தாழைக்குடி
மகேந்திரநிதி
மீது
கொலை
வெறித்தாக்குதல்
உண்மை அறியும் குழு அறிக்கை
திருவாரூர்
ஜூன் 24, 2016
உறுப்பினர்கள்
- அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசிய
கூட்டமைப்பு (NCHRO), சென்னை.
- தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
- பி.ராமராஜ், நீதிபதி (ஓய்வு) சென்னை.
- என்.பழனிவேல், பி.ஏ.பி.எல்., முற்போக்கு வழக்கறிஞர்
சங்கம், சென்னை.
- வி.மார்க்ஸ் ரவீந்தீரன், முற்போக்கு வழக்கறிஞர்
சங்கம், சென்னை.
- என்.ஜி. எடையூர் பாலா, பத்திரிகையாளர்,
- கே.சத்தியமூர்த்தி, பி.ஏ.பி.எல், வழக்கறிஞர், திருத்துறைப்பூண்டி.
- கே.ஏ.அழகுராஜா, பி.ஏ.பி.எல்., முற்போக்கு வழக்கறிஞர்
சங்கம், சென்னை.
- ஆர்.தேவதாஸ், முற்போக்கு வழக்குரைஞர் சங்கம், சென்னை.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் தாழைக்குடி
கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞரும் கொரடாச்சேரி நகர திமுக இளைஞரணிச் செயலாளருமான கணேசன்
என்கிற மகேந்திரநிதி த/பெ (மறைந்த) ஜெகஜீவன்ராம் என்பவர் சென்ற மே 23 மாலை கடுமையாகத்
தாக்கப்பட்டு உயிருக்குப் போராடும் நிலையில் கொரடாச்சேரி அருகே ஆள் நடமாட்டமில்லாத
ஓரிடத்தில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். இவர் முதலில் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிலும்
தற்போது திருச்சியிலுள்ள மாருதி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறார், இன்னும் அவர் அபாயகட்டத்தைத் தாண்டவில்லை எனத் தெரிகிறது.
இதற்கிடையில் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி
முதலான அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன் குடும்பத்திற்கும் இந்த தாக்குதலுக்கும்
தொடர்புள்ளது எனவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இவ்வமைப்பினர் கோரியுள்ளனர்.
தாழைக்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இதே கோரிக்கையை முன்வைத்து மாவட்ட
காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து,
உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மும்முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இன்னொரு பக்கம் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும்
தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான உ.மதிவாணன், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆடலரசன்
மற்றும் மாவட்ட அளவிலான மூத்த தலைவர்கள் எல்லோரும் காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சந்தித்து,
திமுக மாவட்டச் செயலாளர் கலைவாணனுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
என மனு ஒன்றை அளித்துள்ளனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இளைஞர் சார்பில் அவரது தாயார்
ராஜேஸ்வரி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் (குற்ற எண்: 197/16) இ.த.ச. பிரிவுகள்
147, 148, 307, 324, 506 (2) மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவுகளில் வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயபிரகாஷ், விவேக், ஆசைத்தம்பி, சரவணன், கோபால்சாமி, ராஜசேகரன்,
கலைவேந்தன், கணேசன் எனும் எட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணராஜ், த/பெ.
செல்லையா மற்றும் கொரடாச்சேரி சரவனன் என்னும் இரு முக்கிய குற்றவாளிகள் தேடப்படுவதாக
அறிகிறோம்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சாதிவெறி உள்ளது
எனவும், சாதி ஆணவக் கொலை முயற்சி உள்ளது எனவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்
இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்
சென்னை முற்போக்கு வழக்கறிஞர் சங்கத்தின் முன்முயற்சியில் இத்தாக்குதலின் பின்னணியை
ஆய்வு செய்ய மேற்குறித்தவாறு இந்த உண்மையறியும் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு நேற்று முழுவதும் கொரடாச்சேரி, தாழைக்குடி,
திருவாரூர் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பலரையும் சந்தித்தது. குறிப்பாக சி.பி.அய்.
கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜி. பழனிச்சாமி,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, சி.பி.எம். ஒன்றியச் செயலாளர்
சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் வடிவழகன், தி.மு.க.
ஒன்றியத் தலைவர் தாழை மு. அறிவழகன், தாழைக்குடி அ.தி.மு.க கிளைச்செயலாளர் செல்லையா,
எழுத்தாளர் சிவகுமார் முத்தய்யா ஆகியோருடன் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியது,
அடிபட்ட மகனுடன் மருத்துவமனையில் இருக்கும்
தி.மு.க மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெ. ராஜேஸ்வரியுடன் தொலைபேசியில் விரிவாக உரையாடியது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உள்ள திருவாரூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சுகுமாரன்
அவர்களுடன் வழக்கு விசாரணை குறித்தும் பேசி விவரங்களை அறிந்து கொண்டது. தி.மு.க மாவட்ட
செயலாளர் கலைவாணனை தொடர்புகொள்ள இயலவில்லை. பாதிக்கப்பட்ட இளைஞரின் ஊரான தாழைக்குடிக்குச்
சென்றபோது அவ்வூர் மக்கள் பொது இடம் ஒன்றில் கூடி, கட்சி மற்றும் சாதி வேறுபாடுகள்
இன்றி ஒத்த குரலில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். தாக்கப்பட்டுள்ள மகேந்திரநிதி
இவ்வூரைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்
மறைந்த தாழை மு. கருணாநிதிக்கு மருமகன் உறவுள்ள நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு கருத்துக்கள்
நாங்கள் சந்தித்தவர்கள் மத்தியில் இந்த தாக்குதல்
தொடர்பாக இரண்டு கருத்துக்கள் நிலவுவதை அறிந்தோம். அவை:
1.மேற்குறிப்பிட்ட
அரசியல் இயக்கங்கள், தலித் மக்கள் ஆகியோரிடமிருந்து ஒத்த குரலில் வெளிப்படும் கருத்து:
இந்த கொலைவெறித்தாக்குதலின் பின்னணியில் திமுக மாவட்டச் செயலாளர் கே.கலைவாணன் உள்ளதாக
இவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். அவருடைய தூண்டுதலின் பேரில்தான், இன்று கைது செய்யப்பட்டுள்ளவர்கள்
இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்ட மகேந்திரநிதி, கலைவாணனின் வலதுகை
போல் நெருக்கமாக இருந்து அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட்டவர், அவரது கட்சிக்காரர்.
அவரை இப்படித் தாக்குவதற்கு கலைவாணனுக்கு என்ன நோக்கம் இருக்கமுடியும் என நாங்கள் கேட்டபோது,
அதற்கு இரு சாத்தியங்களை அவர்கள் குறிப்பிட்டனர். ஒன்று, தலித் சமூகத்தைச் சேர்ந்த
மகேந்திரநிதிக்கும் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையில் இருந்த உறவு
கண்டுபிடிக்கப்பட்டு, அந்த அடிப்படையிலேயேலேயே அவர் தாக்கப்பட்டார் என்பது. அவருடைய
உள் உறுப்புகள் குறிப்பாக அவரது ஆணுறுப்புகள் சேதமடையும் வண்ணம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
எனவும் அவர்கள் கூறினர். மற்றது, கொரடாச்சேரி இருக்கும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி
விரைவில் தனித்தொகுதியாக மாறவுள்ள சூழலில், தலித் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வளர்ந்துவரும்
மகேந்திரநிதியின் மீதுள்ள பொறாமையில்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது.
இந்த இரண்டாவது காரணம் எந்த அளவிற்கு பொருத்தமானது என்று தெரியவில்லை. தனக்கு நெருக்கமான
ஒருவர் வளர்ந்து வருவதில் தலைமைக்கு என்ன பொறாமை இருக்கமுடியும் என்பது குறித்து உரிய
விளக்கம் தர அவர்களால் இயலவில்லை. எனினும் சாதி மீறிய உறவு இதன் பின்னணியில் உள்ளது
என்ற கருத்து பரவலாக அனைவராலும் சொல்லப்பட்டது.
2.இந்தக்
கருத்தை முற்றாக மறுக்கிறார் மகேந்திரநிதியின் தாயார் ராஜேஸ்வரி. கலைவாணனுக்கும் இந்த
தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார், அவர் கலைவாணன் வன்முறையை நாடாதவர்
எனவும் அவர்மீது அபாண்டமாகப் பழி சுமத்தக்கூடாது எனவும் அவர் உறுதிபடக் கூறினார். பிறகு
யார் இந்தத் தாக்குதலைச் செய்திருக்க முடியும் என நாங்கள் கேட்டபோது, அது தனக்குத்
தெரியவில்லை எனவும் மகனின் நண்பர்கள்தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கவேண்டும் எனவும்
அவர்களைத் தான் சும்மா விடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
காவல்துறையின் அணுகல் முறை
காவல்துறை மேற்குறித்த இரண்டு கருத்துகளில்
இரண்டாவது கருத்தையே பின்பற்றிச் செயல்படுகிறது. தற்போது குற்றம் சுமத்தப்பட்டு காவலில்
உள்ளவர்களின் வாக்குமூலப்படி, இப்பகுதியில் பியூட்டி பார்லர் வைத்திருக்கும் கள்ளர்
இனத்தைச் சேர்ந்த, திருமணமான ஓர் பெண்ணுடன் தாக்கப்பட்ட மகேந்திரநிதி அடிக்கடி தொலைபேசியில்
பேசியதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணி என இவ்வழக்கைப் புலனாய்வு செய்துவரும் அதிகாரி
சுகுமாரன் தெரிவித்தார். அந்தப்பெண் தற்போது தேடப்படும் கிருஷ்ணராஜூக்கு சித்தி முறையுடையவர்.
இவர்களது தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது
என்றார்.
கலைவாணன் இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்துள்ளார்
எனவும் சாதி மீறிய பாலியல் உறவு காரணமாக அவரே இந்தத் தாக்குதலைத் தூண்டியுள்ளார் எனவும்
பொறுப்பான அரசியல் இயக்கங்களாலும் உற்றார் உறவினர்களாலும் வலுவாகக் குற்றம் சாட்டப்படுகிறதே
என நாங்கள் கேட்டபோது, “அதற்கு என்ன ஆதாரம்?
ஆதாரமில்லாமல் நாங்கள் எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்?” என்றார் அந்த அதிகாரி. இந்தப்
புகாருக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விசாரிக்கும்போதுதானே அதற்குரிய ஆதாரங்கள்
உள்ளதும், இல்லாததும் தெரியவரும். அத்தகைய விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என நாங்கள் கேட்டபோது,
அதெல்லாம் விசாரித்தாயிற்று என்று பதில் வந்தது. “இதில் கலைவாணனுக்குத் தொடர்பில்லை
என்று தாக்கப்பட்டவரின் அம்மா சொல்லும்போது அதைத் தாண்டி நாங்கள் என்ன செய்யமுடியும்?
தாக்கப்பட்டவர் சுயநினைவிற்கு வந்து அவர் அப்படி ஒரு வாக்குமூலம் அளித்தால்தான் நடவடிக்கை
எடுக்க முடியும்” என்றார். கலைவாணனுக்குத் தொடர்பில்லை என்பது நன்றாக விசாரித்து உறுதி
செய்யப்பட்டுவிட்டது என்றார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் இப்போது
விடுப்பில் உள்ளார்.
எங்கள் பார்வைகள்:
இப்படி இரு எதிரெதிர் கருத்துகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.
தலித்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த மாவட்டத்தில் தலித்களும் ஆதிக்க சாதியினரும் எதிரெதிராக
நிற்கக்கூடிய சூழலை இன்று இப்பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது. சாதி உணர்வு இதில் முக்கிய
பங்கு வகித்துள்ளது. தலித் இளைஞர் ஒருவர், ஒரு ஆதிக்கசாதிப் பெண்ணுடன் உறவு வைத்துள்ளார்
என்கிற அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
திமுக ஒன்றியத்தலைவர் தாழை அறிவழகன் எங்களிடம் மனம் திறந்து பேசும்போது, இந்த தாக்குதலுக்குப்
பின்னணியில் இன்று கைது செய்யப்படுள்ளவர்கள் மட்டும் இல்லை, வேறு சில முக்கியமானவர்கள்
உள்ளனர் என்றார். சாதியுணர்வு இதில் முக்கியப்பங்கு வகிப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவரது கட்சிக்காரரான கலைவாணனுக்குத் தொடர்பிருக்குமா என்று கேட்டதற்கு, தனக்குத் தெரியாது
என்றார். மகேந்திரநிதியின் அம்மா கூறுவது பற்றிக் கேட்டபோது, அதுபற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை
என்றார்.
கலைவாணனுக்குத் தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிற
பிறர் இன்னொன்றையும் சுட்டிக் காட்டினர். மகேந்திரநிதி
அடிபட்டுக்கிடந்தது தெரிந்தவுடன் உடனடியாக அவர் தஞ்சைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும்,
இதுநாள் வரை உறவினர்கள் யாரையும் அவரை நெருங்கவிடவில்லை என்றும் அவர்கள் கூறினர். மகேந்திரநிதியின்
அம்மாவின் கருத்து பற்றிக் கேட்டபோது, “அவர் கலைவாணனுக்கு நெருக்கமானவர், அவரது கட்டுப்பாட்டில்
உள்ளவர், அவர் அப்படிப் பேசுவதில் வியப்பில்லை” என்றனர்.
தலித்கள் அதிகம் உள்ள திருவாரூர் மாவட்டத்தில்
தலித் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தவிர பிறவற்றில் ஆதிக்க சாதியினரே தலைவர்களாக உள்ளனர்.
கடும் சாதி ஒடுக்குமுறை நிலவும் இம்மாவட்டத்துக்கு மிக அருகில்தான் கீழ வெண்மணி உள்ளது.
தலித்கள் மத்தியில் பலர் அ.தி.முகவைக் காட்டிலும் தி.மு.கவில்தான் உள்ளனர். தாழைக்குடியைப்
பொருத்தமட்டில் அங்குள்ள சுமார் ஆயிரம் பேரில் ஐநூறு பேர் தி.மு.க விலும், வெறும் ஐம்பது
பேர்தான் அ.தி.முகவிலும் உள்ளனர். இருந்தும்
கூட, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பலமுறை
முதலமைச்சராக இருந்தவரும், அனைவராலும் மதிக்கப்படுபவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள்
இது குறித்து இதுவரை ஒன்றும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையைப் பொருத்தமட்டில் பெரும்பான்மை
மக்கள் மற்றும் கட்சிகளின் கருத்தைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. பெரும்பான்மைக்
கருத்து இப்படி உள்ளது என்பதற்காகவே அதை ஏற்கவேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால்
இப்படி ஒரு sensitive ஆன பிரச்சினையில் கிட்டத்தட்ட ‘கோமா’ நிலையில் இருக்கும் தாக்கப்பட்ட
இளைஞன் விழித்து வந்து பேசினால்தான் அந்தக் கோணத்தில் விசாரிக்க முடியும் எனச் சொல்வதை
ஏற்க இயலாது. அதேபோல தாக்கப்பட்ட இளைஞனின் அம்மா சொல்கிறார் என்பதாலேயே அது மட்டுமே
உண்மை எனவும் சொல்லிவிட இயலாது.
காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆடலரசன், மதிவாணன்
எனும் இரு தலித் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி, கலைவாணனுக்கும் இந்தத் தாக்குதலுக்கும்
தொடர்பில்லை எனச் சொல்ல வைத்ததெல்லாம் தலித்கள் மத்தியில் மிகுந்த அவநம்பிக்கயையே ஏற்படுத்தியுள்ளது.
இந்த தலித் சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, தாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினருமான ஒன்றியத்
தலைவர் அறிவழகனும் சரி தலித் மக்களின் குரலைப் பிரதிபலிக்க இயலாத நிலையில் இருப்பது
மீண்டும் நமக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலித்களுக்கான தனி வாக்காளர் தொகுதி குறித்துச்
சொன்னதைத்தான் நினைவூட்டுகிறது. தலித்கள் மட்டுமே வாக்களித்துத் தம் பிரதிநிதிகளைத்
தேர்வு செய்யும்போதுதான் அவ்வாறு தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் உண்மையிலேயே தலித்களின்
உணர்வுகளையும் விருப்புகளையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருக்க இயலும். தாக்கப்பட்டு
உயிருக்குப் போராடிக் கொண்டுள்ள மகேந்திரநிதியின் மிக நெருங்கிய உறவினரான அறிவழகன்
அவர்கள் தன் மனதில் உள்ள குறையை வெளிப்படையாகச் சொல்ல இயலாமல் தவிப்பதையும் எங்களால்
உணர முடிந்தது.
மகேந்திரநிதியின் சிகிச்சைக்கான முழுச் செலவையும்
இன்று கலைவாணன்தான் மேற்கொள்வதாக அனைவரும் கூறினர். கிட்டத்தட்ட அவரது கண்காணிப்பில்தான்
இன்று தாக்கபட்டவரும் அவரது அன்னையும் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் எந்த அளவு சுதந்திரமாகக்
கருத்துரைக்க முடியும் என்கிற கேள்வியில் நியாயம் இருப்பதாகவே இக்குழு கருதுகிறது.
கோரிக்கைகள்
காவல்துறை இவ்வழக்கை ஒரே கோணத்தில் விசாரித்து
முடித்துவிடும் நோக்கிலேயே செயல்படுகிறது. தலித்கள் அதிகம் உள்ள மாவட்டம் இது. மிகவும்
நுண்மையான பிரச்சினை இது. கீழத் தஞ்சை தீண்டாமைக் கொடுமைகளுக்குப் பெயர் பெற்ற பகுதி.
இந்நிலையில் இப்பிரச்சினை நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டியது அவசியமாகிறது.
ஆனால்
அத்தகைய நோக்குடன் இந்த விசாரணை இப்போது மேற்கொள்ளப் படவில்லை என இக்குழு உறுதியாகக்
கருதுகிறது. எனவே இவ்வழக்கு விசாரணையை உடனடியாக சி.பி.சி.ஐ.டி துறைக்கு மாற்ற வேண்டும்
எனவும், தலித் மக்கள் மற்றும் இயக்கங்களின் கோரிக்கை கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும்
எனவும் இக்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது.
தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் தனது மௌனத்தைக்
கலைத்து இந்தத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும் எனவும் இக்குழு கோருகிறது.
தொடர்புக்கு:
பி.ராமராஜ்,
10/10, மூன்றாம்தெரு,
பாபுநகர்,
மேடவாக்கம்,
சென்னை-100,
செல்: 9176067906
நன்றி: அ.மார்க்ஸ்