முருகன், சாந்தன், பேரறிவாளன்: மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றி – அ.மார்க்ஸ்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு, அவர்களத் தூக்கில் தொங்கவிட நாளும் (செப்டெம்பர் 9) நிர்ணயிக்கப்பட்ட சூழலில் தமிழகத்தில் இதற்கெதிராக வெடித்த போராட்டம் இன்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உயர் நீதிமன்றம் அவர்களைத் தூக்கிலிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவர்களது மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்க இரண்டு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சுமார் ஒரு மாத காலமாக, பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்து வந்த முதல்வர் ஜெயலலிதா, கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவரை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றை சகல கட்சி ஆதரவுகளுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
இது ஒரு தற்காலிகமான வெற்றிதான் என்ற போதிலும் வழக்கின் முடிவு மூவரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாகவே அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னணியாகக் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி அமைகிறது.
மத்திய அரசைப் பொருத்தமட்டில் அது இந்த மூவரைத் தவிர, பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவையும் நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. எனினும் முருகன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் மட்டுமே உடனடியாக நிராகரிக்கப்பட்டன. இப்படியான ஒரு முடிவை குடியரசுத் தலைவர் ப்ரதீபா படீல் தன்னிச்சையாக எடுத்திருப்பார் எனச் சொல்ல முடியாது. சோனியாவுக்கு மிகவும் விசுவாசியான ப்ரதீபா, முந்தைய சில குடியரசுத் தலைவர்களைப் போல சுயேச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் அல்ல. ஆக, அப்சலின் கருணை மனுவை நிறுத்தி வைத்து மற்றவர்களின் மனுவை நிராகரித்த முடிவு சோனியா, மன்மோகன், சிதம்பரம் என்கிற மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவே கருத இடமுண்டு. அப்சல் குருவின் மீதான வழக்கு முழுமையாக விசாரிக்கப்படவில்லை, தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு முழுமையாக வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது மனித உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டு. தவிரவும் தண்டனையை உறுதி செய்த நீதிபதி ‘சமூகத்தின் கூட்டு மனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக’ இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டது இன்றுவரை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆனால் இந்தக் காரணங்களுக்காக அவரது கருணை மனு நிராகரிப்பு ஒத்தி வைக்கப்படவில்லை. மாறாக, “அப்சலைத் தூக்கிலிட்டால் காஷ்மீர் மாநிலமே பற்றி எரியும்” என காஷ்மீர் முதல்வர் ஒமர் அதுல்லா எச்சரித்ததன் விளைவாகவே இன்று அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஈழ ஆதரவு அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றோடு எதிர்ப்பு நடவடிக்கைகள் நின்றுவிடும் எனவும், ஜெயலலிதா எக்காரணம் கொண்டும் மரண தண்டனைக் குறைப்பை ஆதரிக்க மாட்டார் எனவும் மத்திய அரசு உறுதியாக நம்பியது. தவிரவும் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மனங்களை இயற்றியதன் மூலம் ஈழ ஆதரவு அமைப்புகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மத்தியில் ஜெயா ஒரு நாயகியாக வலம் வரும் நிலைக்கு இதன் மூலம் ஒரு ‘செக்’ வைக்கவும் அது நினைத்தது.
மத்திய அரசின் இரு நம்பிக்கைகளிலும் உண்மைகள் இருக்கவே செய்தன. தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கான எதிர்ப்புகளை தமிழ்த் தேசிய அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள், நக்சல்பாரி அரசியல் சார்ந்த குழுக்கள் ஆகியனவே முன்னெடுத்தன. முருகன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை மட்டுமின்றி, மரண தண்டனையையே ஒழிக்க வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வரும் எங்களைப் போன்ற மனித உரிமை அமைப்புகளும் களம் இறங்கின. மனித உரிமை அமைப்புகளைப் பொருத்த மட்டில் அவைகளுக்குப் பின்னால் பெரிய ஆள் பலம் இல்லாத போதும் கருத்தியல் மட்டத்தில் அவற்றிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. இவை தவிர தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ஒன்றும் களம் இறங்கவில்லை. மாநில அளவுக் கட்சிகளில் எதிர்பார்த்தது போல பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன மட்டுமே தீவிர எதிர்ப்புகளில் இறங்கின.
அவசர கதியில் தூக்கு நிறைவேற்றத்தை நோக்கி நிகழ்வுகள் நகர்ந்தபோது போராட்டம் தீவிரம் அடைந்தது. எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவில் ஊடக ஆதரவு இருந்தது. காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வலுமிக்க சக்தியாக இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகமெங்கும் எதிர்ப்பு அலைகள் பல்வேறு மட்டங்களில் எழுந்தன. மூன்று பெண் வழக்குரைஞர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எதிர்ப்பியக்கத்திற்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்தது. மாணவர்கள் ஆங்காங்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். சேலம், கோவை போன்ற இடங்களில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வழக்கம்போல வழக்குரைஞர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்தது. இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த செங்கொடி தீக்குளித்த போது போராட்டம் இன்னொரு திருப்பு முனையை எட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி உருவானது போன்ற சூழல் மீண்டும் உருவாகக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே காஷ்மீரே பற்றி எரியும் என்று சொன்ன அளவிற்கு இங்கு நிலைமை உருவாகாவிட்டாலும், எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய எதிர்ப்புகள் உருவாகவே செய்தன.
ஜெயாவைப் பொருத்தமட்டில் அவர் இயல்பில் மரண தண்டனைக்கு எதிரானவர். குற்றம், தண்டனை, அரசதிகாரம் முதலான அம்சங்களில் ரொம்பவும் பழமைக் (conservative) கருத்துக்களை உடையவர். நளினியின் மரண தண்டனைக் குறைப்பிற்கே எதிர்ப்புக் காட்டியவர். “உங்கள் கணவருடைய கொலை என்கிற ரீதியில் பிரச்சினையை அணுகக் கூடாது. ஒரு தேசத் தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டக் கூடாது” என சோனியாவிடமே சீறியவர். தண்டனைக் குறைப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அவரை நோக்கித் தமிழ் அமைப்புகளால் வைக்கப்பட்ட போது இறுக்கமான மௌனமே பதிலாக அமைந்தது. சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை டாக்டர் கிருஷ்னணசாமி எழுப்ப முனைந்தபோது அனுமதிக்கப்படவில்லை. அவர் வெளிநடப்புச் செய்தார். இது தொடர்பாக நெடுமாறன் முதலானோர் ஜெயாவைச் சந்திக்க முயன்றபோது இன்றுவரை அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில்தான் தண்டனைக் குறைப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச் சொல்லி கருணநிதி, காயை ஜெயா பக்கம் நகர்த்தினார். வேறு வழியில்லாமல் ஜெயா பேச வேண்டியதாயிற்று. தண்டனைக் குறைப்பிற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனச் சென்ற 29ந் தேதியன்று அவர் கைவிரித்தபோது தமிழ் தேசிய இயக்கங்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாயினர். அப்போதுகூட அவர் தண்டனைக் குறைப்பில் தனக்கு உடன்பாடு உண்டு, அதிகாரந்தான் இல்லை என ஒப்புக்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. இறுதி அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றபோதிலும் அதற்கான அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க முடியும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னும் கூட மாநில அரசு முயற்சித்து தூக்கு ரத்தான வரலாறு உண்டு என்கிற கருத்தை அவர் கண்டு கொள்ளவில்லை.
எனினும் அடுத்த நாள் காலை தண்டனைக் குறைப்பு குறித்து அவரே ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இதன் மூலம் அவர் காயை மத்திய அரசை நோக்கி நகர்த்தியுள்ளார். ஈழ மற்றும் தமிழ் தேச ஆதரவு சக்திகளின் மத்தியில் மீண்டும் நாயகி ஆகியுள்ளார். அதே நேரத்தில் மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கருத்து ஏதும் சொல்லவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அளவோடு தீர்மானம் நின்றுள்ளது.
எப்படியோ மத்திய அரசைப் பொருத்தமட்டில் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. தீர்மானம் இயற்றியபோது சட்டமன்றத்துக்குள் அமைதி காத்த காங்கிரஸ் கட்சியினர் வெளியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத் தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை அணுகி தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்தி வைக்கும் முயற்சிகளும் கூடவே நடைபெற்றன. புகழ்பெற்ற வழக்குரைஞர்கள் ராம் ஜேத்மலானி, காலின் கொன்சால்வ்ஸ், வைகை ஆகியோர் மூவருக்காகவும் ஆஜராயினர். மரண தண்டனை அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த நீண்ட கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு தூக்கை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக அதைக் குறைக்க வேண்டும் என்பதே வழக்குறைஞர்களின் வாதம். ஏற்கனவே குறைந்த பட்சம் மூன்று வழக்குகளில் நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில் மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவ்வாதத்தை ஏற்று மனுவை அனுமதித்துள்ளது.
எனினும் “குற்றத்தின் தன்மை, சமகாலச் சமூகத்தில் இத்தகைய தண்டனைக் குறைப்பு ஏற்படுத்தக் கூடிய பாதிப்பு, மீண்டும் இது போன்ற குற்றச் செயல்கள் நடைபெறும் வாய்ப்பு” ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு கால தாமதத்தைப் பொருட்படுத்தாமல் தண்டனையை நிறைவேற்றலாம் என்கிற கருத்தையும் உச்சநீதிமன்றம் முன்னதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் எப்படியும் தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக இந்தப் பிரச்சினையை ஒட்டி ஏற்பட்டுள்ள எழுச்சி, ராஜீவ் கொலையில் கொலையை நடத்தியவர்களாகக் கருதப்படுபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இன்று மரணித்துவிட்ட நிலையில் உடந்தையாய் இருந்தவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு இத்தகைய உச்சபட்ச தண்டனை தேவைதானா என்பது போன்ற கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற காரணங்களைப் புறக்கணித்துவிட்டு கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு மரண தண்டனை குறைக்கப்படுவதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது.
இன்று உருவாகியுள்ள எழுச்சி மற்றும் விழிப்புணர்வு ஆகியன மரண தண்டனையை முற்றாக ஒழிக்கும் நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் மூவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்ட கையோடு மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் ஓய்ந்து விடக்கூடிய வாய்ப்பே அதிகமுண்டு.
தினக்குரல்/ 01.09.2011
நன்றி:- www.amarx.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக