ஆசிரியர்கள்
வாசிப்பு – 001
(நல்ல
நூல்களைத் தேடி…)
மு.சிவகுருநாதன்
புதிய பாடநூல்களுக்கான பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன.
நாம் தொடர்ந்து சொல்வதைப்போல பயிற்சியின் எந்த அம்சமும் மாறுவதேயில்லை. பயிற்சியின்
கால அளவு மட்டுமே மாறிக்கொண்டேயிருக்கிறது. பயிற்சிகள் தொடங்கும் நேரம் காலை
10.00, 09.30, 09.00 என்றும் முடியும் நேரம் மாலை 04.30, 05.00, 05.30 என்ற மாற்றத்தைத்
தவிர வேறு எதையும் உணர முடியவில்லை. ‘தடுப்புக் காவல்’ நேரத்தை அதிகரித்தால் பயிற்சிகளின் நோக்கம் நிறைவேறும் என்பதைவிட பெரிய அபத்தம் வேறு
இருக்க முடியாது.
மாணவர்கள் மட்டுமே படிக்கவேண்டும் என்பதெல்லாம்
பழங்கால (குருகுல) வழக்கம். கல்வி என்பது ஒரு வழிப்பாதை அல்ல. மாணவர்கள், ஆசிரியர்கள்,
பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பும் கற்க வேண்டிய தேவையிருக்கிறது.
புதிய பாடநூல்களில் மேலதிக வாசிப்பிற்கு நூல் பட்டியல்கள்
அளிக்கப்பட்டுள்ளன. இவைகள் ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் ஆங்கில மயம். பாடநூல்கள் ஆங்கிலத்தில்
எழுதப்படுகின்றன; பிறகு தமிழில் பெயர்க்கப்படுகின்றன. இதனால் மொழிநடைக் குழப்பங்கள்,
அபத்தங்கள் நிறைய உருவாகின்றன. தமிழ் வழிப் பாடநூல்களிலாவது தமிழ்நூல்களின் பட்டியல்
இருக்க வேண்டாமா? தமிழில் நல்ல நூல்கள் இல்லை என்பதும் ஒரு காரணம் என்று சிலர் எண்ணக்கூடும்.
அப்படிச் சொல்லிவிட முடியாது. முன்பைவிட தமிழில் நிறைய நல்ல நூல்கள் வந்துகொண்டுதான்
இருக்கின்றன. இவை பொது நூலகங்களையோ, பள்ளி நூலகங்களையோ எட்டுவதில்லை என்பதே உண்மை.
பள்ளி நூலகங்களில் குவிக்கப்பட்டிருப்பவை பெரும் குப்பைகள் என்பதைச் சொல்லி விளக்க
வேண்டியதில்லை. நூல்களை வாங்குவதற்கு ‘தரகுப் பணமே’ இன்றி வேறு தர அளவுகோல்கள் இல்லை.
ஆங்கில நூல்களை நேரடியாக வாசிப்போருக்கு எவ்வித
சிக்கலும் இல்லை. தமிழை மட்டும் வாசிக்கக்கூடிய என்னைப் போன்றோருக்கு இவை அவசியமாகின்றது.
எல்லாம் தேர்வுக்கான தயாரிப்புகள் என்ற நிலையில் சமூக ஊடகங்களில் ‘study
materials’ மட்டுமே இங்கு பகிரப்படுவது இன்றைய கல்வியின் அவலமாக முன்நிற்கிறது.
குழந்தை நூல்கள், கல்வி தொடர்பான நூல்கள் சிறிது
அறிமுகம் செய்யப்படுகின்றன. பாடம் தொடர்பான நூல்கள் கல்லூரிப் படிப்போடு முடிந்து போகின்றது.
கற்றல் எப்போதும் தேங்கிப் போவதல்ல; அது வற்றாது ஓடும் நதியைப் போன்றது. இவை மாணவர்கள்
மீது திணிப்பதற்கல்ல; நாம் வாசித்துத் தெளிவு பெறவும், மாணவர்களது அய்யங்களைத் தீர்க்க
உதவ மட்டுமே.
எல்லாரும் வாசிக்க வேண்டும் என்கிற உண்மையை ஒத்துக்கொள்ளும்
வேளையில் எதை வாசிப்பது என்ற கேள்வி தவிர்க்க இயலாத ஒன்று. நல்ல நூல்களைத் தேடிக் கண்டடைதலை
ஒரு கலை என்றே கூறலாம். மதனின் ‘வந்தார்கள்… வென்றார்கள்… நமது ஆசிரியர்களின் கையில்
பெரும் வரலாற்று நூலாக வலம் வருவது நமது கல்விமுறையின் சாபக்கேடு. கல்கியின் நாவலையொத்த
இதைப்போன்ற வரலாற்று நூல்கள் தமிழில் ஏராளம். அவைகளிலிருந்து நல்ல நூல்களைக் கண்டடைவது
சாதாரண பணியல்ல.
மொழி மற்றும் கலைப் பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாது
அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாட ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய நல்ல நூல்கள் சிலவற்றை
ஐந்தைந்தாக சிறிய குறிப்புகளுடன் இங்கு அறிமுகம் செய்யத் திட்டம்.
என்னிடம் இருக்கும் பதிப்பைக் கொண்டு இந்த அறிமுகம்.
அடுத்தப் பதிப்பு வந்திருப்பின் நூலின் விலையில் மாற்றம் இருக்கக் கூடும். அரசுடைமையாக்கப்பட்ட
நூல்கள் எனில் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கலாம். மொழிபெயர்ப்பு நூல்களெனில் ஒன்றிற்கு
மேற்பட்ட பதிப்புகள் இருக்கலாம்.
சு.கி.ஜெயகரன், பொ.வேல்சாமி ஆகியோரது ஐந்து நூல்கள்
முதல்கட்டமாக இங்கு அறிமுகம் ஆகின்றன.
01. மூதாதையரைத்
தேடி… சு.கி.ஜெயகரன்
ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரமிடஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் அனமென்சிஸ்,
ஆஸ்ட்ரேலோபிதகஸ் ஆஃப்ரிக்கானஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரோபஸ்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ்,
ஹோமோஹெய்டல் - பெர்கென்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் ஆர்கேயிக், ஹோமோசெபியன்ஸ் நியாண்டர்தாலென்ஸிஸ், டெனிஸோவன்,
ப்ளோரோஸியன்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் செபியன்ஸ் போன்ற பரிணாமத்தின் அனைத்துப் படிநிலைகளை
இந்நூலில் விளக்குகிறார் சு.கி.ஜெயகரன். உதாரணமாக ஹோமோ எரக்டஸ் ஐ எடுத்துக்கொண்டால் ஜாவா மனிதர், பீகிங் மனிதர், யானை வேட்டைக்காரர்கள்
(ஸ்பெயின்), நர்மதை (இந்தியா) மனிதர், ரத்தினபுரி (இலங்கை) மனிதர் என விரிவாக விளக்கப்படுவதை
இந்நூலில் காணலாம்.
02. குமரி
நில நீட்சி சு.கி.ஜெயகரன்
நான்காம்
பதிப்பு, டிச. 2012, பக்கம்: 224, விலை: ரூ. 175
நிலவியல் (Geology) ஆய்வாளர் சு.கி.ஜெயகரன்
அவர்களின் ‘குமரி நிலநீட்சி குமரிக்கண்டம்
(லெமூரியா) – ஓர் ஆய்வு’ என்ற நூலின் முதல்பதிப்பு டிச. 2002 வெளியாகி,
திருத்தப்பட்ட நான்காவது பதிப்பு டிச. 2012 இல் காலச்சுவடு பதிப்பகத்தால்
வெளியிடப்பட்டுள்ளது. இவரது முந்தைய ஆய்வு நூற்களில் மூதாதயரைத் தேடி (காலச்சுவடு), தளும்பல்
(உயிர்மை), மணல் மேல் கட்டிய பாலம் (காலச்சுவடு) ஆகிய சில.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள அறிஞர்
எஸ்.வி.ராஜதுரை, “அறிவியல் நலன் கருதி லெமூரியா கருதுகோள்களை இனியேனும்
கைவிட்டுவிடுவதுதான் அறிவுடைமை” என்கிறார். இந்நூலுக்கு அறிஞர் பொ.வேல்சாமி
காலச்சுவடு ஆகஸ்ட் 2005 இதழில்
‘அபத்தங்களை மறுக்கும் அறிவியல் ஆய்வு’ என்ற விரிவான மதிப்புரை எழுதினார். இது
அவரது ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ தொகுப்பில் (காலச்சுவடு பதிப்பகம்)
உள்ளது.
தமிழறிஞர்கள் கா.அப்பாதுரையார், தேவநேயப்பாவாணர்,
ந.சி.கந்தையாப்பிள்ளை ஆகியோரால் உயர்த்திப்பிடிக்கப்பட்ட லெமூரியாக் கண்டப் புனைவு
திராவிட இனம், தமிழ் மொழிக்காகச் சொல்லப்பட்டது அல்ல. இதை இவர்களும் உணராமற்போதுதான்
தமிழின் பேரவலம். ஆரியர்களின் மேன்மையை வலியுறுத்த பிரம்ம ஞான சபையினரால் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் கற்பனைக் கோட்பாடு இது.
இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள், கிழக்கத்திய மறைஞான நூற்கள், உள்ளுணர்வு
(Intution), புலன் கடந்த உணர்வு (Extrasensor Perception) ஆகியன மட்டுமே. இதுவே குமரிக்கண்டப்
புனைவைத் தகர்க்கப் போதுமானது.
03. பொற்காலங்களும்
இருண்ட காலங்களும் பொ.வேல்சாமி
மூன்றாம்
பதிப்பு, ஆக. 2009, பக்கம்: 240, விலை: ரூ. 180
பொ.வேல்சாமி,
தமிழறிஞர். புலவர் பட்டம் பெற்றவர். ‘நிறப்பிரிகை’ ஆசிரியர் குழுவில் இடம் பெற்றவர்.
இவரது ஆய்வுக்கட்டுரைகள் மூலம் அனைவரும் கண்டடையாத
புதிய திறப்புகளையும் வெளிச்சங்களையும் ஏற்படுத்தியவர். விளிம்பு நிலையினர் பற்றிய
பார்வைக்கோணங்களை வெளிப்படுத்தியவர்.
ஒப்பியல்
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் எழுதிய மற்றொரு தமிழ் நூலான பரதகண்ட புராதனம் (வேதங்கள், இதிகாசங்கள்,
புராணங்கள் பற்றிய விமர்சனம்) அறிஞர் பொ.வேல்சாமி அவர்களால் தேடி எடுத்து
பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலை நியூ
செஞ்சுரி புக் ஹவுஸ் மே 2012 இல் வெளியிட்டது.
பேராசிரியர் பெருமக்களை மட்டுமே அறிஞராக கருதும்
போக்கு தமிழின் அவலம். மயிலை சீனி. வேங்கடசாமி போன்ற ஆய்வறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டுவதற்கு
இத்தகைய ‘நவீன தீண்டாமையே’ காரணம். இந்த மூன்று நூல்களும் அறிஞர் பொ.வேல்சாமியுடையவை.
பொற்காலங்கள் – இருண்ட காலங்கள் பற்றிய பார்வையை
தலைகீழாக அணுக வேண்டியதை வலியுறுத்தும் கட்டுரை, தமிழிசை, திராவிட இயக்கங்கள், கீதையின்
அரசியல், ‘கல்கி’யின் இந்துத்துவம், மருது பாண்டியர்கள், பாரதி, ஈ.வெ.ரா., ப.சிங்காரம்,
எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல்வேறு பார்வைகள் இந்நூலில் காணக்கிடைக்கின்றன.
04. கோயில்
– நிலம் – சாதி பொ.வேல்சாமி
இரண்டாம்
பதிப்பு, டிச. 2008, பக்கம்: 136, விலை: ரூ. 90
பொ.வேல்சாமியின் இரண்டாவது நூலிது. ‘கோயில் – நிலம்
– சாதி’ குறித்த ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் இதில் உள்ளன. குடவோலை முறை தேர்தல் அல்ல,
திருவுளச்சீட்டு என்று விளக்கும் கட்டுரை இதில் இடம் பெறுகிறது.
05. பொய்யும்
வழுவும் பொ.வேல்சாமி
முதல்
பதிப்பு, டிச. 2010, பக்கம்: 176, விலை: ரூ. 140
இந்த மூன்றாவது
நூலில் பிராமி எழுத்துகள், சிந்துவெளிக் குறியீடுகள், லெமூரியாக் கணடம் பற்றிய பொய்மைகளைத்
தோலுரிக்கும் கட்டுரை இருக்கிறது. கா.சிவத்தம்பியின் ஆய்வுகள், இந்தியத் தத்துவம்,
நல்லாப்பிள்ளைப் பாரதம் ஆகியன பற்றிய கட்டுரைகளும் உண்டு. பெரியாரின் கருத்துகளை நேர்காணல்
வடிவில் வெளியிடும் கட்டுரையும் உள்ளது. பாவலர் பாலசுந்தரம், உ.வே.சா., கோபாலையர் போன்ற
பல்வேறு ஆளுமைகள் இந்நூலில் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
இந்த ஐந்து நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
வெளியீடு:
காலச்சுவடு
பதிப்பகம்,
669,
கே.பி.சாலை,
நாகர்கோவில்
– 629001.
பேச:
04652 – 278525.
மின்னஞ்சல்:
kalachuvadu@sancharnet.in
இணையதளம்:
www.kalachuvadu.com
சென்னை
முகவரி:
காலச்சுவடு,
257,
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
சென்னை
– 600005,
தொலைபேசி:
044 28441672.
(பட்டியல் நீளும்...)
(பட்டியல் நீளும்...)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக