சனி, மார்ச் 19, 2016

அடையாள அரசியல் ஒழிக்கப்படவேண்டும்


அடையாள அரசியல்  ஒழிக்கப்படவேண்டும்


மு.சிவகுருநாதன்


(‘கூலிப்படை’ குறித்த விமர்சனத்திற்கான எனது எதிர்வினை.)


 

                அன்பு நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு, வணக்கம். நான் பொதுவாக வாட்ஸ் அப் ஆடியோ, வீடியோக்களில் கவனம் செலுத்துவதில்லை. நண்பர் சொல்லியதன் பேரில் உங்கள் ஆடியோவைக் கேட்டேன். நன்றி.


    பொதுவெளியில் இதற்கு மேல் விவாதம் வேண்டாம் என்று நீங்களாகவே முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாலும் என் பதிலைச் சொல்லவேண்டியதும், விளக்க வேண்டியதும் இங்கு அவசியமாகிறது. நீங்கள் இந்து மதப் பெருமை பற்றிய பதிவுகள் இடும்போது எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன்.


    இன்று நாட்டிலுள்ள பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணமாக இருப்பது அடையாள அரசியலே. இதனை நான் வெறுக்கிறேன். சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பல்வேறு அடையாளங்கள் அடிப்படையில் இங்கு கட்டமைக்கப்படுகிற அரசியல் வெறுப்பை வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகிறது.  அரசு ஊழியன், ஆசிரியன், போலீஸ் என்பதெல்லாம் அடையாள அரசியலின் ஓர் நீட்சிதான்.


    நான் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களைக் கடுமையாக விமர்சனம் செய்தே பல பதிவுகளை இட்டுள்ளேன். மாணவிகளுடன் தவறாக நடந்துகொண்ட, பாலியல் வன்கொடுமைகள் செய்த ஆசிரியர்களை ஆதாரித்தோ, நியாயப்படுத்தியோ நான் எவ்வித பதிவை இட்டதில்லை.


    ஆசிரியன் என்பதால் எந்தக்கருத்தையும் சொல்லக்கூடாது என்பதில்லை. யார் செய்தாலும் தவற்றைக் கண்டிக்கவே செய்வேன். ஆசிரியர்களைப் பற்றிய பல கண்டனப்பதிவுகளைச் செய்திருக்கிறேன். நீங்கள் சொல்லியபடி வருங்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இம்மாதிரியானக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆசிரியர்கள், காவல்துறையினர் ஆகியோர் மனித, குழந்தை உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல; தண்டனை அளிக்கவேண்டிய குற்றங்கள்.
 

    எனக்கு உங்களது ஒப்பீடுகளில் விருப்பமில்லை. இருப்பினும் உங்களுக்காக ஓர் ஒப்பீடு.  தவறு செய்த ஆசிரியர்கள் தப்பியதில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட என்கவுண்டரை கொலை வழக்காகப் பதிவு செய்து இ.த.ச. 302 இன்படி வழக்கு தொடருவதில்லை. நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகே இது சில வழக்குகளில் நடக்கிறது.


    விவசாயி பாலனின் டிராக்டர் ஜப்தி செய்யப்பட்டது என்று கூறியுள்ளீர்கள். அதற்கான நீதிமன்ற உத்தரவு இருக்கிறதா? இருந்தால் டிராக்டரை உடன் திரும்ப ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?  கோட்டக் மஹிந்திரா வங்கியின் கடன் வசூல் கூலிப்படையுடன் தமிழக போலிஸார் இணைந்து செயல்படவேண்டிய தேவை என்ன? நீதிமன்ற உத்தரவுப்படி என்று வைத்துக்கொண்டாலும் வன்முறையைப் பிரயோகிக்க சட்டத்தில் இடமில்லை.


    சென்ற வாரம் கண்ணகி நகர் 17 வயது சிறுவன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை யாரல் நடத்தப்பட்டது? தொலைக்காடசி விவாதத்தில் சித்தண்ணன் என்ற முன்னாள் போலிஸ் அதிகாரி அச்சிறுவனை இளைஞன் என்கிறார். மேலும் அவரது அண்ணன் மீது திருட்டு வழக்கு உள்ளது என்கிறார். அண்ணன் மீது வழக்கு இருந்தால் தம்பியை உயிர் போகுமளவிற்கு தாக்கி காதை செவிடாக்கிய காவல்துறையினருக்கு என்ன பெயர் வைப்பது?


     இதுவரையில் ஆயிரக்கணக்கான லாக்கப் சாவுகள், சட்டவிரோதக் காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கிறதே. இவற்றிற்கு யார் பொறுப்பு? சில ஆண்டுகளுக்கு திருத்துறைப்பூண்டி, நாகூரில் கூட லாக்கப் மரணம் நிகழ்ந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சிறுவனின் வாயில் துப்பாக்கியை வைத்துச் சுட்ட நிகழ்வுகளை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.


   காவல் நிலையங்களில் போலீஸாரால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் எவ்வளவு நடந்திருக்கின்றன? காவல்துறையின் கண்களுக்கு சிறுவர்களும் பெண்களும் தீவிரவாதிகளாகத் தெரிவதேன்?


    வடகிழக்கும் மாநிலங்களில் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தில் மூலம் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் எவ்வளவு என்று தெரியுமா? இந்திய ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்த, இன்னும் செய்கின்ற அட்டூழியங்களை எழுத்தில் வடிக்க முடியுமா? மணிப்பூரில் பெண் கவிஞர் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார் அல்லவா? மணிப்பூரில் இர்ரோன் ஷர்மிளா ஏன் இன்னும் உண்ணாவிரதம் இருக்கிறார்?


   “INDAIAN ARMY RAPE US”  என்கிற பதாகைகளுடன் ராணுவ முகாம் முன்பு பெண்கள் நடத்திய நிர்வாணப் போராட்டம் அனைவர் கண்ணிலும் ரத்தத்தை வரவைக்கும். ஆப்பிரிக்க நாடான் காங்கோவிற்கு சென்ற அய்.நா. அமைதிப்படையைச் சேர்ந்த இந்திய வீரர்களின் அட்டூழியங்கள் உலகப் பிரசித்தம்.


  மாவோயிஸ்ட்கள் என்று சொல்லி பழங்குடி மக்களை வனத்திலிருந்து விரட்டியடித்து டாடா, வேதாந்தா, அம்பானி, ஸ்டெர்லைட் என்ற பலருக்கு தாரை வார்க்கும் கூலிப்படை வேலை துணை ராணுவப்படைகளும் அம்மாநில காவல்துறையும் செய்து வருவது ஒன்றும் நான் சொல்லும் புதிய விஷயமல்ல. பல்வேறு ஊடகங்கள் பல்லாண்டுகளாக எழுதிவரும் செய்திகள்தான் இவை.


   மத்திய அரசு ராணுவத்தையும் மாநில அரசு காவல்துறையும் மட்டும் வைத்துக்கொண்டு, எஞ்சியவற்றை தனியாரிடம் விடுவதுதானே 1990 களுக்குப் பிறகு அரசின் கொள்கை. இவர்கள் யாருக்கு சேவகம் செய்கிறார்கள் என்பது வெளிப்படையானது.


   காவல்துறையில் நல்லவர்கள் இருக்கலாம். அதனாலே மேலே சொல்லப்பட்டவை குற்றங்கள் இல்லை என்றாகிவிடுமா? சகாயத்திற்கு அரசு வழங்கிய மதிப்பெண் உங்களுக்குத் தெரியுந்தானே! இதுதான் நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும் கிடைக்கும். ஒரிருவர் சரியாக இருந்து அமைப்பைத் திருத்த இயலாது.


    ஆசிரியர், காவல் அதிகாரி யாராக இருந்தாலும் தவறு நடந்தால் அது சமூகக் குற்றம்; சமூக அவலம். இது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாதிக்கவே செய்யும்?


   தமிழக முதல்வராக முழு அரசு மரியாதைகளுடன் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் சென்று கைதாகி சிறைக்குச் சென்ற ஜெ.ஜெயலலிதாவுடன் தமிழகமே சிறைக்குச் சென்றதாகவே நான் பொருள் கொள்கிறேன். இதற்கு தமிழ்நாடே  வெட்கி தலைகுனியவேண்டும். மூன்று நாட்கள் இங்கு முடங்கிப்போன அரசமைப்பு மற்றொரு அவலம். முதல்வர் பதவியிலிருந்து விலகி வழக்கை எதிர்கொண்டால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் போலிஸ், ஆசிரியர் என யார் குற்றமிழைக்கும் போதும் இந்த சமூகமே தலைக்குனிவிற்கு உள்ளாகிறது. பிரதமரோ, குடியரசுத் தலைவரோ காஞ்சி சங்கராச்சாரி காலில் விழுவது, இந்தியாவே விழுவதாகத்தான் அர்த்தம்.


    அரசு எந்திரம் இவ்வாறு கூலிப்படையாக மாறுவது ஜனநாயகத்தை அழிக்கும். மனித உரிமைகளை சிதைக்கும். நான் மிகவும் நேசிக்கும் இடதுசாரிகளின் காவல்துறை  மேற்கு வங்காளம் நந்திகிராம் மற்றும் சிங்கூரில் டாடா போன்ற பெருமுதலாளிகளுக்கு  ஆதரவான கூலிப்படையாகவே செயல்பட்டது என்பதையும் இங்கு கூறுவதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அரசு, அரசு எந்திரம் மக்களுக்காகவே செயல்படவேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதனை ஒட்டிய எனது பதிவுகள், கருத்துகள் இருக்கின்றன.

வெள்ளி, மார்ச் 18, 2016

39. பவுத்தத்தை விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்


39. பவுத்தத்தை  விழுங்கி அழித்தொழித்த இந்துத்துவம்

(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

மு.சிவகுருநாதன்
நூலட்டை


  (பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை வெளியீடாக 06, டிசம்பர், 2007 இல்  வந்த டாக்டர் சுரேந்திர அஜ்நாத் எழுதி, வழக்கறிஞர் சு.சத்தியச் சந்திரன் மொழிபெயர்த்த ‘புத்தர் ஓர் இந்துவா?’ என்ற குறுநூல் குறித்த பதிவு.)

    பொதுவாகக் குறுநூல்களுக்கென்று பலமும் பலவீனமும் உண்டு. விலை குறைவு, சிறியது  போன்ற காரணங்களால் கனத்த நூல்களைவிட மிகப்பரவலான வாசிப்பை இவை பெறுகின்றன. நீண்டகாலங்களுக்குப் பிறகு இவை மறுபதிப்புள்ளாகி மீண்டும் வாசிக்கக் கிடைப்பதில் தடங்கல் இருக்கிறது. இருப்பினும் குறுநூல்களின் வீச்சைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

   அக்டோபர் 14, 2006 இல் நாக்பூர் ‘தீட்ஷா பூமி’க்கு பொன்விழா நிகழ்விற்குச் சென்று திரும்பிபோது நண்பர்கள் விவாதத்தில் உருவான ‘பவுத்த சமூகச் செயல்பாட்டுப் பேரவை’ பற்றி அதன் அமைப்பாளர் பெ.தமிழினியன் மதிப்புரையில் குறிப்பிடுகிறார். 
    ‘Was Buddha A Hindu?’ என்ற டாக்டர் சுரேந்திர அஜ்நாத் ஆங்கிலத்தில் எழுதிய குறுநூலை சு.சத்தியச் சந்திரன் தமிழில் மொழிபெயர்த்துள்ள இந்நூல் 2007 டிசம்பரில் வெளியானது.

  இந்து மதப் பார்ப்பனீயம் தனக்கு எதிராக வளர்ந்த பவுத்த, சமண மதங்களை அழிக்கப் புதிய வழிமுறையைக் கையாண்டது.  “புத்தரைத் திருமாலின் அவதாரம் என்று கூறிப் பவுத்த மதத்தை ‘இந்து மதத்தில்’ சேர்த்துக்கொண்டு பின்னர், காலப்போக்கில் அந்த மதத்தை அழித்துவிட்டதுபோல, சமண மதத்தையும் ‘இந்து’ மதத்தில் இணைத்துக்கொள்ள ‘இந்துக்கள்’ பண்டைக் காலத்தில் முயன்றனர். இதன் பொருட்டு, திருமால் சமண மதத்தைப் போதித்ததாகக் கதை கற்பித்துக் கொண்டனர்”, என்று மயிலை சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும் நூலில் குறிப்பிடுவார்.  

     அவைதீக மதங்களை  இந்து மதம் என்று விழுங்கியதும், அவற்றில் இந்து மதக்கருத்துகளை ஏற்றியதும் நடந்தது. (உ.ம்) மகாயானம். பவுத்த, சமண, ஆசீவக மதங்களிலிருந்து கடன் பெற்ற கருத்துகளை தமதாக சொந்தம் கொண்டாடியது ஒருபுறமிருக்க, அவற்றின் உள்ளே ஊடாடி அவற்றைக் கொன்று போட்டது வைதீக இந்துமதம்.

  புத்தரின் போதனைகள், பவுத்தக் கருத்தியல் கொண்டு புத்தர் ஓர் இந்து என்று முடிவு செய்கிற டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றோரின் தவறான வாதங்களை இந்நூலாசிரியர் டாக்டர் சுரேந்திர அஜ்நாத் ஆதாரத்துடன் மறுக்கிறார்.

    ‘இந்து ‘ என்ற பாரசீகச் சொல்லுக்கு திருடன், கொள்ளையன், வழிப்பறிக் கொள்ளையன் என்பதே பொருள். 19 ஆம் நூற்றாண்டில் ஆரிய சமாஜிகள் கூட இச்சொல்லை பயன்படுத்த விரும்பவில்லை. இந்து மதம், இந்துக்கள் குறித்து சமஸ்கிருதப் பிரதிகள், நவீன இந்துத் தலைவர்கள் அளிக்கும் வரையறைகள் குழப்பங்களும், முரண்பாடுகளும் நிரம்பியதாக இருப்பது இங்கு பட்டியலிட்டுக் காட்டப்படுகிறது. (பக். 12-14)

   “வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றிற்கு மரியாதை செலுத்துதல், ஒருவரின் சாதியக் கடைமைகளை நிறைவேற்றுதல், மறுபிறப்பில் நம்பிக்கை, ஆரியரல்லாதோரின் கொள்கைகளைப் பாவமெனக் கொள்ளுதல், ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் பின்பற்றுதல், கடவுள் மற்றும் கடவுளரின் உருவங்களையும் அவதாரங்களையும் வழிபடுதல் என்பது இந்துக் கலாச்சாரத்தின் அடைப்படையாகும்”, (பக். 15) என்பதைச் சுட்டி புத்தரை எப்படி ஓர் இந்துவாகக் கொள்ளமுடியாது என்பதை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.

    வேதங்கள் உள்பட தவறற்றவை ஒன்றும் இல்லை. எந்த ஒரு பொருளும் ஆய்விற்கும் மறு ஆய்விற்கும் உட்படுத்தப் படவேண்டும் என்று புத்தர் போதித்தார். பவுத்த அறிஞர் தர்மகீர்த்தி வேதங்கள் தவறற்றவை என்பது ஐந்து மடமைகளுள் ஒன்று எனக் குறிப்பிட்டார்.

   புத்தர் மாட்டிறைச்சி உண்ணுவதைத் தவறாகக் கருதவில்லை. உணவிற்காக விலங்குகள் கொல்லப்படுவதை புத்தர் தடை செய்யவில்லை. யாகங்கள் மற்றும் சடங்குகளில் கொல்வது என்கிற ஒரே நோக்கத்திற்காக பலியிடுவதை அவர் எதிர்த்தார்; தடை செய்தார். பசுவிற்கு பவுத்த மதத்தில் தனி அந்தஸ்து இல்லை.

   மனிதப் பிறப்பு பிரம்மாவால் நிகழவில்லை என்பதை, “பிராமணர்களின் மனைவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும், அவர்கள் கருவுற்றதாகவும், பிள்ளைகள்  பெற்றுக் கொண்டதாகவும், பாலூட்டியதாகவும் அறியப்படுகிறது. மற்ற எவரைப்போலவும் பிராமணர்களும் பெண்ணிடமிருந்து பிறந்தவர்களாக இருக்கும்போது அவர்கள் தாங்கள் பிரம்மாவிடமிருந்து பிறந்ததாக எப்படிக் கூறமுடியும்?”, (பக். 18) என்று வினா எழுப்பியவர் புத்தர்.

    நான்கு சாதிகளும் சமமானவையே என்று அறுதியிட்ட புத்தர் தனது சங்கத்தில் சுனிதா, நந்தா, குமாரி கசப்ப, சுமங்கல மாதா, சுபா, உபாலி என்று அனைத்து சாதியினரையும் உட்படுத்தினார்.
    ஆன்மா என்று ஒன்று இல்லை. அது இடம்பெயர்தல் என்பது முற்றான மூடநம்பிக்கை. இதை இரக்கத்திற்கிடமின்றி நிராகரிக்கவேண்டும், என்றார்.

    “கடவுள் நல்லவரென்றால் மனிதர்கள் கொலைகாரகளாகவும், திருடர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், வஞ்சக மனத்தினராகவும், தீய எண்ணமுடையவர்களாகவும், பிறழ்ந்த மனப் போக்கினராகவும் ஏன் உள்ளனர்”, (பக். 24) என்று கேள்வி எழுப்பி, “உலகைத் தவறுகளின் கூடாரமாக ஆக்கியுள்ள உங்கள் பிரம்மாவை நான் மிகவும் நியாயமற்றவர்களில் ஒருவனாகவே கருதுகிறேன்”, (பக். 25) என்று புத்தர் கறாராக சொல்வது இங்கு பதிவு செய்யப்படுகிறது.

   சிலை வழிபாட்டிற்கு பவுத்தத்தில் இடமில்லை. மேலும் பவுத்தத்தில் வழிபடுவதற்குரியவர் என்றோ, பிரார்த்தனை செய்து கொள்ளத்தக்கவர் என்றோ ஒருவரும் இல்லை. ஆனால் இந்து மதத்தில் 30 கோடி தேவர்களும் தேவதைகளும் வழிபடப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

  அவதாரம் என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘கடவுளின் வாரிசு’ என்று பொருள். இதன் அர்த்தம் கடவுள் பிறப்பெடுக்கிறார் என்பதே.  கிருஷ்ணன் தானே கடவுள் என்றும் கீதையை தனது வார்த்தை என்று கூறிக்கொள்கிறார். புத்தரோ தன்னை, கடவுள், கடவுளின் வாரிசு, அவதாரம், இறைத்தூதர், வழிகாட்டி, போதகர் என்று எந்த அடையாளங்களையும் சூடிக்கொள்ளவில்லை.

    புத்தர் வேதங்களை ஏற்க மறுக்கும் ஒரு நாத்திகவாதி என்பதால், திருடனுக்கு வழங்கப்படுவதைப் போன்ற தண்டனை வழங்கத்தக்கவர் என்று வால்மீகி ராமாயணம் கூறுவதும், பவுத்தர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும், பவுத்தரை ஒருவர் தொட நேர்ந்துவிட்டால் அவர் துணிகளை அணிந்தபடியே குளிக்க வேண்டும் என்று இந்து தர்ம சாத்திரங்கள் சொல்வதும் (பக். 30) எடுத்துக்காட்டப்படுகிறது.

    “உனக்கு நீயே விளக்கு‘ என்று சொன்ன புத்தர், தன்னை ததாகதர் (வழிப்போக்கர்) என்றே சொல்கிறார். இவ்வழியே வந்து இப்படியே போனவர்; அவ்வளவே. இவரை இந்துவாக்குவது கொடிய பாசிசம் அன்றி வேறில்லை. 
 
புத்தர் ஓர் இந்துவா?
டாக்டர் சுரேந்திர அஜ்நாத்
தமிழில்: சு.சத்தியச்சந்திரன்

பக்கங்கள்:   32
விலை: ரூ. 15

முதல் பதிப்பு: 06, டிசம்பர்,  2007

வெளியீடு:
பவுத்த சமூக செயல்பாட்டுப் பாசறை,
300/183, 2 –ஆம் தளம்,
தம்புச்செட்டித்தெரு,
சென்னை – 600001.

புதன், மார்ச் 16, 2016

சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது சரியா?



சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது சரியா?

மு.சிவகுருநாதன்


     தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன்குடிகாடு விவசாயி பாலன் கோட்டக் மஹிந்திரா வங்கியில் பெற்ற டிராக்டர் கடன் தவணை கட்ட தவறியதற்காக, அவ்வங்கியின் கூலிப்படையுடன் தமிழக அரசின் கூலிப்படையான காவல்துறையும் சேர்ந்து அவரை அடித்து, துன்புறுத்தி டிராக்டரை பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நடப்பவையென்றாலும் வீடியோ ஆதாரத்துடன் இருந்ததால் வன்முறையாளர்கள் மறுக்க வாய்ப்பின்றுப் போனது. 

   ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. வும் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவும் இதுவரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தனியார் வங்கிக்கு கூலிப்படையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு பணியிடமாற்றம் அளிப்பது தண்டனையல்ல. 

   இப்பிரச்சினை பொதுவெளிக்கு வந்தபோது தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் பாலனின் கடனை அடைப்பதாக அறிவித்தார். மற்றொரு நடிகர் கருணாகரன் ரூபாய் ஒரு லட்சத்தை பாலனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக ஓர் செய்தியும் வெளியானது. இவைகள் சென்னை வெள்ளத்திற்கு உதவிகள் செய்து படமெடுத்துக் கொள்ளும் விளம்பர உத்தி மட்டுமல்ல; இப்பிரச்சினையின் தீவிரத்தை திசை திருப்பும், மடை மாற்றும் உத்தியாகவும் பார்க்க வேண்டியுள்ளது. 

   நடந்த கொடுமை கண்டிக்கப்பட வேண்டியது. இதற்கு காரணமான வங்கி மற்றும் போலீஸ் அதிகாரிகள் தண்டிக்கப் படவேண்டும். இத்தகைய தனியார் வங்கிகளைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுக்கவேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத இவற்றின் உரிமங்களை ரத்து செய்யவேண்டும். குறைந்தபட்சம் கண்டனத்தையாவது பதிவு செய்யலாம். மாறாக வங்கியின் கடனை அடைப்பதாகச் சொல்வதை எதில் சேர்ப்பது?

    பாலன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டனத்துக்குரியது. இதற்கு உரிய இழப்பீட்டை வங்கி வழங்கவேண்டும். இதைப்போல எவர் மீது நடவடிக்கையை வருங்காலங்களில் எடுக்காத நிலையை ஏற்படுத்தவேண்டும். வங்கி பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். 

     கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், பெற்றோர் புகைப்படங்களை வெளியிடும் அயோக்கியத்தனங்களை அரசு வங்கிகளும் செய்து வருகின்றன. இவை பெரு முதலாளிகள், அரசியல்வாதிகள் பெற்ற வாராக்கடன் பட்டியலைக்  கூட வெளியிட்டதில்லை. வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட பட்டியலையும் முழுமை என்று கருத முடியாது. 

    ஒப்பீட்டளவில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு கொஞ்சம் பரவாயில்லை என்கிற ரகம்தான். இவற்றில் பல தனியார்  வங்கிகளைப் பின்பற்றத் தொடங்கியிருப்பது தனிக்கதை. பாரத ஸ்டேட் வங்கி ஐசிஐசிஐ வங்கி போல் மாறி வருவது தனியே பேசவேண்டிய  விஷயம். 

    பழைமையான தனியார் வங்கிகள் சில இன்னும் ஓரளவிற்கு சேவை நோக்கில் செயல்படுகின்றன. (உம்) சிட்டி யூனியன் வங்கி லிட், கரூர் வைஸ்யா வங்கி, லெஷ்மிவிலாஸ் வங்கி போன்றவை. குண்டர் பலம், மத்திய – மாநில அரசுகளின் ஆதரவு, அவற்றின் கூலிப்படையாக இயங்கும் துணை ராணுவப்படை, காவல்துறை உதவியுடன் செயல்படும் தனியார் வங்கிகள்  1990 களின் உலகமயத்திற்கு பிந்தைய வரவுகளாகும். (எ.கா.) ஐசிஐசிஐ வங்கி, ஹெடிஎப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி போன்றவை. இன்னும் வரப்போகும் தனியார் வங்கிகள் ஏராளம். இவர்களிடம் 120 கோடி இந்தியர்களை அடகு வைக்க மன்மோகன் சிங்குகளும் நரேந்திர மோடிகளும் எப்போதோ ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவும் இம்மாதிரி அவமானப்படுவதையும் விட வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. 

      ஆயுட்காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அரசே ஆள்பிடிக்கும் தரகு வேலையைப் பார்க்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஸ்டார் ஹெல்த் மருத்துவக் காப்பீடு ஒரு லட்சமாக இருந்தபோது மாதப் பிரிமியம் ரூ. 25. பிரிமியம் 6 மடங்காக ரூ. 150 என்று மாறியபோது காப்பீடு வெறும் 4 மடங்காகவே (4 லட்சம்) மாறியது இதற்கு ஓர் உதாரணம். 

     வங்கிகளில் கடன் வாங்கினால் திரும்பிக் கட்டத்தானே வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ‘கிங் பிஷர்’ விஜய் மல்லய்யா வாங்கிய ரூ. 9000 கோடி கடனை எப்போது திரும்பக் கட்டுவார்? அவரது சொத்துகள் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? ஏன் முடக்கப்படவில்லை? நமது மத்திய, மாநில அரசுகளின் கூலிப்படைகள் அவரை அடித்து தெருவில் இழுத்து வருமா?

     ஒரு விஜய் மல்லய்யாக்கள் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஏமாற்றுப் பேர்வழிகள் உண்டு. இவர்களுக்கு எதிரான அரசு சுண்டுவிரலைக்கூட நீட்டியதில்லை. இந்தியன் வங்கியை கூட்டுக் களவாடிய களவாணிகள் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை; சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதில்லை. 

      பொதுமக்களின் பங்குகளை உடைமைகளை கம்பெனிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வளர்ச்சி என்று மோடி சர்க்காரிடம் வெறென்ன எதிர்பார்க்க முடியும்? லலித் மோடிக்கு செய்யப்பட்ட மனிதாபிமான உதவிகள் விரைவில் விஜய் மல்லய்யாக்களுக்கும் செய்யப்படலாம். சாமான்ய மக்கள் அரசு, கூலிப்படைகளிடம் அடிவாங்க, இவற்றைக் கேட்க, நாதியற்ற சமூகத்தில் கடனை அடைக்க ஓடோடிவரும் விளம்பரப் பிரியர்களும் கூலிபடையினர் போன்றவர்களே.

செவ்வாய், மார்ச் 15, 2016

ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?



ஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்?

மு.சிவகுருநாதன்


     முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ஆணவக்கொலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சாதியை ஒழிக்க விரல்விட்டு எண்ணக்கூடிய ஒன்றிரண்டு இயக்கங்களைத் தவிர பிற ஓர் துரும்பையும் அசைப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களுக்கு நீண்ட, நெடிய வரலாற்றுப் பின்புலம் உள்ள தமிழகத்தில் இத்தகைய கொடூரங்கள் மிகப்பெரிய சமூக அவலம். 

     தமிழ்ப்பெருமையோடு பெரியார் பிறந்து, வாழ்ந்த  மண் என்ற பெருமை பேசுவதோடு முடிந்துவிடுகிறது திராவிட இயக்க அரசியல். சாதிய வன்மத்தை இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இவற்றிற்குப் பின்னாலும் இவர்கள் இருக்கிறார்கள். 

   இம்மாதிரியான கொலைகள் நிகழும்போது ஒப்புக்கு வெறும் கண்டன அறிக்கை வெளியிடுவதோடு நமது தலைவர்களின் வேலை முடிந்துவிடுகிறது. இதைக்கூட சிலர் செய்வதில்லை. எனவே கண்டன அறிக்கை வெளியிட்டால் அதுவே இங்கு பெருந்தன்மையாக இருக்கிறது. 

     வெறும் உதட்டளவிலான இந்த சாதியொழிப்பு நாடகங்கள் எதையும் செய்யப் போவதில்லை. ஈழப்பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வாய்ச் சவடால் விடும் இயக்கங்கள் மற்றும் தலைவர்கள் இங்குள்ள அகதிகளின் நிலை, முகாம்களின் சிறைக்கொடுமை குறித்து வாய் திறப்பதில்லை. அகதி முகாமில் நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்காக ஒரு வாரங்களுக்கு முன்பு ஒருவர் தற்கொலை செய்து கொண்டது உங்களுக்கு நினைவிருக்கும். அந்த மரணம் தமிழகத்தில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழர் என்று சொல்லி ஆட்சிக்கட்டிலில் ஏறத்துடிக்கும் எவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. இங்கு எல்லாம் வாய்ச்சவடால்தான்; செயல் ஒன்றுமில்லை. 

    50 ஆண்டுகால திராவிட இயக்கத்தின் ஆட்சியில் சாதீய வன்மம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. பெரியாரது வாரிசுகள் அவரது கொள்கைகளுக்கு மாறாக சாதியவாதிகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளனர். ஊழல், நிர்வாகச் சீர்கேடுகளை மறைக்க சாதியை கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். சாதிய விதைகளைத் தூவியதில் இவர்களது பங்கு அளப்பரியது. 

    தமிழகத்தில் தொடர்ந்து ஆண்டுவரும் அ.இ.அதி.மு.க., திமு.க. ஆகிய கட்சிகள் இக்கொலைகளுக்கு மவுன சாட்சியாக இருக்கின்றன. இவர்களுக்கும் இன்னபிற அதிகார வர்க்கத்திற்கும் கூலிப்படையாகச் செயல்படும் காவல்துறை ஒடுக்கப்பட்டோர் பாதிப்பைக் கண்டுகொள்வதில்லை. அதை இவர்கள் அனுமதிப்பதேயில்லை. 

    இடதுசாரிகள் சாதியத்தைத் தற்போதாவது புரிந்துகொண்டு செயலாற்றுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்று இதர கட்சிகளில் சாதியத்திற்கு எதிராக அமைப்புகள் இல்லை. கொள்ளை நோயாய் பரவியுள்ள சாதியத்தை ஒழிக்க இடதுசாரிகளின் பலம் போதவில்லை என்றே சொல்லவேண்டும்.  சில நேரங்களில் அவர்களும் சாதியவாதிகளாக மாறுவதும் உண்டு.  

  தலித் இயக்கங்களின் கருத்தியல் போதாமைகள் மற்றும் தெளிவின்மைகள் சாதியத்தை ஒழிப்பதற்குப் பதிலாக சாதியை வளர்க்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. தலித் இயக்கங்களிடையே ஒருங்கிணைப்பின்மை இச்சிக்கலை மேலும் தீவிரமாக்குகிறது. 

   திராவிட இயக்கத்திற்கு மாற்றாகத் தங்களை  முன்னிறுத்தும் கும்பல்களில் இரு பிரிவினர் உண்டு. இன்று இந்து மதவெறி சக்திகள்; மற்றொன்று தமிழ் வெறி சக்திகள். இவர்களது கொள்கைகளில் பெரிய வேறுபாடுகள் இல்லை.  இவர்கள் அனைவரும் இங்கு சாதியத்திற்கு துணைபோகும் நிலைதான் இங்கு இருக்கிறது. 

   பெரியார், அம்பேத்கர் வழியில் சாதியொழிப்பை முன்னெடுக்கும் இயக்கங்களே இன்றைய தேவை. சாதியத்தை வளர்க்கும், அதனோடு சமரசம் செய்யும் கட்சிகள், இயக்கங்கள் ஒழித்துக்கட்டப் படவேண்டும். பெரிய கட்சிகளை நம்பிப் பலனில்லை. சமூக அக்கறை உடைய சிறிய இயக்கங்கள் ஒன்றிணைந்து சாதிய வன்மத்திற்கு எதிராகவும்  சாதியொழிப்பிற்கு ஆதரவாகவும் போராடவேண்டும்.
   

இங்கும் தொடரலாம்:


மு.சிவகுருநாதன்

திருவாரூர் 





https://twitter.com/msivagurunathan


பன்மை




மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com

வாட்ஸ் அப்:   9842802010

செல்:          9842402010


திங்கள், மார்ச் 07, 2016

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016



முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016 

           - மு.சிவகுருநாதன்


         நேற்று (மார்ச் 06, 2016) ஞாயிறு நாகப்பட்டினம் அழகர் சன்னதி சாம் கமல் அகடாமியில் முக்கூடல் பன்னாட்டுத் தமிழ் / இலக்கிய / ஊடகவெளி – 131 -வது  நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 02.30 முடிய நடந்த இந்நிகழ்வை அரிமா அருண், கவிஞர் தெ.வெற்றிச்செல்வன், நாகை ஜவஹர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

    விற்பனையாகிறதோ இல்லையோ பணமும் படைப்புகளும் இருந்தால் சிறு பத்தரிக்களை அச்சிட்டு விடலாம். இம்மாதிரியான கூட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு இதழ் கொண்டுவருவதை விட சிரமமானது. இக்கூட்டங்களுக்குப் பேசவும் கேட்கவும் அழைப்பு அனுப்பி ஆட்களைத் திரட்டி ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 131 நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்திய தோழர்களுக்கு குறிப்பாக கவிஞர் தெ.வெற்றிச்செல்வனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

  தமிழிசை, குறும்படக்காட்சி, கதை சொல்லி, நூல் விமர்சனம், உரையாடல் என விரிவான அமைப்பில் அரங்கு திட்டமிடப்படுகிறது. தோழரின் இசைப்பாடல் அரங்கை நிறைத்தது. கல்வி, தொல் விளையாட்டு (சிலம்பம்) மற்றும் இறுதியாக உழைக்கும் பெண்கள் தினத்தை ஒட்டிய காட்சிப்பதிவும் திரையிடப்பட்டது. கதைசொல்லி பகுதியில் கொலம்பசின் ஆதிக்க உணர்வை, தங்கவேட்டையை ஹிராஸ் பாதிரியார் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். 

   கவிஞர் கிருஷ்ணப்ரியாவின் ‘வெட்கத்தில் நனைகின்ற…’, கவிதைத் தொகுப்பை நாகை ஜவஹர் சில கவிதைகளைக் குறிப்பிட்டு விமர்சன உரையாற்றினார். ஞாயிற்றுக் கிழமை கூட பெண்களுக்கு ஓய்வு இல்லை என்பது குறித்த ‘அரூபப் புலம்பல்கள்’, ‘பத்து வயது கவிதை’யான குழந்தை, பெண் சிசுவிற்கான ‘எதிர்பார்ப்பு’, ‘அரங்கேற்றம்’ போன்று சில கவிதைகளை வெகுவாக சிலாகித்தும் இவரது உரை அமைந்திருந்தது. சில கவிதைகளை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

   நிகழ்வை ஒருங்கிணைத்த கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் ‘ஆசை’, ‘அந்த 90 நாட்கள்’, ‘நானும் நீயும்’ போன்ற கவிதைகளையும் அதன் அழகியல் தன்மையையும் குறிப்பிட்டுப்  பேசினார். ஏற்புரையில் கவிஞர் கிருஷ்ணப்ரியா, என் அனுபவங்களையே எனது கவிதை, எழுத்துக்கு வாழ்விற்குமான இடைவெளியை நான் விரும்பவில்லை, என்றார். எனது கவிதைகளில் அழகியல் இல்லை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அதைப்பற்றியெல்லாம் திட்டமிட்டு நான் கவிதை எழுதுவதில்லை, பெண்ணியக்கவிதையா என்பதெல்லாம் அவரவர் பார்வையைப் பொறுத்தது என்றார். 

   தமிழகத்தில் பள்ளிக்கல்வி குறித்து நானும் தோழர் செ.மணிமாறனும் பேசினோம். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வத்துடன் பள்ளிக்கல்வியை செழுமைப்படுத்த உழைப்பதை சுட்டிக்காட்டி மணிமாறன் உரையாற்றினார். 

  கலந்துரையாடலில் அரிமா அருண் காரைக்குடி கல்லுப்பட்டியில் தான் நடத்திவரும்  அரசு உதவிபெறும் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். நாகை கீச்சாங்குப்பம் ‘ஸ்மார்ட்’ அரசுப்பள்ளித் தலைமையாசிரியர் பாலு, அரசுப்பள்ளி ஆசிரியை ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இடைநிலை ஆசிரியப்பயிற்சி மாணவி கரோலின் பயிற்சிக்குச் சென்ற பள்ளி அனுபவத்தில் ஓர் ஆசிரியர் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னது நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது. 


படங்களுடன் பார்க்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்…


 https://www.facebook.com/notes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2016/1010781322327255




இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010