செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே - அ.மார்க்ஸ்

 இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே   - அ.மார்க்ஸ்    


        இந்திய அளவில் இன்றைய பேச்சு அண்ணா ஹஸாரேதான். பத்திரிகைகளைப் புரட்டினால், தொலைக்காட்சியைத் திறந்தால், நகர வீதிகளில் நடந்தால் எங்கும் அண்ணாஜிதான். சென்னை வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம் தீட்டிய முகங்களுடன் மூலைக்கு மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரிகளில் மாணவர்கள் மூவண்ணக் கொடிகளுடன் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அண்ணாவிடம் சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச் சாவேன் என உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன் மிரட்டி ஊடகங்களில் இடம்பிடிக்கிறான்.

       இன்னொரு பக்கம் ட்விட்டர் அப்டேட்கள், குறுஞ்செய்திகள் இப்படியாக அண்ணாவின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. நகர்களெங்கும் தொங்குகிற ஆயிரக்கணக்கான ஃப்ளெக்ஸ் போர்ட்கள் இந்த ஆதரவு இயக்கங்களுக்கு நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
ஊழல் ஒழிப்புப் போராட்டத்தில் அண்ணா குழுவிற்கு (டீம் அண்ணா) வெளிவட்டத்தில் நின்று ஆதரவளித்து வருகிற அருணா ரோய், ஹர்ஷ் மாந்தர் போன்றோர்,  கோரிக்கை எல்லாம் நியாயந்தான். ஆனால் அதற்காக இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்து மட்டுமே சரி என்பதாகக் கருதி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பது தவறு எனச் சொன்னவுடன், உள்வட்டத்தில் இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், நாங்கள் எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை என்பதற்கு மக்கள் அளிக்கும் பேராதரவே சாட்சி என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.

          அண்ணா ஹஸாரேக்கு ஆதரவாக இன்று பெரிய அளவில் இந்தியாவின் நடுத்தரவர்க்கம் திரண்டு நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு இன்று நடத்தும் பச்சை வேட்டை, விவசாயிகள் தற்கொலை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், மரண தண்டனை ஒழிப்புஎன எல்லா அரசியல் பேச்சுக்களையும் ஓரங்கட்டி, ஜன் லோக்பால் என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார்? இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன?

      போராட்டக் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான். இந்திய மக்கள் தொகையில் 30 சதம் வரை நடுத்தரவர்க்கத்தினர் உள்ளதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள் ஒரு படித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள். எனினும் இவர்களுக்கிடையில் பல பொதுமையான அம்சங்களும் உண்டு.
       இவற்றில் முதன்மையானது இன்றைய ஆட்சி முறையையும் நிறுவனங்களையும் பெரிய விமர்சனமின்றி நம்புவது. அடுத்து இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள், நால்வழிச்
சாலைகள், மெட்ரோ ரயில்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது. இவர்களின் ஒரே குறை இத்தகைய வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே என்பதுதான்.
நடுத்தர வர்க்க மதிப்பீடுகளில் இன்று மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு உயர் பதவிகளை லட்சியமாகக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில் குவிகிறது. நாராயண மூர்த்தியும் நந்தன் நீல்கெய்னியும் தான் இன்று அவர்களின் ரோல் மாடல்கள். மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்கரியம், மொழி வழித் தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான அரசியல்களும்கூட காலத்துக்கு ஒவ்வாது என்பது இவர்களின் கருத்து. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் விரும்பும் அரசியல் மாற்றங்களை செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள், அரசியல் செயல்பாடுகள், ஆயுதப் போராட்டங்கள் முதலியன தேவையில்லை, இவை தேவையற்ற விரயங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது இவர்களின் உறுதியான கருத்து.

       இந்த இடத்தில்தான் காந்தி குல்லாயுடன் காட்சியளிக்கும் அண்ணா ஹஸாரே இவர்களுக்குப் பொருத்தமான தலைவராகிவிடுகிறார். யார் இந்த அண்ணாஜி? மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய பாகிஸ்தான் போரின்போது "க்ன்வாய்' ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம் இவரைத் தவிர. நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும்? ஆண்டவன் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான் என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல் முதலானவற்றை ஒழித்து மக்களை உய்விக்க விரதம் பூண்டாராம்.

        இராணுவத்தில் கிடைத்த ஓய்வு ஊதியப் பலன்களைக் கொண்டு, சொந்த மாவட்டத்திலுள்ள ராலேகான் சித்தி என்கிற கிராமத்திலிருந்த கோவிலொன்றைப் புதுப்பித்து அதையே தன் வாழ்விடமாக மாற்றிக்கொண்டார். ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான அற ஆளுமையாக (Moral Authority) மக்கள் மத்தியில் உருப்பெற்றார். மழை குறைவான பஞ்சப் பிரதேசமான ராலேகான் சித்தி  கிராமத்தை சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றிய வகையில் இன்று அவர் மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார். பத்ம பூஷன் முதலான பல தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது முயற்சியை மாதிரியாகக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது.

       தமது மராட்டிய தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள் மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை 19ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற மாநிலம் அது. இந்த தேசீய பிராந்தியப் பெருமையே பின்னர் சிவசேனா போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் உருவானதும் இம்மண்ணில்தான். அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல், மக்கள் தாமே சிரமதானம் மேற்கொண்டு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உண்டு. இந்த மரபைப் பின்பற்றி மக்களைத் திரட்டி மழை நீரைத் தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி அவர்களின் வறுமையைப் போக்கியதோடு, பள்ளி, விடுதி எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டார் அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான் சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை ஆண்டு வருகிறார்.

         ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் அண்ணா, தேர்தல்களும் அரசியல் கட்சிகளும் கிராம ஒற்றுமையைக் குலைத்துவிடும் என இரண்டையும் அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே தலைவர்கள். அப்புறம் அங்கே திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு கிராமத்திற்குள் நுழைபவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள். குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம். கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே முடிவுகள் எடுக்கப்படும்.

      அந்த கிராமத்தில் தங்கி ஆய்வு செய்த முகில் சர்மா என்கிற ஆய்வாளர் தலித்கள் மற்றும் பெண்களின் நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். தற்போது அண்ணா முன் மொழிகிற லோக்பால் மசோதா அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட ஒரு சூப்பர் அதிகார அமைப்பாக இருக்கும் எனவும், காந்தியடிகள் கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும் அண்ணாவின் அணுகல்முறைகளுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது இவரது மசோதா.

         ஒரு கூட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்றார் அண்ணா. இது உங்களின் காந்தியக் கொள்கைக்கு விரோதமில்லையா எனக் கேட்டபோது,  அதுதான் சொல்றேன். நமக்கு காந்தி மட்டும் போதாது. நமது லட்சிய மாதிரியா சிவாஜியும் இருக்கணும். அப்படித்தான் ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல் ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார் என்று பதிலுரைத்தார். ஊழல் பேர்வழிகளின் கையை வெட்டணும், தலையை வாங்கணும் என்றெல்லாம் அவர் சொல்வது ஏதோ கோபத்தில் மட்டுமல்ல. அண்ணாவைப் பொறுத்த மட்டில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமலிருந்தால் போதும். மற்றப்படி மதவாதம், தீண்டாமை, உலகமயம் இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. அதனால்தான் அவர் கூசாமல் நரேந்திர மோடியை நல்ல நிர்வாகி எனப் பாராட்டினார்.

       அண்ணா ஹஸாரேயின் உள் வட்டத்தைச் சேர்ந்த சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே மூவரும் நீதித் துறையைச் சார்ந்தவர்கள். முதலிருவரும் வழக்குரைஞர்கள். மூன்றாமவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பால் பதவி இழக்க இருந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அறிவித்து நீதித் துறையை ஒடுக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்த கதை நினைவிருக்கலாம். அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை மறுத்து, கீழே இருந்தவர்களை மேலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா. அப்படிப் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான் சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி காலம் முடிந்து ஜனதா ஆட்சி வந்தபோது மீண்டும் நீதித்துறையைப் பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான் சாந்தி பூஷன்.  அவரது மகன்தான் பிரசாந்த் பூஷன்.உரிய சட்ட திருத்தங்களைச் செய்து நீதித் துறையை பலப்படுத்தியதோடு மேலும் இரு மாற்றங்களை அவர் செய்தார்.

1) பொது நல வழக்கு (Public Interst Litigation) அறிமுகப்படுத்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படுகிற பிறருக்காக அரசை எதிர்த்து வழக்குப் போடலாம்.

2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்பது உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே இன்று பொது நல வழக்குகள் மூலமாக அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் உணவு உரிமைச் சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டுள்ளன.

      உள்வட்டத்தில் உள்ள இன்னொருவர் அர்விந்த் கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு நிறுவனம் இச் சட்டத்தின் மூலம் பெற்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் கார்பொரேட் நிறுவன உதவிகள் கிடைக்கின்றன என்றும், இந் நிறுவனங்களில் பல இந்தியாவின் கனிமவளங்களைக் கொள்ளை அடித்து, சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும் குற்றம் சாட்டுகிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்.
ஆக நீதிமன்றங்கள், இருக்கிற சட்டங்கள் மற்றும் புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள் முதலானவற்றின் மூலமாகவே நாட்டின்  எல்லாக் குறைகளையும் போக்கி, சுபீட்சத்தை உருவாக்கிவிடமுடியும் என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ் உள்வட்டத்தினர்.

       பொது நல வழக்குகள், தகவல் அறியும் உரிமை, சகல அதிகாரங்களும் குவிந்த லோக்பால் அமைப்பு ஆகியவற்றின் மூலம் "ஒளிரும் இந்தியாவை' உருவாக்கிவிடமுடியும் என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு உண்ணாவிரதம், ஒத்துழையாமை முதலான காந்திய வழிகளை மட்டுமே பயன்படுத்தி, காந்தியத்திற்குச் சற்றும் பொருந்தாத கார்பொரேட் நகர்ப்புறக் கலாசாரத்தை நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே  சரியான தலைவராகப் பொருந்திப் போகிறார்.

         சமீபகாலப் பெரு ஊழல்களுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கார்பொரேட்களுக்கு வழங்கப்பட்டுள்ள அபரிமிதமான அதிகாரம், இதர முக்கியமான பிரச்சினைகளான மதவாதம், சாதீயம், பழங்குடி உரிமைகள், கல்வி/ மருத்துவம் முதலானவை வணிகமயமாதல், கறுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறித்தல் முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள் அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர். இப்படியான இயக்கங்களில் எளிதாக வலதுசாரி பாசிச சக்திகள்  உள்ளே நுழைந்து விடுவதே கடந்த கால வரலாறாக இருந்துள்ளது.   ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி என்பதை மறந்துவிட முடியாது. இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி சக்திகள்தான் அதிக அளவில் அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றனர்.

       இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல்களை மன்னிக்க முடியாது.

          ஆனால் பிரச்சினை ஊழல்களோடு முடிந்துவிடுவதில்லை. ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி மற்றவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவது மிகவும் ஆபத்தானது என்கிற கருத்து அருந்ததி ராய் போன்ற  அறிவுஜீவிகளால் முன்வைக்கப்படுகிறது.

(அண்ணா ஹசாரே நேற்றுமுன்தினம் காலை உண்ணாவிரதத்தை கைவிடுவதற்கு முன்னதாக எழுதப்பட்ட கட்டுரை இது)

நன்றி:-தினக்குரல் 30.08.2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக