சட்ட மீறலை, வன்முறையைக் கண்டிக்காமல் கடனை அடைப்பது
சரியா?
மு.சிவகுருநாதன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன்குடிகாடு விவசாயி பாலன் கோட்டக்
மஹிந்திரா வங்கியில் பெற்ற டிராக்டர் கடன் தவணை கட்ட தவறியதற்காக, அவ்வங்கியின் கூலிப்படையுடன்
தமிழக அரசின் கூலிப்படையான காவல்துறையும் சேர்ந்து அவரை அடித்து, துன்புறுத்தி
டிராக்டரை பறிமுதல் செய்த வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதுபோன்ற நிகழ்வுகள் எப்போதும் நடப்பவையென்றாலும் வீடியோ ஆதாரத்துடன் இருந்ததால்
வன்முறையாளர்கள் மறுக்க வாய்ப்பின்றுப் போனது.
ஆளும்
கட்சியான அ.இ.அ.தி.மு.க. வும் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர்
ஜெ.ஜெயலலிதாவும் இதுவரையில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தனியார் வங்கிக்கு
கூலிப்படையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு பணியிடமாற்றம்
அளிப்பது தண்டனையல்ல.
இப்பிரச்சினை பொதுவெளிக்கு வந்தபோது தென்னிந்திய நடிகர் சங்கப்
பொதுச்செயலாளர் நடிகர் விஷால் பாலனின் கடனை அடைப்பதாக அறிவித்தார். மற்றொரு நடிகர்
கருணாகரன் ரூபாய் ஒரு லட்சத்தை பாலனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதாக ஓர்
செய்தியும் வெளியானது. இவைகள் சென்னை வெள்ளத்திற்கு உதவிகள் செய்து படமெடுத்துக்
கொள்ளும் விளம்பர உத்தி மட்டுமல்ல; இப்பிரச்சினையின் தீவிரத்தை திசை திருப்பும்,
மடை மாற்றும் உத்தியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
நடந்த
கொடுமை கண்டிக்கப்பட வேண்டியது. இதற்கு காரணமான வங்கி மற்றும் போலீஸ் அதிகாரிகள்
தண்டிக்கப் படவேண்டும். இத்தகைய தனியார் வங்கிகளைப் புறக்கணிக்க வேண்டுகோள்
விடுக்கவேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத இவற்றின் உரிமங்களை ரத்து
செய்யவேண்டும். குறைந்தபட்சம் கண்டனத்தையாவது பதிவு செய்யலாம். மாறாக வங்கியின்
கடனை அடைப்பதாகச் சொல்வதை எதில் சேர்ப்பது?
பாலன்
மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை கண்டனத்துக்குரியது. இதற்கு உரிய இழப்பீட்டை வங்கி
வழங்கவேண்டும். இதைப்போல எவர் மீது நடவடிக்கையை வருங்காலங்களில் எடுக்காத நிலையை
ஏற்படுத்தவேண்டும். வங்கி பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், பெற்றோர் புகைப்படங்களை வெளியிடும்
அயோக்கியத்தனங்களை அரசு வங்கிகளும் செய்து வருகின்றன. இவை பெரு முதலாளிகள்,
அரசியல்வாதிகள் பெற்ற வாராக்கடன் பட்டியலைக்
கூட வெளியிட்டதில்லை. வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட பட்டியலையும் முழுமை
என்று கருத முடியாது.
ஒப்பீட்டளவில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் செயல்பாடு கொஞ்சம்
பரவாயில்லை என்கிற ரகம்தான். இவற்றில் பல தனியார்
வங்கிகளைப் பின்பற்றத் தொடங்கியிருப்பது தனிக்கதை. பாரத ஸ்டேட் வங்கி
ஐசிஐசிஐ வங்கி போல் மாறி வருவது தனியே பேசவேண்டிய விஷயம்.
பழைமையான
தனியார் வங்கிகள் சில இன்னும் ஓரளவிற்கு சேவை நோக்கில் செயல்படுகின்றன. (உம்)
சிட்டி யூனியன் வங்கி லிட், கரூர் வைஸ்யா வங்கி, லெஷ்மிவிலாஸ் வங்கி போன்றவை.
குண்டர் பலம், மத்திய – மாநில அரசுகளின் ஆதரவு, அவற்றின் கூலிப்படையாக இயங்கும்
துணை ராணுவப்படை, காவல்துறை உதவியுடன் செயல்படும் தனியார் வங்கிகள் 1990 களின் உலகமயத்திற்கு பிந்தைய வரவுகளாகும்.
(எ.கா.) ஐசிஐசிஐ வங்கி, ஹெடிஎப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி போன்றவை. இன்னும்
வரப்போகும் தனியார் வங்கிகள் ஏராளம். இவர்களிடம் 120 கோடி இந்தியர்களை அடகு வைக்க
மன்மோகன் சிங்குகளும் நரேந்திர மோடிகளும் எப்போதோ ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். விவசாயிகள்
தற்கொலை செய்து கொள்ளவும் இம்மாதிரி அவமானப்படுவதையும் விட வேறு வழியிருப்பதாகத்
தெரியவில்லை.
ஆயுட்காப்பீடு
மற்றும் மருத்துவக் காப்பீடு செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அரசே ஆள்பிடிக்கும்
தரகு வேலையைப் பார்க்கும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஸ்டார் ஹெல்த்
மருத்துவக் காப்பீடு ஒரு லட்சமாக இருந்தபோது மாதப் பிரிமியம் ரூ. 25. பிரிமியம் 6
மடங்காக ரூ. 150 என்று மாறியபோது காப்பீடு வெறும் 4 மடங்காகவே (4 லட்சம்) மாறியது
இதற்கு ஓர் உதாரணம்.
வங்கிகளில் கடன் வாங்கினால் திரும்பிக் கட்டத்தானே வேண்டும் என்று நீங்கள்
கேட்கலாம். ‘கிங் பிஷர்’ விஜய் மல்லய்யா வாங்கிய ரூ. 9000 கோடி கடனை எப்போது
திரும்பக் கட்டுவார்? அவரது சொத்துகள் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? ஏன் முடக்கப்படவில்லை?
நமது மத்திய, மாநில அரசுகளின் கூலிப்படைகள் அவரை அடித்து தெருவில் இழுத்து வருமா?
ஒரு
விஜய் மல்லய்யாக்கள் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஏமாற்றுப் பேர்வழிகள் உண்டு.
இவர்களுக்கு எதிரான அரசு சுண்டுவிரலைக்கூட நீட்டியதில்லை. இந்தியன் வங்கியை
கூட்டுக் களவாடிய களவாணிகள் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை; சொத்துகள் பறிமுதல்
செய்யப்பட்டதில்லை.
பொதுமக்களின் பங்குகளை உடைமைகளை கம்பெனிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும்
தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வளர்ச்சி என்று மோடி சர்க்காரிடம் வெறென்ன
எதிர்பார்க்க முடியும்? லலித் மோடிக்கு செய்யப்பட்ட மனிதாபிமான உதவிகள் விரைவில்
விஜய் மல்லய்யாக்களுக்கும் செய்யப்படலாம். சாமான்ய மக்கள் அரசு, கூலிப்படைகளிடம்
அடிவாங்க, இவற்றைக் கேட்க, நாதியற்ற சமூகத்தில் கடனை அடைக்க ஓடோடிவரும் விளம்பரப்
பிரியர்களும் கூலிபடையினர் போன்றவர்களே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக