சனி, நவம்பர் 09, 2013

கரியாப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து : ஓர் மீள்பார்வை



கரியாப்பட்டினம் மெட்ரிக் பள்ளி வேன் விபத்து : ஓர் மீள்பார்வை
                                                     -மு.சிவகுருநாதன்

     நமக்கு ஞாபக மறதி மிகவும் அதிகம். சென்ற வாரத்தில் நடந்தவற்றைகூட நாம் நினைவில் வைக்கமுடியாத அவசரகதியில் வாழப் பழக்கப்பட்டிருக்கிறோம். நம் நினைவுகளை யாரேனும் தூண்டிவிடவேண்டியுள்ளது. அந்த வகையில் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வாரங்களாக அன்றைய செய்தி – இன்றைய நிலை என்கிற ஓர் தொடரை ஒளிபரப்பிவருகிறது. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஏகபோகத்திலிருந்து விடுபட்டு, விமர்சனங்கள் இருப்பினும் புதிய தலைமுறை, தந்தி, G TV போன்ற  செய்தித் தொலைக்காட்சிகளின் இருப்பு மற்றும் செயல்பாட்டை பாராட்டியாகவேண்டிய தேவையிருக்கிறது.

    புதிய தலைமுறை செய்தியாளர் திரு. செந்தில்குமார் என்னைத் தொடர்புகொண்டு டிசம்பர் 03, 2009 இல் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் என்ற கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி வேன் விபத்து குறித்த உண்மையறியும் குழு அறிக்கை மற்றும் இதர விவரங்கள் குறித்து கேட்டார். அவற்றை அவருடன் பகிர்ந்துகொண்டேன். இந்நிகழ்ச்சி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 10.11.2013 அன்று மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது நான்காவது நிகழ்ச்சியாகும்.

   முதலாவதாக ஏர்வாடி மன நலகாப்பக (!?) தீ விபத்து பற்றிய பதிவு ஒளிபரப்பானது (20.10.2013). இரண்டாவது  அத்தியூர் விஜயா பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றியது (27.10.2013). மூன்றாவது கும்பகோணம் ஶ்ரீ சரஸ்வதி பள்ளி தீ விபத்து குறித்தது (03.11.2013). நான்காவதாக கரியாப்பட்டினம் (வேதாரணயம்) வேன் விபத்து பற்றிய பதிவு நாளை (10.11.2013) ஒளிபரப்பாக உள்ளது. இப்பதிவிற்கு 30 நிமிடங்கள் போதாது. ஒரு மணி நேரமாவது ஒதுக்கவேண்டும். இருப்பினும் இம்முயற்சியை பாராட்டுவோம்.

   டிசம்பர் 03, 2009 இல் வேதாரண்யம் அருகேயுள்ள கரியாப்பட்டினம் என்ற கிராமத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட கலைவாணி மகா மெட்ரிக் பள்ளி ( முந்தைய ஆண்டு இப்பள்ளியின் பெயர் தேவி மெட்ரிக் பள்ளி) வேன் சாலையோர குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கோர இவ்விபத்தில் 9 மாணவ – மாணவிகளும் ஓர் ஆசிரியையும் பலியாயினர். இதுகுறித்து நாங்கள் மூன்று பேர் அடங்கிய உண்மையறியும் குழு அமைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டோம். அதில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு தெரிவித்திருந்தோம். அதில் குழந்தைகளை காப்பாற்றி உயிரிழந்த ஆசிரியை சுகந்திக்கு அண்ணா பதக்கம் வழங்கியது தவிர வேறெந்த பரிந்துரைகளையும் அரசு கண்டுகொள்ளவில்லை. 

     பொதுவாக இம்மாதிரியான விபத்துகள் நடக்கும்போது மூன்று கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

01. இழப்பீடு மற்றும் காப்பீடு
02. உயிரிழப்புக்கு காரணமானவர்கள் அனைவர் மீதான நடவடிக்கை
03.எதிர்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நிகழாமலிருக்க எடுக்கவேண்டிய தொலைநோக்குத் திட்டங்கள்.

 இவற்றில் எதுவும் அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பதே மிகப் பெரிய வேதனை. மாணவர்களுக்கு ரூ 50,000 மும் ஆசிரியை சுகந்திக்கு ரூ 100,000 மும் விலை வைத்துவிட்டு அரசு பாராமுகமாக இருந்துவிட்டது. காப்பீட்டு நிறுவனத்தின் மேல்முறையீட்டால் உயிர்ழந்தவர்களுக்கு காப்பீடும் கிடைக்கவில்லை.

   விபத்து நடந்த அன்று கனமழை பெய்தும் விடுமுறை அறிவிக்காத மாவட்ட ஆட்சியர், அனுமதியில்லாத பள்ளியை நடத்தவிட்ட கீழிலிருந்து மேல்மட்டம் வரையுள்ள கல்வித்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரது அலுவலர், பள்ளியின் தாளாளர் மற்றும் உரிமையாளர் என காரணமானவர்கள் எவரும் தண்டிக்கப்படவில்லை. வேன் ஓட்டுநர் பிறகு தற்கொலை செய்துகொண்ட்டார். நாகப்பட்டினம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) திரு ராதா என்பவர் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அவர் பணியில் சேர்ந்து பணி ஓய்வும் பெற்றுவிட்டார். 

    இன்று கரியாப்பட்டினத்தில் இப்பள்ளி பெஸ்ட் நர்சரிப் பள்ளி என்கிற பெயரில் வேதாரண்யம் பகுதியில் பொறியியல் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்திவரும் ஓர் நிறுவனம் இப்பள்ளியை தொடர்ந்து நடத்துகிறது.

    கும்பகோணம் நிகழ்விற்குப்பிறகு கூரைகள் மட்டும் பிரிக்கப்பட்டன. இதன்பிறகு போலியான வாகன சோதனைகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டன. தமிழகம் முழுவதும் மிகவும் பாதுகாப்பற்ற சுழலில் இன்றும் குழந்தைகள் உள்ளனர். மத்திய அரசின் சாதனையாகச் சொல்லப்படும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் – 2009 கூட 0 – 5 வயதுக் குழந்தைகளின் உரிமைகளை ஏற்க மறுக்கிறது.

   கட்டிட உறுதிச் சான்று, சுகாதாரச் சான்று, தீ தடையின்மைச் சான்று போன்றவற்றை சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கிவிடமுடியும் என்ற நிலையே இங்குள்ளது.   அங்கீகாரம் பெறாத பள்ளிகளை ஒவ்வோராண்டும் மே மாதத்தில் மூடி முத்தரையிடும் வழக்கத்தை அரசு பின்பற்றினால் இம்மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறுமா? கிண்டர் கார்டன் வகுப்புக்களை அரசே தொடங்கி நடத்தினாலென்ன? இம்மாதிரியான தொலைநோக்குப் பார்வைகள் இல்லாதவரை உயிர்ப்பலிகள் தொடரத்தான் செய்யும். 

இச்சம்பவம் குறித்த உண்மையறியும் குழு அறிக்கையை பார்க்க:

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொலைநோக்குப் பார்வையுடன் அரசு செயல் பட்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும் ஐயா

கருத்துரையிடுக