புதன், ஜூன் 10, 2026

அந்தமானைச் சூழும் ஆபத்து!

 

அந்தமானைச் சூழும் ஆபத்து!

மு.சிவகுருநாதன்


 

           மேலை நாடுகளில் பணக்காரர்கள் சிறிய தீவுகளை விலைக்கு வாங்கி தங்களது சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்துக்கொள்ளும் போக்கு உண்டு. அந்த நிலை இந்தியாவில் இல்லை. 1974 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு அளிக்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை இங்கு தொடர்ந்து எழுப்பப்படுகிறது. நவகாலனியச் சூழலில் இன்று வளர்ச்சி என்ற பெயரால் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழிலகங்கள் அமைக்க அரசுக்குச் சொந்தமான சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன.

         கிரேட் நிகோபர் பழங்குடியினர் மன்ற உறுப்பினர்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து, அவரைத் தீவிற்கு அழைத்திருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 26-28இல் ராகுல் காந்தி அந்தமான் மற்றும் நிகோபருக்கு மூன்று நாள் பயணம் சென்று சந்தித்தார். அதானியுடன் இணைந்த ஒன்றிய அரசின் ரூ.81,000 கோடி மதிப்பிலான கிரேட் நிகோபர் முழுமையான வளர்ச்சித் திட்டம் (The Great Nicobar Holistic Development Project) மூலம் தீவின் தூய்மையான சூழலியல், நிகோபரீஸ் மற்றும் ஷோம்பென் பழங்குடியினர், பெருநிலக் குடியேறிகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளுக்குள் கொண்டுவந்தது.

         கிரேட் நிகோபர் திட்டம் (Great Nicobar Project) என்பது அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இருப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட முதன்மைத் திட்டமாகச் சொல்லப்பட்டாலும் இதில் முதலீடு செய்வது அதானி குழுமமே.   துறைமுகத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியுடன், சீரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பழங்குடிச் சமூகங்களின் பாதுகாப்புடன் சமநிலைப்படுத்த முயல்வதாகவும்  இருப்பிட, பொருளாதார மற்றும் சூழலியல் முன்னுரிமைகளை ஒன்றிணைப்பதன் மூலம், கிரேட் நிகோபரின் வளர்ச்சி நிலையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தேசிய நலன்களுடன் ஒத்திசைந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்வதாக பாசாங்கு செய்தாலும் சூழலையும் பழங்குடி மக்களையும் ஒருசேரப் பாதிப்பதாகவே இத்திட்டம் அமைகிறது.

           இத்திட்டம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, கிழக்கு-மேற்கு கப்பல் வழித்தடத்திற்கு அருகாமையில் (சுமார் 40 கடல் மைல்கள்) இருப்பதன் மூலம் கிரேட் நிகோபரை ஒரு முதன்மையான கடல்சார் மற்றும் பொருளாதார மையமாக மாற்றுவதையும், வெளிநாட்டு சரக்குமாற்றுத் துறைமுகங்கள் மீதான சார்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தாலும் இதன் நடைமுறைச் சாத்தியம் கேள்விக்குரியது.  

      மூன்று கட்டங்களாக இத்திட்டம் மொத்தம் 166.10 .கி.மீ. பரப்பளவில் செயல்படுத்தப்படவிருக்கிறது.  இதில் 35.35 .கி.மீ. வருவாய் நிலமும், 130.75 .கி.மீ. வன நிலமும் அடங்குகிறது.  இப்பகுதியில் அமையவிருக்கும் நான்கு முதன்மைத் திட்டங்களுள் ஒன்று:  14.2 மில்லியன் (Twenty-foot Equivalent Unit – TEU) கொள்ளளவு கொண்ட சர்வதேச கொள்கலன் மாற்று முனையம் (International Container Transshipment Terminal - ICTT). இதன்மூலம் பெரிய சரக்குக் கப்பல்களை ஆழ்கடலில் நங்கூரமிட்டு கையாளும் வர்த்தகத்தில் சீனா போன்ற நாடுகளைப்போல ஈடுபட அதானிக்கு இதன்மூலம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் கலாத்தியா வளைகுடாவில் சர்வதேச கொள்கலன் சரக்கு மாற்றுத் துறைமுகமும் ((International Container Transshipment Port ICTP) உருவாக்கப்படவிருக்கிறது.


 

            இரண்டாவதாக அதிகபட்சமாக 4000 பயணிகளைக் கையாளும் பசுமைவெளி சர்வதேச விமான நிலையம் மூலம் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிடுகின்றனர். போர்ட் பிளேர் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு சுமார் 1.8 மில்லியன் பயணிகளைக் கையாளுகிறது. புதிய விமான நிலையம் திறக்கப்படும்போது குறைந்தபட்சம் 1 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்றும், வளர்ந்த பிறகு ஆண்டுக்கு சுமார் 10 மில்லியன் பயணிகளாக உயரும் என்றும் சொல்லப்படுகிறது.

          மூன்றாவதாக, 16,610 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு புதிய நகரமைப்பு குடியிருப்புப் பகுதி. துறைமுகம், விமான நிலையம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்குத் தேவையான நகர்ப்புற உள்கட்டமைப்பை இது வழங்கும் என்கிறார்கள். நான்காவதாக, 450 மெகாவோல்ட் ஆம்பியர் (MVA) திறன் கொண்ட எரிவாயு மற்றும் சூரிய ஆற்றல் அடிப்படையிலான பசுமை மின்னுற்பத்தி நிலையமும் அமையவுள்ளது. தற்போது, அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் டீசல் மின்னாக்கிகளே மின்னாற்றலின் முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் சரக்கு மாற்று முனையம், விமான நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நகர்ப்புற உள்கட்டமைப்புகளின் செயல்பாட்டிற்கு நம்பகமான மின்சார உள்கட்டமைப்பு அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.

      விமான நிலையம், சரக்குத் துறைமுகம், குடியிருப்புப் பகுதி மற்றும் மின் உற்பத்தி நிலையத்துடன் சேர்ந்து, கலாத்தியா வளைகுடா சரக்கு மாற்றுத் துறைமுகம் ஒட்டுமொத்த கிரேட் நிகோபார் திட்டத்தின் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு அங்கமாக அமைந்து கிழக்கு-மேற்கு சர்வதேச கப்பல் போக்குவரத்து வழித்தடத்திற்கு அருகில், சுமார் 40 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளதாலும், 20 மீட்டருக்கும் அதிகமான இயற்கையான நீர் ஆழத்தைக் கொண்டிருப்பதாலும் இந்தத் துறைமுகம் இருப்பிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

            கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் கிளாங் போன்ற வெளிநாட்டுத் துறைமுகங்கள் மீதான இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பதாகச் சொல்லி அதானியின் சார்பில் இருக்க வேண்டிய அவசியம் மறைக்கப்படுகிறது. முற்றிலும் அதானிமயமான துறைமுகங்களில் இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை பற்றிய பிதற்றல்களுக்கு இடமில்லை. இத்தீவுகளின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு என்ற சொல்லாடல்களுக்கிடையில்   முற்றிலும் அதானி குழுமத்தில் வளர்ச்சியே அடங்கியுள்ளது. தனியார் துறைமுகங்களால் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தல், போதைப்பொருட்கள் கடத்தல் போன்றவை குறித்து இங்கு யாரும் கேள்வி எழுப்பும் நிலையில் இல்லை.

            சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை, 2006 இன்படி இத்திட்டத்திற்கு முன்-சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து திட்டம் தொடர்பான் மதிப்பீடுகளும் ஆய்வுகளும்  விரிவாக செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும்  இவை நேர்மையான முறையில் நடந்ததாக நம்ப இயலவில்லை. இந்த அனுமதியுடன் காற்று, நீர், ஒலி மாசு, கழிவு மேலாண்மை, கடல்சார் சூழலியல், மனித நலன் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய 42 குறிப்பிட்ட நிபந்தனைகளுடன்  ஒரு வலுவான சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டமும் (EMP) இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

         இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI), சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON), இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) போன்ற நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இத்திட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும்  இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மட்டும், உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் ஷோம்பென் (Shompen) மற்றும் நிக்கோபரீஸ் (Nicobarese) பழங்குடியினச் சமூகங்களின் நலன் ஆகியவற்றை மேற்பார்வையிடுவதற்காக, மூன்று தனித்தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

        அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளின் மொத்த வனப்பரப்பில் 1.82% வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படவுள்ளது. இப்பகுதியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை சுமார் 18.65 லட்சம் என்றாலும் 49.86.கி.மீ. வனப்பரப்பிற்குள் அதிகபட்சமாக 7.11 லட்சம் மரங்கள் மட்டுமே வெட்டப்படும் என்று சொல்கிறார்கள். 65.99 .கி.மீ. நிலப்பரப்பு கட்டடங்கள் நிறைந்த 'பசுமை மண்டலங்களாக' (Green Zones) பாதுகாக்கப்படுமாம்! இத்தீவுகளில் ஏற்கனவே 75% அதிகமான வனப்பரப்பு உள்ளதால், ஈடுசெய்யும் காடு வளர்ப்புப் பணிகளை உள்ளூரிலேயே மேற்கொள்வது சாத்தியமில்லை என்பதால், அதற்கு மாற்றாக, அரியானா மாநிலத்தில் காடு வளர்க்கப் போகிறார்களாம்! முதற்கட்டமாக 48.65.கி.மீ. வனப்பரப்பிற்கு  மாற்றாக, அப்பகுதியில்  97.30.கி.மீ. நிலம் கண்டறியப்பட்டு, ‘அன்னை பெயரில் ஒரு மரம்' என்ற திட்டத்தின் கீழ் 2.4 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

         2011 கணக்கெடுப்பின்படி பெரிய (கிரேட்) நிக்கோபர் தீவில், வேட்டையாடி உணவு சேகரிக்கும் பூர்வீக மங்கோலியப் பழங்குடியினரான ஷோம்பென்கள் சுமார் 237 பேரும், கடலோரக் குடியிருப்புகளில் வசித்து, வாழ்வாதாரத்திற்காக முக்கியமாக மீன்பிடித்தலைச் சார்ந்துள்ள நிக்கோபரீஸ்களும் சுமார் 1,094 பேரும் வசிக்கின்றனர். இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை இப்பகுதியில்தான் உள்ளது.

         வங்காள விரிகுடாவின் ஓரத்தில் அந்தமான் கடலுக்கும் விரிகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள, அந்தமான்நிகோபர் தீவுகள் பல்லுயிர் பெருக்கத்தின் இருப்பிடமாகவும் தொல்குடி மக்களின் தாயகமாகவும் விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) 'மனிதனும் உயிர்க்கோளமும்' திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள உயிர்க்கோளக் காப்பகமாக கிரேட் நிகோபர் உள்ளது. இது இந்தியாவின் கேம்பல் பே மற்றும் கலாத்தியா தேசியப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள் மற்றும் தனித்துவமான கடலகச் சூழல் அமைப்புகளைக் கொண்ட கிரேட் நிகோபர் உயிர்க்கோளக் காப்பகம், அழிந்துவரும் உயிரினங்கள் உட்பட பரந்த அளவிலான வனவிலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் தாயகமாகவும்  அத்தீவின் தொல்குடி இனங்களின் வாழ்வாதாரமும் இத்திட்டத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

          இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பு இந்திய அரசு நிறுவனமான அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் ஒருங்கிணைந்த அபிவிருத்தி கழகம் லிமிடெட் (ANIIDCO) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தன்னிடம் சுற்றுச்சூழல் கொள்கைகள் இல்லை என்பதை ANIIDCO ஒப்புக்கொண்ட போதிலும், நவம்பர் 2022 இல் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் (EAC) சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது. ANIIDCO வின் நிர்வாக இயக்குநர் காடுகளை வெட்ட அனுமதியளிக்கும் அந்தத் தீவுகளின் ஆணையர்-மற்றும்-செயலர் (சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள்) ஆகவும் இருந்ததோடு மட்டுமின்றி,  இந்தத் திட்டத்திற்கு எதிரான புகார்களை விசாரிக்கும் உயர் அதிகாரக் குழுவிலும் அங்கம் வகித்த விதிமீறல்கள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டன.

        இத்திட்டம் ஷோம்பென் மக்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளிவிடும் என்று எச்சரித்து, எனவே திட்டத்தை நிறுத்துமாறு 2024 பிப்ரவரியில் உலகெங்கிலும் உள்ள அறிஞர்கள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வேண்டுகோள் விடுத்தனர். மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஷோம்பென் மக்களைப் பாதுகாக்க  முள்வேலியிட  (geo fencing) முடிவு செய்யப்பட்டதை சமூக ஆர்வலர்கள் மிகக்கடுமையாக கண்டித்தனர். இது தொல்குடி மக்களை திறந்தவெளிச் சிறையில் வைக்கும் முயற்சியாகும்.

         பத்து லட்சம் மரங்கள் வெட்டப்படுவதால் வனவிலங்குகளின் வாழ்விடங்கள் முற்றாக அழிகின்றன. வாழ்விட அழிப்பால் மனிதன் - வனவிலங்கு மோதல் அதிகமாகும். பவளப்பாறைகளும் அத்தீவின் நுட்பமான சூழல் மண்டலத்தைச் சார்ந்துள்ள உயிரினங்கள் நீண்ட வால் குரங்கு மற்றும் கலாத்தியா விரிகுடா பகுதியில் முடையிட்டு இனப்பெருக்கம் செய்யும்  கடல் ஆமைகள் போன்றவை பாதிப்பிற்குள்ளாகும்.

       மேற்கில் கொழும்புத் துறைமுகத்திலிருந்தும், தென்கிழக்கில் கிளாங் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களிலிருந்தும் சம தொலைவில் அமைந்துள்ள கிரேட் நிகோபர்  தீவின் இருப்பிட முதன்மையே இவ்விடத்தை நாசமாக்கத் துணிந்தற்கான காரணமாகும். மேற்கண்ட துறைமுகங்களுடன் போட்டியிட்டு பொருளாதார வளர்ச்சியடைய முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். தற்போது திட்டமிடப்பட்டுள்ள செலவும் வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இங்கிருந்து தளவாடங்களைக் கொண்டுசெல்வதும் சிக்கல் மிகுந்ததாகப் பார்க்கப்படுகிறது.

  புயல்கள், நில அதிர்வுகள், சுனாமி போன்ற பேரிடர்கள் அதிகம் நிகழும்பகுதி என்பதும் அவற்றிற்கு ஆய்வில் உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்பதும் மிக மோசமான முன்னுதாரணமாகும். இந்தியாவின் மேற்குக்கரை கேரளத்தில்  அதானியால் இயக்கப்படும் விழிஞ்சம் துறைமுகம் போன்று கிழக்குக்கரையில் இத்துறைமுகம் அமையும் என்பதும் தவறான ஒப்பீடாகவே அமையும். இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு மற்றும் இறையான்மையை வலியுறுத்தி அதானி குழுமத்திற்குச் சேவை செய்யவே ஒன்றிய அரசு இத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இதன்மூலம் ஏற்படும் சூழலியல், நிலவியல் பாதிப்புகள் இந்தியப் பெருங்கடல் வெளியில் பேரிடராக அமையும்.

நன்றி: பேசும் புதியசக்திமாத இதழ் ஜூன் 2026