ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

தமிழக கல்வித்துறையின் அவலங்கள்


தமிழக கல்வித்துறையின் அவலங்கள் 
                   
                        -மு.சிவகுருநாதன்

     சென்ற கல்வியாண்டின் (2011-2012) தொடக்கத்தில் சமச்சீர்கல்வி பாடநூற்களுக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் கீழுள்ள தமிழக கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றால் குட்டுபட்டும் இந்த நிமிடம் வரை திருந்துவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றில் நடைபெரும் குளறுபடிகளுக்கு அளவில்லை. 

     இந்தக் கல்வியாண்டில் (2012-2013) மாநிலம் முழுமையும் காலாண்டுத்தேர்வு உள்பட அனைத்துத் தேர்வுகளுக்கும் ஓரே வினாத்தாள், ஓரே நாளில் தேர்வு என்ற திட்டத்தின் மூலம் பெரும் அவலத்திற்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உள்ளாகியிருக்கிறது. மையப்படுத்தப்பட்ட எந்தத் திட்டமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை இது மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறது. 

    மையப்படுத்தப்பட்ட இத்தகைய முறையால் தரம் உயரும் என்று சொன்னவர்கள் இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்கள். தமிழகம் முழுவதிலும் வினாத்தாள்கள் உரிய முறையில் தகுந்த நேரத்திற்கு சென்றடையாத நிலையில் இம்முறையினால் விளைந்த பயனை அறுவடை செய்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

     பழைய முறைப்படி மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கும்போது அதற்கென வசூலிக்கப்படும் பெருந்தொகை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு கிடைக்கும். இப்போது மையப்படுத்தப்பட்ட இம்முறையால் மாநில அளவிலுள்ள அலுவலர்கள் பலன் அடைந்ததைத் தவிர்த்து மாணவர்களுக்கோ கல்வித்தரத்திற்கோ இதனால் கிஞ்சித்தும் பயனில்லை. 

    வினாத்தாள் தாமதமாக வந்ததால் பல பள்ளிகளில் மதிய உணவைக்கூட சாப்பிடமுடியாமல் பசியுடன் மாணவர்கள் தேர்வு எழுதியது, காலையில் நடைபெறவேண்டிய தேர்வை மாலையில் எழுதவேண்டிய கட்டாயம், ஆங்கில வழி வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்து அளிக்கவேண்டிய நிலை, போதுமான வினாத்தாள் இல்லாததாலும் அதைப் பிரதியெடுக்ககூட மின்வெட்டால் முடியாத சூழல் (அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு சென்று ஓர் பள்ளியில் நகலெடுத்து வழங்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது.) பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளுடன் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான நிலவரைபடங்கள் இணைத்து வழங்கப்படாமை, தமிழ் இரண்டாம் தாளுக்குரிய வங்கி பற்றுச்சீட்டு இணைக்கப்படாதது என எண்ணற்ற அவலங்களைப் பட்டியலிட இங்கு பக்கங்கள் போதாது.

  காலாண்டுத்தேர்வை தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தவேண்டியதன் தேவை என்ன என்பது குறித்து முதலில் சிந்திக்கவேண்டும். இந்த வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது கிடையாது. அப்படி முன்கூட்டியே வெளியானாலும் ஒன்றும் குடி முழ்கிவிடப் போவதில்லை. 

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தொகுதிகளுக்கான தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவருவது அண்மையில் அம்பலமாகியுள்ளது. இது பல்லாண்டாக நடைபெரும் தொடர்கதைதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அரசு இதுகுறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணை செய்யாமல் ஒருசிலரை மட்டும் பலிகடாவாக்கி மேலதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

  அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிரியர் 
தகுதித்தேர்விலும் இம்மாதிரியான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை. மிகக் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்று ஆசிரியர்கள் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் வெறும் 90 நிமிடங்களில் 150 வினாக்களுக்கு எக்பிரஸ் வேகத்தில் விடையளித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் சித்ரா என்றொரு தேர்வர் 142 மதிப்பெண்கள் பெற்றிருப்பது நமது அய்யத்தை அதிகமாக்குகிறது.

  அரசுத்தேர்வுகளின் லட்சணம் இவ்வாறிருக்க 1 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டுத்தேர்வுகளை மட்டும் அரசுத்தேர்வுகளைப்போல தரமாக நடத்துகிறோம் என்று இவர்கள் கூவுவதன் உள்நோக்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ளமுடிகிறது. வேலை வாய்ப்புக்கான உயர் தேர்வுகளை முறையாக நடத்த அருகதையற்ற தமிழ்நாடு அரசு பள்ளித் தேர்வுகளின் தரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாகயுள்ளது. 

  10, 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு வினா வடிவமைப்பு முறையில் அமைப்பதாக சொல்லப்பட்டது. பத்தாம் வகுப்பில் மார்ச்-ஏப்ரல் 2012 இல் தவறியவர்களுக்கு நடத்தப்பட்ட மறுதேர்வில்கூட வடிவமைப்பு பின்பற்றாத நிலையில் காலாண்டுத்தேர்வில் கிழிக்கிறோம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?

   இந்த வினாத்தாள்களில் உள்ள குறைபாடுகள் ஒருபுறமிருக்க எழுத்துப் பிழைகளை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துபவை. தமிழ் மற்றும் ஆங்கில வழி வினாத்தாள்கள் அனைத்தும் பல்வேறு பிழைகள் மலிந்தவை. ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கிலவழி வினாத்தாள் tree ஐ free என்கிறது; rain ஐ pain என்று குறிப்பிடுகிறது.

  அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கியாயிற்று. இதுகுறித்து தமிழகத்தில் எந்தவொரு சலசலப்பும் இல்லை. எனவே ஆங்கில வழிக்கு மட்டும் வினாத்தாள்களை அச்சிட்டுவிட்டு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்று உத்தரவிடும் கொடுமையை என்னவென்பது? இதற்கென மாலையில் நடைபெறவேண்டிய ஆங்கிலவழி வினாத்தாள்களை காலையிலேயே பிரித்து வழங்கிய அசிங்கத்துடன் ஆங்கில வழி வினாத்தாள் போதாத நிலையும் அரங்கேறியது. 

   ஏற்கனவே தனியார் மற்றும்  மெட்ரிக் பள்ளிகள்தான் போலியான தரம் என்று சொல்லிக்கொண்டு பாளையங்கோட்டை வினாத்தாள்களுக்கு ஆளாய்ப் பறந்தன. இதன் மூலம் தரமொன்றும் மேம்படவில்லை. பள்ளி மாணவர்கள் தேவையற்ற கொடுமைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானதுதாம் மிச்சம்.

  20.09.2012 அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, மானிய விலை எரிவாயு உருளைகளுக்குக் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.மமதா பானர்ஜி போன்று இரட்டைவேடம் போடவேண்டிய அவசியம் ஜெ.ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. இதில் மாணவர்கள் ஏன் பலிகடாவாக்கப்படவேண்டும் என்பதே நம்முன் எழும் கேள்வி.

  மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே (கேபினெட் எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டிக்கொண்டே) மு.கருணாநிதி தி.மு.க. வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அறிவித்தவுடன் தமிழக அரசின் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. செப்டம்பர் 20 அன்று தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது. அன்று காலைதான் வேலைநிறுத்தம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்காகவே விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் நலன் குறித்த இந்த  போலியான அக்கறை கேலிக்குரிய ஒன்று.

  இங்கு தரம் பற்றிய போலியான அளவுகோல்கள் மக்களின் பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளன. இந்த நடுத்தர வர்க்க மனோபாவத்திற்கு பெற்றொர்கள் ஆட்படுகின்றனர். இதைப் பெரிதாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவது அழகல்ல. கல்வியாளர்கள் சொன்னாலும் கேட்பதில்லை, நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் மதிப்பதில்லை என்ற மமதையில் ஓர் அரசும் அதன் துறைகளும் செயல்படுவது ஜனநாயகத்தின் மாண்புகளை வேரறுக்கும் செயல்.

  கல்வித்துறையில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டியுள்ளது. அதைப் பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்காமல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோரை பெரும் மன உளைச்சலுக்குள் தள்ளும் இம்மாதிரியான முடிவுகள் உடனே கைவிடப்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக