செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

அரசியல் சட்டத்தை அமலாக்கும் அணி அமைப்போம்!


அரசியல் சட்டத்தை அமலாக்கும் அணி அமைப்போம்!


  

 வழக்கறிஞர் பொ.இரத்தினம்

அமைப்பாளர்,

பகத்சிங் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: 9443458118




       எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும் கல்விக் கொள்ளையர்களில் ஒருவருமான பாரிவேந்தர் என்னும் பச்சமுத்து பலகோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை வரவேற்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


    இவரது மகன் அன்புமணி ராமதாஸ் மீது ஒரு குற்றப் பத்தரிக்கை மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கான குற்றப்பத்தரிக்கைள் இன்னும் தாக்கல் செய்யபடவேண்டியுள்ளது. எல்லாம் அரசியல், சமூகச் சீரழிவின் வெளிப்பாடு. அன்புமணி ராமதாஸ் அய்ந்தாண்டு காலம் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தகாலம் மட்டுமல்லாது, தலித் எழில்மலை அப்பொறுப்பை வகித்த காலம் தொட்டே கமிஷன் ஏஜென்டாக செயல்பட்டு வந்துள்ளார். இப்போது இவர்கள் நேர்மைக்கு பாடம் நடத்துவது வெட்கக்கேடானது. மக்கள் இவர்களை நிராகரித்து ஒதுக்கியது நல்ல செய்தி. ஆனால் அந்த அளவிற்கு அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டார்கள் என்று சொல்லமுடியாது. 


    இங்கு தி.மு.க., அ.தி.மு.க. என்கிற இரு புள்ளிகளில் அரசியல் கட்டமைக்கப்படுகிறது. ஏதேச்சதிகாரம், ஊழல், சீரழிவு ஆகியவற்றின் மொத்த உருவமாக இவை காட்சியளிக்கின்றன. இந்தக் கட்சிகள் குறித்த போலியான பிம்பமும் மாயையும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. 


      இந்தியாவில் உண்மையான இடதுசாரி இயக்கம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆதிக்கச்சாதியினர் அன்றைய பரபரப்பிற்கு தொடங்கப்பட்ட இயக்கங்களாக இவை எஞ்சியிருக்கின்றன. புத்தமதத்தில் நுழைந்து அன்று இவர்கள் செய்த அக்கிரமங்களை இன்று இடதுசாரி இயக்கத்திலும் செய்துள்ளனர். மதமே மோசடி என்ற புத்தரை மதமாக்கி அதன்மூலம் இவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இந்திய வரலாறெங்கும் இத்தகைய சீரழிவுகளும் துரோகங்களும் தொடர்கதையாகி இருக்கின்றன.


      கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் மோசடிகள்; குப்பைகள். இங்கு அரசியல் சட்டம் காணமற்போய்விடுகிறது. அரசியல் சட்டம் சட்டக்கல்லூரி வகுப்ப்பறைகளில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. 


     பச்சமுத்து ஒருவர் மட்டுமல்ல; தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் இந்தச் சீரழிவின் உச்சம். நாமக்கலில் நடைபெறும் கல்விக்கொள்ளைகள் பயங்கரமானது. இவைகள் எதற்கும் ரசீதுகள் தருவதில்லை. ஒரு சிறிய நகரத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்களை குவிப்பது எவ்வளவு பெரிய வன்முறை? இந்தக் கல்வி நிறுவனங்களை நடத்துவோரில் பலர் முன்னாள் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள். அரசியல்வாதிகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு.  இவைகள் கல்வி நிறுவனங்கள் அல்ல; சிறைக்கூடங்கள், வதை முகாம்கள். இங்கு மாணவகளிடம் காட்டப்படும் வன்முறைக்கு ஆண்டுதோறும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்; பலர் மனநிலைப் பிறழ்வுக்கு ஆட்படுகின்றனர். 


     அரசியல் சட்டத்தை முகமூடியாக்கி கொள்ளையடிப்பதைத் தொடர்ந்து செய்கின்றனர். கல்வி நிறுவனங்கள், மருத்துவக்கல்லூரிகள் அனைத்துமே கொள்ளைக்கும்பல்; இங்கு நடப்பது சூதாட்டம். 

         நீதிபதி கிருஷ்ணய்யர் இருந்தபோது அவரைச் சந்திக்க மதுரை சோக்கோ அறக்கட்டளை மகபூப் பாட்ஷா உடன் கொச்சி சென்றிருந்தோம். அப்போது தலைமை நீதிபதி சதாசிவம் வந்திருந்தார். ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு கோடிக்கணக்கில் பணம் லஞ்சம் அளிக்கும்போது கையும் களவுமாக பிடிபட்டிருந்த சமயம் அது. குடும்பத் தகராறு காரணமாக அக்குடும்பத்தைச் செர்ந்தவர்களே சி.பி.அய். க்கு தகவல் அளித்து இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது. 

     அப்போது தலைமை நீதிபதி சதாசிவம் என்னிடம், “ரெத்தினம், ராஜேஷ்வரன் தான் என்னை மேல்மருவத்தூர் அழைத்துப் போனார். இப்போது அங்கு செல்வதை நிறுத்திவிட்டேன் என்றார். “நாங்கள் சின்ன வயதிலிருந்தே இதையெல்லாம் நம்புவது இல்லை. நீங்கள் மட்டும் ஏன் இப்படி நம்பி ஏமாந்து போறீங்க”, என்று நான் கேட்டபோது சிரித்துக்கொண்டார்.


   இங்கு அரசு என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. அய்ந்தாண்டுகளுக்கு ஓர் முறை தேர்தல் கூத்து நடக்கிறது. அரசியல் சட்டம் செயல்படவேயில்லை. அதைப்போலவே நீதிமன்றங்கள் என்கிற அமைப்பும் இந்தியாவில் இல்லை. அதற்கு மாறாக அரசியல் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் கும்பல் ஒன்றுதான் உள்ளது.  நீதிபதிகள் நியமனத்தை இவர்களே எடுத்துக்கொண்டார்கள். இந்தச் சீரழிவு 2016 இல் உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒரிசாவில் தன் மனைவியின் பிணத்தைத் தூக்கிக் கொண்டு 10 கி.மீ. நடக்கும் அவலம் நடக்கிறது. 


     வெளிநாட்டிலிருந்து வரும் தீவிரவாதிகள் உண்மையான எதிரிகளே அல்ல. அவர்கள் அந்நாட்டு மக்களை ஏமாற்றி இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துபவர்கள். உள்நாட்டு துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள். இந்த உள்நாடுத் துரோகிகளிடம் குவிந்துள்ள கள்ளப்பணத்தைக் கைப்பற்றினால் இந்தியாவில் மூன்று அய்ந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்தமுடியும். 
  

  தலைமை நீதிபதி அரங்கில் பேசும்போது வெளிப்படையாக அழுது, கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறார். ஆனால் அவரிடம் வரும் வழக்கைக்கூட ஒழுங்காக நடத்துவதில்லை. நீதிபதி கர்ணன் மீதான வழக்கறிஞர் லஜபதிராய் தொடர்ந்த ரிட் வழக்கொன்றில் இதே தலைமைநீதிபதி வழக்கை திரும்பப் பெறவைத்தார். நீதிபதிகள் மீது புகார் வந்தால் அதை வாங்கி தனியே வைத்துக்கொண்டு குப்பைக்கூடைக்கு அனுப்பும் நடைமுறை ஒன்றை தலைமை நீதிமன்றம் கடைபிடிக்கிறது.

 
    ஓய்வு பெற்ற தலைமை நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள், தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற கல்லூரிப் பேராசிரியர்கள், பலதுறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சமூகத்தின் மீது அக்கறை கொண்டோர் அடங்கிய அரசியல் சட்டத்தை அமல்படுத்தும் அணியை உருவாக்குவோம். 

       வெளிநாட்டுக்காரர்ளைவிட இந்த உள்நாடுத் துரோகிகள் மிவும் மோமாவர்கள். இவர்ளுக்கு எதிராமீண்டும் ஓர் சுதந்திப்போர் த்வேண்டியுள்து. அதற்கு ஒத்ருத்துடையோர்ளின் ஒருங்கிணைப்பும் வும் தேவை.
 
நன்றி:  வழக்கறிஞர் பொ.இரத்தினம்

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

மீண்டும்…? - மு.சிவகுருநாதன்



மீண்டும்…?               - மு.சிவகுருநாதன்


         கடந்த சில மாதங்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகள் எதுவும் இடவில்லை. ஜனவரி மற்றும் ஜூனில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளையும் தவறவிட வேண்டியதாயிற்று. தஞ்சையில் நடந்த புத்தகக் காட்சிக்கு மட்டும் இறுதிநாள் (ஜூலை 25, 2016)  சென்றேன். இது யானைப்பசிக்கு சோளப்பொறி மட்டுமே.

    இரண்டு கண்காட்சியிலும் சில நூற்களை நண்பர் புலம் லோகநாதன் மூலம் வாங்கி அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்! என் கைகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனக்கும் வேறு வழியில்லை. அவர் எனக்கு புத்தகங்களை அனுப்பி வைப்பதற்குள் 2017 ஜனவரி வந்துவிடும் என்று நினைக்கிறேன். இனி பழைய நூற்களைப் படிக்க வேண்டியதுதான்.

     நான் வாசிக்கும் சில நூற்கள் பற்றிய குறிப்புகளை எழுதிவந்தேன். அந்தத் தொடர் 39 இல் அப்படியே நிற்கிறது. வாசிக்கும், எழுதும்   சூழல் சரிவர அமையவில்லை. இனி நேரம் கிடைக்கும்போது படிக்கவும், எழுதவும் செய்யவேண்டும். இந்த காலத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்காக சில பதிவுகளை மட்டும் வெளியிட்டேன். 

   எனது இணையருக்கு இரண்டாவது பெண்குழந்தை ஜூன் 13, 2016 இல் பிறந்துள்ளது. முதல்பெண் கவிநிலா; இரண்டாவது மகளுக்கு கயல்நிலா என்று பெயர் வைத்துள்ளோம். 

   மகப்பேறு என்கிற மனித உயிர்களின் இயற்கை நிகழ்வை ஓர் நோய்க்கூறாக மாற்றிய பெருமை அலோபதி மருத்துவமுறைக்கே உண்டு. இதை வருங்கால சந்ததிகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. 

    அதீத தொழில்நுட்பங்கள் நன்மைகளுக்குப் பதிலாக பெருந்தீமைகளை உற்பத்தி செய்கின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை எந்தளவில் பயன்படுத்துவது என்பதற்கு இங்கு வரையறை இல்லை. நோயாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. முற்றிலும் வணிகமய அலோபதி சூழலில் இவற்றை அளவோடு பயன்படுத்துவது என்பது நடக்க வாய்ப்பில்லாத ஒன்று. 

   விபத்து மற்றும் பல அவசர சிகிச்சைகளுக்கு அலோபதியே நிவாரணியாக இருந்தபோதிலும் மிகத்தீவிரமாக மாற்றுக்களை யோசிக்கவேண்டிய தேவை இன்று மிகவும் கூடியிருக்கிறது. மாற்றுக்களும் மையம் நோக்கி நகரும் இன்றைய நிலையில் இது மேலும் சிக்கலான நிலைதான்.

  வருங்கால சந்ததிகளை இந்த புதைச் சூழலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மாற்றுக்களைப் பற்றிப் பேசும்போது எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டியுள்ளது.  ஹோமியோபதி இன்று பெரும் வணிகமாக மாறியுள்ளது. சித்த மருத்துவம் போன்றவற்றிற்கும் விரைவில் இந்நிலை ஏற்படலாம்.

  இனி தொடர்ந்து சந்திப்போம். நன்றி.

புதன், ஆகஸ்ட் 10, 2016

தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.



தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.




-மு.சிவகுருநாதன் 

தோழர் ஏஜிகே



       நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை முறையையும் தலித்களுக்கு எதிரான கொடுமைகளுக்காகவும் தன் வாழ்நாளை வழங்கிப் போராடிய ஏஜிகே என அனைவராலும் அழைக்கப்படுகிற தோழர் .கஸ்தூரிரெங்கன் இன்று (10.08.2016) மாலை மரணமடைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.


      கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த தோழர் ஏஜிகே சற்று தேறிவந்த நிலையில் இன்று மாலை மரணமடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது


        இன்று காலை கூட அவரது இளைய புதல்வி அஜிதா தோழரது உடல்நிலை சீரடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். சென்ற மாதம் ஜூலை 17 இல் அவரது அந்தணப்பேட்டை இல்லத்திற்கு சென்று வந்தேன். அப்போதுதான் தஞ்சை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார். அவருடைய இணையர், புதல்வி அஜிதா, புதல்வர் டார்வின் ஆகியோர் மிகுந்த சிரத்தையோடு தோழரை கவனித்துக் கொண்டது நெகிழ்வாக இருந்தது


        2008 இல் சஞ்சாரம் இதழ் தொடங்கிய போது நண்பர் தய். கந்தசாமியுடன் ஏஜிகே வை நேர்காணல் செய்யவேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொண்டோம். இறுதி வரை இம்முயற்சி நடக்காமல் போனது குற்ற உணர்வாய்த் தொடர்கிறது


      பெரியாரிஸ்ட்டாக தொடங்கி மார்க்சிஸ்ட்டாக கீழத்தஞ்சை மாவட்ட தலித் விவசாயக் கூலிகளுக்காக போராடி தூக்குத்தண்டனைக் கைதியாக பல்லாண்டுகள் சிறையில் கழித்தவர்கள். மீண்டும் பொதுவுடைமை இயக்கம் மற்றும் திராவிடர் இயக்கத்தில் இணைந்தும், பின்னர் தமிழ் தேசியராக தமிழ ர் தன்மானப்பேரவை கண்டவர் ஏஜிகே. அவருக்கு பெரியாரிய, மார்க்சிய வீரவணக்கத்துடன் இறுதி அஞ்சலியை செலுத்துவோம்.


      அவருக்கான அஞ்சலியை தய். கந்தசாமி தனது முகநூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருப்பதை இங்கு சுட்ட விரும்புகிறேன்


தோழர்களே! நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை பண்ணையடிமை முறையாய் கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாண்டவமாடிய போது ஆயிரங்கால் பூதமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று சமராடியது செங்கொடி இயக்கம்.சேரிகள் தோறும் செங்கொடி நிமிர்ந்தது. இயக்க செயல் வீரர்களில் ஏஜிகே என தோழமையோடும் நன்றியோடும் அழைக்கப்படும் தோழர் .ஜி.கஸ்தூரி ரங்கன் மறைந்தார் எனும் செய்தியை சற்றே முன் தோழர் கவின்மலர் முகநூல் வழி அறிவித்தார். சாகசக்காரனே! அதிகாரத்துக்குப் பணியாத எங்கள் அகங்காரமே!! உன்னையா மரணம் தீண்டியது? பெரியாரியக்கத்திலிருந்து செங்கொடி ஏந்தி வந்த எங்கள் மதிப்புக்குரிய தோழரே! சேரி மகனின் செவ்வணக்கம்!!” 


    அவருடைய இரண்டு நூல்கள் குறித்த எனது பதிவின் இணைப்பை அஞ்சலியாக இங்கு தருகிறேன்.


18 . போராளி ஏஜிகே நினைவுகளில் கீழத்தஞ்சை வரலாறு: சில குறிப்புகள்

http://musivagurunathan.blogspot.in/2015/12/18.html

18 . அடக்குமுறைகளும் போராட்ட வடிவங்களும்