அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது எப்படி? அல்லது தனியார் பள்ளிகளை ஒழிப்பது எப்படி?
- மு.சிவகுருநாதன்
(திருவாரூரில்
(04.07.2015) நடைபெற்ற
கலந்துரையாடல் பற்றியும் இப்பிரச்சினை குறித்த கருத்துக்களையும் இங்கு இணைத்துப் பதிவு
செய்கிறேன். மேலும் கல்வி தொடர்பாக பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின்
சுட்டிகளை இறுதியில் இணைத்துள்ளேன். இவற்றில் கூறியது கூறல் இருக்கலாம். மன்னிக்கவும்.)
“அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வியில் தனியார்மயக் கொள்கையை ஒழிப்போம்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்
தெற்குவீதி
அ.மோ.தாசு சமுதாய கல்லூரியில்
ஜூலை
04, 2015 (04.07.2015) முற்பகல் நடைப்பெற்றது.
கல்வி
மேம்பாட்டுக் கூட்டமைப்பு, சமத்துவக் கல்வி இதழ் சார்பாக இக்கூட்டத்தை திருவாரூர் ஆசிரியத்
தோழர் செ.மணிமாறன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் சமத்துவக் கல்வி மாத இதழாசிரியர்
ஜெ.ஷியாம் சுந்தர், ‘கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி,
‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ கல்வி
இயக்கத்தின் சுடரொளி, பேரா. தி.நடராசன்,
பேரா. மு.செந்தில்குமார், சமூக
ஆர்வலர் ஜீ.வரதராஜன், திராவிடர் கழகத்தின்
கோ.செந்தமிழ்செல்வி, பகுத்தறிவாளர் கழகத்தின் இரா.சிவக்குமார், முதுகலைப் பட்டதாரி
ஆசிரியர் கழகத்தின் நா. குணசேகரன் ஆகிய 30 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திரு ஜெ.ஷியாம்சுந்தர் |
நம்மவர்களுக்கு நேர மேலாண்மை துளி கூட கிடையாது
என்பதை இக்கலந்துரையாடல் மீண்டும் உணர்த்தியது. காலை 11 மணிக்குத் தொடங்கிய உரையாடல்
பிற்பகல் 2 ஐத் தாண்ட இதுவே காரணம். அறிமுகத்திற்கே நம்மாட்கள் 5 நிமிடங்களைத் தாண்டும்போது
வேறு என்ன செய்வது?
திரு சு.மூர்த்தி |
தமிழாசிரியர் தமிழ்க்காவலன், ஆசிரியர்கள் எவ்வாறு
இருக்கவேண்டும் என்று தான் முன்பே கட்டுரை எழுதி அதற்குப் பரிசு பெற்றிருப்பதாகவும்
அதிலுள்ள பரிந்துரைகளை கண்டிப்பாக செயல்படுத்தவேண்டும்; ஆனால் யாராலும் செயல்படுத்த
முடியாது என்றார். அதிலுள்ள ஓர் பரிந்துரை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது;
ஏனெனில் இப்பணி தொண்டாகச் செய்வது. எனவே ஊதியம் வழங்கப்படக்கூடாதென்றார். பிறகு பேசிய
பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்
இரா. சிவகுமார் இது குருகுலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவது என கண்டித்தார்.
திரு இரா.சிவக்குமார் |
உரையாடலைத்
தொடங்கி வைத்த சமத்துவக் கல்வி மாத இதழாசிரியர் ஜெ. ஷியாம் சுந்தர், தனியார்
பள்ளி நடத்தி பாவம் செய்த அனுபவத்திலிருந்து பேசுகிறேன்; தனியார் பள்ளிகள் ஒழிக்கப்படவேண்டும்
என்று வலியுறுத்தினார். இது ஒன்றும் சட்டத்திற்கு புறம்பானது இல்லை என்பதை விளக்கிய
அவர் இது கண்டிப்பாக நடக்கும், தனியார் பள்ளிகளுக்கான நெருக்கடிகள் தொடங்கிவிட்டன என்று
சொல்லி அதற்கு உதாரணமாக தனியார் பள்ளிகளை முறைப்படுத்தச் சட்டம் இயற்ற சென்னை உயர்
நீதிமன்றம் அண்மையில் செய்த பரிந்துரையைச் சுட்டிக் காட்டினார்.
அதன் பின்னர் நடந்தவற்றையும் இதனோடு இணைத்துப்
பார்க்கவேண்டும். இதற்கு தமிழக அரசு ஓராண்டு கால அவகாசம் கோரி, அதை நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது.
ஹெல்மெட்டுக்கு இரு வார கால மட்டுமே அளிக்கப்பட்டது இங்கு கவனிக்கத்தக்கது. இதற்கான குழு ஒன்றை மட்டும் அமைத்துவிட்டு இவர்கள்
தேர்தலுக்குச் சென்று விடுவார்கள். அடுத்து யார் வந்தாலும் இவற்றைக் கண்டுகொள்ளப் போவதில்லை. நீதிமன்றமே தானாக
முன்வந்து வழக்காடி கல்வியைக் காப்பாற்றும்
என நாம் நம்ப முடியாது. இதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. பள்ளிக் கட்டண வரையறை
செய்து அதை அரசும் நீதிமன்றமும் செயல்படுத்திய லட்சணம் நாமறிந்ததுதானே!
திரு ஜீ.வரதராஜன் |
தனியார் பள்ளிகளை ஒழிக்கவேண்டும் என்பதில் எவ்வித
மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. நீதிமன்ற நெருக்கடிகளால் தனியார் பள்ளி கொள்ளைக்காரர்கள்
தொழிலை விட்டு ஓடிவிடப்பொவதில்லை. தனியார் பள்ளி ‘லாபி’ மிக நீண்ட வலைப்பின்னல்
(Network) கொண்டது. அரசு, அதிகாரிகள், அனைத்து
அரசியல் கட்சிகள் எல்லாம் இதனோடு பின்னிப் பிணைந்தவை.
மக்கள் இயக்கம் நடத்துவது சரியானதுதான். ஆனால்
அரசு, ஆசிரியர்கள் ஆகியோரது செயல்பாட்டால் ஒட்டுமொத்த சமூகத்தில் பெரும்பான்மை தனியார்
பள்ளிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. அதைப்போல் ஆங்கில வழிக்கல்விக்கும். அரசுப்பள்ளியில்
ஒருவர் குழந்தைகளைச் சேர்க்கிறார் என்றால் சுயவிருப்பத்தால் நிகழ்வது குறைந்தபட்சமே.
வேறு வழியில்லாமல் அதாவது தனியார் பள்ளியில் சேர்க்க பணம் இல்லாததால்தான் அரசுப்பள்ளிக்கு
வருகிறார்கள். வேறு எப்படி அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது? எவ்வாறு தனியார் பள்ளிகளை
ஒழிப்பது?
இன்றைய கல்விப் பிரச்சினையை மூன்று தரப்பாக அணுகவேண்டும்.
அரசு, ஆசிரியர்கள் – இயக்கங்கள், சமூகம் ஆகிய மூன்று தரப்பும் இந்த சீரழிவிற்குக் காரணமாக
இருக்கின்றன. இதில் ஆசிரியர்கள் – இயக்கங்களின் பங்கு முதன்மையானது. பரப்புரை செய்வது ஒரு உத்தி. ஆனால் அது எந்தளவிற்கு பலன்தரும் என்பது கேள்விக்குறியே. டாஸ்மாக்
கடைகளை அரசு திறந்து வைத்துக்கொண்டு மதுவிலக்குப் பரப்புரை செய்வது என்ன பலனைத் தருமோ
அதைப்போலத்தான் இதுவும். தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்க அரசுக்கு நெருக்கடி அளிக்கவேண்டும்.
படிப்படியாகக் கூட இதை அமல்படுத்தலாம். மழலையர், தொடக்கப்பள்ளிகள் தொடங்கி உயர்கல்வி
வரை இது நிகழவேண்டும். பொதுத் தேர்வுகள் ஒழிக்கப்படவேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும்
முப்பருவ முறை கொண்டுவரப்படவேண்டும் என்று நான் சுருக்கமாக கருத்துரைத்தேன்.
திரு மு.சிவகுருநாதன் |
பின்னர்
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் குறித்த பேச்சு வந்தபோது, சுயநிதிப்பள்ளிகளைப்
போன்று அரசின் அருளாசிகளுடன் ஆங்கில வழி சுயநிதி வகுப்புகள் தொடங்கி பெரும் கொள்ளையில்
ஈடுபடுவது இங்கு பேசுபொருளாகவே இல்லை. இங்கு அரசு உதவி பெறும் தமிழ்வழியில் பயிலும்
மாணவர்களின் சொற்ப வசதியை அபகரிக்கும் அநீதி நடக்கிறது. இதை அரசு, கல்வித்துறை, சமூகம்
என எதுவும் கண்டு கொள்வதில்லை என்றும் சுமார் 70% மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படிக்கும்
நிலையில் இவர்களுக்கான செலவு முழுவதும் அரசே செய்கிறது. தனியார் பள்ளிகளை அரசே ஏற்று
நடத்துவதால் பெருமளவு செலவாக வாய்ப்பில்லை, என்றும் சொன்னேன்.
‘கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ ஒருங்கிணைப்பாளர்
சு.மூர்த்தி, 2011 இல் சமச்சீர் பாடநூல்களுக்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றம், உச்ச
நீதிமன்றம் என சென்று கொண்டிருந்தபோது திருப்பூரில் சில வழக்குரைஞர்களுடன் சேர்ந்து
இவ்வமைப்பு உருவாக்கப்பட்ட சூழலை விளக்கினார்.
‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ கல்வி இயக்கத்தின் சுடரொளி, தனியார் பள்ளிகளை ஒழிப்பது ஒன்றும் இயலாத
காரியமல்ல. கல்வி உரிமை – குழந்தை உரிமையின் ஓர் பகுதிதான் இது, என்றார். ‘குழந்தைகளைக்
கொண்டாடுவோம்’ அமைப்பு பற்றி மணிமாறன் பேசச் சொன்னபோது அது பற்றி வெறொரு நிகழ்வில்
பேசலாம். இன்றைய கூட்டத்தின் மையப்பொருளைவிட்டு விலகிச் செல்லவேண்டாம் என்றும் கூறினார்.
இறுதியாகப் பேசிய முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நா. குணசேகரன் தனியார் பள்ளிகளின் ஒழிப்பு காலத்தின்
கட்டாயம் என்பதை வலியுறுத்தினார்.
திரு மோகன் திருமதி பூ.புவனா |
இந்நிகழ்வில்
கருத்துரைத்த ஆசிரியர்கள் பலர் தங்கள் தரப்பில் உள்ள குறைபாடுகளை ஒத்துக்கொண்டனர்.
ஆசிரியர் மோகன், பேரா. தி.நடராசன் போன்றோரும் இதைச் சுட்டிக்காட்டினர். தனியார் பள்ளிகளை
ஒழிக்க முடியாது. எனவே அது பற்றி பேசாமல் அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது பற்றி மட்டும்
பேச வலியுறுத்திய ஊ.ஒ.நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியை ஜெ.ஜெயந்தி, தனது கல்விப்பணி
பற்றியும் தங்களது பள்ளி மாணவர்களை அருகிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில்
சேர்க்க மறுப்பதையும் குறிப்பிட்டார். அவர் சொன்னது ஓர் அரசு உதவி பெறும் பள்ளி. இதுவே
இப்படி இருக்கும்போது சுயநிதி தனியார் பள்ளிகள் எவ்விதம் செயல்படும் என்பதை விளக்கத்
தேவையில்லை. பின்னால் அவர் சொன்ன கருத்தின் மூலம் அவரது கருத்தில் முரண்பட்டார். சமூகம்
தனியார் பள்ளி குறித்த இத்தகைய முரண்களால் தனியார் பள்ளிகளைத் தக்க வைக்கிறது.
கொரடாச்சேரி ஒன்றிய எருக்காட்டூர் தொடக்கப்பள்ளி
இடைநிலை ஆசிரியை பூ.புவனா, அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க நமது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில்
சேர்க்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வாழ்வில் சொந்தக்காலில்
நிற்கும் திறனற்றவர்களாகவே உள்ளனர் என்று சொல்லி அதற்கு உதாரணங்களைப் பட்டியலிட்டார்.
இம்மாதிரியான கருத்தை பலரும் வலியுறுத்தினர்.
பொதுவாக
அரசுப்பள்ளிகளின் அருமை – பெருமைகளில் ஒன்றாக இது தொடர்ந்து பட்டியலிடப்படுகிறது. அரசுப்பள்ளி
மாணவன் ஒன்றாம் வகுப்பிலிருந்து தனியே பள்ளிக்கு வருகிறான்/ள். பாடத்திட்டத்தைவிட,
பள்ளிகள் கற்றுத் தருவதைக்காட்டிலும் குடும்பமும்
சமூகமும் அவளுக்கு/அவனுக்கு நிறைய கற்றுத் தருகிறது. எனவே சுமைகளைத் தாங்க, சிக்கல்களை
எதிர்கொள்ள அவர்களால் முடிகிறது. இது நமது கல்வியமைப்பின் குறைபாடே தவிர இதனால் அரசுப்பள்ளிகள் பெருமையடைய ஏதுமில்லை. மதிப்பெண்கள் அடிப்படையிலான
கல்வி வெறும் எந்திரங்களை மட்டுமே உருவாக்கும்.
அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படுவதெல்லாம் ரொம்ப
உன்னதமானது என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. அதற்கு அரங்கிலேயே ஓர் உதாரணம் கிடைத்தது.
அங்கு வந்திருந்த நடுநிலைப்பள்ளி மாணவன் பேச முன் வந்தபோது கல்வி – பள்ளி பற்றி ஏதேனும்
சொல்லவருகிறார் என்றெண்ணியது நடக்கவில்லை. அவர் பசும்பொன் முத்துராமலிங்கர் பற்றி உரையாற்றினார்.
அப்போது அவரது உடல்மொழி மிகவும் மோசமானதாக இருந்தது. இதற்கு அவர் காரணமல்ல. பொதுவாகவே
பள்ளிகள் இதைத்தானே சொல்லிக்கொடுக்கின்றன. அனைத்துப் பள்ளிகளிலும் நல்லவற்றைவிட அல்லவைதான்
அதிகம் போதிக்கப்படுகின்றன. இன்றைய பல்வேறு சமூக இழிவுகளைப் போக்க கல்வி சிறு துரும்பையும்
அசைக்கவில்லை என்பதுதானே உண்மை.
தனியார் பள்ளிகளின் நடவடிக்கைகள் சிறந்ததாகக் கருதப்பட்டு
அவற்றை நகலெடுக்கும் கலாச்சாரம் அரசுப்பள்ளிகளியும் தொற்றிவருகிறது. அரசும் கல்வியதிகாரிகளும்
இதற்குக் காரணமாக இருக்கிறார்கள். இந்நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகள்
செயல்பாட்டில் தனியார் பள்ளிகள் போலாகிவிடும். எனவே தனியார் பள்ளிகளை காப்பியடிக்கும்
போக்கு மாறவேண்டும்.
திரு ராம்பிரபாகர் |
கொரடாச்சேரி ஒன்றியப் பள்ளி ஒன்றில் பணிபுரியும்
இடைநிலை ஆசிரியர் ராம்பிரபாகர் CBSE பள்ளி பணி அனுபவங்களையும் அதன் சிறப்புக்களையும்
குறிப்பிட்டுப் பேசினார். அங்கு 45 நிமிட பாடவேளையில் ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்க
மாட்டோம். இங்கு நேரம் வீணடிக்கப்படுகிறது என்றார். ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சியின்போது
தேநீர் குடிக்கச் சென்றால் 12 மணிக்குத்தான் வருகிறார்கள் என்றும் சொன்னார். CBSE இல்
ஆண்டுக்கொரு முறை பாடத்திட்டம் திருத்தப்படுகிறது (Update) என்றார். ஆசிரியர்களுக்கான
பணியிடைப் பயிற்சிகள் முறையாக நடத்தப்படுவது கிடையாது. வெறும் நேரம், நாட்களை நகர்த்துவதாகவே
பயிற்சிகள் இருந்திருக்கின்றன என்பது 20 ஆண்டுகால என் அனுபவ முடிவு.
பாடத்திட்டம்
Update செய்யப்படுவது அறிவியல் பாடங்களைத் தவிர்த்து இதர மொழி மற்றும் வரலாறு உள்ளிட்ட
கலைப்பாடங்களின் நிலை மிகவும் மோசம் என்பதையே சமீபத்தில் எழுந்த பல முரண்பாடுகள் நிருபிக்கின்றன.
மேலும் இவ்வளவு சுமையான பாடத்திட்டம் யாரைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்படுகிறது, இப்பாடத்திட்டம்
யாரையெல்லாம் விலக்கி அந்நியப்படுத்துகிறது
என்பது தனியே விரிவாக விவாதிக்கப்படவேண்டிய
ஒன்று.
திருவாரூர்
மாவட்டம் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் கடைசி இடத்தில் இருப்பதாக பட்டியலிடப்படுகிறது.
கன்னியாகுமரி, நாமக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களையும் திருவாரூரையும் எப்படி ஒன்றாகப்
பார்க்கமுடியும் என்பது ஒருபுறமிருக்க இம்மாதிரியான தர வரிசைப் படுத்தும் முயற்சிகள்
மிக மோசமானவை.
இதன் பிறகு இங்கு என்ன நடக்கிறது? மிகவும் பின்தங்கிய
மாநிலமான பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள், நிதியதவி செய்வதுபோல் மிகவும் பின்தங்கிய
மாவட்டமான திருவாரூக்கு ஏதேனும் சிறப்புத் திட்டங்கள், கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற
எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் தனியார் பள்ளி ‘ரோல் மாடலை’ப் பின்பற்ற அரசுப்பள்ளிகள்
கட்டாயப்படுத்தப்படுகின்றன. 9 மற்றும் 12 வகுப்புப் பாடங்கள் வேண்டாம் என்கிற நிலைப்பாடு
இங்கு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
வேறெந்த மாவட்டத்தைக் காட்டிலும் தலித்கள் அடர்த்தியாக
வசிக்கக் கூடிய மாவட்டம் இது. எனவே இங்குள்ள அரசுப்பள்ளிகள் பெயரளவில் மட்டுமே அரசுப்பள்ளிகள்;
உண்மையில் இவை அனைத்தும் ஆதிதிராவிட நலத்துறைப் பள்ளிகள்தான். இங்கு பயிலும் தலித்
மாணவர்களின் எண்ணிக்கை இதனை உணர்த்தும். இவர்களுடன் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட
ஏழை விவசாயக் கூலிகளின் குழந்தைகளும் கல்வி பயிலுகின்றனர். இங்குள்ள ஆசிரியர்கள், அரசு
ஊழியர்கள், நில உடைமையாளர்கள், வணிகர்கள் ஆகிய நடுத்தர வர்க்கம் அரசுப்பள்ளிகளை முற்றாகப்
புறக்கணிக்கிறது.
இங்கு சாதியமும் வர்க்கமும் உள்ளீடாகச் செயல்படுகிறது.
அரசுப்பள்ளிகளைப் புறக்கணித்தல் என்பது நவீன தீண்டாமையே. முன்னெப்போதையும்விட தற்போது
சாதிக்கட்டுமானம் மேலும் இறுகிப் போயுள்ளது. தேநீர்க் குவளையை தலித்தோடு பகிர்ந்துகொள்ளாத
இந்த சமூகம் கல்விக்கூடத்தைக்கூட பகிர்ந்துகொள்ள மறுக்கிறது. இத்தகைய கொடுமைகளை மாற்ற
நமது கல்வியமைப்பு என்ன செய்திருக்கிறது? எனக்கேட்டால் வெறுமையே மிஞ்சுகிறது.
நாடு விடுதலையடைந்து 68 ஆண்டுகள் கடந்தபோதும் முதல்
தலைமுறைப் படிப்பாளிகளாக இன்றைய அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளனர். இதனை மாற்ற நமது அரசுகள்
ஏதேனும் செய்திருக்கின்றனவா? நாட்டு விடுதலையின் 62 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம் இன்று அமலிலேயே இல்லை என்று
கூட சொல்லலாம். அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக்
கல்வி இயக்கம் (RMSA) போன்றவற்றால் சொல்லிக் கொள்ளத்தக்க முன்னேற்றம் இல்லை. இதில்
கூறப்படும் முன்னேற்றங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமே. உண்மையில் 6 – 14 வயதெல்லைக்
குழந்தைகளை இன்னும் பள்ளி முழுமையாக சென்றடையவில்லை.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க இத்தகைய கூறுகள் பலவற்றை
நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதற்கு இன்னும் வெளிப்படையான, விரிவான விவாதங்கள் அவசியம்
என்றே கருதுகிறேன்.
(பின்னிணைப்பாக “அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்; கல்வியில் தனியார்மயக் கொள்கையை ஒழிப்போம்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.)
நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்
:
1. தமிழ்நாட்டில்
உள்ள
அனைத்துப் பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி
முறை
நடைமுறைப்படுதப்பட்டுள்ளது. எனவே
தமிழக
அரசு
காலம்
தாழ்த்தாமல் இக்கல்வியாண்டிலேயே 10 ஆம்
வகுப்புக்கும் முப்பருவக்கல்வி முறையை
நடைமுறைப் படுத்தவேண்டும்.
2. இன்று பெரும்பான்மையான ஏழை
மாணவர்கள் அரசுப்
பள்ளியில் படித்து வருகிறார்கள். அரசுப்பள்ளிகளில் +1 மற்றும் +2 பாடங்களை உரிய
வகுப்புகளில் மட்டும் படித்து தேர்வு
எழுதுகிறார்கள். ஆனால்
தனியார் பள்ளி
மாணவர்களோ +2 பாடத்தை +1 வகுப்பில் இருந்தே படிப்பதால் +2 பொதுத்தேர்வில் அரசுப்
பள்ளி
மாணவர்களைக் காட்டிலும் அதிக
மதிப்பெண் பெறுகிறார்கள். இதன்
காரணமாக மருத்துவம், வேளாண்மை, பொறியியல் போன்ற
உயர்
கல்விச் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் படித்த
ஏழை
மாணவர்கள் தங்களது வாய்ப்பை பல
ஆண்டுகளாக இழந்துவருகிறார்கள். தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் குறுக்குவழியில் மதிப்பெண் பெறவைக்கும் முறைகேடுகளைத் தடுப்பதற்கு தமிழக
அரசின்
கல்வித்துறை உடனடி
நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. நடப்புக் கல்வி ஆண்டிலேயே +1, வகுப்புக்கும்
வரும் கல்வியாண்டில் +2 வகுப்புக்கும் பருவத் தேர்வு
(semester exam. system) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
4. தமிழ்நாட்டில்
உள்ள
அனைத்து தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த புதிய
சட்டம்
கொண்டுவருவதற்கு ஓர்
உயர்நிலைக்குழு அமைக்க
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக
அரசின்
பள்ளிக் கல்வித்துறை சென்னை
உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் பதில்தெரிவித்துள்ளது. தமிழக அரசு
இயற்றும் புதிய
சட்டம் கல்வியில் ஏற்பட்டுள்ள
ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க வழி வகுக்கும் சட்டமாகவும் பொதுப்பள்ளி மற்றும் அருகமைப் பள்ளி
அமைப்பு முறையில் அனைவருக்கும் கட்டணமில்லாமல் தாய்மொழிவழியிலான கல்வியை வழங்க வகை
செய்யும் சட்டமாக அமையவேண்டும்.
5. இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஐ.ஐ.டி,
ஐ.ஐ.எம், மற்றும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட அனைத்து
மாநில மொழிகளிலும் நடத்தவேண்டும்.
6. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்
நியமனங்கள், பொது மாறுதல்கள் அனைத்தையும் கல்வியாண்டு தொடங்கும் முன்பாக
ஆண்டுதோறும் நடத்தி முடிக்கவேண்டும். (நன்றி: சு.மூர்த்தி)
7.
கல்வி தனியார்மயமாக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
8. அரசு
உதவிபெறும் பள்ளிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.
9.
கல்விக்காக செயல்படும் ஆர்வலர்கள் கொண்ட குழுவை மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும்.
10.
ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
11.
மாவட்டந்தோறும் முன்மாதிரி அரசுப்பள்ளிகளை அடையாளம் காணவேண்டும். (நன்றி: செ.மணிமாறன்)
என்பது
உள்ளிட்ட 13 தீர்மானங்கள் கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்டன.
எனது
சில கட்டுரைகளுக்கான சுட்டிகள் (links)
தேர்வில் காப்பியடிக்கும் கலாச்சாரம் : யார் காரணம்? என்ன செய்யலாம்?
http://musivagurunathan.blogspot.in/2012/04/blog-post_9893.html
ஆசிரியர்கள் மாறவேண்டிய நேரம்…
http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_22.html
ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!
http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html
ஆசிரியர்களே! கல்விக்காகவும் சமூகத்திற்காகவும் போராடுங்கள்!
http://musivagurunathan.blogspot.in/2015/03/blog-post_7.html
தமிழகப் பள்ளிகள்
திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…
தமிழ்வழிக் கல்வியை
என்ன செய்வது?
பள்ளிகளில் இந்துமத
அடிப்படைவாத பரப்புரை
மேனிலைக்கல்வியில் புறக்கணிக்கப்படும் கலைப்பாடங்கள்
கானல் நீரான கல்வி
உரிமை
சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்தது சரியா?
‘சமச்சீர் கல்வி’
பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது?
கல்வி
உரிமைச் சட்டம்: என்ன செய்யப் போகிறது
?
நமது கல்விமுறை எங்கே
செல்கிறது?
ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பியர்
புட்டிகள் விற்கும் அரசு டாஸ்மாக் கடைகள்
பொதுத்தேர்வுகளை ஒழித்தால் ஒன்றும் குடி மூழ்கிப்போய்விடாது!
இவ்வளவு பிழைகளா, நம் பள்ளிப் பாடநூல்களில்?
பிழைகள்
நிறைந்த பள்ளிப் பாடநூற்கள்
பிழைகள் நிறைந்த பள்ளிப் பாடநூற்கள் (விரிவான கட்டுரை)
http://musivagurunathan.blogspot.in/2015/02/blog-post_66.html
தமிழில் கல்வியியல் சிந்தனைகள் / ஆய்வுகள் / விமர்சனங்கள்.
செயல்வழிக் கல்வி, படைப்பாற்றல் கல்வி
ஆகியன மாற்றுக்கல்வியாக பரிணமிக்காதது ஏன்?
இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையை முன்னகர்த்திய தலைவர்
http://musivagurunathan.blogspot.in/2011/12/blog-post.html
3 கருத்துகள்:
மதிப்பிற்குரிய திரு மு.சிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதிவு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அதைத் தொடர்ந்து தங்களின் பல பதிவுகளையும் பார்த்தேன். அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்பது ஏழை இந்தியாவைப்பாதுகாப்பதே ஆகும். எதிர்கால இந்தியா நலமுடன் இருக்க அரசுப்பள்ளிகளே அடிப்படையாக இருக்கமுடியும். இதுபற்றி நானும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். என் வலைப்பக்கத்தில் பார்க்க வேண்டுகிறேன்.
மூலக் கட்டுரையைப் படிக்க...
http://valarumkavithai.blogspot.com/2013/06/blog-post_9.html
தங்கள் முகவரியைத் தந்தால் எனது நூலை அனுப்பிவைக்க விரும்புகிறேன். எனது செல்பேசி எண்-9443193293 வணக்கம்.
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழர். தங்களது வலைப்பக்கத்தைப் பார்த்தேன். மீண்டும் நன்றிகள்.. தோழமையுடன்.... மு.சிவகுருநாதன்
கருத்துரையிடுக