வெள்ளி, ஜூலை 31, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் (பகுதி 06 முதல் 10 முடிய.)

கல்விக் குழப்பங்கள் - தொடர் (பகுதி 06 முதல் 10 முடிய.)


                                                                               - மு.சிவகுருநாதன்


06. நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் இணை (mating) சேருமா?


     பாம்புகள் பழிவாங்கும் என்பது காலம் காலமாகத் தொடரும் மூட நம்பிக்கை. பாம்புகளைப் பற்றிய புனைவுகளுக்கு அளவில்லை. மனிதனது செயல்பாடுகளை, குணங்களை விலங்கின் மீது ஏற்றும் தன்மையின் வெளிப்பாடே இவை. எவ்வளவு கொடிய விலங்காக இருப்பினும் உணவிற்காகத் தவிர்த்து பிற நேரங்களில் அவைகள் கொலைச்செயலில் ஈடுபடுவதில்லை.

      நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் இணை (mating) சேரும் என்ற மூட நம்பிக்கை படித்தவர்கள் மத்திலும் நிலவுகிறது. இதற்கு அறிவியல் என்ன சொல்கிறது? பொதுவாகவே நாம் அறிவியலை ஏட்டுப்படிப்போடு நிறுத்திவிட்டு நடைமுறை வாழ்வில் ஆயிரக்கணக்கான அபத்தங்களோடு வாழ்கிறோம். அதில் இதுவும் ஒன்று.

    தற்போது நாம் பயன்படுத்தும் இருசொல் பெயரிடும் முறையை உலகிற்கு அளித்து, வகைப்பாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) –ன் அடிப்படையிலேயே இதற்கு விடை இருக்கிறது. (இவரை கரோலஸ் லின்னேயஸ் என நமது பாடப்புத்தகங்கள் நீட்டுவதன் காரணமறிந்த நண்பர்கள் தெரியப்படுத்தவும்.)

    உலகம், பிரிவு, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் எனக் குழுமங்களாகப் பிரிக்கப்படும் வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினமாகும். இவை புறத்தோற்றம், இனப்பெருக்கம் ஆகியவற்றில் ஒத்துக் காணப்படும். மேலும் இவை தங்களுக்குள்ளாகவே இனப்பெருக்கம் செய்து வளமான சந்ததிகளை உருவாக்கும் தன்மை உடையவை. பெரும்பாலும் வேறுபட்ட இரு சிற்றினங்கள் இனச்சேர்க்கை செய்வதில்லை.


    தென்னாசியப் பகுதிகளில் காணப்படும் சாரைப்பாம்புகள் (Ptyas mucosus) நச்சுத்தன்மையற்றவை. நல்ல பாம்பு என்று சொல்லப்படும் இந்திய நாகம் (Naja naja) நச்சுத்தன்மை மிக்கது.


      பொதுவாக பாம்பைக் கண்டால் மிகுந்த பயத்திற்குள்ளாவது மனித இயல்பு. எனவே இவற்றின் அருகில் யாரும் செல்வதில்லை. உருவ, நிற ஒற்றுமையுடைய நல்லபாம்பு மற்றும் சாரைப்பாம்பு ஆகியவற்றை தொலைவில் பார்த்துவிட்டு இம்மாதிரியான கட்டுக்கதைகள் உருவாக்கப்படுகின்றன.


    கற்ற கல்வியின் (அறிவியல்) பயன்பாட்டை சோதித்துப் பார்க்கவேண்டிய அறிவார்ந்த சமூகம் கட்டுக்கதைகளை நம்புவது நியாயமாகுமா?



07. தேசியக்கொடியை ஏற்றும்போது காலணி, ஷூ அணிந்திருக்கக்கூடாதா?



     2009 இலங்கையில் லட்சக்கணக்கில் அப்பாவி பொதுமக்களும் விடுதலைப்புலிகளும் கூண்டோடு அழிக்கப்பட்டபிறகு கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய அப்போதைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மண்ணைத்தொட்டு வணங்கினார். 2014 –ல் பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாடாளுமன்றத்தைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் பிரதமராகப் பதவியேற்றார்.

     பாசிஸ்ட்களும் நாஜிகளும் இம்மாதிரியான காரியத்தைச் செய்வார்கள். நாஜி வணக்கம் பிரசித்தி பெற்றது. பிரிட்டன் ராணி எலிசபெத் குழந்தைப் பருவத்தில் நாஜி வணக்கம் செய்த புகைப்படம் சமீபத்தில் சர்ச்சையைக் கிளப்பியது நினைவிருக்கலாம். சீமான் போன்ற தமிழ் தேசியவாதிகளுக்கும் இது மிகவும் உவப்பானதாகவே இருக்கும்.


     ஆனால் அதே நரேந்திர மோடி இந்திய தேசியக் கொடியை ஏற்றும்போது அதைத் தொட்டுக் கும்பிடுவது காலணி, ஷூக்களைக் கழற்றி வைப்பது போன்ற செயல்களில் ஈடுவடுவதில்லை. ஆனால் அரசுப்பள்ளிகளில் பல தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இத்தகைய செயல்களைச் செய்வது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறேன். இது ஏன்?


    தேசியக்கொடியை தயாரிப்பது பயன்படுத்துவது குறித்து பல்வேறு சட்டங்கள் விதிமுறைகள் உள்ளன. கொடியை தயாரிக்கும்முறையை இந்திய தர நிர்ணய கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது.. இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கக்கப்படும். 2002 -ம் ஆண்டு இயற்றப்பட்ட இச்சட்டத்துடன் இந்திய முத்திரை மற்றும் பெயர் (ஒழுங்குமுறை) சட்டம் (1950), தேசிய சின்ன அவமதிப்பு தடுப்புச் சட்டம் (1971) ஆகிய சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.


     இச்சட்டத்தின் கட்டுப்பாடுகளால் தேசியக் கொடியை அரசு அமைப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் மட்டுமே பறக்கவிட் முடிந்தது. இந்தியர்கள் தமது இல்லங்களில் கொடியை பறக்கவிட நவீன் ஜிண்டால் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும் இச்சட்டம் திருத்தப்பட்டு (2005) இந்திய தேசியக்கொடியை இடுப்பிற்கு கீழ் அணியக்கூடாது, கொடியை கால்சட்டையாக அணியக்கூடாது போன்ற தடைகளை உருவாக்கப்பட்டது.

வேறு என்ன கட்டுப்பாடுகள் இருக்கின்றன?


   இந்திய தர நிர்ணய கூட்டமைப்பினால் தேசியக்கொடிக்கு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு, அடர்த்தி, பளபளப்பு, துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரம் ஆகியவற்றை சொல்கிறது. கொடித்தயாரிப்பில் இதை மீறுவது குற்றமாக கருதப்பட்டு அபராதம், சிறைத் தண்டனை ஆகியன அளிக்கப்படுகிறது.
  •  கொடித்துணி, கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு , கம்பளி ஆகியவற்றால் செய்யப்பட்ட கைத்தறித்துணியாக இருக்கவேண்டும்.
  • சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை மட்டுமே கொடி பறக்க வேண்டும்.
  • கம்பத்தின் உச்சி வரை கொடி ஏற்றப்படவேண்டும்.
  • தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் கொடியை பறக்க விடலாம்.
  • ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
  • வேறு எந்தக் கொடியும் இதனை விட உயரமாகப் பறக்கக்கூடாது.
  • விடுதலை நாள், குடியரசு நாள் போன்றவற்றில் மட்டும் வீடு மற்றும் கார்களில் கொடி பறக்கலாம்.
  •  பிற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிடும்பட்சத்தில் இந்திய தேசியக்கொடியின் இடது புறம் மட்டுமே பிற கொடிகள் பறக்கவேண்டும்.
  • யாருடைய கார் மற்றும் அலுவலகங்களில் பறக்கலாம் என்பதற்கு ஓர் நீண்ட பட்டியல் உள்ளது.
  • தேசிய துக்க நாள்களில் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும். (நேற்று ஜூலை 27 முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் மறைவையொட்டி 7 நாள்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 நாள்களும் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.)
  • தேசியக்கொடியில் எந்த வாசகமும் இருக்கக்கூடாது.
  • ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.
  • கொடியை சன்னல் திரை, மேசை விரிப்பு, கால்சட்டை எனப் பயன்படுத்தக் கூடாது.

     இவ்வளவு நீண்ட கட்டுப்பாடு, விதிமுறைகள் பட்டியல் இருந்தபோதிலும் செருப்பு, ஷூ போடுவது குறித்த எவ்வித விதிகளும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறகு ஏன் பள்ளிகளில் இவ்வாறு நடக்கிறது? இது மிகவும் அபத்தமானது. ராணுவத்தினரோ மாவட்ட ஆட்சியரோ ஷூக்களை கழற்றுவதில்லை. அப்படிச் செய்யவேண்டிய கட்டாயமும் இல்லை.


     மதம் சார்ந்த வழிபாட்டு முறைகளை தேசிய சின்னங்கள் மீது புகுத்துவது நமது நாட்டின் மதச்சார்பற்றத் தன்மைக்கு பேரிடி என்பதை முதலில் இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இது மட்டுமல்லாது பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் மதச்சார்பின்மையை கேலிக்குள்ளாக்குவதோடு, இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதாகவும் அமைந்துள்ளது. (பள்ளிகளில் பரப்பப்படும் இந்துத்துவம் பற்றி வேறோர் சமயத்தில் விரிவாகப் பார்ப்போம்.)


08. சில்வரும் எவர்சில்வரும்

   நாமறிந்த வகையில் சில்வர் (silver) என்று சொல்லப்படுவது வெள்ளி எனும் உலோகத்தைக் குறிக்கும். வெள்ளியின் ஆங்கிலப்பெயர் சில்வர் என்பதாகும்.

    இந்தத் தனிமத்திற்கு பெயரிடும்போது silver என்ற ஆங்கிலப்பெயரின் முதலிரண்டு எழுத்துக்களைப் பயன்படுத்த முடியாமல் போனதன் காரணம் சிலிகான் (Si) என்ற தனிமத்திற்கு ஏற்கனவே அப்பெயர் வழங்கப்பட்டதுதான்.

   எனவே வெள்ளியின் லத்தீன் மொழிப்பெயரான ‘அர்கென்டம்’ (Argentum) என்ற சொல்லிலிருந்து Ag எனக் குறியீடு செய்யப்பட்டது. இதன் அணு எண் 47.

    இயல்பில் திட நிலையில் காணப்படும் இத்தனிமம் ‘வெள்ளி’ நிறத்தில் பளபளப்பாகக் காணப்படுகிறது. எனவே இது அணிகலன்கள், பாத்திரங்கள், விளக்கு மற்றும் கடவுள் உருவங்கள் செய்யப்பயன்படுகிறது.

    பழங்காலத்திலிருந்து தங்கத்திற்கு அடுத்தபடியான பயன்பாட்டில் வெள்ளி இருந்து வருகிறது. நாணயங்கள், சிலைகள் செய்யவும் பயன்பட்டுவந்தது.

   இரும்பைப் பொன்னாக்கும் ரசவாதம் (Alchmey) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதில் பாதரசமும் பயன்பட்டதால் இப்பெயர் வந்திருக்கலாம். இதிருந்துதான் வேதியியல் (Chemistry) என்னும் அறிவியற்துறையே உருவாகிறது.

   ‘ரசவாதம்’ மீண்டும் ஒருமுறை ஆறாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் நிகழ்த்தப்படுகிறது! உலோகக்கலவைகள் (Alloys) குறித்துச் சொல்லும்போது, இரும்பு + குரோமியம் = சில்வர் என்று சொல்கிறார்கள்.

    இங்கு இவர்கள் சொல்ல வருவது எவர்சில்வர் என்று வழக்கில் பயன்படுத்தப்படும் துருபிடிக்காத எஃகு (Stainless steel) ஆகும். வெள்ளி நகைகள், பாத்திரங்கள் காற்றில் இருக்கும் ஹைட்ரஜன் சல்பைடுடன் வினைபுரிந்து வெள்ளி ஆக்சைடு கருப்புப் படலத்தை உருவாக்கும். இதை நாம் வெள்ளி கருத்துவிட்டது என்போம்.
 மாறாக எவர்சில்வர் எனப்படும் துருபிடிக்காத எஃகுவில் (stainless steel) துரு மற்றும் கறைகள் பிடிப்பதில்லை. எனவே இவற்றை நிலை வெள்ளி, கருக்காத தகடு என்றும் அழைக்கிறோம். இதனாலேயே இது சில்வர் (வெள்ளி) ஆகிவிடாது.

  எவர்சில்வர் என்று சொல்லிவிட்டுப் போவதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. ஆங்கிலவழிப் பாடநூலில் Iron + Chromium = Stainless steel என்று உள்ளது. தமிழில் மட்டுமே சில்வர் என்றுள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள் குறித்து இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

   வட்டார வழக்கு மொழிகளைப் பயன்படுத்துவது கூட நமக்கு உடன்பாடானதுதான். ஆனால் அந்த நோக்கமென்றால் எவர் சில்வர் என்றல்லவா குறிப்பிட்டிருக்க வேண்டும்?

  இங்கு வட்டார மொழிகள் பற்றிய இடையீடு ஒன்று
   ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலுள்ள தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு உள்ளூர் மொழி வழக்குதான் புரிதலைக் கொடுக்கும் என்பதால் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் மாவட்டப் பதிவு மூப்பு கடைபிடிக்கப்பட்டது. அது மாநிலப் பதிவு மூப்பாகி தற்போது தகுதித் தேர்வு என்று எங்கோ போய்விட்டது.

   எனவே இன்று குழந்தைகளின் புரிதலுக்கு அந்நியப்பட்ட பேச்சுமொழியை உடைய ஆசிரியர்களிடம் குழந்தைகள் கல்வி கற்க வேண்டியுள்ளது. அரசும் நீதிமன்றமும் குழந்தைகள், கல்வி எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. எனவே வழக்குச்சொல் என்றுகூட சொல்லி தப்பிக்க இயலாது.


09. நிலக்கடலையா? வேர்க்கடலையா?

   அராகிஸ் ஹைபோஜியா (Arahis hypogaea) என்கிற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் நிலக்கடலை ஓர் எண்ணைய் வித்துத் தாவரமாகும். இது மணிலா என்றும் சொல்லப்படுகிறது.

   தமிழகத்தின் வட்டாரங்களுக்கேற்ப கச்சான், மல்லாக்கொட்டை, மல்லாட்டை, மல்லாட்டைப் பயறு, கடலைக்காய், வேர்க்கடலை என்றும் வழங்கப்படுகின்றன. இதை ஆங்கிலத்தில் ground nut, pea nut என்று கூறுகிறார்கள்.

   கடலை எண்ணைய் (ground nut oil) தயாரிக்கப்படும் நிலக்கடலை புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருளாகும். இதை வறுத்தும், அவித்தும் சாப்பிடலாம். கடலை மிட்டாய், கடலை உருண்டை என மதிப்புக் கூட்டப்பட்டப் பொருளாகவும் கிடைக்கிறது.

   ஆனால் பாடநூல்கள் நிலக்கடலை என்று எழுதுவது கிடையாது. வேர்க்கடலை என்றுதான் தொடர்ந்து சொல்கிறது. இப்படி சொல்வது சரியா?

   கேரட், பீட்ருட், முள்ளங்கி போல் நிலக்கடலைக்கு வேருக்கும் தொடர்பில்லை. செடியின் தண்டில் இலைக் கணுக்களில் மஞ்சள் நிற மலர்கள் தோன்றுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு பூக்காம்பு மண்ணுக்குள்ளாக வளர்ந்து கடலையாகிறது.

     பூக்காம்பு ஒன்றிலிருந்து ஓர் காய் மட்டுமே உண்டாகும். ஒருகாயில் ஒன்றிலிருந்து மூன்று விதைகள் வரை இருக்கும். இக்கடலை நிலத்தில் இருப்பதால் நிலக்கடலை என்பது காரணப்பெயராகிறது. வேருக்கும் இதற்கும் தொடர்பில்லை. இத்தாவரத்தின் வேர் தனியே காணப்படும். எனவே வேர்க்கடலை என்று சொல்வது தவறு. இனி நிலக்கடலை என்றே குறிப்போம்.


10. கம்பெனி விளம்பரம்: டால்டாவும் (வனஸ்பதி) ஆர். எஸ். பதி மருந்தும் – கூடவே கொஞ்சம் சைவம், அசைவம்
     மருத்துவர்கள் மருந்தின் பெயரை மட்டுமே எழுதவேண்டும். அதன் வணிகப்பெயரைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவு இருக்கிறது. இது எந்தளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.

     நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரையான பாரசிட்டமால் (paracetamol) calpol உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வணிகப்பெயர்களில் கிடைக்கிறது. (இதை அளவுக்கதிமாக பயன்படுத்தினால் ஆஸ்துமா, கல்லீரல் பாதிப்பு மற்றும் தோல் நோய்கள் வருமென்பது வேறு சங்கதி.)


    நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருள்களின் பெயரைக்கூட அறியாமலிருப்பது விந்தையே. டால்டா மற்றும் ஆர்.எஸ்.பதி மருந்தை உதாரணமாகச் சொல்லலாம்.

    டால்டா என்கிற வணிகப்பெயரில் விற்பனையாகும் வனஸ்பதி தாவர எண்ணைய்களிலிருந்து ஹைட்ரஜனேற்றம் (hydrogenated vegetable fat) செய்யப்பட்டு தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட கொழுப்புப் பொருளாகும்.

    வனஸ்பதி தயாரிப்பில் பனை எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வேறு சில மலிவான எண்ணெய்களும் சேர்க்கப்படுகின்றன. நெய் போன்ற மிருகக் கொழுப்பிற்கு மாற்று இது. இவை உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் ஓர் பொருளாகும்.

    இதை யார் பயன்படுத்தவேண்டும்? இது முற்றிலும் தாவரப்பொருள். அசைவ உணவுகளை இழிவு செய்து சைவ உணவின் மேன்மைகளை வலியுறுத்தும் சாதி, மத வெறியர்கள் நெய்க்குப் பதிலாக இதைத்தான் பயன்படுத்தவேண்டும்.


   அசைவ உணவு வகைகள் விமர்சிக்கப்பட்டும் பாகிஸ்தானுக்கு விரட்டும் மிரட்டல்கள் தொடரும் இவ்வேளையில் நம்மில் பலருக்கு சைவ, அசைவ உணவு குறித்த தெளிவான வரையறையோ புரிதலோ இல்லை.


   முற்றிலும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் தாவர உணவுப்பொருட்கள் மட்டுமே சைவ உணவாகும். விலங்குகளின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணைய், நெய் போன்றவை விலங்குக் கொழுப்பே. இவை ஒருநாளும் சைவ உணவாகாது. தங்களது பழக்கத்தை மேன்மைப்படுத்தி பிறரை இழிவுசெய்பவர்கள் விலங்கு கொழுப்பை பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இவர்களது ‘வசதிப்பட்டியலில்’ தற்போது முட்டைக்கும் இடம் கிடைத்துள்ளது!

   ‘டால்டா’ பெயர் எப்படி வந்தது? இந்துஸ்தான் லீவர் நிறுவனம் நெதர்லாந்தைச் சேர்ந்த DADA & CO நிறுவனத்திடமிருந்து வனஸ்பதியை இறக்குமதி செய்து 1930 களில் இந்தியாவில் வியாபாரம் செய்தது. அவர்களுடைய ஒப்பந்தத்தின் படி ‘DADA’ வுக்கு இடையில் இந்துஸ்தான் லீவரின் ‘L’ சேர்க்கப்பட்டு ‘DALDA’ ஆனது.

   நெய்யைவிட விலை குறைவான இந்தத் தாவரக்கொழுப்பு நெய்யில் கலப்படம் செய்யக்கூடிய ஒரு பொருளாகவும் உள்ளது. வனஸ்பதி என்ற பெயருக்குப் பதிலாக பிராண்ட் நேம் டால்டா பிரபலமாகிவிட்டது. பலகோடி ரூபாய் கொட்டி விளம்பரம் செய்யாமல் வணிகப்பெயர் மக்களின் மனத்தில் பதிக்கப்பட்டுவிட்டது.

    கருநாடக இசையில் வனஸ்பதி என்றொரு ராகம் உண்டு. இதற்கு பானுமதி என்ற வேறு பெயரும் உண்டாம். (இது குறித்து விவரமறிந்தவர்கள்தான் சொல்லவேண்டும்.)

    நீலகிரி மலைப்பகுதிகளில் வளரும் தைல மரம் யூகலிப்டஸ். இம்மரம் தற்போது எங்கும் நடப்படுகிறது. இது அதிகளவு நீரை உறிஞ்சுவதால் சுற்றுச்சூழலுக்குக் கேடு செய்கிறது. மழை குறைவாக பெய்யும் பகுதிகள், நீர்த்தட்டுப்பாடு நிறைந்த பகுதிகளில் இவற்றை வளர்ப்பது நல்லதல்ல.

    சித்த மருத்துவர் ஆர்.எஸ்.பதி என்பவர் 1909 - ல் யூகலிப்டஸ் மரத்திலிருந்து தைலம் தயாரித்து தன்னுடைய பெயரில் ஆர்.எஸ்.பதி தைலம் என்று விற்பனைக்குக் கொண்டுவந்தார். யூகலிப்டஸ் தைலம் என்று உச்சரிப்பது பலருக்குச் சிரமமாகவே இருக்கும். நீலகிரி தைலம் அன்று யாரும் விளக்கமளிக்கவில்லை போலும். எனவே ஆர்.எஸ்.பதி தைலம் என்பதே நிலைத்துவிட்டது.

    வனஸ்பதியை ‘டால்டா’ வாக்கியதும் யூகலிப்டஸ் தைலத்தை (நீலகிரி தைலம்) ஆர்.எஸ்.பதி தைலமாகியதும் அக்கால வணிக உத்தியே. ஆனால் இன்று வணிகம் எவ்வளவோ மாற்றங்களைக் கண்டுள்ளது.


   ஒரு சில நொடிகள் விளம்பரத்தின் மூலம் மக்கள் திரளை அடிமையாக்கும் இன்றைய நிலை மிக மோசம். இருப்பினும் இவைகளின் உண்மைப்பெயர்களை அறிமுகப்படுத்துவது அவசியம்.

   இந்தப்பெயர்கள் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் இவைகள் வேறுவேறு என ஓர் குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

ஞாயிறு, ஜூலை 26, 2015

கல்விக் குழப்பங்கள் - தொடர் (1 முதல் 5 பகுதிகள்)



கல்விக் குழப்பங்கள் - தொடர்  - பகுதி 01 முதல் 05 முடிய.   

                                            - மு.சிவகுருநாதன்

    (இவைகள்  யாவும் மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான் தெரியவில்லை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும் கூட. மிகவும் எளிமையான இவைகளைக் கூட கண்டுகொள்ளாத நமது சமூகமும் கல்விமுறையும் என்ன செய்கிறது?   எங்கே போகிறது? தலையணை சைஸில் நிறைய புத்தகங்களைப் பொதிமூட்டைபோல் சுமந்துசென்று படிப்பதுதான் கல்வி என்பதான கற்பிதங்கள் தகர்க்கப்படவேண்டும். இங்கு நம் முன் உள்ள தவறான புரிதல்களைப் பட்டியலிட முயல்வோம். நன்றி.)



01.   வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விதி ஒன்றா? 


  
     ஆகக் கடைசியில் விபத்தைத் தடுக்க ஹெல்மட் மட்டுமே போதும் என்று கண்டுபிடித்தாகிவிட்டது. எனவே ஓட்டுநர் உரிமம் கூட தேவையில்லை! சாலை விதிகள் என ஒன்று இருப்பது நீதிமன்றங்களுக்கு கூடவா தெரியாமல் போய்விட்டது? மோட்டார் வாகனத் தயாரிப்பில் எவ்வித பாதுகாப்பு அம்சத்தையும் கட்டாயப் படுத்தாத அரசுகளும் நீதிமன்றங்களும் ஹெல்மட், சீட் பெல்ட் ஆகியவை மட்டும் போதும் என முடிவெடுக்கும்போது நாம் வேறு என்ன செய்ய முடியும்? இப்போது சீட் பெல்ட்டை யாரும் கேட்பதில்லை. கடைக்கோடி மக்களின் உயிர்கள் மீது எவ்வளவு அக்கறை? இந்த அக்கறையை சாலையில் நடந்து செல்லும் வெகு சாமான்ய மக்கள் மீது கொஞ்சம் காட்டினாலென்ன?

     சாலை விதிகளை ஒழுங்காகக் கடைபிடித்தாலே பெருமளவு விபத்துகள் குறையும். இவற்றில் ஒன்று வாகன் ஓட்டிகள் சாலையின் இடப்புறம் செல்வது. சாலையில் நடந்து செல்வோரும் இதனைக் கடைபிடிப்பது வேடிக்கை. பாடநூற்கள் வெறுமனே சாலையின் இடப்புறம் செல்ல வலியுறுத்துகின்றன. ஆனால் வாகன் ஓட்டியா? பாதசாரியா? என்பதை விளக்குவதில்லை. எனவே எல்லாருக்கும் ஒரே விதி எனத் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

  நடைமேடை (இது எங்கே இருக்கிறது?) இருக்கும் இடங்களில் இடமோ வலமோ அதில் நடந்து செல்லலாம். நடைமேடை இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனத்தைப் பார்த்துக்கொண்டு வலபுறமாக நடக்கவேண்டும். அப்போதுதான் நமக்குப் பின்னால் வரும் வாகனங்கள் நம்மீது மோத வழியில்லை. மேலும் முன்னால் வரும் வாகனத்தைப் பார்த்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். ஆனால் நடப்பதென்ன? இவ்விதி சரியாகச் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அல்லது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் நாள்தோறும் சாலையில் நடக்கும் பலர் மரணமடைகின்றனர். 

   நீங்கள் சாலையின் வலப்பக்கம் நடந்து சென்று பாருங்கள். பெரும்பாலனோர் அதே புறத்தில் எதிரே வருவார்கள். அதோடு நில்லாது நம்மை ஏதோ ஓர் விசித்திரப் பிராணியைஒ போல் பார்த்துச் செல்வார்கள். இடப்புறம் நடக்கவேண்டும் (?!) என்ற விதிகூட தெரியவில்லையே என்கிற ஏளனப்பார்வை அது. 
 
  வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் எப்படி ஒரே விதி இருக்கமுடியும்? என்பதை பெரும்பாலோர் உணர்வதே இல்லை அல்லது உணர்த்தப்படவே இல்லை. இது யார் குற்றம்?

  இத்தகைய விதிகள் பள்ளிக் கல்வியிலேயே கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சாலை விதிகளைக் கற்பிப்பதில் குழப்பங்களும் குளறுபடிகளும் இருக்கின்றன. இதை எப்போது சரி செய்யப்போகிறோம்?

                   

01.   வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் விதி ஒன்றா? ? 
  
மேற்கண்ட எனது முகநூல் பதிவிற்கு வந்த பின்னூட்டமும் அதற்கான மறுமொழியும்.


கி முருகன் மாப்பிள்ளைக்குப்பம்:
 
    வங்கிகளில் பணம் போட, எடுக்க, அனுப்ப  உரிய விண்ணப்பங்களை நிரப்பவும், போக்குவரத்தில் முன்பதிவு விண்ணப்பங்களை  நிரப்பவும் கற்று தந்தால் நல்லது....

சிவகுருநாதன் முனியப்பன் :

         தங்களது கருத்துகளுக்கு நன்றி. நீங்கள் சொல்கிற படிவங்கள் பத்தாம்வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் இரண்டாம் தாளுக்குரிய 5 மதிப்பெண் வினாவாக உள்ளது. இங்குள்ள ஏதேனும் ஓர் வங்கியின் படிவத்தை அப்படியே கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

     ஆனால் அம்மாதிரியான வங்கிப்படிவங்கள் இங்குள்ள எந்த வங்கியிலும் இல்லை என்பதுதான் உண்மை. ஒருவேளை அரசும் தமிழாசிரியர்களும் இனி தொடங்கப்போகும் புதிய வங்கியில் கொடுக்க நினைக்கும் மாதிரிப் படிவமாககூட  இருக்கலாம்! யார் கண்டது?

      இங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். இன்று வங்கிகள் அளிக்கும் பல்வேறு படிவங்கள் எளிதாக இல்லை. அதில் தேவையில்லாத பல விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். வங்கியில் கேட்டால் இதை மட்டும் எழுதிக்கொடுங்கள் என்பார்கள். 

   இவற்றை எளிமையாகவும் புரியும்படியாகவும் அனைத்து வங்கிகளும் ஓரளவிற்காவது ஓர்மையுடன் படிவங்களை வடிவமைக்கலாம் அல்லவா? ஆனால் வருமானவரிப்படிவம் எளிமையாக இருக்கவேண்டும் என நினைக்கும் அரசுகள் சாமான்யர்கள் பயன்படுத்தும் வங்கிப்படிவம் எளிதாக இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. 

   இன்று கிராமப்புற வங்கிகள்கூட மின்னணு பரிமாற்றம் செய்யும் நிலையில் இப்படிவங்களின் நிலை கேள்விக்குரியதுதான். 

   ஒரு விஷயத்தை தவறாகச் கற்றுக் கொடுப்பதைவிட சொல்லாமல் விடுவது எவ்வளவோ மேல் என நான் கருதுகிறேன். அதனால்தான் இப்பகுதியை எழுதத் தோன்றியது. 

மீண்டும் நன்றி.வணக்கம்.

கி முருகன் மாப்பிள்ளைக்குப்பம்:  

    அறிவார்த்தமாக, பொறுப்புத் தன்மையுடன் பதில் தந்தமைக்கு நன்றி.
பயிற்றுவித்தலில் உள்ள நாம் அன்றைய நாள் வரையிலான தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியம் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

சிவகுருநாதன் முனியப்பன்

      நீங்கள் சொல்வது சரி. ஆனால் நடைமுறையில் இல்லை என்பதுதான் உண்மை. பாடத்திட்டமும் ஆசிரியர்களும்  மேம்பாடு (update ) அடைய வேண்டும். அதற்கான வாய்ப்புகளும் முயற்சிகளும் இங்கு மிகக் குறைவு.  நன்றி.


02.   தாவரங்கள் எதை சுவாசிக்கும்? 

      எந்த வகுப்பு மாணவர்களிடமும் நாம் எதை சுவாசிக்கிறோம் என்று கேட்டால் முதலில் காற்று என்று சொல்லி பின்னர் ஆக்சிஜன் என்று பதில் வந்துவிடுகிறது. தாவரங்கள் எதை சுவாசிக்கும் என்று கேட்டால் உடன் கார்பன்–டை-ஆக்சைடு என்று பதில் வருகிறது. 

     சுவாச உறுப்பு பற்றிக் கேட்டால் மூக்கு என்று சொல்லியபிறகு இறுதியில் நுரையீரல் என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் இந்த சுவாசக் கோளாறு அனைத்து வகுப்பிலும் உள்ளது!

     கார்பன்–டை-ஆக்சைடை சுவாசிக்கும் உயிரினம் இருக்குமானல் புவி வெப்பமடைதலைப் பற்றியெல்லாம் கவலைப்படவேண்டியதில்லையே! ஏனிந்த குழப்பம்? இம்மாதிரியான உயிரினங்கள் பற்றிய புனைகதைகளோ படங்களோ வெளிவந்திருந்தால் நண்பர்கள் தெரிவிக்கவும்.

   மனிதனால் செய்யமுடியாத வேலை ஒன்றையும் தாவரங்கள் செய்கின்றன. அதுதான் ஒளிச்சேர்க்கை எனப்படும் ஸ்டார்ச் உணவு தயாரித்தல். நமது தோல் வைட்டமின் டி ஐ மட்டும் உற்பத்தி செய்யும். கார்பன்–டை-ஆக்சைடு, நீர், பச்சையம், சூரிய ஒளி ஆகியவற்றைக் கொண்டு தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிப்பதைத்தான் நாம் ஒளிச்சேர்க்கை என்கிறோம்.

    இதுதான் குழப்பத்திற்கு காரணமாகிறது. மனிதனைவிட தாவரம் கூடுதல் வேலை செய்வதா? மனம் ஒளிச்சேர்க்கையையும் சுவாசித்தலையும் சேர்த்து குழப்பமடைகிறது. இதைத் தெளிவுபடுத்தாத கல்வியின் பயனேது?

   ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜன் வெளியிடப்படுகிறது. மாறாக சுவாதித்தலின்போது தாவர, விலங்குகள் அனைத்தும் கார்பன்–டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன.

   மேலும் கார்பன்–டை-ஆக்சைடு என்று சொன்னால் நாற்றமே அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது. இது ஓர் நிறமற்ற, மணமற்ற வாயு என்று சொன்னால் மனம் ஏற்க மறுக்கிறது.

    கார்பன்–டை-ஆக்சைடை  தாவரங்கள் பயன்படுத்துவதை மட்டும் வைத்துக்கொண்டு அது சுவாசித்தல் என திடீரென்று முடிவு கட்டப்படுகிறது. அது எதற்காகப் பயனாகிறது என்பதை அய்யமின்றி நிருபிக்க நாம் தவறிவிட்டோம்.

   இதற்கு மாணவர்களைக் குறை சொல்வதில் பொருளில்லை. கல்வியின் அடைவைச் சோதிக்க இதையும் உதாரணமாகக் கொள்ளலாம். நமது மனப்பாடக்கல்வி இவ்வாறான குறுக்குவழிச் சமன்பாடுகளையே உருவாக்கும் என்பதில் அய்யமில்லை.

                    

03.   Climate சரியில்லை என்று சொல்லலாமா? 


    திடீரென்று மேகம் கறுத்து மழை வருவது, குளிர்ந்த காற்று வீசுவது, காற்றழுத்த மாறுபாட்டால் ‘இறுக்கம்’ உண்டாகி அதிகமாக வியர்ப்பது போன்ற வானிலை மாற்றம் உருவாகும்போது கிராமங்களில் எழுதப் படிக்காதவர்கள்கூட ‘வானம்  (மானம்) சரியில்லை’ என்றோ அல்லது அந்தந்த வட்டாரத்திற்கேற்ற ஓர் சொல்லைக் கொண்டோ குறிப்பிடுவது வழக்கம்.



     ஆனால் மெத்தப்படித்தவர்கள் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலைகளை ‘Climate சரியில்லை’ என்று சொல்வதை வாடிக்கையாகவும் ஏன் பெருமையாகவும்கூட கருதும் நிலை இருக்கிறது. நம்மவர்களுக்கு ஓர் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துவதுகூட பெருமைதானே! இதைப் பயன்படுத்தலாமா? இதன் பொருளென்ன? என்பதைப் பலர் கவனிக்க மறந்துவிடுகின்றனர்.



      ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் (அதாவது ஓர் நிமிடம் முதல் சில மாதங்கள் வரை) ஏற்படும் வெப்பம், அழுத்தம், ஈரப்பதம், மழை, காற்று, பனி, மேகம், புழுதிப்புயல் போன்ற நிகழ்வுகளையும் எப்போதாவது அரிதாக நிகழும் இயற்கைப்பேரிடர்கள், சூறாவளி, பனிப்புயல் ஆகியவற்றையும் வானிலை (weather) என்றே சொல்லவேண்டும்.



      இத்தகைய வானிலைத் தொகுப்பின் நீண்டகால சராசரி காலநிலை (climate) என்றழைக்கப்படுகிறது. இதை தட்ப வெப்பநிலை என்றும் தமிழில் சொல்வதுண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலான ஓரிடத்தின் வானிலை சராசரியே இவ்வாறு கூறப்படுகிறது.



    இன்று காலநிலை மாற்றம் (climate change) பற்றி உலமே பேசிக்கொண்டிருக்கும் நிலையில் வானிலையை (weather) காலநிலை (climate) என்றழைப்பது சரியா? இனியாவது வானிலையை ‘climate’ என்று சொல்லாதிருப்போம்.



     இம்மாதியான நிறைய சொற் குழப்பங்கள் உண்டு. இவற்றைப் பட்டிலிட்டு மாணவர்களிடம் தெரிவிக்கும்போது இக்குறைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது குறையும்.

 
                       


04.   பழைய கட்டிடங்கள் மற்றும் ஈரமான தரைகளில் இருப்பது பாசியா? 

 
   பழைய கட்டிடங்கள், ஈரமான தரைப்பகுதிகள், சுவர்கள், ஓடுகள், கற்கள், பாறைகள் போன்றவற்றில் பசுமை போர்த்தியிருக்கும் சிறிய தாவரவகைகளைப் பார்த்திருப்போம். இவற்றை நாம் பாசி (ஆல்கா) படர்ந்துள்ளது, பாசி வழுக்கிவிட்டது என்கிற ரீதியில் குறிப்பிட்டு வருகிறோம். பசுமையாக இருப்பதால் இவை பாசி என முடிவு செய்துவிட்டோம். பொதுவாக ஆல்காக்கள் பசுமையாக மட்டும் காணப்படுவதில்லை.  உண்மையில் இவை பாசியா என்று கேட்டால் இல்லை என்பதே உண்மை.

   கொஞ்சம் வகைப்பாட்டியலுக்குச் செல்வோம். தாவர உலகம், பூக்கும் தாவரங்கள் (பெனரோகேம்ஸ்), பூக்காத தாவரங்கள் (கிரிப்டோகேம்ஸ்) என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன.

  பூக்காத தாவரங்கள் தாலோஃபைட்டா, பிரையோஃபைட்டா, டெரிடோஃபைட்டா (பெரணித் தாவரங்கள்) என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தாலோஃபைட்டாவில் ஆல்காக்களும் (பாசிகள்) பூஞ்சைகளும் (காளான்கள்) வருகின்றன.

       இவற்றில் பாசிகள் பச்சையமுடையவை. இவை ஒளிச்சேர்க்கை மூலம் உணவு (ஸ்டார்ச்) தயாரிப்பதால் சுயஜீவிகள் என்று அழைக்கப்படுகின்றன. பச்சையத்திற்கான நிறமிகளை (குளோரோபில் A மற்றும் B) பெற்றிருந்தாலும் எல்லா பாசிகளும் பசுமையாகக் காணப்படுவதில்லை.

   எந்த நிறமி அதிகமாகக் காணப்படுகிறதோ அந்நிறத்தில்  பாசி காட்சியளிக்கிறது. ஃபைகோசயனின் (நீலப்பச்சை), குளோரோபில் (பச்சை), ப்யூகோஸாந்தின் (பழுப்பு), ஃபைகோஎரித்ரின் (சிவப்பு) ஆகிய நிறமிகள் அதிகமாகக் காணப்படும்போது பாசிகள் அந்தந்த நிறத்தைப் பெற்றுக் காட்சியளிக்கின்றன.

   நாஸ்டாக், அனாபினா, அலோசிரா, ஆசில்லடோரியா போன்ற நீலப்பசும்பாசிகள் வளிமண்டல நைட்ரஜனை (N2) நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றி மண்ணை வளப்படுத்துகின்றன. இதனால் நெல் போன்ற வேளாண்பயிர்களுக்கு உயிர் உரமாக இவை பயன்படுகின்றன.

   பூஞ்சைகள் பச்சையமற்றவை. எனவே இவை தனித்து வாழ முடியாதவை. மட்குண்ணி, ஒட்டுண்ணி, கூட்டுயிரி போன்ற வாழ்க்கைமுறையில் இவை செயல்புரிகின்றன.

   பிரையோஃபைட்டா பிரிவைச் சேர்ந்த தாவரங்களையே நாம் பாசிகள் என்று தவறாகச் சொல்லி வருகிறோம். இவை ஆல்காக்களைவிட மேம்பாடடைந்த தாவரப்பிரிவாகும். மேலும் இவை முழுமையாக நீரிலோ நிலத்திலோ வாழ இயலாதவை. இவற்றின் இனப்பெருக்கத்திற்கு நீர் தேவைப்படுகிறது. எனவே இது இரு வாழ்வித் தாவரங்கள் (நீர், நில வாழ்வன) என்றழைக்கப்படுகின்றன.

      பிரையோஃபைட்டுகளில் வாஸ்குலார் திசுக்கள் எனப்படும் கடத்து திசுக்களான சைலம் (நீர்), ஃபுளோயம் (உணவு) ஆகியவை இல்லை. லிவர்வொர்ட்ஸ் (ஈரல் வடிவம்), ஹார்ன்வொர்ட் (கொம்பு வடிவம்), மாஸ்கள் ஆகிய இதற்கு எடுத்துக்காட்டுகள்.
  
           பாசிகள் முற்றிலும் நீரில் வாழ்பவை. இவை பசுமை தவிர சிவப்பு, பழுப்பு, நீலப்பச்சை ஆகிய நிறங்களிலும் காணப்படும்.  பிரையோஃபைட்டுகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள். இவற்றை  பசுமையாக மட்டுமே காணலாம். இவை பாசிகள் (ஆல்காக்கள்) அல்ல.

                  


05.   “விவசாயக்கழிவு மற்றும் குப்பை + நன்மை செய்யும் பூஞ்சைகளும் காளான்களும் = உயிர் உரம்”.   இச்சமன்பாடு சரியானதுதானா? 
 

       ஒன்பதாம் வகுப்பு புவியியலில் (மூன்றாம் பருவம்) ‘மண்வளத்தைத் தக்க வைத்தல்என்கிற தலைப்பில் “” என்று படம் போட்டு விளக்கப்பட்டுள்ளது. இதை உயிர் உரம் என்று சொல்வது மடத்தனம்; இயற்கை உரம் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் பூஞ்சைகளும் காளான்களும் ஒன்றுதானே! வேறு பெயர் வேண்டுமானால்  பாக்டீரியங்கள்  என்று  சொல்லலாமே! 

    உயிர் உரங்களைப் பற்றி கொஞ்சம். வளிமண்டலத்தில் மிக அதிகமாக உள்ள (78%) நைட்ரஜன் (N2) வாயுவை நிலைப்படுத்தி அதாவது நைட்ரேட்டாக (NO3) மாற்றித் தாவரங்களுக்கு அளிக்கும் வேலையைச் செய்பவையே உயிர் உரங்கள் என்று அழைக்கப்படும். உம். பாசி மற்றும் பூஞ்சை வகைகளைச் சேர்ந்த அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், பாஸ்போ பாக்டீரியா, அசட்டோ பாக்டர், அனபினா, நாஸ்டாக்  மற்றும் வேர்முடிச்சு (வேர்முண்டுகள்) பாக்டீரியமான ரைசோபியம்.

        அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ் ஆகியவை நெல் போன்ற பயிர்களுக்கு உயிர் உரமாகத் தரப்படுகிறது. ரைசோபியம் அவரை, உளுந்து குடும்பத் தாவரங்களின் வேர்முடிச்சுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது

  அசோஸ் ஸ்பைரில்லம், சூடோ மோனாஸ், ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் உயிருள்ளவை. இவைகள் வாழிடத்திற்காகவோ வேறு காரணங்களுக்காகவோ நெல், அவரை. உளுந்து போன்ற வேளாண்பயிர்களைச் சார்ந்து வாழ்ந்து பலனடைகின்றன. எனவே இவற்றை உயிர் உரங்கள் என்கிறோம்.

           இறந்துபோன தாவர விலங்கு உடலங்களை சாப்பிட்டு மட்கச்செய்யும் பாக்டீரியங்கள் (சாறுண்ணிகள்) மூலம் தாவரங்களுக்குக் கிடைப்பவை இயற்கை உரங்கள். இவை இல்லையென்றால் இறந்த தாவர, விலங்கு உடலங்கள் மட்க வாய்ப்பே இல்லை.  இதுகூடத் தெரியாமல்தான் நமது பாடநூற்கள் எழுதப்படுகின்றன.