டாஸ்மாக் தமிழகம் - மு.சிவகுருநாதன்
குடி தமிழ்க் கலாச்சாரத்தின் ஓரங்கம் என்பது இங்கு
பலருக்கு மறந்தே போய்விட்டது. அவ்வை அதியமானுடன் கள்ளுண்ட காட்சிகள் சங்கப்பாடல்களில்
விரியும். தென்னை மற்றும் பனை மரங்களில் வடிக்கப்படும் கள் உள்ளிட்ட பல்வேறு மதுவகைகள்
அந்தந்த வட்டாரத் தன்மையுடன் குடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபு இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
தமிழின் தொன்மை, பெருமை பேசுபவர்கள் இவற்றைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதுதான்
விளங்கவில்லை.
குடி கலாச்சாரம் இன்று இழிவானதாகக் கருதப்படுவதற்கு
நமது காலனீய மதிப்பீடுகளும் IMFL (Indian Made Foreign Liquor) வருகையுமே
முக்கியக் காரணமாகும். கடந்த பத்தாண்டுகளாக மது விற்பனையை அரசே ஏற்று நடத்திவருவது
(டாஸ்மாக்) இங்கு குறிப்பிடத்தக்கது. குடியை இழிவாகக் கட்டமைக்கும் ஓர் கலாச்சார நிறுவனமான
அரசே மது விற்பனை செய்வதுதான் முரண் நகை. டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மது விற்பனையை
இலக்கு வைத்து நடத்துவதின் பின்னாலுள்ள சாராய ஆலை முதலாளிகளின் வணிக நலன் இங்கு கவனப்படுத்தவேண்டிய
அம்சம்.
2011-2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மது விற்பனை
வருவாய் ரூ 18,000 கோடி. கடந்த ஒன்பதாண்டுகளில் இவ்வுயர்வு ஆறு மடங்காகும். வரும் நிதியாண்டில்
(2012-2013) ரூ21,000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு டாஸ்மாக் வியாபாரம் களை கட்டத்
தொடங்கியுள்ளது. அரசுக்கடையாக இருப்பினும் பள்ளி மாணவனுக்கு மது விற்பனை செய்ய எவ்வித
தடையுமில்லை என்பதே இங்கு நடைமுறை.
டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டுதான் மாநில அரசு இலவசங்களை
வாரி வழங்குகிறது. எனவே அவைகள் வேண்டாம் என்று நடுத்தர வர்க்க மனோபாவம் குரலெழுப்புகிறது.
2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசு இழந்த தொகை ரூபாய் ரூ 1,76,000 கோடி உணவு, வேளாண்
இடுபொருள்களுக்கு கொடுக்கப்படும் மானியம் போன்றதே என்று பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது
வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை ரூ 119 லிருந்து
ரூ 132 ஆக உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே முந்தைய கூலியான ரூ
100 முழுமையாக வழங்கப்படுவதில்லை என பல இடங்களில் சாலை மறியல் நடைபெறுகிறது. இந்தப்
பணத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளைச் சென்றடைகிறது என்றபோதிலும் ஏழை மக்களுக்கு
இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றை கொடுக்கக்கூடாதென குரலெழுப்புவதன் பின்னாலுள்ள அரசியலையும்
நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
வெறும் ரூ 5 அடக்கவிலையில் தயாராகும் 720 மி.லி.
முழுப்பாட்டில் மது ரூ 300 –ம் அதற்கு மேலும் விற்பனையாகிறது.அருட்செல்வர் பொள்ளாச்சி
நா.மகாலிங்கம் மலிவு விலையில் மதுவைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முன்பொருமுறை
சொன்னது நினைவிருக்கலாம். இதைப்போலவே பீருக்கான அடக்க விலையும் மிகக்குறைவே. (சுமார்
ரூ 2) அப்பாவி ஏழை மக்களிடம் அநியாயமாக வாங்கப்படும் பெருந்தொகையும் விற்பனை வரி, ஆயத்தீர்வை
என அரசிற்கும் மிடாஸ், மோகன் புரூவரீஸ், கிங்ஸ் டிஸ்டிலரீஸ் போன்ற சாராய முதலாளிகளுக்கும்
போய் சேருகிறது. மதுப்பாட்டில்களில் மது உயிருக்கும்,வீட்டிற்கும்,நாட்டிற்கும் கேடு
என எச்சரிக்கை வாசகம் சொல்கிறது. மது விற்பனை செய்யும் நாட்டிற்கு வருமான மிகுவதால்
இதைத் திருத்தம் செய்துவிடலாம்.
இந்த IMFL சரக்குகளின் தரம் கேள்விக்குரியது. இத்துடன்
கூடவே போலி மற்றும் கலப்பட மது பானங்களால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு அவர்களின்
உழைப்பு விரயமாகிறது; சுரண்டப்படுகிறது. கள் போன்ற உள்நாட்டு மது வகைகளை குடித்துப்
பழகியோருக்கு இந்த IMFL சரக்குகளை பயன்படுத்த முறையான பயிற்சிகள் இல்லை. கள்ளுடன் தண்ணீர்
கலந்து யாரும் குடிப்பதில்லை. எனவே IMFL சரக்குகளுடன் தண்ணீர் கலவாமலேயே குடித்து உடல்நலத்தை
விரைவில் இழந்து மரணமடைந்துவிடுகின்றனர். போலி, கலப்பட மது வகைகளின் பாதிப்பு மறுபுறம்.
கள்ளுண்ணுதலைத் தடை செய்யும் நமது அரசுகள் அயல்
மது வகைகளின் விற்பனையை அதிகரிக்கப்பாடுபடுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.
சாராய முதலாளிகளின் வர்க்க நலன்களே இங்கு முதன்மையானது. கள் தடை செய்யப்பட்டதன் பின்னணியை
நாம் இவ்வாறுதான் விளங்கிக்கொள்ள முடியும்.
குஜராத்தைபோல் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைபடுத்த
வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். குஜராத்தில்
முழு மதுவிலக்கு என்று சொல்வதே அபத்தம். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மதுவிலக்கிலிருந்து
விலக்கு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசும் மது ஆதரவாளர்களும் மது விலக்கை அமல்படுத்துவது
சாத்தியாமேயில்லை என கைவிரிக்கின்றன. ஆனால் கள் கடைகளைத் திறப்பது குறித்து இவர்கள்
மவுனம் சாதிக்கின்றனர். அரசு மது விலக்கை அமல்செய்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்று
சொல்கிறது. அரசின் காவல்துறை கள்ளச்சாராயத்தையோ டாஸ்மாக் கலப்படத்தையோ கண்டுகொள்வதில்லை
என்பதோடு மாமூல் பெற்றுக்கொண்டு வளர்த்தெடுக்கின்றன.
அரசும் மது விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை
என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசியல்வாதிகளும் சாராய வியாபாரிகளும் பிநாமிகளும்
கொள்ளை லாபம் பார்க்கின்றனர். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதே அரசின்
நிலை. இப்படியிருந்தால்தான் தேர்தலில் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வாக்குகளைப்
பெறமுடியும் என்று அனைத்துக் கட்சியினரும் திடமாக நம்புகின்றனர். எனவே அரசு வித்தாலும்
தனியார் வித்தாலும் மது வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதற்கு இடதுசாரிகளும்
விதிவிலக்கல்ல.
மாடு வளர்ப்பவர்கள் அதன் பாலை கறந்து விற்பனை செய்வதில்
எந்தத் தடையும் இல்லாத போது தென்னை, பனை மரங்கள் வளர்ப்பவர்கள் அவற்றிலிருந்து கள்
இறக்குவது மட்டும் குற்றமானது நமது அரசுகளின் சார்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும்.
பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புகள் ஏன் சமத்துவபுரங்களில்
கூட டாஸ்மாக் மதுபானக்கடைகள் நிறைய திறக்கப்படுகின்றன. இவற்றை எதிர்த்துப் பல்வேறு
போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அரசு இவைகளைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த இடங்களில்
கடைகள் திறப்பது ஒருபுறமிருக்கட்டும். 18 வயதிற்கு குறைந்த பள்ளி மாணவர்களுக்கு மது
வகைகளை விற்பனை செய்யாதிருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனை தரும்
செய்தி. ஒவ்வொரு ஊராட்சிதோறும் மதுக்கடைகள் திறப்பதை அரசு குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது
புலனாகிறது.
அடக்குமுறை, பழிவாங்கல், சர்வாதிகாரம், குடும்ப
மாஃபியா ஆதிக்கம் போன்ற பலவற்றைப் போலவே கள்ளைத் தடை செய்வது, டாஸ்மாக் மது விற்பனை
மூலம் அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்குவது ஆகியவற்றில் ஜெ.ஜெயலலிதாவுக்கும், மு.கருணாநிதிக்கும்
நிரம்ப ஒற்றுமைகள் உண்டு. எனவே ஆட்சி மாறினாலும் மதுக்கொள்கைகள் யாதொரு மாற்றமும் அடைவதில்லை.
கள்ளை அனுமதிப்பது என்ற முடிவே இதற்குச் சிறந்த
தீர்வாக இருக்கமுடியும். அரசு கள்ளுகடைகளைத் திறப்பது என்று இதற்கு அர்த்தமல்ல. கள்
விற்பனையில் வணிகமயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் அளவில் கள்ளை உற்பத்தி செய்து
அங்கேயே விற்பனை செய்யும் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அப்போதுதான் கள்ளில் கலப்படம்
செய்தல், போதையூட்டிகளைச் சேர்த்தல் போன்றவை தடுக்கப்படும். இன, மொழி, குலப்பெருமைகள்
பேசுபவர்கள் மீண்டும் பழங்கால தொல்குடி வாழ்க்கைமுறைக்குத் திரும்ப மது உண்ணலிலாவது
நினைவுபடுத்த முயற்சி செய்யலாம்.
இந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்குமென இன்றைய
சூழலில் எதிர்பார்க்கமுடியவில்லை. மது விலக்கு வேண்டுமென்று போராடும் தமிழ் அறிவுஜீவிகள்
பழமைவாதப் பார்வைகளிலிருந்து மீண்டு தொலைநோக்கோடு
தென்னை மற்றும் பனைமரக் கள்ளிற்காக குரல் கொடுக்கவேண்டும்.
1 கருத்து:
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா
கருத்துரையிடுக