வியாழன், ஆகஸ்ட் 02, 2018

பாடநூல்களில் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்


பாடநூல்களில் மொழிபெயர்ப்புக் குளறுபடிகள்

மு.சிவகுருநாதன்


       பாடநூல்கள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றன. தொடக்கநிலையில்கூட பாடநூல்கள் முற்றிலும் தமிழில் எழுதப்படாதது மிகவும் வருத்தமளிப்பது. பின்னர் செய்யப்படும் மொழிபெயர்ப்பு குளறுபடிகளும் அபத்தங்களும் நிறைந்து காணப்படுகிறது. 

     மொழியுணர்வு என்கிற பெயரில் பெரும் அபத்தக்கூத்துகளை பெருமளவு அரங்கேற்றுபவர்கள் தமிழர்களே! தமிழ் வழிக்கல்வி குறித்தெல்லாம் பேசுவோர்கூட பாடநூல்கள் தமிழில் எழுதப்படாதது குறித்து எவ்வித சலனமும் எழுப்புவதில்லை. வெறும் உணர்வுக்கு ஆள்பட்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் வளர்த்தெடுக்கப்பட்டது வேதனைக்குரிய ஒன்று. 

    ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நன்கொடை வசூலித்து முடித்து, இப்போது அடுத்த பல்கலைக் கழகத்திற்குத் தொடங்கியாகிவிட்டது. தமிழக அரசும் கூட 10 கோடி நன்கொடை வழங்கியது. தமிழைச் செம்மொழி என அறிவித்தாகிவிட்டது. எத்தனை இந்தியப் பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் தொடங்கப்பட்டனவா? செம்மொழி ஆய்வு நிறுவனம் ஏன் செயல்படாமல் முடங்கியிருக்கிறது. இங்குள்ள மொழி சார்ந்த நிறுவனங்கள் செயல்பட யார் நன்கொடைகள் திரட்டுவது? 

   தமிழ்ப் பலகலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம்மொழி ஆய்வு நிறுவனம், தமிழ் இணைய கல்விக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கிறது? அங்கு என்ன மாதிரியான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன? இந்நிறுவனங்கள் ஏன் உயிர்ப்புடன் இயங்கவில்லை? ஏன் சாகடிக்கப்படுகின்றன? 

    திருவள்ளுவர் சிலை அமைத்தல், தமிழன்னை சிலை நிறுவுதல், தமிழ்நாடு என்ற வடிவில் கட்டடங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்களில் ‘தமிழ் வாழ்க’ என்று விளக்கொளிர வைத்தல் என்பது போன்ற செயல்பாடுகள் மொழியை வளர்ப்பதான பாவனை இங்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. 

    கோணங்கியின் எழுத்துகளைப் படித்துப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் தமிழ்நாட்டுப் பாடநூல்களைப் படித்து விளங்கிக் கொள்வது கடினம் என்று நான் முன்பே எழுதியிருக்கிறேன். அதை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் அதை ஏற்கவில்லை. காரணம் கோணங்கியின் எழுத்து அவர்களுக்குப் பிடிக்காது என்பதே. மிகவும் செயற்கையான மொழிநடை வாசிப்பிற்குத் தடை என்பதை மட்டும் இங்கு சொல்லி வைக்கலாம்.

    மொழிநடை, மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் போன்றவை பாடநூலைப் படிப்பதற்குத் தடை ஏற்படுத்துகின்றன. மேலும் ஒப்பீட்டளவில் ஆங்கில வழிப் பாடநூல் படிப்பதற்கு எளிமையாக உள்ளது என்று அதனைத் தேர்ந்தெடுக்கும் போக்கு உள்ளதையும் இங்கு அவதானிக்கலாம்.

    இதனால்தான் நேரடியாகத் தமிழில் எழுதுங்கள் என்று கோருகிறோம். அதுமட்டும் போதாது. மொழியாளுமை உடைய ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தவிர்த்த படைப்பாளிகள் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று நான் நம்புகிறேன். அதையேத் தொடந்து வலியுறுத்துகிறோம்.

    ‘An Uncertain Glory’, என்ற நூல்  அமர்த்தியா சென் எழுதியதாகக் குறிப்பிட்டு அந்நூலிலிருந்து சில கருத்துகள் 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலின் பொருளியல் பகுதியில் உள்ளது. ‘An Uncertain Glory’ என்ற புத்தகத்தை எழுதியவர் ----------. என "கோடிட்ட இடத்தை நிரப்புக" பயிற்சியில் ஒரு வினாவும் கேட்கப்பட்டுள்ளது. (9 ஆம் வகுப்பு சமூக அறிவியல், பக். 205, 206)

   உண்மையில் இந்த நூலின் முழுப்பெயர் “An Uncertain Glory: India and its contradictions”. நமது நாட்டின் பொருளியல் அறிஞர் அமர்த்தியா சென்னும், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் பேராசிரியர் ஜீன் டிரீஸ் - ம் இணைந்து எழுதியது இந்நூல். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜீன் டிரீஸ் இந்தியாவில் வசிக்கிறார்; அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியர். புத்தகத்த்தின் பெயரைச் சுருக்குவதாவது பரவாயில்லை. இணையாசிரியரின் பெயரை மறைப்பது அறிவுத் திருட்டல்லவா! பாடநூல் குழுவினர் இந்த நூலைப் பார்த்திருக்கிறார்களா என்பதிலேயே அய்யம் வருகிறது.

   இந்நூல் இப்போது பாரதி புத்தகாலய வெளியீடாக தமிழிலும் கிடைக்கிறது. “நிச்சயமற்ற பெருமை: இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்”, என்னும் ஜீன் டிரீஸ், அமர்தியா சென் நூலை பேரா.பொன்னுராஜ் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். (பாரதி புத்தகாலய டிச. 2016 வெளியீடு, விலை: ரூ. 350)

   இதைப்போல அபத்தம் முன்பும் நடந்துள்ளது. ‘இந்தியா 2020’ எனும் நூல் அப்துல்கலாம் எழுதியதாக இன்னும் சொல்லப்பட்டு வருகிறது. ய.சு. ராஜனும் அப்துல்கலாமும்  சேர்ந்து எழுதிய அந்நூல், இன்னொரு வகையில் பார்த்தால் பல்வேறு குழு அறிக்கைகளின் தொகுப்பே இது. இந்திய, தமிழ் அறிவுலகம் இவ்வளவு தரம் தாழ்வது நல்லதல்ல.

      QR code செய்திகளையும் நன்றாக உற்றுநோக்கும்போது பல்வேறு அபத்தங்கள் வெளிப்படுகின்றன. குடவோலை முறை பற்றிப் பேசும்போது ஊர் 30 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. வாரியமும் வார்டும் ஒன்றல்ல. அதைபோலவே இன்றுள்ள உள்ளாட்சி முறைக்கும் குடவோலை முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் கிடைத்த இரு கல்வெட்டுக்களில் உள்ள அக்கால கிராம சபையைத் தேர்வு செய்யும் முறையான ‘குடவோலை முறை’ என்ற திருவுளச்சீட்டு முறையை இன்றைய மக்களாட்சி முறையோடு ஒப்பிடக்கூடிய அபாயம் வரலாற்றின் அவலங்களுள் ஒன்று. 1911 இல்  எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் தொடங்கிவைத்த இந்தவேலையை தற்போது தமிழ் தேசியர்கள் தொடர்கின்றனர். பார்ப்பன, வருணசிரம, இந்துத்துவ வரலாற்றாசிரியர்கள் இவர்களுக்கு ஆதாரங்களாக உள்ளனர். 

      தோட்ட வாரியம், ஏரி வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், உதாசீன வாரியம் என்ற பலதரப்பட்ட வாரியப் பொறுப்புகளுக்கு இவ்வாறு திருவுளச்சீட்டுப் பயன்படுத்தப்பட்டது. வாரியம் என்பது ஒரு பொறுப்பு அல்லது பதவி; இது வார்டு அல்ல. வேளாண்குடிகள் வாழ்ந்த இடம் ஊர் என்றும் பார்ப்பனச்சேரி, கிராமம் என்றும் அழைக்கப்பட்டன. இதனை நிர்வகிக்கும் அமைப்புகள் முறையே ஊர் (ஊரவர்), சபை என்றும் சொல்லப்பட்டன. பார்ப்பனர்களுக்கு இறையிலியாக (தானம்)  வழங்கப்பட்ட பிரம்மதேயம், சதுர்வேதிமங்கலம் போன்ற பகுதிகளில் அச்சாதியைச் சேர்ந்தவர்களை நியமிக்கும் முறையில் மக்களாட்சி எங்கு வந்தது? இங்கு பழங்கால வடஇந்தியக் குடியரசுளை ஏன் பேசுவதில்லை? 

   U.K., Sri Lanka ஆகியன தமிழில் இங்கிலாந்து, இலங்கை என மாற்றமடைவது ஏன்? மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, மைசூரு, சென்னை, மியான்மர், தைவான், யாங்கன், ஒடிசா, பங்கா என்று பெயர்கள் மாறும்போது அதை ஏற்பதுதானே முறை? U.S.A. அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்லும்போது இவற்றில் என்ன சிக்கல்?   பொருளியல் பகுதியில் (பக். 198) France பிரஞ்ச் என்று தமிழில் மொழி பெயர்க்கப்படுகிறது. 

   Priest king மதகுரு அல்லது அரசன் என்று படத்திலும் பாடத்தில் பூசாரி அரசன் என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது. (9 -ம் வகுப்பு வரலாறு) பூசாரி, மதகுரு, தலைவன், அரசன் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்வதில் நமக்குத் தடையில்லை. அது என்ன பூசாரி அரசன்? 

   Mahatma Gandhi  என்பது தமிழில் 'தேசப்பிதா மகாத்மா காந்தி' என்றாகிறது. தேசம், நாடு, பிதா, தந்தை, பாரதம், இந்தியா என்கிற சொல்லாடல்களுக்குள் ஒளிந்திருக்கும் அரசியல் உண்டல்லவே! 

   "சிறு குழு ஆட்சி" , "மதகுருமார்களின் ஆட்சி", "மக்களாட்சி", "குடியரசு" என்று இரட்டை மேற்கோள்குறிக்குள் எழுதுவதன் நோக்கம் என்ன? இதனால் இதற்கு வேறு பொருள் உண்டாகுமல்லவா!

    “Who are we? What is the name of our species? We are Homo sapiens sapiens”. (பக். 04, 9 வரலாறு ஆங்கில வழி)
நாம் யார்? நமது இனத்திற்கு என்ன பெயர்? நாம் “ஹோமோ சேப்பியன்ஸ்” என்ற இனத்தைச் சேர்ந்தவர்களாவோம்”. (பக். 04, 9-ம் வகுப்பு வரலாறு, தமிழ் வழி)

   ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரமிடஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் அனமென்சிஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் ஆஃப்ரிக்கானஸ், ஆஸ்ட்ரேலோபிதகஸ் ரோபஸ்டஸ், ஹோமோ ஹெபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோஹெய்டல் - பெர்கென்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் ஆர்கேயிக்,  ஹோமோசெபியன்ஸ் நியாண்டர்தாலென்ஸிஸ், டெனிஸோவன், ப்ளோரோஸியன்ஸிஸ், ஹோமோசெபியன்ஸ் செபியன்ஸ் போன்ற பரிணாமத்தின் அனைத்துப் படிநிலைகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்வது இயலாத காரியம். அவற்றின் சில கண்ணிகளை அறிமுகம் செய்யலாம். ஆஸ்ட்ரோலோபித்தசைன், ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேப்பியன்ஸ் எனக்குறுக்குவது சரியா? மேலும் Homo sapiens sapiens என்று ஆங்கில வழியில் சரியாகச் சொல்லிவிட்டு தமிழ்வழியில் ஹோமோ சேப்பியன்ஸ் என்று சொல்வதை ஏற்க இயலவில்லை. தமிழும் தமிழ் வழியில் படிப்போரும் கிள்ளுக்கிரைகள் அல்ல. 

    மொழிபெயர்ப்பு எப்படி செய்யப்படுகிறது என்று யோசிக்கும்போது, Google translate –ஐ பயன்படுத்துவார்களோ என்கிற அய்யமேற்பட்டது. அதை சோதித்துப் பார்த்தபோது எனது அய்யம் சரியே எனத் தோன்றுகிறது. நீங்களும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதற்கென Google translate வடிவங்களை சில இடங்களில் இணைத்துள்ளேன். வரிக்கு வரி விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன். இதனை வாசித்து நமது பாடநூல் அறிஞர்களின் மொழிப்புலமையை அறிந்திடுக. 

   மொழிநடையின் செயற்கை, சொற்றொடர் அமைப்பில் உள்ள தவறுகள், இலக்கணப் பிழைகள், நீட்டி முழக்குதல், தேவையற்றச் சொற்களின் பயன்பாடு போன்றவற்றைப் பட்டியலிட இங்கு இடமில்லை.

Buddhism

Among the heterodox sects, Buddhism was the most popular. It went on to emerge as a powerful religion patronised by various rulers. It was so influential that its ideas were adopted by Asoka as a state policy. Though it virtually disappeared from India for nearly a millennium, it spread far and wide and is widely followed even today in the South-east and East-Asian countries. In the mid-twentieth century it was revived in India by Dr. B.R.Ambedkar. (11 –ம் வகுப்பு வரலாறு, ஆங்கில வழி: பக். 50)

பௌத்தம்

   அவைதீக மதங்களிலேயே மிகவும் பிரபலமானது பௌத்தம்தான். இது பல்வேறு அரசர்களால் ஆதரிக்கப்பட்ட, செல்வாக்குமிக்க மதமாக உருவானது. இதன் கருத்துகள் மிகவும் செல்வாக்காக இருந்ததன் காரணமாக, அசோகர் இதை அரசாங்கக் கொள்கையாக ஏற்றார். ஏறத்தாழ சென்ற ஆயிரமாண்டுகளில் இந்தியாவில் பௌத்தம் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்டாலும்கூட, அதற்கு வெளியே தொலைவிற்குப் பரவியது. இன்றும் தென்கிழக்கு, கிழக்காசிய நாடுகளில் பௌத்தம் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. (11 –ம் வகுப்பு வரலாறு, தமிழ் வழி: பக். 52)
   
    “In the mid-twentieth century it was revived in India by Dr. B.R.Ambedkar”, என்ற வரி ஆங்கில வழியில் உள்ளது. தமிழ் வழியில் இல்லை. பொதுவாக பாடநூல்கள் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன. அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது இவை நீக்கப்பட்டுள்ளன. காரணம் என்னவாக இருக்க முடியும்? தமிழ் மற்றும் வரலாறு படிக்கும் பெரும்பாலானோர் சைவ, வைணவ, இந்துக் கருத்தியலுக்கு ஆள்பட்டவராகவே இருக்கின்றனர். அவர்களுக்கு இயல்பாகவே பவுத்தம், அம்பேத்கர், தலித் இயக்கங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது ஒருவித வெறுப்புணர்வு படிந்திருக்கிறது. இத்தகைய வெறுப்பரசியலை முன்னெடுப்பதே வகுப்புவாதிகள் முதன்மைப்பணி. இதற்கு நடுத்தர வர்க்கம் எளிதில் பலியாகிறது. தமிழ் வழியில் மட்டும் இம்மாதிரியான ‘தீண்டாமைக் கொள்கை’யை கடைபிடிக்கக்கூடாது. 

    அரசாங்க அமைப்புகள் விளக்கப்படும்போது பொதுவுடைமை எதிர்ப்பையும் உணரலாம். அத்துடன் பரிணாமக் கொள்கையைப் போலவே இங்கு சுருக்கம் என்கிற பெயரில் பல்வேறு பிழைகளுடன் அரசாங்க அமைப்புகள் அறிமுகம் ஆகின்றன. பிரதிநிதித்துவ மக்களாட்சி என்றும் சொல்லுமிடத்து, மறைமுக (indirect) எனும் சொல்லாட்சி தேவையற்றது.  

   “இந்துவாகப் பிறந்து சாதி இழிவுகளைச் சுமந்தேன்; இந்துவாக சாகமாட்டேன்”, என்றுசொல்லி 1956 அக். 14 இல் அம்பேத்கர் நாகபூர் தீட்ஷா பூமியில் தனது மனைவி மற்றும் 5 லட்சம் தலித் மக்களுடன் பவுத்தம் தழுவினார். இது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு. இதன் தாக்கத்தால் பவுத்தம் எழுச்சி பெற்றது. மேலும் அம்பேத்கர் நூற்றாண்டு மற்றும் அவரது நூல் தொகுப்புகள் வெளியானபோது அடுத்த தலைமுறைக்கும் பவுத்த சிந்தனைகள் எடுத்துச் செல்லப்பட்டது. பவுத்தம் காணாமல் போய்விட்டது என்றெல்லாம் சொல்வது பாடநூலுக்கு அழகல்ல. இன்றும் மக்கள் பவுத்தத்தை தழுவிக்கொண்டுள்ளனர். பவுத்தம் பற்றி பேசும்போது இங்கு சமகால விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.    ஈழம், மியான்மர் படுகொலைகளை (அரச பயங்கரவாதம்) பவுத்ததிற்கு எதிராக திருப்புவது சரியான அணுகுமுறை அல்ல.

Google translate வடிவம்:
புத்த

     பெடரடோக்ஸ் பிரிவுகளில் புத்தமதம் மிகவும் பிரபலமானது. பல்வேறு ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட சக்திவாய்ந்த மதமாக இது உருவானது. இது அசோகாவின் அரச கொள்கையாக அதன் கருத்துக்களை ஏற்றுக் கொண்டது. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவில் இருந்து மறைந்து விட்டது என்றாலும், இது பரந்த அளவிலான பரவலாக பரவி, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்று பரவலாக பின்பற்றப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவில் புத்துயிர் பெற்றார்.


Forms of Government and Democracy
Monarchy

A system of government in which one person reigns supreme, usually a king or queen (Constitutional monarchy).

    ஒரு நபர் (வழக்கமாக அரசர்) – ஆல் அமைக்கப்படும் அரசாங்கமே (அரசியலமைப்பு முடியாட்சி) எனப்படும். (பக். 173, 9 -ம் வகுப்பு குடிமையியல்)
Google translate வடிவம்:

அரசு மற்றும் ஜனநாயக வடிவங்கள்
 
 
முடியாட்சி
 
    ஒரு நபர், ஒரு அரசர் அல்லது ராணி (அரசியலமைப்பு முடியாட்சி) 
வழக்கமாக ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு.

Theocracy

   A system of government in which religious doctrines form the basis of government headed by the priest who rules in the name of God or proclaims himself as a God.

மதகுருமார்களின் ஆட்சி
     மதகுருமார்கள் தம்மை கடவுளாகவோ (அ) கடவுளில் பெயரால், மதகுருமார்களே அமைக்கப்படும் அரசாங்கமே “மதகுருமார்களின் ஆட்சி”. (பக். 173, 174:  9-ம் வகுப்பு குடிமையியல்)

Google translate வடிவம்: 
இருந்தாலும் மதகுருமார்
 
    கடவுளின் பெயரால் ஆளப்படுபவர் அல்லது கடவுளாக தன்னை 
அறிவிக்கிற பூசாரி தலைமையிலான அரசாங்கத்தின் அடிப்படையை மத 
கோட்பாடுகள் அமைக்கும் அரசாங்க அமைப்பு.


    A system of government in which eligible members in the population vote to elect their elected representatives, and the party or individual who obtains the majority votes forms the government.
  ஒரு நாட்டின் தகுதியுள்ள குடிமக்களால் வாக்களிக்கப்பட்ட தனிநபரோ அல்லது குழுவாகவோ தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அமைக்கப்படும் அரசாங்கமே “மக்களாட்சி” எனப்படும். (பக். 174, 9 -ம் வகுப்பு குடிமையியல்)


Google translate வடிவம்: 
    மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தகுதியுள்ள 
உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மை வாக்குகளை பெறுகின்ற கட்சியோ 
அல்லது தனிப்பட்ட நபரோ அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒரு அமைப்பு.


Republic

A state in which supreme power is held by the people and their elected representatives and which has an elected or nominated President rather than a monarch.

குடியரசு
மக்களிடமே அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடமும் உயரிய அதிகாரம் இருக்கின்ற அரசாங்க முறையே “குடியரசு” எனப்படும். இவ்வகை அரசாங்கத்தில் ஒரு முடி மன்னரை காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட (அ) நியமிக்கப்பட்ட குடியரசுத்தலைவர் இருப்பார். (பக். 174, 9 குடிமையியல்)

Google translate வடிவம்: 
குடியரசு
 
உச்ச அதிகாரத்தை மக்கள் மற்றும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட 
பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஒரு அரசு, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது
 நியமிக்கப்பட்ட ஜனாதிபதியாக ஒரு மன்னரைக் காட்டிலும் இல்லை.

    குடவோலைமுறை குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. “மக்களாட்சியின் பரிணாம வளர்ச்சி” என்னும் தலைப்பில் சொல்லப்படும் தனித்தனிச் செய்திகள் ஒரே பத்தியாக அளிப்பதன் சிக்கலை அப்பத்தியை வாசிக்கும்போது உணரலாம்.

Evolution of Democracy

Democracy began 2,500 years ago in some of the city-states of ancient Greece. It is important to know that democratic institutions existed in India as early as Vedic period. Chanakya's Arthashastra tells us that in ancient India, an autonomous village community was the basis unit of the local government. In ancient Tamil Nadu, Kudavolai system was a very notable and unique feature of the village administration of Cholas. The evolution towards a democracy is represented by the following values: freedom, equality, liberty, accountability, transparency and trust.  (Page: 149, 9 th  English medium social science)

மக்களாட்சியின் பரிணாம வளர்ச்சி. 

    ஏதென்ஸ் உட்பட பண்டைய கிரேக்க நாட்டின் ஒரு சில நகர-அரசுகளில், 2,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களாட்சி முறை தோன்றியது. வேதகாலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மக்களாட்சி முறை அமைப்புகள் இருந்தன என்பது பற்றி அறிவது மிக முக்கியமாக இருக்கிறது. உள்ளாட்சி  அமைப்பின் அடிப்படை அலகாக சுயாட்சி பெற்ற கிராக குழுக்கள், பண்டைய காலத்தில் இருந்தது எனும் செய்திகளை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்ற நூல் கூறுகிறது. பண்டைய தமிழகத்தில் சோழர்களின் காலத்தில் குறிப்பிடத்தக்கச் சிறப்பு வாய்ந்த ‘குடவோலை முறை’ இருந்தது. சுதந்திரம், சமத்துவம், விடுதலை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை ஆகிய மதிப்பீடுகள் மக்களாட்சியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. (பக். 175, 9-ம் வகுப்பு குடிமையியல்)

Google translate வடிவம்: 

ஜனநாயகத்தின் பரிணாமம்
 
    பண்டைய கிரேக்க நகரத்தின் சில மாநிலங்களில் ஜனவரி 2,500 
ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வேத காலத்திற்கு முன்பே 
இந்தியாவில் ஜனநாயக அமைப்புக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன என்பது 
முக்கியம். பண்டக இந்தியாவில், தன்னாட்சி கிராம கிராமப்புற சமூகம் 
உள்ளூர் அரசாங்கத்தின் அடிப்படை அலகு என்று சாங்கியாவின் 
அர்த்தசாஸ்திரம் நமக்கு சொல்கிறது. பண்டைய தமிழ்நாட்டில், 
குடாவளை அமைப்பு சோழர்களின் கிராம நிர்வாகத்தின் குறிப்பிடத்தக்க 
மற்றும் தனித்துவமான அம்சமாகும். ஜனநாயகம் பற்றிய பரிணாமம் 
கீழ்க்கண்ட மதிப்புகளால் குறிக்கப்படுகிறது: சுதந்திரம், சமத்துவம், 
சுதந்திரம், பொறுப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை.

   India has a Parliament form of democracy. The Indian Parliament comprises the elected representatives of people and make laws for the country. The participation of people in the decision making and the consent of citizens are the two important elements of the parliamentary form of government in India.  (Page: 150, ninth social science)

    இந்தியா நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்டுள்ள நாடாகும். இந்தியாவின் நாடாளுமன்றம் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கியது. இது நாட்டிற்கு தேவையான சட்டங்களை உருவாக்குகிறது. கொள்கை முடிவெடுப்பதில் மக்கள் பங்கு பெறுவதும், ஒப்புதல் அளிப்பதும் இந்திய நாடாளுமன்ற மக்களாட்சி அரசாங்கத்தின் இரு முக்கிய கூறுகளாக விளங்குகின்றன. (9 குடிமையியல், பக். 176)

Google translate வடிவம்: 

     இந்தியா நாடாளுமன்ற வடிவிலான ஜனநாயகத்தை கொண்டுள்ளது. 
இந்திய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்களை 
உள்ளடக்கியது மற்றும் நாட்டிற்கான சட்டங்களை உருவாக்கும். 
இந்தியாவில் பாராளுமன்ற வடிவத்தின் இரண்டு முக்கிய கூறுகள், 
முடிவெடுப்பதில் மக்கள் பங்கு மற்றும் குடிமக்களின் சம்மதம்.

   Indian democracy can be successful and vibrant only when its citizens imbibe and reflect in their behavior the basic democratic values like equality, freedom, social justice, accountability and respect for all. Their mindset, thinking and behavior are expected to be in tune with the essential conditions of democracy. They have to appreciate the opportunities for their desired roles like participation, making the system accountable, fulfilling obligations and playing proactive roles to actualize the goals of democracy. (Page: 152, ninth social science)

   சமத்துவம், சுதந்திரம், சமூக நீதி, பொறுப்புணர்வு மற்றும் அனைவருக்கும் மதிப்பளித்தல் போன்ற அடிப்படை மக்களாட்சிப் பண்புகளை, மக்கள் மனதில் கொண்டு செயல்படும்போது, மக்களாட்சி மேலும் துடிப்பானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கும். மக்களின் எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் நடத்தைகள் ஆகியவை மக்களாட்சியின் தலையாய கொள்கைகளுடன் பொருத்திச் செயல்படவேண்டும். எனவே, மக்களாட்சியின் இலக்குகளை நடைமுறைப்படுத்த மக்களே தங்களை முன்மாதிரியாக பங்கெடுத்துக்கொள்ளவும், கடமையுணர்வோடு செயல்படவும், தங்களுக்குள் பொறுப்புணர்வை உருவாக்கவும், தமக்களிக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு மதிப்பளிக்கவும் வேண்டும். (பக். 179, 9 குடிமையியல்)


Google translate வடிவம்: 
இந்திய ஜனநாயகம் சமாதானம், சுதந்திரம், சமூக நீதி, பொறுப்பு மற்றும் 
அனைவருக்கும் மரியாதை போன்ற அடிப்படை ஜனநாயக மதிப்பீடுகளை 
அதன் குடிமக்கள் உட்குறிப்பு மற்றும் பிரதிபலிக்கும் போது வெற்றிகரமான 
மற்றும் துடிப்பானதாக இருக்கும். அவர்களுடைய மனோபாவம், சிந்தனை 
மற்றும் நடத்தை ஜனநாயகத்தின் அத்தியாவசிய நிலைமைகளுக்கு இசைவு
 தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பங்களிப்பு போன்ற 
தேவையான பாத்திரங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் பாராட்ட 
வேண்டும், கணினி பொறுப்புணர்வுடன் செய்து, கடமைகளை 
நிறைவேற்றவும் மற்றும் ஜனநாயகம் இலக்குகளை செயல்படுத்துவதில் 
செயல்திறமிக்க பாத்திரங்களை ஆற்றவும் வேண்டும்.


Decline of Jainism in India

Absence of royal patronage, split amongst Jain's Digambaras and Swetambaras, lack of missionary zeal, factionalism and the severity of practices, and spread of Buddhism as a rival faith led to the decline of Jainism in India.   (Page: 50, Eleventh History)

இந்தியாவில் சமணத்தின் வீழ்ச்சி:

     இந்தியாவில் சமணம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்:
  1. அரச ஆதரவைச் சமணம் இழந்தது.
  2. திகம்பரர், ஸ்வேதம்பரர் எனப் பிளவு ஏற்பட்டது சமணத்தை மிகவும் பலவீனப்படுத்தியது.
  3.  ஒரு மத இயக்கமாகச் செயலாற்றும் துடிப்பைக் காலப்போக்கில் சமணம் இழந்தது.
  4. குழு மனநிலை சமணத்தை மிகவும் பலவீனப்படுத்தியது.
  5. சமண மத நடைமுறைகளின் கடுமையும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
  6. ஒரு போட்டி மதப்பிரிவாக பௌத்தம் பரவி, சமணத்தைப் பின்னுக்குத் தள்ளியது.
   வரிக்குவரி மொழிபெயர்க்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எந்தரத்தனமான மொழிபெயர்ப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் தமிழ்வழிப் பாடநூலை ‘கோனார்’ நோட்ஸ் போல் அளிப்பது கவலையாக உள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்கள் ஒன்றுமே தெரியாதவர்கள் என்கிற எண்ணமா என்பது தெரியவில்லை. தமிழ் வழிப் பாடநூல்கள் அதிக பக்கங்கள் கொண்டிருப்பது சுமை. இதைச் சொல்லும்போது தமிழ் எழுத்துரு அளவு காரணம் என்றார் ஒரு நண்பர். உண்மையில் அது மட்டுமா காரணம் என்பதை மேற்கண்ட மொழியாக்கம் புலப்படுத்தும்.
  
    இதைக் கீழ்க்கண்ட வழியில் சுருக்கமான மொழியாக்குவதில் என்ன தடை இருக்க முடியும்? “அரச ஆதரவின்மை, பிளவு, மத இயக்கச் செயல்பாடின்மை, குழு மனநிலை, கோட்பாடுகளின் கடினத்தன்மை, பௌத்த எழுச்சி”, என்று எளிமையாக மொழிபெயர்க்கத் தடையாக இருப்பது எது? இரண்டடிகளில் குறளை திருவள்ளுவர் தமிழில்தானே எழுதினார்?
  
   Jainism is an egalitarian religion. It does not sanction any inequality based on birth. It is one's deeds that determine one's status in society and not birth. Jainism believes that "by one's action one becomes a Brahmin, a Kshatriya, or a Vaishya, or a Sudra". Pride based on birth is considered a sin. Women were admitted into the monastic order. However, as a woman one cannot attain salvation. By accumulating merit by good deeds, a woman could be reborn as a man and then strive to attain salvation. (Page: 50, Eleventh History)

   சமணம் ஒரு சமத்துவமான மதம். அது பிறப்பின் காரணமாக எந்தவித ஏற்றத்தாழ்வையும் அனுமதிக்கவில்லை. சமூகத்தில் ஒருவருடைய தகுதிநிலையை முடிவு செய்வது அவர்து செயல்கள்தானே தவிர, பிறப்பல்ல எனச் சமணம் கூறுகிறது. “ஒருவன் தன் செயல்களால், பிராமணனாக, சத்திரியனாக, வைசியனாக, சூத்திரனாக மாறுகிறான்”, எனச் சமணம் நம்புகிறது. பிறப்பின் காரணமாகப் பெருமை கொள்ளுதல் பாவமாகக் கருதப்படுகிறது. பெண்களும் துறவிகளாக ஏற்கப்பட்டார்கள். எனினும், பெண்களால் முக்தி அடைய முடியாது. நற்செயல்களைச் செய்து புண்ணியங்களை ஈட்டுவதன் மூலம், ஒரு பெண் ஆணாக மறுபிறவி எடுத்து, பிறகு முயற்சி செய்து முக்தி பெறலாம். (பக். 52, 11 ம் வகுப்பு வரலாறு, தமிழ் வழி.)

    வருணம் (சாதி), வேதம், கடவுள் ஆகியவற்றை வலியுறுத்துபவை வைதீக மதங்களாகும். இவற்றை மறுப்பவை அவைதீக சமயங்களின் கொள்கையாகும். சமணம், பவுத்தம், ஆசீவகம் போன்றவை அவைதீக சமயங்களில் அடங்கும்.

        சமணத்தில் மகாவீரருக்குப் பிறகு பிரிவுகள் தோன்றின.  அவற்றுள் முக்கியமானது மூன்று வகைகளாகும். அவையாவன: திகம்பரர்கள், சுவேதம்பரர், ஸ்தானகவாசிகள். ஆனால் நாம் வழக்கம்போல் இரு பிரிவுகள் என்றே சொல்லித் தருகிறோம். 

    திகம்பரம்= திக் + அம்பரம். திசைகளை ஆடையாக உடுத்தியவர் என்று பொருள். இவர்கள் உருவ வழிபாட்டினர். துறவிகள் ஆடைகள் உள்ளிட்ட எவ்வித உடைமைகளையும் வைத்துக் கொள்வதில்லை. எனவே நிர்வாணிகளாக இருக்கின்றனர். இதனால் சமணருக்கு அமணர் என்ற பெயரும் உண்டு. நேமிச்சந்திரர், வீரசேனர், பூச்சியபாதர் போன்றோர் திகம்பரப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 

    சுவேதம்பரர்களும் உருவ வழிபாடு செய்பவர்களே. இவர்கள் தூய வெள்ளை ஆடை அணிபவர்கள். இளங்கோவடிகள், குந்த குந்தர், சுதர்மர் ஆகியோர் இப்பிரிவைச் சேர்ந்த துறவிகளாவர். 

    ஸ்தானகவாசிகள் எனப்படுவோர் உருவ வழிப்பாடு எதிர்ப்பாளர்கள். அதாவது அரூப (உருவமற்ற) வழிபாட்டினர்.  உருவங்களுக்குப் பதிலாக சமண ஆகமங்களை வைத்து வழிபடுகின்றனர். இஸ்லாமைப் போல உருவ வழிபாடின்மை இவர்களது கொள்கையாகும். 

     பெண்கள் தாழ்ந்த, இழிந்த பிறவிகள்; பாவம் செய்தவர்கள் பெண்ணாகப் பிறக்கிறார்கள் என்பது சமண நம்பிக்கை.  பெண்ணாகப் பிறந்தவர்கள் வீடுபேறு (முக்தி) அடைய முடியாது என்று நம்புகிறார்கள்.  ஆனால் சுவேதாம்பரர்கள் பெண்களும் துறவு பூண்டு வீடுபேறு அடையலாம் என்று கூறுகின்றார்.  திகம்பரர்கள் இதை மறுத்து பெண் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் வீடுபேறு  என்பதை வலியுறுத்துகின்றனர்.  பெண்கள் பற்றிய திகம்பரர்களின் கொள்கையை ஒட்டுமொத்த சமணக்கொள்கையாகக் கருதுவது தவறன்றோ? அவைதீக மதங்களைச் சிறப்பாக அறிமுகம் செய்யும் நிலையில் இவற்றையும் கணக்கில் கொள்ளலாம். 

Google translate வடிவம்: 
    சமண மதம் ஒரு சமத்துவ மதமாகும். பிறப்பு அடிப்படையில் எந்த 
சமத்துவமின்மையையும் அனுமதிக்க முடியாது. இது சமுதாயத்தில் 
ஒருவரின் நிலையை தீர்மானிக்கும் பிறப்பு அல்ல. "ஒரு செயலின் மூலம் 
ஒரு பிராமணர், ஒரு க்ஷத்திரியா, அல்லது வைஷ்யா, அல்லது ஒரு 
சூத்ரா" என்று ஜெய்னிசம் நம்புகிறது. பிறந்த அடிப்படையில் பெருமை 
பாவம் கருதப்படுகிறது. பெண்கள் சடங்கு ஒழுங்கில் சேர்க்கப்பட்டனர். 
எனினும், ஒரு பெண் ஒரு இரட்சிப்பு அடைய முடியாது என. நல்ல 
செயல்களால் தகுதிபெற்றதன் மூலம் ஒரு பெண் ஒரு மனிதனாக 
மறுபிறப்பு அடைந்து பின்னர் இரட்சிப்பை அடைவதற்குப் போராடுவார்.
 
      (பல்வேறு குளறுபடிகளைப் பகிர்ந்துகொண்ட தோழர் முத்துராஜா 
அவர்களுக்கு நன்றிகள்.)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக