வியாழன், செப்டம்பர் 19, 2013

உழைப்பைச் சுரண்டும் அழகு



உழைப்பைச் சுரண்டும் அழகு      - மு.சிவகுருநாதன்

    இன்றைய (19.09.2013) தி இந்துவில் சமஸ் எழுதிய சின்ன விஷயங்களின் அற்புதம் என்ற கட்டுரை படித்தேன். மறமடக்கி சலூன் தொழிலாளி ரமேஷ் பற்றிய சித்தரிப்புகளினூடாக மன்மோகன் சிங், .சிதம்பரம், மாண்டேக் சிங் அனுவாலியா, சுப்பாராவ், ரகுராம் ராஜன் போன்ற பொருளாதாரப் பெரு மேதைகளின் (?!) வியாக்கியானங்கள் ஒளிந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தேன். ஆனால் இந்த மாதிரியான அதிர்ச்சிகளை அடிக்கடி அனுபவிக்கவேண்டிதான் உள்ளது. இத்துடன் தொடர்புடைய சில அதிர்ச்சிகளை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

 நேற்று (18.09.2013) ஓர் தொலைக்காட்சி நிகழ்வில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் முன்னாள் தலைவரொருவர், ரூபாய் ஓர் லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் முழுவதையும் செலவிட்டால் அவர் ஏழையென்றும் ரூபாய் பத்தாயிரம் சம்பாதிக்கும் ஒருவர் ரூஆயிரம் சேமித்தால் அவர் பணக்காரர் என்றும் அருளிப்போந்தார்.

   இன்று (19.09.2013) வெறொரு தொலைக்கட்சியில் தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு வரியை 10% லிருந்து 15% ஆக உயர்த்தியது குறித்து நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் பின்வருமாறு கருத்துரைத்தார். நீங்கள் ஒன்றைக் கவனிக்கவேண்டும். தங்கத்திற்கு வரி உயர்த்தப்படவில்லை; மாறாக தங்க நகைகளுக்கு மட்டுமே வரி உயர்வு பொருந்தும். இதனால் வேலையிழந்து தவிக்கின்ற நமது நாட்டு பொற்கொல்லர்களுக்கு பெருமளவில் வேலை கிடைக்கும்.  (இந்தியப் பெரு நிறுவனங்கள் வாங்கிக் குவிக்கும் தங்கத்தை நகையாக்க உள்ளூர் பொற்கொல்லர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பதை நம்புவதும் நம்பாததும் உங்களுடைய விருப்பம்)

  நாட்டில் பொருளாதார மேதைகளின் (?!) எண்ணிக்கைப் பெருக்கத்தைப் பொலவே அபத்த பொருளாதார சொல்லாடல்களுக்கும் அளவில்லாமற் போய்விட்டது. பொருளாதார மேதைகளின் (?!) ஆளுகையில் சாமானியர்கள் கூட அறிவு பெற்றுவிட்டார்கள் போலும்! இதற்கிடையில் இவர்களது எஜமானர்கள் இந்தியர்கள் அளவுக்கதிகமாக சாப்பிட்டுத் தொலைக்கிறார்கள் என்ற ஆய்வு முடிவுகளையெல்லாம் வெளியிட்டு நம்மை பயமுறுத்துகிறார்கள்.

  தங்கம் விலை குறைந்தபோது  தங்கத்தை வாங்காதீர்கள், யாரும் தங்கத்தில் முதலீடு செய்யவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார் நமது நிதியமைச்சர். சில நாட்களிலேயே வரிமேல்வரி போட்டு விலையை பல மடங்கு உயர்த்திக்காட்டினார்.

  எல்லாப் பொருள்களும் செவைகளும் விலை குறைவாகக் கிடைக்கவேண்டும், தனக்கு மட்டும் ஊதியம் மேலும் அதிகமாகக் கிடைக்கவேண்டும், தனக்குக் கீழ் வேலை செய்யும் தொழிலாளிக்கு கொஞ்சம்கூட கொடுக்க மறுக்கும் நடுத்தர வர்க்க மனோபாவம் மிகவும் கொடியது. ஓர் தேநீர் ஆறு ரூபாயா, ஓர் கீரைக்கட்டு ஐந்து ரூபாயா என்று அங்கலாய்க்கும் இந்த நடுத்தரவர்க்கம் சித்தாளுக்கு ரூபாய் முந்நூறு சம்பளமா என்று பதறுகிறது.

  ரூ 5 க்கு டீ கூட குடிக்கமுடியாத நிலை உள்ளபோது முகம் மழிக்க ரூ 5 கொடுத்தால் போதும் அல்லது தேவலாம் என்றெண்ணும்போது நடுத்தர வர்க்கம் இவ்வாறான தத்துவ வியாக்கியானங்களை உற்பத்தி செய்கிறது.

   சிறியதே அழகு என்பது உழைப்பை சுரண்டுவதற்காகவா சொல்லப்பட்டது? உடல் உழைப்பிற்குத் தகுந்த கூலி கொடுக்காமல் இருப்பது உண்மையில் அழகானதுதானா?

   ரூ 50 வருமானத்தில் வாழும் மறமடக்கி ரமேஷ் வாழ்வைக் கொண்டு தத்துவம் புனையும் சமஸ் இந்திய நிதியமைச்சகம், திட்டக்குழு போன்றவற்றில்  இருக்கவேண்டியவர். இவர்களது வறுமைக்கோடு வரையறை நமக்கெல்லாம் தெரியுந்தானே!

  இதில் நாம் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக்கூடாது. மறமடக்கி சலூன் தொழிலாளி ரமேஷ் வாங்கும் ரூ 5 ஐக்கூட வாங்கமுடியாமல் சாதித் தொழிலாக பல கிராமங்களில் உணவு அல்லது தானியங்களுக்காக உழைக்கும் பலர் இருக்கிறார்கள். இரட்டைக் குவளை முறைகளை அறிந்த தி இந்துவிற்கு இது தெரியாததல்ல. ஆனால் சமஸ் போன்றோர் இதையும் புராதன கால தமிழ்ப் பண்பாடு என்று புகழக்கூடும். இதற்கும் தத்துவ வியாக்கியனங்கள் தேவைப்படலாம்.

  இன்றும் ரூ 1 க்கு இட்லி விற்பனை செய்யக்கூடிய மனிதர்கள் எங்கோ கிராமங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்களுடைய கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்திலிருந்து அரிசி, பருப்பு போன்றவை விநியோகிக்கப் படுவதில்லை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.  நடுத்தர வர்க்க தத்துவ உளறல்களுக்கு ஏழ்மையை உதாரணம் சொல்வது மிக மோசமானதாகும்.

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மை ஐயா. மக்களுக்கும் அரசினை ஆள்வோருக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என்பதைதான் இப்பேச்சுகள் உணர்த்துவதாக எண்ணுகின்றேன்

பெயரில்லா சொன்னது…

மக்களாட்சி என்பதே மக்களுக்குள்ளும், வர்க்கங்களுக்குள்ளும் இடையிலான இடைவெளியை குறைப்பதோடு, குறைந்தபட்ச வாழ்வாதாரங்களையாவது அனைவருக்கும் தருவித்தலே. ஆனால் எதார்த்ததில் வறுமை ஒழிக்கப்பட்டு, கல்வியறிவு கிடைத்தாலும் ஜனங்களுக்குள் இடையே உள்ள பொருளாதார இடைவெளி பெருகியும், பெரு முதலாளிகள் மட்டுமே பயனடையும் வகையிலேயே நம் தேசத்தின் பொருளாதார கொள்கைகள் உள்ளன, நாட்டை ஆள்வோரும் அதனையே விரும்பி செயல்படுத்தியும் வருகின்றனர். :-(

கருத்துரையிடுக