கல்வியாளர்,
பேராசிரியர் வசந்திதேவிக்கு ஓர் மனம் திறந்த மடல்
(சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர் கல்வியாளர் பேரா.வசந்திதேவிக்கு பகத்சிங் மக்கள் சங்க அமைப்பாளர் வழக்கறிஞர் பொ.இரத்தினம் எழுதிய மடல் இங்கு வெளியிடப்படுகிறது.)
அனுப்புநர்
பொ.இரத்தினம், வழக்கறிஞர்
110 வழக்கறிஞர் கூடம்
உயர்நீதிமன்ற கட்டிடம்
சென்னை – 600 104.
5, வழக்கறிஞர் கூடம்
மதுரை உயர்நீதிமன்ற கிளை
மதுரை – 625 02
அலைபேசி: 9443458118
பெறுநர்
தோழர் பேரா. வசந்தி தேவி அவர்கள்
சென்னை.
தோழருக்கு வணக்கம்,
எனக்கு வயது 69. நான் சில நாட்களாக தங்களுக்கு
விரிவான வேண்டுதல் கடிதம் அனுப்ப பலரிடம் தொடர்பு கொண்டிருந்தேன். தாங்கள் விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில்
போட்டியிடப் போவதாக தொலைக்காட்சியில் செய்தி பார்த்ததிலிருந்து முயற்சித்து வந்துள்ளேன்.
நான் கிராமத்தில் வயலில் நடக்கும்போது விழுந்ததால் எனது இடது காலின் பாதத்தில் சற்று வலியும் வீக்கமும்
ஏற்பட்டது. தற்போது ஒரளவு தேறியுள்ளேன். எனவே தான் கடிதம் தயாரித்து அனுப்ப சற்று தாமதம்.
நான் முதலில் முன்னாள் நீதிபதி திரு.சந்துருவிடம் தங்களை தேர்தல் களத்தில் இறக்கிய
பின்னணி பற்றி கேட்டிருந்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொதுத்
தொகுதிக்கு நிறுத்த அக்கட்சி கட்சியிலில்லாதவர்களை அணுக வேண்டி ஆனது. முதலில் எழுத்தாளர்
தோழர் ஞாநியிடம் கேட்டனர். அவர் உடல்நிலை காரணமாக இயலாமையைத் தெரிவித்தார். பின்னர்
தங்களை அணுகி சம்மதம் பெற்றனர் என்றார் தோழர் சந்துரு. நான் அவரிடம் சில கருத்துக்களைத்
தெரிவித்தேன். பொதுத் தொகுதியில் வி.சி.க. உறுப்பினர் தலித்தாக இருந்தாலும் போட்டியிடலாமே!
ஏன் வெளியாரை அணுக வேண்டும்? இதில் ஏதோ புரியாத பின்னணி உள்ளது என்றேன். இந்தத் தொகுதியில்
போட்டியிடும் செல்வி ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடுபவர் யாரும் வைப்புத் தொகையைத்
திரும்பப் பெற முடியுமா என்பது சந்தேகமே. இப்படிச் சொல்வதால் செல்வி ஜெயலலிதாவை அத்தொகுதி
மக்கள் மிகவும் நேசிக்கிறார்கள் என்பதாக பார்க்க வேண்டியதில்லை. அவர் அரசியலில் எல்லா
வித்தைகளையும் கருணாநிதியிடம் இருந்து கற்றுக் கொண்டு தனக்கு ஏற்ப பயன்படுத்தும் அனுபவம்
நிறைய பெற்றவர். முதலமைச்சராக தமிழ்நாடு அரசை தனது அரசாக நடத்துபவர். மற்ற அரசியல்
கட்சிகளும் அரசியல் சட்டம் சார்ந்த அரசியலை நடத்துபவர்களல்ல. அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதலை
ஒரம் கட்டி ஒரு சீரழிந்த சூழலை வளர்த்துள்ளன. எனவே தான் சோவியத் ரஷ்யாவை கட்டியமைப்பதில்
முன்னிலை வகித்த தோழர் லெனின் நாடாளுமன்ற முறையைப் பன்றித் தொழுவம் என்றார். இன்று
பன்றித் தொழுவத்திற்கு அரசியல் பன்றிகள் தயாராகிக் கொண்டுள்ள என்பதே உண்மை நிலவரம்.
அடுத்ததாக நான் காந்தி கிராமம் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் திரு.மார்கண்டேயன்
அவர்களிடம் பேசினேன். அவர் ஒரு செய்தியைச் சொல்லி வி.சி.க மிகவும் சீரழிந்த கும்பல்
என நான் தெரிவித்த கருத்துக்களை ஏற்று தங்களுக்கு வேண்டுதல் கடிதம் அனுப்பச் சொன்னார்.
இப்படி பலரின் கருத்தையும் ஆதங்கத்தையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இந்த வேண்டுதல்
கடிதம். திரு.மார்கண்டேயனிடம் ஒரு நண்பர் தான் அத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக அவரை
ஆதரித்து அத்தொகுதியில் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு திரு.மார்கண்டேயன்
மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். அவர் ஒரு காரணத்தையும் தெரிவித்தார். தாங்கள் அத்தொகுதியில்
போட்டியிட உள்ளதால் அவரது நண்பரின் வேண்டுகோளை ஏற்க முடியாது என்று சொன்னதாகவும் தெரிவித்தார்.
இன்றைய தேர்தல் அரசியல் மிகவும் சீரழிந்து போயுள்ளது. அரசியல் சட்டத்தை செயல்படுத்த
உள்ள அமைப்புகளில் மனிதர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் என்பதே கசப்பான உண்மை. பதவி
ஆசை, பண வெறி போன்றவற்றின் கைதிகளாகவே பொறுப்பில் அமர்த்தப்பட்டவர்கள் சுகம் கண்டு
வருகிறார். இந்தியத் தலைமை நீதிபதி சில நாட்களுக்கு முன் நீதித்துறையில் கோடிக் கணக்கில்
வழக்குகள் தேங்கிக் கிடப்பதைச் சுட்டிக் காட்டி கண்கலங்கினார் என்ற செய்தி ஊடகங்களில்
படத்துடன் வெளியானது. அவர் கூட தன் பதவி சார்ந்த கடமையை போதுமான கவனத்துடன் நிறைவேற்றவில்லை.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான புகார்களை ஆவணப்படுத்தி தலைமை நீதிமன்றத்திற்கு
அனுப்பி வைத்து விரக்தியிலிருந்து நீதிபதிகள் புலம்புகிறார்கள். நீதிபதி கர்ணன் உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் துவங்கினார். அவரது கொள்ளை ஏராளம்.
ஆனாலும் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியதோடு முடிந்துவிட்டது. இப்படித்தான்
மிகப்பலர் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழித்துவிட்டு பிறர் செயல்படாததைச் சொல்லிப்
புலம்புகிறார்கள்.
தோழர் சமஸ் சமீபத்தில் எழுதி இந்து (தமிழ்) நாளேட்டில் வசந்தி தேவி – ராமசந்திரன்
என்ற கட்டுரையில் தங்களை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியில் மாநிலக் குழு தலைவர் முத்தரசனும், சி.பி.எம்.கட்சி மாநிலக் குழு தலைவர் ராமகிருஷ்ணனும்
என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தங்களிடம் கேட்டுக் கொண்டதற்காக சிறந்த கல்வியளாரான
தாங்கள் இந்த நாடகத்தில் பங்கேற்க களம் இறங்கிவிட்டீர்களே என பலரும் வேதனைப்படுகிறார்கள்.
இடதுசாரி அரசியலுக்கும், மார்க்சியத்திற்கும் இன்றைய நிலையில் சம்பந்தம் இல்லை என்பது
மட்டுமல்ல ஒருவித துரோகத்தனமே வலுப்பெற்றுள்ளது என்பதை அக்கட்சிகளில் உள்ள மார்சியப்
பற்றாளர்கள் புரிந்து கொண்டு புலம்புகிறார்கள்.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட தங்களை களம் இறக்கியவர்களின் இன்றைய பின்னணி
பற்றி பார்த்தாக வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
ராமசந்திரனுக்கு அக்கட்சி அனுமதி அளித்திருப்பது பற்றி நிறைய செய்திகள் வந்துள்ளன.
அவரது சொத்து 2 ஆயிரம் கோடிக்கு அதிகமானது. அவர் பல கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்.
நானும் எனது தோழர்களும் சில வழக்குகள் பற்றிய ஆவணங்களை சேகரித்து விபரம் அறிந்தோம்.
நான் சென்னை வந்த போது சி.பி.ஐ. தோழர் மகேந்திரன் என்னைச் சந்தித்து ராமசந்திரன் மீது
தவறான தகவல்களை பரப்புகிறார்கள். (பழனி என்ற பெரியர் தி.க.வைச் சார்ந்தவரது கொலைக்குப்
பின்னரே ராமச்சந்திரன் பற்றிய அதிர்ச்சியளிக்கும் விபரங்கள் வெளிவந்தன). அவர் தவறான
காரியங்களில் ஈடுபடுவரல்ல என என்னிடம் தொவித்தார். நான் அப்பகுதிக்குச் சென்று சில
கொலைகள் பற்றிய காவல் துறை ஆவணங்களை சரிபார்க்க உள்ளேன். உண்மையின் அடிப்படையில் மட்டுமே
நாங்கள் முடிவெடுப்போம் எனச் சொல்லியிருந்தேன்.
அவ்வாறே 1995-ல் ஒசூர் பேருந்து நிலையத்தில் சந்திரசேகரன் என்பவர் கொல்லப்பட்ட
வழக்கு ஆவணங்களை சேகரித்த போது அதிர்ந்து போனேன். முதல் தகவல் அறிக்கையில் சந்திரசேகரனைத்
தாக்கியவர்கள் பெயர் வரதராஜன் மற்றும் ராமசந்திரன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்
வேறு ஒரு ராமசந்திரனை சரணடைய வைத்து காவல்துறை அதிகாரிகளை கவனித்து அதற்கேற்ப குற்றப்பத்திரிக்கை
தாக்கலானது. நான் இறந்தவரது தம்பி (புகார் கொடுத்தவர்) மற்றும் பலரை சந்தித்து விபரம்
பெற்றேன். தற்போது அன்றைய காவல் அதிகாரிகள் உட்பட சிலரையும் குற்றவாளிகள் பட்டியலில்
சேர்த்து கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கலாகி உள்ளது. இதனை தோழர் மகேந்திரனிடம் தெரிவித்து
உங்கள் கட்சி தான் முடிவெடுக்க வேண்டும், வழக்கறிஞர் குழு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக
நேர்மையாக வழக்குகளை நடத்தும் என தெரிவித்தேன். இதுவும் ஒரு சிறு உதாரணம் மட்டுமே.
சீரழிவின் பரப்பளவு எல்லை கடந்துவிட்டன. எனவே நான் பல நேரங்களில் தோழர் என்று உச்சரிப்பதைக்
கூட முடியாமல் தடுமாற வேண்டி உள்ளது.
அடுத்த கட்சி சி.பி.எம். பற்றியும் சொல்ல வேண்டும். 1979ல் ஜோதிபாசு தலைமையிலான
கூட்டணி ஆட்சியில் மேற்கு வங்க அரசின் காவல்துறை மரிச்சாபி என்ற தீவில் கடும் உழைப்பால்
வளப்படுத்தி வாழந்த தலித் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அறிவித்து வேட்டையாடியது. சுமார்
14 ஆயிரம் மக்கள் அழிக்கப்பட்டனர். காவலர்களது துப்பாக்கிச் சூட்டால் ஒரு பகுதியினரும்,
தப்பி ஒடி அருகிலுள்ள சுந்தரவனக் காடுகளில் புலிகளால் கொல்லப்பட்டும், வேறு பலவித காரணங்களால்
மக்கள் மாண்டனர். இந்த கொடூரம் பற்றி செய்தி வராமல் அரசு பார்த்துக் கொண்டது. ஆனால்
அதே இனத்தைச் சார்ந்த இளைஞர் தனது ஆராய்ச்சி (Ph.D.) ஆய்வை 2 ஆண்டுகள் நடத்தி ஆவணப்படுத்தி
கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்தார். அப்பல்கலைக்கழகம் அதை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தக் கொடூரம் பற்றிய போதுமான விவாதங்கள் வராமலே உள்ளது. தலித் முரசு பத்திரிக்கை
இதனை தொகுத்து தமிழில் வெளியிட்டது. கருப்புப் பிரதிகள் என்ற வெளியீட்டு அமைப்பு நூலாக
வெளியிட்டுள்ளது. மறைக்கப்பட்ட உண்மைகள் அதிர்ச்சி தரக்கூடியவை. இதுவும் ஒரு சிறு உதாரணம்
மட்டுமே. விடுதலைச் சிறுத்iதைகள் கட்சி பற்றி தங்களுக்கு போதுமான விபரம் தெரியாமலிப்பதாகவே
நானும் எனது நண்பர்களும் கருதுகிறோம். இந்தக் கும்பலின் முன்னோடிகள் பலர் மிகவும் சீரழிந்த
நடவடிக்கைக்குச் சொந்தக்காரர்கள். நான் நிறைய ஆதாரங்களை தொகுக்கும் அவகாசம் இல்லாததால்
நான் வெளியிட்டுள்ள ‘தலித் மக்கள் எழுச்சியை முடமாக்கும் மோசடிகள்’ வெளியீட்டு நகல்
ஒன்றையும் இணைத்துள்ளேன். கோவையைச் சார்ந்த கவிதா என்ற பெண்ணுடன் 2 ஆண்டுகள் கணவன்
மனைவிபோல் வாழ்ந்துவிட்டு சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் திருமாவளவன் பற்றி
அப்பெண் காவல்துறையில் புகார் செய்தார். இதுவும் பெரும் வெள்ளத்தில் ஒரு துளிதான்.
திருமாவளவனை விளம்பரபடுத்துவதில் அரசியல் காய் நகர்த்துவதில் சாணக்கியராக அவருக்கு
துணை செய்பவர் ரவிக்குமார். முன்பு அவர் மார்க்சிய லெனினிய அரசியலைச் சார்ந்திருந்தவர்.
தேர்தல் பாதை திருடர் பாதை என்பதாக அரசியல் வகுப்பு நடத்தியவர். தற்போது அவரது மனைவி
இவரிடம் கடுமையாகி விடுவதுண்டு என்கிறார்கள் புதுவைத் தோழர்கள். ரவிக்குமார் ‘சின்னவீடு’
கட்டிக் கொண்டார் என்ற பின்னணி பற்றி இலக்கிய விவாதமும் உண்டு. திருமணம் செய்து கொள்ளாமல்
வாழும் திருமாவளவனுக்கு ரவிக்குமார் சந்திக்கும் சிக்கல் வருவதில்லை. ஆனாலும் பலரது
புகார்கள் வாசிக்கப்படாமல் இருட்டு அறைக்குள் புதைந்து கிடக்கின்றன. திருமாவளவன் வாழும்
அம்பேத்கர் என்றெல்லாம் தி.மு.க.பாணியில் தூக்கிப்பிடிக்கிற அரசியல் உத்தி உள்ளது.
இலங்கைத் தமிழர்கள் ஈழப்போர் நடத்திய போதெல்லாம் தமிழ்நாட்டு போலித் தலைவர்கள் சிலர்
கோடீஸ்வரர்களாகிவிட்டனர். தவறான தகவல்களைக் கொடுத்து விடுதலைப்புலிகள் அமைப்பை தடுமாற
வைத்த துரோக வரலாறும் உண்டு. அப்படிப்பட்ட துரோகத்தால் வி.சி.கவைச் சார்ந்த சிலரும்
கோடீஸ்வரராகி உள்ளனர் என்பதைப் பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த சீரழிந்த அரசியலை மாற்றி புதிய
அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளனர் என்பது சமீபத்தில் வெளிப்பட்டது.
தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திரு.சகாயம் IAS அவர்களை அரசியலுக்கு வரும்படி சென்னையிலும்,
மதுரையிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் உணர்ச்சிவசப்பட்டு
அதனை ஊக்குவித்துவிடவில்லை. சமூக விழிப்புணர்வற்ற சூழலில் புதிய அரசியல் சூழலை உருவாக்க
முடியாது. எனவே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை தொடர்ந்து செய்வதே சரியானது.
அரசியலில் ஈடுபடுவது நல்லதல்ல என அவர்களுக்கு சொல்லிவிட்டார். இதுவும் கவனிக்கப்பட
வேண்டிய வெளிப்பாடு தான்.
நான் நிறைய உண்மைகளைச் சொல்ல அவகாசம் இல்லாததால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கு பலரது வேண்டுகோளைச் சேர்க்கும் பணியை இக்கடிதம் மூலம் செய்கிறேன். இந்த
சீரழிந்த அரசியலில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பங்கேற்பது தாங்கள் கல்வி, மதுவிலக்கு,
பெண்கள் உரிமை போன்றவற்றிக்கு அளித்துள்ள பங்களிப்பு பற்றிய மதிப்பீடு வேறுவிதமாகக்கூடும்.
எனவே இந்தத் தேர்தலில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொள்வதன் மூலம் நீங்கள் பலருக்கு
புதிய அரசியல் பாடம் சொல்ல முடியும்.
தோழமையுடன்
(பொ.இரத்தினம்)
28.4.2016.
நன்றி: மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்
நன்றி: மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக