வியாழன், செப்டம்பர் 25, 2014

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகப்பட்டினம்,
செப்டம்பர் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :                        

பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.

   கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாகூர் பட்டினச்சேரி சீராளம்மன் கோவில் பூச்சொறிதல் திருவிழா ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதை ஒட்டி உருவாகியுள்ள பதட்ட நிலை ஆகியவை தொடர்பான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்ட இக்குழு நேற்று பகல் முழுவதும் நாகூரில் பலரையும் சந்தித்தது.



    அன்றைய வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் ரஞ்சித், பிரபு, காட்டுப்பள்ளி எனப்படும் ஹிலுறு ஜாமிஆ மஸ்ஜித் ஜமா அத் தலைவர் எம்.எம்.தாஹிர்,, செயலர் முகம்மது தாஜுதீன், நாகூர் ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன், தற்போது கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் ஜகபர் அலி மற்றும் சாதிக், விடுதலைச் சிறுத்தை அமைப்பின் முன்னாள் நகரச் செயலர் முருகன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் ஜபருல்லா முதலானோரைச் சந்தித்தது. காவல்துறைக் கண்காணிப்பாளர் தற்போது விடுப்பில் உள்ளதால் இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நாகை க்ரைம் பிராஞ்ச் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் அவர்களிடமும் விரிவாகப் பேசியது.

சம்பவம்

    இந்த ஆண்டு வி.எச்.பிஅமைப்பைச் சேர்ந்த நாகூர் முத்துகிருஷ்ணனின் முயற்சியால் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்ட அளவில் வசிப்பதும் காட்டுப் பள்ளி வாசலுக்கு அருகில் அமைந்துள்ள பண்டகசாலைத் தெருவில் முதன் முறையாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு  சென்ற ஆகஸ்ட் 29 அன்று சிலை ஊர்வலமும் நடத்தப் பட்டுள்ளது. அடுத்த நாள் மீனவ மக்களின் பூச்சொறிதல் ஊர்வலம் முஸ்லிம் மக்கள் வசிக்கிற மியான் தெரு வழியாக நடந்துள்ளது. பட்டினச்சேரி சீராளம்மன் ஆலயத்திற்கு இவ்வழியே பூச்சொறிதல் ஊர்வலம் வருவது வழக்கம் என்றாலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மியான் தெருவிற்கு இணையாக உள்ள  பண்டகசாலைத் தெரு வழியான சாலை சீர் செய்யப்பட்டிருந்ததால் அவ்வழியே ஊர்வலம் நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பண்டக சாலைத் தெருவில் சாக்கடை வேலை நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் வேறு வழியில் செல்ல முடிவெடுத்தபோது அண்ணா தி,மு.க வின் கவுன்சிலர் சின்னப் பிள்ளை என்பவர் மியான் தெருவழியாகச் செல்லுமாறு திருப்பியுள்ளார்.





   பத்தாண்டுகளுக்கும் மேலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்த ஊர்வலம் இந்த ஆண்டு தம் தெரு வழியே பள்ளிவாசலை ஒட்டி வந்ததையும், வழக்கமாக வருவது போலல்லாமல் இம்முறை தாரை தப்பட்டைகளுடன் பெருந்திரளாக வந்ததையும் கண்டு முஸ்லிம்கள் பதட்டம் அடைந்துள்ளனர். என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதும் அவர்களின் இந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணம். மாலை நேரத் தொழுகைக்காக பாங்கு ஒலிக்கத் தொடங்குகையில் தாரை தப்பட்டைச் சத்தம் கூடாது எனக் கூறியுள்ளனர். வாக்குவாதம் நடைபெற்று இறுதியில் சற்று நேரம் தாரை தப்பட்டைகள் நிறுத்தப்பட்டு பின் ஊர்வலம் தொடர்ந்துள்ளது. ஊர்வலமே இவ்வழியாகச் செல்லக் கூடாது என முஸ்லிம்கள் தடுக்கவுமில்லை. பாங்கு ஒலிக்கும்போது நாங்கள் தாரை தப்பட்டையை ஒலிப்போம் என மீனவர் தரப்பில் பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. காவல்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

   தொடர்ந்து பதட்டத்துடன் பள்ளிவாசல் அருகில் திரளாக முஸ்லிம் இளைஞர்கள் கூடி இருந்துள்ளனர். இப்படி முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இன்றியும் பிரச்சினைக்குக் காரணமான ஊர்வலம் குறித்து பள்ளிவாசலில் அமர்ந்து செயலர் தாஜுதீன்,

     கொறடா சாதிக், நூர் சாதிக், மசூத் அலி முதலானோர் காவல் துறைக்குப் புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் “அர்த்த ஜாம இளைஞர்கள் கழகம்” என்கிற அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். இந்த அமைப்பு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்று எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் ரஞ்சித்தை நிறுத்தியுள்ளனர். அது கைகலப்பாக மாறும் நேரத்தில் ரஞ்சித்தின் நண்பனும் அதே அமைப்பச் சேர்ந்தவரும், முதல் நாள் விநாயகர் ஊர்வலத்திற்குக் காரணமாக இருந்தவருமான பிரபு எனும் இளைஞர் வந்துள்ளார். கைகலப்பில் ரஞ்சித் மற்றும் பிரபு இருவரும் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கொறடா சாதிக் உள்ளிட்டோர் ஓடி வந்து தாக்கியவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.






   தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 346 / 2014, நாகூர் காவல் நிலையம்) புதுத் தெருவைச் சேர்ந்த நூர் சாதிக், மியான் தெருவைச் சேர்ந்த கொறடா சாதிக் எனப்படும் ஜாபர் சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி, அஷ்ரப்  மற்றும் சிலர் ஆகியோர் மீது இ.த.ச 147, 148, 323, 324, 307, 294 பி, 506 (1), பி.பி.டி 3,4 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     இதுவரை பஷீர் அகமது, மசூத் அலி, அஜ்மல், நூர் சாதிக் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொறடா சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

எமது பார்வைகள்
  1. பதட்டம் மிக்க சூழலில் இப்படி  முன்னூறுக்கும் மேற்பட்டோர்  தாரை தப்பட்டைகளுடன் பங்கு பெற்ற பூச்சொறிதல் ஊர்வலம் ஒன்று முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற போது  காவல்துறை எந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாததும், உரிய பாதுகாப்பு அளிக்காததும் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரியாது எனக் காவல்துறையின் சார்பாக எங்களிடம் அளிக்கப்பட்ட பதில் ஏமாற்றமளிக்கிறது.
  2. முஸ்லிம் இளைஞர்களால் ரஞ்சித், பிரபு ஆகியோர் தாக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், தாக்குதலில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. சாதாரண கைகலப்புதான் நடந்திருக்கிறது. ஆனால் கொலை முயற்சி உட்பட இத்தனை கடுமையான பிரிவுகளின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா எனும் கேள்வியை எழுப்புகிறது. மதக் கலவரம் தொடர்பான பெரிய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய இப்படியான கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது எனும் காவல் துறையின் பதிலை எங்களால் ஏற்க இயலவில்லை. நீதி வழங்கு நெறியின் மிக அடிப்படையான அம்சம், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு குற்றமற்றவர் கூட தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நெறி இங்கு கேலிக் கூத்தாக்கப் படுகிறது.
  3. இப்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ஜத் அலி, பஷீர் அகமது, அஜ்மல் ஆகியோரது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பஷீர் அகமது சம்பவத்தின் போது அவர் வேலை செய்யும் செருப்புக் கடையில் இருந்துள்ளார். இதை அவர் வேலை செய்த ராயல் செருப்புக் கடை முதலாளி ஹாஜா பக்ருதீனிடம் விசாரித்து உறுதிப் படுத்திக் கொண்டோம். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொறடா சாதிக்கும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு முழுவதும் வைத்திருந்து பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட எஸ்.டி.பி ஐ தலைவர் தாஜுதீனும், மசூத் அலியும் சம்பவ நேரத்தில் பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். நாகூர் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன், எஸ்.பி.சி.அய்.டிக்கள் ஜார்ஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இதைப் பார்த்துள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு ஆகியோரே இதைக் கூறியுள்ளனர், எங்களிடமும் அவர்கள் இதைக் கூறினர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களை அடிக்கவில்லை எனவும் தாங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறினர். அமைதிக் கூட்டத்தில் காவல் துறை சார்பாக, “நீங்கள் உண்மையான குற்றவாளிகளைக் கொண்டு வந்தால் இப்போது கைது செய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிக்கை எழுதும் போது நீக்கி விடுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தவரும் சம்பவ இடத்தில் இல்லாதவருமான நூர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் கேட்டபோது காவல்துறை தரப்பில் திருப்தியான பதில் எதுவும் சொல்லப்படவில்லை. அடித்தவர்களைத்தான் கைது செய்கிறோம் என அவர்களால் சொல்ல இயலவில்லை.
  4. நாகூரில் எல்லோராலும் மதிக்கப்படுபவரும் தலித்கள், மீனவர்கள் உட்பட எல்லோராலும் ஏற்கப்படக் கூடியவருமான முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் இரு தரப்புடனும் பேசி சமாதானத்தை ஏற்படுத்திக்  கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று நிஜாமுதீன் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், ஏராளமான போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்ததோடு தனியாக அவர் மனைவி இருந்ததையும் பொருட் படுத்தாது காம்பவுன்ட் சுவரில் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அச்சம் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் அடுத்த நாள் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. கொறடா சாதிக் என்பவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தபோதும் சமீப காலங்களில் எந்த வழக்கும் அவர் மீது இல்லை. தவிரவும் இந்தச் சம்பவத்தின்போது அவர் பள்ளியில் அமர்ந்து புகார் எழுதிக் கொண்டிருந்துள்ளார். தாக்குதலைத் தடுத்துள்ளார். அவர் மீது பொய்க் குற்றம் சாட்டித் தேடுவது காவல்துறை சொல்வதுபோல வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்று அல்ல. மாறாக இத்தகைய நடவடிக்கைகள்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளாக உள்ளன என்பதைக் காவல்துறை உணர வேண்டும்.
எமது கோரிக்கைகள்:
  1. தற்போது கைது செய்யப்பட்டுளவர்கள் மர்றும் தேடப்படுபவர்களில் பலரும் குற்றமற்றவர்கள் எனக் காவல்துறையே ஏற்றுக்கொள்வதால் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், தேடுதல்களும் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ரஞ்சித்தும் பிரபுவும் கூறுவது போல உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சரியான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  2. இந்தப் பிரச்சினைக்கு முழுவதும் காரணமாக இருப்பது நாகூர் காவல் நிலையம் சம்பவத்தன்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான். இது குறித்து உரிய துறை விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாகூர் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் நாகை மாவட்டத்தில், சச்சார் ஆணையப் பரிந்துரையின்படி காவல் மற்றும் உளவுத் துறைகளில் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
  3. தலித்கள், மீனவர்கள் முதலான மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி ஒரு பெறும் மதக் கலவரத்தை உண்டு பண்ணி மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க இந்துத்துவ சக்திகள் இப்பகுதியில் முயல்கின்றன. அரசும் காவல்துறையும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “அர்த்த ஜாம இளைஞர்கள் சங்கம்” “ஆன்மீக இளைஞர்கள் சங்கம்” முதலான பெயர்களில் இங்கு தலித் மற்றும் மீனவ இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை அரசு கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
  4. இந்துத்துவ சக்திகளின் பிளவுபடுத்தும் நோக்கத்திற்கு மீனவப் பஞ்சாயத்தினர் ஒத்துழைக்காததை இக்குழு பாராட்டுகிறது. இரு இளைஞர்களைத் தாக்கிய குற்றவளிகள் கைது செய்யப்பட வேண்டும் .என்றுதான் நாங்கள் சொல்கிறோம் என்றாலும் இந்து முன்னணியினர் இன்று (செப் 22) நடத்துகிற ஆர்பாட்டத்தில்  நாங்கள் கலந்து கொள்ளவில்லை என அவர்கள் எங்களிடம் கூறினர். நாகூர் வாழ் முஸ்லிம்கள் இந்துத்துவ அமைப்புகளின் பிளவு முயற்சிகளைக் கணக்கில் கொண்டு பிற சமூகங்களுடனான தமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி, 
27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்:
 +91 94441 20582, 
+91 9486912869

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக