சனி, நவம்பர் 10, 2018

மறைத்தல் – திரித்தல் – மழுப்பல்கள் நிறைந்த மிகையுணர்ச்சிக் குவியலாக வரலாற்றுப் பாடங்கள்

மறைத்தல் – திரித்தல் – மழுப்பல்கள் நிறைந்த மிகையுணர்ச்சிக் குவியலாக வரலாற்றுப் பாடங்கள்

(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 05) 

  மு.சிவகுருநாதன்

 (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு  பாடப்பகுதியில் – பாடம்: 03 -  ‘இடைக்கால இந்திய அரசும் சமூகமும் – சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை’ என்ற பாடம் பற்றிய கருத்துகள்.)

      “வரலாறு என்றால் அரசர்களையும் அவர்களின் வம்சாவளிகளையும் அவர்கள் காலத்து நிகழ்ச்சிகளையும் முக்கியமாகப் போர்கள், படையெடுப்புகளை விவரிப்பது என்பதான நேர்கோட்டு முறை விவரிப்பு என்பதிலிருந்து வரலாற்று அறிஞர்கள் இக்காலத்தில் (இடைக்காலத்திலா? தற்காலத்திலா? எந்தக் காலத்தில்?)  பெரிதும் விலகினர். இப்போது வரலாறு என்பது பல அறிவுத்துறைகள் சார்ந்ததாகக் கருதப்பட்டு, சமூகப் பொருளாதார மாற்றங்களும் வரலாற்றின் உள்ளடக்கமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் அவ்வாறான மாற்றங்கள் அரசியல் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களோடு தொடர்பில்லாமல் தன்னிச்சையாக நடைபெறுவதில்லை”, (பக்.34) என ‘இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் – சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை’ என்னும் பாடம் முன்னுரைக்கிறது. 



   ஆனால் இப்பாடத்தின் நோக்கும் போக்கும் அவ்வாறு அமையவில்லை என்பதும் எந்தப் பார்வைக் கோணத்திலிருந்து வரலாற்றை அணுகுகிறது என்பதும் தெளிவாகிறது. 

“வாழ்வின் துயரச்சம்பவம் எனும் காற்று”  என்னும் வாசகம் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் -ன் களங்கமற்ற எரிந்திரா’ எனும் குறுநாவலில் அடிக்கடி வரும். மேஜிக்கல் ரியலிச எழுத்து இவருடையது. நமது வரலாற்றுப் பாட ஆசிரியர்கள் இவற்றையும் மிஞ்சிவிட்டார்கள்! கீழே வாசியுங்கள்...  (அடிக்கோடு நம்முடையது.)

 “13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோழப்பேரரசின் மறைவைத் தொடர்ந்து அதன் விளைவாக தென்னிந்தியாவில் பல சமயம் சார்ந்த அரசுகள் தோன்றின”, (பக்.35)

“அது (விஜயநகரப் பேரரசு) சமயம் சார்ந்த ஆட்சியின் கோட்டையாகக் கருதப்பட்டது”, (பக்.35)

“விஜயநகர அரசர்கள் தொடர்ந்து பாமினி அரசுகளோடும் (பாமினி சுல்தானியம் – பக்.36 – என்று சொல்வதும் கவனிக்கத்தக்கது) சமயம் சார்ந்த அரசுகளான கொண்டவீடு மற்றும் ஒரிசாவோடும் தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தனர்”, (பக்.37)

“நாடுகளைக் கைப்பற்றியதன் மூலமும், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதன் மூலமும் அக்பர் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்”, (பக்.37)

“இம்மூன்று (மதுரை, தஞ்சை, செஞ்சி) நாயக்க அரசர்களும் ஏனைய நாயக்கத் தளபதிகளும் வலுவான சமயம் சார்ந்த கோவில்களின் ஆதரவாளர்களாய் இருந்தனர்”, (பக்.40)

“தங்களுடைய மதம் சார்ந்த சேவை நடவடிக்கைகள் மடப்பள்ளி மற்றும் ஏனைய பணிகளுக்காக அதிக எண்ணிக்கையில் மக்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டன”, (பக்.50)

சமயக்கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட பல நூல்கள் இக்காலத்தில் (விஜயநகர நாயக்க அரசுகள்) எழுதப்பட்டன”, (பக்.45)

   இதைப்போல பல இடங்களில் ‘சமயம் சார்ந்த’ என்று குறிப்பதன் பின்னணி என்ன? அது எந்த சமயம்? இந்து, சைவம், வைணவம் என்று சொல்லாமல் மறைப்பதன் அரசியல் என்ன? ஆனால் மறுபக்கம் ‘இஸ்லாமிய சுல்தானியர்’ (பக்.43) என்றும் பாமினி சுல்தானியம் (பக்.36) என்றும் சொல்வதன் பொருள் என்ன? டெல்லி சுல்தான்கள் என்றாலே இஸ்லாமியர் என்பது விளங்குமே. இங்கு மட்டும் மதத்தை வெளிக்காட்டுவதன் தேவை ஏன் ஏற்படுகிறது? 

“சங்கரர் மற்றும் ராமானுஜர் மேற்கொண்ட வலுவான பக்தி இயக்க புத்துயிர்ப்பின் விளைவாக சமணமதம் இந்தியாவின் பலபகுதிகளில் தனது பிடிப்பை இழந்தது”, (பக்.43)

   இதில் பக்தி ‘இயக்கப் புத்துயிர்ப்பு’ பற்றியும் பேசப்படுகிறது. இதன்மூலம் சமணம் பிடிப்பை இழந்ததாம்! சைவம், வைணவம் என்பதை வெளிக்காட்ட தயக்கம் இருக்கிறது. ஆனால் “டெல்லியில் இஸ்லாமியராட்சி நிறுவப்பட்டது. இந்திய சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இஸ்லாம் சமூகப் பதட்டங்களை ஏற்படுத்தவில்லை”, (பக்.39) என்று சொல்வதில் எவ்வித தயக்கம் இல்லை. இடைக்கால இந்தியாவில் சைவ, வைணவ, இந்து மத ஆட்சி நடைபெறவே இல்லையா? இவை பிற சமயங்களுக்கு எதிராக செயல்பட்டதில்லையா? சமூக பதற்றங்களை உண்டாக்கியதில்லையா? “தொடக்கத்தில் சமூகப் பதட்டங்களை ஏற்படுத்தாத”, இஸ்லாம் என்றால் இறுதியில் அவ்வாறு செய்தது என்றுதானே பொருள்! இத்தகைய சமூகப் பதற்றங்களில் இந்துமத அரசர்களுக்குப் பங்கில்லையா? என எழும் அடுக்கடுக்கான கேள்விகள் தவிர்க்க இயலாதவை. 

  “பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் பல மதங்கள் ஒரே நேரத்தில் இருந்துள்ளன. யூதர்களும், ஜொராஸ்டியர்களும் (பார்சிகள்) இந்தியாவிற்கு குடிபெயர்ந்தபோது அந்நிய மதங்களும் இந்தியாவிற்குள் வந்தன”, (பக்.44)

இப்படிச் சொல்வதன் நோக்கம் என்ன? நல்லவேளை! பவுத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை அயல் மதங்கள் என்று சொல்லவில்லை! இந்து மதம் மட்டுமே இந்தியாவில் தோன்றியது; பிற மதங்கள் வெளியிலிருந்து வந்தவை என்று சொல்லுவதுதானே இதன் உட்கிடை! 

“சூரத் துறைமுகத்திலும், ஆங்கிலேயர் காலத்தில் பம்பாயிலும் பார்சி இன வணிகர்களே பணம்படைத்த முக்கியத்துவம் வாய்ந்த வணிகர்களாய் இருந்தனர்”, (பக்.44) 

  இந்துக்களில் வணிகர்களே இல்லையா? அப்படி இல்லை என்றே வைத்துக் கொள்வோம். வணிகம் கடல் கடந்து நடைபெறும் ஒன்று. பிறப்பால் இந்துவான ஒருவன் கடல் கடந்துவிட்டால் சாதி/மத நீக்கம் செய்வதைப் பற்றியும் பேசியிருக்கவேண்டும். இதையெல்லாம் மறைத்து பார்சிகள், இஸ்லாமியர்கள், சமணர்கள் ஆகியோர் பணம் படைத்த வணிகர்களாக இருந்தனர் என ஒப்பாரி வைப்பது ஏன்? 

    பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த இரு குழுக்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. “ஐநூற்றுவர், இவர்கள் ஐஹோலைத் தலைநகராகக் கொண்டவர்கள். மணிக்கிராமத்தார். இவ்வமைப்புகள் பல்வேறு வணிகக் குழுக்களையும் நகரம் என்ற அமைப்பையும் சேர்ந்த கூட்டு நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்”, (பக்.49) (நகரத்தார் என்னும் வணிகக் குழுவை சொல்கிறதா என்பது  குறித்த தெளிவு இதிலில்லை.)

 ‘நானாதேசி திசையாயிரத்து ஐநூற்றுவர்’ என்னும் குழுவே சுருக்கமாக ‘ஐநூற்றுவர்’ எனக் குறிப்பிடப்படுகிறது. மணிக்கிராமத்தார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சுவண்ணத்தார் போன்ற பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்தன.
  ‘நானாதேசிகள்’ எனப்படுவோர் ஆயிரம் திசைகளுக்கும் சென்று வணிகம் செய்யும் 500 பேர் கொண்ட பன்னாட்டு வணிகக்குழு ஆகும். மணிக்கிராமத்தார் தலைநகரங்கள் மற்றும் துறைமுகப்பட்டினங்களில் வணிகம் செய்தோர். காஞ்சிபுரம், மாமல்லபுரம், பழையாறை, மயிலாப்பூர் போன்ற நகரங்களில் வணிகம் செய்தோர் நகரத்தார் எனப்பட்டனர். வளஞ்சியர் ஈழநாட்டைச் சேர்ந்த பவுத்த வணிகராகவும் அஞ்சுவண்ணத்தார் துருக்கிய இஸ்லாம் வணிகர்களாக இருக்கலாம் என்று தி,வை,சதாசிவ பண்டாரத்தார் கணிக்கிறார். (பிற்காலச் சோழர் வரலாறு)
 
    “தொடக்கத்தில் இஸ்லாம் சமூகப் பதட்டங்களை ஏற்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக கேரளக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறிய அராபிய முஸ்லிம் வணிகர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டனர். இஸ்லாம் ஒரு அரசு மதமாக மாறிய போதுதான் சூழ்நிலைகள் மாறின. எதிரிகளின் வழிபாட்டு இடங்களை அழிப்பது என்பது தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக இடைக்கால அரசர்கள் பின்பற்றிய ஒரு வழிமுறையாகும்”, (பக்.39) 

     ‘நல்ல முஸ்லீம்’ என்பதற்கு இலக்கணம் வகுத்தாயிற்று! தொடக்கத்தில் இருந்தது போன்ற ‘நல்ல முஸ்லீமாக’ இருக்கவேண்டும் என பாடநூல் எச்சரிக்கை செய்கிறதா? 

“போர்ச்சுகீசியர்கள் கேரளாவிற்கு வந்து பின்னர் கோவாவில் நிலைகொண்டபோது கிறித்தவ மதம் வேர் கொண்டது. கோவாவில் உள்ளூர் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மதம்மாற அதுவும் காரணமானது. மேலும் சமய நீதிமன்றங்களின் அடக்குமுறையின் கீழ் வற்புறுத்தப்பட்டனர்”, (பக்.43)

“(ஏசுசபை சமயப் பரப்பாளர்களில்) நன்கறியப்பட்டவர் புனித பிரான்சிஸ் சேவியர் ஆவார். இவர் தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக (மீன் பிடிக்கும் சமூகம்) மக்கள் கிறித்தவ மாறுவதற்கு கருவியாக இருந்தவராவார்”, (பக்.43)

 மீனவர்கள் என்று சொல்லாமல் ‘மீன் பிடிக்கும் சமூகம்’ என நீட்டி  முழக்குவது தேவையா? பிறப்பின் அடைப்படையில் அல்லாமல் தொழிலடிப்படையிலான சாதிகள் என்பதை உறுதியாக வலியுறுத்தும் பாடமல்லவா! இஸ்லாம், கிறித்தவ மதங்கள் அடக்குமுறைகளைப் பயன்படுத்தி மத மாற்றத்தில் ஈடுபட்டனர் என்றே வைத்துக் கொள்வோம். மதம் மாறிய பரதவர்கள் போன்ற சமூகத்தினர் இந்து மதத்தில் பெற்றிருந்த நிலை என்ன? மதம் மாறவேண்டிய நெருக்கடிகள் வெளியிலிருந்து மட்டும் வந்தனவா? 

 “முஸ்லீம் ஆட்சியின் தாக்கம் அலாவுதீன் கில்ஜியின் (கி.பி.(பொ.ஆ.) 1296-1316) ஆட்சியின்போது உணரப்பட்டது. ஆட்சியை விரிவுபடுத்துதல் என்பதைக்காட்டிலும் செல்வங்களைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடனே தென்னிந்தியாவின் மீது பல படையெடுப்புகளை அவர் மேற்கொண்டார்”, (பக்.35)

“சோழப் பேரரசின் விரிவாக்கம் முதலாம் ராஜராஜன் காலத்தில் தொடங்கியது. பல்லவ அரசு ஏற்கனவே சோழ அரசோடு இணைக்கப்பட்டுவிட்டது. பாண்டிய அரசு சுதந்திர அரசாக இருந்தபோதிலும் சோழர்களுக்குக் கட்டுப்பட்டதாகவே இருந்தது. (நமக்கு இறையாண்மை உண்டு என்று சொல்லிக்கொண்டே அமெரிக்க சொல்வதைக் கேட்டு நடப்பதில்லையா, அதுபோலத்தான் இதுவும்!) முதலாம் ராஜேந்திரன் காலத்தில் சோழப் பேரரசு மேலும் விரிவடைந்தது. தனது படைகளை வடகிழக்கு இந்தியாவில் கங்கை நதிவரை நடத்திச் சென்றார். மேலும் தனது கப்பற்படைகளை ஶ்ரீவிஜய சைலேந்திர அரசுக்கு எதிராகவும் (இந்தோனேசியா) கடாரம் (கேடா) மற்றும் ஶ்ரீலங்காவிற்கு எதிராகவும் அனுப்பிவைத்தார். இதனால் ‘கங்கையும் கடாரமும் கொண்ட சோழன்’ எனும் பட்டத்தைப் பெற்றார். ஶ்ரீலங்கா சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக பத்தாண்டுகள் இருந்தது. ராஜேந்திர சோழனின் பேரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கீழைச் சாளுக்கிய அரசோடு மேற்கொள்ளப்பட்ட திருமண உறவுகள் மூலம் பேரரசு மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒரிசாவின் எல்லை வரை பரவியது”, (பக்.36) 

  பிற்காலச் சோழர்களின் படையெடுப்புகள் பற்றி எனது முந்தைய கட்டுரை ஒன்றிலிருந்து சிலபகுதிகளைக் இங்கு தருகிறேன். 

   “சோழ இளவரசன் முதலாம் ராஜேந்திரன் வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தபட்டு ‘பஞ்சவன் மாராயன்’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. கொங்கணம், துளுவம் ஆகிய நாடுகளை வென்றதோடு சேரரை அவர்களது மலை நாட்டிலிருந்து விரட்டியடித்தான்.

    ஈழப்போரில் ஈழமண்டலம் முழுவதும் இவர்களது ஆளுகைக்கு வந்தது. ஈழத்தின் தலைநகராக இருந்த அனுராதபுரம் முற்றிலும் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொலனருவ சோழர்களின் புதிய தலை நகரானது. இதற்கு ‘ஜனநாதமங்கலம்’ எனப் பெயரிட்டான். 

     போரில் புத்த மத விகாரைகள் அழிக்கப்பட்டன. செல்வங்கள் கொள்ளையிடப்பட்டன. பொலனருவ -ல்  சிவன் கோயில் கட்டப்பட்டது.   சிங்களத்துக் கிராமங்கள் தஞ்சைப் பெரியகோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டன.

   முதலாம் ராஜேந்திரன் ஈழமன்னனை வெற்றிகண்டு அவனது நாடு, முடி, பட்டத்தரசி, மகள், செல்வம், தேர்கள், இந்திரனின் தூய மாலை, அவனிடத்தில் விட்டுச் செல்லப்பட்ட பாண்டியனின் முடி ஆகியவற்றைக் கைப்பற்றினான் எனக் கரந்தைச் செப்பேடுகள் குறிப்பிடுகிறது. இதைப்பற்றி மகாவம்சம் கூறுவதாவது.

   “அரசன் ஐந்தாம் மகிந்தனின் 36 –ம் ஆட்சி ஆண்டில், மகேசியையும் அவனுக்கு மரபு வழியாகக் கிடைத்த அரிய அணிகலன்களையும், பதக்கங்களையும், அரசர்க்குரிய ஆபரணங்கள், விலை மிக்க வைர அணிகலன்களையும் கடவுளால் வழங்கப்பட்டதும் உடைக்க முடியாதுமான வாளையும், கிழிந்த துணி ஒன்றின் சிதைந்த பகுதியையும் சோழர்கள் கைப்பற்றினர். ஆனால் அரசன் அஞ்சி காட்டுக்குள் ஓடிவிட்டான். உடன்பாடு செய்துகொள்ளுவதாகச்ச் சொல்லி அவனை அவர்கள் உயிருடன் பிடித்துக்கொண்டார்கள். சோழப்படையினர் தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குச் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றில் இருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண் பட்ட இடங்களில் எல்லாம், பவுத்த சமயத்து மடங்களை அழித்து, இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்கள் போல, இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.” (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி நூல் மேற்கோள்)

    இந்த சோழமன்னர்கள் தமிழகத்தின் ஒருசில இடங்களில்  பவுத்த, சமண மடங்கள் அமைக்க உதவி செய்த வரலாறும் உண்டு. சோழர்களில் இலங்கைப் படையெடுப்பு, கொள்ளையிடல்களை பவுத்த மத எதிர்ப்பாக சொல்வதில்லை என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும்.

   இவர்களது போர்களின்போது பொன்னும் பொருள்களும் மட்டுமல்ல; பெண்களும் கொள்ளையிடப்பட்டார்கள். ஆண்கள் அடிமைகளாக அழைத்துவரப்பட்டனர். 
  
   இலங்கை வேந்தரை வென்ற ஜகதீபாலனை சோழர்கள் கொன்றனர். அவன் தமக்கை, மனைவியரைச் சிறைகொண்டு, தாயை மூக்கரிந்து அவமானப்படுத்தினர். 

  சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும் பாண்டிய நாட்டிலும் கேரள நாட்டிலும் பழமையான பரம்பரையே  தொடர்ந்து ஆளுகையில் இருந்தது என்பது இங்கு சோழப்பேரரசின் கருணையாகப் பார்க்கப்படுகிறது. இதை ஏன் கொள்ளையிடலுக்காக நடத்தப்பட்டது என்ற கோணத்தில் ஏன் பார்க்கக்கூடாது?

    கங்கை நாட்டை வென்று கங்கைகொண்டான் என்ற பட்டப்பெயரைப் பெற்ற முதலாம் ராஜேந்திரன் தான் வென்ற வட நாடுகளை ஆள விரும்பவில்லை. தான் புதிதாக நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தையும் ‘சோழகங்கம்’ என்கிற ஏரியையும் கங்கை நீரால் தூய்மைப்படுத்த, கங்கை நீரைக் கொணர்வதற்காக இப்போர்கள் நடத்தப்பட்டன எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை.  

   போர்கள் மற்றும் படையெடுப்புகளில் நல்ல போர்கள், கெட்ட படையெடுப்புகள் என்று எதுவும் இருக்கமுடியாது. அன்றிலிருந்து இன்றுவரை போர்கள் அனைத்தும் மனித குலத்திற்கு விரோதமானவையே. இதில் இந்து, இஸ்லாமியர் என்று வெறுப்பை விதைப்பதும் அதன்மூலம் ஒன்றைப் புனிதமாக்குவதும் மற்றொன்றை இழிவாக்குவதும் வேண்டாத வேலை. இதன் மூலம் இங்கு விதைக்கப்படும் வெறுப்பரசியலின் கொடூரம் சமூகத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்”. (‘கல்விக் குழப்பங்கள்’ நூலிலிருந்து…)

    ராஜேந்திர சோழனின் பேரன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கீழைச் சாளுக்கிய அரசோடு மேற்கொள்ளப்பட்ட திருமண உறவுகள் மூலம் பேரரசு மேலும் வலுப்படுத்தப்பட்டு ஒரிசாவின் எல்லை வரை பரவியது”, (பக்.36) என்று சொல்வதன் உண்மைநிலை என்ன? இது திருமண உறவா அல்லது போரா? கீழ்க்கண்ட பகுதி இதனைத் தெளிவாக்கும்.

  “கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான்.” - டாக்டர் மா.இராசமாணிக்கனார் (சோழர் வரலாறு)

“கி.பி.1112 ஆம் ஆண்டில் நடைபெற்ற இப்போர், வடக்கே வட கலிங்க வேந்தனாகிய அனந்தவர்மன் என்பவனோடு குலோத்துங்கன் நிகழ்த்தியதாகும்.” - தி.வை.சதாசிவ பண்டாரத்தார் (பிற்காலச் சோழர் வரலாறு) (கி.பி.1110 ஆம் ஆண்டு என்கிறார் பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி)

“கலிங்க மன்னன் வருடாந்திரக் கப்பம் கட்டத் தவறியதே இப்படையெடுப்பிற்கு உடனடிக் காரணமாக விளங்கியது. கலிங்க  மன்னன் அனந்தவர்மன் சோழகங்கன் வீரராஜேந்திரனது மகள் இராஜசுந்தரியின் வழித்தோன்றலாவான்.” -  பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (சோழர்கள் தொகுதி 1)

   முதலாம் குலோத்துங்களது பெண்மக்கள் ராஜசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை ஆகிய மூவர் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கிறது. இதில் மூத்தமகள் ராஜசுந்தரி கலிங்க அரசன் ராஜராஜனை மணந்தவள். இவர்களுடைய மகன் அனந்தவர்மனே இரண்டாம் கலிங்கப்போரில் (வடகலிங்கம்) குலோத்துங்களால் (தாத்தா) தோற்கடிக்கப்பட்டான். வடகலிங்கம் ஏழு கலிங்கம் என்றும் அழைக்கப்பட்டது. 

   கப்பம் கட்டவில்லை என்பதற்காக தன் மகள் வயிற்றுப் பேரன் மீதே படையெடுத்தான் என்பது நம்பும்படியாக இல்லை. போருக்கு வேறு காரணங்களும் பகையும் காரணமாக இருந்திருக்கக்கூடும். வெற்றிக்குப் பின்னால் கலிங்கம் இவர்களது ஆட்சிப்பரப்பில் இருந்ததாகவும் தெரியவில்லை. வழக்கம் போல கொள்ளையிடுதலுக்கான படையெடுப்பாகவே இதைக் கருதவேண்டியுள்ளது. மேலும் இதைச் சோழனது தனித்த வெற்றியாகக் கருதுவதும் தவறு.
     
    கும்பகோணம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரி (வண்டாழஞ்சேரி) என்ற ஊரில் பிறந்த பல்லவத் தலைவன் கருணாகரத்தொண்டைமான் மற்றும் சிற்றரசர்கள் கூட்டுப்படையால் இது நடத்தப்பட்டது. போரில் தோற்ற அனந்தவர்மன் பிடிபட்டதாகத் தெரியவில்லை. கலிங்க நாட்டைக் கொள்ளையிட்ட பெருஞ்செல்வத்துடன் சோழப்படைகள் நாடு திரும்பின. எனவே இப்போர் கொள்ளையிடலுக்காக நடத்தப்பட்டது என்பதில் அய்யமில்லை. இதற்கு உறவுப்பகையும் காரணமாக இருந்திருக்கலாம்”, (‘கல்விக் குழப்பங்கள்’ – நூலிலிருந்து…) 

“13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனைப் போன்ற அறிவுக்கூர்மையுடைய மன்னர்களால் பாண்டிய நாடு ஆளப்பட்டது”, (பக்.37) என்று போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. இந்த அறிவுக்கூர்மையை விளக்க வேண்டாமா? இவன் முதலாம் சடைய வர்மன் சுந்தரபாண்டியனாக (கி.பி.1251 – 1271) இருக்கக்கூடும். இதைக்கூட தெளிவில்லாமல் குறிப்பது என்? பிற்காலப் பண்டியர்கள், பிற்காலச் சோழர்கள் என்ற சொல்லாக்கங்கள் தவிர்க்கப்பட்டு பண்டியர்கள், சோழர்கள் என்றே குறிக்கப்படுவது ஏன்?

“மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர்”, (ப.44)

 “சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும்”, (பக்.39) 

“சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த  பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும்”, (பக்.44)

“விஜயநகர அரசு (பின்னர் பேரரசு) உருவாக்கப்பட்டதே தென்னிந்தியாவின் இடைக்கால வரலாற்றின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்”, (பக்.37)

      போன்ற மிகையுணர்ச்சி அணுகல்கள் பல இடங்களில் காணப்படுகிறது. இது வரலாற்றின் அணுகுமுறையை பெரிதும் பாதிக்கும்.

   பாடத்தின் ஒவ்வொரு இடத்திலும் நாம் X பிறர் (இந்துக்கள் X அந்நியர்கள்) என்கிற முரணெதிர்வு அடிப்படையிலேயே இந்திய, தமிழக வரலாறு அணுகப்படுகிறது. பிற்காலச் சோழர்களின் படையெடுப்பு என்பதன் பொருள் விரிவாக்கம் மற்றும் சிறப்பான வெற்றிகள்; மாறாக இஸ்லாமியர் படையெடுப்புகள் கொள்ளையிடுவது, வழிபாட்டிடங்களை அழிப்பது, சமூகப் பதற்றத்தை உருவாக்குவது. பிற்காலச் சோழர்களின் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான காரியங்களை மறைத்துவிட்டு, முக்கியமான தமிழ் இலக்கியங்கள் எழுதப்பட்டதாக புனைவுகளை உருவாக்குவது; மாறாக விஜய நகர அரசுகள் சமஸ்கிருத இலக்கியங்களையும் தெலுங்கு நாயக்கர்கள் தெலுங்கு இலக்கியங்களையும் ஆதரித்தனர் என எழுதுவது. பிற்காலச் சோழர்கள் கோயில் கட்டுவது சமூக, பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கை; பிறர் செய்வது மக்கள் வரிப்பணத்தை பாழாக்குவது. பிற்காலச் சோழர்களின் ராணுவச் செலவிற்கு  மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படவில்லை; பிறர் மக்கள் வரிப்பணத்தை ராணுவத்திற்குச் செலவு செய்தனர். இம்மாதிரியான வெறுப்பரசியலில் பிரதிநிதியாக பாடநூல்கள் செயல்பட அனுமதிக்கலாமா? இவற்றைப் பின்வரும் பத்திகள் உறுதிசெய்யும். 

 “சோழர்களின் காலம் குறிப்பிடத்தகுந்த  பண்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு சகாப்தமாகும். இந்த நூற்றாண்டுகளில்தான் முக்கியமான இலக்கியங்கள் எழுதப்பட்டன. மிக நன்கறியப்பட்ட செவ்வியல் புலவரான கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி அதை முறைப்படி ஶ்ரீரங்கம் கோவிலில் அரங்கேற்றம் செய்தார். இதைப்போலவே சேக்கிழாரின் பெரியபுராணமும் சிதம்பரம் கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. கலிங்கத்துப் பரணியும், மூவருலாவும் ஏனைய சிறந்த படைப்புகளாகும். மிகப்பெரும் சமயத் தத்துவ ஆய்வு நூல்களான சங்கர-பாஷ்யம் மற்றும் ஶ்ரீபாஷ்யம் ஆகியவை எழுதப்பட்டதும் இக்காலத்தில்தான்”, (பக்.44)
‘சங்கர-பாஷ்யம் மற்றும் ஶ்ரீபாஷ்யம்’ ஆகியன எந்தமொழியில் எழுதப்பட்டன? இதை ஏன் குறிப்பிடவில்லை? 

   “விஜயநகர நாயக்க அரசர்களின் ஆதரவில் பெருமளவிலான இலக்கியங்கள் குறிப்பாக சமஸ்கிருத மொழியில் உருவாயின. அரச குடும்ப ஆதரவில் தெலுங்கு இலக்கியம் செழிப்புற்றது. சமயக்கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்ட பல நூல்கள் இக்காலத்தில் எழுதப்பட்டன”, (பக்.45)

   பிற்கால சோழர்களின் இலக்கியத் தொண்டுகளை அறிய வேண்டுமல்லவா? எனது முந்தைய பதிவிலிருந்து சில பத்திகள் கீழே தரப்படுகிறது. 

  • நாடெங்கும் சமகிருதம் கற்பிக்க வேதபாடசாலைகள் தொடங்கப்பட்டன. 
  • சம்ஸ்கிருத அறிஞர்கள் குமாரிலர், சங்கரர் இவர்கள் காலத்தவர்கள்.
  • இவர்களின் மெய்கீர்த்திகளைக்கூட (பிரசஸ்தி)  சமஸ்கிருதத்தில்தான் எழுதினர்.
  • காவிரியின் தென்கரையில் வேங்கடாச்சார்யா – சுந்தரி என்கிற பார்ப்பனரின் மகன் வேங்கட மாதவர் ரிக் வேதத்திற்கு மிகவிரிவான பாஷ்யம் (உரை) எழுதினார். உலகத்திலேயே மிகவும் புகழ் நிறைந்த வீரதீரப் போர்வீரனின் நாட்டில் எல்லா வசதிகளுடன் வாழ்ந்ததாக அவர் கூறுகிறார். இவரை ஆதரித்த அரசன் வீரசோழன், வீரராஜேந்திரன் என்றெல்லாம் புகழப்பட்ட முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – கி.பி. 955) ஆவான். 
  • தஞ்சைப் பெரியகோயிலில் நடிப்பதற்காக இராஜ ராஜஸ்வர நாடகமும் திருப்பூந்துருத்தி கோயிலில் படிப்பதற்காக இராஜராஜ விஜயம் என்ற காவியமும் இருந்ததாக கூறப்படுகிறது. பெயரைப் பார்க்கும்போதே இது தமிழில் இல்லை என்பது விளங்கும்.
  • முதலாம் இராஜேந்திரனைப் பற்றிய திருவாலங்காட்டுச் செப்பேட்டை வரைந்தவர் நாராயண கவி என்ற சமஸ்கிருதப் பண்டிதர். 
  • தென்னார்க்காட்டில் எண்ணாயிரம் என்ற ஊரில் பெரிய சமஸ்கிருதக் கல்லூரி நடத்தப்பட்டது. இவ்வூர் இராஜராஜச் சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டது. திருபுவனை என்னுமிடத்திலும் சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது. இவ்வாறாக நாடெங்கும் இருந்த வேதபாடசாலைகள் எண்ணற்றவை.
  • சமஸ்கிருத இலக்கணப் பயிற்சி அளிப்பதற்காக ‘வியாகரணதான வியாக்யான மண்டபம்’ திருவொற்றியூர் கோயிலில் கட்டப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கள் காவனூர் எனும் ஊரை இதற்கு இறையிலியாக்கக் கட்டளையிட்டான்.
  • சைவத்திருமுறை வகுத்ததையும் ஓதுவார்களைக் கொண்டு தஞ்சைப் பெரியகோயிலில் 48 ஓதுவார்களை நியமித்ததையும் இவர்கள் ஆகச்சிறந்த தமிழ்ப்பணியாக சொல்கிறார்கள்.
  • தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கில் தேவரடியார்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலை இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து கோயிலுக்கும் பொருந்தும். 
  • முதலாம் குலோத்துங்கன் சமஸ்கிருதப் புலமைகொண்ட சைவப் பிராமாணர்கள் ஒரு கிராமத்தை நிர்மாணித்தான். அக்கிராமத்தில் வாழ்ந்த கேஸவ ஸ்வாமின் இரண்டாம் இராஜராஜனிடம் பணிசெய்தார். அவரை சமஸ்கிருதப் பேரகராதி  உருவாக்க அரசர் கட்டளையிட்டார்.

      இம்மாதிரியான சமஸ்கிருத சேவைகளுக்கு இடையேதான் தமிழ் கொஞ்சம் தலைகாட்டியது. அதுவும் சோழ அரசின் இறுதிப்பகுதியில் நடைபெற்றது மறைக்கமுடியாத உண்மை. சோழ அரசின் முதல் பாதியில் இராஜகுருக்கள், முதல் அமைச்சர்கள், படைத்தலைவர்கள் என அனைவரும் வட இந்தியப் பார்ப்பனர்களாகவே இருந்தனர். அவர்களுடைய ஆதிக்கத்தில்தான் மன்னர்கள் பெயரளவில் பொம்மைகளாக ஆண்டுவந்ததாக கருத இடமுண்டு. 

   சோழர்களின் இறுதிக் காலத்தில்தான் சூத்திரச் சாதியைச் சேர்ந்த தமிழர்கள் அதிகாரிகளாகவும் நிலவுடைமையாளர்களாகவும் இருந்துள்ளனர். இருப்பினும் இவர்களுக்கு மதத்தலைமைப் பொறுப்பு வழங்கப்படவில்லை. சூத்திர மடங்களைப் பொறுக்காத பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டவையே ‘குகையடிக் கலங்கள்’ என தெ.பொ.மீ. குறிப்பிடுகிறார். 
 
    கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, ஜெயங்கொண்டார், சேக்கிழார்  ஆகியோரின் படைப்புகள்தான் மிஞ்சுகின்றன. இதில் உள்ள ஓர் அம்சம் இங்கு கட்டாயம் குறிப்பிடவேண்டியது. முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்காதேவிக்கு பிறந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சாளுக்கிய மரபிற்கேற்ப ஏழாம் விஷ்ணுவர்த்தனன் எனும் பெயர்பெற்ற முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – கி.பி. 1122) , அவனது மகன் விக்கிரமச் சோழன் (கி.பி. 1122 – கி.பி. 1135), அவனது பேரன் இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 – கி.பி. 1150) ஆகியோர் ஆட்சிக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் என்பதுதான் அது. 

  முதலாம் குலோத்துங்களின் ஆட்சியின் இறுதியில் ஜெயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி பாடுகிறார். தீபங்குடிப் பத்து என்னும் நூலை இயற்றிய இவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது.

   மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் கம்பர்  இராமாயனம் எழுதுகிறார். ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, மும்மணிகோவை ஆகியவையும் கம்பர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. 

  ஒட்டகூத்தர் மூவருலா, ஈட்டி எழுபது, எழு எழுபது, தக்கயாகப்பரணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். புகழேந்திப்புலவர் நளவெண்பாவையும் சேக்கிழார் பெரிய புராணத்தையும் படைத்தனர்.  (‘கல்விக் குழப்பங்கள்’ – நூலிலிருந்து…)

  பிற்காலச் சோழ அரசர்கள் கோயில் கட்டுவது, ராணுவ வலிமையைப் பெருக்குவது ஆகியன நாட்டின் பொருளாதாரச் செழிப்பை அறிவதாக இருந்தது. ஆனால் விஜயநகர அரசுகளின் இந்த நடவடிக்கைகளை பின்வரும் பத்திகள் வழி அறிக. 

 “இரண்டாவது குறிப்பிடத்தகுந்த அம்சம், அதிக எண்ணிக்கையில் கோவில்கள் கட்டப்பட்டதாகும். இது இரண்டு பரிமாணங்களைக் கொண்டிருந்தது. ஒன்று புதிய கோவில்கள் கட்டப்பட்டன. இரண்டாவது ஏற்கனவே உள்ள கோவில்கள் பலமுனைச் செயல்பாடுகளைக் கொண்ட சமூகப் பொருளாதார நிறுவனங்களாக மாற்றியதாகும். கோயில்கள் கட்டப்படுவதானது அரசின் வளர்ந்துவரும் பொருளாதாரச் செழிப்பை பிரதிபலிப்பதாய் அமைந்தது. ஏனெனில் கோவில் கட்டுமானமென்பது மிகப்பெரிய செலவினங்களை உள்ளடக்கிய நடவடிக்கையாகும். கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாக மட்டுமல்லாமல் முக்கிய பொருளாதாரப் பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாகவும் மாறின. அவை பொருட்களைக் கொள்முதல் செய்பனவாகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் நில உடமையாளராகவும் மாறின”, (பக்.39)

“அடிப்படையிலேயே விஜயநகர அரசு ஒரு ராணுவத்தன்மை கொண்ட அரசாகவே உருவானது. பேரரசின் ராணுவத்திற்கு இரண்டு வகையான மூலவளங்கள் தேவைப்பட்டன. அவை நிதி ஆதாரமும் படைகளில் பணியாற்றத் தேவையான மனித வளமாகும். கைப்பற்றப்பட்ட பகுதிகளின் குறிப்பாகத் தமிழகத்தின் நிர்வாகத்தை மறுசீரமைப்பதின் மூலமே இத்தேவைகள் நிறைவேற்றப்பட்டன”, (பக்.40)

“நிலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயை இந்நாயக்க அரசுகள் வரிப்பணம் என்ற வடிவத்தில் இல்லாமல் கப்பத் தொகையாகப் பேரரசிற்கு அனுப்பி வைத்தனர். இப்படியாக மையப் பகுதிகளில் குறிப்பாகத் தமிழகத்தின் மூல வளங்கள் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இப்படியான நிர்வாக முறை, சோழர்கள் காலத்து பரவலாக்கப்பட்ட உள்ளூர் நிர்வாகத்தையும் கோவில்களையும் உள்ளூர் வளங்களையும் மேலாண்மை செய்துவந்த உள்ளாட்சி நிறுவனங்களை அழித்துவிட்டன. தெலுங்கு நாயக்கர்கள் பணியமர்த்தப்பட்டதன் விளைவாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் வடக்கேயிருந்து தமிழகத்தில் குடியேறினர். அவர்களுள் படைவீரர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், பிராமணர்கள் அடங்குவர்”, (பக்.41) 

“உள்ளாட்சி நிர்வாகம் தொடர்பான அடிப்படை முறைகளில் சோழ அரசு தலையிடவில்லை”, (பக்.39) என்றும்  “சோழர்கள் காலத்து பரவலாக்கப்பட்ட உள்ளூர் நிர்வாகத்தையும் கோவில்களையும் உள்ளூர் வளங்களையும் மேலாண்மை செய்துவந்த உள்ளாட்சி நிறுவனங்களை (நாயக்க அரசுகள்) அழித்துவிட்டன”, (பக்.41) எனப் புலம்புவது ஏன்? பிற்காலச் சோழர்கள் காலத்தில் உள்ளூர் நிர்வாகம் யாருடைய கைகளில் இருந்தது? பரவலாக்கத்தில் யாருக்குப் பங்கிருந்தது? தெலுங்குக் கைவினைஞர்கள், பிராமணர்கள் போன்றோர் ‘வந்தேறிகள்’ என்றால் தமிழகப் பிராமணர்கள் உள்ளிட்ட சிலர் பூர்வகுடிகளா?

    மஸ்லின் என்பது பருத்தி நூலிழையால் கைத்தறிக் கொண்டு நெய்யப்பட்ட மிக மெல்லிய துணிவகையாகும். விசைத்தறியில் கூட இத்தகைய துணியை உருவாக்க முடியவில்லை. பழங்கால இந்தியப் பாரம்பரிய நெசவுத் தொழிலின் சிறப்பிது. பட்டு மற்றும் பருத்தி நெசவில் (கிழக்கு, மேற்கு) வங்காளம் சிறப்புற்றிருந்தது. 

   நீர் இறைக்கும் பாரசீகச் சக்கரம் சொல்லப்படுகிறது. பட்டுத்தொழில் சீனாவிலிருந்து வந்ததை சொல்ல விரும்பவில்லை. ஏனைய பட்டு வகையில் ‘தசார்’ வகை அடைப்புக்குறிக்குள் வருகிறது. பட்டுப்பூச்சிக் கூடுகளை வெந்நீரில் அமிழ்த்தி, அவற்றைக் கொல்லும் வழமையான முறைக்கு மாற்றாக, சூரிய ஒளியில் உலரவைத்து அவைகளை வெளியேறிய பிறகு அக்கூடுகளிலிருந்து பட்டுநூல் பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வகைப் பட்டு ‘அகிம்சா’ பட்டு என்றழைக்கப்படுகிறது.

    வழக்கம்போல மொழிபெயர்ப்புகள் பற்றியும் சொல்லியாக வேண்டும்.
“In Goa itself the local population was under great pressure to convert to Christianity, especially under the oppressive conditions of the Inquisition”, (page 39) என்னும் வரிகள், 

“கோவாவில் உள்ளூர் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மதம்மாற அதுவும் காரணமானது. மேலும் சமய நீதிமன்றங்களின் அடக்குமுறையின் கீழ் வற்புறுத்தப்பட்டனர்”, (பக்.43)

  இம்மொழிபெயர்ப்பின் தெளிவு அல்லது தெளிவின்மை குறித்து வாசித்துணர்க. 

“But soon there was an explosion in the demand for Indian textiles in the European markets, often referred to as the 'Indian craze'”, (page 37)

“இதே சமயத்தில் ஐரோப்பியச் சந்தையில் இந்தியத் துணிகளுக்கு எதிர்பாராத மிகப்பெருந் தேவை ஏற்பட்டது. இம்மனோநிலை ‘இந்தியத் துணி மீது மயக்கம்’ எனக் குறிக்கப்பட்டது”, (பக்.41&42)

‘craze’ மயக்கமாவது மொழிபெயர்ப்பாளரின் மயக்கமின்றி வேறில்லை. 

“These genealogies are found in many of the manuscripts collected by Colin MacKenzie”, (page 38)

“காலின் மெக்கன்சியால் சேகரிக்கப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகளில் இப்படியான வம்சாவளிகளைக் காணலாம்”, (பக்.43)

இவை கைகளால் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இவற்றைக் கையெழுத்துப் பிரதிகளென்று சொல்லாமா?

“The art of painting also flourished in the Mughal period. Primarily known as Mughal miniatures, they were generally intended as book illustrations or were single works to be kept in albums”, (page 40)

“ஓவியக்கலையும் மொகலாயர் காலத்தில் செழித்து வளர்ந்தது. நுண்ணிய ஓவியங்கள் என்றழைக்கப்படும் இவை நூல்களில் இடம்பெற்றுள்ளன. தனி ஓவியங்கள் செருகேடுகளில் (Albums) இடம் பெற்றன”, (பக்.44)

  ‘miniatures’ ஐ நுண்ணோவியங்கள் (நுண் ஓவியங்கள்)  எனலாமே! இப்போது Albums செருகக்கூடியதாக இல்லை. இதற்குப் படத்தொகுப்பே பரவாயில்லை.

“A variety of food grains like wheat, rice, and millets were also grown apart from lentils and oilseeds”, (page 41)

“எண்ணை வித்துக்கள், அவரை வகைகள் ஆகியவைகளோடு அரிசி, கோதுமை, திணை வகைகள் போன்ற பல்வகை உணவு தானியங்கள் விளைவிக்கப்பட்டன”, (பக்.46)

   ‘எண்ணெய்’ பெட்ரோலியத்தை மட்டுமே குறிக்கும் போல! எனவே ‘என்ணை’ என்று குறிப்பதாக விளக்கம் சொல்லக்கூடும். ‘நெல்’ ‘அரிசி’யாகிறது; அரிசியாகவே விளைந்துவிட்டால் நல்லதுதானே! இங்கு ‘rice’ அரிசியாவதைபோலவே அருவி ‘water falls’ லிருந்து ‘நீர்வீழ்ச்சி’யாவது நமது பண்பாட்டு நடவடிக்கைகளே! திணை வகைகள் (உயர்திணையா, அஃறிணையா?) வேறு; தினை வகைகள் (millets) வேறு.

‘Coarse textiles”  “The coarse to the superfine”, (page 42) என்பது முரட்டுத் துணிவகைகள், முரடான துணிவகை என்று பெயர்க்கப்படுகிறது. கடினத் துணிகள் என்று சொல்லலாமா?

‘Varanasi’ ஐ ‘பனாரஸ்’ (பக்.50) என்று சொல்லாமல் வழக்கமாக ‘காசி’ என்று சொன்னாலென்ன? இல்லை, வாரணாசி என்றாவது சொல்லித் தொலைக்கலாமே!

  இறுதியாக ஒன்று சொல்லிவைப்போம். இவ்வளவு அலட்சியமாக பாடநூல்கள் தயாரிக்கப்படுவது குழந்தைகள் மீது செலுத்தப்படும் வன்முறையே. 
   
(சாதிகள், வலங்கை-இடங்கைப் பிரிவுகள் குறித்து அடுத்த பகுதியில்…)

                    (இன்னும் வரும்…)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக