ஏரோட்டம்: விளிம்புகளால் எழுப்பப்பட்ட ஆரூர்ப் பேரறம்
தீசன்
(ஏரோட்டம் - திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும் – இன்றும்)
தொகுப்பிற்கு நண்பர் தீசன் எழுதிய மதிப்புரை.)
இந்தியா ஒரு தேசியமாக வளர்ந்து கொண்டிருந்த வேளையில் வட்டாரப் பண்பாடுகளை முதன்மைப்படுத்துவது ஒரு காலனிய கால எழுதியலாக இருந்தது. வட்டாரப் பண்பாடுகள் தனித்தனி வட்டாரப் பண்பாடுகளாக இல்லாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தபோது தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்கள் அவற்றைத் தனக்கான உழைப்புச் சக்திகளாக மடைமாற்றிக் கொண்டிருந்தன. கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் புகைந்து கொண்டிருந்த வரலாற்றுப் பகை, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அதற்குப் பின்னான உலகப்போர் இவையெல்லாம் இந்தச் சூழல் ஏற்பட்டு வளர அடிப்படையான காரணங்கள். கால்டுவெல் திருநெல்வேலிப் பகுதியின் சாணார் இன மக்களின் வாழ்வு பற்றி ஆராய்ந்ததும் அதன் பிராமணீயக் கலப்பற்ற பண்பை கிறித்தவ சமயத்தாரின் வளர்ச்சியோடு இணைத்ததும் பிராமணீய சிந்தனை நீக்கத்திலிருந்தே ஆங்கிலேய காலனியம் சாத்தியம் எனும் பேருண்மையைப் பாதிரிமார்களுக்கு உணர்த்தியிருந்தது. சாதிகளால் சமைந்திருக்கும் இந்திய சமூகம் பன்மீய சாதிவடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துச் சாதிகளையும் இயக்கும் அறிவுக்கட்டமைப்பான பிராமணீய மேலாதிக்கத்தை மறுக்காது கடைப்பிடித்தன. எனில் ஏற்கனவே மேலாதிக்கம் செய்யப்பட்டிருக்கும் பிராமணீய கருத்தியலைக் கீழிறக்கம் செய்வதில் இருந்தே ஆங்கிலேய சிந்தனைக்குள்ளான பண்பாட்டு்ணர்வை உருவாக்கவியலும் என்பதே இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால அரசியலாக உருவெடுத்தது. பிராமணரல்லாதார் இயக்கமே இதன் தொடக்கம். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்த படிநிலை சமூக அமைப்பு, வருணாசிரம தருமத்தினால் கட்டப்பட்டிருக்கும் தொழில், கல்வி, வாழ்க்கை, நிலவுரிமை, அரசியல் அதிகாரம் முதலியவை மறுவாசிப்பு செய்யப்பட்டன. பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றோரின் பிராமணீய மரபு அவர்களுக்கு இந்திய தேசிய வாதத்தின் பகுதியாகத் தமிழ்ப் பண்பாடு அமைக்கப்பட வேண்டும் என்ற உந்துதலைத் தந்திருந்தது. பிராமணரல்லாதாரிடையே பிராமணீயம் நீக்கப்பெற்ற ஒரு தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கம் பற்றிய ஓர்மை எழுந்தது. நிலக்கிழமை, சமயம்சார் நம்பிக்கைகள் முதலிய காரணங்களால் உள்ளீடான வர்க்கப் பகையோடு இருந்த பிராமணரல்லாதாரியக்கம் திராவிடர் கழகமாக உருக்கொள்ளும்போது வட்டாரப் பண்பாட்டின்மீதான மதிப்பை இடம்மாற்றின. சமஸ்கிருதத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டதே ‘செந்தமிழ்’ வடிவம் என்று எழுதிய ச.வையாபுரிப்பிள்ளை தமிழ்ச் செவ்வியல் நூல்களைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்கும் அவரது ஆசிரியரான மறைமலையடிகள் தமிழின் தொன்மை குறித்து எழுதியதற்கும் பின்னணியாகப் பண்பாட்டு உருவாக்கக் காரணியான தேசியக் கருத்தின் முரண்களே இயங்கின. ஆனால் பெரியார் முன்வைத்த தமிழ்ப் பண்பாட்டுணர்வு சாதி, சமய, பாலின, தேசிய பேதமற்ற ஒரு எல்லையாகும். தொன்மையினூடாகக் கட்டமைக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டில் சாதியையும் பெண்ணிழிவையும் நம்மால் கடந்துவிடமுடியாது என்பதே பெரியாரின் பகுத்தறிவு வாதம். பின்னர் இச்சிந்தனையைப் பண்பாட்டு உருவாக்கத்தில் திரண்ட திராவிடர் கருத்தியலாகக் கொள்கின்றோம்.
வரலாற்றில் இத்தகைய பண்பாட்டு உருவாக்கப் பின்னணியிலிருந்தே நாம் வண்டல் வகைமையை அறிய முடியும்; பேச முடியும். மற்ற நிலம் சார்ந்த இலக்கிய வகைமையிலிருந்து வண்டல் வேறுபடுவதற்கும் அதனில் உள்ளொடுங்கி இயங்கும் அறவுணர்விற்கும் சமூகவியல் சார்ந்த காரணங்களை இத்தகைய அரசு, பண்பாட்டுருவாக்க நிகழ்வுகள் ஊடாகவே நம்மால் விளங்க முடிகிறது. வட்டாரப் பண்பாட்டில் உள்ளுறைந்திருக்கும் சாதிப் பெருமிதம் வரலாற்றுவெளியில் பாதுகாப்பான சூழலால் கிடைக்கப்பெற்ற கல்வி அவர்களுக்குத் தந்த கொடை. இலக்கண மரபு, ஒருமையாக்கப்பட்ட தமிழ் மரபாக உயர்ந்தோர் வழக்கிலிருந்து வளர்ந்தெழுந்தது போன்றே பேச்சில் இருந்து விலகிய, அதேசமயத்தில் பேச்சை பிரதிநிதித்துவப்படுத்தவரும் எழுத்து மரபால் உருவாக்கப்படும் வட்டார இலக்கியம் (பேச்சு மரபு) அதனுள்ளாகவே உயர்ந்தோர் வழக்கின் பிற்சேர்க்கையாக மாறும் உள்முரணைக் கொண்டிருக்கிறது. என்னதான் மக்கள் வழக்கை முன்னிறுத்தினாலும் எழுத்து என்பது எழுதத்தெரிந்தோர்க்கானது. எழுதும் வாய்ப்பு கிடைத்தோர்க்கானது. அத்தகைய சமூகச் சூழல் வாய்க்கப்பெற்றோர்க்கானது. இதனால்தான் இந்திய வெளியில் வட்டாரப்பண்பாடு சாதியப் பண்பாடாக, குறிப்பாக, பிராமண, பிராமணரல்லாத இடைநிலை சாதிப் பண்பாடாக வளர்க்கப்பட்டிருக்கிறது. கல்வியில் இருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட எழுதும் வாய்ப்பே கிடைக்கப்பெறாத மக்களின் பண்பாட்டை உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிராத ஒரு சமூகம் விளக்கியபோது புத்தகங்களிலும் ஓரத்து மனிதர்களாகவே சித்திரிக்கப்பட்டனர் தலித் மக்கள்.
தமிழ் இலக்கிய வட்டாரப் பண்பாட்டுச் சூழல் காலனிய காலத்தில் இருந்து இன்றுவரை இத்தகைய போக்கில்தான் இயங்கி வந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் வண்டல் பண்பாட்டை முதன்மை செய்ய வேண்டியதன் தேவையை நாம் உணர்கின்றோம். வண்டல் எழுத்து கரிசல், கொங்கு, நாஞ்சில், நடுநாடு என பிற வட்டார எழுத்துகளைப்போல் குடும்பம், உறவு, தன்வாழ்க்கை என்பதோடு நின்றுவிடாமல் எளிய மக்களின் சமூக விடுதலையைப் பேசுவதாய் மக்களின் உரிமைக்கான புரட்சிக் குரலை உரக்க ஒலிப்பதாய் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து நிலவுடைமைக்குக் கீழ்கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் துயர மனத்தின் இன்னொரு வடிவம். துயரத்தினால் எழுப்பப்பட்டிருக்கும் தஞ்சை எழுத்தைப் பெருமித உணர்வாக மாற்றுவதற்கில்லை. ஆனால் அந்த உணர்வின் தற்கால சமூக அவசியத்தை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை அவர்களின் பண்பாடு முதலியவை இங்கும் மேலிருந்து விளக்கப்பட்டிருந்தாலும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து வெளிப்படும் எழுத்தில் ஆசிரியரின் தன்னிலையையும் மீறி அந்தச் சமூகம் உறைகின்றது. வண்டல் எழுத்து எல்லாவற்றையும்போல ஒரு வழக்கமான எழுத்தாக மதிப்பிடவே முடியாதது. அது ஒரு அரசியல் எழுத்து. மக்களை அரசியல் வயப்படுத்தும் எழுத்து. தமிழ் இலக்கியவெளியில் பிற வட்டார எழுத்துகளைப் போலல்லாமல் வண்டல் எழுத்து புறக்கணிக்கப்படுவதற்கும் பிரச்சார எழுத்தாகக் கருதப்படுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வெறுப்புமிழ்வு காரணம் ஒன்றேயன்றி வேறெதுமே இல்லை. உலகளாவிய இலக்கியவெளியில் தலித், திருநர், பால்புதுமையர், மாற்றுத்திறனாளர்கள் எழுத்துகள் வெற்றுப் பிரச்சாரக் கூச்சல்களாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு இலக்கிய அழகியல் என்றபேரில் தீவிரவாசிப்பாளர்கள் என்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் அளவுகோலுக்குள் எழுத்தை அடக்க முயற்சிப்பதே காரணம். வண்டல் எழுத்திலும் தி.ஜானகிராமன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், க.நா.சுப்ரமணியம் போன்றோர் முதன்மைப்படுத்தப்படுவதற்குப் பின்னாகவும் இந்த மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு அரசியலே இயங்குகிறது. தஞ்சை என்றாலே பச்சைபசேல் வயலும் காவிரியின் மிரட்டும் பிரவாகமும் நெல்முற்றிய பால்வாடையும் வெற்றிலையைக் குதப்பிவரும் பண்ணையாரின் பஞ்சகச்சமும் மட்டுமல்ல நிலமற்ற மனிதர்களின் வயிறற்ற வாழ்க்கையும்தான் என்பதைக் காட்டும் பல எழுத்தாளர்கள் இங்கு இருந்தார்கள். சி.எம்.முத்துவும் சோலை சுந்தரபெருமாளும் அதன் முன்னவர்கள் எனலாம்.
இத்தகைய வரலாற்று சமூக பொறுப்பின் மீதான ஓர்மையுடனே தோழர் மு.சிவகுருநாதன் இந்த ‘ஏரோட்டம்’ எனும் நூலைத் தொகுத்திருக்கிறார். 34 நான்கு சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறாண்டுகால திருவாரூரை நமக்குக் காட்டுகின்றது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான சிந்தனை முறை. திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்ற முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 34 கதைகளும் பன்மீய கருத்துநிலைகளில் சில திருவாரூரை உள்ளடக்கமாகக் காட்டாதிருந்தாலும்கூட திருவாரூரின் வரலாற்றுச் சூழலால் உருவாக்கப்பட்ட ‘பேரறம்’ எனும் ஒற்றைப் புள்ளியில் இணைகின்றது. திருவாரூரின் எழுத்துமுறை அடித்தளத்திலிருந்து ஒருங்குவிக்கும் அறிவாய்வுமுறையைக் (Epistemology of the Subaltern) கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பு உள்ளடக்கப் பண்பிலும் எழுத்தாளர் தேர்விலும் அடித்தளத்திலிருந்தான ஒருங்கிணைக்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பது திருவாரூர் புலன்முறையாக நாம் முன்வைப்பது.
இதுவரையிலாக நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இலக்கியங்கள், அரசியல் உருவாக்கம், பண்பாட்டு மாற்றங்கள், போராட்டச் செய்திகள் இவற்றையெல்லாம் கொண்டு திருவாரூர் புலன்முறையை நாம் கருத்துவயப்படுத்த வேண்டும். ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கவேண்டும். கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும் என்ற சிறுநூலில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பண்ணையாட்கள் பராமரிக்கும் ஆடுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவை பண்ணையில் வேலைப்பார்ப்போரைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்தன. ஆடுகளும் மாடுகளும் புல் மேய்வதைப் பார்க்கையில் பண்ணையாட்களுக்குப் பசி எடுக்கிறது. இதுதான் அந்தச் செய்தி. விலங்குகள் மீதான மக்களின் பார்வைமுறை வரலாறுதோறும் எப்படி இருந்திருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிய இடமிது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் இறைச்சி எனும் இலக்கியக்கூறு காட்டப்பெறும். இது பொதுவாக விலங்குகளின் அன்பு நடவடிக்கைப் பற்றி எடுத்துரைக்கும். பொருளீட்டி வருவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் இத்தகைய விலங்கினமொன்றின் அன்பு செயல்பாட்டைப் பார்க்கின்றான். ஒரு ஆண் யானை பெண் யானைக்கு யா மரத்தைப் பிழிந்து நீரூட்டிவிடுகிறது. இதைப் பார்த்தபோது தலைவனுக்குத் தலைவி நினைவேறி காமவயப்படுவதாகப் பாடல். (குறுந். 37) விலங்கினச் செயல்பாட்டை மனிதவயப்படுத்துவது தமிழ் இலக்கிய அழகியல் மரபாகும். ஆனால் அது எந்த மனிதர்களை மையமிட்டு இருக்கிறது என்பதில்தான் அதில் அரசியல் நுழைகின்றது. தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல் ஓய்வற்ற, உணவற்ற, உடைமையற்ற, பாதுகாப்பற்ற சூழலில் இருப்போர் விலங்குகள் உணவெடுப்பதைத் தங்களின் பசியோடு இணைத்துப் பார்த்திருப்பார்களேயொழிய காமத்தோடு இணைத்திருக்க முடியாது. எனில் சங்க இலக்கியம் காட்டும் மாந்தர்கள் உடைமைப் பண்பாட்டுச் சித்திரங்கள். இவர்களால் ஒருங்கிணைந்த தமிழ் அறத்தைப் போதிக்க முடியாது. இவர்களின் வாழ்க்கைப் பற்றியான சுவடுகள் எல்லா மனிதர்களையும் ஒன்றிணைப்பதாக இல்லை. சங்கப் பாடல்களைப் போன்றே அவர்களது வாழ்க்கையும் தன்னலத்தை மையமிட்ட உதிரிகளாகக் கிடக்கின்றன. இந்த இடத்தில் இருந்துதான் நாம் திருவாரூரின் பேரறத்தைப் பேசுகிறோம். பேச வேண்டும். திருவாரூர் வாழ்மக்கள் நூற்றாண்டு கால நிலவுடைமை நெருக்கடியில் அடிபட்டவர்கள். வளமான வயல்களுக்கு மத்தியில் வளமற்ற வாழ்க்கை வாழ்ந்து பார்த்தவர்கள். இவர்களுடைய சிந்தனைமுறை அடித்தளத்திலிருந்து உயர்நோக்கை வைப்பதாய் உள்ளது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்துதான் வாழ்க்கைப் பற்றி கேள்வி உலகமெங்கும் எழுந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. அத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து வந்த நமக்கு எழுத்து எப்படி அமையவேண்டும் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதன்படி, இந்த ஏரோட்டம் தொகுப்பு ஒரு மாவட்ட எழுத்தை எப்படி தேர்விக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி என்றே துணிவுடன் கூறலாம்.
o தீசன் – திருவாரூர் மத்தியப் பல்கலை. ஆய்வு மாணவர்.
நூல் விவரங்கள்:
ஏரோட்டம் (திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும் – இன்றும்)
தொகுப்பு: மு.சிவகுருநாதன்
வெளியீடு: நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி
விலை: ரூ. 500
தொடர்புக்கு: 9943624956
நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - நவம்பர் 2025







