சனி, ஜூன் 15, 2013

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் - துணை அறிக்கை

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் - துணை அறிக்கை

(இந்த இட ஒதுக்கீட்டு மோசடியின் முழுப் பின்னணியையும் அறிய எமது இந்தத் துணை அறிக்கையையும் முதன்மை அறிக்கையையும்  சேர்த்து வாசிக்கவும்.)
                                                                  
                                                                                                 சென்னை                                                                                                                                              ஜூன் 13, 2013


      சென்ற ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட எமது அறிக்கை தமிழக அரசு சென்ற ஆண்டு மேற்கொண்ட டெட் தேர்வு மற்றும்  பட்டதாரி / இடைநிலை ஆசிரியப் பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு ஊழலில் உடனடிக் கவனம் பெற வேண்டிய முக்கிய பாதிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இந்த ஊழலின் முழு வரலாற்றையும் கவனம் கொள்ள வேண்டிய இதர அம்சங்களியும் எமது இந்த இணைப்பு முன்வைக்கிறது:

1.கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியபோது ஆக 21,2009), அச் சட்டத்தின் 23ம் பிரிவின்படி, ‘தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்’ (NCTE) இது தொடர்பான அதிகார மையமாக (academic authority) அறிவிக்கப்பட்டது. தவிரவும் இவ்வாறு வழங்கப்படும் கல்வி தரமாக அமைவதற்காக, இனி நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இக் கழகத்தால் வகுக்கப்படும் நெறிமுறைகளின்படி நடத்தப்படும்  ‘ஆசிரியர் தகுதிதித் தேர்வு’ (TET – Teacher Eligibility Test) ஒன்றில் வெற்றி பெற வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது (பிரிவு 23{1}). இந்த ‘டெட்’ தேர்வு தொடர்பான நெறிமுறைகளையும் தேசிய ஆசிரியர் கழகம் சென்ற பிப்ரவரி 11, 2011 அன்று வெளியிட்டது (No 76-4/2010/NCTE/Acad). இதன் 9ம் பிரிவு இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறித்துக் கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

“விதி 9 : (பொதுவாக) 60%-க்கு மேல் (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150ல் 90க்கு மேல்) பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத), (அ) அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப SC/ST, OBC, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்”

2. தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் இது குறித்த அறிவிப்பை மாநில அரசுகளுக்கு அனுப்பியதை ஒட்டி தமிழக அரசு, நவம்பர் 2011ல் உரிய அரசாணையை வெளியிட்டது (G.O.Ms.181, School Education (C1) Department, dated 15.11.2011).

இந்த ஆணையின் முக்கிய கூறுகள்: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடத்தும் அதிகாரம் தமிழக அரசின் ‘ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு’ (TRB) அளிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் வாரியம் இத் தேர்வை நடத்தியாக வேண்டும். தேவையாயின் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம்.

தவிரவும் (i) இடை நிலை ஆசிரியர்க்கான தேர்வு குறித்த வழக்கொன்று உச்ச நீதி மன்றத்தில் உள்ளதால் அந்தத் தீர்ப்பு வரும் வரை ஆசிரியத் தேர்வு பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கப்படும் (ii) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வைப் பொருத்தமட்டில், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் விதித்துள்ள நெறிமுறைகளின் அடிபடையில் டெட் தேர்வு நடத்தப்பட்டு அந்த அடிப்படையில் தேர்வு மேற்கொள்ளப்படும்.

இந்த 181 ஆணையின் பின்னிணைப்பாக டெட் தேர்விற்கான நெறிமுறைகளாக முன் குறிப்பிட்ட தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் வழங்கிய நெறிமுறைகள் அப்படியே இணைக்கப்பட்டன, அதாவது வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் பொதுவாக 60 என்றாலும் அவ்வவ் மாநில மற்றும் நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்ப நலிந்த பிரிவினர்க்குத் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கலாம் என்பதே ஆசிரியத் தேர்வு ஆணையத்திற்கு தமிழக அரசு அளித்த நெறிமுறை.

3. இந்த ஆணையின்படி ஆசிரியத் தேர்வு வாரியம் சென்ற மார்ச் 7, 2012 அன்று டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக அனைவரும் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என விதிக்கப்பட்டது.
இவ்வாறு தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொருத்தமட்டில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்க வழங்கிய உரிமையைத் தமிழக ஆசிரியத் தேர்வு வாரியம் தன்னிச்சையாக ரத்து செய்தது.

அதே நேரத்தில் சட்டிஸ்கர், மணிப்பூர், ஒரிசா, உத்தர பிரதேசம், உத்தரகான்ட், பஞ்சாப், பீஹார், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில், ஒதுக்கீட்டுப்  பிரிவினருக்கு, வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் 20 சதம் வரை சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அருகிலுள்ள, காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் ஆந்திர மாநிலத்தில் டெட் தேர்வில் வெற்றி பெற பிற்படுத்தப்பட்டோர் 50 சதம் பெற்றால் போதும் எனவும் பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 40 சதம் பெற்றால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது (APTET Notification, May 2012).

4. இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 24, 2012ல் அறிவிக்கப்பட்டன. ஆனால் கலந்து கொண்ட 6,76,763 பேர்களில் வெறும் 2448 பேர்களே 60 சத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது வெற்றி வீதம் இரண்டு பதவிகளுக்கும் சராசரியாக வெறும் 0.36 சதம்.

5. காலியிடங்கள் அனைத்தையும் இவர்களைக் கொண்டு நிரப்ப இயலாது என்பதாலும், எக்காரணம் கொண்டும் தரத்தை விட்டுக் கொடுக்க இயலாது என்பதாலும் அக்டோபர் 14, 2012 அன்று மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அதில் ஏற்கனவே டெட் எழுதித் தோற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் எனவும் காரணம் கூறி தமிழக அரசு  இதற்கென இன்னொரு அரசாணையை வெளியிட்டது (G.O.Ms.222, School Education Department, dated 24.08.2012).  தேர்வு நேரம் ஒன்றரை மணி என்பதிலிருந்து 3 மணிகளாக அதிகரிக்கவும் பட்டது.

இவ் ஆணையில், “முதல் டெட் தேர்வில் 60 சதம் மதிபெண் பெறாதவர்களுக்கு மறு டெட் தேர்வு நடத்தப்படும்” என அறிவித்ததன்தன் மூலம், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வெற்றித் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கத் தேவையில்லை, அனைவரும் 60 சத மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற்றவராகக் கருதபடுவர் என்கிற தேர்வு வாரியத்தின் முடிவிற்கு அரசின் கொள்கை ஏற்பு உள்ளது என்பது உறுதியாகியது

6. இவ்வாறு அறிவிக்கப்பட்ட மறு தேர்வு நடைமுறைகளை எதிர்த்து பாதிக்கப்பட்டோரால் உயர் நீதி மன்றத்தில்  வழக்குகள் தொடரப்பட்டன. அவை இரு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தன. அவை: (i) முதல் டெட் தேர்வில் கலந்து கொண்டோர் மட்டுமே இரண்டாவது டெட் தேர்வில் கலந்து கொள்லலாம் எனில், அதற்கு இடைப்பட்ட காலத்தில் டெட் தேர்வு எழுதுவதற்குத் தகுதி பெற்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது அரசியல் சட்டம் வழங்கும்உரிமைகளுக்கு எதிரானது. (ii) முதல் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2448 பேருக்கும் ஆசிரியப் பணி அளிக்கப்படும் என அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. டெட் தேர்வு என்பது தகுதித் தேர்வுதான். பிற பணி நியமனத் தெரிவு நடைமுறைகளை (Selection processes) மேற்கொள்ளாமல் டெட் தேர்வு மதிபெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணி நியமன ஆணை வெளியிடுவது சட்ட விரோதமானது.

7. இப்படி ஒரு சிக்கல் முளைத்தவுடன் அரசு இரு முடிவுகளை நீதிமன்றம் முன் வைத்தது (i) முதல் டெட் தேர்வு நடத்தப்பட்ட தேதிக்குப் பின் தேர்வு எழுதத் தகுதி பெற்றோரும் அறிவிக்கப்பட்ட தேர்வில் பங்கு பெறலாம். இதற்கான அறிவிப்பும் நடைமுறைகளும் வெளியிடப்படும். (ii) ஆசிரியப் பணி நியமனத் தெரிவிற்கான நெறிமுறைகளைத் தீர்மானிக்கப் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அரசு முதன்மைச் செயலர், ஆசிரியத் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகிய நால்வர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது (G.O.(2D) No.36, School Education Department, dated 14.09.2012).

அரசின் இவ்விளக்கங்களை ஏற்று இரண்டாவது டெட் தேர்வை அக்டோபர் 14, 2012 அன்று நடத்துமாறு ஆணையிட்டார் நீதியரசர் எஸ். நாகமுத்து (நவம்பர் 21, 2012). ஆக, முதலாவதாக நடத்தப்பட்ட தேர்வின் துணைத் தேர்வாகவும் (Supplementary Exam) இல்லாமல், முற்றிலும் புதிய தேர்வாகவும் இல்லாமல் இரண்டாவது தேர்வு நடத்தப்பட்டது.

8. இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட தகவல்களில் ஒன்று, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 26,116 என்பது. இந்த எண்ணிக்கை இதுவரை வகுப்புவாரி ஒதுக்கீடுகளுடன் முறையாக அறிவிக்கை செய்யப்படவில்லை என்பதோடு, காலிப் பணியிடங்கள் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு எண்ணிக்கை அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

9. மேற்குறித்த நால்வர் குழுவின் பரிந்துரையினடியாக அரசாணை எண் 252 (தேதி : 05-10-2012) வெளியிடப்பட்டது. இது இரு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. (i) முன் குறிப்பீட்ட 222 ஆணையைச் சுட்டிக் காட்டி டெட் தேர்வில் வெற்றிபெற அனைவரும் குறைந்தபட்சம் 60 சதம் பெறவேண்டும் என்பதற்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பிற மாநிலங்களில் தகுதி மதிப்பெண்ணில் தளர்ச்சி அளித்துள்ளது போலத் தமிழகத்தில் அளிக்க முடியாது என்பதுதான் அ.தி.மு.க அரசின் கொள்கை என்பது உறுதியானது.  (ii) ஆசிரியப் பணி நியனமனத்திற்கு விண்ணபித்தோர் +2/ பட்டப்படிப்பு/ ஆசிரியப் பயிற்சிப் படிப்பு/ டெட் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு weightage தரப்படும் என்பது நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. [இடை நிலை ஆசிரியராயின் +2 மதிப்பெண்களுக்கு weightage 15, D.T.Ed க்கு 25, டெட் க்கு 60. பட்டதாரி ஆசிரியராயின் +2க்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, B.Ed க்கு 15, டெட்க்கு 60 ].

இவ்வாறு weightage கொடுத்துள்ளதில் இரு பிரச்சினைகள் பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப் படுகின்றன. அவை : (i) ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது புதிய அரசுப் பணிகள் கிடையாது என ஒரு கொள்கை முடிவெடுத்துச் செயல்பட்டதை அறிவோம். இதன் விளைவாக இன்று ஆசிரியப் பதவிக்கு விண்ணப்பிப்போரில் 1990க்கு முன் பள்ளி இறுதித் தேர்வு எழுதியோரும் அடக்கம். அப்போதைய தேர்வு முறைகளுக்கும் தற்போதைய தேர்வு முறைகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இப்போதைய தேர்வு முறையில் கூடுதலாக மதிப்பெண்கள் எடுப்பது எளிது. எனவே 90கள் மற்றும் அதற்கு முன் பள்ளி இறுதித் தேர்வு முடித்தோரையும் அதற்குப் பின் முடித்தோரையும் ஒரே நிலையில் வைத்து ஒரே மாதிரியாக weightage நிர்ணயிப்பது தவறு எனப் பதிவு மூப்புடையோர் கூறுகின்றனர். (ii) weightage நிர்ணயிப்பில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இரு பிரிவினருக்குமே +2 மற்றும் D.T.Ed தேர்வுகளில் 50 மதிப்பெண்களுக்குக் கீழ் வாங்கியவர்களுக்கு weightage ஏதுமில்லை, அதாவது weightage 0. B.Ed தேர்வில் 50 சதத்திற்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு weightage 10 கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு +2 மற்றும் பட்டப் படிப்பில் 50 மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றவர்களுக்கு எவ்வித weightage தராததும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இங்கொன்றைக் குறிப்பிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், உச்ச நீதி மன்றத்தில் எஸ்.எல்.பி மனு ஒன்று இது தொடர்பாக நிலுவையில் உள்ளதால், மேற்குறித்தவாறு  weigtage அறிவிக்கப்படட்போதும் பதிவு மூப்பே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

10. அக்டோபர் 14, 2012 அன்று இரண்டாவது டெட் தேர்வு நடத்தப்பட்டு அதில் 19,000 பேர் தேர்வு பெற்றதாக அறிவித்து அவர்களுக்குச் சென்ற ஆண்டு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்ட வரலாறை நாம் அறிவோம்..

11.  கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் எழுதிய இத் தேர்வில் வெறும் 19,000 பேர்களே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தோல்வியுற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்  181 ஆணயின்படித் தமக்கு தேர்வுத் தகுதி மதிப்பெண்களில் சலுகை அளிக்கப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க இயலும் என்பதைச் சுட்டிக்காட்டி, தம்மையும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவராகக் கருதி (பணி நியமனத் தெரிவிற்கான) சான்றிதழ் பரிசோதனைக்கு அழைக்க ஆணையிடுமாறு உயர் நீதிமன்றத்தை அணுகினர், இவ்வழக்கு ஒய்வு பெறுமுன் நீதியரசர் சந்துரு முன் வந்தது, ஆசிரியத் தகுதியில் தாம் எந்தவிதச் சமரசத்தையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்கிற அரசுத் தரப்பு வாதத்தை நீதிபதி சந்த்ரு ஏற்றுக் கொண்டார்.

தவிரவும் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுக்கு இருக்கும்போது ஏன் ஆந்திர மாநிலத்தில் வகுப்புவாரியாகத் தகுதி மதிபெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகத் தமிழகத்திலும் அப்படிச் செய்ய வேண்டும் எனத் தனக்கு விளங்கவில்லை என அலுத்துக் கொண்டார். பாரதீய சேவா சமாஜ் எதிர் யோகேஷ்பாய் அம்பாலால் படேல் என்னும், இந்தப் பிரச்சினையுடன் அவ்வளவாகப் பொருத்தமில்லாத ஒரு வழக்கில் (2012) உச்ச நீதி மன்றம், “நிர்ணயிக்கப்பட்ட தகுதி இறுக்கமாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி மனுதாரர்களின் ரிட் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

12. இந்தத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித் தாள்களிலும், தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதற்காக வழங்கப்பட்ட பதில் குறிப்புகளிலும் தவறுகள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வில் மட்டும் (இரண்டாவது தாள்) சுமார் எட்டு கேள்விகள் இப்படித் தவறாக உள்ளன. 2011ல் நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் இவ்வாறு தவறாகக் கேட்கப்பட்ட கேள்விகளை நீக்கிவிட்டு தேர்வுத் தாள்கள் மதிப்பிடப்பட்டன. ஆனால் இந்த டெட் தேர்வில் இப்படியான தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டும் தவறுகள் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பாத்ஹிக்கப்பட்டோரால் வைக்கப்படுகிறது. ஒருவேளை உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வெற்றி பெற்றோரது எண்ணிக்கை மாறியிருக்கும். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.

13. பள்ளி மேல்நிலை ஆசிரியர்கள் தேர்வில் ஆசிரியத் தேர்வு ஆணையம் தேர்வுப் பட்டியலை வெளியிட்டபோது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பட்டியல் வெளியிட்டு நீதியரசர் நாகமுத்து அவர்களால் அப்பட்டியல் ரத்து செய்யபட்டது குறித்து எமது முதன்மை அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. தேசிய ஆசிரியர் கல்விக் கழக (NCTE) நெறிமுறைகளின்படி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிப்போர் டெட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதோடு,அவர்களின் அடிப்படைக் கல்வித்தகுதியிலும் (+2, பட்டப்படிப்பு),  50 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் சாதியினருக்கு இந்தத் தகுதி மதிப்பெண்ணில் 5 சதச் சலுகை அளிக்கலாம். தமிழக அரசு இந்நெறிமுறையைப் பின்பற்றவில்லை. அடிப்படைக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் குறைந்த பட்சமாக வெற்றி பெற்றிருந்தாலே போதும் என்கிற நிலை இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அடிப்படைக் கல்வித் தகுதியில் (+2, பட்டப் படிப்பு) வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் இங்கு வெறும் 35 தான். B.Ed  தேர்விலும் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 40. இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் மட்டுமே இங்கு வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் 50சதம்.

சுமார் 35,000 காலிப்பணியிடங்களுக்கு முறையான அறிவிக்கைகளைச் செய்யாமல் நடத்தப்பட்ட தேர்வு இது., இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு மாநிலத்தில், வெற்றித் தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்புகள் வழங்க விதிகள் அநுமதித்தும், பிற மாநிலங்கள் பலவற்றிலும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தும், தமிழகத்திலேயே கல்லூரி ஆசிரியர்களுக்கு அத்தகைய நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தும், அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு  இன்று ஆசிரியப் பணி மறுக்கப்பட்டுள்ள கதை இதுதான்.

ஏன் முறையான காலிப் பணியிடங்களை அறிவிக்க வில்லை? ஆசிரியத் தகுதியில் சமரசம் கூடாதென்றால் தமிழக அரசு கல்லூரிக் கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் வெவ்வேறு அணுகு முறைகளை ஏன் கடை பிடிக்கிறது என்கிற கேள்விகளை எழுப்ப நீதிமன்றங்களும் தயாராக இல்லை. பிரச்சினைகள் வரும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே  அரசு அவ்வப்போது புதிய ஆணைகளை இட்டுள்ளது என்பதையும் கூட நீதிமன்றங்கள் சிரத்தை எடுத்துக் கவனிக்க வில்லை.

எனவே...
  1. தற்போது அரசு அடுத்த டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது (Ad No 3/2013 dt 22-05-2013). இது முந்தைய அறிவிப்பில் கண்டுள்ள அனைத்துத் தவறுகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, தமிழகத்திற்கு உரிய வகையில் டெட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிபெண்களை நிர்ணயிக்கவும் இதர தொடர்புடைய பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் கல்வியாளர்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற மாநிலங்களிலும் தமிழகத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கான செட் தேர்விலும், மத்திய அரசு நடத்தும் நெட் தேர்விலும் கடைபிடிக்கபடுவது போல வகுப்பு வாரியாகத் தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்துச் செயல்படுத்த வேண்டும்.
  2. இத்தகு கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின் அந்த அடிப்படையில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வுப் பட்டியலைப் புதிதாக வெளியிட வேண்டும். தவறான கேள்விகள் மற்றும் பதில்கள் (Key) இருந்தன எனக் கல்வியாளர் குழு சிட்டிக்காட்டினால், பாதிக்கப்பட்டோருக்கு உரிய மதிப்பெண் திருத்தமும் அளிக்க வேண்டும். வெற்றி பெற்றோருக்கு உரிய சான்றிதழ் வழங்க வேண்டும்.
  3. +2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சிப்பட்டம் அல்லது பட்டயம், டெட் தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கான weightage அளிப்பது  தொடர்பாகப் பல ஆண்டுகட்கு முன்னர் படிப்பை முடித்தோருக்கும், சமீபமாகப் படித்து முடித்தோருக்கும் ஒரே weightage அளிப்பது தொடர்பாக எழுந்துள்ள குறைகளையும் மேற்குறிப்பிட்ட குழு கவனத்தில் எடுத்டுக் கொண்டு முடிவு காண வேண்டும்.. அடிபடைக் கல்வியில் 50 சதத்திற்கும் குறைவாகப் பெற்றோருக்கும் உரிய weightage அளிக்க வேண்டும். அதைக்காட்டிலும் அடிப்படைக் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் எதுவாயினும் அதற்கேற்றவாறு தசமத் துல்லியமாக weightage கணக்கிடுதல் சாலச் சிறந்தது.
  4. இந்த அடிப்படையில், சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து, கட் ஆஃப் மதிப்பெண்கள், கட் ஆஃப் தேதி முதலானவற்றை முறையான தனி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுப் புதிய பணி நியமனங்களைச் செய்ய வேண்டும்.
  5. இதன் பின்னர் புதிய நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய டெட் தேர்வு அறிவிப்பைச் செய்ய வேண்டும். பின் காலிப் பணியிடங்களைக் கணக்கிட்டு முறையான அறிவிக்கைகளைச் செய்து பணி நியமனத்திற்கான தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  6. மேற்குறித்த கோரிக்கைகளுடன் எமது முதன்மை அறிக்கையில் கண்டுள்ளவாறு, ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி இந்த டெட் தேர்வில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இவ்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மொத்தமுள்ள காலிப் பணியிடங்கள், வகுப்பு வாரியான எண்னிக்கை முதலானவற்றுடன் முறையான அறிவிக்கை வெலியிடாமை, தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை வெளியிட்டபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட சாதியினருக்கு உரிய பலன்கள் கிடைக்காவண்ணம் முற்படுத்தப்பட்ட சாதியினரை OC எனக் குறிக்காமல் ‘பொதுப் பிரிவு’ (GT) எனக் குறித்து மோசடி செய்தது முதலான குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட வேண்டும். வேறொரு வழக்கில் உயர் நீதி மன்றம் இது குறித்துக் கண்டித்து, அவர் இவ்வாறு தயாரித்த பட்டியலை ரத்து செய்தும் கூட மீண்டும் அவர் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்விலும் இதே குற்றத்தைப் புரிந்துள்ளார். இனி இத்தகைய தவறுகள் ஏற்படாது எச்சரிக்கை மேற்கொள்ளப்படுதல்  அவசியம்.
  7. டெட் தேர்வில் வெற்றித் தகுதி மதிப்பெண்கள் வகுப்புவாரியாக நிர்ணயிக்கப்படுதல் கட்டாயம். அந்தந்த மாநிலங்களுக்குத் தக்கவாறு இதை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்வுச் சுதந்திரம். இது வேறு வகைகளில் பொருள் கொள்ள இயலாத வண்ணம் சரியான சொற்களில் வரையறுக்கப்படுதல் அவசியம். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேசிய ஆசிரியக் கல்விக் கழகம் தனது நெறிமுறைகளின் 9ம் பிரிவைக் கறாராக அமைக்கவேண்டும்.
  8. இந்தப் பிரச்சினை மேலுக்கு வந்தபின் இன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சக்திகள், “அரசுப் பள்ளிகளின் தரம் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டு மோசடியைப் பெரிதுபடுத்துகின்றனர்” என்கிற கருத்தைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தரக் குறைவிற்குக் காரணம் அங்குள்ள ஆசிரியர்கள் தகுதிக் குறைவானவர்கள் என்பதல்ல. சொல்லப்போனால் ஒபீட்டளவில் தரமும் அநுபவமும் உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிலேயே உள்ளனர். பல தனியார் பள்ளிகள் பயிர்சி எறாத ஆசிரியர்களிக் கோண்டே நடத்தப்படுகின்றன என்கிற உண்மையை நாங்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் நிறுவியுள்ளோம். போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் போதிய அகக்கட்டுமானங்களின்மை, கல்வி தொடர்பில்லாத நிர்வாகப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பயன்படுத்துதல் ஆகியனவே அரசுப் பள்ளிகளின் தரக் குறைவிற்குக் காரணம். இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியத் தேர்வில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது அப்பட்டமான ச்சதி வெறியைத் தவிர வேறேதுமில்லை. பிரச்சினைக்குரிய டெட் தேர்வில் முறையாக இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருந்தால் மேலும் 17,000 ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்குக் கிடைத்திருப்பர், அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயர்ந்திருக்கும் என்கிற உண்மையை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது எளிதில் வைக்கப்படுவதை அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமது சங்க உறுப்பினர் மத்தியில் கடமை உணர்வும், ஏழை எளிய மாணவர்கள்பால் கடப்பாட்டுணர்வும் அதிகரிப்பதற்கு அவை முன்கை எடுக்க வேண்டும்.
  9. இந்த அறிக்கை தயாரிப்பிற்குத் தேவையான தரவுகளையும், ஆவணங்களையும், விளக்கங்களையும்  தந்துதவிய பேராசிரியர் தேவா அவர்களுக்கும், எமது முதன்மை அறிக்கை வந்தவுடன் தொடர்புகொண்டு புதிய தகவல்களைத் தந்துதவிய பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், குறிப்பாகத் தரங்கம்பாடி ஆசிரியர்கள் விஜயகுமார் மற்றும் ரவி ஆகியோருக்கும் எம் நன்றிகள்.
  பேரா. அ.மார்க்ஸ்,  
முனைவர் ப.சிவக்குமார்,  
பேரா.மு.திருமாவளவன்,  
வழக்குரைஞர்  ரஜினி. 

நன்றி: பேரா. அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக