எல்லாவற்றுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது!
மு.சிவகுருநாதன்
ஒவ்வொரு சொல்லும் செயலும் அரசியல் குறித்தனவே எனலாம். அரசியல் இல்லாத ஒரு சொல்லும் ஒரு செயல்பாடும் இருக்கவியலாது என்பதே இங்கு உண்மை நிலவரம். அரசியலற்ற எழுத்து, இலக்கியம் என்று பேசும் கும்பல்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் அரசியல் பூனைக்குட்டிகளைப் போல் உடனே வெளியே வந்துவிடுகின்றன.
எந்தவொரு மனிதனும் சமகால நிகழ்வுகள் மற்றும் நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளை வெறுமனே கடந்து செல்ல முடியாது. அவற்றிற்கு முகம்கொடுத்து எதிர்வினை ஆற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் களங்களில் பல்வேறு நிகழ்வுகள் நம்மை உசுப்புகின்றன. அவை குறித்து அவ்வப்போது எழுதிய எளிய உரையாடல்களின் தொகுப்பே இந்நூலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கைகள், காவியமயமான இந்திய அரசாங்கம், இந்திய ஜனநாயகத்தின் நிலை, ஒடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள், பிளவுபடும் சமூகங்கள், பெரியாரின் இன்றையத் தேவை, பெரியாரியம் – அம்பேத்கரியம் - மார்க்சியம் ஆகிய கருத்தியல் ஒருங்கிணைப்பின் அவசியம், தமிழ்நாட்டின் மதுவிலக்குக் கொள்கைகள், உள்ஒதுக்கீட்டால் கேள்விக்குள்ளாகும் இடஒதுக்கீட்டின் அறம் போன்றவை குறித்த பார்வைகளை இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இவை முழுமையான அலசல்கள் அல்ல; பிரச்சினைகளை அடையாளம் காட்டும் விவாதத்திற்கான சில குறிப்புகள் மட்டுமே.
மொழி இங்கு நீண்டகாலமாக உணர்வுப்பூர்வமானதாக உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழியைப் போலவே தமிழினம் சார்ந்த சொல்லாடல்கள் மிகவும் உணர்வு சார்ந்ததாக உள்ளன. இவற்றை அறிவியல்பூர்வமாக, புறவய நோக்கில் அணுகவேண்டிய தேவையை மொழி குறித்தான இரு கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தை கணிக்க முடியாமல் தடுமாறிய நிலை கஜா புயலிலும் வெளிப்பட்டதை கஜா பற்றி எழுதப்பட்ட கட்டுரை விவரிக்கிறது. நாம் இன்னும் தொடர்ந்து கற்கவேண்டிய பாடங்களை நினைவூட்டுகிறது.
நீதிநாயகம் கே.சந்துருவின் கல்வி சமத்துவத்தை வலியுறுத்தும் அறிக்கை, அதன் இன்றைய நிலை, கல்வித்துறையின் செயல்பாடுகளை அலசும் கட்டுரையும் உண்டு. கருத்தியல் சார்ந்து மக்களை அணிதிரட்டிய பல மக்கள் போராளிகளின் நேர்காணல் தொகுப்புநூல் ஒன்றின் மதிப்புரையும் அவசியம் கருதி இங்கு இடம்பெறுகிறது.
சமூக வெளியில் உணவிற்கு முதன்மையான இடமுண்டு. நாம் எதை உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பாசிச அரசியல் ஒருபுறமிருக்க, நாம் உண்ணும் உணவு எத்தகையது, அதன் பின்னால் அணிவகுக்கும் அரசியலையும் உணவின் தன்மை மற்றும் அதன் வீச்சுகளையும் உணவு குறித்த இறுதியிலுள்ள மூன்று கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இவை வளரிளம் பருவக் குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் அறிவுலக அடையாளமாக இருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் வாசகர்கள் படும் இன்னல்கள் ஆண்டுதோறும் சுட்டப்பட்டும் களையப்படாத நிலையைப் பேசும் கட்டுரை ஒன்றும் இடம் இதில் பெறுகிறது.
இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளை பெரிய ஆய்வு நோக்கில் எழுதியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவற்றைச் சமகால அரசியல் நிலைப்பாடுகளின் மீதான உடனடி எதிர்வினையாகக் கொள்ளலாம். இக்கட்டுரைகளில் பல ‘பேசும் புதியசக்தி’ இதழ்களில் வெளியானவை. எனக்கு முழு சுதந்திரமளித்தும் எழுதத்தூண்டியும் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் ‘பேசும் புதிய சக்தி’ முதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.
இரு கட்டுரைகள் ‘காக்கைச் சிறகினிலே...’ இதழில் வெளிவந்தவை. என்றும் இளைஞராக உற்சாகத்துடன் இதழியல் பணிகளை மேற்கொள்ளும் தோழர் வி.முத்தையா அவர்களுக்கும் கட்டுரைகளை வெளியிட்ட இதழுக்கும் நன்றிகள் உரித்தாகுக. உணவு குறித்த கட்டுரைகள் 'பொம்மி' சிறுவர் இதழில் வெளியானது. அப்போது பொறுப்பாசிரியராக இருந்த எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த மூன்று கட்டுரைகளும் எழுதப்பட்டன. அவருக்கும் எனது நன்றி.
எழுத்தாளரும் தேர்ந்த விமர்சகருமான இரா.மோகன்ராஜன் பல்வேறு பணிகளுக்கிடையில் இந்நூலுக்கு சுருக்கமான, சிறப்பான அணிந்துரை ஒன்றை அளித்திருக்கிறார். அவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
எனது நூல்களில் மூன்றாவதாக இந்த நூலை வெளியிடும் ‘நன்னூல்’ பதிப்பகத் தோழர் மணலி அப்துல்காதர் அவர்களுக்கும் நன்றி. அவர் இந்நூலிலுள்ள மொழி குறித்த கட்டுரை ஒன்றை ‘நன்னூல்’ இருமாத இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். நூலையும் அட்டைப் படத்தையும் வடிவமைத்த சு.கதிரவன் அவர்களுக்கும் நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
(மொழி - சமூகம் - அரசியல் நூலில் இடம்பெற்ற முன்னுரை.)
நூல் விவரங்கள்:
மொழி - சமூகம் - அரசியல் (கட்டுரைகள்)
மு.சிவகுருநாதன்
முதல்பதிப்பு: டிசம்பர் 2024
பக்கங்கள்: 154 விலை: ரூ. 180
ISBN: 978-93-94414-99-0
நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:
நன்னூல் பதிப்பகம்,
மணலி – 610203,
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் – மாவட்டம்.
அலைபேசி: 9943624956
மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com
G Pay: 8610492679
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக