மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை
பத்திரிகைக் குறிப்பு
சென்னை
ஜூன் 20, 2013
பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்),
கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு),
முனைவர் ப.சிவகுமார்
பேரா. மு.திருமாவளவன் (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்கள்), வி.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்),
மற்றும்
உயர் நீதி மன்ற வழக்குரைஞர்கள் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம்), செங்கொடி,
கி.நடராசன்,
ரஜினி (மதுரை) .
தொடர்பு :
அ.மார்க்ஸ்,
3/5,முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை- 20,
செல்: 94441 20582
நன்றி: அ.மார்க்ஸ்
சென்னை
ஜூன் 20, 2013
அரசியல்
சட்ட ஆளுகையிலும் (constitutional governance), அடிப்படை அரசியல்
உரிமைகளிலும் அக்கறையுள்ள குடிமக்களாகிய, கீழே கையெழுத்திட்ட நாங்கள்,
தமிழக அரசும் அதன் காவல்துறையும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு,
வெளிப்படையாக இயங்க முடிவு செய்துள்ள ஒரு குழுவினரை, அவ்வாறு இயங்க விடாமல்
கைது செய்து சிறையில அடைத்துத் துன்புறுத்தும் ஒரு சட்ட விரோதக் கொடுமையை
ஊடகங்களின் வாயிலாக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
அரசு
கொள்கைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிற மாவோயிஸ்ட்
இயக்கத்தினரைப் பார்த்து, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய நீரோட்டத்தில்
இணையுங்கள் என அறிவுரை கூறும் அரசு, அவ்வாறு ஆயுதப் போராட்டத்தைக்
கைவிட்டுத் தேர்தல் பாதை உட்பட பிற மக்கள் திரள் பாதையை ஏற்றுக்
கோண்டுள்ளதாக வெளிப்படையாக அறிவித்து, வெளிப்படையாக இயங்கிவரும் ஒரு
குழுவினரைத் தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தி வருகிறது. இதிலிருந்து
அரசின் நோக்கம் ஆயுதப் போராளிகளை மக்கள் திரள் பாதைக்குத் திருப்புவதல்ல.
மாறாக அரசுடன் சமரசம் செய்து கொள்ளாமல் அதன் கொள்கைகளை விமர்சிக்கும்
யாரையும் இயங்காமற் செய்வதுதான் என்பது விளங்குகிறது.
பின்னணி : தற்போது
‘மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி’ என்கிற பெயரில் தமிழகத்தில் இயங்கி
வரும் குழுவினரில் பலர் சில ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்ட் கட்சியில்
இருந்து செயல்பட்டவர்கள். அவர்களில் சிலர் சென்ற 2002ல் ஆயுதப்
போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊத்தங்கரையில் கைது செய்யப்பட்டு ‘பொடா’
சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பெண்கள் 2005லும்,
ஆண்கள் 2007லும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு
விடுதலை செய்யப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டப்
பாதையை விமர்சித்து மக்கள் திரள் பாதையை முன்னிலைப்படுத்தியதை ஒட்டி 2007ன்
இறுதியில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டனர்.
இவ்வாறு
நீக்கப்பட்டவர்களில் சிலர், தொடக்கத்தில் ‘புதிய போராளிகள்’ என்கிற
பெயரில் இயங்கி. தற்போது மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி என்கிற அமைப்பை
உருவாக்கி வெளிப்படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.. இக்கட்சியின் தலைவர்
துரை. சிங்கவேல் (52). இவரது மனைவி ராகினி (44). ராகினி, இக்கட்சியின்
பெண்கள் அமைப்பின் நிர்வாகி.
இவர்கள் பிணையில் விடுதலை ஆகிய
காலந்தொட்டு மிகவும் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். ‘புதிய போராளி’
எனும் அரசியல் இதழை வெளிபடையாக் நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று இதழ்கள்
வந்துள்ளன. அவை இணையத் தளங்களிluம் கிடைக்கின்றன. அவ்வப்போது
வெளியிடப்படும் துண்டறிக்கைகளில் அவர்கள் தாங்கள் மக்கள் திரள் பாதைக்குத்
திரும்பிவிட்டதைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அந்த அடிபடையில்
பொது நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகின்றனர்.
துரை
சிங்கவேல் அ.மார்க்ஸ் எழுதிய அரபுலக எழுச்சி குறித்த நூல் வெளியீட்டு
நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுடன் பங்கு பெற்று
விமர்சனவுரை நிகழ்த்தியதும் சென்ற மே 5 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி நடத்திய மாவோ நூல்கள் விமர்சனக் கூட்டத்தில் பங்கு பெற்று ஆய்வுரை
நிகழ்த்தியதும் அவர்கள் வெளிப்படையாக இயங்கி வருவதற்கான சில
எடுத்துக்காட்டுகள். மாவோயிஸ்டுகள் சட்டிஸ்கரில் சென்ற சில வாரங்களுக்கு
முன் நடத்திய தாக்குதல்கள் குறித்த விவரண நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில்
புதிய தலைமுறை தொலைக் காட்சியில் இடம் பெற்றபோது, அதில் துரை சிங்கவேல்
மக்கள் திரள் பாதையை வற்புறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்கது.
எனினும்
தமிழகக் காவல்துறையும், சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பான
(clandestine organisation) கியூ பிரிவு போலீசும் இவர்கள் இவ்வாறு ஆயுதப்
போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் திரள் பாதையை ஏற்றுக் கொண்டதைச்
செரிக்கவும், அனுமதிக்கவும் தயாராக இல்லை என்பதைச் சென்ற அக்டோபர் 6, 2012
அன்று அவை மேற்கொண்ட நடவடிக்கை வெளிப்படுத்தியது. குன்றத்தூரில் உள்ள ஒரு
பள்ளி வளாகத்தில் அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், கல்வியாளர்களும்
கூடி, தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது அவர்கள்
அனைவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் ஆயுதப்
போராளிகள் இவ்வாறு தேர்தல் பாதைக்குத் திரும்புவது குறித்து ஆலோசித்த போது
அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த கேள்விகளுக்குத் தமிழகக்
காவல் துறை இன்று வரை பதில் அளிக்கவில்லை..அப்போது கைது
செய்யப்பட்டவர்களில் துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் அடக்கம்.
கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு உண்மை : துரை சிங்கவேல் பிணையில்
விடுதலை ஆகித் தன் மனைவி ராகினியுடன் குடும்ப வாழ்க்கையை மெற்கொள்ளத்
தொடங்கிய பின் அதிலும் தமிழகக் காவல் துறை தலையிட்டது. 2002ல் பலர்
பொடாவில் கைது செய்யப்பட்டபோது பாரதி எனும் ஒருவர் குற்றப் பத்திரிக்கையில்
இடம் பெற்றார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. அவர் ஆணா , பெண்ணா
என்பது கூட அப்போது காவல் துறைக்குத் தெரியவில்லை. எனினும் துரை சிங்கவேல்
குடும்ப வாழ்க்கையத் தொடங்கிய பின் , அவர் மனைவி ராகினிதான் பாரதி எனச்
சொல்லித் தினந்தோறும் அவர் வீட்டுக்கு வந்துத் தொல்லை செய்யத் தொடங்கினர்.
தொல்லை பொறுக்க முடியாத ராகினி இறுதியில் சென்னை உயர் நீதி மன்றத்தை
அணுகினார்,
ராகினியின் மனு (CrL. OP No. 9141 of 2012 dated
16.04. 2012) நீதியரசர் நாகமுத்து அவர்கள்முன் வந்தது. அரசு மற்றும் காவல்
துறையின் சார்பாக முன்னிலையான கூடுதல் பப்ளிக் ப்ராசிகியூட்டர்,
“விசாரணைக்காக மனுதாரர் ராகினியைத் நாங்கள் கைது செய்யவோ விசாரிக்கவோ
தேடவில்லை” (the petitioner is not wanted either for arrest or for
enquiry as uf now) எனச் சொன்னதை ஏற்று, “மனுதாரர் ராகினியை விசாரிக்க
வேண்டுமானால் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளுக்குட்பட்டு முறையாகச் சம்மன்
அனுப்பி விசாரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விசாரணை என்கிற பெயரில்
அவர் துன்புறுத்தப் படக் கூடாது” என நீதிமன்றம் ஆணையிட்டது..
தற்போது நடந்தது : சென்ற 14
அன்று துரை சிங்கவேலு மற்றும் அவர் மனைவி ராகினி ஆகியோர்
தருமபுரிக்கருகில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலயத்தில் துண்டுப் பிரசுரங்கள்
வினியோகித்துக் கொண்டிருந்ததாகவும், காவல் துறையினரைக் கண்டவுடன் அவர்கள்
தப்பிக்க முயற்சித்தபோது பிடிபட்டதாகவும் அடுத்த நாள் செய்தித் தாள்களில்
கண்டபோது கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் வியப்படைந்தோம். இது குறித்து
நாங்கள் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
அவை:
1.துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் சென்ற 13ந்
தேதி அன்றே, இரவு 11 மணி அளவில் குன்றத்தூரில் உள்ளவர்களது வீட்டில்
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். திடீரென யாரோ சிலர்
உள்ளே நுழைந்து வன்முறையாகத் தங்களை இழுத்துச் செல்ல முயன்றவுடன் ராகினி,
அவரது தோழர் ஒருவருக்குப் போன் செய்ய முயன்றுள்ளார். அழைக்கப்பட்ட அந்த
நண்பர் ராகினி பேச விடாமல் தடுக்கப் பட்டதை உணர்ந்து உற்ற நண்பர்களுக்குச்
சொன்னவுடன் அவர்கள் ராகினி மற்றும் துரையுடன் தொடர்பு கொள்ள
முயற்சித்துள்ளனர். ஆனால் யாருக்கும் தொடர்பு கிடைக்கவில்லை.
காலையில்
அப்பகுதியில் சென்று விசாரித்தபோது, ஒரு சிறிய தள்ளு முள்ளுடன் அவர்கள்
இழுத்துச் செல்லப்பட்டதைச் சுற்றியுள்ளோர் உறுதிப்படுத்தினர். வீட்டிற்குள்
நுழைந்து பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இழுத்துச்
செல்லப்பட்டிருந்தது உறுதியானது.
2.அத் தம்பதிக்கு என்ன
நடந்தது, அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவர்களில்
அக்கறையுள்ள பலரும் விசாரிக்கத் தொடங்கினர். அன்று மதியம் சென்னை உயர் நீதி
மன்ற வழக்குரைஞர் செங்கொடி கியூ பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர்
சம்பத்தைத் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, அவர்கள் இருவரும்
விசாரணைக்காகத் தருமபுரி கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி
பதிலுறுத்தார். எனவே அன்று (அதாவது 14) மாலை அவர்கள் தருமபுரி கடம்பத்தூர்
ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இப்போது காவல்துறை சார்பாகச்
சொல்லப்படுவது அப்பட்டமான பொய்.
3.கைது செய்யப்பட்ட
ராகினியை, முன் குறிப்பிட்ட நீதிமன்ற ஆணையை மீறி, அவர்தான் தேடப்பட்ட பாரதி
என ஒத்துக் கொள்ளச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறையிலும்
அவர் இவ்வாறு வற்புறுத்தப் பட்டு வருகிறார். இதன் மூலம் அவரை 2002ம் ஆண்டு
வழக்கில் பொடா சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாகச் சிறையில் அடைப்பது
என்கிற நோக்குடன் தமிழகக் காவல்துறை செயல்பட்டு வருவது வெளிச்சமாகியுள்ளது.
தற்போது அவர்கள் இருவர் மீதும் CrPC 353, 124, 17(1) CLA ஆகிய பிரிவுகளின்
கீழ் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.
கவனத்தில் கொள்ள வேண்டிய மேலும் ஒரு உண்மை : கைது
செய்யப் பட்டுள்ள தம்பதியர் இருவரும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வாய்தா
நாட்களில் நீதிமன்றங்களில் சரியாக முன்னிலை ஆவதில்லை என்பது இக்கைதை
ஒட்டித் தமிழகக் காவல்துறை பரப்பி வரும் இன்னொரு அப்பட்டமான பொய். துரை
சிங்கவேல் மீது நிலுவையில் இரு வழக்குகள் உள்ளன, ஒன்று 2002ம் ஆண்டு பொடா
வழக்கு. மற்றது 2012 குன்றத்தூர் வழக்கு. பின்னது இன்னும் விசாரணைக்கு
வரவில்லை. பொடா வழக்கைப் பொருத்த மட்டில் துரை மிகச் சரியாக வாய்தாக்களில்
நீதி மன்றத்தில் தன்னை முன்னிலைப் படுத்தி வருகிறார், கடைசியாக அவர் ஜூன் 3
அன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலை ஆனார் ராகினியைப் பொருத்த
மட்டில் அவர் மீது குன்றத்தூர் (2012) வழக்கு மட்டுமே உள்ளது. அது இன்னும்
விசாரணைக்கே வரவில்லை. எனவே அவர் வாய்தாக்களுக்கு ஒழுங்காக நீதிமன்றங்களில்
முன்னிலைப் படுவதில்லை என்கிற குற்றச் சாட்டு முற்றிலும் பொய்.
எமது கேள்விகளும் கோரிக்கைகளும்:
- 1. தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக முதல்வர் ஜெயலலலிதா தொடர்ந்து சொல்லி வருகிறார். மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியினர் மாவோயிஸ்ட் கடட்சியின் ஆயுதப் போராட்டப் பாதையை விமர்சித்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டு, தேர்தல் பாதை உள்ளிட்ட மக்கள் திரள் பாதைக்குத் திரும்பியவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வெளிப்படையாக இயங்கி வரும் இவர்களை தமிழக் காவல் துறையின் கியூ பிரிவினரும், நக்சல் ஒழிப்புப் பிரிவும் துன்புறுத்தி வருவதன் பொருளென்ன? ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் கலந்தாலும் நாங்கள் விட மாட்டோம் என்பதுதான் அவர்கள் இத்தகைய இயக்கங்களைச் சேர்ந்தோருக்குச் சொல்ல விரும்பும் செய்தியா?
- 2. உளவுத் துறையாக உருவாக்கப்பட்டு இன்று காவல் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ள சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பான கியூ பிரிவும், எந்த வேலையும் இல்லாமல் இப்படியான வம்பு வழக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நக்சல் ஒழிப்புப் பிரிவும் (Naxal Special Wing) கலைக்கப்பட வேண்டும்.
- 3. 124A என்கிற தேசத் துரோகச் சட்டம் (Sedition Act) பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தேச விடுதலைப் போராளிகளைத் துன்புறுத்துவதற்காக அந்நிய அரசு கொண்டு வந்த ஒரு ஒடுக்குமுறைச் சட்டம். நமது அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகளுக்கு (பிரிவு 19) இது எதிரானது. அரசின் கொள்கைகளை ஏற்பதற்கும் எதிர்ப்பதற்கும் நமது அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உரிமை வழங்குகிறது. தவிரவும் ஒருவர் தன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கும், அதற்காக இயக்கம் கட்டுவதற்கும், நிதி சேகரிக்கவும் தடையற்ற உரிமைகளை அரசியல் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில் இதற்கு முற்றிலும் விரோதமான 124 A சட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவர் பினாயக் சென் முதல் துரை சிங்கவேல் ராகினி தம்பதி வரை துன்புறுத்தப் படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்தி இயக்கத்தவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இச்சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும்.
- 4. வெளிப்படையாக இயங்கி வந்த இவர்கள் குன்றத்தூரில் அவர்களின் இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்தி தெரிவிக்க விடாமல் அவர்கள் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அடுத்த நாள் மதியம் கியூ பிரிவின் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரும் தருமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவர்களின் வழக்குரைஞரிடம் கூறியுள்ளார், எனினும் தற்போது துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் வன்முறையாகக் கடத்திச் செல்லப்பட்ட அடுத்த நாள் மாலை கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைதில், உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்குத் தீர்ப்பில் விதித்துள்ள எந்த நெறிமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. இத்தகைய விதி மீறல்கள் மற்றும் பொய் கூறல்களுக்காகச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரித்துத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
- 5. ராகினி, தாம் தேடி வரும் பாரதி இல்லை என அரசு வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். ராகினியை இது குறித்து விசாரிக்க வேண்டுமெனில் முறையாகச் சம்மன் அனுப்பி அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்று அவர் கட்டாயமாகக் கடத்தப்பட்டு, தான் பாரதி என ஒத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார். அவரை 2002 பொடா வழக்கில் இணைக்கும் முயற்சியையும் காவல் துறை மேற்கொள்கிறது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புக் குற்றம். இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட வேண்டும். ராகினையைப் பொடா வழக்கில் சிக்க வைத்துத் துன்புறுத்தும் முயற்சியைக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.
- 6. வெளிப்படையாக இயங்கி வந்த இருவர் இன்று திருட்டுத் தனமாகக் கைது செய்யபட்டுள்ளனர். ஆயுதப் பாதையிலிருந்து தேர்தல் பாதைக்குத் திரும்பி வெளிப்படையாகச் செயல்பட்டு வந்தவர்களை இவ்வாறு துன்புறுத்துவது ஆரசு கொள்கைகளுக்கு எதிரானது. துரை சிங்கவேல் மற்றும் ராகினி உடனடியாக விடுதலை செய்யப்டுவதோடு பொய் வழக்குப் போட்டுத் துன்புறுத்தியதற்காக அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்),
கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு),
முனைவர் ப.சிவகுமார்
பேரா. மு.திருமாவளவன் (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்கள்), வி.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்),
மற்றும்
உயர் நீதி மன்ற வழக்குரைஞர்கள் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம்), செங்கொடி,
கி.நடராசன்,
ரஜினி (மதுரை) .
தொடர்பு :
அ.மார்க்ஸ்,
3/5,முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை- 20,
செல்: 94441 20582
நன்றி: அ.மார்க்ஸ்