திங்கள், ஜனவரி 30, 2012

அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்


அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை போராட்டத்தில் இரு நாட்கள்                                       
                                               -மு.சிவகுருநாதன்




மூன்றாம் கட்டப் போராட்டத்தில் 80 -வது நாள்


பதிலளிக்கும்  போராட்டக் குழுவினர்

போராட்டக்காரர்களிடம் நிறைய கேள்விகள் 

சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் அவர்களுடன் போராட்டக் குழுவினர்

போராட்டத்தில் பெண்கள் 

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்

மூன்றாம் கட்டப் போராட்டத்தில் 81 -வது நாள்

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்

உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள்


புதுச்சேரி கோ. சுகுமாரன்

மு.சிவகுருநாதன்

வழக்குரைஞர் ரஜினி

பேரா. அ. மார்க்ஸ்

பத்திரிக்கையாளர் சந்திப்பு 

பத்திரிக்கையாளர் சந்திப்பு

 
         பேரா. அ. மார்க்ஸ், புதுச்சேரி கோ. சுகுமாரன், வழக்குரைஞர் ரஜினி ஆகியோருடன் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக இடிந்தகரையில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தை இரு நாட்கள் அருகிலிருந்து கவனிக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.  ஜனவரி 05, 06 (2012) ஆகிய இரு தினங்கள் (தொடர் போராட்டத்தின் 142, 143 -வது நாட்கள்) போராட்டக்காரர்களுடன் பொழுதைக் கழித்த நாங்கள் ஜனவரி 07 (2012) மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினோம்.  அதில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சுப. உதயகுமார் கலந்து கொண்டார்.

       மத்திய அரசின் திட்டமிட்ட காய்நகர்த்தல்கள் மற்றும் திசை திருப்பல் உத்திகள் மூலம் முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினை உருவாக்கப்பட்ட பிறகு ஊடகங்களின் கவனம் கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் இல்லாமற் போய்விட்டது.  ஆனால் மக்களின் போராட்ட உணர்வு எவ்விதத்திலும் மழுங்கிவிடவில்லை என்பதை நாங்கள் நேரில் கண்டோம்.  மத்திய அரசின் பல்வேறு கட்ட அவதூறுப் பிரச்சாரத்திற்கிடையில் இம்மக்களின் ஒற்றுமை மிக்க போராட்ட உணர்வு மெச்சத் தக்கதாய் உள்ளது.  குறிப்பாக பெண்களின் பங்கேற்பு இப்போராட்டத்தை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
 
       உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்களின் பங்கு அதிகம்.  ஆண்கள் பெரும்பாலும் பணிக்குச் செல்வதால் பெண்கள் பெருந்திரளாக உண்ணாவிரதத்தில் பங்கேற்கின்றனர்.  நாங்கள் அங்கிருந்து ஜனவரி 05 (2012 ) இல்  சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன் சென்னையைச் சேர்ந்த ஒரு இதழியல் கல்லூரி மாணவர்களுடன் வந்திருந்தார்.  அவர்கள் இப்போராட்டக்காரர்கள் பற்றி மத்திய அரசு பரப்பி வருகின்ற, மக்களின் பொதுப்புத்தியில் படிந்துள்ள பல்வேறு அவதூறுகளை கேள்விகளாகக் கேட்டனர்.  கடும் கோபத்தை உண்டாக்கக் கூடிய இக்கேள்விகளுக்கு இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் தெளிவாகவும் பொறுப்பாகவும்  விளக்கமளித்தனர். இவர்கள் அளித்த பதில்களிலிருந்து அணு உலையினால் ஏற்படும் பாதிப்புகளை இவர்கள் மிகத் தெளிவாக அறிந்திருந்தது நன்கு புலப்பட்டது.  இப்போராட்டம் இப்பகுதி மக்களை மிகவும் பண்படுத்தியிருப்பதை உணர முடிந்தது.

      உண்ணாவிரதப் பந்தலில் பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிக் கொண்டும், பீடிசுற்றிக் கொண்டும் பங்கேற்பது இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கிருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இது இப்போராட்டம் ஓயாது, தோற்காது என்பதை பறைசாற்றுவதாகவும் அமைந்தது. பள்ளிக்குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் முன் நிற்கின்றனர்.
 
      விழிப்புணர்வு மிக்க வீரம் செறிந்த இந்தப் போராட்டத்தை ஆயிரமாயிரம் அப்துல்கலாம்களும், ‘புற்றுநோய்’   சாந்தாக்களும் வந்தால் கூட சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பது திண்ணம்.  அணுஉலைக்கு ஆதரவாக களம் இறங்கும் ‘புற்றுநோய்’ சாந்தா ஏன் தூத்துக்குடியில் புற்றுநோய் மருத்துவமனை திறக்க வேண்டும்?  யாரிடம் வாங்கிய கூலிக்கு மாரடிக்கும் இவர்களைப் போன்றவர்களுக்கு மக்கள் போராட்டத்தை அவதூறு செய்யும் அருகதை எங்கிருந்து வந்தது?
 
     அணு உலைகளினால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பியிருந்த கூடங்குளம் பகுதி மக்கள் தற்போது உண்மையை உணர்ந்து கொண்டு விட்டனர்.  இனியும் மத்திய அரசும் போலி விஞ்ஞானிகளும் அவர்களை ஏமாற்ற முடியாது.  பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், ஆயுதத்தரகர்களிடமும் கமிஷன் பெற்றுக் கொண்டு அறிவை அடகு வைக்கும் வேலைகளை விட்டு விட்டு இந்த போலி விஞ்ஞானிகள் சுயமரியாதையுள்ள வேறு வேலைகளுக்குத் திரும்பினால் அவர்களுக்கும், நாட்டுக்கும் நல்லது.  அணு மின்சாரம், அணுக்கழிவு ஆகியவற்றின் இன்னல்கள் படிக்காத பாமரனுக்குத் தெரிந்த அளவிற்கூட உங்களுக்குத் தெரியவில்லையென்றால் இந்தப் போலி விஞ்ஞானத்தால் உங்கள் உயிரைக் கூட காப்பாற்ற முடியாது.
 
        இப்பகுதிவாழ் பள்ளிக் குழந்தைகளிடம் உள்ள அணுசக்திக்கு எதிரான விழிப்புணர்வை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  மரபுசாரா மாற்று எரிசக்தி தயாரிக்கும் முறைகள், இடர்பாடுகள், செலவுகள் மிக்கவை என்று பாடப்புத்தகங்கள் மூலம் ‘காயடிப்பு’ வேலைகள் செய்யப்பட்டிருந்தாலும் கூட அவையொன்றும் இவர்களிடம் எடுபடப்போவதில்லை.  தனது சுற்றுப்புறங்களில் ஆயிரக்கணக்கான காற்றாலைகளைப் பார்த்து வளர்ந்தவர்கள் இவர்கள்.  மரபுசாரா எரிசக்தி பற்றி இவர்களுக்கு நன்கு தெரியும்.  காற்றாலைகளுக்குத் தேவையான ‘கிரீட்’ அமைப்பு இல்லாததால் இவற்றை இயக்காமல் அணைத்து  வைத்திருப்பதையும் இவர்கள் அறிவார்கள்.
 
      எரிசக்தி ஆய்வுக்கு ஒதுக்கப்படும் பெருந்தொகையை அணுசக்தித் துறை மட்டும் தின்று கொழுக்கிறது.  காற்றாலை, கடல்அலை போன்ற மாற்று எரிசக்தி ஆய்வுகளுக்கு ஏதேனும் செலவுகள் செய்ததுண்டா?  கூடங்குளம் அணு உலையைத் திறக்க இவ்வளவு மூர்க்கம் காட்டும் மத்திய அரசு ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மட்டும் ஏன் முடக்கி வைத்திருக்கிறது?  இந்தக் கேள்விகளைத் தாண்டி அணு உலைகளை மட்டும் இயக்க மத்திய அரசு முயல்வதில் அர்த்தமில்லை.
 
      கல்பாக்கமும், கூடங்குளமும் தமிழக அழிவின் குறியீடுகள்.  அணு உலைக்கு எதிரான இந்தப் போராட்டங்கள் கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்களுக்கானது அல்ல.  மனித குலத்தின் பேரழிவிற்கெதிரான இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஏன் இந்தியாவே இணைந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.  ஆனால் இது நடக்கவில்லை.  அரசின் பண உதவி மற்றும் பல்வேறு தூண்டுதல்களால் தமிழகமெங்கும் ஆங்காங்கே அணு உலையை திறக்க தரர்கள் மூலம் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  இவற்றின் பின்னணியில் அணு உலையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், தலைவர்களும், அரசும் இருக்கின்றன.
 
       முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சினைகள் கூடங்குளம் போராட்டத்தை திசை திருப்புவதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.  இன்னும் பல்வேறு திசை திருப்பு உத்திகள் அரங்கேறலாம்.  இந்தியாவின் இயற்கை வளத்தை அந்நியர்களுக்கு பங்கு வைக்கும் வேலைகளுடன் இந்த மண்ணை - மக்களை வேரறுக்கும் வேலையையும் இவர்கள் ங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் போது நம்மிடையே ஒற்றுமை இல்லாமலிருப்பது வேதனை தருகிறது.  இங்குதான் நமது எதிரிக்கு தற்காலிக வெற்றி கிடைக்கிறது.

       ஒட்டுமொத்த மக்களுக்கான இப்போராட்டத்தில் பங்கேற்காமல் விலகியிருப்பது மனித குலத்திற்கு செய்யும் மாபெரும் வரலாற்றுப்பிழை.  இந்த குற்ற உணர்வு நம்மை வாழ்நாளெல்லாம் துரத்திக் கொண்டிருக்கும்.  அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபடவே இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளதாக போராட்டத்தில் பேசும்போது நான் குறிப்பிட்டேன்.  ஒட்டுமொத்த தமிழகமும் இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.



காற்றாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக