முப்பது பிரியத்திற்குரிய பிள்ளைகளை வளர்க்கும் படைப்பாளி
- மு.சிவகுருநாதன்
பாப்லோ அறிவுக்குயில் |
பாப்லோ அறிவுக்குயில் எனது நீண்ட கால நண்பர்;
கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர் என்னும் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியாக மிளிரும்
தோழர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கருவிடச்சேரி கிராமத்தில் வசிக்கும் இந்த விளிம்பு
நிலை தலித் படைப்பாளியின் இயற்பெயர் வீ.அறிவழகன்; பிறந்த ஊர் அதே மாவட்டம் உடையார்பாளையம்
வட்டம் வெண்மான்கொண்டான் கிராமம். இவரது அப்பா திரு சா.வீராசாமி ராணுவத்தில் பணிபுரிந்தவர்.
தொடக்கத்தில்
கவிதைகள் எழுதினாலும் தமிழில் தலித் இலக்கியம் வீறுகொண்டெழுந்த 1990 களில் தமது சிறுகதைகள்
மூலம் பெரிதும் பேசப்பட்டவர். பேரா. அ.மார்க்ஸ், விடியல் சிவா போன்றோரின் பெரும் முயற்சியால்
விளிம்பு டிரஸ்ட்டின் முதல் வெளியீடாக இவரது முதல் சிறுகதைத் தொகுதியான ‘கிளுக்கி’
(1995) வெளிவந்தது. முதல் தொகுப்பிலேயே பரவலாக அறியப்பட்ட பாப்லோ பின்னாளில் ஏனோ அதிகம்
எழுதவில்லை. பாப்லோவின் தொடக்க கால கவிதைகள் எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. இவரது
கவித்துவம் மிக்க சிறுகதை தலைப்புக்களைப் பார்க்கும்போது கவிதை எழுதுவதை ஏன் நிறுத்தினீர்கள்
எனக் கேட்கத் தோன்றுகிறது.
அவரைப் பார்க்கின்ற சமயங்களில் தொடர்ந்து எழுதுவது
குறித்து வற்புறுத்தியது உண்டு. ஓரளவு வருமானம் கிடைத்து வந்த ஆயுள் காப்பிட்டு முகவர்
பணியை விருப்பமின்மையாலும் இலக்கியத் தேடலாலும் துறந்தவர். அதன் பிறகு நிரந்தர பணி,
வருமானமின்றி தேசாந்திரியான வாழ்வை விருப்பமுடன் தேர்வு செய்தவர். இந்த நிலைமை இவரை
எழுத்திலிருந்து கொஞ்சம் விலக்கி வைத்துவிட்டது.
இவரது எழுத்தை வெளியிடுவதாகச் சொன்ன சிறிய பதிப்பகங்கள்
ஆண்டுகளைக் கடத்தியதும் இருப்பை மறைக்கப் போதுமானதாக இருந்தது. பொதுவாக நூற்களைத் தொடர்ந்து
வெளியிடாத படைப்பாளிகளை இலக்கிய உலகம் மறந்து விடுகிறது. இருப்பினும் காலச்சுவடு போன்ற
பாசிசக் கும்பல்களிடம் சரண்டையாத இவரது கொள்கைப்பிடிப்பு பாராட்டிற்குரியது. வெற்றிலைப்
பாக்கு கறையேறிய பற்களுடன் கள்ளம் கபடமற்ற எளிய கிராமத்து மனிதராய் இன்றும் காட்சியளிப்பது
இவரது தனித்துவம்.
வாழ்வுச் சிக்கல்கள் பலவற்றை எதிர்கொள்ள நேர்ந்தபோதும்
விட்டுவிட்டு தனது எழுத்துப்பணியைத் தொடர்ந்து
வருகிறார். இதுவரையில் சுமார் 75 சிறுகதைகள் அளவிற்கு எழுதியுள்ளார். இவை ஐந்து தொகுதிகளாக
பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. அமைப்புப் பின்புலம், பதிப்பக வசதி, கொள்கை போன்ற பல்வேறு காரணங்களால் இவரது எழுத்துக்கள் இன்னும்
சரியாகக் கண்டுகொள்ளப்படவில்லை. கவிஞர், பேராசிரியர் அரச முருகு பாண்டியன் தனது ‘போதி’
அமைப்பு சார்பாக இவரது படைப்புகள் குறித்த ஆய்வரங்கம் ஒன்றை நடத்தினார்.
‘கிளுக்கி’ இரண்டாவது பதிப்பை நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் வெளியிட்டுள்ளது. ‘வெயில் மேயும் தெருவில்…’ (2003) தொகுப்பை வைகறையின் ‘பொன்னி’
வெளியிட்டது. ‘குதிரில் உறங்கும் இருள்’ தொகுப்பை எழுத்தாளர் திலகவதியின் ‘அம்ருதா’
பதிப்பகம் 2006 இல் வெளியிட்டது. ‘பாப்லோ அறிவுக்குயில்
சிறுகதைகள்’ (2009) என்றொரு தொகுப்பு அறிவுப்
பதிப்பகத்தால் (NCBH) வெளியிடப்பட்டிருக்கிறது. 2010 இல் ‘இருள் தின்னி’ என்கிற தொகுப்பு
‘பாலம்’ அமைப்பால் வெளியானது. இந்நூல் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கலைப் பண்பாட்டுப்
பிரிவில் 2009 ஆம் ஆண்டுக்கான பரிசு பெற்றது. இந்த ஆண்டு (2015) சென்னைப் புத்தகக் காட்சியில்
இவருடைய முதல் நாவலான ‘தமுரு’ வை பொள்ளாச்சி எதிர் வெளியீடு கொண்டுவந்துள்ளது.
இவரது துணைவியார் செல்லம் அரசுப்பள்ளி ஆசிரியை.
இவர்கள் இருவரும் 30 க்கும் மேற்பட்ட நாய்ப்
பிள்ளைகளுடன் கீழப்பழுவூர் கருவிடச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்கள். பாப்லோவின்
அன்புத்துணைவியார் பிள்ளைகளை ‘நாய்’ என்று யாரேனும் விளித்தால் சண்டைக்கு வந்துவிடுவார்
என ஒருமுறை கூறியிருக்கிறார். பாப்லோவும் அவரது துணைவியாரும் பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.
எனவே நானும் அவ்வாறே பயன்படுத்துகிறேன். புரிதலுக்காக சில இடங்களில் ‘அந்த’ வார்த்தையைப்
பயன்படுத்தியிருக்கிறேன். அம்மா என்னை மன்னிப்பாராக!
அண்மையில் பாப்லோவை நேரில் சந்தித்தபோது மீண்டும்
முழுவீச்சில் எழுத்துப்பணியைத் தொடரப்போவதாகச் சொல்லியிருக்கிறார். மேலும் இவ்வாண்டு
ஆனந்த விகடன் வார இதழ், அந்தி மழை மாத இதழ், பேசும் புதிய சக்தி மாத இதழ் (திருவாரூர்)
போன்றவற்றில் சிறுகதைகள் வெளியாகியுள்ளது.
எதிர் வெளியீடாக வந்துள்ள இவரது முதல் நாவல் ‘தமுரு’
1997 இல் எழுதப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி
தற்போதுதான் அச்சேறியிருக்கிறது. மே 30 (2015)
கீழ்வேளூர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள திருவாரூர் வந்த பாப்லோவை
வெளியூரில் இருந்ததால் என்னால் சந்திக்க இயலவில்லை. அவர் கொண்டு வந்திருந்த ‘தமுரு’
நாவலை ஆசிரியர் செ.மணிமாறன் பெற்றுக்கொண்டார். அவர் மே மாதம் தொடங்கி பல நாட்கள் கல்வி
தொடர்பான பயிற்சிகள், பயிலரங்குகள் என பயணத்தில் இருந்தார். அவரைப் பார்த்து நாவலை
வாங்க பல வாரங்கள் ஆகிவிட்டது. எனவே நாவல் என் கைக்கு வந்து சில நாட்கள்தான் ஆகிறது.
நாவல் குறித்த விமர்சனத்தை வேறொரு நேரத்தில் பார்க்கலாம்.
விட்டேத்தியாக அலைந்து திரிவது, ஊர் சுற்றுவது,
எப்போதாவது கொஞ்சம் எழுதுவது என நிணயிக்கப்படாத எல்லைகளுக்கு அப்பால் இயங்கிவரும் நண்பர்
பாப்லோ, எழுத்தைவிட பிள்ளைகளைப் பராமரிப்பதிலேயே அதிக நேரம் செலவிடக்கூடியவராக இருக்கிறார்.
இவ்வளவு பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஓர் தெருவில்
பலருடன் வசிப்பது எப்படி சாத்தியம்? எனவே ஊருக்கு ஒதுக்குப் புறமான குடியிருப்புகளற்ற
இடத்தை வாங்கி வீடமைத்து பிள்ளைகளை வளர்க்கிறார்கள். அவ்வீட்டுக்கு சாலை வசதி இல்லை.
எனவே மின்னிணைப்பு வாங்க 6 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள். எல்லாம் பிள்ளைகளுக்காக.
2004 லிருந்து 2010 வரை சிம்னி விளக்குகளுடன்தான்
அவரது இரவுகள், படிப்பு, எழுத்து எல்லாம் கழிந்திருக்கிறது. பிள்ளைகளை வளர்க்க
வேண்டுமென்றால் சிரமப்பட்டுதானே ஆகவேண்டும்? வேறு என்ன செய்வது?
பல ஆண்டுகளுக்கு
முன்பு இதே போன்று நாய்களை வளர்த்துக்கொண்டு திருமணம் கூட செய்துகொள்ளாமல் இருக்கும்
இளம்பெண் ஒருவர் குறித்த செய்தி படத்துடன் வார இதழ் ஒன்றில் வெளியானது. கடந்த மாதத்தில்
(ஜூன் 2015) திருச்சி கல்கண்டார்கோட்டை இளைஞர் நாய்களுக்கு பிஸ்கட், உணவு வழங்குவதேயே
தந்து முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளதை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் பதிவு செய்திருந்தது.
ஆனால் நம்ம பாப்லோ தம்பதிகள் 30 க்கும் மேற்பட்ட
பிள்ளைகளை வளர்ப்பது அவரது நணபர்கள் வட்டத்தைத் தாண்டி யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மேனகா காந்தி, அமலா, திரிஷா ஆகியோர் செய்திருந்தால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும். ஆனால் பாப்லோ
தம்பதிகள் வளர்ப்பது நாய்களல்லவே; இவைகள் பாசத்துக்குரிய பிள்ளைகள்.
மின்வசதி
இல்லாமல் இருட்டில் வாழ்ந்த நாட்களில் கூட என்னை அவர் வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.
செல்ல விருப்பமே; ஆனால் வாய்ப்பு அமையவில்லை. இருப்பினும் இன்னும் உள்ளூர பயம் இருக்கிறது.
சென்ற ஆண்டு (2014) ஏதோ ஓர் மோசமான தருணத்தில் ஒன்று அவரை கடுமையாக கடித்துவிட்டது.
அதைக் கேள்விபட்ட பிறகு பயம் இன்னும் அதிகமாகிவிட்டது.
இவரது இயற்பெயரைத் தன்னுடைய இயற்பெயராகவும் கொண்ட மற்றொரு பிரபல எழுத்தாள நண்பர் சாரு நிவேதிதாவும்
நாய் வளர்ப்பு, அதன் சிறப்புக்கள், அயலாரின் முகச்சுழிப்பு ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளார்.
ஆனால் அவர் வளர்ப்பதோ வெளிநாட்டு இனம்; பாப்லோ பராமரிப்பது கவனிக்க ஆளின்றித் தெருவில்
திரியும் உள்நாட்டுப் பிள்ளைகள்.
துணைவியார் பள்ளிக்குச் சென்ற பிறகும் வீட்டில்
இல்லாத சமயங்களிலும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதே முழுநேரத் தொழிலாக உள்ளது. கடந்த
மே மாதத்தில் போன் செய்தபோது, “அம்மா வீட்ல இல்ல. (துணைவியை இப்படித்தான் சொல்வார்) பிள்ளைங்க பட்டினியா இருக்கும். நா போய் சோறாக்கிப்
போடணும். அப்புறம் பேசுறேன்” ன்னு சொல்லி வச்சுட்டார்.
பாப்லோ அறிவுக்குயில் இரு பிள்ளைகளுடன்... |
அவரது வீட்டு
முகவரியில் ஜேக்கப் – சீசர் இல்லம் என்றிருக்கும். ஒருமுறை இது யாருடைய பெயர்
என்று கேட்டேன். அவை நாங்கள் வளர்த்தப் பிள்ளைகள் என்றார். “ஜேக்கப் துணைவியார் வளர்த்தது;
அவன் இறந்து விட்டான்” என்று சொல்லும்போது அவரது குரல் உடைகிறது. சீசர் இன்றும் எங்களுடன்
இருக்கிறான்.
பிள்ளைகளின் பெயர்களைக் கேட்டபோது, பீமா, செங்கிஸ்கான், அட்லஸ், ஹெர்க்குலிஸ்,
டயானா, எலிசபெத், ராணி, புருஸ்லி எனப் பட்டியலிட்டார். நானும் விடவில்லை. ஏன் பிள்ளைகளுக்கு
தமிழில் வைப்பதில்லை என்றேன். ஏன் இல்லை என எதிர்க்கேள்வி கேட்ட பாப்லோ, குறிஞ்சி, முல்லை, வள்ளி, கருப்பி,
வெள்ளச்சி, பூவாயி, திலோத்தி என்று அடுக்கிக் கொண்டே போனார். என்னால் அனைத்தையும் நினைவில்
வைத்துக்கொள்ள முடியவில்லை. நினைவில் உள்ளதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். இரண்டு
நிமிடப் பேச்சில்கூட அவரது பிள்ளைகளைப் பற்றி ஏதேனும் ஓர் சொல்லாவது இருக்கும்.
சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன். மிகவும் உடைந்த
குரலில் பேசினார். அப்போது அடுத்தடுத்து சில பிள்ளைகள் மாண்டு போயிருந்தன. ஒருமுறை
அவர் கடிபட்டபோதும், “தப்பு என்மீதுதான். போதையில் இருந்ததால் அவ்வாறு நடந்துவிட்டது”
எனச் சமாதானம் சொன்னாரே தவிர பிள்ளைகள் மீதும் பழி சொன்னதில்லை.
முழுநேரமும் தந்து பிள்ளைகள் பற்றிய சிந்தனையில்
இருப்பவரது படைப்புக்களில் இது எதிரொளிக்காமல் இருக்குமா என்ன? ‘சஞ்சாரம்’ இரண்டாவது
இதழுக்காக ஓர் சிறுகதை அனுப்பியிருந்தார். அது பிள்ளைகள் பற்றிய கதை. சஞ்சாரம் 2 வது
இதழ் வெளிவரவேயில்லை. பிறகு அக்கதை வேறொரு இதழில் வெளியானதாக நினைவு.
பேசும் புதிய சக்தி மாத இதழில் (ஜூன் 2015) வெளியான கதை இறுதிக்கட்ட ஈழப்போர் பற்றிய கனவுக்கதை
‘குரல்கள் உதிர்ந்த நிலம்’. அதில்கூட பிள்ளைகளைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை.
‘தமுரு’ நாவலிலும் அவரது பிள்ளைகளுக்கு நிறைய இடம் இருக்கிறது. தொடர்ந்து இவ்வாறு செய்வது
சலிப்பூட்டுகிறது எனக் கண்டித்துமிருக்கிறேன். ஆனால் என்ன செய்வது? அவரது உலகம்; பிள்ளைகளின்
உலகம். விரைவில் அவர் தனது 100 வது சிறுகதையையும் இரண்டாவது நாவலையும் எழுதி முடிக்க
வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக