெளிக்கு வரும்போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. குழந்தைப்பருவம் தொடங்கி, திருமணம், முதுமை என எல்லா நிலைகளிலும் பெண் ஒடுக்கப்படுபவளாக இருக்கிறாள். குடும்பம், வாழிடங்கள், பள்ளிகள், பணியிடங்கள் எங்கும் பாலியல் அத்துமீறல்களை தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. குடும்பத்திலும் பணியிடத்திலும் அதிகாரத்துவ நெருக்கடிகளையும் தாங்க வேண்டி இருக்கிறது. அவள் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் களங்களிலும் ஒடுக்குதலின் குறியீடாக இருக்கிறாள். பணியாற்றும் இடங்களில் விரும்பத்தகாத சொற்களை சொல்வதும் செயல்களைச் செய்வதும் ஒருவகையான பாலியல் துன்புறுத்தல்களே என விசாகா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து மேலுமுறையீட்டு வழக்கில் சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானைச் சேர்ந்த பன்வாரி தேவி எனும் சமூக சேவகர், அரசின் பெண்கள் மேம்பாட்டுத் திட்டப் பணியாளராக இருந்தார். குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த  9 வயதுக் குழந்தைக்கு திருமணம் நடப்பதையறிந்து  அதனைத் தடுக்க முயன்றார். 1992 செப்டம்பர் 22இல் கணவரைக் கட்டிபோட்டு, அவர் முன்பே அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் பலரால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளில் 5 நீதிபதிகளை மாற்றிச்  சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. ஒரு கீழ் சாதிப் பெண்ணை மேல் சாதி ஆண்கள் பாலியல் கொடுமைக்கு உள்படுத்தினார்கள் என்பதும் கிராமத்தலைவர், முதியவர்கள் (60-70) பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டனர் என்பதையும் அதுவும் கணவர் எதிரில் என்பதையும் நம்புவதற்கில்லை என்று கீழவெண்மணி வழக்கைப்போல  நீதிமன்றம் தீர்ப்பு தந்தது.  பெண்கள் மற்றும் அரசு சாரா அமைப்பினரும் விசாகா என்ற பொதுப்பெயரில் உச்சநீதிமன்றத்தை நாடினர்.

     விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு என்ற அந்தப் பொதுநல வழக்கில் 13.08.1997இல் உச்சநீதி மன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. பணியிடங்களில் பெண்கள் உள்ளாகும் பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்க புகார் அளிக்கவும் விசாரிக்கவும் விசாகா குழு அமைக்கவும் அதற்குரிய சட்டங்களை இயற்றவும் அரசுக்கு உத்தரவிட்டது. பணியிடங்களில் நடக்கும் பாலியல் முறைகேடுகளை மனித உரிமை மீறலாக வரையறுத்தது. இந்த வழக்கின் தீர்ப்பினடிப்படையில் பணியிடங்களில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் 2013 கொண்டு வரப்பட்டது. பணியிடம் என்பது பெரிய அரசு, தனியார் அலுவலகங்கள் என்றில்லாமல் குறைந்தது 10 பெண்கள் பணியாற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விசாகா குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தி தீர்வு காணவேண்டும் என்பதே இச்சட்டத்தின் விதியாகும்.

      விசாகா குழுவின் தலைவராக பெண் அலுவலரே இருக்க வேண்டும். மொத்த உறுபினர்களில் 50% பெண்களுக்கு இடம் உறுதி செய்யப்பட வேண்டும். ஒருவர் தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்த வெளி நபராக இருக்க வேண்டும். ஆண்டுதோறும் இக்குழு தனது செயல்பாடுகள் குறித்து அரசுக்கு அறிக்கையளிக்க வேண்டும் என்பது போன்ற பல விதிமுறைகள் உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்டன. ஆனால் விசாகா குழுக்கள் பல இடங்களில் பெயரளவில் செயல்படுகின்றன. காவல் துறையில்கூட அடிக்கடி பாலியல் புகார்கள் எழுகின்றன. இவற்றை விசாகா குழுவும் நிர்வாகமும் எவ்வாறு கையாள்கின்றன என்பது விமர்சனத்திற்குரியதாக உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இதன் அமைப்பும் செயல்பாடுகளும் பெயரளவில் உள்ளதே தவிர திருப்தியளிக்கும் விதமாக இல்லை. கல்லூரிகளிலும்  இதற்கென குழு அமைக்கப்பட்டு செயல்பட வேண்டும். இவை ஒழுங்காகச் செயல்பட்டிருந்தால் பாலியல் குற்றங்கள் சிறிதளவாவது குறைந்திருக்கும். பள்ளிகளில் நடைமுறையில்  உள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் நிலையும் இதுதான். 

     போக்சோ (POCSO)  சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (The Protection of Children from Sexual Offenses Act, 2012) என்பதன் சுருக்கமாகும். இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட முதல் சட்டம் இதுவாகும். இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் வயது வித்தியாமின்றி எல்லா வழக்குகளையும் இதுவரை ஒன்றாகவே கருதின. குழந்தைகளுக்கான உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. இச்சட்டத்தின் மூலமே குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு வழி கிடைத்தது. 

      இச்சட்டம் 18 வயதுக்குட்பட்ட அனைவரையும் குழந்தையாக வரையறுக்கிறது. சீருடை அணியாத துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரி காவல்நிலையத்தில் அல்லாமல் குழந்தை விரும்பும் இடத்தில் இயல்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட வேண்டும். விசாரணை என்ற பெயரில் காவல்துறையும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்து உளவியல் தாக்குதலில் ஈடுபட அனுமதியில்லை. மருத்துவப் பரிசோதனைகள் பெற்றோர்/பாதுகாவலர் முன்னிலையில் நடக்கவேண்டும். இருவிரல் பரிசோதனை தடை செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே குற்றஞ்சாட்டப்பவர்களுக்கும் ஆண்மைப் பரிசோதனை தேவையில்லை என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 

    புகார் பதிவு செய்த 30 நாள்களுக்குள் காவல்துறை விசாரணையை முடித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ஓராண்டுக்குள் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க வேண்டும். ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கவும் போக்சோ சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உரிய இழப்பீடு பெறவும் உரிய உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் இச்சட்டத்தில் வழியுண்டு. இவ்வழக்குகளைக் கையாளும் காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் சரியான புரிதல் இல்லாத நிலையில் பிற வழக்குகளைப் போல கையாள்வதும் நடக்கிறது. இவற்றை உரியவழியில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி ஒதுக்கீடுப் பற்றாக்குறை போன்றவற்றால் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதும் காலதாமதாகிறது. பதிவாகும் போக்சோ வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இவ்வழக்குகள் சரிவரக் கையாளப்படாமல் நீர்த்துப்போகச் செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

     பாலியல் குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை  குழந்தைகளிடமும் ஆசிரியர்களிடமும் ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்கள் மூலமே அதிகளவில் குற்றங்கள் நடக்கின்றன. அதற்க உரிய விழிப்புணர்வு தேவை. ஆசிரியர்களுக்கு  இன்னும் சரியான புரிதல் ஏற்படவில்லை என்பதை அவர்களில் சிலர் இழைக்கும் குற்றங்கள் மூலம் தெரியவருகிறது. பெற்றோர்களுக்கும் அதைவிட வயதில் மூத்தவர்களுக்கும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. போக்சோ சட்டத்தில் ஆசிரியர்கள் மட்டுமின்றி வயது முதிர்ந்தவர்கள் பலரும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுக்  கைதாகின்றனர். கல்லூரி மாணவர்கள் பலர்  பள்ளி மாணவிகளைக்  காதல் என்கிற பால் ஈர்ப்பால் போக்சோ சட்டத்தில் சிறை வாழ்க்கையைத் தொலைக்கும் எண்ணற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. எனவேதான் அனைவருக்குமான விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர வேண்டியுள்ளது.

       ஆசிரியர்கள் சிலர் பொறுப்பற்றும் வக்கிரபுத்தியோடும் இத்தகைய கொடிய செயலில் ஈடுபடுவதைத் தடுக்க  தமிழக அரசு அரசாணை (நிலை) எண்: 121/ 2012 ஐ வெளியிட்டது. இதன்படி பணி நீக்கம், கட்டாய ஓய்வு, வேறு பணிக்குச் செல்லாதபடி கல்விச் சான்றுகளை ரத்து செய்தல் போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இருப்பினும் இந்த அரசாணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. கிருஷ்ணகிரியில் ஆசிரியர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பிறகு அரசும் பள்ளிக் கல்வித்துறையும் இது குறித்து மீண்டும் பேசத் தொடங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு மேலாக இதை அமல்படுத்தியிருந்தால் ஆசிரியர்களின் குற்ற எண்ணிக்கை சற்றுக் குறைந்திருக்கலாம்; இனியும் தாமதிக்கக் கூடாது.

      பொதுவாக குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுந்தண்டனைகள் அளித்தாலும் குற்றச்செயல்கள் பெருமளவு குறைவதில்லை. கடுமையான சட்டங்கள் தேவை என்றபோதிலும் அவை மட்டும் குற்றங்களைக் குறைக்கப் போதுமானதல்ல. மனிதர்களின் மனங்களில், சமூகத் தளங்களில் பெரிய மாற்றம் உண்டாக வேண்டும்.  வக்கிர உணர்வையும், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை அகற்ற சமூகத்திற்குள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

     சினிமா, தொலைக்காட்சி, இணையம், அச்சு ஊடகங்கள், விளம்பரம் எதிலும் பெண்களை மோசமாகச் சித்தரிப்பதைத் தடை செய்தல் வேண்டும். புகையிலை, மது போன்று இந்த இடங்களிலும் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ ஆகியவற்றைச் சுட்டும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறலாம்.  வக்கிர உணர்வைத் தூண்டும் இணையவெளி ஆபாசங்களைத் தடுத்தல் என்பது சரிவர நடைபெறவில்லை. மது, போதைப்பொருள்கள்  இக்குற்றங்கள் நிகழ காரணமாக உள்ளன. அவற்றையும் தடுக்க வேண்டும்.

         பெண்குழந்தைகளைப் பாகுபடுத்துதல் என்பது கருவிலிருந்து தொடங்கி விடுகிறது. கருவில் பாலினம் கண்டறியும் குற்றம் இன்னும் நீடிக்கிறது. அப்படிப் பிறக்கும் பெண் குழந்தையை இந்தச் சமூகம் தொடர்ந்து பாகுபாட்டுடன் அணுகுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெரும்பாலான நிலை குறித்தே நாம் பேசவேண்டியுள்ளது.

      பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் மனநிலையையும் ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய ஒருவகையான மனப்பிறழ்வு நிலையில் ஆழ்மனதில் அடிப்படைவாதக் கண்ணோட்டத்துடன் இவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் தங்கள் செயலை நியாயப்படுத்த அல்லது மறைக்க வேறுவகையான மடைமாற்றும் பணிகளிலும் ஈடுபடுவது உண்டு. பிறரை எளிதில் நம்பவைக்கவும் பல உத்திகளைக் கையாள்பவர்களாக இவர்கள்  இருக்கின்றனர். இத்தகைய குணமுடையவர்களை  இனம் கண்டுகொள்வது முக்கியம். இதற்கு குழந்தைகளுக்கு உரிய பயிற்சியும் ஆலோசனைகளும் தேவை. அதிகாரத்தில் இருப்போர் தங்கள் கீழுள்ளவர்களை எளிதில் வீழ்த்தி விடுகின்றனர். ஆசிரியர்களும் மாணவர்கள் மீது இத்தகைய அதிகாரத்தைச் செலுத்துகின்றனர். இந்த அதிகாரம் ஒருவகையில் பாலியல் குற்றங்களுக்கும்  காரணமாகிறது. கல்வியிலும் சமத்துவம் நிலவவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது போன்ற அடிப்படைவாத மனநிலை அகலவேண்டும்; தோழமை உணர்வும் சமத்துவமும் கல்வியில் செழிக்க வேண்டும்.

         வீடுகளிலும் பள்ளிகளிலும் "பெண் பிள்ளைகள் இப்படிச் செய்யலாமா? இருக்கலாமா?", என்ற வாசகங்களை அடிக்கடி கேட்க நேரிடும். இதன் மறுதலை ஆண் குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதுதான். பெண் குழந்தைகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் குடும்பமும் சமூகமும் ஆண்-பெண் குழந்தைகளை சரியான முறையில் சமத்துவத்துடன்   வளர்க்கவில்லை என்றால் வருங்காலத்தில் போக்சோ போன்ற சட்டங்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்பதை உணர்த்த வேண்டும். 

  வீடு, பள்ளி, சமூகம் எங்கும் பாலினப் பாகுபாடு நிறைந்து காணப்படுகிறது. பாலினச் சமத்துவம் துளியும் பேணப்படாத நிலையில் சமத்துவச் சிந்தனைகளை  வளர்க்க முயற்சி செய்ய வேண்டும். பள்ளிப் பாடநூல்களில் சமத்துவம் பற்றிய பாடங்கள் அடிப்படைப் புரிதலின்றி மொண்ணையாக உருவாக்கப்பட்டுள்ளன. சமத்துவத்தை உண்டாக்கவும், அதை வளர்த்து மேம்படுத்த  பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை.

        பெண்ணை ஒவ்வொரு ஆணும் சக மனித உயிரியாக மதிக்க, உணரக் கற்றுத் தரவேண்டும். பெண்ணைச் சொத்தாக, பொருளாக அணுகும் பழமைவாத, அடிப்படைவாத அணுகுமுறையைத் தகர்க்க வேண்டும். சமூக சீர்திருத்தங்களின் வரலாறு, இன்றைய நிலை, மகாவீரர், புத்தர், மற்கலி கோசலர் தொடங்கி இன்றுவரை நீளும் அறிஞர்களின் சிந்தனை மரபுகள், அவற்றின் தொடர் கண்ணிகள், உலக நாடுகளிலிருந்து பெற்ற சமத்துவக் கருத்தியல்கள் மூலம் நம்மை மட்டுமல்லாது இந்தச் சமூகத்தையும் செழுமைப் படுத்த வேண்டும். இலக்கியம், கலைகள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், அரசியல், சமூகம் என அனைத்தும் பாலினச் சமத்துவத்தின் திசைநோக்கி பயணப்பட வேண்டும். இதன்மூலமே சமூகச் சமத்துவமும் சாத்தியப்படும். 

நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் மார்ச் 2025