திங்கள், ஜூலை 07, 2025

அறிவெழுச்சி – தோழர் அறிவுறுவோன் மலர்

 

அறிவெழுச்சி – தோழர் அறிவுறுவோன் மலர்

மு.சிவகுருநாதன்


 

         தோழர் சி.அறிவுறுவோன் முத்துவிழாவையொட்டி (80) அவரது நண்பர்களும் தோழர்களும் இம்மலரை வெளியிட்டுள்ளனர். மூத்த தோழரைச் சிறப்பிக்கும் வகையிலும் அவரது களப்பணி மற்றும் செயல்பாடுகளை நினைவூட்டிப் பாராட்டும் வகையிலும் விழா எடுத்து மலர் வெளியிடக் காரணமாக இருந்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். வாழ்த்துரை, பதிப்புரை, சி.அறிவுறுவோன் முன்னுரை நீங்கலாக 45 பதிவுகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன; இவற்றில் சில வாழ்த்துப் பாக்கள். அவர் வெளியிட்டஅறிவெழுச்சிதுண்டறிக்கை இதழின் பெயரே மலரின் தலைப்பாக உள்ளது மிகவும் பொருத்தமானது.இப்போது நான் ஒரு பயிராளி, என்றாலும் என்னுள் ஊற்றம் பெற்ற பொதுவுடைமை இன்னும் ஊறிக்கொண்டே உள்ளது”, (பக்.14) என்ற ஆவணமில்லா ஆவணம்என்ற தலைப்பிலமைந்த முன்னுரையில் தெரிவிக்கிறார்.

       “தமிழ் மொழிப்பற்று, தமிழ் இனப்பற்று, பின்னர் சமூகப் புரட்சி போன்றவற்றில் ஒத்த வேட்கையும் கொள்கையும் உடையோரிடையே ஏற்படும் உறவு எவ்வளவு வலிமையானது, பரந்து விரியக்கூடியது”, (பக்.22) என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதுகிறார். எனைத் திராவிட இயக்கத்துக்கு ஆற்றுப்படுத்திய அரணமுறுவலும் மார்க்சிய இயக்க எழுத்தாளர் அமைப்பிற்கு ஆற்றுப்படுத்திய அறிவுறுவோனும் குணாவின் திராவிடத்தால் வீழ்ந்தோம் நிலைப்பாட்டில் காலூன்றிய பின்னர் அவர்களின் திராவிட இயக்க ஒவ்வாமைப் போக்குகளோடு நான் கடுமையாக முரண்படவே நேர்ந்துபோயிற்று”, (பக்.116) என்பதை வே.மு.பொதியவெற்பன் தனது கட்டுரையில் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்.

       பேசும் புதியசக்தி நவம்பர், டிசம்பர் 2017 இதழ்களில் வெளியான பாவெல் சூரியன் எடுத்த சி.அறிவுறுவோனின் 18 பக்க விரிவான நேர்காணல் மலரில் முக்கியத்துவம் பெறுகிறது. மலரில் இடம்பெறும் கட்டுரைகளைவிடவும் தோழர் சி.அறிவுறுவோன் பற்றிய சித்திரத்தை வழங்குவதில் இந்த நேர்காணல் முதன்மைப் பங்காற்றுகிறது. இம்மாதிரியாக பாவெல் சூரியன் எடுத்த நேர்காணல் ஒன்றுதான் போராளி ஏ.ஜி.கஸ்தூரிரங்கனை (ஏஜிகே) வெளியுலகிற்குக் கொண்டு சென்றது.

     பயிர்த்தொழில் அழிவு, அரவிந்தர் ஆசிரம எதிர்ப்புப் போராட்டம் குறித்து அறிவுறுவோன் எழுதிய கட்டுரைகளும் உள்ளன. பாழிஎன்ற சொல் ஆசிரமத்திற்கு நிகரானதா என்பதையும் சற்று யோசிக்க வேண்டும். அவைதீக சமயம் சார்ந்த இச்சொல்லை வைதீகச் சிமிழுக்குள் அடைக்க வேண்டியதில்லை. என்.ஜே.கந்தமாறன் சௌந்தர சுகன்இதழ் சிற்றிதழ் அல்ல; சீரிதழ் என்கிறார். சிற்றிதழ்என்பது வசைச்  சொல் அல்ல; இதிலும் அரசியல், கருத்தியல் ஆகியன உண்டு. இவ்வாறு செந்தரப்படுத்துவதன் வாயிலாக மடைமாற்றுவதான நுட்பங்கள் உள்ளன.  இப்படித்தான் தனித்தமிழ்வாதிகளின் செயல்பாடுகள் அமைகின்றன!

       வண்டல் எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாளுக்கும் அறிவுறுவோனுக்குமான உறவை தி.நடராசன், இரா.காமராசு, எண்கண் மணி ஆகியோரின் கட்டுரைகள் புலப்படுத்துகின்றன. சோலை தனது தப்பாட்டம்நாவலில் அறிவுறுவோனை வரகூர் அறிவு என்ற பெயரில் கதைமாந்தராக உலவவிட்ட செய்தியை பேரா.பா.மதிவாணன் கட்டுரை வெளிப்படுத்துகிறது. சோலைக்கு எதிரான கருத்துரிமைப்போரில் தோழருடைய பங்கையும் மேற்கண்ட கட்டுரைகள் வெளிக்கொணர்கின்றன. இரா.ரத்னகுமார் எழுதிய வாணவெடி முனைகளில் பிளேடுகள்…!’ என்ற கட்டுரையில் இவரது களப்போராளி வாழ்க்கைப் பதிவாகிறது. என்.ஜோதி, எஸ்.ஞானமாணிக்கம் போன்றோரது கட்டுரைகள் இவரது போராட்டக் குணத்தை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றன. 

   ‘பண்டைத் தமிழரின் ஆடை வகைகள்என்ற சு.இராமசுப்பிரமணியன் கட்டுரை எப்போதும் கசங்கிய வெள்ளை வேட்டைச் சட்டை, பச்சை, சிவப்புத் துண்டுகளில் இருக்கும் தோழர் அறிவுறுவோனுக்காக இணைக்கப்பட்டுள்ளது. எளிமை மற்றும் பொதுவுடைமை அடையாளமான ஜீவாவின் போராட்ட வாழ்வை எடுத்துக்காட்டும் அய்யாறு ச.புகழேந்தியின் கட்டுரையும் உள்ளது. அ.மாதவையாவின்கிளாரிந்தாநாவல், அறிஞர் அண்ணாவின் தஞ்சை வீழ்ச்சிகுறுநாவல் போன்றவற்றைக் கண்டுகொள்ளாத மௌனத்தின் அரசியலை செல்வ புவியரசனின் கட்டுரை பேசுகிறது.

                தனித்தமிழியக்கம், தமிழ்த் தேசியம் சார்ந்த சி.அறிவுறுவோனின் பயணத்தை பெரும்பாலான பதிவுகள் சுட்டிக் காட்டுகின்றனஒடுக்கப்பட்டோர், தொழிலாளர்கள், விவசாயிகள் சார்ந்த  களப் போராளியாக அவரது பங்கை சரியாக மதிப்பிடும் பதிவுகள் குறைவாகவே உள்ளன. சமூக நலன் நாடும் மருத்துவர் என்ற ஆ.திருநாகலிங்கம் கட்டுரை, இரா.நாகராஜன்  மற்றும் பழ.குணசேகரன் கட்டுரைகளில் இவரது  ஹோமியோபதி மருத்துவம் பற்றிக் கூறப்பட்டாலும்  அதில் விருப்பத்துடன் ஈடுபட்ட அறிவுறுவோன் பற்றிய  காத்திரமான செய்திகள் இல்லை. பயிராளியான தோழர் ஹோமியோபதி மருத்துவராக மாறிய கதை உள்ளிட்ட நினைவலைகளை தன் வரலாறாக அவர் படைக்க வேண்டும்.

      “தீவிரமான தமிழ்த் தேசியவாதி, தன் இயற்பெயரை தனித்தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டவர், என்றாலும் சகாக்கள் அவரை “C.A.” என்று அழைப்பது ஒரு முரண்”, (பக்.55) என்று க.இரத்தினகிரி குறிப்பிடுகிறார். பொதுவுடைமையாளர்களிடம் பெயரின் முன்னெழுத்துகளை வைத்து அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இது குறித்து விமர்சனம் உண்டு என்றாலும் தமிழ்த் தேசியர்கள் அவ்வாறு அழைப்பதில்லைதானே! சி.அறிவுறுவோன் போன்றோர் தமிழ்த் தேசியத்துடன் பொதுவுடைமையை  இணைத்துச் சிந்திக்கின்றனர். பெரும்பாலான தமிழ் தேசியர்கள் இரண்டையும் முரண்பட்ட கருத்தாக்கங்களாகவே அணுகுகின்றனர். மொழித் தூய்மை என்பதையும் தாண்டி கருத்தியல் முரணாக இவ்வாறு கட்டமைக்கப்படுகிறது.  

        கு.திருமாறன் தமிழியக்க மெய்யியலார் என்றும்  அ.புரட்சிதாசன் தமிழ்த் தேசியத் தலைவர் என்றும் தங்கள் கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். அடஞ்சூர் கரு.அரங்கராசன் உருவும் நிழலும்’  கட்டுரையில் நிறைய செய்திகள் இருக்கின்றன. தில்லைஸ்தானம் மேஜர் தி.சா.ராஜூ அவர்களால் ஈர்க்கப்பட்டு ஹோமியோ மருத்துவம் கற்ற நிகழ்வு இங்கு பதிவு செய்யப்படுகிறது. பொன் மாறன், ‘தச்சன்இரா.நாகராஜன் கட்டுரைகள் இவரது எளிய மிதிவண்டிப் பயணங்களையும் அடித்தட்டு மக்களுடனான உறவு பற்றியும்  பேசுகின்றன.  வைகறைவாணன் இவரது 'திணை தேசியம்' நூலுக்கு எழுதிய பதிப்புரையும் மலரில் உள்ளது.

          அறிவுறுவோனின் இணையர் சுலோச்சனா குறித்து சி.அபூர்வவள்ளி எழுதிய கட்டுரையும் தந்தையைப் பற்றி மூத்த மகள் நிவேதிதா எழுதிய கட்டுரையும் அவரது குடும்ப வாழ்வை விவரிக்கின்றன. அம்மா சுலோச்சனாவை இரும்புப்பெண் என்றும் "எல்லாவிதமான சூழ்நிலைகளையும் சவால்களையும் கடந்து எங்களது வாழ்க்கையைத் தொடரும் அளவிற்குப் பக்குவம் வந்திருப்பதற்கு", பெற்றோரே காரணம் என்று நிவேதிதா பதிவு செய்கிறார். பொதுவெளியில் மட்டும் கதையாடாமல் குடும்ப வெளிக்குள்ளும் உரிய மாற்றங்களைச் செய்யப் போராடியிருப்பது பதிவாகிறது.

        தனக்கு ஈழ தலித் எழுத்தின் முன்னோடி கே.டானியல் எழுதிய கடிதங்களை  பேரா.அ.மார்க்ஸ் தொகுத்துள்ளார். அதில் பல கடிதங்களில் கே.டேனியல் அறிவுறுவோன் பற்றிக் குறிப்பிட்டும் நலம் விசாரித்தும் எழுதியிருப்பார். அந்த நினைவுகள் எதுவும் மலரில் பதிவாகவில்லை. மலர் என்பதால் வெறும் வாழ்த்துரைகள், பாராட்டுரைகள்  மட்டும் துலக்கம் பெற்று, விமர்சனம் மறைக்கப்படுகிறது. இது ஒருவகையான இழப்பு என்றே தோன்றுகிறது. விமர்சன மலர் என்று வைத்துக் கொண்டால் ஒருவேளை இது சாத்தியப்படலாம். 

      தமிழியக்கம், பொதுவுடமை, தமிழ்த்தேசியம் என பல்வேறு கட்டங்களில் தோழர் சி.அறிவுறுவோன் வந்தடைந்த கருத்தியல் முரண்பாடுகள், அவரது பங்களிப்புகள், அவற்றின் படிப்பினைகள், இன்றைய நிலைப்பாடுகள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழியம் சார்ந்த அவரது விமர்சனங்கள் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு நோக்கில் அணுகுவதும் நிறை, குறைகள் மற்றும் போதாமைகளை மதிப்பிடுவதும் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும்  சமூகம் வருங்காலங்களில் இவற்றைச் செயல் மற்றும் கருத்தியல் தளங்களில் தகவமைப்பதில் பேருதவியாக இருக்கும். எனவே படிப்பினைகளும்  மீளாய்வும் இன்றைய முதன்மைத் தேவையாக இருக்கிறது. அத்தகைய நோக்கில் அடர்த்தியான தொகுப்புகள் வருவது நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும்.

       

நூல் விவரங்கள்:

அறிவெழுச்சிஅறிவுறுவோன் முத்துவிழா மலர் – 2025

பக்.: 168; விலை: ரூ. 200

வெளியீடு:

மருதம் கலைக்கூடம், தமிழ்க்குடில்,

அடஞ்சூர், திருக்காட்டுப்பள்ளி – 613104.

அலைபேசி: 6369962099

நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் ஜூலை 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக