வெள்ளி, நவம்பர் 30, 2012

உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்


உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்
                                 -மு.சிவகுருநாதன்

    காவிரி நதிநீருக்கான நமது பாரம்பரிய உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் இன்று ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்ற நிலைக்கு போயிருக்கிறோம்.

    காவிரி நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு, இறுதிதீர்ப்பு எதையும் கர்நாடக அரசு மதித்ததில்லை. சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மாறாக அந்த ஆணைகளை எல்லாம் காலில் போட்டு மிதிக்க்கும் ஓர் மாநில அரசை நீதிமன்றங்களும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மிகவும் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம்.  

   இவ்வளவிற்கும் மத்தியில் தி.மு.க. கூட்டணியில் ஆட்சி; கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி; தமிழகத்தில் பா.ஜ.க. உடன் கூட்டணி சேரத்துடிக்கும் ஏன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் அ.இ.அ.தி.மு.க வின் ஆட்சி. இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழக மக்களை முட்டாளாக்கிக் கொண்டுள்ளனர். மாறாக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள், ஐக்கிய ஜனதா தளம் போன்ற அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இதுதான் தமிழகத்தின் அவலம்.

   தன்னுடைய ஆணைகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்கக்கூட மனமில்லாத உச்சநீதிமன்றம் கட்டை பஞ்சாயத்து லெவலில் மறு உத்தரவு பிறப்பிப்பதுதான் மிகவும் கொடூரமானது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய எதனுடைய உத்தரவையும் மதிக்காத கரநாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லும் உச்சநீதிமன்ற வழிகாட்டலை என்னவென்று சொல்வது?

  இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து கர்நாடக அரசுடன் நேற்று (29.11.2012) பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியுடன் திரும்பியிருக்கிறார். கர்நாடக அரசின் தொடர் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு  இதில் வியப்பெதுவுமில்லை. இந்நிலை உச்சநீதிமன்றத்திற்கு தெரியாமல் போனதுதான் வேதனை.

     பேச்சுவார்த்தையின் முடிவுகள் தமிழக அரசின் சார்பில் இன்று (30.11.2012) உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம்  வரும் திங்கள்கிழமை (03.12.2012) உரிய முடிவெடுக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

  நீதிமன்றங்களின்பால் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இனியாவது உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமென நம்பிக் காத்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட இரு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டு இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவேண்டும்.

  • இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக அரசை உடன் கலைக்கவேண்டும்.
  • கர்நாடக அணைகளை மத்திய அரசு / காவிரி நதிநீர் ஆணையம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடன் விடுவிக்கவேண்டும்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நிச்சயமாக உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு நீதி வழங்கும் அய்யா.

கருத்துரையிடுக