ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?


இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?

                      -மு.சிவகுருநாதன்

   இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இந்தியாவின் உதவி இருந்ததை உலகமே பார்த்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வார்த்தைகளில் வெளிப்படையாகவே அறிவிக்கக் கூட செய்யக்கூடிய அளவிற்கு போயிருக்கிறது.

  இலங்கை ராணுவ வீரர்களுக்கு இன்றும்கூட தொடர்ந்து இந்திய அரசு பயிற்சி அளித்துவருகிறது. அதுவும் தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்தபோதும் தமிழக மண்ணில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தியதேயில்லை.

  இலங்கை சார்க் கூட்டமைப்பிலுள்ள நட்பு நாடு என்றும் பயிற்சி ஒப்பந்தங்கள் முன்பே போடப்பட்டது என்றும் இந்திய அரசு விளக்கமளிக்கிறது. பாகிஸ்தானும் சார்க் கூட்டமைப்பிலுள்ள நாடுதான். ஏன் அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில்லை? என்ற பலரது கேள்விகளுக்கு இதுவரை இந்திய அரசு பதிலளிக்கவில்லை.

   இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போருக்கு கியூபா, லிபியா ஆகிய நாடுகள் உதவியது ஒருபக்கம் இருக்கட்டும். தொடர்ந்து எதிரிகளாக பாவித்துக்கொண்டு குடிமக்கள் வயற்றிலடித்து ராணுவ வலிமையை மட்டும் பெருக்கிகொண்டுவரும் இந்தியா, பாகிஸ்தான் போன்றவற்றோடு சீனாவும் இணைந்துகொண்டதுதான் வேடிக்கை. தெற்காசியாவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களையும் செய்யும் இந்தியா, பாகிஸ்தான் கூட்டு மிக மோசமானதாகும்.

  இன்று இலங்கை உலகப் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. இந்தப் பெருமுதலாளிகள் நலன்களே இந்த நாடுகளின் வெளியுறவு மற்றும் நிதி சம்மந்தமான கொள்கைகளைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. மன்மோகன்சிங், சிவசங்கர் மேனன், மான்டேக் சிங் அனுவாலியா, ப.சிதம்பரம், சோனியா காந்தி, நிருபாமா ராவ் போன்ற பலருக்குப் படியளக்கும் எஜமானர்கள் இவர்கள். எனவே குடிமக்கள் நலன்களெல்லாம் இங்கு பூச்சியம்தான். 

 இந்த உண்மை நிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காணவேண்டும் கோரிக்கைகள் வைக்கப்படும்போது ஆயாசமாக இருக்கிறது. மத்திய அரசில் அங்கம் வகித்த ஜெ.ஜெயலலிதாவாகட்டும் மு.கருணாநிதியாகட்டும் தங்களுக்குப் பசையான துறைகளை ஒதுக்கவதில் மட்டுமே பேரம் பேசுவார்கள். வெளியுறவுக் கொள்கைகள் குறித்தோ நிதிக்கொள்கைகள் குறித்தோ வாய்திறப்பது கிடையாது. ஏன் காவிரி நதிநீர்ப்பிரச்சினை பற்றிகூட எதேனும் நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகள் வைக்க முடியாதவர்கள் இவர்கள்.

  இந்தக் கொள்கைகளில் பா.ஜ.க. தலைமையிலான NDA  காங்கிரஸ் தலைமையிலான UPA ஆகிய எந்த ஆட்சி மாறி மாறி வந்தாலும் கொள்கைகள் மாறப்போவதில்லை. இத்தகைய பிரச்சினைகளில் மாநிலக் கட்சிகளைக் மத்திய அரசு கலந்தாலோசிப்பதில்லை. எனவே பா.ஜ.க.,  காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

   பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் பழம்பெருமை மிக்க சாஞ்சி நகரில் அமைக்கப்படவுள்ள பவுத்த மற்றும் இந்திய ஆய்வுப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டு சகிப்புத்தன்மை குறித்து பாடமெடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. 

   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநில எல்லை வரை சென்று ம.தி.மு.க. தொண்டர்களுடன் போராடித் திரும்பியுள்ளார் வைகோ. மஹிந்த ராஜபக்ச- வை அழைத்த பா.ஜ.க. வினரோடு கரம்கோத்தவர் இந்த வைகோ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. மு.கருணாநிதி அறிக்கை மட்டும் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இலங்கை விளையாட்டு வீரர்களைத் திருப்பியனுப்பி ஈழ ஆதரவாளர் பட்டம் சூடிக்கொண்ட ஜெ.ஜெயலலிதா வாய் திறக்கவேயில்லை. இவ்வளவுதான் இவர்களது பாசமும் அக்கறையும்.

  இது கிடக்கட்டும். பவுத்தம் தொடர்பான ஓர் மாநில அரசு விழாவிற்கு அதிபர் மஹிந்த ராஜபக்ச –வை அழைக்கவேண்டிய அவசியமென்ன? இவ்விழாவிற்கு பூட்டான் பிரதமர் ஜிக்மே யோசர் தின்லே –வும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமாவை ஏன் அழைக்கவில்லை? இஸ்லாம் பற்றிய ஓர் விழா நடந்தால் அதற்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான்  அதிபரையோ, பிரதமரையோ இவர்கள் அழைப்பார்களா?
   இவைகள் ஒன்றும் விடை தெரியாத கேள்விகள் அல்ல. பா.ஜ.க.வின் இந்துத்துவம் பவுத்தத்தை விழுங்கியது; இன்னும் மிச்சமிருப்பதையும் விழுங்கத்துடிப்பது. குஜராத்தில் இனப்படுகொலை செய்தவர்கள் ஈழத்தில் இனப்படுகொலை செய்த அதிபர் மஹிந்த ராஜபக்ச -வுடன் நெருக்கமாக இருப்பதும் அழைத்து விருந்து வைப்பதும் வியப்பொன்றுமில்லை.


   நம்முடைய ஆதங்கம், இவர்களை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்  என்பதுதான். ஜெ.ஜெயலலிதா ஈழ ஆதரவாளராகவும் மன்மோகன் சிங் திருவாளர் பரிசுத்தமாகவும் நரேந்திர மோடி குஜராத் வளர்ச்சியின் பிதாமகனாகவும் எடுக்கும் அவதாரங்களை நம்பி ஏமாறும் மந்தையாக இருப்பதிலிருந்து விடுபடுவதுதான் நாம் முதலில் செய்யவேண்டிய காரியமாக இருக்கமுடியும். ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பங்களிருந்து விடுபடுவதும் நமது சுயத்தையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக