கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக…
(சமூக வலைத்தளங்களில் வெளியான கல்விக்குழப்பங்கள் தொடர் கட்டுரைகளும் ‘தி இந்து’ கட்டுரை ஒன்றும் பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ரன்) மூலம் நூலாக்கம் பெற்றுள்ளது. நேற்று (மார்ச் 11, 2017) இல் வெளியான அந்நூலின் முன்னுரையிலிருந்து...)
கல்வியில் கசடுகள் நீங்க…
மு.சிவகுருநாதன்
இவை மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான் பிரச்சினை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும் கூட. மிகவும் எளிமையான இவற்றைக் கூட கண்டுகொள்ளாத நமது சமூகமும் கல்விமுறையும் என்ன செய்கிறது? எங்கே போகிறது?
தலையணை சைஸில் நிறைய புத்தகங்களைப் பொதிமூட்டைபோல் சுமந்துசென்று படிப்பதுதான் கல்வி என்பதான மாயைகளும், பாடநூல்கள், பள்ளி மற்றும் கற்றல் சூழலிலுள்ள கற்பிதங்கள் தகர்க்கப்படவேண்டும். கல்வி விழிப்பை உண்டாக்குவது, சிந்திக்கத் தூண்டுவது. பெரியார் சொன்னது போல் நமது சிந்தனையில் தேங்கிப்போன கசடுகளை வெளியேற்றுவதாக அல்லவா கல்வி இருக்கவேண்டும்!
மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சியில் பாடநூல்களில் உள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டிய தருணத்தில் சிலரது ஏற்பும் பலரது எதிர்ப்பும் பதிவானது. பாடநூற்கள் ஆகச்சிறந்த அறிவாளிகள், கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எனவே பிழைகளுக்கு இடமில்லை, இவை பிழைகளே அல்ல என்பதே அந்த எதிர்ப்பின் சாரமாக இருந்தது.
பாடநூற்கள் தவிர்த்தப் பிற நூற்களை வாசிப்பதில் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஆர்வம், இவற்றை வாசிக்க வீடு மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இருக்கும் தடைகள் ஒருபுறமும் அச்சிட்ட அனைத்தையும் வேதமாகக் கருதும் சமூக மனநிலை இருப்பது மறுபுறமும், இவை இரண்டிற்குமான இடைவெளி இங்கு அவதானிக்கத்தக்கது.
பாடநூல்களைத் தாண்டி வாசிக்கும்போதுதான் இங்குள்ள பிழைகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. எனது வாசிப்பு அனுபவத்தில் கண்ட சிலவற்றை மட்டும் இங்கு பதிவு செய்துள்ளேன். இங்கு அனைத்து வகுப்புகள் மற்றும் பாடங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
நாமும் பாடநூல் பிழைகளைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறோம். ஆண்டுதோறும் பாடநூற்களின் ‘திருத்திய பதிப்புகள்’ வெளியிடப்படுகின்றன. “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”, என்பார்களே, அதைப்போல பிழைகள் களையப்பட்ட பாடில்லை. ‘தி இந்து’ (பிப். 05, 2015) கட்டுரை வெளியான பிறகு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது முழுமையடையவில்லை. திருத்தம் செய்தல் என்கிற போர்வையில் புதிய பிழைகளைக் கொண்டு சேர்ப்பது அவமானகரமானது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் வனவிலங்கு சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதாக புதிதாக இணைத்திருக்கிறார்கள்.
இதன் விளைவாக 'பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha), மகத் பேரணி ஆகியன திருத்தம் செய்யப்பட்ட நல்ல காரியம் நடத்துள்ளது. இவ்வளவு காலமும் ‘பெயின்டராக’ இருந்த ஹிட்லர் இவ்வாண்டேனும் ‘ஓவியராக’ மாறியதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம்.
இவற்றில் நான் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. ஏற்கனவே நிருபணமான உண்மைகள், கருத்தியல்கள் ஆகியவற்றை கல்விச்சூழலில் அணுகவும், நான் வாசித்த நூல்களோடு பாட நூற்களை ஒப்பிடவும் முயன்றுள்ளேன். அவ்வளவே.
பாடநூல்களையும் பள்ளி மற்றும் கல்விச்சூழலின் நடைமுறைகள், கற்பிதங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இவற்றைக் கருத்தியல் ரீதியாக இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.
உதாரணமாக தேசப்பற்றை மட்டும் வலிந்து வலியுறுத்தும் நிலையில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசியல் சட்டத்தில் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றைப் பொதுத் தளத்தில் குறிப்பாக நடைமுறைப்படுத்த அரசுகள் ஏதேனும் செய்ய வேண்டுமல்லவா? அதற்கான கடைமையும் பொறுப்பும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டல்லவா!
கல்விக் குழப்பங்கள் (கட்டுரைத் தொகுப்பு)
மு.சிவகுருநாதன்
வெளியீடு:
புக் ஃபார் சில்ரன்
பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..
முதல்பதிப்பு: பிப்ரவரி 2017
பக்கம்: 175
விலை: ரூ. 140
விற்பனை உரிமை:
பாரதி புத்தகாலயம்
தொடர்பு முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.
தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935
மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: www.thamizhbooks.com
1 கருத்து:
அவசியம் வாங்குவோம் ஐயா
நன்றி
கருத்துரையிடுக