திங்கள், ஜூன் 06, 2016

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை 


 (இந்தப் புத்தகச் சந்தையில்உயிர்மைவெளியீடாக வெளி வரும் எனதுபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலில் இணைக்கப்பட்டுள்ள இனிய நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை - .மார்க்ஸ்)





 “பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை முகப்பாகக் கொண்டு ‘தீராநதி’ மாத இதழில் ஜன. 2007 முதல் டிச. 2011 முடிய அறுபது மாதங்கள் பத்தியாக வெளியான பேரா. அ.மார்க்ஸ் –ன் ஆக்கங்கள் மிகத் தாமதமாக நூல்வடிவம் பெறுகின்றன. 

     பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துகளுக்கு முன்னுரை எழுதும் தகுதி எனக்குத் துளியும் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இருப்பினும் 1990 களின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் கருத்தரங்கில் தொடங்கி இன்று வரைத் தொடரும் தோழமை உணர்வினுடாக ஓர் வாசகப் பார்வையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

    அன்று நிறப்பிரிகையில் வெளியான கட்டுரைகள் இன்று குமுதம் நிறுவன இதழான ‘தீராநதி’யில் வெளியாகக் கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் தமிழ் இதழியல் உலகில் ஏற்பட்டுள்ளன. அரசியலற்ற ஓர் நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பலகாலமாக எடுத்திருந்த நிலையில் 'நிறப்பிரிகை' நுண் அரசியல் களங்களை விவாதப் பொருளாக்கியது. இதில் அ.மார்க்ஸ் – ன் பங்கு பணி அளப்பரியது.



   தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ் அளவிற்கு கடும் விமர்சனங்களுக்கு ஆளான சமகால அறிவுஜீவி யாருமில்லை.. இந்தத் தொகுப்பின் குறுக்கு வெட்டாகப் பார்த்தால்கூட அவர் தொடாமல் விட்ட பிரச்சினைகள் மிகக் குறைவு. சமகால தமிழ்ச் சிந்தனையாளர்களில்  இது அரிது. கிராம்சியின் 'உயிர்ப்புமிகு அறிவுஜீவி' (Organic Intellectual) எனும் கருத்தாக்கத்திற்கு தமிழ்ச்சூழலில் மிகவும் பொருத்தமான ஆளுமை அ.மார்க்ஸ். அ.மார்க்ஸால்  இது சாத்தியமாகியுள்ளது எங்களைப் போன்ற நண்பர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. 

   புத்தர், காந்தி, அம்பேத்கர், பெரியார், தாகூர், ஸ்பாடிஸ்டா, பரமசிவ அய்யர் என எங்கும் அறத்தைத் தேடி அலையும் மனித உரிமைப் போராளியாகவே அ.மார்க்ஸ் இந்நூல் முழுவதும் காட்சியளிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதி செத்த உலகில் அறத்தைத் தேடி தன்னந்தனியனாய் நெடுந்தூரம் பயணிக்கிறார். 

   தமிழகத்தில் சொல்லப்படும் எந்தக் கருத்தும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்கிற இரு பார்வைகள் வழியே பயணிப்பதால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் படும் இடர்பாடுகளை சொல்லி மாளாது. இருப்பினும் எது குறித்தும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தனது கருத்துக்களோடு அனைவரையும் கடந்து செல்கிறார். 

    இத்தொகுப்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து அதிக எண்ணிகையிலான கட்டுரைகள் இருக்கின்றன. இந்தப் பார்வைகள் அவருக்கு நிறைய  எதிர்ப்புக்களை உருவாக்கித் தந்தன. அதற்காக தனது அறம் சார் நிலைப்பாட்டில் அவர் எள்ளளவும் உறுதி குலைவதில்லை. ஈழப்பிரச்சினை தமிழ்த் தேசியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், பெற்ற படிப்பினைகள், அரசியல் தீர்வு, கச்சத்தீவு, மீனவர் பிரச்சினைகள், அகதிகள் வாழ்வு குறித்தான கரிசனங்கள் என்பதாக அ.மார்க்ஸிடம் விரிவு கொள்கின்றன. 

  கச்சத்தீவு, அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்களில் தேசியம் கடந்த ஒருவகை ஆளுகை முறை பற்றி யோசிக்கிறார். அவர் சொல்வதைக் கேளுங்கள்: "இன்றையத் தேவை போரல்ல; சமாதானம், சமாதானம் மட்டுமே. பேச்சுவார்த்தைகள் மூலமே எல்லைகள்  வரையறுக்கப்பட வேண்டும். வரையறுத்தல் என்பதைவிட வரையறை நீக்கம் (delimit) செய்தல், நெகிழ்ச்சியாக்கப்படுதல், ஒருங்கிணைக்கப்படுதல் (integrate) வேண்டும். முன்பொரு முறை நான் இந்தப் பத்தியில் எழுதியது போல தேசியம் கடந்த ஆளுகை முறை (Non-Nationalistic mode of Governance) குறித்தெல்லாம் நாம் யோசிக்கவேண்டும். குறைந்தபட்சம் எல்லைப் பிரச்சினைகளிலாவது இந்தப் பார்வைகள் தேவை.”



    விலகி நிற்றல், தன்னிலை அழிப்பு, பன்முகப்பார்வை குறித்த அவதானிப்புகள், மற்றமை சார்ந்த கரிசனங்கள், அறவியல் நிலைப்பாடு, பெருங்கதையாடல் தகர்ப்பு, ஒற்றைத்தீர்வுகளில் முடங்காமல் பன்மைத் தீர்வுகளைப் பரிந்துரைத்தல், தேசபக்தி எனும் மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை, எங்கும் உரையாடலுக்கான சாத்தியப்பாடு, வைதீக எதிர்ப்பு என்பதான தன்மைகள் இத்தொகுப்பு முழுதும் இழையோடுவதைக் காணலாம். 

    அரபுலக எழுச்சி, ஈழப்பிரச்சினை, பாகிஸ்தானுடனான உறவு என எந்தச் சிக்கலுக்கும் “தொடர்ந்த உரையாடலுக்கான சாத்தியமும், பன்மைத்துவம் தக்கவைக்கபடுதலுமே முக்கியம்” என வலியுறுத்துகிறார்.  ஈழச்சிக்கலுக்கு அடுத்தபடியாக காந்தி குறித்த இவரது பார்வைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. 

   நீதி செத்த உலகில் அறத்தைப் பேச இவருக்குக் கிடைத்த பெரு வாய்ப்பு காந்திதான். பெரியார், அம்பேத்கரைப் போற்றும் இவர், பெருகி வரும் வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள காந்தியின் உதவியை நாடுகிறார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எல்லாவற்றையும் அரசு-அதிகார கண்ணோட்டத்திலிருந்து சிந்திக்காமல் அரசுக்கு எதிராகவும் அரசுக்கு அப்பாலும் எனகிற நிலையிலிருந்து அணுக முயலும் அ.மார்க்ஸ் காந்தியைக்  கண்டடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காந்தியைக் கடுமையாக விமர்சித்த பெரியார்தான் இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னவரும் கூட என்பதை மறந்துவிட இயலுமா?? 




     காந்தி வலியுறுத்தியது அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive)  ஓர் தேசியம். தேசியம் என்பதை ஓர் அரசியல் வகையினமாக அன்றி கலாச்சாரமாக அவர் பார்க்கவில்லை. சுயாட்சி என்ற கருத்துடன் அரசற்ற நிலையை (anarchy) விரும்பியவர் காந்தி. காந்தியின் சிந்தனைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் அடிநாதமாக ஒன்றிணைக்கும் இழை இருப்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். கடும் நோய்வாய்பட்டபோது ஊசிகளைத் தவிர்த்த காந்தி ரயில் பயணங்களை மறுத்ததில்லை என்று சொல்லும் மார்க்ஸ் நவீன தொழில்நுட்பங்களுக்கு அவரை ஒரு வறட்டுத்தனமான  எதிரியாகக் கட்டமைக்க முடியாது என்றும் சொல்கிறார். 

   டால்ஸ்டாய் போன்ற உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் முதல் ஈன்ஸ்டின் உள்ளிட்ட அறிஞர்கள் வரை தேசபக்தியை ஏன் வெறுத்தார்கள் என கேள்விகேட்டு அதற்கான விடையும் தேடுகிறார். தேசபக்தி உணர்வு இயற்கையானதல்ல. அது அறிவுக்குப் புறம்பானது; ஆபத்தானது. மானுடத்தை நேசிப்பவர்கள் தேசபக்தியை வெறுக்கத்தானே முடியும்?

  பெரியாரிடமிருந்து அண்ணா வேறுபடும் புள்ளிகளை மிக நுணுக்கமாக சுட்டுகிறார். இதன் பொருள் அண்ணாவை நிராகரிக்கிறார் என்பதல்ல. அ.மார்க்ஸை விமர்சிப்பவர்கள் இவ்வாறான எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுகின்றனர். “அடையாள அரசியல், அடையாளத்தைப் பேணுவதன் ஊடாக எல்லாவற்றையும் உள்ளடக்குவதாகவும் இருக்கவேண்டும். காந்தி, பெரியார், அண்ணா என்றொரு நல்ல பாரம்பரியம் நமக்கு இந்தவகையில் உண்டு” என்று அவர் சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும். 

  இந்நூலில் உள்ள அம்பேத்கர் குறித்த மூன்று கட்டுரைகள் அம்பேத்கர் குறித்து இதுவரை யாரும் தொடாத புதிய பரிமாணங்களை எட்டுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்த 'டாக்டர் அம்பேத்கரின் போர்க்குரல்' எனும் குறுநூல் அவரின் அரசியல் பார்வைகளைத் துல்லியப்படுத்தியது என்றால் இந்நூலிலுள்ள கட்டுரைகள் அம்பேத்கர் என்னும் சிந்தனையாளரின் இதயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது.



  அ.மார்க்ஸ் எழுத்தில் ஓர் பிடித்த விடயம் என்னவெனில்  எந்த சிக்கலான கோட்பாடுகளைச் சொல்லும்போதும் அதற்கு எளிய உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் நிகழ்த்திவிடுவார். அதைபோல சமயம் பார்த்து குறைகளை நேருக்குநேர் சுட்டும் பண்பு  அநாயசமானது. 

     விக்ரமாதித்யன் மணிவிழாவிற்கு கூடிய எழுத்தாளர்களைப் பட்டியலிட்டு விக்ரமாதித்யன் என்ன கனிமொழியா இல்லை தமிழச்சியா? இத்தனை எழுத்தாளர்கள் குவிந்திருந்ததே பெரிய விஷயமில்லையா? என்று கேட்பார். கூடவே விக்ரமாதித்யன் மீதான விமர்சனமும் சட்டென்று வரும். “ஒருபக்கம் அப்பட்டமான சைவப் பிள்ளைமார்த்தனம்; மறுபக்கம் அசாத்தியமான கலகக் குணம், முழுசான அதுதானே விக்ரமாதித்யன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர் ஒழுங்கான சைவப்பிள்ளையும் கிடையாது, கலகக்காரனும் இல்லை” என்று கருத்துரைப்பார். தமிழ் அறிவுலகில் இவ்வாறு வெளிப்படையாகப் பேசும் ஆளுமைகள் அரிது.

     மன்மோகன் சிங் மீதான விமர்சனத்துடன் கூடவே அவரது மகளும் அமெரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளருமான அம்ரித்சிங்கை பாராட்டுகிறார். கனிமொழியின் அணு ஒப்பந்ததிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். இங்கு பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன் சிறைப்பட நேர்ந்ததை  வருத்தத்துடன் பதிவு செய்கிறார். புலவர் கலியபெருமாள் அவரது மனைவி, மகன்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது இரு மகள்களுக்கு அடைக்கலம் கொடுத்து தனது பள்ளியில் சேர்த்தக் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாளின் மனைவியின் சகோதரி அனந்தநாயகி அம்மையார் பற்றி இப்பத்தியில் எழுதி மு.கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார். அப்பாவி பெண்மணியை சிறைவைக்கக் காரணமாக இருந்தவர் தனது மகள் சிறைப்பட்டதற்குப் புலம்பும்போது ஒரு உயிர்ப்பு மிகு அறிவுஜீவி எப்படி மவுனமாக இருக்கமுடியும்?

    நிறப்பிரிகை காலத்தில் விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த கவனத்தை ஈர்த்த அ.மார்க்ஸ் இன்றும் தனது ஆய்வுத்தேடலை பல்வேறு புதிய களங்களில் தொடந்த வண்ணம் உள்ளார். சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’, ‘இணைப்புண்ட வரலாறுகள்’ போன்ற புதிய பார்வைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். 

  ஆங்கில நூற்கள் குறித்து மட்டுமின்றி. செயல்வழிக் கற்றல் பற்றி பேரா. கல்யாணி வெளியிட்ட குறு வெளியீடுகள் குறித்தும் தனது பதிவை மேற்கொள்கிறார். கோட்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் பாலை நிலவன் கதைகள், யவனிகா ஶ்ரீராம் கவிதைகள், 'வாத்தியார்', 'மறுபக்கம்' ஆகிய நாவல்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். தமிழ் எழுத்துலகில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட 'வாத்தியார்' நூலைத் தேடி எடுத்து அடையாளம் காட்டிய அவர் விமர்சிக்க வேண்டியவற்றைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார். 

   மிலன் குந்தேரா முன்வைக்கும் வரலாற்றுணர்வு கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் அரிது என்கிறார். தாகூர், டால்ஸ்டாய் போன்று தமிழ் எழுத்தாளர்கள் அறவியல் நிலை எடுக்கும் வரை இங்கு காத்திரமான படைப்புகள் தோன்ற வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார். 

   தேசத்திலிருந்து வரலாற்றை விடுவிக்கவேண்டிய தேவை பற்றி வலியுறுத்துகிறார். புனைவுகள் வழியே தமிழ், இந்திய வரலாறு கட்டமைக்கப்படுவதில் உள்ள ஆபத்தையும், தொல்லியல் தோண்டிகள் இதற்கு உறுதுணையாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். 

  சோழப்பெருமை பேசும் தமிழ்தேசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று வெளிப்படையாக நிலப்பிரபுத்துவப் பெருமைகளைப் முன்னிறுத்தத் துணிந்துள்ளதைச் சுட்டி, இதன் பின்னாலுள்ள பாசிச அம்சங்களை தோலுரிக்கிறார். யாரும் செய்ய மறுக்கும் இப்பணிகளைச் செய்ய இன்றைய தமிழ்ச்சூழலில் மார்க்ஸை விட்டால் யாருமில்லை. வரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை  பரமசிவ அய்யரின் ‘Ramayana and Lanka’ என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத் தக்கது.. 

  தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, “சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட.” என்று சொல்லிவிட்டு, “பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை” என்றும் சொல்கிறார். 

  ‘விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல்” என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.


 ஆகஸ்ட் 20, 2015                         மு.சிவகுருநாதன்                                         
 திருவாரூர்.


(உயிர்மை வெளியீடாக வரவிருக்கிற அ.மார்க்ஸ் –ன் ‘பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்’, என்ற ‘தீராநதி’ கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை. அ.மார்க்ஸின் முகநூல் பக்கத்திலிருந்து…)


நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக