வியாழன், ஜனவரி 03, 2013

பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கிறதா?


பெண்கள் பாதுகாப்பில் உண்மையான அக்கறை அரசுக்கு இருக்கிறதா?
                                                       
                                                      -மு.சிவகுருநாதன்
  
  தில்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்விற்குப் பிறகு நாடெங்கும் பெண்கள் பாதுகாப்பு பற்றி அரசும் ஊடகங்களும் ஆளாளுக்கு கூவுகின்றன. இவற்றிற்குப் பின்னாலுள்ள அரசியல் இப்போது எழுந்துள்ள தன்முனைப்பு (activism) ஆகியவை கேள்விக்குள்படுத்தவேண்டிய தேவையிருக்கிறது.
  
   இக்கொடுஞ்செயலுக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் எங்கும் தடையுத்தரவு பிறப்பித்து ராணுவ ஆட்சி, நெருக்கடிநிலை அடக்குமுறைகளை ஏவிவிட்டது. இப்போராட்டங்களில் ஈடுபட்டவர்களும்கூட போராட்டத்தின் போதெ பெண்களின்மீது சீண்டல்களில் ஈடுபட்டார்கள் என்றும்கூட செய்திகள் வந்தன. இங்கு திரண்ட போராட்டக்காரர்கள் பெண்ணிய சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள் இல்லை. பெண்கள் உள்பட பலர் ஆணாதிக்கவாதிகளே! இந்த சமூகம் அவர்களை இவ்வாறு வளர்த்தெடுத்திருக்கிறது. அவர்களைக் குறைசொல்லிப் பலனில்லை.

    இந்நிலையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தில்லி சப்தர்சங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அம்மாணவியை சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மரணத்தை விரைவுபடுத்திய மத்திய அரசு பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்காக கடுஞ்சட்டம் கொண்டுவருவதாக சொல்கிறது.

   பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் அடையாளத்தை மறைக்க இந்த அரசு எடுத்துக்கொண்ட பெருமுயற்சியில் கொஞ்சமாவது பெண்களின் பாதுகாப்பிற்கு காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதற்காக அப்பெண் பற்றிய விவரங்களை வெளியிடவேண்டுமென சொல்லவில்லை. இன்று கூட பல்வேறு பாலியல் கொடூரங்களில் புகைப்படங்களுடந்தான் செய்திகள் வெளியாகின்றன. தில்லி மாணவியின் அடையாளத்தை மறைத்த அதிகார வர்க்கத்தால் பள்ளி மாணவி புனிதாவின் அடையாளம், புகைப்படங்களை மறைக்கமுடியாதது ஏன்? மக்களுக்கு பொதுப்போக்குவரத்து வசதியைக் கூட செய்ய வக்கில்லாத அரசுகள் வல்லரசுக் கூச்சல் போடுவதை மட்டும் ஏன் நிறுத்துவதில்லை?

   அச்சட்டத்திற்கு அப்பெண்ணின் பெயரை வைக்கவேண்டுமென மத்திய அமைச்சர் சசி தரூர் சொன்னதோடல்லாமல் பெற்றொரின் ஒப்புதலையும் பெற்றுத்தருகிறார். ஆனால் இம்மாதிரியான முன்னுதாரணங்கள் இல்லையென மத்திய அரசு மறுத்துள்ளது.

   பாலியல் வன்கொடுமைகளுக்கு இயற்றப்படவேண்டிய சட்டங்கள் குறித்து நிறைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. தூக்குத்தண்டனை, ஆண்மைநீக்கம், ஆணுறுப்பு நீக்கம், வாழ்நாள் தனிமைச்சிறை என்றெல்லாம் தண்டனைகள் பரிந்துரை செய்யப்படுகிறது. இவ்வளவு தட்டையாக யோசிக்கமுடியும் என்பதை நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கின்றன.

   பெண்கள் உடுத்தும் ஆபாச ஆடைகள், மாணவிகள் அணியும் குட்டைப் பாவாடைகள், இரவில் பெண்கள் ஆண் நண்பர்களுடன் சுற்றுதல் என கலாச்சார போலீஸ்கள் வழக்கம்போல் தங்களது வியாக்கியாணங்களைத் தொடர்ந்தவண்ணம் உள்ளனர். இச்சமூகத்தை இந்த இழிநிலைக்குக் கொண்டுவந்ததில் இவர்களுக்கு பெரும்பங்குண்டு.

  பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் போன்றவர்களுக்கு துரித விசாரணை நடத்தி கடும் தண்டனைகள் வழங்கவேண்டுமென வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டடுள்ளது.

   மாநில காவல்துறைகள், ராணுவம், துணை ராணுவப்படைகள், அதிரடிப்படைகள், சிறப்பு அதிரடிப்படைகள் போன்ற அரசுகளின் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும் பாலியல் முறைகேடுகளுக்கு எவ்வித தண்டனைகளும் வழங்கப்படுவதில்லை. சிதம்பரம் பத்மினி போன்ற பல பாலியல் கொடுமைகளில் லத்தியை பெண்ணுறுப்பில் நுழைக்கின்ற கொடுமைகள் அரங்கேறியிருக்கின்றன. ஆண்மைநீக்கம், ஆணுறுப்பு நீக்கம் போன்ற தண்டனைகளைத் தீர்வாகச் சொல்பவர்களுக்கு இத்தகைய கொடுமைகள் கண்ணுக்கேத் தெரிவதில்லை.

  தில்லி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி என்று தொடர்ந்து பல் இடங்களில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தூத்துக்குடி பள்ளி மாணவி புனிதா பாலியல் வன்கொலை செய்யப்பட்டதற்கு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி தனது அரசியல் காயை நகர்த்துகிறது. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் எனும்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அத்தொகுதியில் நிற்கவைக்கும் முன்னேற்பாடு என்ற பேச்ச்சில் உண்மை இல்லாமலில்லை. வேற்றிடங்களில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகளை கண்டுகொள்ளாததே இதற்கு சாட்சி.

   முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பிற்கு பல அம்சத்திட்டங்களை முன்வைத்திருக்கிறார். பாலியல் வன்கொடுமைகளுக்காட்பட்ட பெண்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பது அதில் ஒன்று. காவல்துறை பாலியல் வன்கொடுமைகள் பற்றி இதில் வாய் திறக்கப்படவில்லை. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் இருளர் இனப்பெண்கள் காவல்துறையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டபோது உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மதிக்காத  முதல்வர் ஜெ.ஜெயலலிதா ரூ 5 லட்சம் இழப்பீடு மட்டும் அளித்து காவல்துறையின் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆதரவாக நின்றது உலகே அறியும்.

    குடும்பம், பள்ளி, சமூகம் என அனைத்துமட்டங்களிலும் பெண்களை இரண்டாம்தர பாலினமாக நடத்துவதை யாரும் கேள்விக்குட்படுத்துவதில்லை. சமூகத்தில் பாலினசமத்துவம் இல்லாத சூழலில் கடுமையான சட்டங்களின் மூலம் பாலியல் வன்கொடுமைகளை ஒழித்துவிட நினைப்பது மடமை. பாலியல் கல்வி சொல்லிக் கொடுக்க மறுத்து, கட்டுபெட்டிச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு சினிமா, சின்னத்திரை, பத்தரிக்கைகள், இணையம் ஆகியவை முற்றிலும் போர்னோமயமாகி வருவதைக் கண்டும் காணாததுபோல் இருப்பது எதைக்காட்டுகிறது?

   பெண்களை சக மனுஷியாகப் பார்க்க இங்குள்ள மதம், சாதி, கல்விமுறை, சமூகம் என எதுவுமே கற்றுத்தரவில்லை. நிலைமை இவ்வாறிருக்க தூக்குத்தண்டனையோ, ஆண்மை நீக்கமோ பாலியல் வன்கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வாகாது. இவ்வாறு மொண்ணையான தீர்வுகளைச் சொல்பவர்கள் பெண்ணை ஒடுக்கும் ஆணாதிக்கவாதிகளின் வழித்தோன்றல்களே. இவர்களிடமும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

  இங்கு நாம் செய்யவேண்டியது சமூக அமைப்பில் அடிப்படையான மாற்றத்தைதான். இதைச் செய்ய அரசு, அதிகார வர்க்கம் என எதுவும் தயாராக இல்லாத நிலையில் ஒவ்வொரு குடும்பத்திலும் பாலின சமத்துவத்திற்கான முயற்சிகள் தொடங்கப்படவேண்டும்.  இந்நிலை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவவேண்டும். இது  இன்றைய காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக