புதன், அக்டோபர் 29, 2014

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

எஸ்.பி. பட்டணம் காவல் நிலையக் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை


   மதுரை,
  அக்டோபர் 29, 2014.

     சென்ற அக்டோபர் 14 அன்று மாலை இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை காவல் சரகம், எஸ்.பி. பட்டணம் என அழைக்கப்படும் சுந்தரபாண்டியன் பட்டனம் காவல் நிலையத்தில் காட்டுவா எனபவர் மகன் செய்யது முஹம்மது (24) என்பவர் அந்தக் காவல் நிலையச் சார்பு ஆய்வாளர் (எஸ்.அய்) அ.காளிதாஸ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைத்து நாளிதழ்களிலும் விரிவாக வெளிவந்தது. அவ் வழக்கு விசாரணை தற்போது சி.பி.சி.அய்.டி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், காளிதாஸ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இராமநாதபுரம் தலைமைக் காவல் நிலையத்தில் உள்ளார் எனவும், கொல்லப்பட்ட செய்யது முஹம்மது குடும்பத்திற்கு அரசு 5 இலட்ச ரூபாய் இழப்பீடு தந்துள்ளது என்பதும், பல்வேறு இயக்கங்களும் செய்யது முஹம்மது குடும்பத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகின்றன என்பதும், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் இருந்த ஆறு காவலர்களும் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பதும் தொடர்ந்து வந்த செய்திகள்.

இச் சம்பவம் குறித்த உண்மைகளை அறிய ‘மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights Organisations – NCHRO) சார்பாக

பேரா. அ.மார்க்ஸ் (தலைவர், NCHRO),
வழக்குரைஞர் ரஜினி (தலைவர், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்- PUHR),
 வழக்குரைஞர் ஏ.சையது அப்துல் காதர், மதுரை,
வழக்குரைஞர் எஸ்.என்.ஷாஜஹான், மதுரை

ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழு சென்ற அக் 27, 28 தேதிகளில் தொண்டி, திருவாடனை, எஸ்.பி. பட்டனம், இராமநாதபுரம், மதுரை ஆகிய ஊர்களுக்குச் சென்று எஸ்.ஐ.காளிதாசால் கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் நோயுற்ற விதவைத் தாய் பாத்திமா (44), தாய்வழித் தாத்தா சதக்கத்துல்லா, சென்னையில் ஓட்டல் வேலை செய்யும் அவரது தம்பி நூர் முகம்மது, கொல்லப்படுவதற்கு முன்பாக காவல் நிலையத்தில் செய்யது முஹம்மதை பார்த்த அவரது மாமன்கள் சகுபர் அலி மற்றும் அபு தாஹிர், செய்யது முஹம்மது காவல் நிலையத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பின் சுடப்பட்டபோது அருகில் உள்ள குளத்தில் தனது ஆட்டோவைக் கழுவிக் கொண்டிருந்த ஷேக் தாவூது, காளிதாசின் காயத்திற்கு வைத்தியம் செய்ய எனச் சொல்லி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் ரமேஷ்,  காவல் நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ள மசூதியின் இமாம் அப்துல் காதர், கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆசாத், அன்று மாலை இராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த காளிதாசை நேரில் பார்த்த இராமநாதபுரம் அஸ்கர் அலி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்டச் செயலர் ஜமீல் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டது.

தொண்டி காவல் நிலையத்தில் இது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த வட்ட ஆய்வாளர் எம். துரைப்பாண்டி, எஸ்.பி பட்டனம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் எம்.பாலுச்சாமி, வழக்கை தற்போது விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி யின் மதுரை டி.எஸ்.பி மன்மத பாண்டியன் ஆகியோரிடமும் பேசியது. திருவாடனை நீதிமன்றத்தில் இக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் இக்கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கைகள் 90/2014 மற்றும் 92/2014 ஆகியவற்றைப் பார்வையிட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டனர். மற்றொரு அறிக்கையான 91/2014 யிம் பிரதியை வழக்குரைஞர்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம். பிரேத பரிசோதனையின்போது இருந்த அருகில் மதுரை வழக்குரைஞர் ஜின்னாவைச் சந்தித்து கொல்லப்பட்ட சையத் முஹம்மதுவின் உடலின் புகைப்படங்களையும் பெற்றுக் கொண்டோம்.

இராமநாதபுர நீதிமன்ற வளாகத்தில் சையது முஹம்மது கொலை தொடர்பாக விசாரணை செய்துகொண்டிருந்த நீதிமன்ற நடுவர் (JM 2) திரு வேலுசாமி அவர்களைச் சந்தித்து சாட்சிகள் அளிக்கும் முழு விவரங்களையும் பதிவு செய்யுமாறு எம் குழுவில் இருந்த வழக்குரைஞர்கள் வேண்டிக் கொண்டனர். இத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச்.ஜவாஹுல்லாஹ் அவர்களிடமும் பேசினோம்’
சையது முஹம்மதுவை துப்பாக்கியால் சுட்டு அவரது கொலைக்குக் காரணமான எஸ்.ஐ.காளிதாசுடன் தொலைபேசியில் பேசினோம்.

செய்யது முஹம்மது மீது தன்னைக் கொலை செய்ய வந்ததாகப் புகார் அளித்துள்ள ஆட்டோ ரிப்பேர் மெக்கானிக் அருள் தாஸ், அருகில் சலூன் கடை வைத்துள்ள சரவணன் ஆகியோரை என்ன முயன்றும் சந்திக்க இயலவில்லை. தொலைபேசியில் பேசவும் அவர்கள் தயாராக இல்லை. சம்பவத்திற்குப் பிறகு அருள்தாஸ் கடை திறக்கவே இல்லை.

செய்யது முஹம்மதுவின் கொலை தொடர்பாகக் காவல்துறை தரப்பில் கூறுவது

எஸ்.பி பட்டனம் காவல் நிலையத்தில் 90,91.92/2014 என மூன்று முதல் தகவல் அறிக்கைகள் கொலை நடந்த அன்று (14.10.2014) பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது (90/2014) ஆட்டோ மெகானிக் அருள்தாஸ் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் செய்யது அலி மீது அருள்தாசைக் கொலை செய்ய முயன்றதாகவும் திட்டித் தாக்கியதாகவும் {IPC 307, 294 (பி), 427} குற்றம் சாட்டியுள்ள அறிக்கை: இரண்டாவது (91/2014) எஸ்.ஐ காளிதாஸ் மீது செய்யது அலியின் கொலை குறித்துப் பதியப்பட்டுள்ள சந்தேக மரண {CrPc 176(1)} வழக்கு குறித்தது. மூன்றாம் அறிக்கை (92/2014) செய்யது அலி மீது காளிதாசைக் கொலை செய்ய முயற்சித்ததாக {IPC 307} அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள வழக்கு.

இவை மூன்றும் சி.பி.சி.அய்.டி இவ்வழக்கு விசாரணையை எடுத்துக் கொள்வதற்கு முன் கொலை நடந்த காவல் நிலையத்தில் பதியப்பட்டவை,

இந்த முதல் தகவல் அறிக்கைகளின் ஊடாகக் காவல்துறை சொல்வது இதுதான்:

“சம்பவம் நடந்த அன்று மதியம் 1.15 மணி அளவில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள அருள்தாஸ் என்பவரின் ஆட்டோ ரிப்பேர் கடையில் தன் நண்பர் சாலிஹூ என்பவர் ரிப்பேர் செய்வதற்குக் கொடுத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல செய்யது முஹம்மது அங்கு சென்றார். அப்போது  நடந்த வாக்குவாதத்தின் போது ஆடு உரிக்கும் கத்தி ஒன்றால் செய்யது முஹம்மது அருள்தாசைக் கொல்ல முயற்சித்தார். இது தொடர்பாக 3 மணி அளவில் நிலையத்திற்கு வந்து புகாரளித்த அருள்தாஸ், தான் ஒரு கிறிஸ்தவப் பள்ளர் என்பதற்காகவே அவர் இப்படிச் செய்ததாகவும் கூறுகிறார். சிறிது நேரத்தில் மீண்டும் செய்யது முஹம்மது அருள்தாசின் கடைக்குச் சென்று தகராறு செய்வதைக் கேள்விப்பட்டு காளிதாஸ், மாலை 4 மணி அளவில் இரு காவலர்களை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னபோது அவர்களுடன் வந்த செய்யது முஹம்மது அசிங்கமான வார்த்தைகளால் காவல்துறையினரைத் திட்டிக் கொண்டும் எச்சரித்துக் கொண்டும் வந்தார். நிலையத்தில் அவரைச் சோதனை செய்தபோது ஓரடி நீளமுள்ள மரப்பிடி போட்ட கத்தியை செய்யது முஹம்மது தன் வெள்ளைக் கைலிக்குள் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்து அதை எடுத்து எஸ்.ஐயின் மேசை மீது வைத்துவிட்டு வேரு வேலையாக அறைக்கு வெளியே வந்துள்ளனர். சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடுச் சத்தம் கேட்டவுடன் உள்ளே சென்ற போது தன் உடலில் இரு இடங்களில் இரத்தக் காயங்களுடன் காளிதாஸ் நின்றிருந்ததையும் கீழே செய்யது முஹம்மது விழுந்து கிடந்ததையும் கண்டனர். தன்னை மேசையிலிருந்த கத்தியை எடுத்து செய்யது முஹம்மது வெட்டிக் கொல்ல முயற்சித்ததாகவும், தான் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரைச் சுட்டதாகவும் காளிதாஸ் சொன்னார். தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்சை வரவழைத்து சுடப்பட்ட பின்னும் உயிருடன் இருந்த செய்யது முஹம்மதுவை இரு காவலர்களின் துணையோடு இராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் பட்டிருந்த காளிதாஸ் அங்கிருந்த வாகனத்தில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிக்கிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மனைக்கு அனுப்பப்பட்டார். செய்யது முஹம்மதுவின் உயிர் மருத்துவ மனைக்குச் செல்லும் முன்பே ஆம்புலன்சிலேயே பிரிந்தது.”

செய்யது முஹம்மதுவின் உறவினர்கள் கூறுவது

“காலை 10 மனி அளவில் வெளியே சென்ற செய்யது  முஹம்மது நண்பர்களோடு கேரம் விளையாடிவிட்டு மதியம் 1 மணி வாக்கில் அருள்தாசின் ஆட்டோ ரிப்பேர் கடைக்கு நண்பரின் வண்டியை எடுக்கச் சென்றார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு வரவே கூப்பிடு தூரத்தில் உள்ள காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்து இருவரையும் அழைத்துச் சென்றனர். அருள்தாசிடம் புகார் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவிட்டு செய்யது முஹம்மதுவை அங்கேயே உட்காரச் சொல்லியுள்ளனர். இதை காவல் நிலையத்திற்கு நேர் எதிரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த சாதிக் அலி, மு. சுல்தான் ஆகியோர் பார்த்துள்ளனர். செய்தி அறிந்து சுமார் 2.30 மணி அளவில் செய்யது அலியின் மாமன்கள் மு.சகுபர் அலி மற்றும் மு.செய்யது அபு தாஹிர் ஆகியோர் காவல் நிலையத்திற்குச் சென்ற போது அங்கு ஜட்டியுடன் எஸ்.ஐ அறையில் செய்யது முஹம்மது உட்கார வைக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். விசாரித்து அனுப்புவதாக அங்கிருந்த காவலர்கள் கூறியுள்ளனர். செய்யது முஹம்மது கூச்சத்துடன் மாமன்களைப் போகச் சொல்லியுள்ளார். சுமார் 3.30 மணி வாக்கில் காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.அய் காளிதாஸ் மூர்க்கமாக செய்யது முஹம்மதுவை தாக்கியுள்ளார். அந்தச் சத்தத்தை அருகே ஆட்டோ கழுவிக் கொண்டிருந்த ஷேக் தாவூத் முதலானோர் கேட்டுள்ளனர். சுமார் 4 மணி வாக்கில் தொழுகைக்கு வந்த சாதிக் என்பவர் செய்யது முஹம்மதுவின் அலரல் சத்தம் கேட்டு சகுபர் அலிக்கு போன் செய்துள்ளார். சகுபர் அலி ஓடி வந்துள்ளார். சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூடுகள் கேட்டுள்ளன. வெளியே வந்த காளிதாஸ் எல்லோரையும் விரட்டியுள்ளார். எஸ்.ஐயின் அறையில் ரத்த வெள்ளத்தில் செய்யது அலி கிடந்தார்.

“சற்று நேரத்தில் தவ்ஹீத் ஜமாத்தின் ஆபுலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது. பிணமாக இருந்த செய்யது முஹம்மதுவின் உடலை அதில் ஏற்றி அனுப்பியுள்ளனர். காளிதாஸ் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர் ஒருவரின் மாருதி ஸ்விஃப்ட் காரில் ஏறிச் சென்றுள்ளார். மாலை ஆறு மணிக்குப் பின் தொலைக்காட்சி செய்தியைக் கண்டபின்புதான்செய்யது முஹம்மதுவின்  வீட்டில் உள்ளவர்களுக்கு முழு விவரமும் தெரிந்தது. செய்யது முஹம்மதுவை அடித்தே கொன்ற  காளிதாஸ் பின் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். தானே உடலில் சில இடங்களில் கீறிக் கொண்டு செய்ய்து முஹம்மது தன்னைக் கொல்ல முயற்சித்ததாகக் காளிதாஸ் பொய் சொல்லுகிறார்.”

இவை இரு தரப்பிலும் செய்யது முஹம்மது கொலையுண்ட சம்பவம் குறித்துக் கூறப்படும் செய்திகள்.

பிறகு நடந்தவை

மேற்குறித்த இரு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரண்களை ஆராயும் முன் நாங்கள் எங்கள் அறிந்த இதர தகவல்கள்:
ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகத் தன்னை அழைத்துத் தன் உடம்பில் இருந்த மூன்று காயங்களுக்கும் முதலுதவி செய்யுமாறு காளிதாஸ் கேட்டதாகவும்,  மருத்துவமனைக்குச் செல்லுமாறு தான் அறிவுரைத்ததாகவும் எஸ்.பி பட்டணத்தில் மருந்துக் கடை வைத்திருக்கும் ரமேஷ் கூறினார். ரமேஷ் அங்கிருந்ததை ஆம்புலன்ஸ் டிரைவர் ஆசாத் உறுதி செய்தார். பின்னர் காரில் ஏறி வெளியேறிய காளிதாஸ் ரமேஷின் மருந்துக்கடையில் காரை நிறுத்தி பஞ்சு வாங்கிச் சென்றதாகவும் அவர் கூறினார். முன்னதாகப் போலி டாக்டர் என காளிதாஸ் இவர் மீது வழக்குப் பதிந்துள்ளார். உங்கள் வழக்கைச் சொல்லி மிரட்டித் தன் உடம்பில் காயம் உள்ளதாகப் பொய் சொல்லச் சொன்னாரா எனக் கேட்டபோது, அப்படியில்லை எனவும், ஆபத்தில்லாத இலேசான காயங்கள்தான் அவை எனவும், அந்தக் காயங்களை காளிதாசே கூட ஏற்படுத்திக் கொண்டார் எனச் சொல்வதர்கு வாய்ப்புள்ளது எனவும் ரமேஷ் எங்களிடம் கூறினார்.

ஆம்புலன்சில் இறந்த உடலை ஏற்றுவதைக் கண்ட டிரைவர் ஆசாத் பிணத்தை ஏறுவதற்கு என ஏன் முன்பே சொல்லவில்லை எனக் கேட்டபோது ஒன்றும் பேசக்கூடாது எனவும், இடையில் யார் கைகாட்டினாலும் நிறுத்தக் கூடாது எனவும் டி.எஸ்.பி சேகர் மிரட்டியுள்ளார். அவரது செல் போனையும் பிடுங்கி வைத்துள்ளார். ஆம்புலன்ஸ் திருப்பாலக்குடி காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு எஸ்.பி மயில்வாகனன், ஏடி.எஸ்.பி என்கவுன்டர் புகழ் வெள்ளத்துரை ஆகியோர் இருந்துள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் வீடியோ எடுக்கப்பட்டபின் ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

நான்கு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். முஸ்லிம் அமைப்புகள் வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. உடம்பில் மூன்று துப்பாக்கிக் குண்டுக் காயங்கள் உட்பட மொத்தம் 18 காயங்கள் இருந்துள்ளன.

வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மார்ற வேண்டும் முதலான கோரிக்கைகளை முன்வைத்து கொல்லப்பட்ட செய்யது முஹம்மதுவின் மாமன் உயர் நீதிமன்றக் கிளையை அணுகியபோது அவ்வாறே வழக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அரசு ரூ 5 இலட்சம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. துப்பாக்கிக் குண்டு பாய்தல் தொடர்பான நிபுணர்களும் (ballistic experts) பிரேத பரிசோதனையின் போது கூட இருக்க வேண்டும் என்கிற கோரிக்கை காவல்துறை சார்பில் கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில் மனுவில் கேட்டுக் கொண்டபடி சி.பி.சி.ஐ.டி விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் எனவும், ரூ 5 இலட்சம் இழப்பீடு என்பது அதிகப்படுத்தப்பட வேண்டும் எனவும், குற்றம் நடந்த இடம் அதே வடிவில் சீல் வைத்துக் காக்கப்பட வேண்டும் எனவும், செய்யது அலியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்பட வேண்டும் எனவும் நீதியரசர் கிருபாகரன் ஆணையிட்டார் (MD No. 19158 of 2014).

தற்போது இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி யின் மதுரை டி.எஸ்.பி மன்மத பாண்டியனை நாங்கள் சந்தித்தபோது எங்கள் வருகை குறித்து சென்னையில் உள்ள தங்கள் எஸ்.பிக்கு அவர் தெரிவித்ததாகவும் விசாரணைக்குத் தடை ஏதும் ஏற்படும் வகையில் எதுவும் பேச வேண்டாம் எனத் தனக்கு அறிவுரைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். விசாரணை மிக சரியாக மேற்கொள்ளப்படுவதாக எங்களிடம் உறுதி அளித்த அவர் இன்னும் 15 நாட்களுக்குப் பின் வந்தால் மேலும் பலவற்றைக் கூறமுடியும் என்றார்.

தற்போது காவல்துறைக் கண்காணிப்பில் இராமநாதபுரம் தலைமையகத்தில் இருப்பதாகக் கூறப்படும் காளிதாசை நாங்கள் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தோம். இப்போது பரவாயில்லை என்றார். செய்யது முஹம்மது உங்களை வெட்டி வலது கையில் காயம்பட்டிருந்ததால் புக்காரைக்கூட அந்தக் கைகளால் எழுத இயலவில்லை, எனவே வாயால் சொல்லி எழுதப்படுவதாக உங்கள் புகாரில் கூறியுள்ள நீங்கள் எப்படி சார் துப்பாக்கியால் மூன்று முறை சுட முடிந்தது எனக் கேட்டபோது அவர் தொடர்பைத் துண்டித்தார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்டு மற்றவர்களிடம் கருத்தைக் கேட்டுவிட்டோம். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையும் அப்படியே எங்கள் அறிக்கையில் பதிவு செய்வோம் என நாங்கள் சொன்னபோது, “என்னை hurt பண்ணாதீங்க சார் hurt பண்ணாதீங்க. நான் பொய் சொல்றேன், அவன் ஒண்ணுமே பண்ணல அப்டியெல்லாம் சொல்லி hurt பண்ணாதீங்க” எனச் சொல்லித் தொடர்பை மீண்டும் துண்டித்தார்.

காவல் துறையின் கூற்றில் உள்ள முக்கிய சில முரண்கள்

1.மதியம் சுமார் 1.30 மணி அளவிலேயே செய்யது முஹம்மது காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டதற்கு நேரடி சாட்சிகள் உள்ளன. 2.30 மணி அளவில் அவர் எஸ்.ஐ அறையில் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டிருந்ததை சையதின் மாமன்கள் சகுபர் அலி மற்றும் அபு தாஹிர் ஆகியோரும் பார்த்துள்ளார். ஆனால் 4 மணி அளவில்தான் காவலர்களை அனுப்பி அவரைக் கூட்டி வந்ததாகக் காவல்துறை சொல்வது அப்பட்டமான பொய்.

2.மாலை நான்கு மணிக்குத்தான் செய்யது முஹம்மது காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் காளிதாஸ் விசாரிக்கத் தொடங்கியவுடன் செய்யது முஹம்மது மேசை மீதிருந்த கத்தியை எடுத்து அவரைக் குத்த, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி காளிதாஸ் மும்முறை அவரைச் சுட்டு வீழ்த்தியதாகவும் இராமநாதபுரம் காவல்துறை கூறுகிறது. அப்படியானால் நாலு மணிக்குப் பிறகு விசாரணை தொடங்கி 4.30க்குள் எல்லாம் முடிந்து விட்டதாக ஆகிறது. ஏன் எனில் சுமார் 4.30 மணிக்கெல்லாம் தனக்குக் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததாக ஆம்புலன்ஸ் டிரைவர் கூறுகிறார். எனில் செய்யதின் உடம்பில் 18 காயங்கள் எப்படி வந்தன?

3. நாலு மணிக்குப் பின் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட சையத் முஹம்மது தேகப் பரிசோதனை செய்யப்பட்ட போது அவரது கைலியில் ஓரடி நீளமுள்ள கத்தி கண்டெடுக்கப்பட்டு அவரது கைக்கெட்டுமாறு எஸ்.ஐயின் மேசை மீது வைக்கப்பட்டதாம். ஆனால் 2.30 மணி வாக்கிலேயே அவர் உடை எல்லாம் கழற்றப்பட்டு வெறும் ஜட்டியுடன் உட்கார வைக்கப்பட்டிருந்துள்ளார். எனில் கைலிக்குள்ளிருந்து கத்தி உருவப்பட்டது எப்படி? கைலி மற்றும் சட்டையுடன் அவர் அடித்தும் சுட்டும் வீழ்த்தப்பட்டிருந்தால் குண்டுக் காயங்கள் மற்றும் இரத்தக்கறையுடன் கூடிய செய்யது முஹம்மதுவின் ஆடைகள் என்னாயிற்று?

4. அந்தக் காவல் நிலையம் சுமார் 1000 சதுர அடிக்குள் உள்ள ஒரு சிறிய கட்டிடம். எஸ்.ஐயினுடைய அறைக்கும், வெளியே காவலர்கள் நின்றிருந்த அறைக்கும் சுமார் 5 அடித் தொலைவு கூட இருக்காது. மூன்று முறை கத்தியால் குத்தி, மூன்று முறை துப்பாக்கியால் சுடும் வரை பிற காவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? உள்ளே நுழைந்து கத்தி வைத்துள்ள நபரைக் கொல்லாமலேயே காளிதாசைக் “காப்பாற்றியிருக்க” இயலாதா?

5.காளிதாஸ் தன் வாக்குமூலத்தில் மூன்று முறையும் செய்யதை இடது மார்பில் சுட்ட்டதாகவே கூறுகிறார். ஆனால் குண்டுக் காயங்களில் இரண்டு இரு கைகளில் உள்ளன. இதென்ன? முதல் இரு குண்டுகள் சுடப்பட்ட பின்னும் கூட செய்யது அலி கொலை செய்யும் நோக்கில் அத்தனை ஆவேசமாக ஓரடி நீளமுள்ள கத்தியைக் கையால் சுழற்றித் தாக்கினார்  என்பது நம்பக் கூடியதா?

6. புகாரைக் கையால் எழுதக் கூட இயலவில்லை எனத் தன் வாக்கு மூலத்தில் கூறும் காளிதாஸ் எப்படி துப்பாக்கியை மூன்று முறை காயம் பட்ட கை மற்றும் விரலால் சுட்டிருக்க இயலும்?

7. ஆம்புலன்சில் ஏற்றும்போது செய்யது உயிருடன் இருந்தார் எனக் கூறும் காளிதாஸ் ஏன் தானும் சிகிச்சைக்கும் அதே வண்டியில் சென்றிருக்கக் கூடாது?

8. ஆம்புலன்சில் ஏற்றப்படும் போது பிணத்தைத் தூக்கி எறிந்துள்ளனர். டிரைவர் ஆசாத் அதைக் குறிப்பிடுகிறார். உயிருடன் இருப்பவருக்கும், பிணத்திற்கும் வெவ்வேறு படுக்கைகள் உண்டு. உயிருடன் இருப்பவருக்கான படுக்கையில் பிணத்தை ஏன் ஏற்றுகிறீர்கள் என அவர் கேட்டுள்ளார். இதெல்லாம் உண்மையா இல்லையா? ஆம்புலன்சில் ஏற்றப்படும்போது செய்யது உயிருடன் இருந்ததாக ஏன் இந்தப் பொய்?

9. துப்பாக்கிச் சூடு நடந்த பின்னும் காளிதாஸ் நடந்து திரிந்துள்ளார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவர் நடந்து சென்றதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். அவரை அப்போது படம் எடுக்கவோ, இல்லை கட்டு போடும்போது படம் எடுக்கவோ கூடாது என அங்கு படம் எடுக்க முயன்றவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் கட்டுகள் போடப்பட்டு அவர் “ஸ்ட்ரெச்சரில் கொண்டு வரப்பட்டபோது”  கூப்பிட்டுப் படம் எடுக்குமாறு சொல்லப்பட்டுள்ளது.

10. தன்னை ஆடு உரிக்கும் கத்தியால் செய்யது கொல்ல வந்ததாக அருள்தாசிடம் புகார் பெறப்பட்டுள்ளது. அப்படி நடந்தது மதியம் 1.15 மணிக்கு எனச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு சீரியசான விசயத்திற்கு கூப்பிடு தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு அரைப் பக்க புகாரை எழுதித்தர மாலை 3 மணிவரை ஆகியுள்ளதாகக் கூறப்படுவதும், ஏதாவது அந்தக் “கொலை முயற்சிக்கு” நோக்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவப் பள்ளர் இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பகை உள்ளது போலக் காட்டுவதும் அபத்தம். அப்படியான எந்த முரணும் எஸ்.பி பட்டணத்தில் அவ்விரு சமூகங்களுக்கும் இடையில் இல்லை.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
  1. இது அப்பட்டமான ஒரு காவல் நிலையக் கொலை. செய்யது முஹம்மது கடுமையாக அடிக்கப்பட்டுள்ளார். பின் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அவரிடம் கத்தி இருந்தது என்பதும் அதனால் அவர் காளிதாசைக் கொல்ல வந்தார் என்பதும் அப்பட்டமான பொய்கள். செய்யது முகம்மதுவுக்குக் குடிப்பழக்கம் இருந்த போதிலும் அடிப்படையில் அமைதியானவர் என்பதையும் இதுவரை அவர் மீது எந்த வழக்கும் கிடையாது என்பதையும் அனைவரும் சுட்டிக் காட்டினர். அடித்தது அல்லது சுட்டது அல்லது இரண்டினாலும் எஸ்.ஐயின் அறையிலேயே செய்யது கொல்லப்பட்டுள்ளார். இந்த மூன்றில் எந்த வகையில் மரணம் நிகழ்ந்த போதும் அது கொலைதான். ஏனெனில் செய்யதிடம் காவல்துறை சொல்வது போலக் கத்தி ஏதுமில்லை. காளிதாசின் உடம்பில் உள்ள காயங்கள் தன்னைக் கொலைக் குற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக அவரே ஏற்படுத்திக் கொண்ட மெல்லிய பொய்க் காயங்கள்.
  2. இந்நிலையில் சி.பி.சி.ஐ.டியின் டி.ஐ.ஜி கணேச மூர்த்தி இரண்டு நாட்களுக்கு முன், “இறந்த பின்பே சுடப்பட்டுள்ளது உறுதியானால் எஸ்.ஐ மீது கொலை வழக்கு பதிய தயாராக உள்ளோம்”  (தி இந்து, அக் 27) எனக் கூறியுள்ளது ஏமாற்றமளிக்கிறது. அதாவது செய்யது முஹம்மது உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டிருந்தால் அது கொலை வழக்கு இல்லையாம். தற்காப்புக்காகச் சுடப்பட்டதாம். ஆக செய்யதிடம் கத்தி இருந்தது எனவும், அதால் அவர் காளிதாசைக் கொல்ல வந்தார் என்பதும் அவர் உயிருடன் இருக்கும்போது சுடப்பட்டார் என்பதாலேயே உண்மை ஆகிவிடுகிறது என்பது டி.ஐ.ஜியின் கூற்றிலிருந்து பெறப்படுகிரது. அவர் கத்தி வைத்திருந்ததற்கு வேறு நிரூபணம் தேவை இல்லை என்றாகிறது. இதை ஏற்க இயலாது.
  3. துப்பாக்கியால் சுட்டது காளிதாஸ்தான் என்ற போதிலும் அன்று காவல் நிலையத்தில் இருந்த மற்றவர்களும் பல்வேறு நிலைகளில் இக் குற்றத்தில் பங்கு பெற்றுள்ளனர், மற்ற காவலர்களும் செய்யதைத் தாக்கியுள்ளனர். குற்றச் செயலை மறைக்கவும், பொய்யான முதல் தகவல் அறிக்கைகள் எழுதுவது, சாட்சியம் சொல்வது உட்படப் பல்வேறு வகைகளில் பங்குபெற்றுள்ளனர். காவல் நிலையத்தில் வாட்டர் டேங்க் ஒன்றைக் கட்டுவதற்காகப் பார்வையிட வந்த ரத்தினம் என்பவர் இதை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளதைச் சிலர் பதிவு செய்துள்ளனர். காவல் நிலையத்தில் அப்போது இருந்த இதர ஆறு பேரையும் இன்று விசாரணையிலிருந்து விலக்கி, அவர்களை வெறுமனே ஆயுதப் படைக்கு மாற்றியுள்ளதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குற்றத்தை மறைக்க முயன்றதில் டி.எஸ்.பி சேகருக்கும் முக்கிய பங்கு உள்ளது. எஸ்.பி, ஏ.டி.எஸ்.பி ஆகியோரும் திருப்பாலக் குடியில் சுமார் 20 நிமிடங்கள் ஆம்புலன்சை நிறுத்திப் படங்கள் எடுத்துள்ளனர். எல்லோருடைய ஒப்புதலுடனும்தான் இந்தப் பொய்யான கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். 14ந் தேதி மாலை காளிதசுக்கும் மற்றவர்களுக்கும் நடைபெற்ற தொலை பேசி உரையாடல்கள் பெறப்பட்டுப் புலனாய்வு செய்யப்பட வேண்டும்.
  4. செய்யது முஹம்மதுவின் ஆடைகள், பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் கத்தியில் உள்ள கைரேகைகள், துப்பாக்கிக் குண்டுகள் துளைத்துள்ள நிலை முதலியனவும் புலனாய்வுக்குட்படுத்தப் படுவதோடு அவை குறித்த உண்மைகளும் வெளியிடப்பட வேண்டும். இனி இப்படியான கொலைகளில் பிரேத பரிசோதனை செய்யும்போது ballistic experts இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
  5. எஸ்.ஐ காளிதாஸ் குறித்த வேறு சில உண்மைகளும் புலனாய்வு செய்யப்படவும் விளக்கப்படவும் வேண்டும். அவர் மீது லஞ்சக் குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது பண்டிகையை ஒட்டி பெரும் வசூல் வேட்டையை அவர் நடத்தியதாகவும், தான் வேலை செய்யும் இறால் பண்ணை உரிமையாளர் 5,000 ரூபாய் கொடுத்ததை செய்யது எல்லோரிடமும் சொல்லித் திரிந்தது காளிதாசுக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்படக் காரணமாயிற்று எனவும் ஒரு பேச்சு உள்ளது. அப்படியான ஒரு பேச்சு உள்ளதை இப்பிரச்சினையில் உண்மையை வெளிக் கொணர தொடக்கம் முதல் செயல்பட்டு வரும் சட்ட மன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாவும் உறுதிப்படுத்தினார். அதேபோல காளிதாஸ் இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளவர் எனவும் கூறப்படுகிரது. அவர் முக நூல் கணக்கு ஒன்று வைத்திருந்ததாகவும், இந்த்க் கொலையை ஒட்டி அது உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் முகநூல் பக்கங்களிலேயே சில “ஸ்க்ரீன் ஷாட்” களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவும் தீர விசாரிக்கப்பட வேண்டும். காளிதாசுக்கு ஆதரவாக பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த எச்.ராஜா, இராம கோபாலன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பதும் இந்த அய்யத்தை உறுதியாக்குகிறது.
  6. காவல் நிலைய மற்றும் சிறைச்சாலைச் சாவுகளில் தமிழ்நாடு முன்னிற்கிறது என அரசு வெளியிடும் தரவுகளே கூறுகின்றன. இன்றைய அ.தி.முக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இக்காவல் நிலையச் சாவுகளை “நீதியைக் கேலிக் கூத்தாக்குவது” (travesty of justice) எனச் சொல்லிக் கொண்டே இது போன்ற குற்றம் செய்யும் காவலர்களைப் பாதுகாத்து வந்தார். இப்படிக் காவல்துறை அத்து மீறல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதில் பிற கட்சிகளும் எள்ளளவும் குறைந்ததில்லை. இந்த நிலை மாறுவது ஒன்றே காவல் நிலையச் சாவுகள் நிறுத்தப்படுவதற்கான ஒரே வழி. அத்து மீறும் காவலர்களை ‘ஹீரோ”க்களாக முன்னிறுத்தும் ஊடகங்கள், இவர்களோடு இணைந்து செயல்படும் மருத்துவர்கள் உள்ளிட்ட பிற துறையினர் எல்லோரும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
  7. இந்த அறிக்கையை எழுதிக் கொண்டுள்ளபோது முஸ்தபா எனும் முஸ்லிம் ஒருவர் எஸ்.பி பட்டணக் காவல் நிலையத்தில் எஸ்.ஐ யாக நியமிக்கப்பட்டுள்ளதாக அற்கிறோம். இச் செய்தி வரவேற்கத் தக்கது. முஸ்லிம்கள் அதிகமுள்ள பகுதிகளில் போதிய அளவில் முஸ்லிம் அதிகாரிகள் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் இருபதாண்டுகளாகச் சொல்லி வருகிறோம். சச்சார் அறிக்கையும் இதை வற்புறுத்தியது. எஸ்.பி பட்டனம் மட்டுமின்றி கிழக்குக் கடற்கரையோரம் முழுவதும் இந்நிலை மேற்கொள்ளப்பட வேண்டும்.
  8. நீதிமன்றமே பரிந்துரைத்துள்ளபடி ஏழ்மை நிலையிலுள்ள செய்யது முஹம்மதுவின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும். அவரது வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

தொடர்பு முகவரி:

அ.மார்க்ஸ், 
18 A, சுங்கம் பள்ளிவாசல் தெரு, 
மதுரை 1.  
செல்: 94441 20582, 97511 51916

நன்றி:   அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக