வியாழன், நவம்பர் 01, 2012

பரண் 0009 தப்பாட்டம்: அகமும் புறமும்


பரண் 0009
தப்பாட்டம்: அகமும் புறமும்
            -மு.சிவகுருநாதன்



ஓர் முன் குறிப்பு:

    வட்டார வழக்குகளை மொழிப்பிரயோகங்களை அதிகார வர்க்கம் இழிவானது என்று ஒதுக்கியே வந்துள்ளது. சோலை சுந்தரபெருமாளின் நாவல்கள், சிறுகதைகள் ஆகியன கல்லூரி, பல்கலை பாடநூல்களில் இடம்பெறுவது பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாக்கப்படுகிறது. சோலை சுந்தரபெருமாள் நாவல்களில் பல மாற்றுக் கருத்துக்கள் உள்ளபோதிலும் வட்டார வழக்கு உள்ளிட்ட சில அம்சங்களுக்காக அவருடைய நாவல்களை நேர்மறையாக அணுகும்முறையை பல தடவை கடைபிடித்துவந்திருக்கிறேன். ஆனால் அவரது சமீபத்திய நாவல்களான மரக்கால், தாண்டவபுரம் போன்றவற்றிற்கு இத்தகைய சலுகையை வழங்க நான் தயாராக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். இக்கட்டுரை தப்பாட்டம் நாவல் குறித்த அகமும் புறமும் என்ற விமர்சனத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது போல் திருத்துறைப்பூண்டி பன்மை கூட்டத்தில் வாசிக்கப்படவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது. அன்றைய கூட்டத்தில் தோழர் வளர்மதியின் இடையீட்டால் சு.தமிழ்ச்செல்வியின் அளம், மாணிக்கம் போன்ற நாவல்கள் பற்றியும் சோலையின் தப்பாட்டம் நாவல் குறித்தும் முழுமையாக பேசமுடியவில்லை. அன்று தயாரித்திருந்த குறிப்புகளைக் கொண்டு இத்தொகுப்பிற்காக பின்னர் விரித்தெழுதப்பட்டது என்பதுதான் உண்மை நிலவரம்.)

   தப்பாட்டம் நாவலின் நெகிழ்வுத் தன்மை மிக்க பேச்சுமொழி ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று. கதை மொழியும் கதை சொல்லியின் மொழியும் பின்னிப் பிணைந்து ஒரே நேர்கோட்டில் அமைகிறது. இவை இரண்டிற்குமான வேறுபாடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு ஒரே தளத்தின் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மொழி பற்றிய புனைவுகளின்றும் அதன் தூய்மைவாதம் குறித்தான அதிகாரப் பூர்வ பார்வைகளின் தடம் அழிப்பதான வட்டார மொழி நடையின் பொருத்தப்பாட்டில் மையம் கொள்கிறது.
   கதை மொழி – கதைசொல்லியின் மொழி ஆகிய இரண்டிற்குமான இடைவெளி பெரும்பாலும் தகர்ந்த நிலையில், இடையில் தடம் மாறி சில இடங்களில் எழுத்துமொழியின் சூழலில் கதைசொல்லியின் மொழி சிக்கிக்கொள்கிறது.
   மொழி மற்றும் வட்டார வழக்கு, இவற்றிற்கு பின்னால் இருக்கின்ற அரசியல், கதைப்பரப்பிற்கு அப்பாலும் நாவலை நகர்த்திச் செல்கிறது. வட்டார வழக்கு, மொழி நடைப் பிரயோகங்கள் குறித்த வழக்கமான பார்வைகளின் ஊடே புதிய சாத்தியக்கூறுகளையும் கண்டடைய வேண்டியிருக்கிறது.
    வட்டாரம் என்பதான ஓர்மைத் தன்மை அதனுள் தனித்தனியே இயங்கும் கிளை மொழிகளை ஒடுக்குவது அல்லது அழித்தொழிப்பதான தன்மைகளை நாம் புறந்தள்ளிவிடமுடியாது.
  வெகுமக்கள் வாழ்வைக் காட்டும் ஒரு நாவலில் taboos – களின் இடம் குறித்து நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களின் பரப்பால் பாலியல் மற்றும் பாலியல் உறுப்புகள் சார்ந்த கொச்சை / வசை மொழிகளின் இடன் நாவலில் புறக்கணிக்கமுடியாதது. கல்லூரி – பலகலைக்கழகங்களில் பாடமாக வைப்பதற்கு இத்தகைய கொச்சை / வசைமொழிகள் இடையூறாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது அப்பட்டமாக வெளிப்படும் நடுத்தர வர்க்க மனோபாவம் ஆகும். முற்றிலும் பாலியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு சமூகம் சாத்தியமா என்று கேட்கத் தோன்றுகிறது.
   ஒரு கதையில் அல்லது நாவலில் taboos எந்த அளவிற்குப் பயன்படுத்த்வேண்டும் என்ற எல்லை வகுப்பதோ அல்லது புறந்தள்ளப்படுவதோ இதன் பின்னணியில் இருக்கும் தரப்படுத்தும் ஆதிக்க – அதிகார போக்கின் நீட்சியாகவே கருதமுடியும். அடித்தட்டு மக்களின் வாழ்வியலை யதார்த்த அழகியல் தன்மையோடு படம் பிடித்துக் காட்டுகிறது என்று சொல்பவர்கள் கூட, இவற்றால் நாவலின் புனிதம் கெட்டுவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.
    ஒழுங்கு, சுத்தம், புனிதம் பொன்ற பேரின்ப நியாயங்களை கட்டமைப்போர் அனைவரும் இவற்றிற்கு எதிராகவே அடித்தட்டு மக்களின் இருப்பைத் தக்க வைத்துள்ளனர். வட்டார மொழியும் அதன் தொடர்ச்சியாக அமையும்  taboos போன்றவைதான் ஒற்றை மைய சொல்லாடலை எதிர்க்கும் கலக மொழியாக அமையும்.
  நாவலில் தொடர்ச்சி இல்லை, கதை மனிதர்களிடையே இடைவெளி இருக்கிறது, பாதியில் விடப்பட்டுள்ளது, கட்சிப் பிரச்சாரம் செய்யப்படுகிறது போன்ற விமர்சனங்கள் அனைத்தும் யதார்த்தவகை நாவல் வகைமையின் மீது வைக்கப்படும் விமர்சனங்களாகவே நாம் காணமுடியும்.
  யதார்த்த வகை நாவல்களைத் தொடர்ந்து படித்துப் பழகியிருக்கும் வாசக மனம், ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் சலனத்தை அதிர்ச்சியாகப் பார்க்கிறது. புதிய வகை எழுத்தின் தாக்கம் யதார்த்த எழுத்தில் படும்போது அது அதிர்ச்சியாகவும் குறையாகவுமே பார்க்கப்படுகிறது. இவ்விமர்சனங்கள் வழி வெளிப்படும் மற்றொன்று யதார்த்தவகை எழுத்தின் போதாமை ஆகும்.
  லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் யாதார்த்தவகை எழுத்தின் மறு உருவாக்கமாகவே நவீனத்துவ மற்றும் பின் நவீனத்துவ எழுத்துக்கள் தோற்றம் கொள்கின்றன. ஆனால் தமிழ்ச்சூழலில் அத்தகு சூழ்நிலைக்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
  தட்டையான நேர்கோட்டுப் பாணியில் அமைந்த கதை சொல்லும் முறை  கதை சொல்லியையும் வாசகனையும் பெரும்பாலும் ஆக்ரமிக்கின்றன. இந்தப் பரப்பைவிட்டு வெளியே தாவிச் செல்லும் முயற்சிகள் அனைத்தும் இடைஞ்சல்களாகப் பார்க்கப்படுகின்றன.
  உழைப்புக்கேற்ற கூலி கிடைக்கப் போராட்டம் நடத்தும் தலித்கள், சாதிக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் தலித்கள் போன்ற போராட்டங்கள் அனைத்தும் கட்சிப் பிரச்சாரத் தொனியை ஏற்படுத்திவிடுவதாக விமர்சிக்கப்படுகிறது. பிரச்சாரம் இல்லாமல் எந்தப் படைப்பும் இல்லை. இருப்பினும் ஒரு தலித், கட்சி ரீதியாக முன்னெடுக்கிற போராட்டத்தைவிட அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மொழி, பழக்கவழக்கங்கள், சடங்குகள், சிறு தெய்வ வழிபாடு, மொழியின் அக்வயமான கிண்டல்கள் போன்றவைகளின் மூலம் முற்றிலும் புதிதான யதார்த்தத்தை ஒட்டிய அல்லது புது வகை எழுத்தின் தன்மையோடு நேரடியான பிரச்சாரங்கள் அற்று மொழி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாக அமையும்.
   தலித் வாழ்வியலை முற்றிலும் வாழ்வனுபவத்தின் வாயிலாக பெற்ற அல்லது உணர்ந்த ஒருவர் அத்தகைய நாவலைப் படைக்கமுடியும். தப்பாட்டம் நாவலில் மொழியைச் செழுமைப்படுத்த சொலவடைகள், வழக்குச்சொற்கள் ஆகியன அதிகம் இடம் பெறவேண்டும்.
   அனைத்துவகை நவீன கூறுகளையும் உள்வாங்கிய யதார்த்த வகைமையில் தப்பாட்டம் பன்முகத்தன்மையுடன் முதன்மைப் பெற்றுள்ளது என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

(திருத்துறைப்பூண்டி பன்மை இலக்கிய அமைப்பு நடத்திய விமர்சனக் கூட்டத்தில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

நன்றி: சோலை சுந்தரபெருமாள்

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அகமும் புறமும் அவசியம் வாங்கி வாசிப்பேன் அய்யா

கருத்துரையிடுக