புதன், ஆகஸ்ட் 10, 2016

தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.தோழர் ஏஜிகே வுக்கு செவ்வணக்கம்.
-மு.சிவகுருநாதன் 

தோழர் ஏஜிகே       நிலப்பிரபுத்துவ பண்ணையடிமை முறையையும் தலித்களுக்கு எதிரான கொடுமைகளுக்காகவும் தன் வாழ்நாளை வழங்கிப் போராடிய ஏஜிகே என அனைவராலும் அழைக்கப்படுகிற தோழர் .கஸ்தூரிரெங்கன் இன்று (10.08.2016) மாலை மரணமடைந்த செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.


      கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த தோழர் ஏஜிகே சற்று தேறிவந்த நிலையில் இன்று மாலை மரணமடைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது


        இன்று காலை கூட அவரது இளைய புதல்வி அஜிதா தோழரது உடல்நிலை சீரடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். சென்ற மாதம் ஜூலை 17 இல் அவரது அந்தணப்பேட்டை இல்லத்திற்கு சென்று வந்தேன். அப்போதுதான் தஞ்சை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருந்தார். அவருடைய இணையர், புதல்வி அஜிதா, புதல்வர் டார்வின் ஆகியோர் மிகுந்த சிரத்தையோடு தோழரை கவனித்துக் கொண்டது நெகிழ்வாக இருந்தது


        2008 இல் சஞ்சாரம் இதழ் தொடங்கிய போது நண்பர் தய். கந்தசாமியுடன் ஏஜிகே வை நேர்காணல் செய்யவேண்டும் என்ற ஆசையைப் பகிர்ந்து கொண்டோம். இறுதி வரை இம்முயற்சி நடக்காமல் போனது குற்ற உணர்வாய்த் தொடர்கிறது


      பெரியாரிஸ்ட்டாக தொடங்கி மார்க்சிஸ்ட்டாக கீழத்தஞ்சை மாவட்ட தலித் விவசாயக் கூலிகளுக்காக போராடி தூக்குத்தண்டனைக் கைதியாக பல்லாண்டுகள் சிறையில் கழித்தவர்கள். மீண்டும் பொதுவுடைமை இயக்கம் மற்றும் திராவிடர் இயக்கத்தில் இணைந்தும், பின்னர் தமிழ் தேசியராக தமிழ ர் தன்மானப்பேரவை கண்டவர் ஏஜிகே. அவருக்கு பெரியாரிய, மார்க்சிய வீரவணக்கத்துடன் இறுதி அஞ்சலியை செலுத்துவோம்.


      அவருக்கான அஞ்சலியை தய். கந்தசாமி தனது முகநூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டிருப்பதை இங்கு சுட்ட விரும்புகிறேன்


தோழர்களே! நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மை பண்ணையடிமை முறையாய் கீழத்தஞ்சை மாவட்டத்தில் தாண்டவமாடிய போது ஆயிரங்கால் பூதமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று சமராடியது செங்கொடி இயக்கம்.சேரிகள் தோறும் செங்கொடி நிமிர்ந்தது. இயக்க செயல் வீரர்களில் ஏஜிகே என தோழமையோடும் நன்றியோடும் அழைக்கப்படும் தோழர் .ஜி.கஸ்தூரி ரங்கன் மறைந்தார் எனும் செய்தியை சற்றே முன் தோழர் கவின்மலர் முகநூல் வழி அறிவித்தார். சாகசக்காரனே! அதிகாரத்துக்குப் பணியாத எங்கள் அகங்காரமே!! உன்னையா மரணம் தீண்டியது? பெரியாரியக்கத்திலிருந்து செங்கொடி ஏந்தி வந்த எங்கள் மதிப்புக்குரிய தோழரே! சேரி மகனின் செவ்வணக்கம்!!” 


    அவருடைய இரண்டு நூல்கள் குறித்த எனது பதிவின் இணைப்பை அஞ்சலியாக இங்கு தருகிறேன்.


18 . போராளி ஏஜிகே நினைவுகளில் கீழத்தஞ்சை வரலாறு: சில குறிப்புகள்

http://musivagurunathan.blogspot.in/2015/12/18.html

18 . அடக்குமுறைகளும் போராட்ட வடிவங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக