வியாழன், ஆகஸ்ட் 25, 2016

மீண்டும்…? - மு.சிவகுருநாதன்மீண்டும்…?               - மு.சிவகுருநாதன்


         கடந்த சில மாதங்களாக முகநூல் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகள் எதுவும் இடவில்லை. ஜனவரி மற்றும் ஜூனில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகளையும் தவறவிட வேண்டியதாயிற்று. தஞ்சையில் நடந்த புத்தகக் காட்சிக்கு மட்டும் இறுதிநாள் (ஜூலை 25, 2016)  சென்றேன். இது யானைப்பசிக்கு சோளப்பொறி மட்டுமே.

    இரண்டு கண்காட்சியிலும் சில நூற்களை நண்பர் புலம் லோகநாதன் மூலம் வாங்கி அனுப்பச் சொன்னேன். அவர் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்! என் கைகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. எனக்கும் வேறு வழியில்லை. அவர் எனக்கு புத்தகங்களை அனுப்பி வைப்பதற்குள் 2017 ஜனவரி வந்துவிடும் என்று நினைக்கிறேன். இனி பழைய நூற்களைப் படிக்க வேண்டியதுதான்.

     நான் வாசிக்கும் சில நூற்கள் பற்றிய குறிப்புகளை எழுதிவந்தேன். அந்தத் தொடர் 39 இல் அப்படியே நிற்கிறது. வாசிக்கும், எழுதும்   சூழல் சரிவர அமையவில்லை. இனி நேரம் கிடைக்கும்போது படிக்கவும், எழுதவும் செய்யவேண்டும். இந்த காலத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்களுக்காக சில பதிவுகளை மட்டும் வெளியிட்டேன். 

   எனது இணையருக்கு இரண்டாவது பெண்குழந்தை ஜூன் 13, 2016 இல் பிறந்துள்ளது. முதல்பெண் கவிநிலா; இரண்டாவது மகளுக்கு கயல்நிலா என்று பெயர் வைத்துள்ளோம். 

   மகப்பேறு என்கிற மனித உயிர்களின் இயற்கை நிகழ்வை ஓர் நோய்க்கூறாக மாற்றிய பெருமை அலோபதி மருத்துவமுறைக்கே உண்டு. இதை வருங்கால சந்ததிகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. 

    அதீத தொழில்நுட்பங்கள் நன்மைகளுக்குப் பதிலாக பெருந்தீமைகளை உற்பத்தி செய்கின்றன. இத்தகைய தொழில்நுட்பங்களை எந்தளவில் பயன்படுத்துவது என்பதற்கு இங்கு வரையறை இல்லை. நோயாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. முற்றிலும் வணிகமய அலோபதி சூழலில் இவற்றை அளவோடு பயன்படுத்துவது என்பது நடக்க வாய்ப்பில்லாத ஒன்று. 

   விபத்து மற்றும் பல அவசர சிகிச்சைகளுக்கு அலோபதியே நிவாரணியாக இருந்தபோதிலும் மிகத்தீவிரமாக மாற்றுக்களை யோசிக்கவேண்டிய தேவை இன்று மிகவும் கூடியிருக்கிறது. மாற்றுக்களும் மையம் நோக்கி நகரும் இன்றைய நிலையில் இது மேலும் சிக்கலான நிலைதான்.

  வருங்கால சந்ததிகளை இந்த புதைச் சூழலிருந்து மீட்டெடுக்க வேண்டும். மாற்றுக்களைப் பற்றிப் பேசும்போது எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டியுள்ளது.  ஹோமியோபதி இன்று பெரும் வணிகமாக மாறியுள்ளது. சித்த மருத்துவம் போன்றவற்றிற்கும் விரைவில் இந்நிலை ஏற்படலாம்.

  இனி தொடர்ந்து சந்திப்போம். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக